Monday, October 14, 2019

மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்









1.        வணக்கம் பவா.  நீங்கள் எழுதிய இரண்டு சிறுகதை தொகுப்புகளை வாசித்த அனுபவத்தில் உங்கள் இளமைப் பருவம் குறித்து சில சித்திரங்கள் மனதில் வரைந்து கொள்ள முடிந்தது . உங்கள் மனதில் இன்னும் பசுமையாக இருக்கும் அந்த இளமை பருவ நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

என் பால்யம் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றுதான். அப்பா செகண்டரி கிரேடு வாத்தியார். திருவண்ணாமலைக்கருகில் ஒரு பழங்குடி உண்டுஉறைவிடப்பள்ளியின் தலமையாசிரியராகவும், விடுதிக்காப்பாளராகவும் இருந்தார். வாத்தியார் பையன் என்ற விஷேஷ சலுகையில் அப்பழங்குடி மக்களோடு இரண்டற கலந்துவிட்டிருந்தேன். அவர்களோடு சேர்ந்து எலிப்பிடிக்கப்போவது, நண்டுவலைகளில் கையைவிட்டு தண்ணிப் பாம்புகளை இழுத்துவருவது, நல்ல பாம்புகளை லாவகமாக பிடிப்பது, ஓடைகளில் நீர் இறைத்து அயிரை மீன்களை அள்ளுவது, இருட்டும் வரை அப்பழங்குடி பெண்களோடு கண்ணாமூச்சி ஆடுவது என இன்றும் நினைவில் இனிக்கும் பால்யம் எனக்கு வாய்த்தது. இந்நினைவுகளே என்ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

அப்போது மிக நெருக்கத்தில் சுவாசித்த ராஜாம்பாவின் மேலெழுந்து வந்த வாசனையை இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும் உணரமுடிகிறது. அதை உணர முடியும் நாள்வரை அந்நாட்களைப் பற்றி எழுதவும் முடியும்தானே?

2.  உங்கள் சிறுகதைகளில் வரும் அப்பாக்களில் ஒரு கதையில் தன்னை உருக்கி மகனை வளர்க்கிறார். மற்றொரு கதையில் ரொம்ப கண்டிப்பான  அப்பாவாக இருக்கிறார். உங்கள் அப்பா எப்படி.? அப்பா என்றவுடன் உங்கள் நினைவிலிருக்கும் சம்பவங்கள் சிலவற்றை கூறமுடியுமா?

அப்பாஎல்லா மகன்களுக்கும்போலவே எனக்கும் எல்லாவுமாக இருந்திருக்கிறார்.  நான் எப்போதும் அவர் இனிஷியலைப் பயன்படுத்துவதில்லை  என்பதறிந்து  உன்பெயருக்கு  முன்னால் ஏன் இனிஷியல் போடுவதில்லை? என வாசலில் நின்றுகேட்ட அந்த முன் இரவு இப்போதும் நினைவில் இருக்கிறது.

இல்லப்பா, உங்களுடைய நிழலில் நான் ஒதுங்கிவிடக்கூடாது. நான் தனித்து நிற்கவேண்டும், என அந்நிமிடத்தை அப்பாவிடமிருந்து கடந்தேன்.  ஆனால் சொந்த ஊரில் ஒரு வாடகை சைக்கிள் கடையில் என் சொந்தப்பெயரை நம்பி வாடகை சைக்கிள் தர மறுத்தான். அப்பாவின் பெயரை சொன்னப்பின்பே சைக்கிள் கிடைத்தது. அப்பாவின் பெயர் என்பது வெறும் பெயரல்ல, என்பதை அப்போது உணர்ந்தேன்.

அப்பாவைப்பற்றி பிரபஞ்சனின்மகாநதிபோல  நானும் ஒரு நாவல் எழுதியிருக்கவேண்டும். ஆனால் என் எழுத்து சோம்பலால் தவறிவிட்ட எத்தனையோவில் இதுவும் ஒன்று. தனித்தனியே சிறுகதைகளாக,  கட்டுரைகளாக, என் உரைகளில் என அப்பாவின் பெயரை சொல்லிப்பார்த்துக்கொள்கிறேன். இனிஷியலை நிராகரித்த என்னைத்தான் அவர், அவர்பெயரையும், நினைவுகளையும் தினம் தினம் உச்சரிக்க வைக்கிறார் என தோன்றும்.

சொந்த ஊரில், கோவில் சாமிசிலைகளுக்கு மத்தியில் அப்பாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு சமூக வாழ்வை மேற்கொண்டவர் அவர். அவர் என்னைத் இதுரத்தி, துரத்தி அடித்து அவமானப்படுத்திய பொழுதுகளை எல்லாம் இப்போது ஆசிர்வதிக்கப் பட்டவைகளாகவே நினைக்கிறேன். அவர் பெட்டியைத்தூக்கி தெருவில்வீசி சண்டை போட்ட நாட்களை அவரும் மறந்து என்னை மன்னித்தருளி இருக்கக்கூடும்.

என் எல்லா படைப்புகளிலும் எப்போதும் அவரே நிறைந்து நிற்பதை கண்டுபிடித்தேன். அவரைப்பற்றி கொஞ்சமாகத்தான் எழுத முடிந்தது இன்னொருமகாநதியை  என் அறுபது வயதில் கூட ஆரம்பிக்கலாம் தானே? அனுபவம் முயங்கிஎழுது என்ற ஒரு சொல் வேண்டி காத்திருக்கிறேன்.

2.   கோழி சிறுகதையில் ஒரு அம்மா வருகிறார் . அந்த சிறுகதையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போதும் கோழி கறி வாசமும் அம்மாவின் அரவணைப்பும் மனதில் வந்து போகிறது.. உங்கள் அம்மா பற்றி சில நினைவுகள் பவா?

என் நிலம்  தொகுப்பில்அம்மா  என்றொரு கட்டுரை  பிரசுரமாகியிருக்கிறது.  அது அம்மாவின் கொஞ்சம் தான். அல்லது அம்மா எனக்காக தன் பேரண்பிலும், பெருவாழ்விலுமிருந்து தூக்கிப் போட்ட ஒருதுளி பிச்சை. அம்மாவின் கைகளில் எப்போதும் ஒரு நீருற்று இருந்தது. அது அவள் சாகிற வரை சுரந்து கொண்டேயிருந்தது.  சொந்தஊரிலும், வாழ்ந்தஊரிலும் பல குடும்பங்களில் அக்கை ஊற்றின் நீரையே இன்னும் பருகுகிறார்கள்.



தனம் புள்ளையா நீ, ஆக்கி, ஆக்கி ஊருக்கே போட்ட மனுஷிப்பா அது எனும் சொல்லை எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கேட்டு விடுகிறேன்.  துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி இவைகள் நீக்கப்பட்ட மனுஷியாக அவள் வாழ்ந்திருக்கிறாள். அம்மாவின் நிழல் படிந்திருக்கும் நிலத்தில்தான் நானும் இளைப்பாருகிறேன். அம்மா மன்னித்த மனிதர்களின் வாரிசுகளோடு தோழமைகொள்கிறேன். அம்மா சுவீகாரம் எடுத்தும், எடுக்காமலும வளர்த்த ஆண்களும் பெண்களுமே என் அண்ணன் தங்கைகள், அவள் எனக்காக கிழிந்தபாயில் படுத்துக்கொண்டே பறக்கும் கம்பளங்களை பற்றிய கதைகளை சொன்னவள். அவள் விட்டுப்போன மிச்சம்தான் நான் இப்போது சொல்கிற கதைகள்.

