திருவண்ணாமலை என்றதும் அண்ணாமலையாரும்
கிரிவலமும்தான் நினைவுக்கு வரும், ஆனால்
இலக்கியவாதிகளுக்கு 19. டி.எம். சாரோனும் பவாவும்தான்
நினைவுக்கு வருவார்கள்,
வருடந்தோறும் கலை இலக்கிய இரவு என்பது
நவீன இலக்கியமும் ஓவியமும் இசையும் சினிமாவும் என பல்வேறு தரப்புகளும் இணைந்து
புதிய சாத்தியங்களை அடைந்த பொழுதுகளை சாத்தியமாக்கியவர் பவா,
நமது சமகால வாழ்வை கலை, இலக்கியம், அரசியல் ஆகிய மூன்றும்தான்
நிர்ணயிக்கின்றன, இவற்றில் ஏதோவொன்றுடன் அல்லது
எல்லாவற்றுடனுமே நமக்கு தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனாலும் நமக்கு விருப்பம் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் இந்த மூன்றுமே நமது வாழ்வை பாதிக்கத்தான் செய்கின்றன, ‘எனக்கு பாரக் ஒபாமாவைத் தெரியும், அவருக்குத்தான் என்னைத் தெரியாது‘ என்பதைப் போல,
இத்துறைகள் அளவுக்கு துறை சார்ந்த
ஆளுமைகளும் முக்கியமானவர்களே,
பொதுவாக, நம் பொது புத்தியில் ஆளுமைகள் சார்ந்த சில முன் தீர்மானங்கள் உண்டு, கேள்வி ஞானமும் ஊடகங்களும் அப்படியொரு
பிம்பத்தை நமக்குள் கட்டமைத்துள்ளன, அப்படி
கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைத் தாண்டி, முன்
தீர்மானத்தைத் தாண்டி அந்த ஆளுமையைக் குறித்து நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை,
ஒரு பொது ஜனத்துக்கும் ஆளுமைக்கும்
இடையிலான திரையை, இதுபோன்ற புத்தகங்களாலும்
அனுபவங்களாலும் மட்டுமே நம்மால் தாண்டிச் செல்ல முடிகிறது,
ஆளுமைகளோடு நெருங்கிப் பழகியவர்கள்
அவர்களைப் பற்றி எழுதுவது என்பது, தான்
எவ்வளவு பெரியவன், தனக்கு எத்தனைப் பேரைத் தெரியும்
பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அல்ல,
அப்படித் தம்பட்டம் அடித்துக்
கொள்கிறவர்கள் எழுதியவற்றிலிருந்து நாம் ஆளுமைகளின் பெருமைகளைக் குறித்து
ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது, மாறாக
எழுதியவனின் வறுமையையே அறிந்துகொள்ள முடியும்,
உண்மையில் அசலான இந்த அனுபவங்கள் ஒரு
பாலம்,
ஆளுமைகளுக்கும் பொது புத்திக்கும்
இடையில் அமைக்கப்படும் ஒருவித புரிந்துணர்வு பாலம்,
ஆளுமைகள் எப்போதும் கூண்டுக்குள்
அடைப்பட்டு கிடப்பவர்கள்,
பிரபல்யமும் புகழும் ஊடகங்களும்
கட்டமைத்த கூண்டு,
அதிலிருந்து அவர்கள் சுதந்திரமாக
வெளியில் வருவதென்பது அனுமதிக்கப்படாத ஒன்று,
அப்படி கூண்டில் அடைபட்டுக் கிடக்கும்
ஆளுமைகளின் அறியாத பரிமாணங்களை, அக்
கூண்டினை நெருங்க முடியாத பொது ஜனங்களுக்கு, வாசகர்களுக்கு
சொல்கிற முயற்சியே இது போன்ற பதிவுகள்,
இதனால் என்ன பயன்?
