Monday, December 19, 2011

தவறவிடாமையின் பெருமிதம்

வைட் ஆங்கிள் ரவிஷங்கர்

சுபமங்களாகாலம் என்றொன்றிருந்தது. ஒவ்வொரு மாதமும் அது வாசிப்பு மனங்களில் ஜால வித்தைகள் செய்தது. விஷய கணத்தில், வடிவமைப்பில், புகைப்படத்திலென அது, அதற்கு முந்தைய எல்லா சாதனைகளையும் சுலபமாக துடைத்தெறிந்தது.

அதில், கலைஞர் கருணாநிதியின் ஒரு விரிவான நேர்காணல் வெளிவந்திருந்தது. அதற்கு பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், அந்நேர்காணலை இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருந்தது. அவரை கட்டம்போட்ட லுங்கி, முண்டா பனியனுடனும், சப்பராங்கால் போட்டு தரையில் உட்கார்ந்து எழுதும்படியான புகைப்படங்களோடும், அதுவரையிலான அவரின் ஒயிட் அண்ட் ஒயிட் பிம்பத்தை சிதைத்து, ‘நம்ம வீட்டு மனுஷன்தான்என்பது மாதிரியான ஒரு மன நெருக்கத்தைத் தந்திருந்தது.

நான் அப்புகைப்படங்களை எடுத்த கலைஞனைத் தேட ஆரம்பித்து, சுலபத்திலேயே கண்டடைந்தேன். வைட் ஆங்கிள்ரவிஷங்கர்என்ற அந்த வளர்ந்த குழந்தை, இன்றளவும் என் ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவன்.

‘‘எப்படி ரவி இதை சாத்தியமாக்கினீங்க?’’

‘‘நான் புகைப்படம் எடுப்பதற்காக அவர் வீட்டிற்குப் போனப்பவே அவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டு தயாராயிருந்தார். கொஞ்சம் பயமிருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காமிராவை கையிலெடுக்காமல் மௌனம் காத்தேன்.

என்னய்யா எடுக்கலையா?’ என அவரின் கனத்த குரலில் கேட்டபோது, இது எனக்கு வேணாங்க. இதுவரையிலும் யாரும் உங்களை எடுக்காதது மாதிரியான படங்கள்தான் வேணும்’’

‘‘யாரும் எடுக்காததுன்னா?’’

‘‘ரொம்ப இயல்பா, வீட்ல நீங்க எப்படி இருப்பீங்களோ அப்படி, லுங்கி கட்டி, பனியன் போட்டு, தரையில உட்கார்ந்து’’

நான் அடுக்கிக்கொண்டே போனேன்.

அவர் சிரித்துவிட்டார். அச்சிரிப்பின் விநாடிகளை நான் எனதாக்கிக் கொண்டு அவருள் பிரவேசித்தேன். அதன்பின் எல்லாம் சாத்தியமானது. புகைப்படங்கள் கம்ப்யூட்டரில் பதுங்காத காலமது. பிலிம் ரோலில் படமெடுத்து, கெமிக்கலில் கரைத்து, நெகட்டிவ் கழுவி, வெள்ளைத் தாளில் உருவம் பதிவாகும் அந்த கணநேரத்து கலைஞனின் பெருமிதத்தை, அந்த இருட்டறை மட்டுமே தரிசித்த தருணங்களை நாம் இழந்துவிட்டோம். இப்போது அடுக்கடுக்காய் கணினியின் மௌஸ் நகர்தலுக்கு புகைப்பட காட்சியை உட்படுத்தி... சுவாரஸ்யமற்ற நிகழ்வுகளுடன் சுவாரஸ்யமற்ற வாழ்வு.

