Sunday, October 29, 2017

என் ஆழ்ந்த அஞ்சலி தோழர்.

அசல் மனிதர்களை எழுத்தில் அடைந்த

மேலாண்மை பொன்னுச்சாமி
                               
   என் ஞாபகம் இன்னமும் மங்கத் துவங்கவில்லையென்பது நிஜமெனில், மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிபிகள் என்ற கதையே நான் முதன் முதலில் கல்கியில் வாசித்தது. இன்னும் நினைவு கூர்மைதானெனில் அக்கதை முதல் பரிசு பெற்று பிரசுரமாகியிருந்தது.

 பன்றி மேய்க்கும் ஒருவனின் வரைபாடு அக்கதை. ஊருக்கு ஒரு குடும்பமோ, இரண்டு குடும்பமோ ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து, பன்றி வளர்த்து, பன்றி மேய்த்து, பன்றி விற்று, அல்லது அறுத்து என தினம், தினம் அல்லல்படும் ஒருவனையே மேலாண்மைப் பொன்னுச்சாமி ‘சிபி’ என வாஞ்சையாய் அழைப்பார்.
அந்த அழைப்பு எனக்கும் சேர்த்து என்பது போல நான் அப்படைப்பாளியைத் தேட ஆரம்பித்தேன்.

அது ஒரு புனைவைவிட புதிர் நிரம்பியதாகவும், சிறுகதையைவிட சுவாரஸ்யம் மிக்கதாகவும் அந்த வயதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

மேலாண்மறை நாடு என்பதே பொன்னுசாமியின் சொந்த ஊர்.

படிப்பு ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. ஸ்கூல் வாசலில் ரோஸ் கலரில் பஞ்சுமிட்டாய் சுற்றிய கழியோடு சத்தம் எழுப்பும் மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?
அவர்களில் ஒருத்தர்தான் இக்கதைகளை எழுதுவது என்பதெல்லாம் என்னை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே போனது.

நான் இன்னும் தேடி அவரின் பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அச்சிடப்பட்ட அப்பக்கங்கள் முழுக்க சராசரிக்கும் கீழான எங்கள் மக்கள் மிதிபட்டார்கள். அவர்களிலிருந்தே ஒருவன் எழுதத் துவங்கியிருக்கிறான் என்பது இன்னும் எங்கள் தூரத்தைக் குறைத்தது.

மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் என்ற வாக்குமூலத்திற்கு ஒருவர் மட்டும் சொந்தமில்லை என புரிய ஆரம்பித்தது. அம்முன்னத்தி ஏரைப் பின் தொடர எத்தனையோ பின்னத்தி ஏர்க்காரர்களின் அணிவகுப்பு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது.

எழுபதுகளில் கிராமங்களுக்குள் வந்து போகும் பஸ்கள். அல்லது ராத்தங்கிப் போகும் பஸ்களின் இன்னும் எழுதப்படாத ஒரு நூறு கதைகள் மிச்சமிருக்கின்றன. பேருந்தை மையப்படுத்தி, அல்லது பேருந்து மனிதர்களை முன் வைத்து என்னால் ஒரு கதையும் எழுத முடிந்ததில்லை. இனிமேலும் எழுதிவிட முடியுமெனத் தோன்றவுமில்லை.
பேருந்து வந்து போகும் கிராமத்தில் என் வாழ்வு இல்லை. அது நகரமும் இன்றி, கிராமமுன்றி இரண்டுங்கெட்டானாய் கிடந்த ஒரு நிலப்பரப்பில் இருந்துதான் நான் எழுத வந்தேன்.

மேலாண்மைக்கு அப்படியில்லை. அவர் ஆற்றங்கரைக்கு அப்புறமாய் அமைந்த வறண்ட கரிசல்மண் கொண்ட ஒரு கிராமத்திலிருந்து எழுத வந்தவர்.
கால்நடையாய் பிழைப்பைத் தூக்கிச் சுமந்து சோர்வுற்று, பேருக்கு ஒரு பெட்டிக்கடை அல்லது பலசரக்குக்கடை என பெயரிட்டு அதில் நின்றுகொண்டு சம்சாரிகளின் சாமார்த்தியத்தை, சாமான்யர்களின் அன்பை, காதலை, காமத்தை எல்லாம் கண்களால் பருகி, கைக்கு கொண்டு வந்தவர்.

நசநசக்கும் வியர்வையினூடே வெயிலோடு நகரும் ஒரு டவுன் பஸ் மனிதர்களை மனிதல் கொண்டு கி.ரா. ‘மின்னல்’ என்ற ஒரு கதை எழுதியுள்ளார்.
மனிதர்களின் வெறுப்புமிக்க, கசப்பான மனநிலையை ஒரு குழந்தையின் இருப்பு, ஒரு இளம் பெண்ணின் சிரிப்பு எப்படி மாற்றும் வல்லமைக் கொண்டது என்பதே கதை.

ஒரு படைப்பாளிக்கு இப்படியான தருணங்களை எழுத்தில் கொண்டு வருவது பெரும் சவால் நிறைந்ததுதான்.
மேலாண்மை அதே சூழலை மையப்படுத்தி  ‘எட்டரை’ என்றொரு கதை எழுதியிருக்கிறார்.

மனிதர்கள் ஈரம் நிறைந்தவர்கள் தான். ஆனால் எப்போதும் அப்படி அல்ல.
அப்பேருந்தில் இடம் பிடிப்பதில் கிராமத்து மனிதர்களிடம் ஏற்படும் போட்டி, பெரும் சண்டையாக வெடிக்கிறது. நாம் கெட்ட வார்த்தைகளென வகைப்படுத்தி வைத்திருக்கிற சொற்களால் வசைமாரிப் பொழிகிறார்கள்.
பஸ் வேகமெடுக்கிறது. சண்டையும் வலுக்கிறது.

ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணின் வீறிட்டு அழும் குரல் கேட்டு பேருந்து நிற்கிறது. சண்டைக்கார முகங்கள் அனைத்தும் அப்பெண்ணின் இருக்கையை நோக்கிக் குவிகின்றன. அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி. விருதுநகர் ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். போகிற வழியில் வலி தாங்க முடியாமல் கதறுகிறாள்.

மொத்த ஆண்களும், அவசரமாகப் பேருந்தைவிட்டு இறங்குகிறார்கள். ஒருவர் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து ஜன்னல் வழி மறைப்புக்கு நீட்டுகிறார். கொஞ்சம் பேர் அவள் சுகப்பிரசவத்திற்கு கடவுளை வேண்டுகிறார்கள். வெயிலின் உக்கிரம் எதுவும் அவர்களை எதுவும் செய்துவிடவில்லை.
எல்லோர் காதுகளும் ஒரு குழந்தையின் அழுகைக்காகத் தவம் கிடந்து காத்திருக்கிறது.