3.  சக எழுத்தாளராக, மனைவி மற்றும் தோழியாக ஷைலஜா  உங்கள் வாழ்வில் பெரிய பலம் என்று நினைக்கிறேன். சக எழுத்தாளராக ஷைலஜா  எழுத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நாலாயிரம் மக்கள் கூடியிருந்த ஒரு நிகழ்வில்தான் ஷைலஜா  என்ற பெயரை நான் எனக்குள் பதித்துக்கொண்டேன். அதற்கும் பிறகான  நாட்களில் நிகழ்ந்த எங்கள் உரையாடல்கள் வெறும் இலக்கியம் சார்ந்தவைகள் மட்டுமல்ல என்பதை இருவருமே உள்ளுக்குள் உணர்ந்திருந்தோம்.  அப்போதுதான் பறித்த ரோஜாப்பூக்களை கையிலேந்தி, இருப்பதைந்து வயதில்  ஒரு இளைஞன் தெரு முனையில்  காத்துக்கிடப்பது இலக்கிய உரையாடலை மட்டும் எதிர்பார்த்து இல்லைதானே?

நாங்கள் இருவரும் எழுதிய கடிதங்களுக்கு உதவியாக கல்யாண்ஜியை காலப்பிரியாவை,  கலீப்கிப்ரானை எங்கள் கூடவே வைத்துக்கொண்டோம். ஒரே நாளில் ஐந்து கடிதங்களைக் கூட பறிமாறிக்கொண்டிருக்கிறோம்.  எங்கள் காதல் ஜாதி, மதம், இனம் மொழி மாநிலம் கடந்தது.  இருவீட்டிலும் பெரிய எதிர்ப்பு என்று ஒன்றும் இல்லை. இப்போது யோசித்தால் எளிய மனிதர்களின் வாழ்வில் மூன்று வேளை உணவு, வசிப்பிடம், நல்ல உடை, இவைகளுக்கு அப்புறமே இந்த ஜாதி மதம் என புரிகிறது.

மாபெரும் மக்கள் திரளில் எங்கள் திருமணம் ஒரு ஞாயிறு மாலையில் நிகழ்ந்தது.  அம்மா எனக்காக ஒவ்வொரு வருடமும்  சேமித்து வைத்திருந்து பயன்படுத்தாமல் போன சொந்தநிலத்துஅரிசி, கத்திரிக்காய்,  தக்காளி எல்லாம் அந்தவருடம், எங்கள் திருமணத்திற்கு பயன்பட்டது.

திருமணம் முடிந்த அடுத்தநாளே, ஒரு கலைக்குழுவிற்கு பத்து நாட்களும் மூன்று நாட்களும் சமைத்து போட வேண்டும்.

என்ற என் வேண்டுகோளை அவள் ஒரு புன்னகையால் எதிர்கொண்டாள். இன்றுவரை அந்த வேண்டுதல்களும், புன்னகையும் அப்படியேதான் தொடர்கிறது. அல்லது வேண்டுகோள்கள்  அவளிடமே நேரடியாய் செல்கிறது அவளே அதை தனி  ஆளாக எதிர்கொள்கிறாள்.

திருமணத்திற்குப் பிறகான ஒரு வாரத்தில், ஜே.ஜே.சில  குறிப்புகளில்  வரும் ஏலிக்குட்டி என்ற பெண்ணைப்போல, இருநூறுப்பக்க நோட்புக்கில்  அவள் அதுவரை எழுதியிருந்த கதைகளை கொண்டு வந்து என்னிடம் வாசிக்கத்தந்தாள். என் கண் விரிதலுக்காக அவள் காத்திருந்திருக்கலாம்.

ஷைலஜா  மீது காதல் மேலோங்கி இருந்த காலம் அது.

அந்த எழுத்துக்களின் முதிரா தன்மையும், பழகிய வழித்தடமும்  பத்து பக்கங்களுக்கு மேல் என்னை வாசிக்கவிடவில்லை. அவளிடமே அதைத் திருப்பித்தந்து, ‘இதைமொத்தமாக கிழித்துப் போட்டுவிட்டு புதிதாக வாசிக்க ஆரம்பி என்று சொன்னேன். அதன்பிறகான நாட்களில் கவனித்தேன்,  அவள் கைகளில் அம்பையும், பிரபஞ்சனும், ஜானகிராமனும் இருந்ததை.  அவள் வாசிப்பின் முற்றலை மெல்ல அவதானித்தேன். நெல்கதிர்கள் பாலேறி முற்றி பொன்னிறத்திற்கு  மாறுமில்லையா? அப்படி!

இப்போது எழுதத் தோன்றுமே ஏன் இன்னும் எழுதாமல் இருக்கிறாள்? என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.  அப்போதுதான்   கேரளாவின்  புகழ்பெற்ற கவிஞன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நாங்கள் நடத்திய முற்றம் இலக்கிய நிகழ்விற்கு பங்கேற்க திருவண்ணாமலை வந்திருந்தார்.



நிகழ்வு முடிந்து எங்கள் வீட்டில் அன்றிரவு தங்கினார்  அடுத்த நாள் காலை காபிதம்ளரோடு அவரின் புகழ்பெற்றசிதம்பரஸ்மர்னா என்ற அனுபவ பகிர்வுகள் கொண்ட மலையாளப்புத்தகத்தோடு   எங்கள் வீட்டு  ஹாலில்  உட்கார்ந்து  முதல் பாகத்தை தன் கணீர் குரலால்  படிக்க ஆரம்பித்தார். இன்னும் அக்குரலின்  வலிமை குறையவேயில்லை. அக்குரல் தந்த உத்வேகத்தில்தான் ஷைலஜா  தன் முதல் மொழியெர்ப்பைத்துவங்கினாள்.  அது ஒரு காட்டாற்று சூழலைப்போல  அவளை இழுத்துப்போனது. இதுவரை 15 மொழிபெயர்ப்புநுல்களும், தொகுப்புநூல்களும் வந்துள்ளது. அவளுக்கென்று ஒரு பிரத்தேயகமான மொழி கைவந்திருக்கிறது. அது நூற்றுக்கணக்கான புது வாசகர்களை அவளுக்கு தினம், தினம் அறிமுகப்படுத்துகிறது. மலையாளத்தின் லெஜன்ட்ஸ் என்.எஸ்.மாதவன். எம்.டி.வி, கே.ஆர்.மீரா, இப்போது எம். முகுந்தன் என பலரையும் அவள் தமிழுக்கு தொடர்ந்து கொண்டுவருகிறாள். இப்போதய இலக்கிய செயல்பாடுகளில் என்னைவிடவும் ஷைலஜாவே பெரும் பங்காற்றுகிறாள்.

மகனும், மகளும்கூட எங்களின் தொடர்ச்சியாகவாசிப்பதும், எழுதுவதும், கலைசெயல்பாடுகளில் ஈடுபடுவதும் பெரும் சந்தோஷத்தைத்தருகிறது.
நல்ல வேலையாக  எங்கள் வீட்டிலிருநது ஒரு டாக்டரோ, இன்ஜினியரோ உருவாகவில்லை. எங்கள் வீட்டிலிருந்து ஒரு புதுமைபித்தனோ, அம்பையோ உருவானால் அதுபோதும் எங்களுக்கு.

5.  எல்லா படைப்பாளிகளும் முதலில் நல்ல வாசகராக இருந்திருப்பார்கள். அந்த வகையில் உங்கள் வாசிப்பின் தொடக்கம் எது?  அது எந்த காலத்தில் தீவிர இலக்கிய வாசிப்புக்கு மாறியது?  இன்றைய நிலையில் உங்கள் வாசிப்பு எத்தகையதாக இருக்கிறது?

நான் ஒரு நல்ல வாசகனாக என் வாசிப்பை துவங்கினேனா  என பகுக்கத் தெரியவில்லை.  ஜெயகாந்தன் சொல்லுவார்,  ஒரு நல்ல வாசகன் என்பவன் சங்கீதம் கேட்பது மாதிரி வாசிக்க வேண்டும் என்று எனக்கு சங்கீதம் கூட கேட்கத் தெரியாது. நான் என் வாசிப்பை ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் என்ற எனக்கு எப்போதும் பிடித்தமான ஜெயகாந்தனிலிருந்தே ஆரம்பித்தேன்.

