Monday, January 9, 2012

அள்ளிக் குடிக்க ஒரு கை தாமிர பரணி நீர்

‘‘சொல்லுங்க வண்ணநிலவன். இலக்கியம், அது தந்த புகழ், ஒரு திரைப்படத்திற்கு வசனம் என்று வாழ்வு சந்தோஷமாக இருக்கிறதா?’’

‘‘இல்லை. இதைவிட தமிழ்நாடு அரசில், ஒரு கடைநிலை ஊழியனாக பணி கிடைத்து உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், இதைவிட சந்தோஷமாக இருந்திருப்பேன்.’’

இருபதாண்டுகளுக்கு முன் படித்த இந்நேர்காணலை, அப்படியே இடையில் நிறுத்திவிட்டு அழுதது ஞாபகம் வருகிறது. ஒரு உண்மையான எழுத்தாளனின் ஆத்மார்த்த பதிவு இவ்வரிகள். சொந்த ஊரில் நீர் குடித்து, மக்க மனுஷங்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற ஒரு எளிய ஆசையைக்கூட நிர்தாட்சண்யமாய் மறுதலித்தது காலம். அந்த நீண்ட நேர்காணலின் அற்புதமான பல பத்திகள் எனக்குள் புக மறுத்து, மீண்டும் மீண்டும் இவ்வரிகளே முன்னுக்கு வந்தன.

நோபல் பரிசு பெற்றபேர் லாகர்குவிஸ்டுவின்அன்புவழிக்கு கொஞ்சமும் குறைவில்லாத படைப்பு, ‘கடற்புறத்திலும்’, கம்பாநதியும்என்பது எப்போதுமே என் கருத்து. பிரபஞ்சன் ஒரு கூட்டத்தில் எப்போதோ சொன்னது அசரீரி மாதிரி எதிரொலிக்கிறது.

‘‘வண்ணநிலவன்இயேசு கிருஸ்து மாதிரி. மன்னிக்கும் மனம் டைத்தவன்.’’

நான் என் வாசிப்பில் வண்ணநிலவனின் படைப்புகளில் ஒரு குரூர மனிதனை, வன்மமானவனைத் தேடுகிறேன். இல்லை. மனிதர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உன்னதங்கள்தான். சில சமயங்களில், அவனை ஏதோ ஒன்று நிலை தடுமாற வைக்கிறது. அவ்வளவுதான். இதுதான் அவரின் எழுத்து நதியின் அடியாழத்தில் பெருகும் ஜீவ ஊற்றின் இரகசியம்.

கம்பாநதியில் கோமதியும், பாப்பையாவும் டீச்சர் ட்ரெய்னிங் இண்டர்வியூக்கு போவார்கள். தங்கள் இருவரின் பெயரைச் சொல்லிக் கூப்பிட இன்னும் நீண்ட நேரம் ஆகும் என்ற நம்பிக்கையில், இருவரும் அங்கிருந்து வெளியேறி ஒரு மரச் செறிவினூடே பேசிக் கொண்டிருப்பார்கள். எதிர்பாராமல் ஒரு மதிய நேர மழைப் பொழிவு. மழை முடிந்து, இலை நீரின் சேமிப்பிலிருந்து நீர் சொட்டும் அக்கணமே அவர்கள் இருவரையும் சமநிலைக்குக் கொண்டு வரும்.

இருவருமே வேலை தேடி வந்தவர்கள். இதில் கிடைக்கும் ஊதியத்தில்தான் சிதைந்த குடும்பம் எழ முடியும். இப்படி ஏதேதோ எண்ணங்கள் ஓரிரு விநாடிகளில் மின்னல் மாதிரி மனதில் மோத, இருவருமே ஒருவரை ஒருவர் இதுவரை அறிந்திராதவர்கள் மாதிரி இண்டர்வியூ நடக்கும் கலெக்டர் ஆபீஸ் ராண்டாவை நோக்கி ஓடுவார்கள். அந்த கணம் இருவரும் வெவ்வேறானவர்கள். ஒருவர் மீது இன்னொருவர் அன்பற்றவராக, எதுவுமற்றவர்களாக இருப்பார்கள்.

