Tuesday, January 19, 2016

உருவாக்கமல்ல... பிறத்தல்

வையம்பட்டி முத்துசாமி

நன்றி இம்மாத செம்மலர் பொங்கல் மலர்




இருபதாண்டு இடைவெளியில் ஒரு கவிஞனின் ஒரு சொல் வேண்டி இரண்டு மணி நேரம் காற்றிலலைந்தேன். இரு நாட்களுக்கு முன் விடாது பெய்த மழையினூடே திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் உரையாற்ற நண்பர்களுடன் புறப்பட்டேன். நிகழ்ச்சிகள் எப்போதும் எனக்கு இரண்டாம் பட்சம்தான். எப்போதும் பயணமும், உடனிருக்கும் நண்பர்களுமே அந்நிகழ்வையும் சேர்த்துப் பொலிவூட்டுகிரார்கள்.

அன்று என்னுடன் நண்பன் கார்த்தியும் இன்னொரு நண்பன் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து கொண்டார்கள். வண்டி திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றைக் கடக்கும்போது கவனித்தேன். ஆற்றில் நீக்கமற நீர் மெதுவாகப் புரண்டு வந்து கொண்டிருந்தது, நிறைந்திருந்த வேலிகாத்தான் முள் செடிகளில் மோதியவாறு.

காரை நிறுத்தி, பாலத்தில் நின்று வெகுதூரம் வரை பார்த்தோம். கபிலர் குன்றும், அரகண்டநல்லூரும் மங்கலாகத் தெரிந்தன. பாலத்திற்குக் கீழே சத்தமின்றி நீர் மண்ணுளிப்பாம்பு போல ஊர்ந்து கொண்டிருந்தது. இனி இந்த இரவெல்லாம் அது பெருகும். ஆனால் அதற்கான முன் அறிகுறி எதுவுமின்றி அது மெல்ல நகர்ந்து, எனக்கொரு புன்னகையை தந்தது. இயற்கை மறுபடி மறுபடி தான் எத்தனை உன்னதமானது என்பதை எப்படி எப்படியோ நம்முன் ஸ்தாபித்துக் கொள்கிறது.

நீரே நினைவுகளை எப்போதும் மீட்டெடுத்து என்முன் போட்டிருக்கிறது. நீர் ஒரு வீரியமான விந்துத்துளியைப் போல என்னுள் இறங்கி என் கதையைக் கருக்கொள்ள வைத்திருக்கிறது. அன்றும் அதே நீர்தான் இருபதாண்டுகளுக்கு முன் நான் தொலைத்த ஒரு கவிஞனின் சொல்லை, குரலைத் தேடியலைய வைத்தது. ஏறக்குறைய இரண்டு மணிநேரத் தேடுதலுக்குப்பின் நான் அவன் குரலைக் காற்றில் ஸ்பரிசித்தேன். எந்தப் பிசிறுமின்றி, வாழ்வின் மூர்க்கத்தனமான அலைக்கழிப்பின் எந்த வலியுமின்றி அவன் பெருங்குரலெடுத்துத் தொலைபேசி வழியே எனக்கான அவன் பாடலைப் பாடினான்.

‘‘இது உரிமையினால் நான் எடுத்துக் கொள்கிற அத்துமீறல் இல்லையா? உன்னை ஒருத்தன் நடுராத்திரியில் எழுப்பி கதை சொல்லச் சொன்னால் சொல்வியா?’’

‘‘சொல்வேன்’’

எனக்குள் ஒரு கேள்விதீ ஆளுயரம் எழுந்து உடன் பதிலால் அணைந்தது.

‘‘நீ பாடு முத்துசாமி’’

‘‘எந்தப் பாட்டு பவா?’’

‘‘கருவேலங்கா கொலுசுதான்’’ன்னு

‘‘ஒரு வரி வருமே அந்தப் பாட்டு அவ காலுக்கது புதுசுதான்னு’’ன்னு

அதற்காகவே காத்திருந்தது போல முத்துசாமி பாடுகிறான்.