அதிஷ்டவசமாக ராஜேஷ்குமார், பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்  அப்புறம் சுஜாதா என்ற வரிசையிலிருந்து நான் தப்பிவிட்டேன்.  சிலர் அதை துரதிஷ்டம், என்றும் சொல்லலாம். அதிஷ்டமோ, துரதிஷ்டமோ எனக்கு இவர்களை வாசிக்க வாய்க்கவில்லை.

நான் ஜே.கே,  புதுமைப்பித்தன், கு.பா.ரா அழகிரிசாமி ஜி.நாகராஜன் பிரபஞ்சன், பூமணி, வண்ணதாசன், கந்தர்வன், ஜெயந்தன், வண்ணநிலவன், அம்பை சுந்தரராமசாமி  என்று என் வீட்டு வாசலை தெற்குப்பக்கமாக திருப்பி வைத்துக் கொண்டேன்.

நான் பத்தாவது முடித்த கோடை விடுமுறையில்  எழுத்தாளனாகிவிடுவது என உள்ளுக்குள் தீர்மானித்தேன். முதலில் ஜே.கே.வை தான் வாசித்தேன்.  அதை முடிப்பதற்குள், அவ்வயதிற்கே உரிய சிறுபிள்ளைத்தனத்தோடு என் முதல் நாவலை எழுத தொடங்கினேன். எழுதி முடித்த ஈரம் காய்வதற்குள் அது பிரசுரமானது. நீங்கள் அதை யாருக்கும் சொல்லமாட்டேன்  என என் தலையில் அடித்து சத்தியம் செய்தால். அந்நாவலின் பெயரை உங்களுக்கு மட்டும் இப்போது சொல்கிறேன். 

அதன் பெயர்உறவுகள் பேசுகின்றன  உங்கள் உறுதியான முகபாவணையை வைத்து அந்நாவலின் என்னிடம் உள்ள ஒரே ஒரு பிரிதியையும் கூட இப்போது உங்களுக்கும் மட்டும் காண்பிக்கிறேன்.  
இத்தனை இரகசியமாய் மறைத்து வைத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு படுமொக்கையான நாவல் அது.

என் ஆரம்பமே தீவிர இலக்கிய வாசிப்பிலிருந்துதான் தொடங்கியது   நல்லவேளையாக இதில் எனக்கு ராஜேஷ்குமாரிலிருந்து ராஜேந்திர சோழன் என்ற வரிசை வாய்க்கவில்லை. ராஜேந்திரசோழனிலிருந்து என்று மட்டும் வைத்துக்கொள்ளலாம்.  

இப்போது வாசிப்பின் நேரம் வெகுவாக குறைந்திருக்கிறது. ஓயாத அலைச்சல், கதை சொல்லல்,  சில தவிர்க்க முடியாத இலக்கிய கூட்டங்கள், மறுப்பு சொல்ல முடியாத திரைப்படபங்கேற்றல்கள்,  தொடர்ந்து வரும் நண்பர்கள், அவர்களுடனான உரையாடல், விவசாய வேலைகள், தினம் நிறையும் இனப்க்ஸ்  செய்திகளுக்கு அனுப்பும் பதிலகள்,  நல்ல சாப்பாட்டுக்கான மெனக்கிடல்கள், அலுவலகஅரசியல், தொலபேசி அழைப்புகளுக்கான விரிவான,  அல்லது குறைவான உரையாடல்கள், அந்தந்த (இதில் ஆண், பெண் முன்னுரிமைகள் உண்டு)

ஒவ்வொரு மாதத்து EMI க்கான இரைதேடல், இத்தனைக்கும் இடையே வாசிப்பு இன்னும் இருக்கிறதே என்பதே சந்தோஷம்தான்.  இசை, சா. துரை, நரன் என  கவிதைகளை வாசிக்கிறேன்.

ஜே.பி. சாணக்கியா, திருசெந்தாழை இவர்களின்  நிகழ்கால இல்லாமை பல நேரம் என் வாசிப்பை வெறுமைப்படுத்துகிறது.

சமீபத்தில் ஜா. தீபாவின் குருபீடம் என்ற சிறுகதை வாசிப்பு இவர்களின் இல்லாமையை நிரப்பியதாக உணர்ந்தேன்.

தி. ஜானகிராமனும், கு.பா.ராவும்  ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், இமயமும்  என்னை திரும்ப திரும்ப  வாசிக்க வைக்கிறார்கள். 

தமிழ் நிலத்திலிருந்து  எழுதப்படும் கதைகள் என்னை ஸ்பரிசிக்கிற  மாதிரி  எவ்வளவு  முக்கியமான மொழிபெயர்ப்பு கதைகளும் கூட என்னை  வசீகரிக்கவில்லை. இதில் விதிவிலக்குகளும் உண்டு பால்சக்காரியா, என்.எஸ்.மாதவன், எம்.டி.வி. கே.ஆர். மீரா

சந்தோஷ்ஏச்சிக்கானம்,  அசோகன்செருவில் என மலையாளப் படைப்பாளிகள் என் சொந்த நிலத்தின் எழுத்தாளர்களைப் போலவே என்னுள்ளே சுலபமாக நுழைகிறார்கள்.

என் கல்லூரி காலங்களில்  புரிந்தும் புரியாததுமாக வாசித்த டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி, செகாவை இப்போது மீள் வாசிப்புக்கு உட்படுத்துகிறேன். இதை செய்ய சொல்லி என்னை மறைமுகமாய் உந்துவது என் மகன்,  மகள், அவர்களின் நண்பர்கள், அவர்களிடையே நிகழும் ஓயாத  உரையாடல்கள்தான், அவர்களின் மேசையிலிருந்தே ஹாருகிமுரகாமியை எடுத்து வாசிக்கிறேன். இது என் வாசிப்பை இன்னும் மேலெழும்ப செய்யுமென  நம்புகிறேன்.

6.  இலக்கியத்தில்உங்களின் ஆசான்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசை . முக்கியமாக  பவா மனதிற்கு நெருக்கமான படைப்புகள்  மற்றும் படைப்பாளிகள் குறித்தும் அறிய ஆவல்.

இந்த கேள்விக்குப் பின்தான் என் ஆசான் யார் என யோசிக்கிறேன். அப்படி எனக்கென்று தனித்து யாருமில்லை. அல்லது பல பெயர்களை என்னால் சொல்லமுடியும்.  நான் சுயம்பு  அல்ல. நான் உருவானதில்  பலருக்கும் பங்கிருக்கிறது. ஒவ்வொரு காலமாக அதை பகுக்ககூட முடியாது ஒரு காலத்தின் மெல்லிய தேய்தலில் இன்னொன்று புதிதாய் முளைத்தது.

ஒவ்வொரு காலத்திலும் எது இலக்கியம்? எது இலக்கியம் இல்லை என்பதை சரியாக  கனித்தேன். நான் முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தில் தீவிரமாக இயங்கிய  போதுகூட அதன் ஸ்தாபர்களில்  ஒருவரான கே. முத்தையாவின் படைப்புகளில்  ஒரு வரியைக் கூட வாசிதத்தில்லை.  கு. சின்னப்பாரதி, டி. செல்வராஜ் மேலாண்மை பொன்னுச்சாமி போன்றவர்களை வாசித்து அவர்களின் தட்டையான மொழிக்காக  மனதளவில் அதிலிருந்து விலகியிருக்கிறேன்.  எனக்கு அது அசல் எழுத்தில்லை என சுலபமாக புரிந்தது. யாரோ ஒரு புது வாசகன் அதில லயித்துப்போனால் போகட்டும் அதனால் எனக்கென்ன? ஒருநாள் அசல் எழுத்தை அவனும் என்னைப் போலவே கண்டடைய  முடியும் அல்லது அவன் வாழ்வில் இறுதிவரை கண்ட்டைய முடியாமலே கூட போய்விடலாம்.

