Wednesday, October 16, 2019

இன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

                                                                 -    மானசி


காந்தி கிராம பல்கலைக் கழக வளாகத்தில்லஷ்மி கல்வியியல் கல்லூரியில் கடந்த மாதம் 23ந்தேதி நிகழ்ந்த படைப்பாளிகளை சந்திப்போம் நிகழ்வில்  நானும் மகள் மானசியும் என்ற வரிசையே எனக்கு  அப்படிப் பிடித்திருந்தது.

முதல் இரண்டு மணி நேரம்  அவளுக்கும்அடுத்த இரண்டு மணி நேரம் எனக்கும் என நாங்களே பகுத்துக்கொண்டோம்.

வழக்கமான  மேடை அலட்சியம் என்னிடம் இருந்தது. (பழகியதால் வந்த அலட்சியம் அது). ஆனால் எந்த பதட்டமுமின்றி மகள் மானசி மிக இயல்பாக அவள் நண்பனோடு பேசுகிற மொழியில் அவள் உரையை ஆரம்பித்தாள்கரடு தட்டியிருந்த என் மொழிக்காக நான் வெட்கப்பட்டுக்கொண்டேன்.

அவள் பேசப்பேச பல இடங்களில் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்று வரை என் அப்பாவுக்கு  எனக்கு என்ன கலர் பிடிக்குமென தெரியாது. (நான் எழுத்தாளன்உனக்கு மட்டும் அப்பாவாக இருக்க முடியாது மகளே!  உலகத்துக்கே என இதிலிருந்து நான் தப்பிப்பது எத்தனை அவமானம் எனக்கு!)             

அப்பா அம்மா இடத்தில் வம்சி

“Still we are alilve” என ஆரம்பிக்கும் ஒரு கதையின் துவக்கம்….

இப்படி பல இடங்களில் நான் உடைந்து போனேன்தாங்க முடியாமல் மேடையில் இருந்து வெளியேறிதோழர் சந்துருவுக்கு போன் பண்ணி பேசினேன்.


தம்பி செல்வேந்திரன் சொன்னது போல அவள் குறிப்பிட்ட பல எழுத்தாளர்களை  நான் வாசித்ததோ கேள்விப்பட்டதோ கூட இல்லைஅவளுக்கு நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்க வாய்ந்திருந்தது கூடுதல் பலம்.

அவள் உரை அவர்கள் இருநூறு பேரையும் மௌனத்தில் உரைய வைத்திருந்ததுஅதனூடே அவளோடு ஓர் கலந்துரையாடல் நிகழ்ந்தது.

ஒரு முனைவர்  பேராசியர் எழுத்து  நீ சொல்றதப் பாத்தா ஒரு class  ரூமுக்கு டீச்சரே வேணாமாமாஎன மென்மையாக அதே சமயம் உக்கிரத்தோடு கேட்டார்.
Off course Aunty, வெறும் தகவல்களோடு மட்டும் இருப்பவர்தான் ஒரு ஆசிரியர் எனில்அதை விட அதிக தகவல்களை நான் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் ஃபோன்  எனக்கு தந்துவிடும் தானே!

எனக்கு என் ஆசிரியை வேண்டுமெனில் அவர் எனக்கு அக்காஎன் உறவு… என அவள் சொற்களை கேட்க மனமின்றி அப்பேராசிரியர் வெளியேறியதைக் கவனித்தேன்.

இங்கு நிகழ்வது  ஒரு சாதரண நிகழ்வு அல்ல என்பதும்இது ஆசிரியர்களைபெற்றோர்களை மாணவர்களை  வேறொரு தளத்திற்கு நகர்த்தும் தர்க்க விவாதம் என்பது புரிந்தது.

அவள் பேசியதை எழுத்துக்கு கொண்டுவரச் சொன்னேன்தமிழ் இந்துவுக்கு  mail  பண்ண சொன்னேன்

ஒரு துளி சாய்வுமின்றி இக்கட்டுரையைத் தேர்வுக்கு உட்படுத்துங்கள்  சமஸ்  என தகவல் தந்தேன்.

