Wednesday, October 16, 2013

ஓநாய் குலச்சின்னம் – ஒரு கலந்துரையாடல்




ஜியாங்ரோங் சீன மொழியில் எழுதி ஹோவர்டு கோல்டுபிளாட் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த ‘Wolf Tottam’ தஎன்ற நாவல் தமிழில் சி.மோகனால் மொழிபெயர்க்கப்பட்டு, இயக்குநர் வெற்றிமாறானால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நாவல் வெளிவந்ததிலிருந்து அந்நாவலை பெரும்பாண்மையினரை வாசிக்கவைக்க நாங்கள் முயற்சி செய்தோம். நாவலின் பக்க அளவு, களம், மொழி இவைகளை தாண்ட முடியாத சிலர் பின் தங்கி நின்று கொண்டார்கள் (நான் உட்பட) நாவலை முழுமையாக படித்தவர்களுக்கான ஒரு கலந்துரையாடலை டயலாக் அமைப்பின் மூலமாக கடந்த ஞாயிறன்று எங்கள் நிலத்து மாமரத்தடியில் ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு இலக்கியக் கூட்டம் நடந்துவதற்கு அதைவிட நேர்த்தியான இடம் இல்லை. 20 பேர் வந்திருந்தார்கள். கவிஞர்.  நா.முத்துக்குமார், எழுத்தாளர் போப்பு, கே.வி.ஜெயஸ்ரீ, எஸ்.கே.பி. கருணா போன்றவர்கள் முழுமையாகவும், நான், தோழர். சந்துரு, ஷைலஜா, கிருஷ்ணமூர்த்தி, அமலதாஸ், உத்ரகுமார் ஆகியோர் இருநாறு, முந்நூறு பக்கங்களை தாண்டாதவர்களாகவும் இருந்தோம்.



நா. முத்துகுமாரின் கராறான எச்சரிப்பிலிருந்து நாவலின் விவாதம் விரிந்தது. அந்நாவல் முன் வைக்கும் அரசியல், விவசாய வாழ்வுக்கு எதிரானதாகவும்  மேய்ச்சல் நில வாழ்வை உன்னதப்படுத்தி மையப்படுத்துவது, அற்புதமானதொரு மொழியில் மோகன் அதைத் தமிழ்படுத்தியது, என பகல் இரண்டு மணி வரை உரையாடல் நீண்டது. போப்பு, முத்துக்குமார், ஜெயஸ்ரீ, எஸ்.கே.பி. கருணா, சந்துரு ஆகியோர் முழு ஈடுபாட்டுடன் பேசினார்.
 
ஒரு நிறைவான உரையாடலுக்கு 20 பேர் போதுமென நினைத்தேன். நிகழ்வு முடிந்து என் நண்பன் சாந்தகுமார் கைமணத்தில் தயாரான கறிச்சோறு சாப்பிட்டோம். நாவலின் விவாதம் யாரும் கோராமலேயே போப்பு மொழிபெயர்த்த ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம் நாவலுக்கு எங்களை அழைத்து போனது. இரு நாவல்களும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதை நுட்பமான வாசகர்கள் கண்டடைந்தார்கள்.

No comments:

Post a Comment