Tuesday, February 20, 2018

ஆனைக்கட்டியிலிருந்து குற்றிபுறம் வரை ..



இருள், பனிமூட்டம் போலவே சாலையை மூடத்துவங்கியிருந்தது. எதிரில் தென்படும் உருவங்களைப் பார்க்க வெளிச்சம் தேவைப்பட்டது. எங்கள் எல்லோரின் கவனத்தை சட்டென குவித்த ஒரு கறுப்பும், செவுலுமான காட்டெருமை.                                                                  
பாதையின் வலப்புறமிருந்து வெளிப்பட்டு, தார் சாலையில் நின்று எதானலோ குதூகலப்பட்டு இரண்டடிக்கு எம்பி குதித்து துள்ளி தென் திசை புதரில் இறங்கியக் காட்சி ஒரு உயிர் ஓவியம்.
நல்லவேளை நாங்கள் யாரும் செல்போன்களை எடுத்து அதை படம்பிடிக்க முயலாததொரு அநாகரிக விலகல்.
எங்கள் வண்டி ஆனைக்கட்டியை நெருங்கிக் கொண்டிருந்தபோது நான் என் ஸ்நேகிதி உமாபிரேமனை அழைத்தேன்.
வண்டியை அப்படியே வலப்புறமாத்திருப்புங்க பவா, எங்கள் மனிதர் ஒருவர் கறுப்பு சட்டையோடு நிற்கிறாரா?
நின்றார்.

மேடும், பள்ளமும், மரங்களும், ஓடையும், புதர்களும், கோழிகளும், மாடுகளும் விதவிதமான மனிதர்களும் நிறைந்த அப்பிரதேசத்தில் நின்று உமாபிரேமன் எங்களை வரவேற்றார்.
இப்போது உமாபிரேமனின் சுயசரிதையை என் மனைவி ஷைலஜா ‘நிலாச்சோறு’ என்ற தலைப்பில் தமிழாக்கிக் கொண்டிருக்கிறாள். அல்லது அதில் கரைந்து கரைந்து எழமுடியாமல் தத்தளிக்கிறாள்.
உமாபிரேமன் என்ற அந்த மனுஷியின் அறை நிரம்பி வழியுமளவிற்கு அவள் வாங்கின கேடயங்களும், பதக்கங்களும், விருதுகளும் அங்கே ஒழுங்கின்றி கிடக்கின்றன. ஒரு புகைப்படத்தில் அவர் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியோடு ஒரு உணவு மேசையிலமர்ந்து உணவருந்தும் காட்சி என்னை கவனிக்க வைத்தது.

தன் சொந்த தாயாலேயே ஒன்றரை லட்சத்திற்கு தன் அம்மாவின் புருஷனுக்கே ஐந்தாம் தாரமாக விற்கப்பட்ட சிறுமி உமா என்ற சாமன்ய மனுஷி எப்படி இந்த உயரத்தைச் சென்றடைந்தாள்?
ஒருவேளை திட மனம்கொண்டு ‘நிலாச்சோறு’ வாசிக்கையில் உங்களுக்கு ஒரு சிறுவிடை கிடைக்கலாம்.
இப்போது எங்களுக்காக உமா சேச்சி வாழையிலையில் வைத்து ஆவியில் வேகவைத்த நம்மூர் கொழுக்கட்டை மாதிரி இதுவரை நாங்கள் சுவைக்காத ஒரு உணவைத் தருகிறார். ஏனோ எங்கள் யாருக்கும் அதை சாப்பிடுகிற ஆர்வம் இல்லை. நாங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தோம்.

