Wednesday, March 18, 2015

இரண்டாம் குடியேற்றம்


பால் சக்காரியா

தமிழில் : கே.வி.ஜெயஸ்ரீ


டாக்டர். பி.எம். மேத்யூ வெல்லூர்,

மனோதத்துவ நிபுணர்,

திருவனந்தபுரம்.

மதிப்பிற்குரிய டாக்டர்,

முதலில் என்னைச் சுய அறிமுகம் செய்து கொள்கிறேன். நான் ஆஷா மேத்யூ. வயது 26 வீட்டின் பெயர் கரிப்புறத்து, அப்பாவின் பெயர் ஜோசப் மேத்யூ. முகவரி: காட்டிறம்பு போஸ்ட், குற்றியாடி.

ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பும் பி.எட்., பட்டப்படிப்பும் முடித்துள்ள எனக்கு அப்பாவும், அம்மாவும், அண்ணனும், இரண்டு தங்கைகளும் உள்ளனர். திருமணமான அண்ணன் மானந்தவாடியில் வாழ்கிறான். அண்ணி அங்கே பள்ளிக்கூட ஆசிரியை. தங்கைகளில் ஒருத்தி எம்.பி.பி.எஸ்., முதல் வருடம். அடுத்தவள் ப்ரீ டிகிரி முதல் வருடம்.

என் அப்பாவின் அப்பா, இரண்டாவது உலகப் போரின்போது பட்டினியால் மரங்ஙாட்டுப் பள்ளியிலிருந்து குற்றியாடிக்குக் குடியேறிய ஒரு விவசாயி. காடு வெட்டி விவசாயம் செய்திருக்கக் கூடாதென்று நான் தாத்தாவிடம் வாதிட்டிருக்கிறேன். அதற்குத் தாத்தாஆஷா, நீ பட்டினி அனுபவித்ததில்லை. அனேக நாட்கள் மனைவியும் குழந்தைகளுமாகப் பட்டினியில் வாடித் தளர்ந்த நிலையில் உள்ள ஒருவனுக்குக் காடு மட்டுமல்ல, இந்த உலகத்தையே கூட வெட்டி நாசமாக்கி உணவுண்டாக்கத் தோணும்என்றே பதில் தந்தார்.

எண்பத்தொன்பது வயது நிரம்பிய நாத்திகரான தாத்தா, டாக்டர் .டி.கோவூருடன் கடிதங்கள் மூலம் மிக நீண்ட தர்க்கப் போராட்டமே நடத்தியிருக்கிறார். இரவில் நாங்களனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் போது தாத்தா மட்டும் அறையிலமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். எண்பத்திரண்டு வயதுள்ள பாட்டிதான் என் அப்பாவையும், எங்களையும் இறைவனின் வழியில் செலுத்தியவர். நாலு கிலோமீட்டர் தூரமுள்ள சர்ச்சிற்குத் தினமும் நடந்தேதான் செல்வார். அப்பா கார் வாங்கியவுடன், பாட்டியைக் காரில் வரச்சொல்லி அழைத்தபோது, துண்டைத் தோளில் சுற்றியபடியே முற்றத்தில் வந்து நின்று கொண்டு, ‘நடக்க முடியும் காலம்வரை நான் என்னோட ரெண்டு காலாலும் நடந்து சென்றேதான் ஆண்டவனைத் தரிசிப்பேன்என்றார். அப்போது ராஜ்கபூரின் திரைப்படப்பாடல் ஒன்றுதான் என் நினைவிற்கு வந்தது.

சஜன் ரே ஜீட் மத் போலோ ...

கபடதாரிகளே பொய் சொல்லாதீர்கள் ....

ஆண்டவனின் அருகே செல்ல வேண்டும்

யானை மீதல்ல குதிரை மீதல்ல

கால்நடையாகத்தான் அங்கே செல்ல வேண்டும்.

இதை நினைத்து நான் சிரித்தபோது, பாட்டிஎதுக்குடி ஆஷா நீ சிரிக்கறே’ என்றாள் ஒரு விதப் பொய்க்கோபத்தோடு.

