Thursday, December 15, 2011

வரைய முடியாத சித்திரம்

திலகவதி ஐ.பி.எஸ்.

அப்போது அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்பது நினைவில்லை. ஒரு பத்திரிகையில் படித்த அவர்களின் நீண்ட நேர்காணலே, அவர்களை நோக்கி என்னைத் தேட வைத்தது. பெண்களின் ஆழ்மன வலி, எப்போதாவது ஒருமுறை எல்லாவற்றையும் மீறி இப்படி வெளிப்படும். எழுத்தாளரும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான திலகவதியே, இப்படியான என் தொடர் தேடுதலில் நான் கண்டடைந்த என் ஆத்மார்த்த ஸ்நேகிதி.

அந்நேர்காணல் வாசித்த எனக்கே வலி நிறைந்தது. வாழ்ந்தவருக்கு? அவள் விகடன் துவங்கிய புதிதில் ராசாத்தி அம்மாள் ‘என் சிரிப்பு சிங்கப்பூருக்கு போய்விட்டது’ என பத்து பக்கத்துக்கு ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில்தான் நான் அந்தம்மாவின் ஆத்மாவை, உள்மனதை, அதன் ரணத்தை உணர்ந்து கொண்டேன். நம், பொது புத்திகளிலிருந்து விலகி நின்று சிலரை உள்வாங்கும்போதுதான், அவர்களின் ஸ்நேகமும், சமூகம் அவர்கள் மேல் ஏற்றியிருக்கிற பிம்பம் கலைந்து, அவர்களை நம் சக மனுஷியாக, தோழியாக, நின்று நம்மில் ஒருவராக உணர முடியும்.

அதேபோல், எழுத்தாளர் திலகவதியுடனான என் முதல் தொலைபேசி உரையாடலில் நான் அடைந்த அனுபவம் அலாதியானது. அதிகாரம், பதவி இவைகளை மீறி, ’பூ, நதி, வனம், அனில்’ என மீறத் துடித்த ஒரு மனுஷியிடம் நான் நட்பானேன்.


முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நாங்கள் ஒரு மாவட்ட மாநாட்டையே, மாநில மாநாட்டுக்கும் மேலே போய் நடத்தினோம். சாரோன் போர்டிங் ஸ்கூல் மைதானத்தில் அன்று குவியாத படைப்பாளியோ, கலைஞனோ இல்லை. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி என ஆரம்பித்து, ஓவியர் சந்துரு, ட்ராட்ஸ்கி மருது, எடிட்டர் லெனின் என அந்த ஆளுமைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.

அம்மைதானத்தில் ஆங்காங்கே கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்த படைப்பாளிகளுக்கிடையே, ஒரு சைரன் வைத்த காரிலிருந்து இறங்கி, கம்பீரமும், பேரழகும் மிக்கவராக அவர் நடந்து வந்த காட்சி இலக்கியவாதிகளுக்கு பழகியிராது. அவர் எங்களோடு சகஜமாய் இருக்க முயன்றதும், நாங்கள் விலகிச் சென்றதுமாக அந்த டிசம்பர் ஞாயிறு மெல்ல என் நினைவில் துளிர்க்கிறது.
அப்பள்ளி மைதானத்து கல்மேடையில் உட்கார்ந்து நானும் அவரும் எங்கள் கதைகளை பகிர்ந்துகொண்டோம். ஏதோ ஒரு புள்ளி, இந்த துளிரும் நட்பை இன்னும் அடர்த்தியாக்கியது. எல்லா மேடைகளிலும், ‘‘பவா என் மூத்த மகன்’’ என்று சொல்லுமளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவரானார் திலகவதி. தொடர்ந்து வாசிப்பையும், எழுத்தையும் ஒரு ஜீவனோடே தனக்குள் பழகி வைத்திருந்தார் திலகவதி. 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில், 20 மணி நேரத்திற்கும் மேல் உழைத்துக் கொண்டேயிருந்த அசாத்தியமான மனுஷி திலகவதி.

முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது, போலீஸ்காரர்களின் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுத்தவேண்டி ‘பாலின நிகர்நிலைப் பயிலரங்கம்’ என்ற ஆறு மாத பயிற்சி வகுப்பு ஒன்று திலகவதி மேடம் தலைமையில் தமிழகம் முழுவதும் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நானும் என் ஸ்நேகிதி லஷ்மி மேடமும் இயங்கினோம். அது, கருத்துக்களால் நிறைந்த ஒரு காலம்.

போலீஸ்காரர்கள் மனரீதியாக எவ்வளவு கீழானவர்களாக இருக்கிறார்கள் என்பதறிந்து அதிர்ந்தோம். பெண்களை படுப்பதற்கான இயந்திரங்கள் என்பதுக்கு மேல் அவர்களால் கருத முடியவில்லை. தாய்வழிச் சமூகத்திலிருந்து ஆரம்பித்து, வரலாறு நெடுக ஆண்கள் அவர்களை எப்படியெல்லாம் இம்சித்திருக்கிறார்கள் என்ற எங்கள் உணர்வுபூர்வமான உரைகள், அவர்களின் இறுகியிருந்த மனங்களை கொஞ்சம் ஈரப்படுத்தியிருக்கலாம். அதற்குமேல் எதுவும் நிகழவில்லை.
ஆனால், அந்த பயிலரங்குக்கு திலகவதி மேடம் எடுத்த ஆத்மார்த்த முயற்சிகள், உழைப்பு, பயணம் எல்லாம் எந்த பதிவுகளுமின்றி போனாலும், பல போலீஸ்காரர்களின் வாழ்வியல் அறத்தின் மீது எழுப்பிய கேள்விகள், என்றென்றும் நிற்கும். ரீட்டா மேரி என்ற பெண்ணை திண்டிவனத்தில் ஒரு வீட்டிலிருந்து மீட்டு, போலீஸ்காரர்களும், சிறைக்காவலர்களும் சீரழிந்த கொடுமை தமிழகத்தை வழக்கம்போல் ஓரிரு நாட்கள் உலுக்கிய செய்தியாக மட்டும் பார்க்கப்பட்டபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதன் விசாரணை அதிகாரியாக திலகவதியை நியமித்தார். அதன் விசாரணைக்கென்று அவர்கள் செஞ்சிக்கு வந்திருந்தபோது, என்னையும் வரச்சொல்லி தொலைபேசியில் அழைத்தார். அவ்விசாரணயின் முழுமையிலும் நான் அவருடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்தபோது, எனக்குள் திலகவதி வேறு வேறு மனுஷியாக ஒரு படச்சுருளாக பதிவாகிக்கொண்டேயிருந்தார்.

கோபம், உக்கிரம், கவலை, கண்ணீர், ரௌத்ரம், சாந்தம் என பலவிதமான மன உணர்வுகளை அவர்கள் முகத்தின் வழியே நான் உணர்ந்தேன். வரிசை கட்டி நின்று எங்கள் மீது வீசிய, மீடியா ஒளியை மீறி என்னை அவர் காரின் பின் இருக்கைக்கு போய் உட்காரச் சொன்னார்.
கையில் கனத்த ரீட்டா மேரியின் விசாரணை பைலில் முகத்தை மூடிக்கொண்டு, காரில் ஏறி செஞ்சி சப்ஜெயிலுக்கு போகச் சொன்னார். அப்போது இருள் கவ்வியிருந்தது. இதே போலொரு மங்கிய இருளில்தான் அச்சகோதரி இச்சிறைச்சாலை காவலர்களால் சிதைக்கப்பட்டது என காலத்தை சாட்சிபடுத்தினார்.

அங்கு நிலவிய அசாத்திய மௌனம் எதன் பொருட்டாவது கலைய வேண்டுமென மனம் விரும்பியது. அங்கிருந்து திண்டிவனத்திற்கு ரீட்டாமேரிக்கு சிறை தண்டனை கொடுத்த பெண் நீதிபதியின் வீட்டிற்கு சென்றோம். வழிநெடுக, வரலாறு நெடுக பெண்களுக்கு நாம் இழைத்த கொடுமைகளை பட்டியலிட்டார். ‘இதில் நானும் ஒருத்தி’ என வெடித்தழுதார்.

