Friday, December 30, 2011

அன்பின் வன்முறையாளன்

பாலா

இயக்குநர் சீமான்தான் பாலாவை அறிமுகப் படுத்த, என்னையும் என் நண்பர் எஸ்.கே.பி.கருணாவையும் அழைத்துப் போனார். தாம்பரத்திற்குள் அடங்கியிருந்த ஏதோ ஒரு பண்ணை வீட்டை நோக்கிப் பயணித்த எங்கள் வண்டியில், தம்பி நா.முத்துக்குமாரும் உடனிருந்தான்.

சேது, என்னைப் பெரிதாய்க் கவர்ந்த படமில்லை.ஆனால், ‘பிதாமகன்என்னை பிரமிக்க வைத்த படைப்பு.விளிம்புநிலை மனிதர்களின் ஆன்மாவின்மீது சினிமா வெளிச்சம் பட்டுவிடாமல், தன் படைப்பில் கொண்டுவந்த லாகவத்திற்காக, அக்கலைஞனைச் சந்திக்க வேண்டி மனம் ஆர்வப்பட்டது.ஆனால், வண்ணநிலவனை, கி.ரா.வைச் சந்திக்கப்போன முதல்முறை பரவசம் எதுவுமற்றிருந்தேன்.மனதில் பிதாமகனை இன்னொரு முறை காட்சிப்படுத்த முயன்றேன்.போட்டி போட்ட விக்ரமையும், சூர்யாவையும் தாண்டி இளையராஜாவும், பாலாவும் என்னை ஆக்கிரமித்தார்கள்.

அந்த மழை இரவில், சூர்யாவின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு நடுத்தெருவில் கிடந்த காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கள் வண்டி அந்த பங்களா முன்நின்று, என் காட்சியை அறுத்தது. தன் அடுத்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டில் இருந்தார் பாலா.எங்களைப் பார்த்தவுடன் அதிலிருந்து வெளியே வந்து, ஒரு அளவான சிரிப்போடு வரவேற்றார்.வார்த்தைகளை அவரே வைத்துக் கொண்டார்.புன்னகை மட்டும்தான் எங்களுக்கு.பெரும் முரணாக, சீமான் அண்ணன் அநியாயத்திற்கு எங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.திராவிட மரபின் மிகை அண்ணனிடம் கொட்டிக் கிடந்தது.எல்லாவற்றிற்கும் பதில் அச்சிரிப்பு மட்டுமே.

சாப்பிடலாமா?” என்ற முதல் வார்த்தை, அத்தனை சிக்கனத்தோடு அவரிடமிருந்து வந்து விழுந்தது.

காத்திருந்ததுபோலக் கலைந்து, உணவு மேடைக்கெதிரே உட்கார்ந்தோம்.மணக்க மணக்க கருவாட்டுக் குழம்புடன் சுடுசோறு தின்றோம்.இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை கருவாட்டுக் குழம்பு கொடுத்தது.

நான்தான் பேச ஆரம்பித்தேன்.பிதாமகன் பற்றி, என் உணர்வில் இருந்ததையெல்லாம் வார்த்தைப்படுத்தினேன்.நான் அதில் உச்சமெனக் கருதிய காட்சிகளை விவரித்தேன்.‘கொஞ்சம் அதிகமோஎன எழுந்த உள்ளுணர்வை உள் அழுத்தி உரையாடினேன்.

ம்என்ற வார்த்தைகளுக்கு மேல் அவரிடமிருந்து எதுவுமில்லை.

அப்போதுதான்பாலாவை உற்றுப் பார்த்தேன்.அவரின் முழுக் கவனமும் என்னில் மட்டுமே நிலைத்திருந்தது.கவனச் சிதறல் எதுவுமின்றி என் வார்த்தைகளையே உள்வாங்கிக் கொண்டிருந்தார்.நான் உடனேயே ஒரு முடிவுக்கு வந்தேன்.இக்கலைஞனின் மொழி மௌனம்.மௌனத்தால் இவன் மனித வாழ்வின் குரூரத்தை அளக்கிறான்.யாரும் பொருட்படுத்தாமல், சமூகத்தின் விளிம்பில் கிடக்கும் மனிதர்களின் மாட்சிமையை, மேன்மையை, ரௌத்திரத்தை மொத்தமாகப் பருக இம்மௌனம் மட்டுமே இவனுக்கு பலம்.இவனிடமிருந்து வார்த்தைகளை எதிர்பார்ப்பது என்பது நம் அறிவீனம்.பெருவனத்தில் உறைந்திருக்கும் அமைதியை, நம் பாத சப்தங்கள்கூடக் கலைத்துவிடும்.