ரவிஷங்கரின் கேமிரா, இசைக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் நிரம்பியிருந்தது. தமிழ் எழுத்தாளர்கள் யாரும் அதற்கு முன் தங்களை இப்படி ஒரு அழகோடு பார்த்ததில்லை. கல்மண்டபங்களின் பின்னணியில் வண்ணதாசனும், தாமிரபரணிக் கரை ஈரத்தில் வண்ணநிலவனும் என்று பார்ப்பவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தின நாட்கள் அது. ஒரு முழுநேர இசைக் கச்சேரியின்போது, பாடுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஏற்படும் அத்தனை முகபாவங்களையும் பரவசத்தையும், நானறிந்து ரவிஷங்கரைத் தவிர்த்து வேறு எவரும் இந்தளவு நுட்பமாய் பதிவு செய்ததில்லை.

காத்திருத்தல்தான் இதன் ரகசியம். தவறவிடாமை இதன் வெற்றி. வண்ணதாசன், ‘போய்க்கொண்டிருப்பவள்என்றொரு கதை எழுதி இருப்பார். அதில்விருத்தாஎன்றொரு புகைப்பட கலைஞன். தாலி கட்டும் அந்த அற்புத கணத்தை, எதன் பொருட்டோ தவறவிட்டுவிடுவான். தலையில் கைவைத்து துளிர்க்கும் கண்ணீரை இரகசியமாய் துடைத்து, இழத்தலின் துயரம் தாங்காமல் அம்மண்டபத்தில் யாரும் பொருட்படுத்தாத ஒரு இருட்டு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பான். அவன் தோளில் விழும் கை ஸ்பரிசம் உணர்ந்து திரும்புவான்.

‘‘என்னாச்சு?’’

‘‘தாலி கட்றப்போ, எல்லாரும் சூழ்ந்துட்டாங்க சார், படம் எடுக்க முடியல.’’

‘‘சரி விடு. அதுக்காக இவ்வளவு கலங்குனா?’’

‘‘என்ன சார் சொல்றீங்க? அந்த கணத்தை, இதயத்தின் அடியாழத்திலிருந்தும் பொங்கும் அப்பரவச கணத்தை வேறெப்போ சார் எடுக்க முடியும்?’’

இக்கதை வாசிப்பின் போதெல்லாம்ரவிதான், விருத்தாஎன ரவியை உருவகப்படுத்திக் கொள்வேன்.

தன் மூன்று மணிநேர கச்சேரி வாசிப்பில், தோ ஒரு சங்கீத சுழிப்பின் உச்சத்தில், கடம் வாசிக்கும் கலைஞர் விநாயக்ராம், தன் கடத்தை மேலே தூக்கிப்போட்டுப் பிடிக்கும் அச்சில நொடிகளை ரவி தன் கேமராவால் ஆறேழு படங்கள் எடுத்து அசத்தியிருப்பான். மண்பானை கீழே விழுந்து புறப்படுவதற்குள் அவன் அள்ளியெடுத்த அற்புத கணங்கள் அவை. ஒரு மேம்பட்ட கலையை தன் உயிராக நேசிக்கும் ஒருவனுக்கு மட்டுமேயான சாத்தியங்கள் இவை.


தன் எழுத்தாளர் புகைப்பட வரிசையில் வி வறவிட்ட ஆளுமைஅம்பை’. அவரை படமெடுக்க, மும்பைவரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கசப்பு, அந்த ஆற்றாமை, ஒரு தீர்க்க முடியாத இரகசிய வியாதிபோல் அவரிடம் தங்கியிருந்தது. ‘அம்பைதிருவண்ணாமலைக்கு வந்தபோது அவரிடம் என் சிநேகிதி திலகவதியும், தன் நெடுநாளைய கனவின் மெய்ப்படுதல் நிமித்தம் ரவியும் உடன் வந்திருந்தார்கள். எல்லோர் பயணங்களுமே உள் இரகசியங்களால் நிறைந்தது. மிக அருகில் இருப்பவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத பிரபஞ்ச ரகசியங்கள் அடங்கியது மனித மனம். அது மௌனமாய் இருப்பது மாதிரிபொய் தோற்றமளிக்கும், கொந்தளிக்கும் எரிமலைகளை உள்ளடக்கியது. என்ன சொல்லியும், ‘அம்பைஅப்புகைப்பட பதிவிற்கு சம்மதிக்கவில்லை.