‘‘ரீட்டாமேரி என் மக பவா. ஒரு சின்னக் குழந்தை எத்தனை பலமான மிருகங்களால் சிதைந்திருக்கிறது பாருங்க’’ என அந்தக் கார் பயணம் துயரத்தால் நிறைந்தது. நான் காரில் காத்திருந்தேன். அவர் நீதிபதியின் வீட்டிற்குள் சென்று பேசிக் கொண்டிருந்தார். ‘மேடம் இன்னிக்கு நைட் எங்க சாப்புடுவாங்க?’ என்ற அங்கலாய்ப்பில் ஒரு டி.எஸ்.பி. அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

‘செஞ்சி கெஸ்ட் ஹவுஸ்ல, திண்டிவனம் சாரம் கெஸ்ட் ஹவுஸ்ல.. அதிலில்லாம செங்கல்பட்ல’ என்று அவர் இரவு உணவு ஏற்பாட்டின் விஸ்தீரணத்தை, சூழலின் கணமறியாமல் என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தது சகிக்க முடியாததாய் இருந்தது. தங்கள் மேலதிகாரிகளை திருப்திப்படுத்த இவர்கள் எடுக்கும் அக்கறையில், நூறில் ஒரு பங்கையாவது ரீட்டாமேரி மாதிரியான சராசரி பெண்களை காப்பாற்ற எடுக்கத் தவறிவிடுகிறார்கள்.

இரவு 12 மணிக்கு விசாரணை முடிந்து, இறுகிய முகத்தோடு நீதிபதியின் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவசரமாக காரில் ஏறி

‘‘ரவி, பவா வீட்டுக்கு போ’’ என உத்தரவிட்டார். ‘‘பவா, ஷைலுகிட்ட சொல்லி சாப்பிட ஏதாவது செய்யச் சொல்லு’’ என்றார்.
அன்று நாங்கள் பயணித்த வேகம், அதற்கு முன்னும் பின்னும் எப்போதும் இல்லாதது. அவ்வேகம் என்னை நிலைகுலைய வைத்தது.

‘‘மேடம், இத்தனை வேகம் அவசியமா?’’

‘‘இந்த வேகத்தில் விடுபட்ட ஒன்றிரண்டைச் சேர்த்து செய்யலாம் பவா.’’

இரவு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தோம். வீட்டில் நுழைந்து வழக்கமாக அவர்கள் உட்காரும் அந்த சின்ன ஹாலின் நடுவே தரையில் கால் நீட்டி உட்கார்ந்தார். கொஞ்சம் நிதானப்பட்டிருந்தார். அப்பெண்ணின் சிதைவை உணர்வுகளற்று ஒரு ரிப்போர்ட் மாதிரி சொன்னார்.

‘‘ரவி வண்டில பவாவுக்கும் ஷைலுவுக்கும் டிரெஸ் வச்சிருக்கேன். எடுத்துகிட்டு வா’’ என்றார்.

‘‘மேடம் இந்த சூழல்ல எங்களுக்கு எதுக்கு புதுத்துணி மேடம்?’’

‘‘நாளை காலைல பத்து மணிக்கு ரீட்டாமேரியைப் பார்க்க சென்னை ஜி.ஹெச்.சுக்கு போறேன். அந்தப் பொண்ணுக்கு ஆறு சுடிதார் வாங்கி கார்ல வச்சிருக்கேன். அப்படியே எம் புள்ளைகளுக்கும் வாங்கினேன்.’’

இந்தப் பேரன்பு, எப்போதும் எங்களை நிலைகுலைய வைக்கும். எனக்கு, ஷைலுவுக்கு, வம்சிக்கு, மானசிக்கு, எங்கள் வீட்டு சாந்திக்கு, தனித்தனியே என் நண்பர்களுக்கு என்று, அவர்கள் எப்போதும் அன்பைக் கொட்டின காலம், ஒரு படைப்புக்கு நிகரானது. நாங்கள் ‘வம்சி புக்ஸ்’ ஆரம்பித்தது, அதை ஒரு மேலான இடத்திற்கு கொண்டு போனது எல்லாவற்றிலும் அவர்களே முதன்மையானவர்.

