Thursday, February 4, 2016

இழந்த வாழ்வின் தொடுதல் வேண்டி

கந்தர்வன் 
நன்றி இம்மாத செம்மலர் 


அந்தத் திறந்தவெளி அரங்கில் நூற்றிஐம்பதுபேர் வரை குழுமியிருக்கிறார்கள். உள்ளே நுழையும்போதே பேச்சைத் தன்னிடம் தந்துவிட வேண்டுமென அவ்வரங்கு உறிஞ்சிக் கொண்டதுபோல எல்லோருமே அநியாயத்திற்கு மௌனமாயிருக்கிறார்கள்அந்த உறைமௌனம் என் பதட்டத்தை இன்னும் உயர்த்துகிறது. நான் தூரத்து இருட்டில் கொஞ்சம் நடந்து பார்த்து என்னைத் தளர்த்திக் கொள்ள முயன்று தோற்கிறேன்.

ஒலிபெருக்கியில் ‘‘இன்று கந்தர்வனின் கதைகள் பவாவின்  குரலில்’’  என நண்பன் ஜே.பி என் உதறலை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறான்.

இயல்பை மீறி நான் பதட்டமாயிருக்கிறேன். அதை மறைப்பதற்கு  முன்னுரை என்ற பெயரில் ஏதோதோ உளறுகிறேன். ஆனால் என் துவக்கம் அதுவல்ல. அது பீடிகை. எனக்கே என் ஏமாற்று புரிகிறது. என் துவக்கம்  ‘பத்தினி ஓலம்தமிழில் எழுதப்பட்ட ஆகச் சிறந்த கதை. எந்த மொழி பேசுபவன் முன்னும், எழுதுபவன் முன்னும் தூக்கிப்போட்டு தோ, பார், எங்கள்  முகாமிலிருந்து  எழுதப்பட்ட மானுட வாழ்வின் அதி நுட்பமானச் சித்திரம்என என்னால் காட்ட முடிந்த கதை.

என் முன் அந்த குறைந்த வெளிச்சமும் இருட்டும் கலந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு நான் கந்தர்வனாக மாறினால் தவிர கடத்த முடியாத கதை அது. ‘‘நீ மரமாக மாறாவிட்டால் கிளிகளைப் பிடிக்க முடியாது’’ நான் மரமாக மாற முயற்சித்தேன்.

முக்கோண வடிவில் அங்கு இருட்டு கவிந்திருந்தது. அவர்களிருவரும் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஒரு வழியாய் நான் கந்தர்வனாகி கதைச் சொல்ல ஆரம்பித்தேன்.

நான் பத்தினிடா, உத்தமிடாஎன நான் அந்தப் பெண்ணின் குரலில் கதறியபோது கூட்டம்  ஒரு அடி ஆழத்திற்குத் தன்னை உள்ளிழுத்துக் கொண்டது.

இக்கதையைப்பற்றி ஜெயமோகன், ‘‘அந்தப் பெண்ணின் கதை என்ன? எதற்காக அவள் அப்படிக் கதறுகிறாள்? மாபெரும் அநீதி ஒன்றின் ஆற்றமுடியாத துயரம் ஒன்றின் கதை அதற்குள் புதைந்து கிடக்கிறது. நம் உடம்பிலிருந்து வெட்டுப்பட்டு நம் பாதையில் கிடந்து அதிரும் உயிருள்ள தசைத் துண்டின் துடிப்பு போல இருந்தது அக்கதை எனக்கு’’ என்கிறார்.

நான் அப்பெண்ணின் பஸ் பயணத்தில் அவளுடனேயிருந்தேன் அவள் மாராப்பு விலகுகையில் என் கையால் எடுத்துப் போர்த்தினேன். அவளுக்கு மாத்திரை போட்டு வாட்டர் பாட்டிலில் நீர் தந்தேன். அவள் என் முகத்தில் உமிழ்ந்தபோது புன்னகையுடன் துடைத்துக் கொண்டேன். அவள் மாறி, மாறி என் கன்னத்தில் அறைய வாகாக உட்கார்ந்து கொண்டேன். அவள் அயர்ந்து தூங்குகிறாள் என நான் நம்பியபோது திடீரென ஓடும் அப்பேருந்தில் எழுந்து நின்று,

‘‘நான் உத்தமிடா

நான் பத்தினிடா’’ என கத்தினதைப் பொறுத்துக்கொண்டேன்.