அது அவ்விதமேயாகிறது.
குழந்தையின் அழுகைச் சத்தம் எல்லா மனிதர்களின் முகங்களிலும் புன்னகையைத் தருகிறது.

கண்டக்டர் விசில் ஊதுகிறார். அடித்துப் பிடித்து நெக்கித்தள்ளி அவர்கள் மீண்டும் இடம்பிடிக்க ஏறுகிறார்கள்.
அதே கெட்ட வார்த்தை, அதே சண்டை, சண்டையில் முன்னிலும் உக்கிரம் கூடியிருக்கிறது.

அசலான மனிதர்களை, பல வருட அனுபவங்களால் படித்தாலொழிய இப்படி ஒரு கதையை ஒரு படைப்பாளி தொடக்கூட முடியாது.
பேருந்துப் பயணங்களின் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும் பல ஆண்டுகள் பயணித்த ஒரு எழுத்தாளனே தன் சக பயணிகளை இத்தனை நுட்பங்களோடு சித்திரிக்க முடியும்.

எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத வந்த என்னைப் போல பலருக்கும் எழுத்தும், இயக்கமும் சரிசமமாய் மல்லுக்கு நின்றன. சிலர் எழுத்தையும் பலர் இயக்கத்தையும் கைக் கொண்டோம்.

ஆனால் இரு தரப்பினருக்குமே மேலாண்மை ஆதர்ஷமாக இருந்தார். பெரிய காலேஜிலெல்லாம் போய் படிக்காத ஒருத்தர், பலசரக்குக் கடையில் நின்று எழுதுகிற கதைகள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் எங்களை மேலும் மேலும் வியப்பூட்டின.

ஒரு தருணத்தில் தமிழ்நாட்டில் வெளியான எந்த நடுநிலைப் பத்திரிகையிலும் அவர் படைப்புகள் இல்லாமல் இல்லை.

ஆனந்தவிகடனில் ஜெயகாந்தனுக்கு அப்புறம் அதிகம் கதை எழுதியவராக மேலாண்மையையே சொல்ல முடியும்.

ஒருவேளை தோழர் தனுஷ்கோடி ராமசாமிக்கு திடீர் மரணம் சம்பவிக்காமல் தள்ளிப் போயிருந்தால் அவரும் அவ்வரிசையில் நின்றிருப்பார்.

சுபமங்களாவில் ஆரம்பித்து, கல்கி, குமுதம், தாமரை, செம்மலர் என விருதுநகர் மாவட்ட வெயிலேறிய மனிதர்களின் உடல் வெப்பம் பரவின எழுத்தை என்னைப் போல வட தமிழ்நாட்டிலிருந்தவர்களும் உணரத் தொடங்கினோம்.
தமுஎச-வின் ஒரு மாநில மாநாட்டில்தான் நாலுமுழ வேட்டியைத் தூக்கிக்கட்டிய குள்ளமான அம்மனிதனை, ‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’ என என் தோழர் வெண்மணி அறிமுகப்படுத்தினார்.

உள்ளங்கைச் சூட்டைப் பரிமாறிக் கொண்டோம். ‘பூக்காத மாலை’ என்ற அவரின் அப்போதைய கதையைப் பற்றிய எங்கள் இருவரின் விவாதம் நிறைந்தபோது பிரதிநிதிகள் மாநாடு முடிந்திருந்தது.

தன் படைப்பின் திசை மாறிவிடக் கூடாது என்பதில் அவருக்கு எப்போதும் ஒரு கவனமிருந்தது. வாசிக்கும் இலக்கியத்தினூடே, மார்க்சியம், தத்துவம் என சமமாகக் கலந்து படிக்கும் பழக்கத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தார்.
அவரால் இரண்டுமணி நேர மார்க்சிய வகுப்பை தனியாக இளைஞர்களுக்கு எடுக்க முடியும். அத்தனையையும் வாழ்விலிருந்தும், இயக்கத்திலிருந்தும் அவர் அடைந்தவையே.

கரிசல் மண்ணின் ஒரு பெரும் வாழ்வை  ‘கோபல்ல கிராமம்’ மாதிரியோ,  ‘அஞ்ஞாடி’ போலவோ எழுத வேண்டிய முனைப்பு அவருக்குக் கடைசிவரை கைக்கூடிவிடாமல் போனது, ஒரு வகையில் தமிழிலக்கியத்திற்கு அதிர்ஷ்டமின்மைதான்.

புதுமைப்பித்தன் போலவே, வண்ணதாசன் போலவே, மேலாண்மையும் தன் வாழ்வின் பாட்டையும், மனிதர்களின் இயல்பையும் சிறுகதைகளாகவே முடித்துக் கொண்டார்.

எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு மூத்த அண்ணன் ஸ்தானம் எப்போதும் அவருக்கு உண்டு.

அவரையும், அவர் படைப்புகளையும் நானும் ஷாஜகானும் எல்லாத் தோழர்கள் மத்தியிலும் கிண்டலடிப்போம். ஒரு போதும் அவர் முகத்தில் கோபமேறிப் பார்த்ததில்லை.

அவர் தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த சமயம் அது. நான் கல்லூரிப் படிப்பை பாதியில்விட்டு இலக்கியம், இயக்கம் என இயங்கிக் கொண்டிருந்த எண்பதுகளின் இறுதி நாட்கள்.

எங்கள் வீட்டு சாலிடர் டி.வி. தெருவில் ஒரு டேபிள் போடப்பட்டு தினம் தினம் தெருவுக்குக் கொண்டு வரப்பட்டு, தெரு மக்களுக்கு படம் போட்டுக் காண்பிக்கும் மாபெரும் உபச்சாரத்தை அப்பா தனக்கோட்டி வாத்தியர் தவறாமல் செய்து கொண்டிருந்த நாட்கள்.