தமுஎசவில் இயங்கிய காலத்திலும் கூட இயக்கக் கோடுகளைத்தாண்டி வண்ணதாசன், வண்ணநிலவன்,
பா.ஜெயப்பிரகாசம்,  ராஜேந்திரசோழன். கந்தர்வன், . தமிழ்செல்வன், உதயசங்கர்,  லட்சுமணப்பெருமாள் போன்றவர்களின் எழுத்துக்கள் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. இயக்கத்தில் சில தலைவர்கள் பிடித்திருந்தார்கள் அவர்கள் எழுத்து அப்படி அல்ல
அதிஷ்டவசமாக என் ஆசிரியர்கள்  என் வகுப்பறைகளில் எனக்கு  எப்போதுமே கிடைத்ததில்லை. அவர்களில் பலர் வாத்தியார்  வேலைகளில் இருந்து பணம் சேர்த்தார்கள், மாணவர்களை வஞ்சித்தார்கள்சம்பாதித்த பணத்தை வட்டிக்கு விட்டார்கள்ட்யூஷன் சுற்றுலா என்ற பெயரில் மாணவர்களை சுரண்டினார்கள். எங்களோடு படித்த பெண் மாணவிகைளை பாலியல் சுரண்டலுக்கு  ஆளாக்கினார்கள்இவைகளை கூடவே இருந்து பார்த்த நான் அவைகளை சுலபமாக மறைத்துவிட்டு வெளியில்வந்து என் ஆசிரியர்கள் உன்னதமானவர்கள் என என்னால் எப்போதும் சொல்லமுடியவில்லை. என் பிடி என்ற கதை அப்போது ஏற்பட்ட வடுவை இப்போது தடவிப்பார்த்தபோது, எழுதப்பட்டதுதான்.



என் ஆசிரியர்கள்  எப்போதும் வகுப்பரைகளுக்கு வெளியே இருந்தார்கள். அதில் சிலர் எழுத்தாளர்களாகவும், சிலர் இயக்கங்ளிலும் இருக்கிறார்கள்.  எழுத்துக்கும், வாழ்க்கைமென சில பேரை மனதில்  இருந்திக் கொண்டேன். இன்றுவரை அவர்களை மனதால் பின் தொடர்கிறேன். அவர்களுக்கு அது தெரியாது. ஏன் தெரிய வேண்டும்?  ஒருவரையும் ஒரு போதும் தொழுததில்லை.  தொழுதல் என்பது மனிதர்களுக்கும்  இல்லை, கடவுளுக்கும்  இல்லை.  கைகுலுக்கள் போதும் நம் பிரியத்தையும், பின் தொடர்தலையும் அவர்களுக்கடத்த.

ஒரு எழுத்தாளனாய் பொதுவெளிகளிலும், மேடைகளிலும் கம்பீரமாய் அலைந்துத் திரிய ஜெயகாந்தனைப் போல  இருக்க வேண்டும் என்பதை என் பதினெட்டாவது வயதில் மனதில் கொண்டேன்.

வறுமை பிடுங்கித் தின்னாலும், காம்பரமைஸ் ஆகிவிடக்கூடாது என்பதை பிரபஞ்சன் தன் இடைவிடாத எழுத்தின் மூலமும் நிறுவன மயமாதலின் எதிர்ப்பின் மூலமாகவும் எனக்கு மறைமுகமாய் சொல்லிக் கொண்டிருந்தார். எழுத்தை இன்றும் பூடகமாய், இன்னும் இறுக்கமாய், சத்தமின்றி, மனதில் பேசும் இரகசியதோடு கையாளவேண்டும் என்பதை அசோகமித்தரனும், சுந்தரராமசாமியும் முன் வரிசையில் நின்று  காட்டினார்கள்.

வாழ்க்கை இத்தனை சிதிலமடைந்தும், குரூரமாகவும் சக மனித இழிவை கட்டாயப்படுத்துவதையும் என்னால் உரக்க தான் பேச முடியுமென ஜே.கே. ஜெயந்தன் அழகியபெரியவன் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் என் ஆசானாக இருக்கிறார்கள்ஜெயமோகனையும், எஸ். ராமகிருஷ்ணனையும் ஆசான்களாக அல்ல, சக படைப்பாளியாக எப்போதும் உணர்கிறேன்.

சமூக, அரசியல் தத்துவ நடைமுறை விஷயங்களில் ஜெயமோகன் சில நேரம் தவறாக வினையாற்றுகையில் அவருக்கு எதிரே நின்று சமர் புரிந்திருக்கிறேன். அப்படி நாங்கள் இருவரும் புதியபார்வை பத்திரிகையில்  ஆற்றிய எதிர் வினைகள் அப்படியேத்தான் இருக்கிறது.
ஆனால் தேவகி சித்தியின் டைரி ஒரு கோப்பை தேநீர், ‘அறம்  ஊமைச் செந்நாய்  என அவரின் படைப்பு முகிழ்ந்து வரும்போது எழுத்தின் ஸ்பரித்திலேயே  கிடந்திருக்கிறேன்.

எத்தனை பெரிய கொந்தளிப்பு தேசத்திலும், சமூகத்திலும்  நிகழ்ந்தாலும் அதைப்பற்றி ஒரு வரியும் எழுதாமல் இலக்கியம் மட்டும் எழுதமுடிகிற எஸ்.ராமகிருஷ்ணனோடு சண்டைப்போட்டிருக்கிறேன். நடந்துமுடிந்த இத்தேர்தலில் இடது சாரிகளின் முக்கியத்துவம் பற்றி எம். முகுந்தன் கொடுத்திருந்த ஒரு பத்திரிகை செய்தியை எஸ். ராவுக்கு அனுப்பி நீங்கள் ஏன் வெளிப்படையாக இப்படி பேச மறுக்கிறீர்கள் என கேட்டேன்.

நான்தான் என் எழுத்தில்  பேசுகிறேனே பவா,  அப்புறம் எதற்கு தனியே வெளியே போய் பேச வேண்டும்? என்ற வார்த்தையை மதித்திருக்கிறேன்.  அவர் இயல்பு அப்படி. அதை அப்படி மட்டுந்தான் எடுத்துக்கொள்வேன்.

எல்லோரும் நாம் நினைக்கிற மாதிரியெல்லாம் எதிர்வினையாற்ற முடியாது. ஆனால் ராமகிருஷ்ணனின் எழுத்தில் சமூகத்தை பின்னகர்த்துவது போல ஒரு வரியை ஒரு தேர்ந்த வாசகனால் கூட சொல்ல முடியாது. சிறுவயதிலிருந்து படிக்கிற இலக்கியம், மார்க்சிய தத்துவம், அவர் ஆசானாக  ஏற்றுக்கொண்ட எஸ்..பெருமாள் என எஸ்.ராவை ஒரு காத்திரமான, உருக்குலையாத படைப்பாளியாய் மிளிரவைக்கிறது.

திருவண்ணாமலையில் முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக நான் கூர்ந்துபார்க்கும்  தோழர் சந்துரு,  நான் மனதளவில்  ஏற்றுக்கொண்ட ஆசான்களில் ஒருவர்தான்.  அரசு பணியில் நேர்மையோடு இருக்க வேண்டும் என்பதை அவரிடமேக் கற்றுக் கொண்டேன்.

கட்சி நிலைபாடுகளில்  பல விஷயங்களில் அவரோடு முரண்படுவேன் அதனால் என்ன? இரண்டுபேரும் சேர்ந்தே  காலை 11 மணிக்கு ஒரு நல்ல டீ யை  பகிர்ந்து கொள்கிறோம். முரண்பாடுகள் முற்றும் உரையாடல்களுகிடையே ஒரு நல்ல தேநீர்  இருப்பது எப்போதும் நல்லதென நினைக்கிறேன்.

7. நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை  சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் பிரபஞ்சன் இந்த தொகுப்பில் சோடை போன ஒரு கதையும் இல்லை என்கிறார்.  முழுத் தொகுப்பும் அவர் தெரிவித்தது போலிருந்தது.  எவ்வளவு மனிதர்கள் அதில் அன்பை பொழியும் மனிதர்கள் ! அன்புக்கு ஏங்கும் மனிதர்கள், இயற்கையுடன்  அன்பு சண்டை போடும் ஒரு கிழவன் , தனது கலையை பிழைப்புக்காக இழந்து நிற்கும் மனிதன், திருட வந்த மனிதனை மன்னித்து அரவணைத்து நிற்கும் எளிய மக்கள், எளிய கிருத்துவ மக்களின் வாழ்க்கை முறைகள், சாதி முரண்பாடுகளால் தண்ணீருக்கு அலையும் மனிதர்கள். !    தொகுப்பை வாசித்து முடித்தவுடன் சில நாட்களுக்கு தூக்கம் வராமல் தவிக்க வைக்கும் சிறுகதைகள் இவை . இன்று இந்த கதைகளை எழுதிய அந்த நாட்களையும்,  இந்த தொகுப்பு குறித்து நினைவில் இருக்கும் விஷயங்களை பகிர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவரை வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேலிருக்கும்.  நீங்கள் நம்புவீர்களா என தெரியாது அதனால் என்ன? இருபதாயிராம் பிரதிகளுக்கு மேல் அது தமிழ் வாசகர்களை சென்றடைந்திருக்கிறது. அக்கதையின் ஒரு வரியைக் கூட வாசிக்காமல் அதைப்பற்றி விவாதிக்க முயன்ற இயக்க தோழர்களே அதிகம். பின்பு அது மெல்ல தன் வாசகர்களை தானே சென்றடைந்த்து. லேயர் லேயராக அத்தொகுப்பில் மூன்று வகையான வாழ்வில் பேசப்பட்டிருக்கும்.

ஒன்று எளிய மனிதர்களின் வாழ்வு. அது தரும் வலி, அது காட்டும் போலி முகம், அதன் குரூரம், அதன் அன்பு என. அத்தொகுப்பிலிருந்துமுகம் மண்டிதெரு பரோட்டா சால்னாஏழுமலை ஜமா போன்ற கதைகள்  அந்த வகைமைகளில் நிற்பவைதான்.

மேஜிக்கல்  ரியயிசம் என்றால் என்னவென்றே தெரியாமல் நான் எழுதியபச்சை இருளன், ‘சத்ரு, ‘ஓணான்கொடி சுற்றி ராஜாம்பாள் நினைவுகள் இக்கதைகளின் இப்போதைய வாசிப்பும் கூட ஒரு வாசகனை நிலை குலையவைக்கும். இப்பெருமிதம் எல்லா படைப்பாளிகளுக்கும்  எக்காலத்திலும் இருந்திருக்கிறது.

ஒரு கொரியன் பிலிம் பெஸ்டிவல்  முடிந்து இயக்குநர்.  பாலுமகேந்திரா  என்னை தொலைபேயில் அழைத்துவீடு படம் இப்போது பார்த்தேன் பவா படம் எடுத்து இருப்பதைந்து வருஷம் ஆச்சி, ஆனாலும் புதுசா இருக்கு ஒரு படைப்பு எப்போதும் புதுசாய்  இருந்தால் அது அவன்  ஜீவனோடு இருக்கிறது என்பது பொருள்.

இதை உருவாக்கியன் என்ற பெருமிதத்தோடு இன்று இரவு உணவுக்கு போகிறேன் என்றார். அப்படியான பெருமிதம்  இக்கதைகளை எழுதியவன் என்பதில் எனக்கும் உண்டு.

எப்போதோ எழுதி முடித்த இப்படைப்புக்காக இதை ஒவ்வொரு காலத்திலும் வாசிக்கிற  ஒரு வாசகனோ, வாசகியோ தூக்கத்தை இழந்து தவிப்பதும், என்னை தொலைபேசியில் அழைப்பதோ கிளம்பி 19 டி.எம் சாரோனுக்கு வருவதோ தினம் தினம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.



அவள் அப்படித்தான் எடுத்த ருத்தரய்யாவையும், உதிரிப்பூக்கள் கொடுத்த மகேந்திரன் சாரையும்,  யாரோ ஒரு இளம் படைப்பாளி அவர்களை இறுதிவரை துரத்திக்கொண்டேதான் இருந்தான். இருப்பான்.

பல தன்னாட்சி கல்லூரிகளில், மொத்தமாகவும், பல்கலைக்கழங்களில் சில கதைகள் பாடமாகவும், சில கதைகள் குறும்படமாக ஆக்கப்பட்டும் ஒரு கதை முழுநீளப்படத்துக்காக எழுதப்பட்டும் இச்சிறுத் தொகுப்பு பல  எழுத்தாளர்களை, வாசகர்களை, இயக்குநர்களை பல்வேறு வடிவங்களில் அடைந்திருக்கிறது.

பாலுமகேந்திரா சார் சொல்வது போல நான் எழுத்து சோம்பேறிதான்.      என்னால் இவ்வளவுதான் எழுத முடியும். எழுதாமல் விட்ட பல  நூறு பக்கங்கள் காற்றில் அலைவுறட்டும். அதை உணரும் ஒரு தேர்ந்த வாசகன் அதிலிருந்து அவன் எழுத்தை தொடரலாம். என்னால் இவ்வளவுதான் முடியும். படைப்பு மனம் கூடிவரும்  மனநிலையை கர்பம் காப்பது போல எத்தனை கவனமாய் காப்பாற்றுவது? அது  மௌனமான நெருக்கடியில் சிலநேரம் கலைந்துபோகிறது. இந்த குருதி சிதறல்களுக்கிடையேதான் என் அன்றாடங்களை கடக்கிறேன்.


8.      டொமினிக்  எவ்வளவு எளிய மனிதர்களின் கதை!  ஒவ்வொரு கதையின் தலைப்பு உள்பட...!  இதிலும் அவ்வளவு எளிய மனிதர்கள்.  அதுவும் கடைசியில் அன்பை நோக்கி திரும்பும் மனிதர்களின் கதைகளாக இருக்கின்றன.... உங்கள் வாழ்க்கை போல எழுத்திலும் அன்பை அதிகம் எழுதி போகும் ரகசியம்/அவசியம் என்ன?

ஒரு நீண்ட மௌனத்திற்கு பின்  என் எழுத்திற்கு டொமினிக்கை கொண்டுவந்தேன். ‘டொமினிக் என்பது ஒருவனல்ல மூன்று நான்கு பேரின்  கலவை. வயல்களில் வண்ணப் புடவைகள் கட்டி  நாட்டியமாடியவன் ஒருவன்.  அவன் பெயர் ஆல்பர்ட்டோ, அவன் கிரேக்கநாட்டை சேர்ந்தவன். அவன் எங்களோடு ஒரு வனத்திற்கு பயணப்பட்டு வந்தவன். அவனை மனதில் இருத்திக்கொண்டு, ஒரு அழுத்தமான கைக்குலுக்கலில் அவனுக்கு விடைதந்தேன்.

அடிப்பட்டு தரையில் விழுந்து கிடந்த என் டொமினிக்கை நான் பெரும்பாக்கம் ரோட்டில் அவன் வசித்த வாடகை வீட்டில் முதன்முறையாககண்டேன். பாம்பு அடிபடும்போது இறுதியாக  தலையைத் தூக்கி ஒரு பார்வை பார்க்குமே அதை கவனித்திருக்கிறீர்களா? கிருஸ்துவத்தில் அதற்கு இறைந்து மண்றாடல் எனப்பெயர்.  அப்படி ஒரு பார்வையை டொமினிக்  என்னை நோக்கி அப்போது பார்த்தான்.