மனிதர்களின் மனதை வாசிக்கிற அம்மனுஷி ஒரு கதவை மெல்ல திறக்கிறாள். அது ஒரு நீண்ட ஹால். இருபதுக்கும் மேற்பட்ட படுக்கைகள். எல்லாவற்றிலும் மனிதர்கள். எல்லோரும் ஆண்கள். நான் கூர்ந்துபார்த்தேன். எவருமே இயப்பானவர்கள் அல்ல. நோயும், நோயிலான விளைவுகளும். பாதி கோமா, கண்கள் நிலைகுத்தி கூரையின் மேல் நிற்கும் ஒரு மலையாளி.
அவர்கள் எல்லோரும் எங்களுக்கு வணக்கம் சொன்னார்கள்.
வாருங்கள் சகாக்களே,

உங்கள் அன்றாடங்களை உங்கள் அலுவலகத்தை, உங்கள் லௌகீகத்தை, உங்கள் ஏ.சி. அறையை, உணவு மேசை சாப்பாட்டை, உங்கள் பொருளீட்டலை அதற்காக நீங்கள் தரும் நடிப்பை, எல்லாவற்றையும் மீறி வாழ்வில் பட்ட அடியில் இனி எழுந்திருப்போமா? என எந்த நம்பிக்கையுமற்ற எங்களை ஏதோ ஒரு பற்றுதலில் ஸ்பரிசித்து வைத்திருக்கும் இம்மனுஷியின் சொல்கேட்டு வந்த என் சோதரர்களே வருக”
என்பது போல அவர்களின் பார்வைகள் எங்கள் மீது நிலைகொண்டன.
கண்கள் எத்தனை மிருதுவானவைகள்?  பார்வைகள் எத்தனை கனிவானவைகள்?
ஆனால் அப்பார்வைகளின் துளைப்பை தாங்க முடியாமல் நாங்கள் மெல்ல விலகினோம்.

உமா சேச்சி எங்களை அவதானித்தார் போலும், இடைவெளித் தராமல் திரைச் சீலையால் மூடப்பட்டிருந்த இன்னொரு படுக்கை மனிதனின் முன் எங்களை நிறுத்தினார். அவன் கண்களை உருட்டி எங்களை அளந்தான். நினைவுகள், சொற்கள், வாழ்வு எல்லாமும் கடந்த காலமாகிவிட்ட ஒரு  பீகாரி சகோதரன் அவன்.

அவன்தானே நமக்கு சொற்பக் கூலிக்கு சல்லிசாக கிடைப்பவன்! அவன்தானே நம் பெண்களின் கழுத்துச்செயினை அறுப்பவன்! அவள்தானே நம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தறுப்பவன்! அவன் மட்டுந்தானே நம் வீடு புகுந்து திருடி, மாட்டிக்கொண்டு கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பதற்கு வசதியானவன், கேட்பாராற்றவன், ஜாதியில்லாதவன், பிழைக்க வழித்தெறியாமல் இன்னொரு மாநிலந்தேடி அலையும் அகதி.
அவர்களில் ஒருத்தன்தான் அவன். பெயர் பிரதீப் உமாசேச்சியேகூட அவர் அழைப்பதற்கு ஒரு லகுவான பெயரை அவனுக்கு இட்டிருக்கலாம்.

ஒற்றை ஆளாய் அவன் ஒருவனின் பார்வையை எங்கள் எவராலும் தாங்க முடியவில்லை.
உமாசேச்சி அவன் தலையை தடவிக்கொடுத்தாள்.
பிரதீப்பே, இவர்கள் நம் சோதரர்கள்.
அவன் முகம் இன்னமும் இறுகிக்கொண்டது. வாழ்நாள் முழுக்க அவன் எதிர்கொண்ட துரோகத்தின் மிச்சம், இம்மனிதர்களிடமும் இருக்கக் கூடும் என்ற கசப்பு.