தோளில் மாட்டின பையோடு டி.வி. பார்க்கும் ஜனக்கூட்டத்தில் வந்து நின்ற அந்த நடுவயது மனிதனை உட்காரச் சொல்லி அப்பா கைக்காட்டின இடம் தெருவை அடைத்து அம்மா கட்டியிருந்த கோழிக் கூண்டு.
எதுவும் பேசாமல் அவர்களோடு உட்கார்ந்து ‘சவாலே சமாளி’ பார்த்து முடித்து, எல்லா மக்களும் போன பின்பும் கோழிக் கூண்டைவிட்டு எழாமலிருந்த அம்மனிதனைப் பார்த்து,

‘‘என்ன ஊர்ப்பா?’’ இது அப்பா,
‘‘தெக்க, விருதுநகர் பக்கம்,’’
‘‘பரவாயில்லை வந்து சாப்புடு’’ இது அம்மா.
‘‘நான் பவாவைப் பாக்கணும்’’ இது அவர்.
‘‘அவன்ல்லாம் ஒரு ஆளு. என் சம்பாதியத்துல தின்னுட்டு ஊர் சுத்திட்டு ஊரடங்குன நடுச்சாமத்துலதான் வருவான், நீ சாப்புடு’’
அவர் தரையில் உட்கார்ந்து கை நனைக்கையில்,
‘‘அவனைப் பாக்கவா இம்புட்டு தூரம் வந்திருக்க, நீயும் அவன மாதிரியே…’’
எதுவோ பொறி தட்ட
‘‘உன் பேரு?’’
‘‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’’

வாயில் வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளினூடே அவர் வார்த்தைகள் தடுமாற…
அப்பாவின் கைகள் அவரை நோக்கிக் குவிகின்றன.

ஒரு எழுத்தாளனுக்கான மரியாதையும், அன்பும் அதற்குள் அடங்கியிருந்தன.
அதுவரை வந்த அவரின் எல்லாக் கதைகளையும் அப்பா வாசித்து தனக்குள் ஏற்றிக் கொண்ட ஒரு எழுத்தாளனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகள் அவை.
நான் நள்ளிரவு வந்தபோது இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரும், ஈசிச் சேரில் அப்பாவும் தூங்கிக் கொண்டிருந்ததைக் கலைக்க மனமின்றி, திருட்டுப் பூனையின் கால்களில் நடந்து நடையில் பாய் விரித்துப் படுத்தேன்.

விடிந்த காலைதான், இரவு வந்திருந்த அதிதி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன் என்பதை எனக்குச் சொன்னது.

அடுத்த இருநாட்களும் எங்கள் கொல்லை மேடுகளில் சுற்றிச்சுற்றி நாங்களிருவரும் இலக்கியம் பேசினோம். கிராமத்து மனுஷாளையெல்லாம் அவர் வார்த்தை அப்பங்களாய் எனக்கு ஊட்டினார்.

எங்கள் நிலப்பரப்பு ஊற்றுநீரை திராட்சை ரசமாக்கி நான் அவருக்குப் பருகத் தந்தேன்.

இதோ முப்பது வருடங்கள் சுலபமாகக் கடந்துவிட்டன.

எதனாலோ சொந்த மண்ணை, நேசித்த மனிதர்களை, அவர்களின் அப்பாவித்தனத்தை, அல்லது அடாவடியை எல்லாம் இழந்து சென்னையில் மகள் வீட்டு அப்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு அறையில் அப்படைப்பாளியின் வாழ்வு சுருங்கிவிட்டது. எதிரே அவர் எழுதி முடித்து தொகுப்புகளாய் வந்த புத்தக அடுக்குகளில் ஒளிந்திருக்கிறார்கள் அவரின் அசல் மனிதர்கள்.


