Friday, August 27, 2021

நிறைவேறாதக் கனவுகளோடு என் கண் இமைகளை இதுவரை மூடினதேயில்லை


-         உமாபிரேமன்

 

உமாபிரேமன் என்ற பெயரை ஐந்தாண்டுகளுக்கு முன் என் நண்பனும், கைரலித்தொலைக்காட்சியின் நிருபராக பணிபுரிபவனுமான பிரதீப்நாரயணன் தான் முதன்முதலில் என் முன்னால் உச்சரித்தான்.

ஒரு திரைப்படக்காட்சியைப்போல அவன், உமாவின் மொத்த ஜீவித்ததையும் ஒருமணி நேரத்தில் சொல்லி முடித்தபோது நான் பேச்சற்றவனானேன். உமாவின் ஜீவித சரித்தரம் மலையாளத்தில் புத்தகமாக வந்திருப்பதாகவும், அதை ஷைலஜா தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று பிரதீப் தன் சொற்களை நிறுத்தியபோது, என வாழ்வில் இம்மனுஷியை ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்பதில் மனம் நிலை பெற்றிருந்தது.

அன்றிரவே ஷைலஜா உமாவைத்தொடார்புகொண்டு பேசியவுடன், அடுத்த நாள்அதிகாலை உமா எங்களோடு எங்கள் பத்தாய நிலத்திலிருந்தாள்.

எப்படி சாத்தியம் இது உமா? என்ற எங்கள் கேள்விக்குத்தான் உமா சேச்சி

நிறைவேறாத எந்த கனவுகளோடும் நான் உறங்கப்போவதில்லை பவா, அதன் நிறைவேற்றம்தான் என் உறக்கத்தைத் தரும் என ஒரு கவிதைப் போல பதிலளித்தாள்.

உமாவை மெல்ல அவதானித்தேன்.  ஜம்பது வயது என யாராலும்  கணிக்கமுடியாத உடல்வாகு. சராசரிக்கும் கொஞ்சம் குள்ளம். கேரளா பெண்களுக்கேயுரிய தேங்காயெண்ணெய் பூசின செந்நிற தேகம். அத்தனை பாந்தமான ஒரு கண்ணாடி. எளிய காட்டன் புடவை. இதுதான் உமா.

இதுவா உமாபிரேமன் என்ற இந்தியாவே வியக்கும் இப்பெண்ணின் ஆளுமை?.

இல்லை. இது உமாவின் புறத்தோற்றம் மட்டுமே.

என்முன்னாள் வியாபித்திருக்கும் இப்பிரமாண்டமான கருங்கல் கட்டிடத்தின் முன் உட்காந்திருப்பது உமா பிரேமன் என்ற ஐம்பது வயது பெண்ணின் உருவம் மட்டுந்தான்.

இவள் கடந்து வந்த வாழ்வு, கசந்த நாட்கள், விம்பக்கூட அனுமதிக்காத தனிமை, சந்தித்த துரோகம், அதை பரிசளித்த உறவுகள், அவள் பதினேழு வயது இளமையை, தன் காதலனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்ற சொந்த அம்மா,

தடதடக்கும் ரயில் சத்தத்தோடு அவனோடு பம்பாய்க்கு  பயணித்த பகலும், இரவும்,

பிரேமனின் சுயம் கண்டு அலறியடித்து அம்மாவுக்கு தொலைபேசிய அந்த உடல்நடுங்கின அதிகாலை, அவள் கதறல் கேட்டு அம்மாவின் சொற்களில் தெறித்த அலட்சியம், பின் எதுவுமற்றுப்போய் சம்பளமில்லா வேலைக்காரியாக, அல்லது பிரேமனின் ஜந்தாவது அங்கீரிக்கப்படாத மனைவியாக வாழ நேர்ந்த கருணயைற்ற காலங்கள் என அத்தனையும் என் முன்னாள் ஒரு எளிய பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் இந்த மனுஷியின் திரேகத்தில் படிந்திருந்தது.

