Thursday, October 3, 2013

ஓநாயும், ஆட்டுக்குட்டியும் ஒரே குளத்தில் நீரருந்தும்

‘முகமூடி’யின் தோல்விக்குப்பின் சற்று மௌனத்திலிருந்த மிஷ்கின், உடன் அதிலிருந்து மீண்டு என்னுடனான தொடர் உரையாடலில் இரண்டு மூன்று கதைகருக்களையும், தலைப்புகளையும் விவாதித்தோம்.
 இருவருக்குமே மிகப்பிடித்தமான தலைப்பாக ‘‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’’ அமைந்தது.
தன் அலுவலகத்திலேயே நடந்த அப்படத்தின் துவக்க விழாவிற்கு பிரபஞ்சன், ட்ராஸ்கி மருது, எஸ்.கே.பி. கருணா, என் நண்பர் ஜே.பி. இவர்களோடு நான் என நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தோம். கமீலா நாசர், இயக்குனர் சேரனின் மனைவி ஆகியோரும் எங்களுடனிருந்து குத்து விளக்கேற்றினார்கள். அப்படத் துவக்க விழாவில் என் நண்பனும் போதகருமான ஜே.பி.தான், திருவிவிலியத்திலிருந்து ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே குட்டையில் நீரருந்தும்’ என்ற இவ்வாக்கியத்தைப் பகிர்ந்தான்.
அதன்பிறகான தொடர் படப்பிடிப்பும், Post Production-ம் நடந்த இந்த நான்கு மாதங்களின் ஒவ்வொரு நாளும் எனக்குத் தெரியும். இடையில் ஏற்பட்ட பொருளாதார கஷ்டங்களை தன் ஷீக்கால்களுக்குக் கீழே போட்டு நசுக்கிவிட்டு எழுந்து நின்றான் இக்கலைஞன். புறச்சூழல்கள் எதுவும் தன் படைப்பு மனநிலையை சிதைக்க அவன் அனுமதித்ததேயில்லை. தாள முடியாத துயரத்தை இசை கேட்டும், வாசித்தும், தனித்திருந்தும் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிகழ்த்துதலையும் ஒரு படைப்பாகவே கருதினான். இப்படத்தின் வணிக வெற்றி, அதன் மூலமான பணவருகை எதுவும் மிஷ்கினின் நினைவுகளில் நிழலாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஒருநாள் அதிகாலை மூன்று மணிக்கு மிஷ்கினிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  ‘பவா இன்னும் இன்றைய படப்பிடிப்பு முடிவடையவில்லை. இரவு பத்து மணிக்கு எனக்கு ஸ்ரீ ஆப்ரேஷன் செய்யும் அந்த காட்சியைப் படமாக்கினோம். அத்தனை விளக்கொளியில், இருபதுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் முன் ஐந்து மணிநேரம் நிர்வாணமாகக் கிடந்தேன். ஒரு மாதிரியான Madness, எந்த Concious-ம் எனக்கு இல்லை என்பதுமட்டுமல்ல. என் சக கலைஞருக்கும் இல்லை’  களைப்பை மீறி குரலில் உற்சாகம் மேலேறியிருந்தது.
எனக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்துள்ளது என்பதை அறிந்த அடுத்த ஐந்தாவது மணி நேரத்தில் என்னுடன் எங்கள் நிலத்தின் வரப்பில் சுற்றிக் கொண்டிருந்தபோது திரும்பி, என்னிடம் பேசினார்.