Tuesday, July 18, 2017

கதை கேட்க வாங்க-15. ராஜேந்திரசோழனிடமிருந்து கோணல்வடிவங்கள்

இச்சையின் சிற்றோடைகள்



இனிய ஜெயம்,
 அன்று பவாவின் கதை கேட்கலாம் வாங்க நிகழ்வில் இருந்தேன்.   ராஜேந்திர சோழன் கதைகள் அன்று பவாவின் தேர்வாக இருந்தது.  ரா சோ வின்  கதைகளில் உயிர்த்துடிப்பு  துலங்கும் கணங்களை அழகாக தொட்டெடுத்து  கதை சொன்னார்.  நிகழ்வின் இறுதியில் என்னை ரா சோ கதைகள் குறித்து சில வார்த்தைகள் பேச அழைத்தார்.  நான் மறுத்துவிட்டேன். காரணம் அக் கதைகளுக்குப் பிறகு நான் அதுவரை என்னுள்  முகிழ்ந்திருந்த ஒரு அமைதி சிதறப்பெற்றவனாக ஆகி இருந்தேன்.  மிகுந்த தத்தளிப்பில் இருந்தேன்.  ஆம்  அன்று மதியம் முதல் மாலை வரை ரமணனின் சன்னதியில் அமர்ந்திருந்தேன். அங்கிருந்து நேராக ராஜேந்திர சோழனின் உலகில் வந்து விழுந்தேன்.
 ரமணன் .   என் அகம் சரியும்  கணங்களில் எல்லாம்  இதோ  இதுவும் மானுட சாத்தியமே என்று என் முன் வந்தமரும் உருவம்.  ரமணன் மானுட சாத்தியம்.  அது இறுதி. கனி..ஆனால் முதன்மையாக  மானுடமாக விதையாக  இங்கே வந்து முளைப்பது எது? இச்சை. கருணை,அறம் ,ஒழுக்கம்  அனைத்தின் கடிவாளத்தினின்றும்  உதறி விலகி  திமிறி நிற்கும் சாரமான இச்சையின் கணங்களை தொட்டு நிற்பவை [ எட்டு கதைகள்  வம்சி வெளியீடு  தொகுதியை முன்வைத்து] ராஜேந்திர சோழனின் கதைத்தருணங்கள்.
 ரா சோ போல நடுநாட்டின் மொழியை, வாழ்வை முன்வைத்த மற்ற இருவர் கண்மணி குணசேகரன் மற்றும் இமையம். கண்மணி குணசேகர்ணனின் அஞ்சலை பசிக்கு உணவு போலும் ,தனது காமத்துக்கு தீர்வைத் தேடுபவன். உறவோ நியதிகளோ ஒரு பெரிய பொருட்டில்லை. அக்காள் தங்கமணியின் கணவனை எந்த தயக்கமும் இன்றி அக்கா இருக்கும்போதே மணக்க சம்மதிக்கிறாள். அக்கா அஞ்சலையை தற்கொலை மிரட்டல் வழியே அந்த முடிவை மாற்ற வைக்கிறாள்.
 இமையத்தின் கொலை சேவல் கதை.  கோகிலா கணவனை இழந்தவள். கணவனின் கடையில் ஒத்தாசைக்கு இருந்த அநாதை செல்வத்துடன் பிறகு கோகிலாவுக்கு  தொடர்பு ஏற்பட்டு, செல்வத்தை அவள் வீட்டுக்குள் அனுமதிக்கிறாள். மாதங்கள் செல்ல  செல்வம் கோகிலாவின் முதல் மகளுடன்  உறவில் விழுகிறான்.  தகராறுகளுக்குப் பிறகு  கோகிலா முதல் மகளை அவனுக்கு கட்டி வைத்து கடையையும் தந்து விடுகிறாள்.  மாதங்கள் செல்ல இப்போது செல்வம் பதினைந்தே வயதான கோகிலாவின் இரண்டாம் மக்களுடன் ஓடி விடுகிறான்.   பழிவாங்கும் முகமாக  செல்வத்துக்கு சூனியம் வைப்பது போல அய்யனாருக்கு கொலைசேவல் நேர்ந்து விட பூசாரியை சந்திக்கிறாள் கோகிலா. பூசாரி சொல்கிறான். இதோ இந்த சேவல்தான் உன் எதிரி நீ சொல்றது நியாயம்னா ,அத அய்யனார்க்கிட்ட சொல்லி இந்த சேவலை வேலில் குத்தி நிற்க வைப்பேன். இந்த சேவல் துடித்து அடங்கும் போது உன் எதிரியின் கை கால் இழுத்துக் கொள்ளும். மாறாக உன் பக்கம் நியாயம் இல்லாவிட்டால்  அது பலிக்காது. அல்லது அது உன் பக்கம் திரும்பிவிடும்.   கோகிலாவுக்கு ஏதேதோ யோசனைகளை. நடந்தவைகளில் எதுதான் நியாயத்துக்கு உட்பட்டது.  செல்வம் அவளது கணவனின் கடைக்கு வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் செல்வத்தின் அம்மா இறந்து போகிறாள். அநாதை செல்வத்துக்கு கோகிலா தம்பதிதான் அடைக்கலமாக இருக்கிறார்கள்.  ஒரு முடிவுடன் எழும் கோகிலா கொலைசேவலை குத்துங்க பூசாரி என்கிறாள். ”என் கையால போட்ட சோத்துக்கு நன்றி இல்லாம நடந்துக்கிட்டானே அதுக்கு ” என மனதுக்குள் சொல்லிக் கொள்கிறாள்.  [கதையில் இது  மையம் இல்லை எனினும் அவளது முடிவுக்கு இந்த நினைவும் ஒரு காரணியே ] . அஞ்சலை, போன்ற கோகிலா போன்ற பெண்களை இயக்க,  கட்டுப்படுத்த இருக்கும் காரணிகள் எதுவும் ரா சோ வின் பெண்களுக்கு இல்லை. எட்டு கதைகள் தொகுப்பின்  ஊனம் கதையின்  நாயகி ஏன் அவ்வாறு இருக்கிறாள்? அவளை இந்த லௌகீக ஒழுக்க நியதிகளுக்குள் கொண்டு வர இயலாமல் தற்கொலை செய்து கொள்கிறான் அவளது கணவன்.  ஏன் அவளை உதறி அவனால் வேறு வாழ்க்கை தேற இயலவில்லை?  இத்தககைய நாயகி கணவன் இறந்ததும் அனைத்தையும் பறிகொடுத்தவளின் உணர்வில் கிடப்பது ஏன்?  இந்த கதைக்குள் எங்கே இறங்கி உழன்றாலும் ஏன் என்ற கேள்வியில்தான் முட்டி திகைத்து நிற்க வேண்டும். விதி. ஊழ்  என்றுமட்டுமே கொள்ள முடியும்.
 இத் தொகுதியின் பெண்கள் தனபாக்கியம் ,பார்வதி  எல்லோருமே  அடி உதைக்கு தங்களை ஒப்புக்கொடுத்து புலம்புகிறார்கள்.  பாத்து பாத்து வடிச்சு போட்டனே, என்னை அடிச்சே கொல்றானே என ஒப்பாரி வைக்கிறார்கள்.  புற்றில் உறையும் பாம்புகள் கதையின்  நாயகி வனமயிலுக்கு  நேர் எதிரானவள்  ஊனம் கதையின் நாயகி.  புற்றில் உறையும் பாம்புகள் கதையில்  வனமயில் கணவன் கந்த சாமி. ஊனம் கதையில் தற்கொலை செய்து கொள்ளும் கணவனுக்கு நேர் எதிர் குணநலம் கொண்டவன்.
 எனது நண்பர் கிருஷ்ணகிரியில் வசிக்கும்போது அவரது அறைத்தோழன் கல்லூரி நண்பனின் கள்ளக்காதல் குறித்து சொன்னார். திருமணம் ஆகி குழந்தை உள்ள பெண்ணுடன் உறவு .காதல்.  அந்த பெண் மீது கொண்ட காதல் அளவே அவன் அந்த குழந்தை மீதும் பிரியத்தை வைத்திருந்தான்.  இந்த விசித்திரமான தனித்துவமான உளவியல் மீது நிலைகொள்கிறது எதிர்பார்ப்புகள் சிறுகதை.
 இந்த தொகுதியில்  வடிவ அழகில்  முற்றிலும் புறம் சார்ந்த கதைகளில் ரா சோ கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு  [புற உலக வர்ணனை கூட பெரிதாக சொல்லப்படவில்லை] கதையின் நிகழ்வு, பாத்திரங்களின் உரையாடல்  வழியே முற்றிலும் அருவமான ஒன்றின் இருப்பை தொடுகிறார்.
 மாறாக முற்றிலும் அகம் சார்ந்த கதைகளில் குறிப்பாக இச்சை கதையில் வரும் கனவு சித்தரிப்பில்  மிக விரிவான வர்ணனைகள் இடம் பெறுகின்றன.  காமம் கொண்டு அலைக்கழியும் ஒருவன். அவனது இச்சையே அவனை வழி தவறவைத்து , அபாயகரமான தற்கொலை முனைக்கு அவனை அழைத்து வருகிறது. அவனுக்கு முன்னாளல்  ஒரு தாய். அவளது நிறைசூலி மகளை  [ ஒழுக்கம் தவறி பெற்ற சூல் ]  மல்லாந்து படுக்கவைத்து , மகளின் தலைக்கு மேலாக  எடை கூடிய பெரிய கல் ஒன்றினை தூக்கி, அவளை கொல்லும் நிலையில் நிற்கிறாள்.
 உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா எனும் விளம்பரம் போல இந்தக் கதையில் சோஷியலிச யதார்த்தவாதம் இருக்கிறதா? என்று முன்பெல்லாம் முற்போக்கினர் குடுமிப்பிடி நடத்துவர்.  அவர்களுக்கு  ராஜேந்திர சோழன் எனும் மார்க்சியர் எழுதிய இந்தக் கதைகள் [ இது என்ன பண்டம் என கடித்துப் பார்த்த பின்னும் ] எந்தப் பிடியும் கொடுத்திருக்காது.
 பவா. பேசுகையில் . மார்க்சியத்தின் அங்கீகார அலகுகள் எதற்கும் இந்தக் கதைகளுக்குள் இடம் இல்லை. என்றார்.  ஆனால் உண்மையில் இக் கதைகள் ராஜேந்திர சோழனின் ”மார்க்சிய” மெய்ஞ்ஞான தேட்டத்தின்  கலா சிருஷ்டிகள்என்பேன்  . விதி,அல்லது ஊழ் ,  துக்கம், அனைத்தும் மேல் இங்கு காணும் அனைத்துக்கும் , அது இருப்பதற்கும் , செயல்படுவதற்கும் காரணமான ”இச்சை ”   இவற்றுக்கு மார்க்சியத்தில் எந்த விடையும் இல்லை. விடையற்ற அந்த விதியின் , துயரின், இச்சையின்  தூல வெளிப்பாடுகளே ராஜேந்திர சோழனின் கதாபாத்திரங்கள்.
 இந்த நூல் சங்க செயல்பாடுகளுக்கான பிழைப்பு வாதிகளுக்கான நூல் அல்ல.  தத்துவம் அறிந்து மயிர் பிளக்கும் வாதங்களில் இறங்கி ஜெயித்து தருக்கி நிற்பவர்களுக்கு அல்ல.  அநீதி கண்டு பொறுக்காத, சமநிலை சமுதாயம் நோக்கி அணையாத தீவிரமும் லட்சியமும் கொண்டு நடப்பவர்களுக்கானது என்கிறார் தனது மார்க்சிய மெய்ஞ்ஞானம் நூலின் முன்னுரையில் ராஜேந்திர சோழன்.
 ஆக ஒரு கோட்பாட்டாளராக ராஜேந்திர சோழன்  கட்சிக்கு தேவையற்றவர். கலைஞனாக பிடிபடாதவர் .  மேலாண்மை பொன்னுசாமியையும் , செல்வராஜ் ஐயும் வந்து தொட்ட விருதுகள் இவரை தொடும் வகையற்ற இருளில் நின்று பேசிக்கொண்டு இருப்பவர்.
 பவாவின் மைந்தன் வம்சி ராஜேந்திர சோழன்  குறித்த ஆவணம் ஒன்றினை இயக்கும் பணியில் இருக்கிறார். அப் பணிகளுக்காக ரா சோ சிலநாட்கள் பவாவின் பத்தாயத்தில் தங்க வருவதாக பவா சொன்னார்.  வாய்ப்பு இருப்பின் ஒரு முறை அவரை சந்தித்து அவரது கைகளை பற்றிக்கொள்ள வேண்டும்.
  