‘‘மேடம், நான் உன்னதமான எழுத்தாளர்களையும், இசைக்கலைஞர்களையும் மட்டுமே எடுத்திருக்கிறேன்.’’

‘‘என்னை எடுக்காத, நான் உன்னதமானவள் இல்லை.’’

மூன்று மணிநேர பயணம் முழுக்க அடைந்த தோல்வியும், சக மனப் புரிதலற்றச் சூழலும் ரவியை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தது.

வீட்டில் சாப்பிடும்போது ரவி என் கைப்பிடித்தழுத்தி,

‘‘பவா, நீங்க ஒருமுறை சொல்லுங்க’’

நானும், சிநேகிதி திலகவதியும் சொன்னது, ஒரு முன்முடிவான கருத்தால் உறைந்திருந்த மனதை, கரைக்க முடியவில்லை.

‘‘.கே. மேடம், நான் எடுக்கல. ‘அம்பைன்னு ஒரு ரைட்டர் இல்லாமலேயே என் ஆல்பம் நிறைவடையும்.’’

அன்று மாலை நடந்த முற்றத்திற்கு, ரவி தன் கேமராவை அறையிலேயே வைத்துவிட்டு வெறும் ஆளாக அம்மைதானத்துக்கு வந்திருந்தான். ஒரு மந்தகாச வெற்றி புன்னகையோடு அம்பை அவனைப் பார்த்து,

‘‘மீட்டிங்ல வச்சி எதுவும் இரகசியமா எடுத்துறாதப்பா’’ என்றார்.

ரவி மௌனமாக, ஆனால் உறுதியாக சொன்னது ன்னும் என் நினைவில் ததும்புகிறது.

‘‘மேடம், இது பப்ளிக் மேடை. இதுல உங்களை படமெடுக்க நான் உங்க அனுமதியை வாங்கணும்னுகூட அவசியமில்லை. உங்களை கேக்காமலேயே நூற்றுக்கணக்கான படம் எடுத்திருக்க முடியும். ஆனா எனக்கு வேணாம். எதன்பொருட்டோ நீங்க நிராகரிக்கிற ஒரு விஷயத்தை நான் ஏன் பலவந்தப்படுத்தணும்? ஒண்ணே ஒண்ணு சொல்றேன் மேடம். நீங்க எழுத்தாளர்னா, நான் கலைஞன். இதுல நீங்க மே இருக்கீங். நான் உங்களை படம் எடுத்து பொழப்பு நடத்துற தேர்ட் ரேட்டட் வியாபாரியில்லை. அதனாலதான் என் கேமராவை ரூம்ல வச்சிட்டு வந்தேன். இனி நீங்க சுதந்திரமா பேசுங்க.’’

கோபமும், ஆத்திரமும், கலைஞனுக்கான கம்பீரமும் சேர்ந்து ஒலித்த அக்குரல், டேனிஷ் மிஷன் மேநிலைப்பள்ளி மைதானத்தில் அதுவரை ஒலிக்காதது.

ஒரு வனப் பயணத்தில் ரவி எங்களோடிருந்தார். மனித மனம் இதுவரை இழந்துபோன ஸ்ருதிகளை மீட்டும் கணமாக அப்பயணம் மௌனத்திலும் இசையிலும் நிரம்பியிருந்தது. எங்கள் வழியை மறித்து, ஒரு பேயென வியாபித்திருந்த ஒரு ஆலமரம் எங்களை நிறுத்தியது. அதன் விழுதுகளும், அதன் பருண்மையும், அதன் நிழலும், ‘என்னை மீறி எங்கடா போறீங்க?’ என மிரட்டியது. அதற்கு அடிபணிந்து அதன் அடியில் வட்டமாக ஒடுங்கினோம். ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்வில் இந்த இடத்தை அடையக் கொடுத்த விலை, அவமானம், உடலிலும், மனதிலும் மிகுந்திருந்த தழும்புகள், இவைகளைத் தடவிப் பார்த்துக் கொண்டோம்.