இத்தனை வலியை அனுபவித்த இவளிடம் ஒரு சிறு குழந்தையின் களங்கமற்ற புன்னகையும் ஒரு கன்றுக்குட்டியின் துள்ளலும்  இன்னும் மிச்சமிருக்கிறது. இதற்குமேல் வஞ்சிக்க, இதற்குமேல் ரணப்படுத்த என்ன இருக்கிறது சகோதரா என் உடலிலும், வாழ்விலும் என்ற கேள்வி மட்டும் இன்னும் வெளியேராமல் அவள் உடல்மொழியில் தங்கியிருக்கிறது.

ஷைலஜாவுக்கும், உமாவுக்குமான உரையாடலில் நான்தான் பலமுறை சிதறுண்டேன். உடல் வெப்பம் அதிகமானபோதெல்லாம் அக்கட்டிடத்திற்கு பின்னால் நின்று ஒரு சிகெரட் பற்றவைத்துக் கொண்டேன்.

அவளைத்தவிர யாராலும் சொல்ல முடியாத அவள் கதை நள்ளிரவைத் தாண்டியும் நீண்டு கொண்டேயிருந்தது. அடுத்த நாள் சூரிய உதயம்தான் அவர்கள் உரையாடலை நிறைத்தது.

நான் உமாவுடனேயே இருந்து அவளை அவதானித்தேன். பல்துலக்குதல், காபிக்குடித்தல், குளித்தல், உடைமாற்றல் என எந்த வழமைகளுமின்றி காரில் ஏறி அடுத்தப் பணிக்கு அவள் பயணித்துக் கொண்டேயிருந்தாள்.

ஷைலஜாவின் கைகளில் உமாவின், மலையாளத்தில் சொல்லி எழுதப்பட்ட சுயசரிதையிருந்தது. சுய சரிதைகள் மகாத்மாக்களுக்கு மட்டுமானதல்ல. என்பது என் மூளைக்கு உறைத்த நிமிடம் அது.

கோவை சிந்தாமணி புதூரில் ஒரு சாதரண ஆஸ்பத்திரி கம்ப்பவுண்டரின்  மகள்தான் உமா. ஒரு தம்பிக்குட்டன் அவளுக்குண்டு. அம்மா தன் மத்தியவயதில்  ஆண்களின் பார்வைகள் குவியும் அழகுடன் துலங்கினாள். அந்த அழகுதான், உமா பள்ளிக்கூடம் முடித்து வந்த ஒரு சாயங்காலத்தில் அவள் குடும்பத்தை மொத்தமாகச் சிதைத்திருந்தது.

பக்கத்து வீட்டு பெயிண்ட்டரோடு அம்மா ஓடிவிட்டாள் என்ற செய்தி மனிதர்கள் வழி காற்றில் கரைந்து, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் உமாவின் காதுகளில் படிந்தது.

உமாவின் கண்ணீர் அவள் தம்பியில் தலைகோதலில் தெறித்தது.

உமா முதன் முதல் வாழ்வில் எதுவுமற்றவளானாள். ஒரு ஒன்பது வயது பெண்ணின் மீது வாழ்வு பாறாங்கலை தூக்கிப்போட்டு தன் குரூரத்தைத் தீர்த்துக் கொண்டது.

அவ்வீடு மௌனத்தால் உறைந்துப்போனது. அதன் பின், காலம் அதை நீடித்துக்கொண்டேயிருந்தது எனலாம். சொற்களற்ற சுடுகாடாய் ஒரு மனித வாழ்விடம் ஒரே நாளில் மாறிப்போனது. அடுத்த நாள் காலை தானே தலைசீவி, பொட்டிட்டு, பூச்சூடி அப்பெண் பள்ளிக்கூடம் போனோள். சக மாணவ மாணவிகள் முன் தலைக்குனிந்து உட்காரப் பழகிக்கொண்டாள்.