இதுவரை தங்கள் பெயர் அழைக்கப்படவில்லை ன்பதை அறிந்ததும், அவ்விநாடியே மீண்டும் நேசம் துளிர்க்கும். அவர்களிருவரும் பழைய அன்பில் கரைய முயல்வார்கள். ஆனால் அது அறுந்து போயிருக்கும். நான், அப்பகுதியை அதற்குமேல் தொடர முடியாமல், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அப்படியே கிடந்த அந்த இருபது வருடத்திற்கு முந்தைய இரவு நினைவில் வருகிறது.

என் வேலை கிடைக்காத நாட்களின் ரணம், இன்னமும் ஆறாதது. அது ஒரு நிழலைப்போல என்னைத் தொடர்கிறது. அக்காலங்களிலெல்லாம் நான் மாறி மாறி வண்ணதாசனையும், வண்ணநிலவனையும் படித்தேன். ‘‘என் வேட்டி நுனிகூட இப்பற்சக்கரத்தில் மாட்டி நசிந்துவிடவில்லைஎன்ற வண்ணதாசனின் பிரகடனம், அவர் படைப்பின் வழியே வேறொரு அன்பு நிறைந்த மனிதர்கள் மத்திக்கு என்னை அழைத்துப் போயினும்கூட, அம்மனிதர்கள் என்னிலிருந்து கொஞ்சம் மேட்டிலிருந்தார்கள். அவர்களை அடைய நான் கொஞ்சம் மெனக்கிட, இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், வண்ண நிலவனின் உலகம் என்னிலேயே விரிந்திருந்தது. பாப்பையாவின் ஸ்நேகிதி, என் காதலியைப் போலவேயிருந்தாள். தெப்பக்குள மத்திய வெயிலில் பிரகாசித்த அவள் கொலுசு, நான் வாங்கித் தந்ததுதான்.

அந்த இண்டர்வியூ முடிந்து, அவர்களிருவரும் தெப்பக்குளத்து கருங்கல் படிக்கட்டில் உட்கார்ந்து, கால்களை நீரில் நனைத்து, குளிர்ச்சி உடலெங்கும் பரவ பேசிக்கொள்வதாக விரியும் அந்த ஒண்ணரைப் பக்கமும், தமிழ் படைப்பிலக்கியத்தில் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும், இத்தனை வருட வாசிப்பில் நான் அடைய முடியாத உச்சம்.

சின்ன வயதில் கிருஸ்துவ குடும்பங்களில் பைபிள் அதிகாரங்களை ஒப்பித்தால்தான் பல வீடுகளில் ஒரு டம்ளர் காபி கிடைக்கும். அப்படி மனப்பாடம் பண்ணி வாசிக்க ஆரம்பித்து, சங்கீதத்தின் வசங்களில் மனம் தோய்ந்து கவிஞனாகிப்போன இளைஞனின் அனுபவம்போல, எனக்கு வண்ணநிலவனின் உரைநடையில் துவங்கி, கவிதையில் போய் நின்றது.

எனக்கு ஒரு எழுத்தாளன் என்பவன் எப்படி ருக்க வேண்டுமென ஒரு பிம்பம் உண்டு. ஒன்று, பழைய ஜெயகாந்தனைப்போல சமூகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் ரௌத்ரத்தோடு திர்வினையாற்றி, தனக்கு சரியெனப் படாததை மூர்க்கத்தோடு எதிர்ப்பது அல்லது வண்ணநிலவனைப்போல மௌனமாய் தன் எழுத்தின் வழியே சமூகத்தை பிரதிபலிப்பது. இதுவன்றி ஒரு படைப்பாளி வேறு மாதிரியான வழிகளுக்கு போகக்கூடாது. தனக்கு கிடைக்கவிருந்த, கிடைத்த பல பரிசுகளை அது எத்தனைப் பெரியத் தொகையாயிருப்பினும், அதை அவருக்கேத் தெரியாமல் அவர் நிராகரித்துள்ளார்.