ரவிதான் முதலில் தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டான்.

‘‘சுபா சுந்தரத்தின் அசிஸ்டெண்ட் நான். எங்க ஸ்டூடியோவுக்கு எப்போதும் இலங்கையிலிருந்து பலர் வந்து சாரோட பேசிக்கிட்டிருப்பாங்க.

மனதைக் கரைக்கும் அவ்வாழ்வியல் சிதைவு அனுபவங்களை ஈவிரக்கமின்றி துடைத்து, அடுத்த நிமிஷத்திற்கு தாவுவேன். சாதனை என்பது மட்டுமே மனம் முழுக்க நிரம்பியிருந்த நாட்கள் அவை. ராஜீவ் கொலை நடந்த அன்று காலை, என்னோடு சக புகைப்பட உதவியாளனாய் இருந்த ஹரிபாபு வீட்டிற்கு வந்து, ‘உன் கேமரா கிட் வேணும் ரவி. ராஜீவ் நிகழ்ச்சியை கவர் பண்ணனும்.’ என்றான்.

அதை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு என் அன்றாடங்களில் மூழ்கினேன். அடுத்தநாள் காலை தமிழ்நாட்டுக்கே ரத்தக்களரியாக விடிந்தது. என் வீட்டில் வந்து விழுந்த தினசரியிலும் அந்த இரத்த கவிச்சியை உணர முடிந்தது. நான் ரொம்ப இயல்பாக குளித்து முடித்து, மாலை முரசு அலுவலகத்திற்குப் போய், அதன் எடிட்டரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு, கீழே இறங்கிடீகுடிக்க வந்தேன். அப்போது எடிட்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு, ராஜீவ் கொலையில் இறந்தவர்களின் பெயரை பட்டியலிட்டது. அதில் ஆறாவது பெயர்வைட் ஆங்கிள் ரவிஷங்கர்’.

‘‘வெயிட் வெயிட். ரவி சாகலை, அவன் அங்க போகவேயில்லை. இப்பதான் எங்கூட பேசிட்டு கீழே, ‘டீகுடிக்க போயிருக்கான்.

‘‘இது அஃபீஷியல் பிரஸ் நியூஸ்.’’

‘‘இல்லப்பா. ஏதோ தப்பு நடந்திருக்கு.’’

ரவி, இப்போது நிகழ்காலத்திற்கு வந்திருந்தான்.

‘‘அந்த தொலைபேசி செய்தி என் வாழ்வை நாசப்படுத்தியது பவா. என் ஆன்மா, உடல் ஆகியவற்றின் சிதைவை ஐந்து வருடமாய் என்னையே பார்க்க வைத்தது. என்னிடமிருந்த எல்லா நுட்பங்களையும்மல்லிகைஇல்லம் ஈவிரக்கமின்றி உறிஞ்சியெடுத்தது. ‘ஒருவேளை ஹரிபாபுவுக்கு ராஜீவை கொல்லப்போகிற விஷயம் தெரிந்திருக்குமோ?’ என இப்போது யூகிக்கிறேன். அவன், ‘ரவி, நீயெல்லாம் என்ன பெருசா போட்டோ எடுக்குற? நான் எடுக்கப்போற ஒரே ஒரு போட்டோ உலகம் முழுக்க பேசப்படும் பாருஎன அடிக்கடி சொல்லக்கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்பதை, ராஜீவ் கொலைக்குப் பிறகே உணர முடிந்தது.

குண்டுவெடித்தபோது, ஹரிபாபு சுமார் 20 அடிக்கும் மேலே தூக்கியெறியப்பட்டிருக்கிறான். உயிரற்ற அவன் உடல்மேல், தூக்கியெறியப்பட்ட அந்தக் கேமராவும் வந்து விழுந்திருக்கிறது. ரொம்ப நேரமாய், ஒரு சந்தேகத்தோடே அவனைக் வனித்துக் கொண்டிருந்த ஒரு இன்ஸ்பெக்டர், அக்கேமராவை எடுத்துக் கொண்டுபோய் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஸ்டூடியோவைத் திறக்கச் சொல்லி, அதைக் கழுவி பிரிண்ட் போடச் சொல்கிறார்.