சொல் என்றால், அது ஆசிட் ஊற்றி நிரப்பபட்ட ஒன்றுதான் என்பதை அவள் மனம் மெல்ல மெல்ல உணரத்துவங்கிய துவக்க நாட்கள் அவை. அது வாழ்நாளெல்லாம் அப்படியே நீடித்தது.

உமாவின் வாழ்வைப்பற்றி பேசுவதற்காக எழுதப்படுபவையல்ல இவை. அதை நீங்கள்கதை கேட்கும் சுவர்கள்என்ற அவள் சுய சரித்திரப் புத்தகத்தில் வாசித்தறியலாம்.

ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று, அது நீங்கள் எதிர்பாராத் தருணத்தில்ஏதோவொன்றை பொத்தி வைத்து உங்களுக்குத் தரும்என்ற கேரளாவின் புகழ்பெற்றக்கவிஞன் பாலச்சந்திரன்சுள்ளிகாடு வின் வரிகள் எல்லோருக்குமானதா?

பட்டாம்பூச்சியின் உற்சாகத்தோடும், கன்றுக்குட்டியின்  துள்ளலோடும் பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு பெண்ணிற்கு வாழ்வு எத்தருணத்திலும், எதையும் பொத்திவைத்து தந்துவிடவில்லையே!

திரும்பின திசைகளெல்லாம் பெரும் துரோகம் படிந்திருந்த மனித முகங்களைதானே அவள் கண்டடைந்தது. சொந்த அம்மாவின் முகம்தானே அதில் முதல் முகம்.

நாம் சிதைந்துவிடக்கூடிய, எதிர்மறை முடிவெடுத்து விடக்கூடிய, அல்லது தற்கொலையை நோக்கி நடந்துவிடக்கூடிய ஒரு தருணம் இது. இங்குதான் உமா நேர்மைறயாக, ஒரு தனி மனுஷியின் சமூகப் பங்களிப்பை, உறுதிப்படுத்துகிறாள்.

திசையெங்கும் வியாபித்திருக்கும்  அக்குரூர முகங்களை நிராகரித்து, அல்லது பார்க்க திராணியற்று, தாய்மையின் ஈரம் வேண்டி புன்னகைத்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை தன்னோடு வாரி அணைத்துக்கொள்கிறாள். அதனால்தான் உமா என்ற வாழ்வு சிதைக்கப்பட்ட  அப்பெண்ணை உலகுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

பிரேமனின் இறப்புக்குப்பிறகு, இதுவரை சம்பளமில்லா வேலைக்காரியாக அவ்வீட்டில் கிடந்ததற்கு, அவளுக்கு ஒரு பெருந்தொகை பிரேமனின் உயில்மூலம் வந்தடைகிறது. அது தன் உழைப்பிற்கு இதுவரை தரப்படாத உழைப்பூதியம் என்கிறாள் உமா.

அத்தொகையில் பங்களா, கார், லௌகீக பரவலாக்கள் என உமாவின் வாழ்வு  செம்மையை நோக்கி பயணித்திருந்தால், அவளும் கோடிக்கணக்கான  சராசரிகளில் ஒருத்திதான், எழுத்தாளனின் மதிப்புமிக்கச் சொற்கள் அவளுக்கானவையல்ல. அப்பணத்தில், நோய்மைக்கும், மருத்துவத்திற்குமான இடையிலிருக்கும் ஒரு பெரும் இடைவெளியை, கருங்கற்களை தன் இளம் தோள்களில் சுமத்து பாலம் அமைக்கிறாள் உமா.

பெரும் வலியிலும், ரணத்திலிருந்தும் துவங்கப்பட்ட சாந்தி மெடிக்கல் இன்பர்மேஷன் சென்டர் என்ற அந்த அமைப்பு கேரளாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றானது.