 “மூக்குத்தி, மூக்குத்தி, மூக்குத்தி,

மூக்குத்தி, மூக்குத்தி, முக்குத்தி

மூக்குத்திப் பொட்டுக்கு ஜிகினாப் பேப்பரை

ஒட்ட வச்சி பாக்கும் சின்னப் புள்ள,

தொங்கட்டானுக்கு வெண்டக்கா காம்ப

எச்சித் தொட்டு வைக்கும் செல்ல புள்ள,


‘‘சோளத்தக்கையிலே ஒரு கண்ணாடி

இன்னும் என்னென்னமோ வரும் முன்னாடி’’

வரிகளின் கனம் தாங்காமல் என்னோடு சேர்ந்து மூன்று பேரும் விசும்பும் சத்தம் கேட்கிறது. அந்த இன்னொரு ஆள் எங்கள் கார் ஓட்டுநர் ரமேஷ்.

முதல் பாட்டின் நிறைவில் நான் முத்துசாமியிடம் குசலம் விசாரிக்கிறேன்.

‘‘எப்படி இருக்கிற முத்துசாமி?’

‘‘நல்லா இருக்கேன் பவா, ரெண்டு பையன். பெரியவன் பெங்களூர்ல வேலை பாக்குறான். இன்னொருவன் .டி.. படிக்கிறான்’’

‘‘இன்னும் பாடட்டா பவா?’’ அவன் பாடல் அவனை உந்துகிறது.

‘‘இரு நண்பா, உனக்கு இண்டிகார்ப்புல வேலை போனப்புறம் வேற வேலைக்குப் போகலையா?’’

எதிர்ப்பக்க மௌனம் அப்போதே என்னை அடைகிறது.

‘‘ஏன் போகலை பவா, பத்திருபது வேலைகளுக்குப் போனேன். எதுவும் நிலைக்கல’’

அவன் சொல் தொண்டையிலேயே சிக்குகிறது.  “போப்பு ஓட்டலுக்குக் காய்கறி வாங்கித் தர்றவனா ரெண்டு வருசம் ஓடுச்சு, ஒசூர் பஸ் ஸ்டேண்ட்ல இட்லிக்கடை போட்டேன், வீட்டுத் தாவாரத்திலேயே ஒரு பங்க் கடை…”

‘‘போதும், போதும் முத்துசாமி’’ தாங்கல எனக்கு

இதென்ன புதுசா நமக்கு? பாரதியில் ஆரம்பித்து, புதுமைப்பித்தனில் தொடர்ந்து இன்று எழுத வருகிற ஒரு சிறு பையனையும் அவன் முடியைக் கொத்தாகக் கையில் பிடித்து ஆட்டி அலைக்கழித்து, துப்பிப் போட்ட பனங்கொட்டை மாதிரி தெருவில் போட்டுத்தானே நமக்குப் பழக்கம்.

‘‘நான் இன்னொரு  பாட்டு பாடவா பவா’’

‘‘இரு... இரு... சொல்றேன்’’

வெப்பம் தாங்காமல் என் தொலைபேசியை அணைக்கிறேன். என் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தலையைத் திருப்பி என்னையே அவதானிக்கும் என் கார்த்திக்கு முத்துசாமியைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறேன்

‘‘வழக்கம் போல் வருடம் நினைவில்  இல்லை கார்த்தி. திருச்சியில் தமுஎச-வின் எழுத்தாளர்கள் மாநாடு அது’’

அன்று எங்கள் அறையில் மட்டும் இருபது பேர் அடைந்திருந்தோம். அது தூங்கும் அறையில்லை. இரவெல்லாம் விழித்திருந்து கதைகளாக, கவிதைகளாக, பாட்டாக,  இசையாக என்று அந்த இரவை  நாங்கள் கலையால் நிரப்புவோம்.  எப்போதும் போல அன்றும் எங்கள் கந்தர்வனே  அதற்குத் தலைமையேற்றார்

பல சமயங்களில்  மேடையில் முற்போக்கு குழுக்கங்களுக்கு, அறையில் பின் பிற்போக்கு கதைகளாய்  பேசிக்கொள்வோம். இந்த மனித முரண்தானே எப்போதும் வாழ்வும் இயக்கமுமாய்  இருக்கிறது?