“மரித்தல் வரை ஒருவருக்கொருவர் துணையிருப்போம் நான் முந்திக்கொண்டால் இவனும் அவன் முந்தி கொண்டால் நானும்’’
இதன்பிறகும் கொஞ்சம் நேரம் நாங்கள் அந்த வளாகத்தில் சொற்களின்றி அலைந்து கொண்டிருந்தோம்.
நான் உமாசேச்சியை அணைத்துக் கொண்டேன். என்னிலும் குள்ளமான அவர்கள் என் தோள்களில் சற்று நேரம் புதைத்தெழுந்தார்
பார்த்த அந்த ஆண்கள், பார்க்க போகும் பெண்கள், பிரதீப்…
நான் பிரதீப்பை முதன்முதலில் துபாயில் பார்த்தேன் பவா, எல்லோராலும் கைவிடப்பட்ட ஒருவனாய் முழு கோமாவில் கிடந்தான். யாருக்கும் அவன் உயிர்த்தலின் மீது நம்பிக்கையில்லை, என்னைத் தவிர.
அவனை விமானத்தில் அழைத்து வந்தேன். ஒரு நள்ளிரவில் அவனை இவ்விடத்திற்கு அழைத்து வரும் வழியெங்கும் மூன்று நான்கு யானைகளை கண்டேன். பாதையின் ஒரு புறத்திலிருந்து எதற்காகவோ ஒரு யானை தும்பிக்கை தூக்கி எங்களை ஆசிர்வதித்தது… அதன்பிறகு உமாசேச்சியால் பேசமுடியவில்லை. எங்களாலும்தான்.

ஐந்தாவது கிலோமீட்டரில் “சத் தர்ஷனி”லிருந்தோம் என் நண்பர்கள் ஆனந்தும். மஞ்சுவும் அதைப் பராமரிக்கிறார்கள். அங்கிருந்து சில மைல்கள் தூரத்தில் தான் சிறுவாணி தன் உயிர்பித்தலைத் துவங்குகிறது.

சத் தர்ஷனில் அது குளிரில் தவழ்கிறது. ஒரு பெண்ணின் சில்லிடுதலைப்போல அது தன்னில் அமிழ வேண்டி மனிதர்களை நோக்கி கரம் நீட்டுகிறது.
தன்போக்கில் வளர்ந்த மரம், செடி, புதர்களுக்கிடையே ஆனந் தன் குடில்களை நிர்மானித்திருக்கிறார்.
சிவப்புத்தரை போடப்பட்ட ஒரு பெரிய தியான மண்டபம் உங்களை அமைதியாக்கி ஒரு மூலையில் உட்கார வைக்கிறது.
உன் எதிரில் அமைதியாய் ஒடுவதைப்போல ஏமாற்றும் இச்சிறு நதியைவிட,
எதிர்பக்க மரச்செறிவில் அசைவற்ற கற்பாறையைப் போல நின்றிருக்கும் ஒரு கொம்பனைவிட,
இயற்கையில் சகல அகங்காரத்தோடும் நிமிர்ந்திருக்கும் இப்பெரும் மரத்தின் நிமித்தலைவிட,
நீ ஒன்றும் பெரிய ஆளில்லை மானிடா அப்படி ஒரு பக்கமாய் உட்காரென அது நம் தோள் அழுத்தி உட்கார வைக்கிறது.
கோவையிருந்தும், ஈரோட்டிலிருந்தும், எர்ணாகுளத்திற்கும் வந்திருந்த என் வாசகர்களுக்காக நான் கதை சொல்ல வேண்டும்.
நான் என்ன கதைசொல்லும் இயந்திரமா?
சொற்களை உதடுகள் திரும்பி அனுப்புகின்றன. இடையே உமாபிரேமன் என்ற அந்த மனுஷியை உதறிவிட்டு அக்காட்டெருமையின் துள்ளலிருந்து நான் என் கதை சொல்லலைத் துவங்கி மிக அற்பமாகத் தோற்கிறேன்.
வண்ணநிலவன் என்ற என் மனதின் மிக அருகாமைத் தோழனின் எஸ்தர், நாகம், பலாப்பழம்
ம்…ஹீம்… எதுவும் எனக்கு கைகூடவில்லை. பிரதீப்பும், உமாவும், கோமாவிலிருந்து மீளும் ஆயிரம் கண்களும் என்னை அலைகழிக்கின்றன.

என் வாசகர்களை நான் ஏமாற்றித் திருப்பி அனுப்புகிறேன்.
தன் எழுபத்திஐந்து வயதில் இதற்காகவே ஈரோட்டிலிருந்து வந்திருந்த ஜீவாவை நான் ஏறெடுத்துப் பார்க்கிறேன்.

