நவீன
கலை இலக்கிய முன்னெடுப்புகளில் எப்போதும் அரங்க செயல்பாடுகளுக்கு கடைசி இடமே கிடைத்திருக்கிறது.
உறங்கும்
நகரத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு எப்போதாவது ஒரு கூத்து கலைஞனின் பெருங்குரலோ,
நடிகனின் உடல்மொழியோ வெளிப்படுவதுண்டு. அது ஜீவனற்ற எல்லா நகரத்தையும் உயிர்பிக்கும்.
தமிழ்நாட்டின்
மொத்த நிலப்பரப்பையும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அரங்கங்களில் தொடர்ந்து இயங்கும் சில ஆர்வமிக்க
நாடகவியலாளர்களைத் தவிர்த்து, பொதுவான அரங்க செயல்பாட்டாளர்ளென ஒன்றிரண்டு பெயர்கள்
மட்டுமே மிஞ்சுகின்றன.
நாடகம்
மிகுந்த மனித உழைப்பை, பலநாள் நீளும் ஒத்திகையை,
அதற்கான செலவினங்களைக் கோருவது. என்.ஜி.ஓ.க்கள் அல்லாத நாடகவியலாளர்கள் அதற்கு ஈடுகொடுக்க
முடியாமல் சோர்ந்து போவதும், டி.வி, சீரியல், நிரைத்துறையென பாதையை மாற்றிக்கொள்வதும்
இதனால்தான்.
கடந்த
முப்பதாண்டுகளில் திருவண்ணாமலை நடந்த நவீன நாடக முயற்சிகள் அவ்வப்போது எழுவதும், வீழ்வதுமாகவே
காலத்தைப் பின்னகர்த்துகின்றன.
திருச்சியில்
பாதல்சர்க்கார் பயிற்சி பட்டறை முடிந்து வந்தவுடன் இங்கு ‘முனியசாமி’ யின் குரல் பல திசைகளில் எழுந்தடங்கியது.
’நிதிர்சனா’, தீட்சண்யா’ என்ற இரு நவீன நாடகக் குழுக்களின் விடா முயற்சிகள் நிலைத்தும்
உதிர்ந்தும் போனவைகள். ஆனால் எல்லாக் காலங்களிலேயும் யாரோ ஒரு பெயர் தெரியாத கூத்துக்
கலைஞன் பத்திருபது சிறுபையன்களோடு பாடலெடுத்து பாடுவதும், அடவுகட்டி ஆட கற்றுக் கொள்வதும்
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
நவீன
நாடக முயற்சிகளும் இதன் இன்னொரு திசை தொடர்ச்சிதான்.
“வம்சி
நாடக நிலம்” என்ற ஒரு அடையாளத்திற்குக் கீழ் சந்திரமோகன் ஒருங்கிணைப்பில் பத்து இளைஞர்கள்
கூடி தங்களின் இரவுகளை குரல் கொண்டும் உடல் கொண்டும் நிறைத்தார்கள். அவர்களிடமிருந்து
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘கொமாலா’ பிறந்தது. அவர்கள் தங்கள் அரங்க அசைவுகளின் மூலம்
மொத்த சமூகத்தையும் பகடிக்குள்ளாக்கினார்கள்.
“குண்டூர்
விஸ்வனின்” தற்கொலை முயற்சி மீடியா மூலம், பத்திரிக்கை மூலம், சொந்த மனைவி மக்கள் மூலம்
எப்படியெல்லாம் ஒரேநேரத்தில் பகடிக்கும் துயரத்திற்கும் உட்படுத்தப்படுகிறது என்பதை
அவர்களுக்கு கிடைத்த அரங்க பொருட்களை கொண்டு நிறைத்து பார்வையாளர்களின் மனங்களை அசைத்தார்கள்.
அந்த
நாடகத்திற்கு கிடைத்த பரவலான கவனக்குவிப்பு தங்கள் அடுத்த இலக்கை நோக்கி அவர்களை நடத்தியே
கூட்டிப் போனது.
