Monday, October 3, 2016

கே.வி.ஷைலஜாவிடமிருந்து...

எங்கள் கவிஞனுக்கு ஒரு வீடு
உங்களிடம் மிச்சமானதை எங்களிடம் கொடுங்கள்
கனவாய் வாழ்ந்த எங்கள் மூத்த மகன் சிபியின் நினைவுநாள் நேற்று. அவனுடைய நினைவாக ஒரு பணியைத் தொடங்க நானும் பவாவும் முடிவெடுத்தோம். வம்சியும் மானசியும் சந்தோஷமாக அதனை ஏற்றுகொண்டார்கள்.
நண்பர்களே, நம்மோடு முப்பது ஆண்டு காலமாக மிக நேர்மையாக எந்த எதிர்பார்ப்புமின்றி , முக்கியமாக வாழ்வின் மீது எந்த புகாருமின்றி தன் இரண்டு பெண் குழந்தைகளோடு கவிஞர். பீனிக்ஸ் மகிழ்ச்சியாகயிருக்கிறார். அவருக்கு ஒரு வீடு என்பது பெரும்கனவு. அது அவருக்கு கனவு மட்டுமே. ஆனால் நம்மால் அதை சாத்தியப்படுத்த முடியும்.
நம்முடைய வீடுகளைக் கட்டி முடித்தபின் மிச்சமிருக்கும் மணல் , ஜல்லி, செங்கல், கம்பி என நம் புது வீட்டின் முன் துருத்திக்கொண்டிருக்கும் பொருட்கள் நமக்கு என்றுமே தேவைப் படாது. ஆனால் அது வீட்டின் ஒரு அங்கமாய் எப்போதுமே இருக்கும். அதை எங்களுக்குக் கொடுங்கள்.
திருவண்ணாமலை நண்பர்கள் அப்படி இருக்கும் பொருட்களின் தகவல் தந்தால் நாங்களே சேகரித்துக் கொள்கிறோம்.
வெளியூர் நண்பர்கள் வீடு கட்ட ஆகும் கூலி மற்ற செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். வீட்டிற்கான 1000 சதுர அடி இடத்தை எங்கள் இடத்திலிருந்து நாங்கள் தருகிறோம். வீடு இங்கிலாந்தின் கட்டிடவியல் மேதை லாரி பேக்கரின் வடிவமாக பூசப்படாத செங்கலும் கருங்கல்லும் சேர்த்து இரண்டு படுக்கை அறையுடன் நல்ல வசதியாக, காற்றோட்டமாக, வெளிச்சமாக கவிஞரும் குடும்பமும் இனி வீடு குறித்த அல்லலின்றி வாழ நாம் எல்லோரும் கை கோர்ப்போம்.
இந்த நேரத்தில் நான் மொழிபெயர்த்த பாலசந்திரன் சுள்ளிக்காட்டின் நண்பர் கவிஞர்.ஸ்ரீவத்ஸனின் கவிதை நினைவிற்கு வருகிறது. இந்த துயரம் ஸ்ரீவத்ஸனோடு முடியட்டும். ஃபீனிக்ஸுக்கும் குழந்தைகளுக்கும் வரவேண்டாம்.
எதற்காக அப்பா நாம் வீடு மாறுகிறோம்,
இது என்னுடைய சொந்த வீடில்லையா?
இதைக் கேட்டபோது கவிஞனின் மனம் இப்படி விம்மி உடைகிறது.
நமதில்லை மகú ன,
இந்த வீடும் கதவுகளும்
மாடங்களும் படிக்கல்லும்
வெளிப்புற வேலிப்படர்ப்பும்
பொன் பூக்களும்
.
நமதில்லை மகனே,
இந்த வீடும் வாசலும்
நந்தியா வட்ட நிழலும்
அரளியும் இலஞ்சிப்பூ மணமும்.
நமதில்லை மகனே,
இந்த வீடும் குளமும்,
கோயிலும் குளிர்ச் சாமரம் வீசும் காற்றும்.
நமதில்லை மகனே,
இந்த வீடும் சித்திரவிதானங்களும்
கண்ணாடி பார்க்கும் மரச்சிற்பக்கன்னிகளும்
.
நமதில்லை மகனே,
இந்த வீட்டின் நடுமுற்றமும்
மழைக்கிசைவாய்க் கின்னரம் மீட்டிப் பாடும்
இந்தக் குயில் கூட்டங்களும்.
நமதில்லை மகனே,
இந்த வீட்டின் கோடியில்
தொங்கவிட்டிருக்கும்
ஆலோலம் கிளிக்கூடும்
நெல்மணிக் குதிர்களும்
(கூட்டில் வந்து உட்காரும்
கிளியைக் காணாமல் நீ
துக்கத்தில் தேம்பின எத்தனை
அந்திகள் போயிருக்கின்றன
இந்த வாசல் வழியாக)
நமதில்லை மகனே,
இந்த வீடும் வீட்டின் சங்கீதமும்.
நாம் போகிறோம்,
கால தேசங்கள் அறியாமல்
பூமியின் எல்லைக் கோடுவரை
முடிவில்லா யாத்திரையாய்...
யாத்திரையின் இடையில்
ஒரு நொடி தலைசாய்க்க
வீடு தேடிப்போகிறோம் மகனே நாம்.

No comments:

Post a Comment