என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். ஆனாலும் திருச்சபையின் சட்டதிட்டங்களைத் தவறாமல் கடைபிடிப்பவர். அவர் தன்னுடைய சிறுவயதில் மட்டுமே பட்டினி என்பதை முழுவதுமாக அனுபவித்திருக்கிறார். கல்லைத் தின்றாலும் கரையும் வயது வருவதற்குள், தாத்தாகுற்றியாடி’யில் நெல்லும் மரச்சீனியும் விளைவிக்கும் நிலையை எய்திருந்தார். விவசாயத்தில் பல புதிய புதிய முறைகளைக் கையாண்டு மாதிரி விவசாயிக்கான பரிசைப் பலமுறை வென்றிருக்கிறார். சொல்லிலடங்காத அன்பை எங்களிடம் எப்போதும் வைத்திருப்பவர்.

என் அம்மாவை அவர் மிக நன்றாக கவனித்துக் கொள்கிறார். அம்மா என் அண்ணனைப் பிரசவிக்கும் நேரத்தில் ஊரில் மருத்துவமனையும், மருத்துவரும் இல்லாததாலும், பாட்டி சர்ச்சிற்குப் போயிருந்ததாலும் அப்பாவே மருத்துவச்சியாக மாறினார் என்று சொல்லி அம்மாவை இப்போதும் நாணமடையச் செய்வார். விடுதியில் தங்கிப் படிக்கும் என் தங்கை இருவருக்கும் வாரமொருமுறை போன் செய்வதோடு நில்லாமல் கைநிறைய தின்பண்டங்களுடன் மாதமொருமுறை சென்று பார்க்கவும் செய்வார். நான் ஹாஸ்டலில் இருந்தபோதும் அப்பா இப்படித்தான். நான் அதிக ஆர்வத்தோடு வாசிக்க விரும்பும் புத்தகங்கள் கேரளத்தில் கிடைக்கவில்லையென்றால் டெல்லிக்கு எழுதிப்போட்டு வரவழைத்துத் தருவார். அப்படித்தான் எனக்கு இதான் கானும், ரேமண்ட் கார்வரும், காஸ்தனேதனெவும் அறிமுகமாயினார்.

இப்படிப்பட்ட வாசிப்புப் பரிச்சயமிருப்பினும் நானொரு அமைதியான பெண்தான்  டாக்டர். நானொரு அறிவு ஜீவியோ, கலகக்காரியோ அல்ல. ‘பார்வைக்குக் குறையொன்றுமில்லாத, நல்ல குணமுள்ள பெண்’ என்றே ஊரும், உறவும், ஆசிரியரும், நண்பர்களும் என்னைப்பற்றி அபிப்பிராயப்பட்டிருப்பதாகச் சரியான கணிப்பில் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். இன்று வரை என்னைப்பற்றி யாருக்கும் எந்த விதத்திலும் ஒரு குறையும் ஏற்பட்டதில்லையென்று தீர்மானமாகச் சொல்லலாம்.

அடக்க ஒடுக்கமாக அம்மா அப்பாவை அனுசரித்து, ஆசிரியர்களை வணங்கி, உறவினர்களையும் நண்பர்களையும் நேசித்து திருச்சபைக்கும், போதகருக்கும் கீழடங்கித்தான் நான் இன்றுவரை வாழ்ந்திருக்கிறேன். எனக்கு மிகவும் விருப்பமான மோகலன்லாலைக்கூட இதுவரைக் காதலித்ததில்லை. அம்மாவைப் போலொரு எடுத்துக் காட்டான மனைவியாக, அப்பாவைப் போலொரு நல்லவனான கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். கல்யாணம் வரை விருப்பமானவற்றைத் தெரிந்து கொள்ளவும், வாசிக்கவும், எழுதவும், நண்பர்களோடு பழகவும் மட்டுமே விருப்பமென்பதை நான் சொல்லாமலே அப்பா உணர்ந்திருந்தாரென்று தோன்றுகிறது.