இக்கட்டுரையின் அடர்த்திக் கருதி நடுப்பக்க கட்டுரையாகவே தேர்வாகி லிஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக சமஸ்  தகவல் அனுப்பி இருந்தார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை  5 மணிக்கு பாண்டிச்சேரியிலிருந்து அமர்நாத் அழைத்து எங்கள் தூக்கத்தை கலைத்துப்போட்டார்.

அவர் பேத்தியின் இந்த சொற்களுக்கு பரிசாக 5 ஆயிரம் ரூபாய்க்கு மீன்களை ஏற்றிக்கொண்டு ஒன்பது மணிக்குள்  வீட்டிற்கு வந்தார். (அவர் எப்பவும் நம் தொடர்ச்சிதான்கொண்டாட்டங்களைத் தள்ளி வைத்துவிடக்கூடாது அவருக்கு.)
அந்த ஞாயிறு எங்கள் எல்லோருக்கும் குதூகலத்தாலும்பெருமிதத்தாலும்அன்பாலும் நிரம்பியதுதிரும்பிய பக்கமிருந்தெல்லாம் குறுஞ்செய்திகளோடும்,  கடிதங்களுமாக வந்துகொண்டிருக்கின்றன.

நான் என் வாழ்வின்  பெரும்பகுதியை ஒரு இயக்கத்தின் செயல்பாடுகளில் கரைத்து கொண்டவன்எழுத வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக  அதிலிருந்து விடுபட்டவன்ஆனால் அந்த இயக்கத் தோழர்கள் யாரும் ஒரு சொல்லை கூட இம்மகளின்  இம்மகிழ்ச்சிக்காக செலவழிக்க  தயாராக இல்லை என்ற நிஜம் என்னை வதைத்தது.

மனம் சோர்த்துநிலைகொள்ளாமல் கொதித்துக் கொண்டிருக்கையில் என் தோழி வழக்கறிஞர் சுமதி அழைத்தார்கள்.

பேசினோம்.

நீங்கள் இயக்கத்தாலுமநான் இயங்கியதாலும் சிலரால் வெறுக்கப்பட்டவர்கள் சார்ஆனால் இன்னொருப் பக்கம் மனித அன்பு  ஒரு காட்டாற்று  வெள்ளத்தைபோல என் வாழ்வில் பெருகிறதுதாங்க முடியவில்லை.

மகள் மானசியிடம்  அவள் எதிர்காலம் குறித்து ஒரு வார்த்தையும் பேசாத நான்எப்போதும் தனித்தே இயங்கு மகளேஇயக்கமோஸ்தாபனமோ  வேண்டாம்கருத்து வேறுபாடுகளால் நீ அதிலிருந்து விலக நேர்ந்தால் அது தரும் காயத்தை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என தழுதழுத்தபோதுஎன் நண்பனும்தமுஎசவின் தலைவரும்இப்போது எம்.பி.யுமான சு.வெங்கடேசன் அழைத்தான்.
அரைமணி நேரம் மகளிடமும்ஐந்து நிமிடம் என்னிடமும்  பேசி என் கருத்துகளை அழுத்தித் துடைத்தான்.

அப்பா என் mail boxக்கு  200க்கும் மேலே கடிதங்கள் வந்துள்ளமுதல் mailலே ஜிராமகிருஷ்ணன் தோழர்தான் என்றாள் மானசிஅவர் தன் கடிதத்தை  இப்படி ஆரம்பித்திருந்தார்.

மானசி,
நான் உன் அப்பா அம்மாவின் நண்பன்என் பெயர்ஜி.ராமகிருஷ்ணன் , நீ உன் உரையில் சொன்னதைத்தான் எங்கள் இயக்கம் முன்னெடுக்கிறது… இப்படிப் போகும் அக்கடிதம்அதன் நிறைவில், ’மகளே மானசி நீ என் வீட்டிற்கு விருந்தினராக வாஅப்பா அம்மாவோடு என் வீட்டில் தங்கியிரு…’ - பெரியப்பா என்று முடிவதை படித்தபோது அவள் கண்கள் நிறைவதை கவனித்தேன்.