ஒன்று ஆளுமைகள் குறித்த நமது
புரிதல்களை நாம் மறுபரிசீலனை செய்து கொள்ள முடியும்,
அடுத்தது, இவர்கள் சார்ந்த துறைகளில் இவர்களது
பங்களிப்பு என்ன? அந்தப் பங்களிப்புக்கும் இவர்கள் பெற்ற
பிரபல்யத்துக்கும் தொடர்பு உள்ளதா? அதற்காக
இவர்கள் தந்திருக்கும் விலை என்ன? என்றெல்லாம்
நம்மால் யோசிக்க முடியும்,
புத்தகத்தில் சில குறிப்பிடத்தக்க
அனுபவங்கள் உள்ளன,
திருமண வரவேற்பு
கலெக்டரின் பெயரை தன் மகனுக்கு சூட்டிய
கந்தர்வன்
லெனின் தன் தோளில் சுமந்த நாக் அவுட்
கல்வராயன் மலையில் கோணங்கி
மேலும் பெயரளவில் மட்டுமே நாம் அறிந்த
சிலரைப் பற்றிய பதிவுகள்
கைலாஷ் சிவன் ,, இவரைப்
பற்றிய பதிவு என்பது சில காலத்துக்கு முன்பு இலக்கியவாதிகள் என்ற பெயரில் சில
பிரகிருதிகள் செய்த அதிகபிரசிங்கித்தனங்களை நம்மால் நினைவுபடுத்தி சிரிக்க
வைக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில்
கைலாஷ சிவனை சந்தித்ததும் என் நண்பர் அவரைக் குறித்துக் குறிப்பிட்டதும்
நினைவுக்கு வருகிறது,
தன்னை படமெடுத்துவிடக்கூடாது என்று
பிடிவாதமாய் மறுத்த அம்பையுடன் ‘நீங்கள்
எழுத்தாளன் என்றால் நான் கலைஞன், வியாபாரி
அல்ல‘ என்று மார் நிமிர்த்திப் பேசிய வைட்
ஏங்கிள் ரவி
எனக்கும் புதுமைப்பித்தன்தாண்டே
ஆதர்ஷம் என்று தமிழ்ச்செல்வனை ராணுவத்திலிருந்து விடுவித்த அந்த பெயர் தெரியாத
மேஜர்,
ஏற்கனவே நமக்குத் தெரிந்த ஆளுமைகளைக்
குறித்தும் அவர்களைப் பற்றிய நமது புரிதல்களை மேலும் உறுதிப்படுத்தும்விதமாகவும்
பதிவுகள் உள்ளன,
மேடையில் தனக்கு சமமாக அன்றைய
பாண்டிச்சேரி சபாநாயகர் கண்ணணுக்கு இருந்த நாற்காலியை எடுக்கச் சொல்லிவிட்டு, கண்ணணை கீழே உள்ள நாற்காலியில்
உட்காரும்படி கைகாட்டும்போது நாம் உணரும் ஜே,கேயின்
கம்பீரம் சாகித்ய அகாதமி பரிசுக்காக சா, கந்தசாமிக்கு
ஓட்டுப் போடாமல் லட்சுமிக்கு ஓட்டுப் போட்டதாக சொல்லும்போது குறுகிப் போகிறது,
சில ஆளுமைகளைக் குறித்து எழுதும்போது
அவரது பெருமைகளையும் சாதனைகளையும் குறிப்பிடும் அதே நேரத்தில் அவர்களது
பலவீனங்களையும் போதாமைகளையும் சுட்டிக் காட்ட தயங்கவில்லை பவா,
பாரதிராஜா சமூகம் என்பது நாலு பேர்
கதைக்குப் பிறகு எதையுமே படிக்கவில்லை என்று குறிப்பிடும் பவா, எதன் பொருட்டோ பிரபலம் வாசிப்பைத்
துப்புறத் துடைத்துவிடுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்,
ஜெயகாந்தனைப் பற்றிய இறுதிப் பகுதியில்
,, உடல் நிலை பாதிக்கப்பட்டு கலைஞரோடு
சமசரமாகி,, என்று தன் விமர்சனத்தை வெற்றிடத்தில்
பதிவு செய்கிறார்,
அதே நேரத்தில் பவாவின் சில பதிவுகள், அவரது அனுபவங்கள் கருத்துக்கள், என்றாலும் சற்று மிகையானதாக படுகிறது, குறிப்பாக இயக்குநர் மிஷ்கினைக்
குறித்தும் எஸ் ராமகிருஷ்ணன் குறித்தும் அவரது வரிகள், அந்த பதிவில் நமக்கு அனுபவமாகும்
மிஷ்கின் வேறு, அவரது படங்களின் வழியாக நான் புரிந்து
கொண்டிருக்கும் மிஷ்கின் வேறு,
இது முழுக்க முழுக்க பவாவின் அனுபவ
உலகம், தான் உணர்ந்தவாறு அனுபவத்திவாறு
குதூகலத்தோடும் ஆச்சரியத்தோடும் நெகிழ்ச்சியோடும் எந்த பாசாங்கும் இன்றி
எழுதியுள்ளார், இவர்களைப் பற்றிய வாசகனின்
கருத்துக்கள் வேறாக இருக்கலாம், பல்வேறு
விதமான விமர்சகனங்கள் இருக்கலாம்,
இதில் பவா குறிப்பிட்டிருக்கும்
ஆளுமைகள் எனக்குள் ஏற்படுத்தியுள்ள உணர்வை விட முக்கியமானது பவாவைக் குறித்து நான்
உணர்ந்தது,
இத்தனை முக்கிய ஆளுமைகள், சினிமாக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், இடதுசாரி தோழர்கள் என்று எல்லோரையுமே
பவா தன் எளிமையால் அன்பால் ஈர்த்திருக்கிறார் என்பது முக்கியமானது, இவர்கள் எவரிடத்திலும் பவாவுக்கு
எந்தவொரு திட்டமும் இல்லை,
எதிர்பார்ப்பும் இல்லை, மம்முட்டியும் திலகவதியும் சாப்பிட்ட
அதே தட்டில்தான் கைலாஷ் சிவனும் கோணங்கியும் சாப்பிட்டிருக்கிறார்கள், அவருக்கு எல்லோருமே நண்பர்கள், ஆளுமைகளோ பிரபலங்களோ அல்ல,
இவர் சினிமாக்காரர், இவர் எழுத்தாளர், இவர் இடதுசாரி, இவர் அதிகாரி என்றெல்லாம் பவாவிடம்
எந்த பாகுபாடுமில்லை, அனைவருக்கும் விரிந்த கதவுகளுடன்
விசாலமான இதயத்துடன் பவா காத்திருக்கிறார், பவா
என்கிற இந்த அபூர்வமான ஆளுமையின் அளப்பரிய அன்பின் வெளிச்சமே இந்த நூலின் உள்ள
ஆளுமைகளின் பக்கங்களில் ஒளி வீசுகிறது,
No comments:
Post a Comment