பாலியல் கதைகளுக்கென்றே எங்களுக்குள் ரகசியமாய் நடந்த பிரத்யேக  அமர்வுகள் கூட உண்டு. எதற்கும்  கட்டுப்படாத காட்டுச் செடிகளென கலைஞர்கள்  திரிந்த காலம் அது

எங்கள் குதூகலத்தினூடே கவனித்தேன். தலை சொட்டையாகி, முட்டைக் கண்களோடு ஒரு இளைஞன் சபையில் முந்துவதை. சத்தத்தின்  அடங்குதலுக்காக உள்ளுக்குள் காத்திருந்தேன். கிடைத்த இடைவெளியில் அவன் கைப்பற்றி  என்ன வேணுமென கண்களால் விசாரித்தேன்

நான் நல்லா பாடுவேன்

ஈரத்தில் மண்ணைக் கீறிக் கொண்டு ஒரு வீர்ய விதை இப்படித்தான் வெளியே வரும். நான் தாவரம், பெருமரம். என்னை கவனி. முத்துசாமி என்ற பெருமரம் அந்த இரவில்  எங்கள் அறையின் கான்கிரீட்  கலவையை மீறி களத்துக்கு வந்தது

பாடுடா”  இது கந்தர்வன்.

அவன் பாட ஆரம்பித்தான். அந்த இரவு முழுக்கப் பாடினான்.  அவன் பாடலினால் மட்டுமே  அந்த இரவு  நிறைந்த விடிந்ததும். தூக்கம் தொலைத்த சிவப்பேறிய கண்களோடே  காவிரியில் குளிக்கப் போனோம். அப்போதும் எங்களுக்கு பின் வந்தவர்களோடு முத்துசாமி பாடிக்கொண்டே வந்தான்.... 

ஓடும் காவிரியில் நான் ஒரு கை நிறைய நீரள்ளி அவன் முகத்தில் எறிந்தேன்அது அவன் பாடல் மீது பட்டுத் தெறித்து கீழிறங்கி நதியோடு கலந்தது.

நான்  சற்றேறக்குறைய பித்து நிலையிலிருந்தேன். இதுமாதிரி எத்தனை பாட்டு தெரியும் முத்துசாமிஎன்று கேட்டேன்.

ரெண்டாயிரம்

இரண்டாயிரமா?”

அதுக்கும் மேல  தோழர்

உற்சாகம் பீறிட அவன் மீது பாய்ந்து பாரதி கிருஷ்ணகுமார் அவனை நீரில் அமுக்கினார். அவன் திமிறல் எங்கள் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.

வையம்பட்டி முத்துசாமி என்ற பாடலாசிரியன் அல்லது கவிஞன் அல்லது பாடகன் இப்படித்தான் எங்களுக்குள் வந்தான்.

அன்று உணவு இடைவேளையில், மாநாட்டு மேடையில் முத்துசாமியை பாடவைத்தோம்.

அடுத்த நாளும் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் நீண்டது போல்தான் இருந்தது. அதெல்லாம் என் நினைவில் இப்போது இல்லை. கிடைத்த எல்லா இடைவெளிகளிலும் முத்துசாமியைப் பாட வைத்து நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம். கந்தர்வனும், எஸ்..பி.யும் போட்ட சத்தமான ‘சபாஷ்மேடையிலிருந்தவர்களைத் திரும்பி பார்க்க வைத்தது.

அடுத்த நாள் அவன் பாடல் வரிகளை நெஞ்சு நிறைய சுமந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். பார்க்கிற எல்லோரிடமும் நாங்கள் அவன் வரிகளை சொல்லி சொல்லி வியந்தோம்.

‘‘அதன் பிறகு நீங்க எங்க சார் அவரை பாத்தீங்க?’’

அடுத்த ஆறாவது மாதம் கோயம்புத்தூர்ல மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு. நான்கு நாள் மாநாட்டுத் திடலுக்குள் நுழையும்போது தோழர். .எம்.எஸ். நம்பூதிரி பாட்டுக்கு பக்கத்தில் வையம்பட்டி முத்துசாமி.

அந்த கணம் நான் உறைந்து போனேன்.

ஒரு கலைஞன், அவன் கண்டெடுக்கப்பட்ட அடுத்த ஆறாவது மாதத்தில், இந்தியாவின் ஒரு மாபெரும் அரசியல் தலைவனுக்கருகில் அமர வைக்கப்பட்டுள்ளன். இது வேறெந்த இயக்கத்தில் சாத்தியம்?