அவள் முழு உரையையும் இத்துடன் இணைத்திருக்கிறேன்






எழுத்துக்கூட்டி படிக்கத் துவங்கிய காலம்தொட்டு வாசிப்பின் மீது பெரிய ஆர்வம் எனக்குள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். பத்து வயதுமுதல் கையில் புத்தகங்களுடன் திரிவதை பெரிதும் நேசித்தேன்.  அப்படியான என் சிறு வாசிப்பு பழக்கம் மட்டுமே என் கைவிரல் கோர்த்து, தலைகோதி, வாழ்வின் எல்லா பக்கங்களையும் எனக்குப் படிக்க சொல்லிக்கொடுத்தது. மானுட இரைச்சல் சுமந்த நகரக்காற்று நம்முள் மறக்கடித்த பல உணர்வுகளை  இலக்கியம் மட்டுமே மீட்டெடுக்க முடியும். இலக்கியம் என்ன செய்துவிடும்? என்ற மிக நீண்ட கேள்விக்கு தீவிரமாக வாசிக்கத்துவங்கிய பின்பே என்னால் பதில் தீட்ட முடிந்தது.

சில வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் வாசிப்பிற்கு பின்பே  புரியத் தொடங்கியது. Modernity, Spirituality, Education, Pain, Reputation,Love இது எல்லாம் என்னவென்று இந்த சமூகம் நமக்குள் ஏற்றி வைத்திருக்கும் இந்த பொய்யான பிம்பங்களையும், திரைகளையும் விலக்கிப்பார்க்க கற்றுக்கொடுத்தது இலக்கியம் மட்டும்தான்.  

இலக்கியவாதிகளும், வாசகர்களும் மட்டுமே உன்னதமாய் வாழ முடியும் என்பது போலான எந்த பொய்யான பிம்பத்திலும் நம்பிக்கையற்றவள் நான். எனக்கான இலக்கியத் தேவையும், தேடலும் வேறு. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சித்தாந்தத்தையோ அல்லது ஒரு தத்துவத்தையோ முன்னிறுத்தி அதன் வழி நம் வாழ்க்கையை கொண்டுசெல்ல விரும்புகிறோம். அப்படியான ஒரு சித்தாந்த்ததை  நாம் நிச்சயமாக ஆரம்பத்திலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

If you don’t stand for something
You will fall for anything
            --- Malcoml.x

நாம் எதற்காக நிற்கப்போகிறோம். என்பதை முடிவுசெய்ய தவறினால் எதற்காக வேண்டுமானாலும் விழுந்துவிடுவோம். அப்படி நாம் பற்றிக்கொள்ளும் தத்துவம் எது என்பதை இலக்கியமின்றி வேறெதுவும் நமக்குக்  கற்றுக்கொடுத்து விட  முடியாது.
என் சகோதரன் ரோஹித் வெமூலா 26 வயதில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டபோது நான் ஒரு 13 வயது சிறுமியாய் இந்த சமூகத்தின் மீது  அச்சத்தை உணர்ந்தேன். வெமூலாவின் இறுதி தற்கொலைக்கடிதம் யாரையும் ஒரு கணம் சமூகத்தின்மீது கோபம் கொள்ள வைக்கும். வெமூலா தன் இறுதிக் கடிதத்தில் குறிப்பிடும் மூன்று கூற்றுகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை.
    
Our feelings are second handed
Our believes are coloured
Our love is constructed

நம் உணர்வுகள் சார்ந்த எந்த முடிவையும் கூட நாமே எடுக்க முடியாத நமக்கு யார் சக மனிதனை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதுஅன்பு, காதல், நேசம், போன்ற சொற்கள் அதன் கீழ் மட்டத்திற்கு  குறைக்கப்பட்டிருக்கும் அவலத்தை இலக்கியம் மட்டும் தானே உணர்த்த முடியும்.