நேற்று
18.02.2018 பாரதி கலைக்கூட நிலவொளியில், முட்களும், செடிகளும், பாறைகளும் அடர்ந்த சுத்தப்படுத்தப்படாத
நிலப்பரப்பே அவர்களின் ஆடுகளம். மூங்கில் தட்டிகளுக்கு பின்னாலிருந்து பார்வையாளர்களை
அவர்களோடு இணைத்துக்கொண்டார்கள். இடைவெளி எதுவுமில்லா நெருக்கம் அது. எந்நேரமும் பார்வையாளன்
பங்கேற்பவனாகவோ, பங்கேற்பபவன் பார்வையாளனாகவோ மாறிவிடக் கூடும். மாறிவிட வேண்டும்.
அப்படித்தான் மாறியிருந்தார்கள்.
எண்பதுகளில்
வறண்ட் தர்மபுரி மாவட்ட தண்ணீரில்லா நிலத்திலிருந்து அணி அணியாய் புறப்பட்ட இளைஞர்கள்
எல்லோருமே வாழ்விடம் நோக்கியோ தன் சொந்த வாழ்வியல் நோக்கியோ மட்டும் பயணப்பட்டுவிடவில்லை.
அதீத
கோபமுற்ற சிலர் மார்க்சிய-லெனினிய சிந்தனையாளர்களாய் தங்கள் உடலில் உரமேற்றிக் கொண்டு
கிராமங்களில் செயல்பட்டார்கள்.
என்கவுண்ட்டர்
என்ற பெயரில் அரசதிகாரம் அவர்களுக்கெதிராக
வெறியாட்டம் போட்டது. சந்தேகப்பட்ட எவரையும் அவர்கள் அடித்து துவைத்து ஊணமாக்கினார்கள்.
இறந்து போனவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக எப்போதும்
போல்ஏறியது. அரசு அதை கவனமாகக் குறைத்து காட்டியது.
தர்மபுரி
‘அப்பு’ வின் என்கவுண்டர் எழுத்தாளர் ஜெயமோகனால் ‘கைதிகள்’ என்ற சிறுகதைக்குள் அடங்கியது.
அவரே சொல்வதுபோல் அக்கதை நெருக கூடவே பயணிக்கும் ஒரு கருங்குருவியே அக்கதைக்கு உயிர்
கொடுத்துக் கொண்டேப் போகும்.
நாடகமாக்கலுக்கு
சவால் மிகுந்த இக்கதையை, சந்திரமோகன் தன் நாடகமாக்குதலுக்கு எடுத்துக்கொண்டதற்காகவே
அவர் பாராட்டுக்குரியவர். அதன் தொடர்ச்சி சாதாரண இளைஞர்களை அரங்க நடிகர்களாக பரிணமிக்க
வைப்பது. அவர்களை அதுவாகவே மாற்றுவது. நீளும் இரவுகளில் அக்காய்ந்த நிலப்பரப்பில் வைத்து
நிலைகொள்ளவிடாமல் நடிப்பின் மூலம் சிதறப்பட்டது. அவர்களை மெல்ல மெல்ல அக்கதையில் வரும்
பாத்திரங்களுக்குள் தங்களை ஒப்படைத்துவிட்டு நிகழ்த்துதலுக்குக் காத்திருக்க வைப்பது.
நேற்று
நிகழ்ந்ததும் அதுதான். புதரும் செடிகளும் நிறைந்த அத்தரையில் அவர்கள் ஒரு டெண்ட் அடித்து
தங்கியிருந்தார்கள். அவர்களை கடந்த ஒரு கட்டுவிரியனை அடித்துக்கொளுத்தி பார்வையாளர்களுக்கும்
சேர்த்து அவ்விடத்தின் தனிமையை கடத்தினார்கள்.
ஸ்டவ்
திரிக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘டீ’ யை தங்கள் வாயில் கவிழ்த்துக் கொண்டார்கள். அவர்கள்
தங்கள் போலீஸ் உடையைக் கழற்றி எங்கோயோ பத்திரப்படுத்தியிருப்பினும் உடலாலும் மனதாலும்
உரையாடல்களாலும் போலீஸ்காரர்களாகவே இருந்தார்கள்.