- கடலூர் சீனு

Wednesday, June 21, 2017

தவறவிட்டவைகள்


பலவிதமான வீடுகள் (நவீன மலையாள சிறுகதைகளை பற்றி ஒரு பதிவு)
பவாசெல்லதுரை

  சென்னை புத்தக கண்காட்சியில் ‘வம்சி’யில் கொஞ்சநேரம் உட்கார்ந்து, அரங்கினுள் வந்து புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் வாசகர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்த அந்த அரைமணி நேரமும் இரண்டு மூன்று தலைப்பிலான புத்தகங்களை மட்டுமே மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்து வாங்கினார்கள். ஏதோ ஒரு விளம்பரம் அல்லது மதிப்புரை, அல்லது நண்பர்களின் பரிந்துரை, பிரபல எழுத்தாளனின் எனக்குப் பிடித்தது போன்ற ஒன்று அவர்களின் ஆழ்மனதில் அப்புத்தகத்தின் மீதான ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.



அவர்களின் தேர்வுக்கு நிகரான அல்லது அதைவிட சிறப்பான புத்தகங்கள் அதே ரேக்குகளில் கவனிப்பின்றியும், தொடுதலின்றியும் கிடந்தது மனதில் சொல்ல முடியாத ஏதோ ஒரு துயரத்தைத் தந்தது. உணர்வு மேலிடலை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டேன்

ஒவ்வொரு பதிப்பங்களிலும் எந்த காரணத்தாலோ, யாராலும் கடைசி வரை கவனப்படுத்தபடாத பத்து இருபது தலைப்பிலான புத்தகங்கள் கடைசி வரை அப்படியே தேங்கிவிடும். ஆனால் சிறந்த படைப்புக்கு தாமதமாகவேணும் சிறகு முளைத்து விடுகிறது. அது நேரடியாக தன் வாசகனின் மனம் தேடி பறந்து போய் அமர்ந்து கொள்கிறது.

எந்த பதிப்பகம்? யார் முன்னுரை, யார் பரிந்துரை என்றெல்லாம் இன்றுவரை ஞாபகப்படுத்தப்படா இருபது ஆண்டுகளுக்கு முன் என் மனதில் அப்படி ஒரு பெரும் சிறகடிப்போடு வந்து உட்கார்ந்த ஒரு சிறு புத்தகம் பாதசாரியின் ‘காசி’ என் நினைவு பிழையின்றி இருப்பது நிஜமெனில் அக்கதை அதற்குமுன் ‘புதுயுகம்’ பிறக்கிறது இதழில் பிரசுரமாகி இருந்தது.

என்னை பல நாட்கள் நிலைகொள்ள முடியாமல் தத்தளிக்க வைத்த படைப்பு அது. ஓடும் பெரும் நதியில் விழுந்த ஒருவன் கரைசேருவதற்கான மரண உந்துதலை ஏதோ ஒரு காட்சியில் கவனிக்கும் போதெல்லாம் மொட்டையடிக்கப்பட்ட ‘காசி என்னை நோக்கி வருவதை இன்றளவும் தவிர்க்க முடியவில்லை. அதற்கு முன் எனக்கு காசியை யாரும் அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. முகநூலிலோ, வலைப்பதிவிலோ அதன் அட்டைப் படத்தையோ, அதன் அவசியத்தின், திணித்தலையோ நான் பார்த்ததில்லை. எதுவுமே இல்லாமல் ஒரு வழிபோக்கன் மாதிரி காசி என் வீட்டு திண்ணையில் வந்த அமர்ந்து கொண்டான்.

அவன் அனுபவத்தை நான் வாசிக்கையில் நான் இழந்துபோன காதலை நினைவுகளால் மீட்டெடுக்க முடிந்தது. படித்து முடித்து நான் வேலை தேடி அலைந்ததெல்லாம் ஒன்றுமேயில்லையென அவன் அலைவுறல் எனக்கு சொன்னது. என் வலியை அவன் தோள்களுக்கு நான் இறக்கி வைத்தேன் அல்லது அவனே தீட்சை பெறுவது மாதிரி பெற்றுக் கொண்டான்.