டாக்டர். ஆப்ரகாம் டுவர்ஸ்கி உண்மையான நேசம் என்பதற்கான நம் புரிதலை கலைத்துப்போடுகிறார்.  நமக்கு  மீன் பிடிக்கும் என்பதால் அதை நீரில் இருந்து எடுத்து கொன்று சாப்பிடுவது எவ்வளவு பெரிய அபத்தம். மாறாக நமக்கு நம்மைப் பிடிக்கும் என்பதே உண்மை. மீனின் சுவை நமக்கு பிடிக்கும் என்பதால் மீனை பிடிக்கும் என்பது வேடிக்கையாக உள்ளது. அவர் நம்மின் பல உறவுகளுக்குள் ததும்பும் நேசம் இந்த மீன் மீதான நேசம் போன்றது என்கிறார். இதற்கு நாம் உடன்பட்டே ஆக வேண்டியிருக்கிறது.

மண்டோ போல் ஒரு அசலான எழுத்தாளன் கற்றுக்கொடுக்கும் உண்மை நம் வாழ்வையே மாற்றியமைக்கிறது. மண்டோவின் ஒரு சொற்சித்திரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்த நாட்களில் வெடித்த கலவரத்தில் ஒரு கலவரக்கூட்டத்தை ஒருவன் வழி நடத்தி மிகப்பெரிய வீட்டின் முன் நிறுத்துகிறான். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் மொத்தவீட்டையும் ஆவேசத்துடன் சூறையாட தொடங்குகிறார்கள். வழி நடத்தி வந்தவன் வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பொருளுக்குமான மதிப்பை கூறி எல்லாம் நம்முடையதே, நிதானமாக எடுத்துச் செல்லலாம் என்கிறான். யாரும் எதிர்பார்த்திடாத அந்த தருணத்தில் வெறி கொண்ட நாய் ஒன்று திடீரெனப் பாய்ந்து வயதான ஒருவரை கீழேத் தள்ளி கடித்துக் குதறுகிறது. யாருக்கும் என்ன செய்வதென தெரியாமல் நின்றபொழுது வழி நடத்தி வந்தவன் கத்தினான். ‘டைகர் ஸ்டாப்’. அந்த நாய் அவனைத் திரும்பிப் பார்த்தபொழுது அதன் கண்களில் பரிச்சயத்திற்கான தடங்கள் இருந்தன. மெல்ல அவனிடம் வந்து கலவரக் குருதி படிந்த அவன் கால்களை நக்கத் தொடங்கியது. ஒன்றும் புரியாமல் சொற்களற்று நின்றவர்களுள் ஒருவன் கேட்டான், ‘யார் நீ? வேறேதும் பேசாமல் இந்த வீடு என்னுடையது என்று மட்டும் சொல்லி நின்றிருந்த ஒருவனைப் பார்த்து  அந்த பெட்டியை விட்டுவிடாதே, அது விலை மதிப்பற்றது. நமக்கு உபயோகமாகும்’. என்றான். தன் சொந்த வீட்டை கலவரத்தின் போது மக்கள் சூரையாடுவற்காக திறந்துவிடும் அந்த மனிதனின் குற்ற உணர்ச்சி கலந்த உண்மையை மண்டோ போல் ஒரு கலவர பூமியை ரத்தமும் சதையுமாக எதிர்கொண்ட ஒருவன்தானே அறிமுகம் செய்ய முடியும்.

டால்ஸ்டாயின் அறமும், தஸ்தவெஸ்கியின் உளப்பகுப்பாய்வும் ஒருசேர பெற்றவர் ஆண்டன் செக்காவ் என நான் எப்போதும் நினைப்பதுண்டு. பன்னிரெண்டு வயதில் செக்காவின் ஒரு சிறுகதை எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சி  மனித உறவுகள் மீது பெரும் அவ நம்பிக்கையைக் கொடுத்தது.  அட் கிறிஸ்மஸ் டைம் என்ற சிறுகதையில் மகளை வெகு தொலைவிற்கு திருமணம் செய்து கொடுத்த வயதான தம்பதியர் மகளிடமிருந்து நான்கு வருடங்களில் ஒரு கடிதமும் வராததால் எழுதப்படிக்க தெரியாத இருவரும் ஊரில் படித்த ஒருவர் மூலமாக தங்கள் மகளுக்கான கடிதத்தை எழுத துவங்குகிறார்கள். அந்த கடிதம் இப்படித் துவங்குகிறது.