மைக்கில்
கசியப்போகும் ஒரு மனிதனின் மரணத்தை எதிர்நோக்கி அவர்களின் முன்னிரவு காத்திருந்தது.
இதற்கு
மேல் தாங்காது என்ற அளவிற்கு அடித்து துவைக்கப்பட்ட அப்பு ஒரு போலீஸ் வேனில் கட்டி
தொங்கவிடப்பட்ட நிலையில் கீழிறக்கப்படுகிறான்.
போலீஸ்காரனால்
அவனுக்குப் புகட்டிப்படும் ‘டீ’ எரிச்சலையும் குமட்டலையும் மட்டுமே தருகிறது.
இன்னும்
கண நேரத்தில் அவனை சுடப்போகிறார்கள். தப்பித்தலின் போது தற்காப்பிற்கு சுட்டது என்ற
பொய்க்கான தடயங்கள் இன்னொருபக்கம் அவர்களாலேயே சேகரிக்கப் படுகிறது.
அப்புவிற்கு
‘டீ’ கொடுக்கும்போது அவன் முகத்தை அருகிலிருந்து பார்க்கும் ஒரு போலீஸ்காரன் இன்னும்
அதிர்கிறான் தன் மகன் வயதில், தன் மகன் உருவத்தில் ரணரணமாய் அடிபட்டு கிடக்கும் இச்சிறு பையனா தீவிரவாதி!
அதிகபட்சம்
தர்மபுரியில் ஏதோவொரு அரசுக்கல்லூரியில் செகண்ட் இயர் பி.ஏ வரலாறு படிக்கும் மாணவனைப்
போல் இருக்கிறான் ! அப்பு.
கசிதலுக்கு
இடமில்லாத பாலைவனம் காக்கிகளின் உலகமென இக்கரையிலும்
சொல்லப்படுகிறது.
ஏற்கனவே
வெட்டி முடிக்கப்பட்டிருந்த பன்னிரண்டடி குழிக்கெதிரே அப்பு நிறுத்தப்பட்டிருக்கிறான்.
அவன் தளர்ந்து விழுமுன்பு, ஒரு போலீஸ்காரன் கைகளில் திணிக்கப்பட துப்பாக்கியால் சுட்டுவிட
வேண்டும்.
எப்படியும்
அப்போலீஸ்காரனால் சுட்டுவிட முடியாது என்ற எண்ணம் துளிப்பதற்குள் அவன் மடமடவென சுட்டுத்தீர்க்கிறான்.
அது பயிற்றுவிப்பின் விசுவாசம்.
அதிகார
ஆசுவாசம் புகையெழுந்து அடங்குகிறது அல்லது அடுத்த வேட்டைக்கு தயாராகிறது.
‘டீ’
ஊட்டும்போது அப்பு அப்போலீஸ்காரனிடம் ஒரே ஒரு வார்த்தை பேசினானே அது என்ன?
எல்லோர்
கவனமும் அவ்வார்த்தையின் மீதே குவிந்திருக்கிறது.
அவன்
என்ன சொன்னான் பெருமாளு?
இக்கதையின்
ஜீவன் எந்த இடத்திலும் சிதைந்துவிடாமல் மிகுந்த கவனத்தோடு காட்சிப்படுத்தியிருந்தார்கள்
சந்திரமோகன் குழுவினர்.
நாடகம்
நிகழ்த்தப்பட்ட அந்த அகாலஇரவும், தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட விளக்கொளியும்,
நடிகர்களின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பும் பார்வையாளார்
என்ற வகையை துடைத்தெடுத்தது.
‘அப்பு’வாக
நடித்த ராகவ் என்ற அசல் கலைஞனின் உடல்மொழி அசாத்தியம். ஒரு வரியும் பேசாத அப்பாத்திரத்தின்
உக்கிரம் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரையும் தனித்தனியே அசைத்துப் பார்த்தது.
மற்ற
எல்லோருமே கவனமின்றி கவனப்படுத்தப் பட்டிருந்தார்கள்.