நான் பேசுவதைச் சட்டென நிறுத்தி, இன்னொன்றுக்குத் தாவினேன்.

உங்களுக்கு ஜெயகாந்தனை ரொம்பப் பிடிக்குமா?”

சிங்கமில்ல அது!”

அவரைத் தனியா சந்திச்சிருக்கீங்களா?”

எதுக்கு?”

என் பொதுப்புத்திக்குஎதுக்கு?’ உறைத்தது. இருந்தாலும் மறைத்துக் கொண்டு,

இல்ல சார், அவருடைய நண்பர்கள் சந்திப்பின்சபைரொம்பப் பிரபலம்.ஒரு இரவு நீங்க அவரோடு உட்காரலாமே.”

தேவையேயில்லை சார்.அமெரிக்கன் காலேஜ் விழாவுலதான் அவர ஒரு சிங்கமாபாத்தேன்.அந்த உருவம் அப்படியே எனக்குள்ள கிடக்கட்டும். எதுக்கு அவரை நேரா பாத்து அது சிதையணும்?”

நம் வழக்கங்கள்மீதுபாலாஒரு ஆசிட் பாட்டிலை எடுத்து வீசினார்.அதுவரையிலான என் மதிப்பீடுகள் கணத்தில் பொசுங்கியது.‘நான் கடவுள்பார்த்தேன்.படம் எனக்குப் பிடித்தும், பிடிக்காமலுமிருந்தது.‘ஆர்யாஅதன்பிறகு எப்படத்திலும் நடிக்கக் கூடாதென நினைத்தேன்.உச்சம் தொட்ட எதுவும், அதன் கீழிறங்குவதில் எப்போதும் எனக்குச் சம்மதமில்லை. படம் பார்த்த அன்றிரவே பாலாவைத் தொலைபேசியில் அழைத்தேன். படம் பற்றிய என் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டேன்.எல்லாவற்றிற்கும் ஒரும்ம்மட்டுமே.

ஷைலஜா பக்கத்துல இருக்காங்களா?”

நான் என் கைபேசியை அவளிடம் கொடுத்தேன்.

இப்பதான் சார் படம் பாத்துட்டு வந்தோம்.இன்னும் வீட்டுக்குள்ளகூட நுழையல...” அதற்கடுத்த இருபது நிமிடமும் அவளிடமிருந்தும்மட்டுமே வந்து கொண்டிருந்தது.என்னையே நம்ப முடியவில்லை எனக்கு.கைபேசி மாறிவிட்டதா என்ன?அவர் எதிர்முனையில் பேசப் பேச, இவள்ம்சொல்லிக்கொண்டிருந்தாள்.நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.இடையிடையே துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.உரையாடல் முடிந்து இருவரும் கொஞ்சநேரம் பேச்சற்று இருந்தோம்.

என்ன ஷைலஜா, வழக்கத்துக்கு மாறா இவ்ளோ நேரம் உங்கிட்ட மட்டும் பேசினாரு?”

இல்ல பவா, ‘நான் கடவுள்பற்றி ஆரம்பிச்சேன்.உடனே அதை மறிச்சி, அத விடும்மா, இன்னிக்கு ஒரு படம் எடுக்கலாம், எடுக்காத போகலாம். ஆனா, எங்கப்பாவை நீங்க நல்லா பாத்துக்கிறீங்களே! அது போதும் எனக்கு

இவளுக்கு எதுவும் புரியாமல் விழிக்க,

அவரு அப்படி ஒண்ணும் யார் வீட்டுக்கும் போற ஆள் இல்லம்மா, மானஸ்தன்.மனசுக்கு நூறு சதவீதம் புடிச்சாதான் ஒரு வீட்டு வாசல்ல காலெடுத்து வைப்பாரு.அவருக்கு மனசுக்கு உகந்த புள்ளைங்களா நீங்களும் பவாவும் இருக்கீங்க. அது யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம்.”

அவளுக்குப் புரிந்துவிட்டது, தன் குருவை அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்த மனதை.கண்களில் நீர் கோர்த்தது அப்போதுதான்.