 அன்புள்ள மரியா,
நாங்கள் இருவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்

இன்றுவரை எத்தனை முயன்றும், இந்த முதல் வரிக்குமேல் அந்த கதையை தொடர்ந்து படிக்கமுடியவில்லை. இதுபோன்று நுட்பங்களை வெளிச்சமிட்டு காட்டுவதும் மனதில் அடைகாத்து வைப்பதும் இலக்கியம் மட்டும்தான்.

ஆனால் இலக்கியத்தை ஸ்பரிசிக்காமலும் புத்தகங்களின் மணம் அறியாமலும் நாம் வாழ்ந்து கடத்தும் இந்த நாட்களின் பொருள் தெரியாமல் வாழும் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதுதான்.

இதைத்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி நம்மை உணர்ச்சிகள் அற்றுப்போன இளைஞர்கள் என்கிறார். நம் சார்ந்தோ மற்றவர்கள் சார்ந்தோ எவ்வித உணர்ச்சிகளும் இல்லாமல் நாம் இருப்பதே உண்மை.

நாம் வியப்பை இழந்தவர்கள். புத்தர் ஒரு பூ மலர்வதில் இருக்கும் மர்மத்தையும் அற்புதத்தையும் நம்மால் உணர முடிந்தால் அதுவே நம் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும் மிக பெரிய ஆசான் என்கிறார்.  நம் கண்கள் எதை பார்த்தும் வியந்து விரிவதில்லை. மாறாக பல விஷயங்களுக்கு ஓர் அலட்சிய பார்வையை மட்டுமே உதறிச்செல்கிறோம். இந்த அலட்சியம் நம் ஆர்வத்தை முழுதாய் களவாடிக்கொள்கிறது. ஆர்வம் இல்லையெனில் தேடலும் இல்லை. சிந்தனைகளும் இல்லை.

ஆல்பட் கேம்யூஸ், “நாம் சிந்திக்கும் போதுதான் நிலைகுலைந்து போகிறோம் என்கிறார். அப்படி வியந்து ஆர்வம் கொண்டு தேடி சிந்தித்து நிலை குலைந்து நம் அதுவரையிலான கற்பித்தல்களை இழக்கும் போதுதான் புதிதாய் கற்றுக்கொள்கிறோம்.

இதை கற்றுக்கொடுத்து இப்படி ஒரு தேடலை நோக்கி நம்மை நகர்த்தவே கல்வியும் ஆசிரியர்களும் தேவை. இன்றைய வகுப்பறைகள் வதை கூடங்களாய் மாறிய நிலையில் ஏன் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும்? என்ற கேள்வி மேலோங்கி நிற்கிறது. இன்று பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எதற்கு? நாம் ஒவ்வொருவரும் கையில் ஏந்தி திரியும் மொபைல் போன்கள் ஒரு ஆசிரியரைவிட எல்லா விதத்திலும் அதிக தகவல்களை தர முடியும்.  வாழ்வை, உறவுகளின் சிக்கல்களை, மனித மேன்மைகளை, மென்னுணர்வுகளை கையாள சொல்லித்தருவதும் ஒரு ஆசிரியரின் பணி தான் என்பதை நம்மில் பலர் மறந்துவிட்டோம்.

ஒரு காய்ந்த இலை ஒரு ஆசிரியரை விடவும் அதிகம் கற்றுக்கொடுக்க முடியும்.  அது வெளிற் பச்சையில் குழந்தையின் சிறு வண்ண கிருக்கல் போல் கிளையில் துளிர்விட்டு, காற்றை அவதானித்து, வான்மழைக்காய் ஏங்கி, புயல் மழைக்கடந்து, வெப்பம் சுமந்து வாழும். பின்னொரு நாள்  காய்ந்து கீழே விழும், மரணித்து மக்கிப்போகும்.