அக்கதையை நான் சொல்லி முடித்தபோது அப்பெண் அயர்ந்த  நித்திரையிலிருந்தாள். என் உடல் வேர்த்திருந்தது. நான் அடுத்து சொன்ன இருகதைகளும் அப்பெண்ணின் காலடியில் கிடந்தது.

இன்னும் நம் யாராலும் முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள முடியாத கந்தர்வன் என்ற அசல் கலைஞனின் அபாரமான கதைகளில் ஒன்று இந்த பத்தினி ஓலம்இந்த வரிசையில் அவரின் பத்துக் கதைகளையாவது என்னால் சொல்ல முடியும். அறுபது வயதில் தான் எழுதிய அறுபத்தோறு கதைகளும் இந்த பத்து வீரிய வித்துக்கள் உருவாக்கத்திற்காக  மேற்கொள்ளபட்ட சில கருக்கொள்ளல்களும்  கருச்சிதைவுகளும் நான்.

முதன்முதலில் தமுஎச-வின் ஏதோ ஒரு மாநாட்டு நிகழ்ச்சிநிரலுக்கு முந்தைய கணத்தில் நான் அவரை மிக அருகிலிருந்துப் பார்த்தேன்நான் அதுவரை பார்த்திராத நிறத்திலிருந்தார். வேறெந்த மனிதர்களிடமில்லாத வெடிச்சிரிப்பும், கலகலப்புமாய் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். ஒரு வசீகரமான இளம் பெண்ணின் அருகாமைக்கு முந்தும் இளைஞர்களைப் போல அவரை இளைஞர்கள் மொய்க்கக் கண்டேன். அன்றைய நாளின் பின்னிரவின் மிச்சத்தில் அவர் கையில் புகைந்த சிகெரெட்டுக்குக் காத்திருந்து கை தந்தேன். எங்கள் கரங்களின் முதல் புதைவு அது.

அடுத்த நாள் அதிகாலை, ஒரு வட்டக் கண்ணாடி முன் நின்று கன்னத்தில் இல்லாத முடியை ஒரு புது பிளேடால் வழித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து,

‘‘எழுதுவியா?’’ எனக் கேட்டார்.

‘‘கொஞ்சமா’’

கண்ணாடி முன் பார்த்து சிரிப்பது பின்னிருந்து தெரிந்தது.

இப்ப எழுதறவங்கள்ல யார் யாரெல்லாம் பிடிக்கும்?

‘‘வண்ணதாசன், வண்ணநிலவன்’’

ரேசர் வைத்திருந்த கையால் என் முதுகணைத்துக் கொண்டார். எனக்கும் இவங்க ரெண்டு பேரையும்தாண்டா புடிக்கும். அந்ததாண்டாதான் எங்களிருவரையும் இன்னும் இறுக்கியது.

நாங்கள் இரகசியமாக ஸ்நேகம் கொண்டோம்.

அப்போது அவர் இலக்கியம், தொழிற்சங்கம், கட்சி இவை மூன்றிலும் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தார். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொப்புள்கொடி உறவு கொண்டவை என்பதை பாசாங்கின்றி ஒப்புக் கொண்டிருந்தார். வறண்ட தொழிற்சங்க வாழ்வில் எனக்குக் கிடைத்த ஈரமான பதிவுகள் இவையெனத் தன் படைப்பைக் காட்சிப்படுத்தினார். அண்ணன் தம்பியோ, அக்கா தங்கையோ இல்லாத என் வாழ்வில் கந்தர்வன் எனக்குத் தந்த இடம் என் அண்ணாவுடையது. இப்புது உறவில் நான் திக்குமுக்காடிப் போனேன். ஒரு மாவட்ட மாநாட்டு இடைவெளியில் என் தோளில் கைபோட்டு அம்மைதானத்திலிருந்து வெளியேறி எதிரில் இருந்த என் கூரை வீட்டிற்கு வந்து, மகன் சிபியின் கன்னத்தை வருடி, அவன் சின்ன விரலுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் போட்ட பெரியப்பன் அவர்.