முத்துச்சாமி கீழிறங்கி வரும்வரை மேடையருகே நின்றிருந்தேன். மேடையை விட்டிறங்கும் முன் அவனை ஆரத்தழுவிக் கொண்டேன்.

‘‘எத்தனைப் பெரிய வாய்ப்பு இது முத்துசாமி?’’

‘‘எது?’’

‘‘.எம்.எஸ். பக்கத்துல உன்னை உட்கார வச்சது!’’

அவன் திரும்பி மேடையைப் பார்க்கிறான்.

‘‘அந்த குள்ளமான பெரியவரா?’’

‘‘ஆமாம் அவர்தான் .எம்.எஸ்.’’

‘‘எனக்கு அவரையெல்லாம் தெரியாது பவா, நான் தினத்தந்தி பேப்பர் கூட படிக்க மாட்டேன்’’

நான் அதிர்ந்து போனேன்.

இவன் உருவானவனல்ல. பிறந்தவன்.

அடுத்தடுத்து முத்துசாமியை நாங்கள் நடத்தின எல்லா நிகழ்வுகளுக்கும் அழைப்போம்.

மகன் பிறந்த நாற்பதாவது நாள் ஒரு டர்க்கிடவலால் குழந்தையை சுற்றி எடுத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்ததும், உடன் பாடச் சொன்னபோது மேடையின் கீழே அப்பிஞ்சுக் குழந்தையைக் கிடத்திவிட்டு,

‘‘விழிகளில் பரிணமிக்கும்

வித்தொன்று முத்தம்

அழகு கொலுவிருக்கும்

பத்துமாத ரத்தம்.

புவியும் வரைந்தது

பூ விழுந்த சத்தம்

மகவு பெண்ஆனதால்

மடிந்ததென் சித்தம்’’

உச்ச ஸ்தாயியில்பொண்ணு பொறக்குமா? ஆணு பொறக்குமா?” என மொத்த கூட்டத்தையும் உறை நிலைக்கே கொண்டு போனவன் அவன்.

மேடைகளில், அறைகள், தரும் தனிமையில், போதையில் ‘‘நீ சினிமாவு இருக்க வேண்டியவன்டா, உன்னை உச்சத்துக்கு கொண்டு போறேன்’’ன்னு சொன்ன பல இயக்குநர்களை நானறிவேன். அடுத்த நாளே அக்கொடுங்கனவு எல்லோருக்குமே கலைந்துவிடும். அதையும் மீறி இவர்களை மாதிரி கலைஞர்களை திரையில் பாடவைக்க எவர் எடுத்த முயற்சிகளும் எப்போதும் வென்றதில்லை.

ஏன் கரிசல் குயில் கிருஷ்ணசாமியும், சுகந்தனும், முத்துசாமியும், ரெண்டேரிப்பட்டு கோவிந்தனும் சினிமாவுக்கு பாடியாக வேண்டும்?

தடித்த கண்ணாடியால் தடுக்கப்பட்ட அக்குளிரறைகளில் எங்கள் கலைஞர்களின் குரல் டுங்கும். ஆயிரமாயிரம் மக்கள் மத்தியில் மங்கிய மஞ்சள் விளக்குகளுக்கு முன் அவர்கள் தங்கள் குரல்களால் கிராம இரவுகளை நிறைத்தவர்கள்.

தன் பாடல்களை மனதார விரும்பிய ஒரு தோழிக்காக இரவு முழுக்க ஒரு நூறு பாடல்களை பாடியவன் எங்கள் சுகந்தன்.

இவர்களின் வாழ்வு, இவர்களின் பாடல், இவர்களின் உலகம் எல்லாமே வேறு.

இவர்களைப் போல வந்து போனவர்கள் பலநூறு பேர். அவர்கள் பாடியிருக்கலாம். கேசட் போடலாம், குழுக்கள் ஆகலாம். மனதில் நிற்பவர்கள் எப்போதும் அசலான கலைஞர்கள் மட்டுமே. அதுவே அந்த கார் பயணத்தில் எனக்கு மீண்டும் மீட்டுத்தந்தது முத்துசாமியை.


காலம் எப்போதும் அவர்களை சல்லடைப் போட்டு சலித்து எடுத்து விடுகிறது.

No comments:

Post a Comment