தன் ஓயாத தேடுதலில் காசி ஒருநாள் திருப்பதியிலிருந்து திரும்பி வருகையில் திருவண்ணாமலைக்கு வருவான். யோகிராம்சூரத்குமாரின் சன்னதி தெரு வீட்டின் உள்பக்கம் தாழிடப்பட்ட இரும்பு கேட்டை சத்தமாய் தட்டுவான். இல்லை அவன் இயல்பாய்தான் தட்டுவான். அவனுள் அப்போது ஏறியிருந்த உக்கிரம் அவனை உள்ளிருந்து வன்மமாய் இயக்கும்.

உள்ளேயிருந்து சூரத்குமார் ஒரு கையில் தன் விசிறியோடும் மறு கையில் புகையும் சேர்மினோ வெளியே வருவார்.

‘‘என்ன வேணும்?’’

மௌனம். எத்தனை ஆண்டுகளாய் அடைகாத்த மௌனம் அது. எப்போதுமே அது ஒரு சிறந்த மொழி என்பது மாறாததாய் இருக்கிறது.

“நீ  கேட்டைத் தட்டிய விதம் சகிக்க கூடியதாய் இல்லை. போ”

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நான் யோகியைத் தேடிப் போனேன். என்ற கனவேடு கொந்தளித்த மனதிற்கு அவர் நீர் ஊற்றக் கூடும்.

மக்கள் நடமாற்றம் பெருகி வழிந்த அந்த பரபரப்பிம் நான் காசியையே நினைத்துக் கொண்டிருந்தேன். காசி எக்காலத்திலும் யாராலும் முன்னிருத்தப்பட்டதில்லை. ஆனால் என்னைப் போல பல நூற்றுக்கணக்கான வாசகர்களை அவன் உருவமின்றி அரூபமாக அலைக்கழித்துக் கொண்டிருந்தான். இருபது வருடங்கள் கடந்த இன்னும் கூட.

‘வம்சி’ புத்தக ரேக்குகளில் அடுக்கியிருந்தவைகளில் ‘பலவிதமான வீடுகள்’ என்ற அத்தொகுப்பை யாராவது ஒரு வாசகர் தொட்டுவிடக்கூடும் என்ற என் எதிர்பார்ப்பு நான் அங்கிருந்த வரை கை கூடவில்லை. அது ஒரு இளம் பெண்ணின் காதல் ததும்பி வெட்கப்பட்டு உள்ளடங்கும் மெல்லிய குரல்.

அன்றைய கண்காட்சியின் நிறைவில் நான் மீண்டும் ‘பலவிதமான வீடுகளை’ என் அறைக்கு எடுத்து வந்தேன். என் ஸ்ரிசத்தில் அது தன் முனகலை நிறுத்தியிருந்தது. அதன் வேண்டுதல் ஏதோ ஒரு மனிதனுக்கு புரிந்ததின் நிம்மதி.

அன்றைய பின்னிரவில் அப்புத்தகத்தை மூன்றாவது முறையாக திறக்கிறேன். இன்றளவும் என்னை ஆகர்ஷிக்கும் பஷீரின் ‘டைகர்’ கதையோடு அத்தொகுப்பு துவங்குகிறது. பஷீர்தான் தன் முதுமையேறிய அந்த மாமரத்தடியில் உட்கார்ந்து எத்தனை அழகாக கதை சொல்கிறார்! ஒரு மாமங்கத்திற்கான கதையை சொல்ல அவருக்கு அந்த ஈசிசேரின் சாய்மானம் மட்டும் போதுமானதாய் இருந்திருக்கிறது.


மனிதனின் குரூரங்கள், வாழ்வின் அலைகழிப்புகள், பசியில் அலைவுறும் பெருநாக்குகள் எல்லாவற்றையும் அந்த வாப்பா நமக்கு சொல்ல எந்த பிரத்யேக மெனக்கிடலும் இல்லை. பல ஆண்டுகளாய் இந்தியாவைத் தாண்டியும் அலைவுற்ற அந்த உரமேறிய கால்கள் வழி அவர் தனக்குள் சேமித்துக் கொண்ட அனுபவம் போதும் பஹீர் நமக்கு கதை சொல்ல.

அந்த இரவில் ‘டைகரை’த் தாண்டி என்னால் போகமுடியவில்லை.

அப்படியே ஓ.வி. விஜயன், எம்.டி.வி. முகுந்தன் என ஒவ்வொருவர் முன்னும், ஒரு பிச்சைக்காரனைபோல நிற்கிறேன். காத்திருந்தது போல அவர்களின் முழுக் கதவும் எனக்காக திறந்து கொள்கின்றன. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் தாகம் தணிய அவர்கள் எனக்காக தூய சுனை நீரைப் பருகத் தருகிறார்கள்.

ஆனாலும் எந்த மனிதன் இதுவரை இதிலெல்லாம் திருப்தியடைந்து அமைதியடைந்திருக்கிறான்? அது ஒரு தற்காலிகம். மீண்டும் துடித்தெழுவதற்கான ஆயத்தம். நான் எனக்குள் விழித்திருக்கிறேன்.

அசோகன் செருவில் நவீன மலையாள இலக்கியத்தில் இவனளவிற்கு மனிதர்களின் அந்தரத்திற்குள் நுழைத்தவர்ளென சிலரையே சொல்ல முடியும்.

இத்தொகுப்பின் தனப்பே இவருடையது. சிறுகதையிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது.

அசாதரணங்கள் எப்போதும் சாதரணத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன.

நாம் அதுவரை அடைகாத்த பல விழுமியங்களை பலி வாங்கிக் கொண்டு மத்தியதர வாழ்க்கை ஒரு கௌரவத்தை நமக்கு பிச்சை போடுகிறது. அதன் பொருட்டு அது நம்மிடம் மிச்ச மீதியாகியிருக்கும் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. நம் நுகர்வு பசியை அடக்க அது எந்த விதத்திலாவது நம்மை திருடனாய், லஞ்சம் வாங்குபவனாய், சக மனிதனை ஏமாற்றுபவனாய், மனிதத் துயரங்களை முகம் திருப்பி பார்க்க கூடாதவனாய் மாற்றுகிறது.