நாம் எத்தனை கச்சிதமானவர்களாயிருக்கிறோம்! வீடு, அலுவலகம், தொழிற்சங்கம், கட்சி எல்லாவற்றிற்கும் தனித்தனியே இடம் வைத்துள்ளோம். பல முன்னணித் தோழர்களின் வசிப்பிடம் எதுவெனக்கூட கடைசிவரை சக தோழர்கள் அறியப்படாமலேயே போய்விடக்கூடும்தானே! அவர் பொதுவெளியில் ஒருவராகவும் குடும்பத்தில் வேறு ஒருவராகவும் அறியப்படுவார். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அப்பா எந்த இயக்கத்தில், எந்த கட்சியில், என்னவாக இயங்குகிறார் என்பது கூட கடைசிவரை தெரியாது.
கந்தர்வன் தன் ஆரம்பத்திலேயே இக்கோட்டை வலுக்கொண்டழித்தார். இயக்கத்திற்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாத வாழ்வைத் தனதாக்கிக் கொண்டார். அதனாலேயே,

கோடுகள் இல்லா உலகம் ஒருநாள் வானில் சுழன்றிட வேண்டுமென்ற ரமணனின் வரிகளுக்கு அவரால் எக்காளமிட முடிந்தது. படைப்பாளி காற்றைப் போல சகலத்தையும் மீறி, சகலத்திலும் பரவிவிட வேண்டியவன். நம் எல்லாப் பாசாங்குகளும் காலத்தின் முன் எப்படியோ கலைந்துவிடுகிறது. நாம் கட்டிய வேஷம் கலைய ஒரு ஆலங்கட்டி மழை கூட வேண்டாம். வெறும் தூறலுக்கே கரைந்து விடுகிறது. நாம் அம்மணமாய் நிற்கிறோம். எதைக்கொண்டும் நம் நிர்வாணத்தை நம்மால் மறைத்துவிட முடியாது. காலம் தான் நம்மை வாழ்வின்முன் இப்படி நிர்மூலமாக்குகிறது. கந்தர்வனுக்கு அப்படி எந்த வேஷமும் எப்போதும் தேவையாயிருக்கவில்லை. அசலான மனுஷனாயிருத்தால் தான் அவரால் மானுட வாழ்வின் அன்பை அப்படியே அள்ளிப் பருக முடிதத்திருக்கிறது பிற முற்போக்கு படைப்பாளிகளிலிருந்து அவர் வேறுபட்டிருந்தார். உள்ளூர தான் இழந்த பெரும் விவசாய வாழ்வும், நிலபுலன்களும், கால்நடைகளும், புஞ்சைக் காவலும், அதில் கிடைத்த தனிமையும் அவரை தொடர்ந்து பிறாண்டின.

கருவூல அரிகாரி, தொழிற்சங்கத் தலைவர் எல்லாமும் நமக்குத் தெரிந்த அவரின் புறத் தோற்றங்கள்தான். உள்ளூர அசலான புஞ்சை விவசாயிதான் அவர். புளியமர குத்தகை மகசூலுக்கு வருசாவருசம் தன் சகாக்களோடுப் போகும் அப்பாவை அருகிலிருந்த பார்த்த கணகள் அவருடையது. இழந்த நிலம், அப்பாவின் சிறுபண்ணை வாழ்வு. அது கொடுத்த அகங்காரமும் பெருமிதமும் இவருக்கு வாய்க்காமல், தமிழ்நாடு அரசில் கிடைத்த குமாஸ்தா வாழ்வு, அடிமனதில் அவருக்கு ஏக்கமான அப்பாவின் பெருந்தன வாழ்வு இவற்றையே திரும்பத் திரும்ப எழுதினார். சாசனம், கொம்பன், காவடி, தாத்தாவும் பாட்டியும் போன்ற கதைகளில் தெரியும் இந்த ஏக்கமும் பெருமிதமும். இக்கதைகளே அவரை கலைவாழ்வின் உன்னததற்கு இட்டுச் சென்றன.

கவியரங்குகருக்காகவும் மலர்களுக்காகவும், நேரமின்மையைச் சாக்கு வைத்து அவர் எழுதிய கவிதைகள் நிலைக்கவில்லை. ‘கயிறுபோன்ற ஒன்றிரண்டு கவிதைகள் தவிர மற்றவைகள் முயற்சிகளும் முற்றுபெறாதவைகளும்தான்.