உண்மையில் யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம்தான், ‘பாலு மகேந்திராஎன்ற அந்த இந்தியத் திரைப்பட மேதை, எங்கள் இருவரையும் தன் பிள்ளைகளாக சுவீகரித்தது.அதற்கான நன்றி சமர்ப்பணங்கள் மட்டும் அவர் மௌனத்தை மீறி வார்த்தைகளாக மாறி வந்தன.

என் அவதானிப்பு சரிதானாவென்று தெரியவில்லை. ஆனா நிஜம், பாலாவின் அம்மா, அப்பா, மனைவி, ஸ்நேகிதி, நண்பன், குரு, கடவுள் எல்லாரையும்விட உயர்ந்த இடத்தில் பாலா எப்போதும் வைத்திருக்கும் ஒருவர் உண்டு. பாலா உயரும் ஒவ்வொரு விநாடியையும் தூரத்திலிருந்து சுவாசித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவனின் பெயர் அகிலாம்மா*

அகரம்நிகழ்வு ஒன்றின் விஜய் டி.வி.படப்பிடிப்பிற்காக ஏவி.எம்.ஸ்டூடியோவிலிருந்தேன். ஒரு தேநீர் இடைவேளையில் நானும் ஷைலஜாவும் வெளியே வந்தபோது, எதிர்பாராமல் எங்களிருவரையும் பார்த்து, பதறி எழுந்து கைகுலுக்கி, ‘சூர்யாவை அழைத்துசூர்யா, ஒருமுறை இவங்க வீட்டுக்கு போய்வாஎனச் சொல்ல, அவர் எதுவும் புரியாமல் என்னோடு கைகுலுக்க, பாலா என்ற கலைஞன் தன் நட்பின் பொருட்டு எங்கள் இருவரின்மீதும் வைத்திருக்கும் மரியாதையையும் தாண்டி பிரியம் வழிந்தது.

நான் கடவுள்பார்த்த கணம் இருந்த மனநிலையேஅவன் இவன்பார்த்தபோதும் இருந்தது. இதுவரை தமிழில் யாரும் பயணிக்காத பகுதியென்ற பெருமிதமும், இதுமட்டுமே ஒரு சிறந்த படத்திற்குப் போதுமாவென்ற போதாமையையும் என்னை ஒரு முடிவுக்கு வரவிடாமல் அலைக்கழித்தன. விளிம்புநிலை மனிதர்களின் பாசமும், கொண்டாட்டமும், ரௌத்ரமும் எப்போதும்போல பாலாவுக்குச் சுலபமாகப் பிடிபட்ட இப்படத்தில், ஏதோவொன்று தவறியிருந்தது.அது எதுவெனப் புள்ளிக் குத்த முடியாமல் தவித்தபோதுதான் நாசர் வந்திருந்தார்.

பவா, ‘அவன் இவன்பாத்தீங்களா?படம் பிடிச்சிருந்திச்சா?”

நான் மௌனமாக அவரையே பார்த்தேன்.சிரித்துக்கொண்டே மேடைக்குப் போய்விட்டார்.அந்நிகழ்ச்சி முடிந்து நானும் நாசரும் காரில் பயணிக்கும்போது, காலையில் விட்ட இடத்தை கவனமாகத் தொட்டு, “அவன் இவன் பாத்தீங்களான்னு கேட்டேன்என ஆரம்பித்தார்.அது ஒரு விவாதத்திற்கான அழைப்பு.தர்க்கத்திற்கான சவால்.

பார்த்தேன் சார், அந்தப் படத்தை என்னால நல்ல படமான்னு வகைப்படுத்தத் தெரியல.”

முன்சீட்டிலிருந்து, என் பக்கம் திரும்பி,

அது, உலக மகா காவியம் பவா

ஒரு நிமிடம் அதிர்ந்தேன்.

என்ன சார், சொல்றீங்க?”

இதுவரை வந்த தமிழ்ப்படங்களில் ஒரு பார்வையாளனுக்கான சவால்கள் இதில் மட்டும்தான் உள்ளது.கலையின் உன்னதம் எனப் போற்றப்படும்அன் டோல்டு ஏரியாஇப்படத்தில் மட்டுமே கொட்டிக் கிடக்கிறது.ஒரு மகத்தான நாவலில், இப்படியான சொல்லப்படாத பகுதியிலிருந்துதான் ஒரு நுட்பமான வாசகன் தனக்கான கதையை தொடங்குவான்.அதேபோல்தான் இப்படமும்என ஆரம்பித்து, அப்படத்தின் நுட்பங்கள், அசாத்தியங்கள் என குறைந்தது அரைமணி நேரம் பேசிக்கொண்டே போனார்.