மனிதன்  வாழ்வில் ஒவ்வொரு அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொள்கிறான். மரணத்தை மட்டுமே அவனால் அனுபவித்து கற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. எனினும் ஒரு காய்ந்த இலை அவனுக்கு மரணத்தையும் கற்றுக் கொடுத்து விடுகிறது. நாம் யாரும் கவனம் பகிர்ந்திடாத ஓர் இலை இவ்வளவு கற்றுக்கொடுக்க முடியும் என்றாலும், ஒரு ஆசிரியர் இதை அவதானிப்பதற்கான பக்குவத்தையாவது நமக்குக் கற்றுக்கொடுக்க வேண்டாமா?.

இரக்கமற்ற நாட்கள் நம் வாழ்வை கலைத்துப்போடும் போது ஒரு ஆசிரியரின் கத கதப்பான அணைப்பு தேவைப்படுகிறது. ஒரு உடல்சூட்டில், சிறு புன்னகையில் ஆசிரியர்கள் கடத்தும் அன்பு வேண்டி மாணவ மனம் ஏங்குகிறது. ஆசிரியர்கள் மீதான மரியாதை அன்பாய் இல்லாமல் வெறும் பயமாய் மாறியிருக்கும் இந்த சூழலில் இதை யாரிடம் எதிர்பார்ப்பது? வெறும் பள்ளி பாடங்களை நடத்தி முடிப்பதுடன் ஒரு ஆசிரியரின் பணி முடிந்துவிடவில்லை, அது வாழ்விலும் தொடர வேண்டியிருக்கிறது.


ஒப்பீடுகளற்றவனாய் ஒருவனை வடித்தெடுப்பதே உண்மையான கல்வி என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. ஆனால் பள்ளிகள் தனியார் மயமாக்கப்பட்ட பின் சமமான கல்வி கற்கும் சூழலற்றுப்போய் வேறுபாடுகள் விரிவடைகின்றன.

என் குடும்பம் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த கல்வி சூழல் வித்தியாசமானது. பத்தாம் வகுப்புவரை திருவண்ணாமலையின் முக்கிய பிரமுகர்களின் குழந்தைகள் படிக்கும் ஒரு High class CBSE பள்ளி. எங்கள் பள்ளியை உண்மையில் சொர்க்கம் என்றுதான் சொல்லவேண்டும். அது ஒரு ஜனநாயக படுத்தப்பட்ட பள்ளி என்று சொல்வதுதான் சரியாயிருக்கும். வளாகத்தில் இருக்கும் எங்கள் எல்லோருக்குமான ப்ரியமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டது. ஆசிரியர்களைஅக்கா, அண்ணாஎன அழைக்கும் வழக்கம், மலையேறுதல், குளம், ஏரி மற்றும் மலை சுற்றும் பாதையை சுத்தப்படுத்துதல் என பல அனுபவங்களுடன் நாங்கள் வளர்த்தெடுக்கப்பட்டோம். பள்ளி வளாகத்தில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மரத்தை தத்துக்கொடுப்பது ஒரு பெரிய வைபவம். ஒவ்வொருவரும் தத்தெடுத்த அந்த மரத்தை வருடம் முழுக்க பராமரிப்போம். நீர் ஊற்றி, உரம் வைத்து, மொட்டுகளை எண்ணி, பூக்கள் மலரும் சத்தத்தை கேட்க முயல்வோம். வளாகத்தின் மரங்களினூடாகத்தான் நாங்களும் வளர்ந்தோம்.

பத்தாம் வகுப்புவரை மட்டுமே இருந்த அந்த பள்ளியை விட்டு செல்லும் மாணவர்கள் அடுத்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் மரங்களை தத்துக்கொடுக்கும்போது தங்கையின் திருமணம் முடித்து வழியனுப்பும் அண்ணனின் மனதுடன் விழி கனத்து நிற்பதை கவனித்திருக்கிறேன்.
சுதந்திரத்தை முழுக்க பருகியவர்களாய் அந்த வளாகம் முழுக்க நாங்கள் வியாபித்திருந்தோம். மழை பெய்கையில் பாடத்தை பாதியில் நிறுத்தி மழையின் தாளத்தை கேட்க சொன்ன ஆசிரியரை எப்படி மறக்க முடியும்?  ஊரின் மிக முக்கிய பள்ளி என்பதால் உடன் படிக்கும் எல்லா மாணவர்களும் ஊரின் முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகள். பணம் பற்றிய எந்த மதிப்பும் அறியாது கலை, இசை, நாடகம், இலக்கியம்,சுற்றுசூழல் மற்றும் விஞ்ஞானம் என பள்ளி வளாகம் நிறைந்து கிடந்த நாட்கள் அவை.