லௌகீக, லாப நட்டங்கள் தெரியாதவன் அவன். நான் அவனை இறுக அணைத்துக்கொண்டேன்.  என் உடல் சூடு அவனுக்கு  அத்தனை பெரிய ஆறுதலைத் தந்திருக்கக்கூடும். தேசமிழந்து, மொழியிழந்து அப்பா, அம்மா தெரியாமல் அகதியாய் அலைவுறும் ஒருவனுக்கு  நீங்கள் நீட்டும் ஒற்றை கரம்தான்  அவன் பெறும் உயிர்நீர். அதனாலேயே அவன் வாழ்வை பற்றி உயிருள்ளதாய் எழுதமுடிந்தது என்னால். டொமினிக் என்னுடனே என் ஊரிலேயே இப்போதும் வசிக்கிறான். எதிர்பாரத ஏதாவதொரு சந்திப்பில் புன்னகைத்து பிரிகிறோம்.

9.      இரண்டு சிறுகதை தொகுப்புகளில்  நிலம் சார்ந்த கதைகள் உண்டு. முக்கியமாக காடுகளும்  மலைகளும் வருகிறது.  பவாவுக்கும் இந்த நிலத்துக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது?

நான் நிலத்தோடு உறவுள்ளவன்தான். இந்த அரைகுறை படிப்பு, அது தந்த அரசு வேலை அதன்  குட்டி அதிகாரம் எல்லாமும் நான் விரும்பாமலேயே என்னைவந்து அடைந்தவைகள்தான். நான் அரசு வேலைக்கு போகாமல்  இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன் இப்போதைய வசதிகள் இல்லாதிருந்திருப்பேன். பதினோறு மணி இளம் வெய்யிலை என் மாமரத்தடி நிழலில் கயிற்றுக்கட்டில் மல்லாந்து படுத்து என் உடலால் உணர்ந்திருப்பேன்.

புழுக்கமும், நுண்அரசியலும், ஜாதியபார்வையும், அதிகாரத்திமிரும், சூழ்ந்த அரசு அலுவலக வளாகம், ஒரு நிலம் தரும் பரிசுத்தத்தை விட உன்னதமானதா என்ன?

அனால் வேறு வழியின்றி புதுமைபித்தனின் அப்பாவில் ஆரம்பித்து  கோணங்கி வரை இதில் உழண்டிருக்கிறோம். எங்கள் நிலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்  நடந்து  போனால் மூன்று பக்கமும் காடு. அக்காட்டில் முள்ளம் பன்றிகள், மான்கள், குள்ளநரிகள், உடும்புகள், காட்டு பன்றிகள் என அதன் போக்கே தனி.  வெய்யிலில்  அலைந்துதிரியும்  ஒருவன் ஒரு மர நிழலில் போய் தஞ்மடைவானே அப்படி நான் எப்போதெல்லாம் ஒரு காதலி மடியில் கிடந்து அவள் முலைகள் அழுந்த தலைக்கோதலுக்கு  ஏங்குவது மாதிரி இக்காட்டில் ஒவ்வொரு முறையும் பிரவேசிக்கிறேன்.  அதற்கள்  வளரும் வேப்பமர வளர்ச்சியும்  எண்ணிக்கையும் என்னைவிட எந்த ரேஞ்ருக்கும் அதிகமாய் தெரிந்துவிடாது. இரவு பெய்த  பேய்மழைக்குப்பிறகு அப்பாவோடு கொங்காணிப் போட்டு, சைக்கிலில் போய் கம்பங்கொல்லை மடைதிறந்து விட்ட அந்த பத்து வயது பவாதான் இந்த ஜம்பதுகளிலும் அப்படியே இருக்கிறான். அவன் மலையைப்பற்றியும் காட்டைப்பற்றியும், நிலத்தைப்பற்றியும் இருளர்களை, ஒட்டர்களை, நறிக்குறவர்களைப் பற்றியும் எழுதாமல் வேறென எழுதி விட முடியும் என நினைக்கிறீர்கள் விக்னேஷ்வரன்?



12.      இந்த உலகில் எல்லாவற்றையும் விட மனிதர்கள் மட்டும் முக்கியம் என்று பவா முடிவுச்  செய்து தன்னை தேடி வரும் எல்லா மனிதர்களையும்  அரவணைத்து கொள்ள  காரணம் என்ன ? அதற்கு பின்னனியில் எதாவது சம்பவங்கள் இருக்கிறதா?

ப்ரத்யேகமான காரணம் என்று எதுவுமில்லை. மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள் பார்ப்போம்.

கடவுளா?

துரதிஷ்டவசமாக நான் அவரிடம் பழகியது இல்லை. மகத்தான சல்லி பயலாக இருந்தாலும் இப்பிரபஞ்த்தில் மனிதனே வியாபித்து நிற்கிறான். அவனன்றி எனக்கு வேறொன்றை அவன் பக்கத்தில் நிறுத்தி பார்க்கக் கூட தைரியம் வரவில்லைதினம், தினம் என்னை தேடி வருகிற  புதிய மனிதர்கள்தான் என் வாழ்வை அர்த்தப்படுத்துகிறார்கள்,புதிதாக்குகிறார்கள். என் தேவதைகளும்சாத்தான்களும்  இதற்குள் அடக்கம்.இருவருக்கும் என் சின்னஞ்சிறிய, உயரம் குறைக்கப்பட்ட சாப்பாட்டு மேசையில் எப்போதும் இருக்கைகள் உண்டு.

13.      பவா என்கிற படைப்பாளி கதை சொல்லியாக மாற காரணம் என்ன?

என் மௌனம் அல்லது எழுதாமை அல்லது அதற்கான ஊர்சுற்றல், கதை சொல்லல்,  இதுதானே உங்கள் கேள்வி?

நான் இயக்க பணிகளில்  தீவிரமாக பங்கெடுத்த இருபதாண்டுகளில் இன்னும் அதிகமாக எழுதியிருக்கவேண்டியவன். எழுத்தை விரும்பி பலி கொடுத்துதான் இயக்க செயல்பாடுகளாற்றினேன். ஆனால் சாலமன் ராஜா பீடத்தில் கிடத்திருந்தது.  தன் சொந்த மகனை. அதேதான் எனக்கும்   
நேர்ந்தது. அதன்பிறகே எழுதவந்தேன். அதற்குள் என சக  எழுத்துக்காரர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி எல்லாம் என்னை விட்டு வெகுதூரம் போய்விட்டிருந்தார்கள். அதில் எந்த மனச்சோர்வும் எனக்கு இன்றுவரையில்லை  இன்னும் எழுதியிருக்கலாமோ  என்ற ஒற்றை கேள்வி மட்டும் ஒரு கடலலை மாதிரி அவ்வப்போது வந்து போய்விடுகிறது.

இன்னும் பத்திருபது  கதைகளை இதே காந்த்திரத்தோடு எழுதிட வேண்டும் என்பது என் பெரும் எதிர்பார்ப்பு. மாகாளி அதை அருளிட வேண்டும். ஆனால் அச்சுத் தேவைக்காக ஒரு வணிகபத்திரிகையின் பண்டிகை மலருக்காக  ஒரு போதும் ஒரு படைப்பை என்னால் எழுதியிட முடிந்ததில்லை. அவர்கள் ஆணைக்கு அடிபனியும் ஒரு அடிமை அல்ல எழுத்தாளன். அவன் படைப்பை  முடிக்கும்  தருவாயில்  வேண்டுமானால்  பண்டிகைகள் வரலாம். பத்திரிகைகள் அவன் முன் காத்திருந்து தலைப்பை வேண்டி பெற்று பிரசுரிக்கலாம்.

ஒரு நாவலுக்கான மனநிலை அமைந்து ஒரு பாகத்தை எழுதியே ஒரு வருடம் ஆகிறது.
இதோ நல்ல மழை பெய்கின்றது. எங்கள் கிணறு நிறைகிறது.   மரங்களில் பச்சைக்கிளிகள் கூட்டம்கூட்டமாய் வந்தடைகின்றன.  இப்போது எழுதாமல் என்றைக்கு எழுதப்போகிறேன்? அநேகமாக இன்றிரவு  அந்நாவலின் இரண்டாம் பாகத்தை  துவங்கிவிடகூடும்.