அவர் என் கையிலிருந்து எதையோ கடத்த முயல்கிறார். சொற்களால் அலைகழிக்கப்பட்ட உடல் மௌனத்தை உதறுகிறது.
தூக்கம் வராத அப்பின்னிரவு வரை எனக்கு அக்காட்டெருமையின் துள்ளலும் உமாபிரேமன் என்ற அந்த விலைபேசி விற்கப்பட்ட ஒரு சிறு பெண்ணின் பிரவாகமும் பிரதீப்பின் கண்களும் சொல்ல வலுவற்ற வண்ணநிலவன் கதைகளுக்குமாக மாறி மாறி இடம்பெயர்கிறேன். இடையே எங்கள் தங்குமிடத்தின் மையத்தில் செழித்து வளர்ந்திருந்த மூங்கில் புதர் இருட்டில் தனித்து நின்றிருந்த கொஞ்ச நேரம் இன்னும் உயிர்ப்பானது.


II

அடுத்தநாள்  அதிகாலை ஆற்றுக்குளியல். அதனூடே ஒரு அற்புதமான காலை உணவு. கயிறுக்கட்டி தொங்கவிடப்பட்ட வாழைக்குலையிலிருந்து நாங்களே பறித்து கொண்ட சுவையான சிறு பழங்கள்.
மூன்று கார்களில் ஆனைக்கட்டியிலிருந்து குட்டிபுறம் நோக்கி நாங்கள் பயணித்தோம். சிறு குளிரா, வெயிலா என வரைப்படுத்த முடியாததொரு மலைப்பயணம் அது.
“இங்கிருந்து மன்னார்காடுவரை இப்படியேதான் பவா சார், அப்புறம் தேசிய நெடுஞ்சாலை” பிரேம் பயணத்தின் முதல் வரியை இப்படி ஆரம்பிக்க,
‘தேசிய நெடுஞ்சாலை, தேசிய டோல்கேட், தேசிய கீதத்திற்கு மட்டும் எடுத்து நிற்பது எல்லாம் குமட்டுகிறது பிரேம்”
பிரேமுக்கு மெல்ல சிரிக்க மட்டுந்தான் தெரியும். 

ஆனைக்கட்டியிலிருந்து மன்னார்காடா? எனக்கு சட்டென, நாஞ்சில் நாடனின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இதே பாறைதான். குண்டும், குழியும் மேடும் பள்ளமும், கட்டஞ்சாயாவும், பழம்போளியும், பரோட்டாவும் பீஃப் கறியும், மத்திமீனும் சிவப்பரிசி சோறுமாய் நீளும்பாதை.
ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு இது எதுவும் நினைவிலில்லை. கேரள சிவப்புநிற பேருந்தும், பயணிகளின் சலசலப்பின் மீது எரிச்சலுற்று அவர்களை மலையாளக் கெட்டவார்த்தைகளில் திட்டித் தீர்க்கும் அதன் ஓட்டுநரும்தான் நாஞ்சில் நாடனின் உயிர்ப்புகள்.

எரிந்து விழும் அவன் வார்த்தைகள் பயணிகள் ஒவ்வொருவரையும் அச்சமுற வைக்கிறது. அமைதியைக் கோருகிறது. பெரும் கூச்சலோடு கிளம்பும் வண்டி சட்டென நடுரோட்டில் நிற்கிறது. இதுவரைப் பயணிகளைப் பார்த்து கத்திக் கொண்டிருந்த அந்த டிரைவர் தன் இருக்கையிலிருந்து வெளியே தலை நீட்டி யாரிடமோ,
“பெட்டெந்நு போய்க்கோ மகளே”   “பெட்டெந்நு போய்க்கோ மகளே”
இத்தனைக் கனிவானதொரு குரலும் இந்த ஓட்டுநருக்கு தெரியுமாவென பயணிகள் ஆளாளாளுக்குத் தலைத் திருப்பிப் பார்க்கிறார்கள்.

அளவுக்கு மீறி இரையுண்டு, சாலையை மெல்லக்கடக்கும் ஒரு மலைப்பாம்பு.
இத்தனை கனிவான, பொறுப்பான, பாதுகாப்பான ஒரு தகப்பன் இருக்கையில் அதற்கென்ன? இன்னும் மெல்ல நகரலாம்.
அப்பாதையெங்கும் எனக்கு அந்த பேருந்து ஓட்டுநரின் குரலேக் கேட்டுக் கொண்டிருந்தது.