டாக்டர், என் அம்மா கருணையும், இதய சுத்தியும் உள்ள ஒரு நேசவதி. அப்பா அம்மாவைத் திருமணம் செய்வதற்குள் எங்கள் வீடு பொருளாதார வளர்ச்சியடைந்திருந்தது. அம்மாவின் வீடு வறுமையில்தான் இருந்தது. தாத்தா தன் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் சீதனம் வாங்காமல்தான் திருமணம் முடித்திருந்தார். அப்பா சேவாதளத்தின் பாதயாத்திரையும், வசூலுமாகத் திரியும்போது அம்மாவின் அழகு கண்டு பிரமித்திருக்கிறார். பின்னர் விசாரித்துச் சென்று திருமணம் பேசி முடித்தார்களாம். பாட்டி இதை எதிர்த்ததாக அவர்களே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏண்டி ஆஷா, பொண்ணுங்களுக்கு அழகு அதிகமிருந்தால் அது சரிப்பட்டு வராது. ஆனால் உங்க அம்மா நல்லவள்

அம்மா நல்லவளும் அன்பு நிறைந்தவளும், ஆசைகளில்லாதவளும் குற்றமற்றவளுமாக இருக்கிறாள். திருமணமான புதிதில் தாத்தா அம்மாவை ஒரு நாத்தகவாதியாக்க முயன்றிருக்கிறார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா கடைசியில் வெட்கத்துடன் தாத்தாவிடம், ‘அப்பா, இறைவன் இல்லையென்பதை நம்பாமல் இருந்தால், நீங்கள் என்னிடம் கோபித்துக் கொள்வீர்களா?’ என்று கேட்டாள். தாத்தா இல்லையெனவும், ‘அப்படீன்னா நான் இறைவன் இருப்பதாக நம்புகிறேன்என்று சொல்லிவிட்டு இருந்த இடத்தைவிட்டு எழுந்தோடிப் போனாள். அப்போது பாட்டி, ‘இந்த வீட்டில் பெண்களிருக்கும்வரை அந்த ஆண்டவனுக்கு எந்தக் குறையும் வராதுஎன்றாளாம். இதையெல்லாம் அம்மாதான் என்னிடம் சொன்னாள். அம்மாவுடையதைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற விருப்பமே எனக்கிருக்கிறது. அதைவிடப் பெரிய ஆசைகளெதுவும் எனக்கில்லை.

டாக்டர், இப்படிப்பட்ட அன்பான பாசமானதொரு குடும்பத்தில் சந்தோஷமும் சமாதானமுமாக வாழ்ந்த வந்த நான், இப்போது ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இரண்டு மாதம் முன்பு அம்மா என்னிடம், ‘ஆஷா, நீ மேலும் ஏதாவது படிக்கப் போகிறாயா?’ என்று கேட்டாள். நான் இல்லையென்றேன். அப்போது அம்மா என் தோளில் கை வைத்து என்னைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறே, ‘அப்படியானால் உனக்குத் திருமணம் செய்வது குறித்து யோசிக்கலாமா?’ என்றாள். நான் அம்மாவின் நெஞ்சில் தலைசாய்த்து நாணத்துடன் சம்மதித்தேன். அன்றிரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல், மிளகுக் கொடிகளில் மின்மினிகள் மின்னுவதை ஜன்னல் வழியாகப் பார்த்தபடி படுத்திருந்தேன். சிறிது நேரத்தில் நிலவு எழுந்தது. நிலவொளி படுக்கையில் விழுந்தபோது என் தேகம் சிலிர்த்தது. பின்னர் நான் உறங்கிவிட்டேன்.