இப்புரிதல்களோடு தயவுசெய்து இன்னொருமுறை அப்படத்தைப் பாருங்க பவா.பாலா, நம் காலத்திய அசலான கலைஞன்என அவ்வுரையாடலை முடித்தார்.

அன்றிரவு முழுக்க, அவர் சொன்ன நுட்பங்கள் என்னில் வந்து கொண்டேயிருந்தன.உதாரணத்திற்கு, அய்னஸின் சொத்துக்களை மட்டுமல்ல, அவரின் மனைவியையும் அபகரித்துக் கொள்கிறான் அவன்.அது, படத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லை.ஓரிரண்டு வசனத்தில் அல்லது காட்சிகளில், ஒரு கவனமான பார்வையாளனின் மனம் குதூகலிக்கும் இடம் அது. உதாரணத்திற்கு, ஆர்யா அந்த அபகரித்துக் கொண்டவனின் மகளைக் காதலிப்பதாக விஷாலிடம் சொல்லும்போது,

அது எப்படிடா முடியும்?” என வானத்திற்கும் பூமிக்குமாக விஷால் குதிப்பான்.அதில் சொல்லப்படாத பகுதி, “அது எப்படி சாத்தியம்? அவ உனக்கு தங்கச்சி மொறஅதேபோல ஒவ்வொருமுறை அபகரித்தவனை திரையில் காண்பிக்கும்போதும் ஆர்யா, விஷால் அம்மாக்களால் மிகுந்த அருவருப்பான ஒரு ஜந்துவைப்போல அவனை உடல்மொழியால் எதிர்கொள்வதை, அய்னஸ் மாதிரியான ஒரு மேன்மையான மனிதனின் சொத்துக்களையும், மனைவியையும் அபகரித்தவன் என்பதை, ஊடகத்தில் சினிமா மொழியில் இப்படித்தான் சொல்ல முடியும். பக்கம் பக்கமான வசன நிரப்புதல்கள் ஒரு மெலோ ட்ராமாவாக முடியுமே தவிர, ஒரு நல்ல சினிமாவாக வாய்ப்பே இல்லை.

என்னில் பொங்கிப் பொங்கி வந்த சந்தேகங்களை நாசர் சொன்ன செய்திகள் தீர்த்து வைத்துக் கொண்டிருந்த ஒரு மூன்றாம் ஜாமத்தில், நான் பாலாவை அழைத்தேன்.

சார், பவா. ஸாரி இந்த நேரத்துல...”

அதெல்லாம் ஒண்ணுமில்ல சொல்லுங்க.”

நேத்து நாசர் வந்திருந்தார்.”

ம்..”

அவர், அப்படத்தைஉலக மகா காவியம்என புகழ்றார்.”

நீங்க சொல்லாமவிட்ட ஒவ்வொரு காட்சியையும் அவர் விவரிக்கிறார்.”

ம்

உதாரணமா...”

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கென நான் நாசரின் வார்த்தைகளை பாலாவுக்கு வரிசைப் படுத்துகிறேன்.

ரொம்ப நன்றி பவா சார்.”

தொலைபேசி அணைந்து ஏற்பட்ட அமைதி, என் அறையை நிறைத்தது.

இவரை என்ன செய்வது?

எல்லா உணர்வுகளையும் மௌனத்தால், ஒரும்மால் மட்டுமே உள்வாங்கும் ஒரு கலைஞனின் பழக்கமென்றோ, எழுதி முடித்த அல்லது எடுத்து முடித்த ஒரு படைப்பைத் திரும்பிப் பார்க்கவும் சலிப்புற்று அடுத்ததை நோக்கிப் பயணிக்கும் ஒரு தகிக்கும் மனநிலையெனவோ, நான் இம்மௌனத்தைப் புரிந்து கொண்டேன்.

தீண்டல் வேண்டி காலம் காலமாய் காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் திமிர்ந்த உடலைப்போல, இன்னமும் கம்பம் பள்ளத்தாக்கின் உறைந்த மௌனம், தன்னையறிந்த ஒருவனின் ஸ்பரிசத்திற்குக் காத்திருக்கிறது. அது பாலா என்ற அசல் கலைஞனின் கைப்பட்டே அடங்கும்.