கடந்த இருபதாண்டு காலமாய் தமிழ், மலையாளம் என இரு மொழிகளின் படைப்புகளையும்  கூடுமானவரை தொடர்ந்து வாசிக்கிறேன்.  தமிழ்க் கதைகளைவிட மலையாள கதைகள்  பின் தங்கியே இருக்கின்றன. சந்தோஷ், கே.ஆர்.மீரா மதிரி  சிலர்தான் இவ்விதிகளை அப்போது மீறுகிறார்கள்.  என நினைத்தால் அவர்களின் பல கதைகள் சராரிக்கும் கீழே  இருக்கின்றன. துரதிஷ்ட்டவசமாக  தமிழில் நிகழ்த்தப்பட்ட ஆகப் பெரிய  படைப்பு சாதனைகள் மலையாளத்தில் இன்னும் மொழிபெயர்க்கப் படாமலேயே கிடக்கின்றன.

எஸ்.ராவின்அவளது வீடு அநேகமாக மலையாளத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட அவரின் முதல் சிறுகதை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உபபாண்டவம்இடக்கை  இரு நாவல்களையும் என் மொழிபெயர்ப்பாளர் கே.எஸ். வெங்கடாசலம் இப்போதுதான் டி.சி.புக்ஸ்-க்காக  மொழிபெயர்க்கிறார்.

நரனின் ஒரு கதையை மாத்ருபூமிக்காக  வெங்கடாசலம்  சாரை நான் மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டேன். கேசம், மரியபுஷ்ப்பத்தின்  சைக்கிள் வாரணாசி எல்லாம்  மலையாள வாசகர்களுக்கு வாசிக்க  என்றைக்கும் கிடைக்குமெனத் தெரியவில்லை!.

ஷோபாசக்தி, லஷ்மிசரவணக்குமார், ஜி. காரல்மார்க்ஸ்  கே.என் செந்தில். குணாகந்தசாமி,  எல்லாம் தோ இருக்கிற  கேராளவிற்கு  வர இன்னும் எத்தனை வருடங்கள்  பயணப்படவேண்டும்மென தெரியவில்லை.

நாம்  எப்போதோ விட்டுவிட்ட பெருமாள்முருகனை அவர்கள் இன்னும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்மாதொருபாகன் ஒரு நல்ல படைப்பு  என்பதை பெருமாள்முருகனே ஒரு விமசகராக ஏற்றுக் கொள்ள மாட்டார்.

14.      எழுதுவது.  கதை சொல்வது . எதை பவா அதிகம் விரும்புகிறார்?

இதற்கு என்னிடம் ஒரு  நீண்ட பதில்லுண்டு. ஆனால் அது வேண்டாம். எழுத்து என்னை கைவிட்ட போது என்று சொன்னால் அதற்காகவே  காத்திருக்கும் சில நண்பர்கள் மகிழ்வார்கள் எனில், அவர்களுக்காக அதையே பதிலாகச் சொல்லலாம் ஆனால் எனக்கான பதில் அது இல்லை. அது இன்னும் விரிவானது.


15.  இவ்வளவு கதையாடல்களை நிகழ்த்திய பின்பு, பெற்றது என்ன?  இழந்தது என்ன?

பெற்றது ஆயிரக்கணக்கில் புதிய வாசகர்களை, திரும்பும் திசையிலிருந்தெல்லாம்  பெருகும் மனித அன்பினை  நான் குறிப்பிடும்  புத்தகங்களை  நோக்கி திரும்பும் ஆரம்பகால வாசகர்களை.

இழந்ததென்றால், ஒருவேளை சில காத்திரமான சிறுகதைகளையும், இரு நாவல்களையும் எழுதியிருக்ககூடும்.


16.  கோணங்கி இல்லாமல் பவாவின் வாழ்வை யாரும் சொல்லி விட முடியாது? இத்தனை வருட நட்பிற்கு பிறகு கோணங்கி பற்றி நினைத்தவுடன் மனதில் எழும் நினைவுகள்.  இதுவரை நீங்கள் சொல்லாத (நடு இரவு கதைகளை தவிர) ஒன்று எங்களுக்கு கேட்க வேண்டும் போல இருக்கிறது .

  வம்சி பிறந்த அன்றிரவு நான்பச்சை இருளனைஎழுதி முடித்தேன். கட்டி முடிக்கப்படாமலிருந்த எங்கள் வீட்டு மாடியில் கொட்டி வைத்திருந்த மணலில் உட்கார்ந்து அதை எழுதினேன். அன்றிரவு கோணங்கியும் முருகபூபதியும் ஐந்துகிலோ கருபட்டி மிட்டாயோடு வீட்டிற்கு வந்தார்கள். வம்சி பிறந்த மருத்துவமனை பணியாளர்களுக்கெல்லாம் கருபட்டி மிட்டாய் கொடுத்து மகிழ்ந்தார்கள். அன்று பின்னிரவில் கோணங்கி பச்சை இருளனை படித்து முடித்து, வியட்நாமின் பாம்புசாராயம் குடிச்சது மாதிரி இருக்கு  என பேச ஆரம்பித்தான். போர்ஹேவும் மார்க்வெசும் உட்கார்ந்திருப்பார்கள். என நினைத்து கோட்டங்கல் குகைக்குள் நுழைந்தால் நீ இருக்கியேடா என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் கோணங்கி அப்பச்சை இருளன் மாதிரியேதான்.

நாங்கள் இரண்டுபேருமே திருடா, பெருந்திருடா என துவங்கி தான் எங்கள் தொலைபேசி உரையாடலை ஆரம்பிப்போம்.

கோணங்கியின் எழுத்தை ஆழமாக வாசித்து அவனை அடைந்தவர்கள் குறைவுதான். அவனின் விசித்திரமான  வாழ்க்கை முறைக்காக  அவனை தேடினவர்கள்தான அதிகம். நான் இப்போது தமிழின் முக்கியமான ஆளுமைகளைப்பற்றி  தொடர்ந்து பேசலாமென இருக்கிறேன். (எழுத்தில் ஏற்கனவே கொண்டு வந்துவிட்டேன்)  கோணங்கித் திருடனிடமிருந்து  ஆரம்பிப்பதுதான்  சரியாக இருக்கும். அப்போது சொல்கிறேன்  எங்கள்  இருவரின் திருட்டுத்தனங்கள் குறித்து


18.  நீங்கள், எஸ்.ரா, கோணங்கி உட்பட்ட  நண்பர்கள் சேர்ந்து  யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று கொண்டு வந்த ஸ்பெனிஷ் வீரர்கள் கதை என்கிற தொகுப்பு அப்போதைய சூழலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி போனது. இப்போது திரும்பி பார்க்கும் போது அந்த தொகுப்பு தமிழ் இலக்கியச் சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

அதுவரை யதார்த்தவாத கதைகளை மட்டும் எழுதிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களின் கனவை கலைத்து அவர்களை தற்கொலைக்குத் தூண்டிய  புத்தகம் அது. “ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும் 

தங்கள் எதிர்கால நம்பிக்கைகளின் மீது ஜெ.சி.பி மண் அள்ளிப் போட்டது போல  இருந்தது அப்புத்தகத்தின் வருகை. பல எழுத்தாளர்கள் எங்கள் மீது வெறிகொண்டு பாய்ந்தார்கள். பக்கம் பக்கமாக எங்களுக்கு பதில்களையும், அறிவுரைகளையும்  சொன்னார்கள்.

தமுஎசவில் விசாரிக்கப்பட்டோம். இலக்கியத்தில் இப்படி சீட்டுகட்டுகளை கலைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். பழகிய பாதையிலேயே  போங்கள் என அறிவுறுத்தப்பட்டோம். நானும் அப்புத்தகத்தைத்  தொகுத்தற்காக ஒரு மாநாட்டு மேடையில் பகிரங்க பாவ மன்னிப்பு கேட்டேன்.