என்னை முதலில் பெண் பார்க்க வந்தவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர். அவரே ஓட்டி வந்த டாட்டா சுமோவில் அவருடைய அப்பாவும் அம்மாவும் சகோதரியும் அவள் கணவரும் வந்தனர். நான் அனைவருக்கும் காப்பியும், பலகாரமும் கொடுத்து முடித்த பிறகு, அந்த மனிதன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே, ‘பி.எட்., முடித்து வேலைக்கொன்றும் போகவில்லையா?’ என்று என்னிடம் கேட்டார். ‘இல்லை’ என்றார் அப்பா. அந்த மனிதன் சிகரெட் பிடித்தது அவனறியாமல் வெளிப்படுத்திய ஒரு விரும்பத்தகாத வேடிக்கையாக எனக்குப்பட்டது. புகை பிடித்தபடி அமர்ந்திருந்த அவனுக்கு நல்ல அழகும் ஆண்மையும் இருந்தது. அவர்கள் சென்றதும் நான் மின்விசிறியை முழுவேகத்தில் வைத்தேன். ‘குளிருது. ஃபேனை நிறுத்தம்மா’ என்றார் தாத்தா. ‘புகை வாசனை போகத்தான்’ என்றேன் நான். ‘ஆண்கள் புகைபிடிப்பது சகஜம்தான்’ என்றார் அப்பா. அதில்லை. சிகரெட் பற்ற வைத்துக் கொண்டுஎன்னோடு பேசியது எனக்குப் பிடிக்கவில்லை’ என்றேன் நான். பின்னர் யாரும் அதைப்பற்றியொன்றும் சொல்லவில்லை. ‘பரவாயில்லைஇனியும் வருவர்கள் இளைஞர்கள்’ தாத்தா எல்லோருக்குமாகச் சொல்லி முடித்தார்.

அன்று இரவு உறங்குவதற்குப் படுத்தபோது நான் யோசித்தேன். அந்த சிகரெட், டாடா சுமோ வரை மட்டுமே எனக்கு அந்த மனிதனைத் தெரியும். அதற்குமேல் என்னால் அறியமுடியாத விஷயங்கள் மட்டுமே உள்ளன. அந்த சிகரெட் புகைத்தல் எனக்கு விருப்பமானதொரு செயலாக இருந்திருந்தால், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நான் எப்படித் தெரிந்து கொண்டிருப்பேன்? அம்மா என் மீது போர்வை போர்த்திவிட்டு நெற்றியில் சிலுவையிட்டுக் கொண்டேஈசோ’ என்றார்.

என்னை இரண்டாவதாகப் பார்க்க வந்தவரை எனக்குப் பிடித்திருந்தது. ஒரு வங்கி அதிகாரியான அவர் முகத்தில் கருணையும், மென்மையும் காணப்பட்டன. காப்பி குடித்து முடித்தபின் என்னிடம், ‘நானும் ஆங்கில இலக்கியம்தான். பிறகு எப்படியோ தடம் மாறிவிட்டது’ என்றார். அவர்கள் சென்ற பிறகு எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். நான் ஒரு புன்னகையோடு தலை குனிந்து நின்றேன். அன்றிரவு யோசித்தேன். ஆங்கில இலக்கியமும் கருணையும், மென்மையுமான முகமும் இதைத்தவிர என்ன தெரியும் அவரைப் பற்றி? அவர் வீட்டில் புதிய புத்தகங்கள் இருக்குமா? அல்லது பழைய ஆங்கில பாடப் புத்தகங்கள் மட்டும்தானா? அங்கே ஜன்னலைத் திறந்து போட்டுக் கொண்டு படுக்க முடியுமா? தோசைக்குத் தொட்டுக் கொள்ளும் சட்னிக்கு அவர்கள் கடுகு தாளிப்பார்களா? எனக்கு அதுதான் பிடிக்கும். ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்த பிறகுதான் உறங்கிப் போனேன். மறுநாள் தரகர் வந்து விவரம் சொன்னார். ‘அவர்களுக்குப் பெண்ணைப் பிடித்துவிட்டது. ஆனால் பையன் கரிஸ்மாட்டிக் விசுவாசி. பெண்ணின் தாத்தா நாத்திகவாதியானதால் அவனுக்கு சங்கடமாக இருக்கிறது’வேண்டாம் போகட்டும்’ அப்பா என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னார். நான் தாத்தாவின் காதோடுபரவாயில்லை தாத்தா, இனியும் இளைஞர்கள் வருவார்கள்’ என்றேன்.

மூன்றாவதாக வந்த ஓர் ஆர்க்கிடெக்ட் இளைஞனுடன் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏற்றுமானூரில் இருந்து வந்து என் அம்மாவின் வீட்டினருகே குடியிருக்கிறார்கள். கோழிக்கோடு நகரத்தில்தான் வீடு. கருணையும், அழகும் கூடிய முகம். ‘வேலைக்குப் போக விருப்பமா?’ என்று கேட்டார். இல்லையென்றேன் நான். ‘என் விருப்பமும் அதுதான். நான் விவசாயத்தையும் பிசினசையும் இணைத்தபடி போய்க்  கொண்டிருக்கிறேன். ஆனால் விவசாயத்தில்தான் விருப்பம் அதிகம்’ என்றார்.