மேடைகளில் ஏறி நின்று தன் எழுத்து ‘‘......’’ என ஆரம்பித்து, தன் எழுத்தை தானே சிலாகிக்கும் துர்பாக்கியத்தை அவர் என்றும் பெற்றதில்லை. முடிந்தவரை தான் எழுதியதற்கும் மேலாய், அதற்கு உண்மையாய் இருந்தது ஒன்றே அக்கலைஞனை காலம் என்னுள் அப்படியே வைத்திருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களின் மேன்மையான வரிசைப்படுத்தலில், எல்லோர் பட்டியலிலும் ஒரு பெயர் நிச்சயமிருக்கும். அது, ‘அவள் அப்படித்தான்.’

அப்படத்திற்கு வண்ணநிலவன்தான் வசனமெழுதினார். எப்படியாவது அப்பட பூஜைக்கு அவரை வரவழைக்க வேண்டி, இயக்குநர் ருத்ரைய்யா செய்த முயற்சி வென்றது. வண்ணநிலவன் வந்திருந்தார். பூஜை முடிந்து அப்படத்தில் பணியாற்றப்போகும் கலைஞர்களுக்கென வாங்கிக் குவித்திருந்த வண்ணப் பூமாலைகள் அவரை பயமுறுத்தியதோ என்னவோ? அதற்குள் மௌண்ட் ரோடில் வெகுதூரம் நடந்து போய்க் கொண்டிருந்தார். இச்சுருக்கம்தான் வண்ணநிலவன் என்ற காட்டாறு.

எப்படியாவது ஒருமுறை வண்ணநிலவனை என் வாழ்நாளில் சந்தித்துவிட வேண்டும் என தொண்ணூறுகளில் மனம் ஏங்கித் தவித்தது. அவரைப் பார்ப்பதற்கென மட்டும் என் நண்பர் ஓவியர் பல்லவனோடு பஸ் ஏறி, மேற்கு மாம்பலம் போய், அவர் வீட்டின் முன் நின்றபோது மத்தியானம் மூன்று மணியிருக்கும். மெல்லக் கதவைத் தட்டினேன். ஓசைப்படாமல் திறந்த கதவின் மறுபக்கத்தில், ஒரு நாலு முழ வேட்டி, முண்டா பனியனோடு வண்ணநிலவன். ஒரு கீத்து மாதிரி இருவரும் ஒருசேர புன்னகைத்துக் கொண்டோம்.

என்னை அவருக்குத் தெரிந்தது. ‘‘உம்மை தெரியும்மய்யா’’ என ஆரம்பித்த எங்கள் உரையாடல், எதன்பொருட்டோ அறுந்தது. அசதியில் தூங்கி வழிந்த என் கண்களைக் கவனித்தவர், ‘‘மொதல்ல அப்படியே அந்த சோபாவில தூங்குங்க. அப்புறமா பேசலாம்’’

நான் என் உள்ளுணர்வுகள் முதற்கொண்டு புத்துணர்வு பெற முயன்றேன். அமரத்துவமான பல சிறுகதைகளை நான் வண்ணநிலவன் வழியேதான் அடைந்திருக்கிறேன். இன்னமும் அதை கதகதப்போடு அடைகாக்கிறேன். ‘ரெய்னீஸ் அய்யர் தெருவில்மழை எல்லோரையும் புரட்டிப்போடும் அற்புத காட்சியாகட்டும், அதைவிடவும் டெய்சி டீச்சரை சொஸ்தப்படுத்தி கூட்டிவரும் அழகாகட்டும். வண்ணநிலவனே என் மனதிலிருந்த வன்மத்தை, குரூரத்தை, என் எழுத்தின் வழியே ஒத்தியெடுத்து, எளிய மனிதர்கள் வழியே அன்பை அறியத் தந்தார்.

உலகப் புகழ்பெற்ற அவரின்எஸ்தர்’, எப்போது மனம் புண்படினும் சஞ்சலத்தில் உழலும்போதும், அதுவே என் காயத்தை ஆற்றும்மாமருந்து. இத்தனை ஆண்டுகளின் மாறுதல்கள், ஒரு கதையின் தலைப்பை மறக்கடித்து விட்டிருக்கலாம். ஆனாலும் அக்கதை, பிறந்த குழந்தையின் கழுவப்படாத இரத்தக் கறையோடும் ரத்தக் கவிச்சியோடும் அப்படியேக் கிடக்கிறது.