அசோகன் செருவில்லின் ஜோசப்பும் இப்படி மாட்டிக்கொண்டவன்தான். ஆனால் அவன் தன்னிடமுள்ள எதையும் இழந்துவிடாமல், மத்தியதர வர்கத்தின் மிகப் பெரிய கனவான புதுவீடு கட்டத்துணிகிறான். அது அவனை தன் இழுப்புக்கெல்லாம் இழுத்து முடித்து வெறும் சக்கையாக்கி துப்புகிறது.

புது வீட்டில் அத்திருச்சபையின் பாதிரியார் வந்து ஜெபித்து வைத்து அவர்கள் வாழ்வை துவக்கி வைக்கிறார். களைப்பில் அவன் வெறும் தரையிலேயே படுத்து தூங்கிப் போகிறான். அடுத்த நாள் காலையிலேயும் பாதிரியாரின் குரல் மீண்டும் கேட்கிறது. தூக்க கலக்கத்தில் தெளிவின்றி அவர் கேட்ட குரல் விழிப்பு வந்ததும் துல்லியமாகிறது.

அவர் அவன் மனைவி ரெஜினாவிடம் சொல்கிறார். திருச்சபையின் இன்றைய பெரும் நெருக்கடியே கல்லறையில் நமக்கான முன் பதிவு செய்வதுதான். நீங்கள் இருவரும் எனக்கு மிக வேண்டியவர்கள் என்பதால்தான் இத்தனை அக்கறையோடு உங்களிடம் சொல்கிறேன். ஒரு கல்லறையின் இடத்திற்கு முப்பதாயிரம். உங்கள் இருவருக்கும் சேர்ந்து அறுபதாயிரம். உங்கள் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து முன்பதிவு செய்தால் ஒரு சலுகை உண்டு இருவருக்கும் சேர்ந்தே இருபதாயிரம் பாதருக்காக காபி போட்டுக் கொண்டிருந்த ரெஜினா சமையலறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்துகிறாள்.

‘‘போதும் பாதர்’’ அவர்களுக்கெல்லாம் மட்டுந்தான். எதுவும் வேண்டாம். அத்தகைய ஒரு துயரமும் பதட்டமும் நிரம்பியக் குரலை அவர் அதற்குமுன் தன் ஜீவிதத்தில் கேட்டதேயில்லை. அவர் வேறந்துவிழும் மரம் போல சாய்கிறார்.

வாழ்வின் யதார்த்தம் என்பது முற்றிலும் வேறாய் இருக்கிறது. நாம் நமக்கான வீடுகளை விதவிதமாய் கட்டிக்கொண்டேயிருக்கிறோம். டைல்ஸ் பதித்து, வர்ணம் பூசி, கதவுகளை தேக்கில் இழைத்து அதை உருவாக்குகிறோம்.

அதேத் தருணத்தில் நமக்கான இன்னொரு வசிப்பிடமும் வெறும் மண் தரையில் ஆறடியில் நமக்காக உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

நம் பதட்டமும், கண்ணீரும் அதற்கு ஒரு பொருட்டேயில்லை. குழந்தைமையோ, வயோதிகமோ, கணவனோ, பிரியமான மனைவியே, எதுவும் அதன் கணக்கில் ஒன்றுதான்.

ரெஜினாவால் தன் குழந்தைகளுக்காக அப்படி முன்பதிவு செய்யப்படும் கல்லறையை எதிர் கொள்ள முடியவில்லை. உலகில் எந்த அம்மாவால்தான் அதை தாங்கிக் கொள்ள முடியும்?

இவைகள் எதுவுமின்றி மாடிப்படியில் விளையாடிக் கொண்டிருக்கும் எப்போதுமில்லாமல் ஒரு மகன் கைப்படியில் சறுக்கிக் கொண்டு கீழிறங்குகையில் ஜோசப் பதறிப் போய் கத்துகிறார்.

‘‘ஜாக்கிரதை’’

எப்போதாவது திருச்சூரில் அசோகன் செருவில்லை பார்க்க வாய்த்தால் முதல் வார்த்தையை எங்கிருந்தது ஆரம்பிப்பது?


‘‘ஜோசப்பின் குழந்தைங்க இப்ப எப்படி இருக்காங்க சார்?’’

நன்றி 
இம்மாத அம்ருதா 

Thursday, May 11, 2017

நஜீப் குட்டிப்புறம்


இந்த தகிக்கும் வெயிலில் இருந்து முழுவதுமாய் விடுபட்டு, சென்னையும் கடலூரும் நீரில் மூழ்கிவிடு்மோ என பெய்து தீர்த்த மழை நாட்களுக்குள் நாம் ஓடிப்போய் நின்றுகொள்ள வேண்டும். .அப்படியொரு பெருமழையின் நாளில்தான் முதன்முதலில் அந்தக் குரலைக் கேட்டேன்.

"பவாண்ணா நான் நஜீப் குட்டிப்புறம் .நானும் மகன் நிசாமும் செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருக்கிறோம். எங்கள் குடும்ப சேமிப்பில் இருந்த 3 லட்ச ருபாயும் என் கையில்தான் இருக்கிறது .இப்பெரு மழையில் உடமைகள் இழந்த பெயர் தெரியாத ஏதாவது ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்பணத்தில் இருந்து சிந்தாமல் சிதறாமல் ஏதாவது செய்தாக வேண்டும். அரைகுரையாய் மொழி தெரிந்த எனக்கு உடனிருந்து உதவ யாராவது சில நண்பர்கள் வேண்டும்"

இப்படிதான் நஜீப் குட்டிப்புறத்தின் ஈரமான குரல் என்னை வந்தடைந்தது. மூன்று லட்ச ருபாயின்  கடைசி பைசாவும் மழை கொண்டுபோன செங்கல்பட்டுக்கு அருகில்  உள்ள ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் கரைந்தது.


அம்மழையினூடே திருவண்ணாமலை நோக்கி வந்த ஒரு பஸ்ஸில் ஏறி பெரியார் சிலைக்கு அருகில் இறங்கி சுடச்சுட வடைகளை  வாங்கி தின்றுகொண்டே வீட்டுக்கு வந்த நஜீப் குட்டிப்புறம் என்ற அந்த எளிய மனிதனின் நீர்மையை, சுட்டெரிக்கும் இவ்வெயிலினூடே  இணைத்துக் கொள்கிறேன்.

சம்பவங்களை மட்டும் அறியத் துடிக்கும்  மனமும், அதை எழுதிவிட முடியுமா என்ற மூன்றாம்தர எண்ணமும் சேர்ந்து  என்னை உந்தித் தள்ள,
"என்னென்ன செய்தீங்க நஜீப் ?