டார்க் அறையிலிருந்து கதவை வேகமாகத் திறந்த அந்த ஸ்டூடியோ தொழிலாளி,

‘‘சார் இது கலரா, ஒயிட் அண்ட் பிளாக்கா?’’

‘‘தெரியலப்பா, இப்ப எவன் ஒயிட் அண்ட் பிளாக்ல எடுக்கறான், கலர்தான்.’’

கேமராவைத் திறக்காமல் அப்படியே அந்த இன்ஸ்பெக்டரிடம் தந்து,

‘‘கலர்னா மெட்ராஸ்தான்’’

அதிலிருந்த புகைப்படங்களே, ராஜீவ் கொலையின் பல மர்மங்களை உலகிற்கு அவிழ்த்தது. கொலைக் களத்தில் சிதறியிருந்த பொருட்களில் ஹரிபாபு இரவல் வாங்கிப் போயிருந்த வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் கேமரா பேக்கும் ஒன்று. இப்படித்தான் இறந்து போனவர்களின் பட்டியலில் ரவி இடம்பெற்று, பிறகு பிழைத்து வந்தது.

இதோ இந்த டிசம்பர் சீசன் துவங்கிவிட்டது. ஏதாவதொரு இருட்டு மூலையில், தன் செல்ல கேமராவோடு, இதுவரை தவறவிட்ட ஏதோ ஒரு அற்புத கணத்தின் அசாத்தியத்தை அப்படியே தன் கேமராவில் அள்ளிக்குடிக்க காத்திருக்கும் தாகமடங்காத அக்கலைஞனை நீங்கள் காணக்கூடும். மௌனமாக ஒரு கைக்குலுக்கலோடு விடைபெற்றுக் கொள்ளுங்கள். நாத உச்சத்தை, சுதா ரகுநாதனோடு சேர்ந்து ரவியும் தொட முயலும் இத்தருணம், எதனாலும் கலைந்துவிடக்கூடாது.

5 comments:

  1. கடற்கரை மணலை அள்ளி தெளித்துப் போல இருக்கிறது வரிகள், ஒவ்வொரு வரியும் புக முடியாத இடத்திலும் ஒட்டிக்கொண்டது.
    வாழ்த்துகள்..

    நன்றிகளுடன்
    ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி

    ReplyDelete
  2. முழுமையாகப் படித்துமுடித்தபின்னும் எதுவும் எழுத தோன்றவில்லை, மவுனம் கலைந்துவிடக் கூடுமோ!

    ReplyDelete
  3. ஒளிப்படக்காட்சியை பிரதிபண்ணும் வைட் ஆங்கிள் ரவியின் சிறப்பைச் சொல்லி அழகாய் நேர்த்தியான பதிவு  வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. ரவிஷங்கரும்,கோமலும் சேர்ந்து வழங்கிய சுபமங்களா தமிழின் பொக்கிஷம் அம்மி கொத்தாத சிற்பி கவிஞர் அப்துல்ரகுமானை கடற்கரையில் கால்நீட்டி ஒரு கை ஊன்றி உட்கார்த்திவைக்க ரவிஷங்கரால் மட்டுமெ முடியும். அந்தப்படமும் கவிஞர் போஸ் கொடுத்ததும் ஆச்சரியம்.

    ReplyDelete
  5. ஒரு கலைஞனின் போராட்டங்கள் வித்தியாசமானவை, படிக்க படிக்க ஆச்சர்யமாக இருந்தது, //என்னிடமிருந்த எல்லா நுட்பங்களையும் ‘மல்லிகை’ இல்லம் ஈவிரக்கமின்றி உறிஞ்சியெடுத்தது.// எவ்வளவு அர்த்தம் உள்ள வரிகள், இதனை கற்பனை செய்துபார்த்தால் மனது நடுங்குகிறது. அற்புதமான கட்டுரை பவா?

    ReplyDelete