வண்ணநிலவனின் வழக்கமான கதை மாந்தர்கள் போலவே அவனும் ஒரு ஜவுளிக் கடையின் குமாஸ்தா. மூன்றுவேளை உணவும், பண்டிகைக்கான சீட்டித் துணியும் மட்டுமே வாழ்வின் உத்தரவாதம். வறுமைப் பிடுங்கித் தின்னும் அவன் வாழ்வின் துணையாக, ஒரு பேரழகி. அவனுக்கு மனைவியாய் வாய்த்திருப்பாள். அவ்வப்போது அவனோடு, ‘அவன் ஸ்நேகிதன்என்று சொல்லிக்கொண்டு ஒருத்தன் வருவான். அவன் முகம் பார்த்தாலே அவளுக்குக் குமட்டும். இப்படி பெருகும் குமட்டல்களை உள்ளடக்கி, உள்ளடக்கியேக் கழிந்துவிடுகிறது பெண் மனது.

எல்லா ஆண்களைப்போலவே அவனுக்கும் அவள் உள்மனசை வாசிக்கத் தெரியாது. வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவனும் உடன் வருவான். அவளையே உரித்து வைத்ததுபோல அவள் குழந்தை. அவள் தோளிலிருந்து அவன் கை ஸ்பரிசம் பட்டு அவன் கைகளுக்குக் குழந்தை மாறியிருக்கும்போது, ஐந்து விரல்களின் விஷத் தீண்டல்களில் அவள் மார்பு நீலம் பாரிக்கும். ஒவ்வொரு முறையும் இந்த இரகசியக் கழுவேற்றம் அவனாலேயே அவளுக்கு நிகழும். அவள் குமட்டலை வழக்கம்போலவே அடக்கிக் கொள்வாள்.

‘‘பாப்பா எவ்ளோ அழகு, அவ அம்மாவப்போலவே’’ என்று குழந்தையின் கன்னம் தட்டும் பொழுதெல்லாம், அவளுக்குத் தெரியும். அது அவளுக்கான கொஞ்சல், அவளுக்கான அழைப்பு. வாழ்வெல்லாம் தொடரும் இந்த அருவருப்பை எப்படித் துடைப்பது? அவள் மௌனமாய் அன்று இருவருக்கும் இலை போட்டு பரிமாறினாள். அவள் எதிர்பார்த்ததுபோலவே அவன் இரகசியமாய் பரிமாறும் கைத் தொட்டான். இதுநாள்வரை உள்ளுக்குள்ளேயேப் பெருகிய கண்ணீரில் ஓரிரு சொட்டுகள் அவள் கணவனின் இலையிலும் தெறித்தது. அப்போதும் அவன் ஏதும் அறியாதவனாய், மௌனமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘என் மன பாஷை உனக்கு புரியலையா?’ என அவனை ஏறெடுத்தாள்.

எப்படியாகினும் இதை அவனிடம் சொல்லிவிட வேண்டும். இன்று காலை குழந்தைக்கான லேக்டோஜன் தீர்ந்துபோனதைச் சொல்ல, எப்படி இன்னமும் தைரியம் வரவில்லையோ, அதுபோலவேதான் இதையும் சொல்ல முடியவில்லை. இரண்டிற்கும் கால நீட்டிப்பே வித்தியாசம். அவர்கள் வெளியேறியக் கணப்பொழுதில், கதவை அறைந்து சாத்துகிறாள். சத்தம் அவனுக்குக் கேட்கவில்லை. ஜன்னலோரம் அவனை நிறுத்தி, தன் கணவன் அவனோடு பேசிக்கொண்டிருந்தது தெளிவாய்க் கேட்டது அவளுக்கு.

‘‘அண்ணாச்சி, ஒரு ரெண்டு ரூவா கடனாத் தாறீங்களா? கொழந்தைக்கு பால்பவுடர் வாங்கணும்.’’

அவளுக்கு பொங்கிக் கொண்டு வந்தது வாந்தியல்ல. கண்ணீர்.

வண்ணநிலவன் சார் நீங்க சொன்னது மாதிரி எப்ப எங்க வீட்டுக்கு வருவீங்க? என் ஞாபகப்படுத்தல்களின் மிச்சங்களை உங்கள் முன் கொட்ட வேண்டும் எனக்கு.

-நன்றி மீடியா வாய்ஸ்