டாக்டர், இங்கிருந்துதான் என் இக்கட்டு ஆரம்பமாகிறது. கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்பதையறிந்து அந்த இரவில் நான் என் வாழ்வின் தடம் மாறிப்போனதான நினைவுகளினூடே ஜன்னலின்வழி புறவெளியைப் பார்த்தபடி படுத்திருந்தேன். இருண்ட புறவுலகும், ஜன்னலினூடாக ஒரு குளிர்க்காற்றும் உள்ளே நுழைந்தபோது, என்னைப் போர்வையால் போர்த்திக் கொண்டேன். கண் விழித்தபோது நடு இரவுவரை படித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் அறையிலும் வெளிச்சமில்லை. வீடு உறங்கிக் கொண்டிருக்கிறது. வெளியே நட்சத்திர ஒளிக்கசிவில் உலகம். திடீரென்று ஒரு நடுக்கம் எனக்குள் ஓடியது. நான், நான் இந்த வீட்டை விட்டுப் போகப் போகிறேன். அப்பாவையும், அம்மாவையும், தாத்தாவையும், பாட்டியையும், தங்கைகளையும், இந்தப் படுக்கையையும், ஜன்னல்களையும், சமையற்கட்டையும், கிணற்றையும், தொழுவத்தையும், வேலைக்காரரையும் விட்டுவிட்டு வேறொரு வீட்டிற்குப் போகப் போகிறேன்இனி சாவதுவரை அங்கேயே குடியிருக்க வேண்டும். அங்கே உள்ளவர்களோடு கூடி வாழக் கற்றக் கொள்ள வேண்டும்.

ஆர்க்கிடெக்ட் ஜோயி என்னுடன் வாழ இங்கே வரமாட்டார். நான்தான் ஜோயியின் வீட்டிற்கு என்றென்றைக்குமாகப் போகிறேன். ஜோயியின் அழகும் கருணையும் வரைதான் நான் அறிந்திருக்கிறேன். மற்ற என்னவெல்லாமாக அவர் இருப்பார்? ஜோயி என் வீட்டையாவது பார்த்தார். இந்த வீட்டிற்கு வரும் வழியை அறிவார். இந்தக் குன்றுகளையும், வயல் வரப்புகளையும் பார்த்தார். தாத்தாவையும் புத்தகங்களையும் பார்த்தார். எங்கள் நாய் டாட்டூவைப் பார்த்தார். வரவேற்பறையின் சுவரில் தொங்கும் குடும்பப் படங்களைப் பார்த்தார். முற்றத்தில் காயும் மிளகினைப் பார்த்தார். ஜோயி அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோதுதான் நான் புஷ்பவதி யானேன் என்பதொன்றுதான் ஜோயிக்குத் தெரியாது.

ஆனால் நானோ என் தாத்தா மரங்ஙாட்டுப் பள்ளியிலிருந்து மொத்தமாக இங்கே வந்து குடியேறியது போல, என்றென்றைக்குமாக அங்கே சென்று குடியேறப் போகிறேன். அந்த இடத்தைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? அங்கே என்னவெல்லாம் இருக்கும்? அவர்களுக்கு பசுக்களிடமும் ஆடுகளிடமும் அன்பிருக்குமோ? பெண்களிடம் பிரியமாக நடந்து கொள்வார்களா? அவர்கள் ஞாலிப்பூவன் பழம் தின்பவர்களாக இருப்பார்களா? வேலைக்காரர்களிடம் சினேகத்துடன் பழகுபவர் களாயிருப்பார்களா?