எத்தனை யோசித்தும் ஆண்களுடனான பயணங்கள் வெறுமை நிறைந்தவைதான். அடையும் தூரத்தை கணக்கிடவைப்பவை. பெண்கள் தான் பயணத்தை சுவாரஸ்யமாக்குகிறார்கள். சொற்களாலும், கண்களாலும் உயிர்ப்பூட்டுகிறார்கள்.
எங்கள் பயணம் உயிர்ப்புள்ளவை.    
வழியெங்கும் தங்களுக்கான பூப்பூத்த காலம் ஒன்று இருந்ததை எல்லோருமே நினைவுபடுத்திக் கொண்டோம்.
மன்னார்காடு தேசிய நெடுஞ்சாலைக்கு முன்பே  ஓர் ஊரில் பாலக்காடு மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு மிகுந்த கொண்டாட்டத்தோடு நடந்து கொண்டிருந்தது. செம்பதாகைகளும், உற்சாகமும், பெருங்கரை வைத்த புது வேட்டிச் சட்டையில் சகாக்களின் நடமாட்டம் யாவரையும் கவனிக்க வைக்கும் கோலாகலம்.

நாங்கள் டீ குடிக்கவென பொய் சொல்லி வண்டியை நிறுத்தினோம். நான் ஆர்வ மேலிட்டால் அரங்கத்தினுள் நுழையப் போனேன். தோழர்கள் தடுத்து நிறுத்த,
“உள்ளே மாவட்டச் செயலாளரின் செயலறிக்கை வாசிக்கப்படுகிறது. இது கண்டிப்பாக உறுப்பினருக்கு மட்டும் தான் ”
நான் கட்சியின் நடைமுறைகள் அறிந்தவன் என்பதால் திரும்பி நடந்தேன்.

தோழர் பினராயி விஜயன் சற்று முன் தான் மாநாட்டை துவங்கிவைத்துவிட்டு இங்கிருந்து போனார்.
“இப்போது எங்கிருப்பார்?”
“பக்கத்து விருந்தினர் அறையில்”
நான் என் நண்பரும், கேரள சாகித்ய அகடாமியின் செயலருமான தோழர். மோகனனைத் தொலைபேசியில் அழைத்து
“உங்கள் முதல்வரைப் பார்த்துப் பேச வேண்டும்” என்றேன். மார்க்சிய எளிமையும், படைப்பாளியின் உரிமையும் முதல்வர் என்பவரை இரண்டாம்பட்சமாக்கி, எங்கள் தோழர் என்பதை முன்னிலைப்படுத்தியது.
பதிலுக்குத் தாமதமானதால் எங்கள் பயணம் பகல் இரண்டு மணிக்கு பாரதப்புழயின் கரையோர நஜீப் குட்டிபுறத்தின் வீட்டு மாமரத்தில் நிறைந்தது.