பிராண்டட் ஸ்கூல் பேக்ஸ், விதவிதமான எழுதுபொருட்கள், நேர்த்தியான சீருடைகள், ஒரு தனி சாப்பாட்டு பையும் அதில் இரண்டு விதமான ஸ்நாக்ஸ், இரண்டு லஞ்ச் டவல், ஸ்பூன், மிகுந்த கவனத்துடன் சமைக்கப்பட்ட உணவு என கொண்டுவந்து அதை அலட்சியத்துடன் கையாள்வது வழக்கம்.

உணவு, பொருளாதாரம்,குடும்ப சிக்கல்கள் என எதைப்பற்றிய கவலையுமின்றி எங்களுக்காக பெற்றோர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிரத்யேகமான வானில் பறக்க எங்கள் சிறகுகளை மெல்லக் கோதி உலர்த்தி பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தோம் எனலாம்.

பத்தாம் வகுப்பு முடித்ததும் வேறு பள்ளியில் சேர வேண்டுமென்ற நிலையில் வீட்டில் எந்த எதிர்வாதமுமின்றி வீட்டினருகில் உள்ள ஒரு அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் திணறிப்போனேன். நான் பதினைந்து வருடமாய் வாழ்ந்த அதே ஊரில் இப்படி ஒரு உலகம் இயங்குவதை அதுவரை நான் கவனிக்கவேவில்லை.

காலையில் என் வீட்டில் பேப்பர் போடும்போது நான் பார்த்துவிடக் கூடாதென வேகவேகமாய் சைக்கிளை ஓட்டிச் செல்லும் என் வகுப்பு நண்பனை, அப்பாவை இழந்து ஜெராக்ஸ் கடையில் மதிய வேலைக்குப் போகும் தோழிகளை, கொண்டுவந்த ஒரே ஒரு டப்பா சாப்பாட்டில் அடைக்கப்படிருந்த ஒரு துண்டு ஊறுகாயுடனான உணவும் சில நேரங்களில் கெட்டுப்போய் நீர்விட்ட வாடையுடனான அந்த சோற்றை எந்த புகாருமின்றி சாப்பிடும் நண்பர்களை, ஏதேனும் கல்யாணத்தில் உணவு பரிமாறும் ஒருவனாய் என்னிடமிருந்து மறைந்து நிற்கும் என் வகுப்பு தோழனை, அம்மாவுடன் இட்லி கடையில் காலை வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்குத் தாமதமாய் வந்து அடி வாங்குவதை வாடிக்கையாய் கொண்டிருந்தவளை, பணமில்லாமல் பண்டிகைகளையும் பிறந்த நாட்களையும் எதிர் கொள்ள பயப்படும் என சக மாணவர்களையும் எனக்கு அறிமுகம் செய்தது என் புதிய அரசு பள்ளி வளாகம். அப்பட்டமான மனித வாழ்வை, அசலான வறுமையை நான் அதுவரை பார்த்திடாத வாழ்நிலையை கை பிடித்து இழுத்துச் சென்று காட்டியது எனலாம். 

நூற்றியறுபது ரூபாய் கொடுத்து பெரிய டைரி மில்க் சில்க் சாக்லேட் வாங்கும்போது இதுவரை தன் வாழ்வில் ஒரு டைரி மில்க் சாக்லேட்டும் சுவைத்திராத என் தோழியும் இந்த நூற்றியறுபது ரூபாய் இல்லாமல் புத்தகங்களுக்கான நோட்ஸ் வாங்க முடியாததால் பக்கம் பக்கமாய் மற்றவர்களிடமிருந்து நோட்ஸைக் கடன் வாங்கி எழுதி வீங்கிப் போன அவள் விரல்கள் என் கண் முன் நிற்கத்துவங்கின.