குழந்தைகளை அடிப்பதும், அழவைப்பதும் செய்வார்களா? நாயையும் பூனையையும் அடித்து விரட்டுபவராயிருப்பார்களா? பிச்சைக்காரர்களைப் பரிகாசம் செய்வார்களா? சுத்தமான உள்ளாடைகள் அணிவார்களா? பொய் சொல்பவரும் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவருமாக இருப்பார்களா? புத்தகங்களை மதிப்பார்களா? பிரார்த்திக்கும்போது மனதில் வெறுப்பும், பொறாமையும் உள்ளவர்களாயிருப்பார்களா? ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து விடுபவர்களா யிருப்பார்களா? அவர்களின் வயல்களில் என்னவெல்லாம் பயிரிடப் பட்டிருக்கும்? எத்தனை மணிக்கு அவர்கள் தூங்குவார்கள்? எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்கள்? கழிப்பறை சுத்தமாக இருக்குமா? தண்ணீரைக் காய்ச்சித்தான் குடிப்பார்களா? குடம்புளி போட்டுத்தான் மீன்குழம்பு செய்வார்களா? சோற்றைக் குழைய வேகவைப்பார்களா?

டாக்டர், இருளினூடாக பெரிய ஆபத்தினை நோக்கி வீழ்ந்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் சத்தமின்றிக் கத்தியபடியே உருண்டு புரண்டு எழுந்தேன். வாழ்க்கையில் முதன் முறையாகத் தனிமையை உணர்ந்தேன். குளிரில் நடுங்கிக் கொண்டே நான் என் முடியிலும், முலைகளிலும், அடிவயிற்றிலும் தடவினேன். ஆஷா மேத்யூ என்ற 26 வயதுடைய எம்.., பட்டதாரி, கரிப்புறத்து ஜோசப் மேத்யூவின் மகள். கன்னிப்பெண், டி.எஸ். எலியட்டையும், ஹெமிங்வேயையும் வாசித்திருப்பவள். நான் என் உதடுகளையும், கண்களையும் தொட்டுப் பார்த்தேன். கால்களின் வழி கை ஊர்ந்ததுமீண்டும் பிடிமானம் இன்றி இருட்டில் வீழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ‘ஆஷா மேத்யூ நீ சப்தமெழுப்பாதேஎன்று எனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டேன். எண்ணங்களின் பின்னல் வேலை நின்றபோது, கிடுகிடுவென்று நடுங்கியவாறே படுக்கையில் விழுந்த நான் என்னை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டேன்.

காலையில் தாமதித்துத்தான் எழுந்தேன். ‘என்னம்மா - மொகம் என்னவோ போல இருக்கே. கல்யாணத்த நெனச்சு இப்பவே பயப்பட ஆரம்பிச்சிட்டாயா?’ அம்மா கேட்டாள். நான் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தேன். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு தாத்தாவின் அறைக்குச் சென்று தாழ்ந்த குரலில், ‘தாத்தா எனக்கொரு ரகசியம் சொல்ல வேண்டியிருக்கு’ என்றேன். தாத்தா வெள்ளெழுத்துக் கண்ணாடியை மூக்கிலிருந்து கழற்றி, படித்திருந்த பக்கத்திற்கு அடையாளம் வைத்துவிட்டு, என்னைப் பக்கத்தில் அமரும்படி சைகை செய்தார். ‘தாத்தா  மரங்ஙாட்டுப் பள்ளியிலிருந்து சட்டி, பானை, பாய், ஆட்டுரல் இவற்றுடன் குற்றியாடிக்கு வருவதற்கு முன், இருட்டினூடே ஆழத்திற்குள் வீழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியிருக்கிறதா உங்களுக்கு?’ என்றேன்.

தாத்தா என்னைக் கூர்ந்து கவனித்து, ‘நீ ராத்திரி நல்லா தூங்கலன்னு தோணுதுஎன்றார்.

‘தூங்கல தாத்தா ராத்திரியில் இருட்டினூடாக வீழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. எல்லா குடியேறிகளுக்கும் அப்படித்தான் தோன்றுமோ?’