நாடகத்தின்
கையாளப்பட்ட மொழி கன்யாகுமரி மாவட்ட மொழி அவர்கள் மாறுதலில் வந்த தென் தமிழகத்து காவலர்கள்
என்ற போதிலும் வடாற்காடு மாவட்ட மொழிக்கு அவர்களை நகர்த்தியிருக்கலாம். தர்மபுரி மாவட்ட
வறண்ட காட்டிற்கு குமரி மாவட்ட மீனவன் ஒருவன் வழிதவறி வந்துவிட்ட மாதிரியான உரையாடலை
மாற்றி இம்மாவட்ட மொழியில் நாடகம் நிகழ்ந்தால் இன்னும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
அரங்கத்தில்
பயன்படுத்தினப் பொருட்களில் ஃபைபர் நாற்காலி, வண்ண டெண்ட் இவைகளின் தேர்ந்தெடுப்பு
இன்னும் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். போலீஸ் டெண்ட் இருபதடி தூரத்திலிருந்து
பார்த்தாலும் பாறை என்றே வெளிப்படும் என்ற எழுத்தாளனின் வார்த்தை, அரங்க பொருளாக பரிணமித்திருக்க
வேண்டும்.
அதிகாரமையத்திட்டமிட்டு
நடத்தபடும் மீறல்களை அதிகாரிகள் தங்கள் மீது
பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதிலும் போலீஸ் அதிகாரிகள் இன்னும் கூர்மையான
கவனத்திலிருப்பார்கள். எதுவுமே கைக்கூடாத தருணமே அவனே துப்பாக்கியைக் கையாளுவது.
இப்பிரதியில்
இதை ஜெயமோகன் மிகுந்த கவனத்தோடு கையாண்டிருப்பார்.
எழுத்தானை
அரங்க செயல்பாட்டாளனோ, திரைக்கலைஞனோ அப்படியே பிரதியெடுக்க வேண்டியதில்லை என்ற தளர்வு
அவன் எழுதின எல்லாவற்றிக்கும் பொருந்தாது.
போலீஸ்
அதிகாரி தனக்கு கீழே வேலைசெய்யும் ஒரு போலீஸ்காரனை வைத்தே அவனை சுடச் சொல்வான். அது
ஒரு வாக்கியம் அல்ல. வரலாறு நெடுக கிடைத்ததிலிருந்து பெற்ற அனுபவம். காட்சிப்படுத்தலில்
இது தவறவிடப்பட்டுள்ளது.
எல்லாவற்றிலும்
முதன்மையாக இந்நாடகமாற்றலுக்கு ‘கைதி’ என பெயரிட்டிருக்க கூடாது ’கைதிகள்’ தான் சரியான புரிதல்.
“அப்பு”
அல்ல அக்கைதி, அப்போலீஸ்காரர்களே கைதிகள். அதுவே கதையின் குவிமையம்.
எந்த
பெரும் மனிதமுயற்சிக்கும், உழைப்பிற்கும் முன் இச்சிறு தவறுகள் நிகழவேச் செய்யும்.
அடுத்தடுத்த நிகழ்த்தல்களின் போது இவை மெல்ல
அழியும் அல்லது வேறொன்றாக முகிழும். Red Elephant Theater
& 4Bee artists நாடகக்
குழு இவைகளை கலைஞர்களுக்குக் கற்றுத்தரும். கலைஞனின் விடுபடுதல்கள் ஒருபோதும் கவனக்குறைவல்ல,
உச்சத்தை நோக்கிய பயணத்தில் சிறு சறுக்கல், அவ்வளவே.
நாடகம்
முடிந்து எழும் ஒரு பார்வையாளனுக்கு இவைகள் நினைவில் இருக்கப்போவதில்லை. அவன் மனிதல்
எழும் ஆயிரமாயிரம் கேள்விகள் பாம்பின் நெளிதல்கள் போலவும், கொத்தல்கள் போலவும் அவனை
முற்றிலுமாக சிதைக்கும்
‘கைதி’
என்னைஅப்படித்தான் செய்தது.
No comments:
Post a Comment