கிழே இறங்கி வந்த என்னை என்ன பவா மன்னிப்பு கேட்டதற்கான அப்பமும், திராட்சை ரசமும் குடித்துவிட்டீர்களா என நக்கலடித்தார் நாகர்ஜீணன்.

இந்த நாகர்ஜீணன்தான் கோணங்கியின் மெண்ட்டார்.
கோணங்கியை இலக்கிய இருட்டறைக்குள் வைத்து பூட்டிவிட்டு  சாவியோடு லண்டனுக்கு போய்விட்டான் என தமிழ்ச்செல்வன்  அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்.

அசோகமித்ரன் அப்புத்தகத்திற்கான ஒரு அருமையான மதிப்புரையைஇந்தியாடுடேவில் எழுதி இருந்தார். காட்டுத் தீ பரவுமே அப்படி திசையெங்கும் பரவிய அதன் அனலை காற்றே சகல திசைகளுக்கும் கொண்டு போனது.

புதிய வாசகர்களுக்காக அதன் மறு பதிப்பை இப்போது கொண்டுவரலமென இருக்கிறோம்.

19.  திருவண்ணாமலையில் நீங்களும் உங்கள் நண்பர்களும் முன்னெடுக்கும் கலை இலக்கியச் செயல்பாடுகளை அனைவரும் அறிவார்கள். முக்கியமாக எஸ். ராமகிருஷ்ணன் திருவண்ணாமலையை இலக்கியத்தின் டப்பிளின் நகரம் என வர்ணிக்கிறார்.  உங்கள் கருத்து ? 

திருவண்ணாமலை இலக்கியத்தின் டப்னினா என எனக்குத் தெரியாது ஏன் எனில் நான் டப்ளினைப் பார்த்ததில்லை. ஆனால் கடந்த நாற்பதாண்டுகளாக இடைவிடாத கலை இலக்கிய செயல்பாடுகளால் இந்நகரத்தின் இரவுகள் நிறைந்திருக்கின்றன.

புதியநூல்கள், நவீன நாடகங்கள், நல்லதிரைப்படங்கள், என கலை இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் இங்கு பரீட்சித்துப் பார்த்தாகிவிட்டது. அனால் இத்தனை செயல்பாடுகளுக்கு அப்புறமும் உருப்படியான ஜம்பது தீவிர இலக்கிய வாசகர்களை கூட எங்களால் உருவாக்க முடியவில்லை.
காத்திரமான படைப்புகள் மிகக் குறைந்த அளவிற்கே இங்கிருந்து வந்திருக்கின்றன.  ஜி.முருகன், அய்யனார் விஸ்வநாத் என விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இதன் நிலப்பரப்பில் கால்பதித்தவர்கள் எனலாம். அதிலும் அய்யனார் விஸ்வநாத் இந்த நிலத்தில் அல்ல அந்தரத்தில் நின்று திருவண்ணாமலையின் இன்னொரு மாய உலகத்தை எழுதுகிறார்.
யாராவது ஒரு நல்ல வாசகனின் தேடுதலில் இச்செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.

20. இலக்கியத்தை எழுதுவதோடு  இலக்கியச் செயல்பாடுகள் ஏன் முன்னெடுக்கப்பட வேண்டும்?  உங்கள் பதில் வழியே எங்களைப் போன்ற இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் இதை கேட்கிறேன்.

இதற்கெல்லாம் ஒரு கோட்பாடும், கெள்கை வரைமுறையும் தேவையில்லை. அசோகமித்ரன், சார்வாகன் போன்ற படைப்பாளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு இலக்கிய செயல்பாட்டையும் முன்னெடுத்ததில்லை. ஆனால் அவர்களை தமிழ் நவீன படைப்புலகம் மறந்துவிட்டதா என்ன?

அவர்கள் எழுதினதுதான்  இளைஞர்களுக்கான செயல்பாடு அவர்களை மாதிரி அவர்கள் வாழ்நாளில் பத்து கதைகள் எழுதிவிட்டால் போதாதா?
ராஜேந்திரசோழன் தன் அபூர்வமான எழுத்தை பலிகொடுத்து இயக்கத்திற்கு வந்தவர். இமயம் சொல்கிறார் இயக்கம் என்ற ஒரு சிறு செயலுக்காக அவர் எழுத்தை கைவிட்டிருக்க வேண்டாமென. எனக்கும் கூட  இதில் உடன்பாடு உண்டு. ‘எட்டுகதைகள்எழுதின ராஜேந்திர சோழன் அதே உத்வேகத்தோடு செயல்பட்டிருந்தால் தமிழுக்கு இன்னும் பத்திருப்பது நல்ல கதைகள் கிடைத்திருக்கக்கூடும்.

இப்போது அவர் எந்தெந்த இயக்கங்களில் செயப்பட்டார்? அதன் தற்போதைய இருத்தல் என்ன? அவரால் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்கள் அந்த இயக்கங்களில் இன்றும் செயல்படுகிறார்களா? இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள் அவரை வைத்து எழும்புகின்றன.


21.  சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்கு பிறகு இலக்கியத்திலும் படைப்பாளிகளிடமும் ஒரு விததேக்கம் இருப்பது மாதிரி நம்பப்படுகிறது . இதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?


நம்புகிறேன். உடனடி ரெஸ்பான்ஸ். அதற்கு மகத்தான படைப்பாளிகள் கூட பலியாகிவிட்டார்கள். தன் எழுதினற்கு என்ன எதிர்வினை? எத்தனை விருப்ப குறிகள்? எத்தனை கம்மென்ட்ஸ்? அதில் பெண்கள் எத்தனை பேர்? இப்படியான எதிர்பார்ப்புகள் கூடிப் போன இக்காலத்தில் மகத்தான படைப்புகள் மங்கிப்போகின்றன. என் நண்பன் கார்த்தி சொல்வது போலஎல்லாம் கடந்து போகும்

22. தமிழ் இலக்கியச் சூழல் என்பது ஒரு பெரிய அறிவு இயக்கம்.  இன்று அந்த அறிவு இயக்கம் இருக்கும் சூழ்நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

மிக ஆரோக்கியமாக பார்க்கிறேன். ஒரு காலத்தில் கோவில்பட்டி, திருவண்ணாமலை  என்று   மட்டும் இருந்த இலக்கிய செயல்பாடுகள் இப்போது மணப்பாறை வரை பரவியிருக்கிறது.

இந்த செயல்பாட்டாளர்களில் பலர் face book, twiter, you tube,  என நவீன தொழில் நுட்பத்தில்  கரைந்து போய்விடுவதை பார்க்கிறேன்.
கலைஞன் இவைகளை தன் தேவைக்கு கையாளலாம், அதிலேயே கரைந்துவிட கூடாது.

இலக்கியம் வரண்டு போய் புல், பூண்டு கூட முளைக்காது என சொல்லப்பட்ட வேலூர் நிலப்பரப்பில் இப்போது நீங்கள், லிங்கம் எல்லாம் அதற்கு நீரூற்றி துளிர்க்க வைக்கவில்லையா?

இதுவரை அங்கு அவ்வப்போது பொங்கி பெருகினதாக காட்டப்பட்ட இலக்கிய அருவிகள், இலக்கிய பேரூற்றுகள், எல்லாம் எங்கே?
தீவிர வாசிப்பும் ஆத்மார்த்தமான இலக்கிய செல்பாடுகள் மட்டுமே உங்களிடமிருக்கிற கனலை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றும்.


23. பவா வுக்கு வாழ்நாள் கனவுகள் இருக்கிறதா?

கனவுகள் இல்லால் கூட மனிதர்கள் இருக்க முடியுமா என்ன? அதுவும் எழுதுகிறவனுக்கு!  நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாய் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

நன்றி 
இம்மாத கனலி





No comments:

Post a Comment