எனக்குப் புரியல

தாத்தா நானொரு குடியேற்றக்காரி தானே? நீங்க மரங்காட்டுப்பள்ளியிலிருந்து காட்டிறம்பிற்கு மொத்தமாகக் குடியேறியது போல நானும் ஆர்க்கிடெக்ட் ஜோயியின் வீட்டிற்கு என்றென்றைக்குமாகக் குடியேறப் போகிறேன். மரணம் வரை வாழப்போகும் வீட்டைக்கூட நான் பார்க்கவில்லை. அது குன்றின் மீதா அல்லது சதுப்பு நிலத்திலா என்பதும் எனக்குத் தெரியாது. அந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம் உள்ளதா? அவர்களின் முன்னோர் அன்னியரின் சொத்தை அபகரித்தவர்களா என்பதும் தெரியாது. அங்ஙனமெனில் அவர்தம் சாபம் என் குழந்தைகளின் மீதுதான் வீழ்வதாயிருந்தால்!’

நான் தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்து என்னுடைய எல்லா கேள்விகளையும் சந்தேகங்களையும் அவரிடம் கொட்டினேன். கடைசியாக, ‘தாத்தா, நான் ஜோயியின் வீட்டில் திருமணத்திற்கு முன் ஒரு மாதமாவது தங்கணும். அப்படியானால்தான் அங்கே குடியேற எனக்குத் தைரியம் வரும். தாத்தா செய்ததைப் போல் கண்ணைக் கட்டிக் கொண்டு ஓர் இருட்டை நோக்கிப் பயணப்பட எனக்குச் சக்தியுமில்லை. விருப்பமுமில்லை’ என்றேன்.

தாத்தா சிறிது நேரம் சங்கடமாக என்னைப் பார்த்தபடி இருந்தபிறகு என்னைக் கட்டியணைத்து மூக்குப்பொடி வாசனையோடு என் நெற்றியில் முத்தமிட்டவாறே, üமகளே நான் உன் பக்கம்தான். ஆனால் உனக்கும் எனக்குமான கால இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. நான் கிழவனும் நாத்திகனுமாயிருக்கிறேன். உனக்கொரு தீர்வு  சொல்லித்தர என்னால் முடியுமென்றால் எவ்வளவு நன்றாயிருக்கும் உன்னை ஆண்டவன் காப்பாராக என்றார்நான் ஆச்சரியமாகதாத்தா ஆண்டவனா?’ என்றேன். ‘ஆம் மகளே அந்தக் கடைசித் துரும்பாவது உனக்கிருக்கட்டும்

டாக்டர், ஆர்க்கிடெக்ட் ஜோயியின் வீட்டில் திருமணத்திற்கு முன்னர் ஒரு மாதம் நான் தங்க வேண்டுமென்பதன் அவசியத்தை அப்பாவிடமும் அம்மாவிடமும் தெரிவித்தேன்.

இந்தச் சம்பந்தத்திற்கு மட்டுமல்ல, இது தவறிப்போனால், இதற்குப் பிறகு ஏதாவது சம்பந்தம் வந்தால்  அதற்கும் இந்த நிபந்தனை பொருந்துமெனவும் அறிவித்தேன். இன்று என் வீட்டில் நிம்மதியும், சினேகமும், ஒற்றுமையும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது டாக்டர். என் தங்கைகள் என்னைக் குறை சொல்வதான உபதேசங்களை எழுதுகிறார்கள். அண்ணன் என்னை மனநல விடுதியில் சேர்த்து விடுவேன் எனப் போனில் மிரட்டுகிறான். என் அம்மாவின் கண்ணீர் வற்றவேயில்லை. என் அப்பாவின் சங்கடம் தீரவேயில்லை. தாத்தா புத்தகத்தை வெறித்தபடியே உட்கார்ந்திருக்கிறார், பக்கங்களைப் புரட்டாமல் இரட்டைக் குடியேற்றக்காரியான என் பாட்டி மட்டும் இயந்திர மனிதனைப் போல வீட்டு வேலைகளைச் செய்து கொண்டும், சர்ச்சிற்குப் போய்கொண்டும், என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.

டாக்டர் எனக்கு உதவுங்கள். நான் என்ன செய்யட்டும்? இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? என் தேவைகள் தவறானவையா? நானொரு மனநோயாளிதானா? தயவாக எனக்கு அறிவுரை கூறுங்கள் டாக்டர்.

நன்றியுடன்

ஆஷா மேத்யூ.

No comments:

Post a Comment