நஸ்ரின்…
நஜீபின் இளைய மகள், இருமாதங்களுக்கு முன் ஒரு மதிய உணவின்போது என்னைத் தொலைபேசியில் அழைத்து, தழிழும் மலையாளமும் கலந்ததொரு மொழியில்,
“பவா செறியச்சா, நான் நஸ்ரின்,
அப்பாவோட கடந்த பத்துவருடமாக பயணம் போற ஒரு ட்ராவலர் இருக்கார். பேரு அயாஸ்
அப்பா  அவனைப் பலமுறை வீட்டிற்குக் கூட்டிவந்திருக்கிறார். எனக்கு பல வகையிலும் அவனைப் பிடித்திருந்தது, அப்பா சொன்னார், இவன் உனக்கு நல்ல ஸ்நேகிதனுமாயும் கணவனுமாயும் இருப்பான் என நம்புகிறேன் நஷ்ரின் என்றார்.
நானும் அதை வழிமொழிகிறேன். இப்போது அவர்கள் வீட்டிலிருந்து என்னை பெண்கேட்டு வந்திருக்கிறார்கள். ஒப்புக் கொடுத்தால், அடுத்து சம்மத சாப்பாடு,
நான் என் பவா சித்தப்பாவின் அனுமதியைக் கேட்டே இப்போது உங்களை அழைத்தேன்.
நான் என் உணவு தட்டின் முன் தேம்பியழுதேன்.
இந்த உறவை சிதைப்பதற்காக ஒரு கூட்டம் தினம் தினம் மனிதத்தின் மீது கல்லெறிகிறது?
நான் என் மகளை தூரத்திலிருந்து உச்சி முகர்ந்தேன்.
இன்னும் மூன்று மணி நேரத்தில் அவளுக்குத் திருமணம்.
அது திருமணமல்ல, திருவிழா, ஒரு சமுகத்தின் எல்லா தரப்பு மனிதர்களும் கூடியிருப்பது திருவிழாதானே! எந்த ஆடம்பரமும் அல்ல. மூவாயிரத்துக்கும் அதிகமான மானுடத்திரள்.
மேடை எத்தனை அழகாய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது நஜீப்?
அய்யோ பாரதி அது எங்கள் அலங்கரிப்பல்ல. நாளைக்கு இம் மண்டபத்தில் நடக்கவிருக்கும் ஒருவரின் கல்யாணத்திற்கான அலங்கரிப்பு. நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.
மணமகளே வரவேற்பில் நின்று எல்லோரையும் வரவேற்கிறாள்.
எந்தச் சம்பிரதாயங்களுமின்றி ஆறு மணிக்கு மூவாயிரம் பேரில் அவருக்கு முக்கியமான முப்பது பேர் மேடைக்கு அழைக்கப்பட்டு அமர்த்தப்படுகிறார்கள். அந்த முப்பது பேரில் பவா சித்தப்பாவும் உண்டு தானே!
அதற்கு முன் ஆட்டிசத்தால்  சிதைவடைந்த ஒரு பெண் சக்கர நாற்காலியில் மேடையில் அமர்த்தப்பட்டு அவள் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தின் சமூகப் போராளி தோழர். தயாபாய் அதன் முதல் பிரதியை வெளியிடுகிறார்.
திருமண அரங்கம் அமைதி காக்கிறது.
நாங்கள் அது வரை சாப்பிட்டிராத உயர்ந்த அசைவ விருந்து அத்தனை பேருக்கும் பகிர்தளிக்கப்படுகிறது.
நஜீப் என்னிடம் சொல்கிறார்.

என்னைப் பொறுத்தவரை திருமணக் கூடுகை என்பது ஒரு நல்ல உணவை முன் வைத்தே. சிறுவயதில் நம்மில் பலருக்கும் கிட்டாதது. இதற்கு எவ்வளவு செலவழிக்கவும் நான் எப்போதும் சித்தமுள்ளவனாயிருப்பேன்.
தற்போது கேரளா உணவுத்துறை அமைச்சர் ஜலீல், நஜீபின் ஊர்க்காரனும், வகுப்புத் தோழனும், மார்ச்சிய சிந்தனையாளனுமானவன்.
கட்சி உறுப்பினராக இல்லாதபோதும் கேரளா இடது சாரி அரசு அவருக்கு மந்திரி சபையில் இடம் தந்து கௌரவிக்கிறது.
ஜலீல் தன் மனைவி, மகள்களோடு வந்திருந்து அந்த மூன்று மணி நேரமும்  அங்குமிங்கும் அலைந்து சக மனிதர்களின் கைப்பற்றி கொண்டிருந்தது தோழமையின் எளிய அடையாளம்.
அத்திருமண நிகழ்வுகள் நிறையும் வரை நஜீப் என் கைப்பிடித்ததை விடவில்லை என்பதை வீடியோ பதிவு செய்த நண்பன் வெயில் எனக்கு காட்டியபோது நான் சக மனித அன்பில் பேச்சற்றுப் போனேன்.
அடுத்த நாள் காலை எங்களைக் காபி நிரப்பப்பட்ட குவளைகளோடு எழுப்பியதில் ஒருவர் மணப்பெண் நஸ்ரின்.
நேற்றிவு திருமணம் முடிந்த பெண் என்பதற்கான ஒரு சிறு அடையாளமும் அவள் உடம்பில் இல்லை. பலருக்கும் அவள்தானா என்ற சந்தேகமும் கூட.
அவள் எனக்குக் காபி தருகையில், “நேற்று இரவு போட்டிருந்தது திருமணத்திற்கான புது உடை  சித்தப்பா அவ்வளவுதான், நான் இவ்வீட்டின் அதே நஜீராதான்” என்கிறாள்.
வாழ்வை எத்தனை இயல்பாகவும் எளிமையாகவும் எதிர்கொள்கிறது இக்குடும்பம்!