பத்தாம் வகுப்புவரை அதீத பராமரிப்புடன் வளர்க்கப்பட்ட நான் காட்டு செடி போல் வளர்ந்திருந்த என் சக மாணவர்களை வியப்புடன் கவனித்தேன். இந்த மாற்றம் வாழ்வின் மீதான என் மேலோட்டமான புரிதலைத் துடைத்தெறிந்தது. இந்த அனுபவத்தை நான் வகுப்பறை புத்தகங்களிடம் ஒரு போதும் கற்றதில்லை தன் மர்ம மடிப்புகளுக்கு வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் சவால்களை எதிர்க்கொள்ள இந்த அனுபவங்களே பாடப்புத்தங்களை விட  எனக்கு முக்கியமானதாய் தோன்றுகிறது.

இப்படியான கல்விகட்டமைப்பில் மாணவர்களை வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் தயாராக்கும் ஆசிரியர்கள் மீது, பெரும் அவநம்பிக்கை ஏற்பட்ட காலத்தில்தான் இரா. நடராஜன் எழுதிய  ஆயிஷா என்னை வந்தடைந்தாள். நான் அதிகம் வெறுக்கும் இயற்பியல் வகுப்பில் மேசையின் கீழ் மறைத்து படிக்க துவங்கியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது.

ஏனோ ஒவ்வொரு வார்த்தையாய் என்னுள் கரைய கரைய அந்த பக்கங்களில் நான்    என்னைக் கண்டெடுத்தேன்.  அந்த கதையில் வரும்  ஆயிஷா என்னுள் புதைந்துக்கிடந்ததை உணர்ந்தேன். ஏதோ ஒரு சிறு உந்துதலில் இதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கத் துணிந்தேன். ஆயிஷா உடனான அந்த நாட்களில் என்னை  அடையாளம் கண்டுக்கொண்டேன்.

ஒன்பதாம் வகுப்பைத் தாண்டாதவளான நான், என் சிநேகிதி தஸ்லீமாவுடன் மொழிப்பெயர்ப்பு  வேலைகளில் ஈடுப்பட்டேன். என் ப்ரியமான ஆசிரியை சுபா அக்காவின் உதவியுடன் ஆயிஷா என் முதல்தொகுப்பாக வெளிவந்தது.  

ஆயிஷாவை வாசிக்கும் ஒரு ஆசிரியரேனும் தங்கள் வகுப்பறைகளில் நிறைந்திருக்கும் மாணவர்களிலிருந்து ஒரு ஆயிஷாவையேனும் கண்டெடுக்க முயன்றால் அதுவே  இப்புத்தகத்தின்  வெற்றியாக இருக்கும்.

நிழலாய் என்னுடன் இருக்கும் சகோதரன் வம்சியின்றி  என் வாழ்வில் ஏதும் நிகழ்ந்திடாது. அவனை அண்ணன் என்றோ, நண்பன் என்றோ என்னால் எப்போதும் பிரித்திட முடியாது. வம்சி என்பது நான், அவன் என்னுள் கரைந்தவன்.  பொது வேலைகள், சமூக வேலைகள், இலக்கிய பணிகள்  என இந்த மொத்த பிரபஞ்சத்திற்காய் வாழ முயலும் என் அம்மாவும் அப்பாவும் கொடுக்க மறந்த அன்பின் கதகதப்பை நான்  வம்சியிடம் மீட்டெடுத்தேன்.

இனி வரும் நாட்களிலும் நான் ஏதேனும் உயரங்களை அடைந்தால் அது அவன் விரல் பிடித்தப்படிதான் இருக்கும்.

என் வாழ்வின் இனிமையான எல்லா பக்கங்களும் வம்சிக்கு மட்டுமே சமர்பணம்.


காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரியில் நிகழ்ந்த கல்வியியல் மாணவர்களுக்கான  படைப்பாளிகளை சந்திப்போம்என்ற நிகழ்வில் நிகழ்த்திய உரையின் எழுத்தாக்கம் 

                                                                                                                maanasiwithdreams@gmail.com
















   

No comments:

Post a Comment