ஒரு பத்திரிகையில் திலகவதியின் ஒரு பக்க கதை படித்து, நேரத்திற்காக காத்திருக்காமல் ஒரு நள்ளிரவில் அழைத்தேன்.

‘‘மேடம், குமுதத்துல உங்க கதை அருமை.’’

‘‘அப்பா, உங்கிட்ட ஒரு பாராட்டு வாங்க எனக்கு எட்டு வருஷம் ஆச்சி.’’

‘‘அதில்ல மேடம்’’ என வழுக்கினேன்.

அக்கதை தமிழின் பிரபலமான ஒரு நடிகருடையது. அவர் நலிந்த சில கலைஞர்களுக்கு உதவ நினைத்து, தன் வீட்டிற்கு அழைக்கிறார்.

நீண்ட நேரம் காத்திருந்து அவ்வயதான கலைஞர் உள்ளே போகிறார். அப்பிரபல நடிகர் ஓடிவந்து அவர் கைப்பற்றி,

‘‘சொல்லுங்க அய்யா. நான் உங்களுக்கு என்ன பண்ணனும்?’’
நிதானமாக அப் பெரியவர் சொல்கிறார்

‘‘எதுவும் பண்ணாத. கலைஞன்ல நல்ல கலைஞன், நலிந்த கலைஞன்னுல்லாம் யாருமில்லப்பா. எங்கிட்ட பணம் இல்லாம இருக்கலாம். உங்கிட்ட அது கொட்டி கிடக்கலாம். ஆனா, நான் என்னிக்குமே கலைஞன்தான். இனிமே எங்களை நலிஞ்ச கலைஞர்கள்னு சொல்லி அவமானப்படுத்தாதே.’’


இவ்வரிகள் என்னை சுழன்றடித்தது. மகாகவி பாரதியின் கம்பீரத்திலிருந்து ஆரம்பித்து, தமிழின் மகத்தான பல கலை ஆளுமைகளை என்னருகே கொண்டு வந்தது. சொல்ல முடியாத ஒரு உணர்வுத் தருணத்தில், நான் என் மரபுகளின் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து, அவர்களின் கால்களைப் பற்றி, இளம் தலைமுறையின் சார்பில் என் நன்றியை சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். அவர்களின் கால்களும், என் கண்களும் ஈரத்தில் நிறைந்திருந்தது.

-நன்றி மீடியா வாய்ஸ்


3 comments:

  1. இவர் போன்ற காவக் துறை பெண் அதிகாரிகள் இன்னும் வர வேண்டும்

    ReplyDelete
  2. இப்படியான அதிகாரிகள் இருப்பதால் தான் சிலபேரைச் சரி பாதுகாக்க முடிகின்றது இல்லையேல் காவல்துறை காமத்துறையாகிவிடும்!
    அருமையான பதிவு படித்து மனம் கனத்துவிட்டது. 

    ReplyDelete
  3. திலகவதி மேடம் நல்ல இலக்கிய ரசனை உள்ளவர் எழுத்தாளர்,அவங்க வேலை கூட கொஞ்சம் risk தான் ஆனா திறமையா செயல்படுவாங்க.அவங்களை பார்க்கனும்னு ஆசைப்பட்டதுண்டு.அவங்க எனக்கு rolemodel la இருந்திருக்காங்க.நான் IPS ஆகியிருந்தா அவங்க தான் காரணமா இருந்திருப்பாங்க.நாஞ்சிலோட சிறுகதைகளை முத்துக்கள் பத்துன்னு தொகுத்து முன்னுரை எழுதிருப்பாங்க ரொம்ப நல்லா இருந்தது."வலி தாங்கி பயணிக்கும் போது தான் வாழ்வை இன்னும் நன்றாக புரிஞ்சிக்க முடியுது” இல்லையா?.I salute Mam..

    ReplyDelete