பாலு மகேந்திரா சாரின் சினிமாப் பட்டறையில், அவரின் முன் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.பாலாவின் தேசிய விருது சான்றிதழ் அங்கே மாட்டப்பட்டிருந்தது.

என்ன பவா, பாக்கறீங்க அவ்ளோ நேரம்?”

ஒண்ணுமில்ல சார், பாலாவோட நேஷ்னல் அவார்ட். இது ஏன் சார் உங்க ஆபீஸ்ல...?”

அவர் புன்னகைத்தார். முகத்தில் பெருமிதம் பொங்கித் ததும்ப,

உங்களுக்குத் தெரியாதா?அன்னிக்கு டைரக்டர்ஸ் ஃபங்ஷன்ல மணிரத்னமும் ரஜினியும்தான் இதை பாலாவுக்குத் தரணும்.ஆனா, அதை இடைமறிச்சி, ‘நான், எங்க டைரக்டர் கையாலதான் வாங்குவேன்னு அடம் புடிச்சி, எங்கிட்ட இருந்து வாங்குனான்.அதோடேயே நேரா இங்க வந்து, ‘இது, இங்க இருக்க வேண்டியதுன்னு அவனே ஆணி அடிச்சி மாட்டிட்டு போய்ட்டான்.அவன் எப்பவுமே இப்படித்தான்.என் அனுமதியையெல்லாம் எதிர்பாக்கறதுல்ல பவா.”

பாலா விட்டுவிட்டுப் போயிருந்த அந்த முரட்டு அன்பு, பாலுமகேந்திரா சாரின் அவ்வலுவலகம் முழுக்க காற்றின் பாடல் மாதிரி பரவியிருக்கிறது.

5 comments:

 1. பாலு - பாலா - பவா
  முரட்டுத்தனமான அன்பின் வெளிப்பாட்டாளர்கள்தானோ...
  எப்படி பவா உங்கள் கண்களுக்கு மட்டும் சிக்கிக்கொண்டே இருக்கின்றன இத்தனை நெகிழ்வூட்டும் பச்சிளங்குழந்தையாய் வார்த்தைகள்.

  ReplyDelete
 2. பாவா உங்க பார்வையில் பாலாவின் நெகிழ்ச்சியான பக்கம் இன்னும் பாலாவின் படங்களை மீளவும் பார்க்கத் தூண்டுகின்றது விட்ட கோணங்களை புரிந்துகொள்ள!

  ReplyDelete
 3. அருமையான பதிவு...

  மனுஷ்யபுத்திரனின் கீழ்கண்ட வரிகள் தான் நினைவுக்கு வந்தன....

  கடவுள் உங்களோடு
  பேசுவதை நிறுத்திவிடுவார்,
  எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்
  உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது.

  ReplyDelete
 4. பாலா படம் பார்க்கிறதுன்னா ஒரு சின்னதா பயம் வந்துடும் எனக்கு ஆனா special ஆவும் இருக்கிறதால பார்க்கனும்னு தோனும்.பிதாமகன்ல சூர்யாவின் உடலை சாக்குமூட்டையில் பார்க்கும் காட்சி மறக்க ரொம்ப நாள் ஆச்சு. “அவன் இவன்” பார்த்திட்டு நான் facebook ல எல்லாரும் கண்டிப்பா பாருங்க நல்லா இருக்கு படம்ன்னு போட்டிருந்தேன்.என் நண்பர் முரளிகிட்ட ரொம்ப argue பண்ணினேன் இது ஒரு சிறந்த படம்ன்னு ஏன்னா அவர் இந்த படம் பாலா படம் மாதிரி இல்லேன்னு சொல்லியிருந்தார். எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது. ஒருத்தரோட படைப்பு பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கு ஆனா ஏன் போய் பார்க்கனும்னு எனக்கும் தோன்றும்.நான் கடவுள் பார்க்கும் தைரியம் மட்டும் இன்னும் வரவேயில்லை.பாலா ஒரு அற்புதமான director...பாலா பண்ற ஒவ்வொருபடமும் சிறந்த படம் தான்..

  ReplyDelete
 5. பவா அற்புதம், பாலாவை பற்றி இவ்வளவு விவரங்கள், கூடவே அந்த கலைஞனின் மெளனம் மிகவும் அர்த்தமுள்ளதாகவே உணர்கிறேன், மிக இதமான வார்த்தைகள் மனதை வருடிவிட்டுகொண்டே வருகிறது கட்டுரை முழுதும்,

  ReplyDelete