தன்னிடமிருந்து விட்டுப்போன தன் ராமநாதபுர சொந்த நிலப்பரப்பையும், அதன் அசலான மனுஷர்களையும் வைத்து ஒரு பெரும் நாவலை எழுதிவிட வேண்டுமென்பதே எப்போதும் அவரின் பெருங்கனவாய் இருந்தது. ‘காவடிகூட அதன் ஒரு துவக்கம்தான். படைப்பூக்கமான மனநிலை தொடரமுடியாத படி தொடர்ந்து லௌகாக வாழ்வில், பணிமாற்றம், தனிமை, பதவி உயர்வு என்று எல்லாமும் அவரை அலைக்கழித்தது.

ஆனால் இறுதிவரை இதில் எது நான்? எனத் தன்னைப் பொருத்திக் கொள்ள அலைவுற்றுக் கொண்டேயிருந்தார் கந்தர்வன்.

‘‘உன்னை என் கூட பொறந்த தம்பியாவே உணரமுடியுதுடா, என் வாழ்நாளிலேயே என் மொத்த கதை கதைகளையும் ஒரு அழகான பதிப்பா பாத்துடனும்டா என வாஞ்சையான ஒரு தொலைபேசி உரையாடலின் முடிவில் அவர் கதைகளை எனக்கு அனுப்பித் தந்தார்.

அதன் பக்கச் செறிவுகளில் ஒரு சக படைப்பாளியாய் நான் சந்தோஷமாக பயணித்தேன். அப்போதுதான் எத்தனை மகத்தான ஒரு படைப்பாளியை சாதரணமாக நாம் வைத்திருக்கிறோம் எனத் தோன்றியது எனக்கு.

தன் உரையாடல்களிலும், படைப்பிலும் ஒரு நுட்பமான நகைச்சுவையை எப்போதும் பொதிந்து வைத்திருந்தார் கந்தர்வன். எந்த மனநிலையிலும் அதைத் தவறவிட்டதேயில்லை. மகள் மைதிலி திருமணத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர் கங்காதரனை இப்படி அறிமுகப்படுத்தினார்‘‘தோழர் கங்காதரன் எங்களுடன் நாடகங்களில் நடித்தவர் கவிதைக்கும் சிறுதைக்களுக்கும்கூட முயன்றவர், என்ன? பஞ்சப்படி அவரை முழுசாகச் சாப்பிட்டுவிட்டது’’ நாங்கள் தப்பித்தவர்கள்.

நாங்கள் சிரித்து முடிப்பதற்குள் அடுத்ததற்குத் தாவுவார். மனித இயல்புகளில் இத்தனை இலகு அமைவது அரிது.

அவரின் இறுதி நாட்கள்தான் அவர் வாழ்வில் படைப்பூக்க மிக்க நாட்கள். அல்லலுறும் மனநிலையும், தோல்வியும், துரோகமும் நிறைந்த நாட்கள் அவைகயெனினும் அதில்தான் அவர் இடைவிடாது வாசித்ததும், படித்ததும், நிகழ்வுகளில் பங்கேற்றதும்.

அவரின் உயிறற்ற உடலுக்குப் பின்வரிசையில் நடந்த நானும் தோழர் பாரதி கிருஷ்ணகுமாரும் ஒரு தைர்யத்திற்காக ஒருவர் கையை ஒருவர் இறுகப்பற்றிக் கொண்டு, கால்களில் மிதிபடும் வெண்சரளைக் கற்களைக் கடந்து மௌனமாக வெகுதூரம் நடந்தோம்.

கலகலப்பு, அந்த வெடிச்சிரிப்பு ஆவேசம், துள்ளல் எல்லாமும் சட்டென ஒரு நிமிடத்தில் அடங்கி அந்த பச்சை மூங்கில்களுக்குள் அடங்கிப் போயிருந்தது.

அதுவரை இல்லாத தாங்கமுடியாத துயரம் ஒன்று எங்கிருந்தோ வந்து எங்களிருவரையும் கவ்விக் கொண்டது.

எவ்வளவு முயன்றும் அதிலிருந்து விடுபடமுடியவில்லை. ஜெயமோகனை நோக்கி அவர் பேசிய அந்த இரு வரிகள் தான் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வந்தன.

‘‘அடக்குமுறையில வர்ற அழிவுக்கும், புரட்சியில வர்ற அழிவுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியல’’ ஆனா தம்பி என்னோட ஒரே நம்பிக்கை மார்க்சியம்தான்,

என்னோட ரத்தம் அது.


‘‘எங்களுடையதும் கூட அதுதான் தோழர்.’’

No comments:

Post a Comment