இப்படத்தில் பத்து பேரையாவது நான் கொன்றிருப்பேன். ஆனால் ஒரு கையில் துப்பாக்கியும், தோளில் தங்கையையும் அம்மாவையும் சுமந்து கொண்டு படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பெரும் கார் பார்க்கிங்கிற்குள் நுழையும் காட்சியில்  எதிர்பாராமல் ஒரு வாட்ச்மேன் என்னெதிரே நிற்பான். அவன் கண்களில் தோன்றும் சந்தேகம் என்னில் ஊடுருவும். நான் அவ்வயதான அப்பனை ஏறெடுப்பேன். அவர் தன் கண்களாலேயே,
‘‘என்னடா எங்க போற’’ என விசாரிப்பார். பத்துபேரை சுட்டுத்தள்ளிய நான் அவர் முன் தலைக் கவிழ்த்து நிற்பேன். எங்கள் இருவருக்குமான மௌனம் கேட்டைத் திறந்து என்னை உள்ளே அமைதிக்கும். இருவருக்குமிடையே இரு வசனங்களை வைத்துவிட்டு பிறகு நீக்கினேன். இளையராஜாவிடம், ‘‘இந்த வசனங்களை எடுத்தர்றேம்பா, இசையால் நீ அதை நிரப்பு’’ என்றேன்.
‘‘டேய் கொன்னுடுவேன் படத்திலேயே மொத்தம் ரெண்டு பக்கம் வசனம்கூட இல்லை. அதையும் எடுத்துட்டா மியூசிக் போட சொல்ற?’’ என செல்லமாக முதுகில் தட்டினார். மகத்தான கலைஞர்களின் கோபமும், செல்லமும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்யம். நேரில் பார்ப்பவர்களும், கேட்வர்களும் கூட பாக்யவான்கள். நான் கேட்டேன். தன்னை எதுவுமற்றவனாக்கி ராஜா என்ற இசைமேதையின் கையில் ஒப்படைத்து அவர் பின்னால் ஒரு பார்வையற்ற மனிதனாய் படம் முழுக்க நடந்து போகிறார் மிஷ்கின்.
இத்தனை அனுபவங்களோடும், பட ரிலீஸ் அன்று ஏற்பட்ட பல்வேறு மன, பண நெருக்கடிகளிலும் நசுங்கி அன்று மாலை திருவண்ணாமலையின் ஒரு மோசமான தியேட்டரில் படம் பார்க்கப் போனேன். போனேனில்லை. போனோம். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள். படம் துவங்கிய பத்து நிமிடங்களிலேயே, நாங்கள் வேறொரு படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். உடலில் படிந்திருந்த சராசரி தமிழ் சினிமா சனியன்களை ஒரு கலைஞன் தன் முத்தங்களால் துடைத்தெறிந்து இன்னொரு அனுபவத்திற்கு எங்களை அழைத்துப் போகிறான் என அறியமுடிந்தது.

மருந்துவக் கல்லூரியின் பேராசிரியருக்கு தொலைபேசி அழைப்புவரும்போது அவர் அப்பாவின் பிணத்துடன் ஒரு பின்னிரவில் விழித்திருக்கும் காட்சி செய்நேர்த்தியின் உச்சம். அவர் மறுப்பது, அவனை எச்சரிப்பது பின் தன் அப்பாவின் உயிரற்ற முகத்தைப்பார்ப்பது, மீண்டும் தன் மாணவனை அழைப்பது. யாராலும் கணிக்க முடியாத மனித மனதின் அல்லாடல்கள் அவை. லேசில் யாராலும் தொட்டுவிடக் கூடியதல்ல இதன் உயரம்.
என் சில நண்பர்கள் படத்தில் நிறைய Logic மீறல்கள் உள்ளன என்றார்கள்.
மருத்துவ கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு மாணவன் எப்படி இத்தனை பெரிய அறுவை சிகிச்சை செய்ய முடியும்? Wolf எப்படி அது முடிந்த ஏழெட்டு மணி நேரத்தில் தப்பிக்க முடியும்? அதன் பிறகு இத்தனை கொலைகளை திட்டமிட்டு செய்ய முடியும்?
என் நண்பன் கற்றது தமிழ் ராம்தான் இக்கேள்விகளுக்கான விடைகளை தொலைபேசியிலும் நேரிலும் பகிர்ந்தான்.
அண்ணா உங்க ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையில் எப்படி ஒரு பச்சை மல்லாட்டையிலிருந்து ஒரு இளவரசி வருகிறாள்?
என்னிடம் பதிலில்லை.