பாதிக்கப்பட்ட மனிதர்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டீர்கள்?".
என்ற என் வார்த்தைகளை இடைமறித்து, 

"
இதையெல்லாம் சொல்ல நேரமில்லை பவாண்ணா. மழை நிற்கும் ஒரு காலத்தில் அது பற்றிப் பேசலாம். நாளைக்குக்  காலையில நாம எல்லாருமா சேர்ந்து கடலூருக்குப் புறப்படலாம். அதிகாலை 5 மணிக்கெல்லாம் என் நண்பனும்,ஹியூமன் கேர் பவுண்டேஷனின் செக்ரட்டரியுமான பரூக் 5 லட்ச ரூபாயோடு உங்கள் வீட்டுக்கு வருவார். அதற்குள் நாம் 500 வீடுகளுக்கான அரிசி, பருப்பு ,பாய், தலையணைகளை ஏற்பாடு செய்ய முடியுமா?"
அந்த நீண்ட இரவு முடிவதற்குள் அதைச் செய்து முடித்தோம் .

திருவனந்தபுரத்தில் இருந்து வந்திருந்த பரூக் பாயை அப்படியே வழிமறித்து நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டடிருந்த லாரியில் ஏற்றினோம். அந்த லாரியின் பின்புறம் எங்கள் மொத்த குடும்பமும் அசதியில் தூங்குக் கொண்டிருந்தது. கடலூர்வரை நீடித்த மழை முடிந்த அந்நாளின் பயணத்தில்தான் நஜீப் குட்டிப்புறம் என்ற அம்மனிதனை நாங்கள் அறிந்தது.



பேரிடர் காலங்களில் மட்டும் ஓடி வந்து உதவும் ஒரு சேவைமனம் கொண்ட மனிதல்ல அவன் என்பதும், நஜீபின் மொத்த வாழ்நாளுமே சாதாரண மனிதர்களுக்கானது மட்டுமே  என்பதுமறிந்து, அவன் சிவந்த கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்.

இந்திய திசையெங்கும் பரவிக் கிடக்கும் இம்மேடு பள்ளங்களை இட்டு நிரப்ப புரட்சி ஒன்றுதான் ஒரே வழி என்ற லட்சியத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவர் தான் நஜீபும்ஆனால் அது நிகழும் வரை நடக்கும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதனாக அவரால் கரை ஒதுங்கி நின்றுவிட முடியாது. இந்தக் கடும் வெயிலில் பீஹார்ஜார்கண்ட் என உள்ளடங்கிய குக்கிராமங்களில் சுற்றியலையும் நஜீப் தனக்கிருக்கும் சொந்த வீட்டையும் பொதுவானதாக மாற்றி வைத்திருக்கிறார். அல்லது அதுவே அப்படி மாறியிருக்கிறது. தன்மீது பிரியமில்லாத தன் எஜமானனுக்கு அவன் தோழமைகளைத் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு இது காட்டும் விசுவாசம்.

கோழிக்கோட்டுக்கு அருகே ஓர் ஆற்றங்கரையிலுள்ள பூட்டப்படாத கதவுகள் கொண்ட நஜீபின் அவ்வீட்டுக்குள் யாரும் எந்நேரமும் பிரவேசிக்கலாம். ஒருவேளை உங்கள் வருகை நடுநிசியெனில் அது அறிந்து அடுத்தநாள் காலை உணவு உங்கள் அறைக்கருகே வரும். அதற்கு நஜீப் அங்கிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நஜீபின் குழந்தைகள் அவருடைய தொடர்ச்சியே. வட மாநில வறுமை சூழ்ந்த உள்ளடங்கிய கிராமத்தில் தங்கி அந்த ஊருக்கு ஒரு கிணறு வெட்டியோ, இனியாகிலும் மழைநீரைத் தேக்கிக் கொள்ள ஒரு தூர்ந்த குளத்தை அந்த மனிதர்களோடு சேர்ந்து தூர்வாரியோ, மாதவிடாய் நாட்களில் தீட்டுக்கறை  படிந்த பூவழிந் எந்த சேலையும் கிடைக்காமல், மண்ணை உபயோகிக்கும் நம் சோதரிகளுக்கு நாப்கின் கொடுத்துக் கொண்டோ நஜீப் இப்போது இயங்கிக் கொண்டிருக்கக் கூடும்.

அம்மாநில மக்களின் வாழ்வை அப்பட்டமாக அப்படியே பதிவு செய்திருக்கும் அஜித் கோமாச்சியின் ஒரு புகைப்படக் கண்காட்சியின் திறத்தலுக்குப் பின் நிகழ்ந்த உரையாடல் அது. நஜீப் நிகழ்த்திய உயிர்ப்பு  மிக்க உரையை அதற்குமுன் மலையாள மொழியில் யார் பேசியும் நான் கேட்டதில்லை. மேற்பூச்சற்ற இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை என்பதை மிக எளிமையாக நான் உணர்ந்து கொண்ட தருணமது.

கோழிக்கோட்டிலிருந்து குட்டிப்புறம் வரை நீடித்த எங்கள் நள்ளிரவுப் பயணமொன்றில் நஜீப் வண்டியை நிறுத்தி, 10 கிலோ பச்சைமீன் வாங்கினார்.

"
எதற்கு நஜீப் இவ்ளோ வாங்குறீங்க?’’

சிரித்துக் கொண்டே,

"
இது நமக்கில்ல பவாண்ணா, நல்ல மீன் உணவு சாப்பிட முடியாத பல வயதானவர்களை, நோயாளிகளை நானறிவேன். நாளை காலை நாம் தூங்கி எழுவதற்குள் எங்கள் குழந்தைகள், அவர்களுக்கெல்லாம் பங்கு பிரித்து பகிர்ந்து தந்துவிடுவார்கள். ஒருவேளை  அது மிச்சமிருந்தால் நாமும் சாப்பிடலாம்.

.நான் நஜீபின் கைகளை இன்னமும் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். என்ன மனுஷன்டா இவன்! என மனதில் உயர்த்திக் கொண்டேன்.

ஒரு படப்பிடிப்பின் இடைவெளியில் நண்பர் மம்முட்டியிடம் நஜீப்பைப் பற்றி விரிவாகப் பேசினேன்.

தன் கண்கள் விரிய, அவர ஒடனே பாக்கணுமே பவா!’ என்றவரை ஏறெடுத்து,
அது அவ்வளவு சுலபமில்ல சார்

அவருடைய 'ஏன்?' பதற்றமாக வெளிப்பட்டதைப் பார்த்து நிதானமாகச் சொன்னேன்.
"இப்படியான எளிய னிதர்களின் உயரம் நம் தொடுதல்களுக்கும் அப்பாற்பட்டது சார்"
நன்றி 
அந்திமழை