Thursday, March 15, 2012

வம்சி புத்தக வெளியீட்டு விழா


இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்த புத்தக வெளியீட்டு விழா.

"எல்லோரும் சேர்ந்து ஒரு குரூப் போட்டா" என நண்பர் எஸ்.கே.பி.கருணா சொன்ன போது.மேடையில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்ற போது தான் அதை உணர்ந்தேன்.

இம்மேடை எத்தனை பெரிய ஆளூமைகளாலானதென்று.

பால் சக்காரிய,ஏசியாநெட் சசிக்குமார், விவேக் ஷேன்பேக், ஜெயமோகன், ஜி.குப்புசாமி, இந்திரன் தேவிபாரதி என படைப்பாளிகளால் நிறைந்த மேடை அது.

பேசிய ஒவ்வொருவருமே மிக எளிமையாக, ஆத்மார்த்தமாக, குறைவான நேரத்தில் பேசினார்கள். யாருக்கும் யாரும் நேரத்தின் அருமையை சொல்லத்தேவையெழவில்லை.
மூன்றுமே மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள். சென்னைக்கு வெகுத்தொலைவிலும் இத்தனை சிறப்பானதொரு வெளியீட்டு விழா என்பதே அப்படைப்பாளிகளை மேலும் உற்சாகப்படுத்துவதாய்தான் இருந்திருக்க வேண்டும்.

எப்போதுமே இலக்கிய நிகழ்வு என்பது எனனைப் பொறுத்தவரை மாலை ஆறு மணிக்கு துவங்கி ஒன்பது மணிக்கு முடிந்து, பேனரை சுருட்டி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவதல்ல. அந்நிகழ்வின் பங்கேற்ப்பாளன் ஒருவன் ரயிலிலிருந்து இறங்கும் கணத்திலேயே அது துவங்கி விடுகிறது. ஜெயமோகனை இரவு இரண்டுமணிக்கு 'ஆலப்பி எக்ஸ்பிரஸ்' ரயிலிலிருந்து தூக்கத்தில் எழுப்பி காரில் ஏற்றிவந்த ஜோலார்ப்பேட்டை இளம் பரிதியின் அப்பின்னே உரையாடலிலிருந்து அந்த நிகழ்வுகள் ஆரம்பமானது.

அப்படியேத்தான் மேடை நிகழ்வுகள் நிறைவுற்று ஃபோகஸ் விளக்குகள் அணைக்கப்பட்ட தருணத்தில் எல்லோரும் அண்ணாந்து வானத்தை பார்த்தோம். நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானம் படைப்பாளிகளை வழி நடத்தியது.
எல்லையில்லா சுதந்திரத்தோடு அவரவர் உலகில் அவரவர் இருந்த இரவு அது. ஆனலும் எல்லோருக்கும் பொதுவில் நட்சத்திரங்கள் மட்டும் இருந்தன.
பதிவு செய்யப்படாத அவ் உரையாடல்களை காற்றில் விதைத்தோம். காற்று அவைகளை கர்ப்பம் போல சுமந்து எங்காவது பிரசவிக்கும்.
தொடர்ந்து எங்கள் மகள் மானசியின் 10வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் என் வீட்டில் முந்தைய இரவின் நீட்சீயாக தொடர்ந்தது. என் வீடு எனக்கு அடையாளமே தெரியாதது மாதிரி சிந்து, ஏழுமலையின் தலைமையில் ஒரு நண்பர்கள் கூட்டம் அதை ஒரு ஆர்ட் கேலரி போல மாற்றியிருந்தார்கள். அதுதான் என் பலம்.
என் வாழ்வில் ஒவ்வோரு தருணத்திலும், எங்கிருந்தோ சில நண்பர்கள் வந்து வாழ்நாலெல்லாம் ஞாபகப்படுத்தும் படியான பெரிய விஷயங்களை செய்து முடித்துவிட்டு தடம் இன்றி போய்விடுகிறார்கள்.
வீடு நண்பர்களால் நிறைந்திருந்தது. மகள் மகிழ்வின் உச்சத்தில் அவள் தோழிகளோடு ஓடியாடிக்கொண்டிருந்தது பார்க்க பரவசமாயிருந்தது. இத்தனை நண்பர்களால் சூழப்பட்டிருந்த அவள் பாக்யவதி.
சாப்பிட்டு முடித்து சக்காரியா சார் என்னை தனியே அழைத்து நான் இன்று புறப்படுவதர்க்கு முன் தன் அறைக்கு வரச்சொன்னார். இரவு எட்டு மணிக்கு அவர் அறையில் இருந்தேன். அதிகமான சந்தோஷத்தில் அவர் இருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. இந்நிகழ்வு தன் வாழ்வின் முக்கியமான ஒன்று என்று திரும்ப திரும்ப சொன்னார். உங்களை மாதிரி ஒரு இலக்கிய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை பவா என்று என்னைக் கட்டிக்கொண்டார்.
என்னவோ தெரியவில்லை மௌனமாக நின்றேன். ஏதேதோ எனக்கு முன் நிழலாடியது…
சரி.... அடுத்த நிகழ்வுக்கு திட்டமிட வேண்டும்...
















Thursday, March 8, 2012

வம்சி புத்தக வெளியீட்டு விழா


வம்சி பதிப்பகம் சார்பாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5: 00 மணிக்கு மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவும், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்திரன், மற்றும் இயல் விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஒரு நேசமிகு சந்திப்பும் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.       





Tuesday, March 6, 2012

மதுரை புத்தக வெளியீட்டு விழா


மதுரை புத்தக வெளியீட்டு விழா இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் அனுபவமாகவே இருக்கிறது. ஒருங்கிணைப்புக்கான எல்லா வலியையும் தம் இரு தோள்களில் ஏற்றிக் கொண்ட அன்புத் தோழன் . முத்துக்கிருஷ்ணன் எப்போதும் போல் என்னுள் உறைந்திருக்கிறான்.

புகைப்படங்களைப் பார்க்க: https://picasaweb.google.com/105647173808629498658/GSSLfF