இம்முழுப்படமுமே எதார்த்த மீறல்தான். மட்டுமல்ல, மிஷ்கினின் கதைமாந்தர்கள் எல்லோருமே உதிரி மனிதர்கள்.  ‘அஞ்சாதே’ வில் குருவி, நொண்டி,  ‘நந்தலாலா’ வில் வரும் ஒவ்வொரு பாத்திரமுமே உதிரிகள். சராசரி சமூகம் கவனிக்க தவறியதை ஒரு கலைஞன் கவனிக்கிறான். தன் படைப்பில் அவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தைத் தருகிறான்.
ஸ்ரீ, மிஷ்கினை சுமந்துத் திரியும் காட்சிகளில் யாருமே அவனுக்கு உதவ முன் வராதபோது ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன் மட்டும்தான் அவனைத் தாங்கிப் பிடிக்கிறான். அவனுக்கு ஸ்ரீ தன் பர்சில் இருந்து ஒரு நூறுரூபாயை எடுத்துத் தருவான். பெரும் சிரிப்பினூடே அதை தூக்கி தன் பின்பக்கமாக எறிவான். இது எப்பேர்பட்ட காட்சி சித்தரிப்பு. என் நண்பர் எஸ்.கே.பி.கருணா ஒரு கோவில் திருவிழாவில் தன் தங்கையின் ஒரே மகனை தவறவிட்டுவிடுகிறார். ஒரு மணிநேர அலைக்கழிப்புகளுப்புக்குப் பின் ஒரு கழைக் கூத்தாடியின் அரவணைப்பில் குழந்தையைக் கண்டடைகிறார்.
குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து, கண்களில் நீர் கட்டி தன் பர்சை எடுத்து சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவன் முன்னால் நீட்டுகிறார். அவன் அதை தன் பீச்சாங்கையால் தள்ளி விடுகிறான். மிஷ்கினை தாங்கி நிற்பது ஒரு உதிரிமனிதனின் உரமேறிய கைகளில்லை. அது இச்சமூகத்தை தாங்கி நிற்கும் கரங்கள், அதை எப்போதுமே கவனிக்கத் தவறிய நம்மைப்பார்த்துதான் அவர்கள் குரூரமாக சிரிப்பதும். நாம் கொடுக்கும் பணத்தை பீச்சாங்கையால் நிராகரிப்பதும்.
இப்படியான உதிரிகள் இப்படம் முழுக்க நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பார்வையற்றவர்கள், திருநங்கை, ஏன் மருத்துவக் கல்லூரி மாணவனான ஸ்ரீயே தன் கழிப்பறையில் மறைந்து வைத்து போதை ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு உதிரி மாணவன்தான். மிஷ்கின் கூலிக்கு கொலைசெய்யும், சமூகத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு பெரும் உதிரிதான். இப்படிபட்ட மனிதர்களின் நேயம் நம்மை சில்லிட வைக்கிறது. சிலரை முகம் சுளிக்க வைக்கிறது.
 ‘மூன்று உயிரைக் காப்பாற்ற பத்து உயிரை பலிகொடுக்க வேண்டுமா?’
நிதானமாக யோசித்தால் நாம், அல்லது நம் குடும்பம் வாழ நாம் தினம் தினம் எத்தைன மனிதர்களை, சமூக விழுமியங்களை, நம் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கிறோம். துரோகங்கள், மறைந்து வைக்கப்பட்ட குரோதங்கள், பத்திரப்படுத்தப்பட்ட அநீதிகள் இவைகளை மறைந்துக் கொண்டுதான் ஜீன்ஸ் பேண்டும் வெள்ளைச் சட்டையுமாய் உலாவுகிறோம்.
ஒரு தேசத்தின் தலைநகரில் முன்னிரவில் ஒரு ஓடும் பேருந்தில் எல்லோரையும் இறக்கிவிட்டு, ஆறு பேர், ஒரு மருத்துவகல்லூரி மாணவியை சுற்றி சுற்றி பாலியல் வல்லூறு செய்ததும், அவளை மிகக் குரூரமாக சிதைத்து போட்டதும் வன்முறை இல்லையெனில், இப்படத்தில் நிகழும் கொலைகள் வன்முறையற்றதுதான்.