சில உள்ளுர் நண்பர்களின் வீடுகளுக்கு நாங்கள் அழைத்துப் போகப்பட்டோம். ஐநூறு மீட்டருக்கு  செடிகளும் பூக்களுமான ஒரு பாறை. குளிர்ச்சியை அருந்தி முடித்து நிமிர்ந்தால் ஒரு சிறு வீடு. முற்றத்தில் மங்கிக் குல்லா போட்டு நாற்பது வயதில் ஒரு மனிதன் ஈசி சேரில் சாய்ந்தமர்ந்து “Marxiam Always right” என்ற புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஓரத்தில் மடித்துவிட்டு எங்கள் ஒவ்வொருவரையும் சேர்த்து அணைத்துக் கொள்கிறார்.
எங்கள் அறிமுகம் உரையாடலாகத் தொடர்கிறது.
விடைபெற்று திரும்பும் போது நஜீப் சொல்கிறார்.
“பவாண்ணா , இவர் இன்னும் சில நாட்களே உயிரோடிருப்பார்.  கேன்சர்”
நான் சட்டென திருப்பிப் பார்க்கிறேன்
விட்டப் பக்கத்திலிருந்து மார்க்சியத்தைத் தொடர்கிறார் அவர்.
கொள்கை சார்ந்த மனிதனின் வாழ்வு மரணத்தின் சமீபத்திலும் அர்த்தப்படுகிறதுதானே!
இப்போது குட்டிப்புறத்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு கொண்டிருக்கிற ஒரு மருத்துவமனையின் முன் நிற்கிறோம்.
அதைக் கட்டியெழுப்பும் தோழர்கள் ஒவ்வொருவரும் அதன் நோக்கம், பரப்பளவு, அறைகள், வசதிகள் என அடுக்குகிறார்கள். எங்களுக்கு முன் அவ்விடத்தில் வந்து நின்று  அதன் வரைபடத்தை எங்கள்  முன் நீட்டி விளக்கம் தருகிறார், அந்த மார்க்சியம் ஆல்வேஸ் ரைட் தோழர்.
எத்தனை சமூக அக்கறையோடும், மனித பேரன்போடும் இவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடைபெறும் கை குலுக்கலின்போது நஜீப்பிடம் கேட்டேன்.
 “சரி நஜீப் மாப்பிள்ளை எங்கே?”
“திருமணம் முடிந்து அவன் நேற்றிரவே கோழிகோட்டிற்கு பஸ் ஏறிவிட்டான்”
“ஏன் நஜீப்?”
“அவனும் வீட்டிற்கு வரவா என ஆர்வத்தோடு கேட்டான்”
நான் நஜீப்பின் குறும்பான புன்னகையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“வரலாம், ஆனா நீ இக்குளிரில் வெளியில் மாமரத்தடியில்தான் படுக்க முடியும்.”
“ஏன் நஜீப்?”
“என் தமிழ்நாட்டு நண்பர்கள் பதினைந்து பேர் வந்திருக்கிறார்கள். எல்லா அறைகளையும் அவர்களுக்குத் தந்தாகிவிட்டது.”
“குளிருக்கு பயந்து பையன் கோழிக்கோட்டிற்கு பஸ் ஏறிவிட்டான் பவாண்ணா”






    


No comments:

Post a Comment