கூலிக்குக் கொலைசெய்யும் ஒரு தவறுதல்தானே படம். மிஷ்கின் படம் நெடுகிலும் ஒரு கொலையைக் கூட அநாவசியமாக செய்யமாட்டார். ஒரு இன்ஸ்பெக்டரை தன்னருகே வரவழைத்து முட்டியில் சுடுவார். எல்லா வாய்ப்புகளிருந்தும் ஒரு செக்யூரிட்டியை பார்வையால் கெஞ்சிக் கடந்துபோவார். அவர் கொல்லவதெல்லாம் கூலிப்படையின் சகாக்களைத்தான். அவர்கள் வாழத் தகுதியானவர்கள்தான் என நாம் தீர்ப்புரைப்போமேயானால், நாம் மனதளவில் அவர்களாக இருக்கிறோம் என அர்த்தம்.

இப்படத்தில் நடக்கும் மற்ற கொலைகள் கூலிப்படைத் தலைவனால் அவன் ஆட்களை வைத்து நிறைவேற்றப்படுவது. விசாரணைகளற்ற, கருணையற்ற அவர்கள் உலகில் மனித உயிர்கள் வெறும் அற்பம். கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த கூலிப்படைக் கொலைகளின் எண்ணிக்கையை நாம் இக்கலைப்படைப்போடு கவனப்படுத்த வேண்டியுள்ளது.
அக்கல்லறையில் முட்டிப்போட்டு மிஷ்கின் கண்ணிமைக்காமல் கதை சொல்லும் காட்சி படைப்பின் உச்சம். உடல் மொழியில் பாதியும், கண்களில் மீதியையும் ஒளித்துவைத்து வார்த்தைகளை மிச்சப்படுத்துகிறார். இதன் வசன ஒளிப்பதிவின் போது பலமுறை மிஷ்கினால் பேசமுடியாமல் திணறி வெறியேறியதை நண்பர்கள் சொன்னார்கள்.
இப்படத்தில் என் நண்பர்கள் ஷாஜி, ஷௌகத், என் நண்பரின் மகள் சைதன்யா (ஏழு வயது மொழிபெயர்ப்பாளர்) எல்லோரும் ஆத்மார்த்தமாய் கலந்திருக்கிறார்கள். நண்பன் புவனேஷ் மிஷ்கினைப் பின்னாலிருந்து தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருப்பது திரையை மீறி யூகிக்க முடிகிறது.
படம் பார்த்து முடித்து மூன்று நாட்கள் நான் மிஷ்கினோடு எதுவும் பேசவில்லை. பேசமுடியவில்லை. அவ்வனுபவத்தை முற்றிலும் என்னுள் அடைகாத்தேன். முட்டைகளின் கதகதப்புக்கு வேண்டி தாய் கோழி கூடையை விட்டகலாது. சந்திக்கும் தருணம்  வெகு அருகிலிருந்தும் தவிர்த்தேன். எனக்காக இரவு பதினோரு மணி வரை சாப்பிடாமல் மிஷ்கின் காத்திருந்தும் அவர் அலுவலகத்தைத் திரும்பிப் பார்க்காமல் கடந்தேன். பொறுத்து பொறுத்து பார்த்து தாங்கமுடியாததொரு தவிப்பில் மிஷ்கின் என்னை தொலைபேசியில் அழைத்து,
‘‘பவா என்ன கோபமுன்னாலும், என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு, தாங்கிக்கிறேன் பேசாம மட்டும் இருந்திராத எனக்கு கேன்சர் அட்டாக் ஆனதுமாதிரி உடம்பெல்லாம் வலிக்குது’’  என்றார்.

மிஷ்கின், என் இனிய நண்பனே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை படைப்பின் உச்சத்தைத் தொட்ட ஒரு கலைஞனைப் பார்க்க திராணியற்ற ஒரு எளிய மனிதனின் ஓடி ஒளிந்து கொள்ளும் தற்காலிக விலகல் அது.