இன்று பதினைந்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இலவச இரத்த சுத்திகரிப்பு நிலையங்களை அது  தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

நோய்மையால் வாழ்விழந்து போகும் பல இலட்சம் எளிய மனிதர்களின்  சரணலாயமாக உமா இரண்டே ஆண்டுகளில் தன் நிறுவனத்தை மாற்றிக்காட்டுகிறாள்..

காலம் தனக்களித்த பெருங்கசப்பை மலைவாழ் மக்களின் கள்ளங்கபடமற்ற சிரிப்புகளில் அவள் தன்னை நிதம் கரைத்துக்கொள்கிறாள்.

கோயமுத்தூரிலிருந்து நாற்பது நிமிட பயணத்தில் நாம் அட்டப்பாடி மலைப்பகுதியைப் தொட்டுவிட முடியும். சிறுவாணி ஆற்றின் துவக்கம் இந்த பள்ளத்தாக்கில்தான் ஆரம்பிக்கிறது. யானைகளும், காட்டெருமைகளும், சுதந்திரமாகசுற்றித்திரியும், இன்னும் சிதைக்கப்படாத இம்மலைப் பிரதேசம்தான் தான் செயல்பட வேண்டிய நிலப்பரப்பென அவள் அங்கேயே நிலைபெறுகிறாள்.

தான் பிறந்து வளர்ந்த கோவை சிந்தாமணிப்புதூர் இங்கிருத்து கூப்பிடுத் தூரத்தில்தான்,

பெரும் துயரமும், வலியும் நிறைந்த தன் குடும்பநாட்களை சுமந்த குருவாயூர் இங்கிருந்து பயணிக்கும் தூரத்தில்தான். இந்த  இரு நிலப்பரப்புகளையும், தன் பால்யத்தை, இளமையை சிதைத்த இவ்விரு நிலப்பரப்புகளையும் இம்மலைமீதிருந்தே தன்னால் நுகரமுடியும் என்ற இருமாப்பில்தான் உமா இங்கு தன் நிரந்தர வாழ்விடத்தை அமைத்துக்கொண்டது.

எதையும் மறக்கிற, மறைக்கிற மனம் என்றைக்குமே உமாவிற்கு வாயத்ததில்லைஅவள் எல்லாவற்றையும் அடைகாத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறாள். குஞ்சுப் பொரித்தலின் போது வெளியேறும் விரியன் பாம்பின் குட்டிகளை தூக்கி வனத்தில் வீசுகிறாள்மென்பஞ்சு போன்ற ஒரே ஒரு கோழிக்குஞ்சின் ஸ்பரிசம்தான் தன் வாழ்தலுக்கானது என உறுதிப்படுகிறாள் அதுபோதும் அவளுக்கு.

கோவையில் புகழ்பெற்ற அம்மருத்துவகல்லூரியின், மருத்துவநிபுணரை சந்திக்க, எதிரில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்குபோது பக்கத்திலிருந்து வரும் லேசான விசும்பலைக்கேட்கிறாள். தன் கை முட்டியை மடக்கி வைத்துக் கொண்டிருக்கும் அப்பையனை கூர்ந்துப் பார்க்கிறாள்.

சுருள், சுருளான முடியும், கேரளாக்காரர்களுக்கேயான வெளிர் மஞ்சள் நிறமும், அப்பையனின் வயது இருபதுக்கு மேலிருக்காது என உமாவுக்குச் சொல்கிறது.

என்னாச்சு தம்பி?”

அது ஒரு தாய்மை ததும்பும் பரிவின்க் குரல்.

சும்மாருங்க சேச்சி

பெரும் வலியிலிருந்து எழும் ஆற்றாமையின் பதில்.

சொற்களின் பரிமாற்றம் ஓரிடத்தில் இருவரையும் மௌனமாக்குகிறது.

டையலிஸிஸ் முடிந்து இப்போதுதான் வந்திருக்கிறேன். வலித்தாங்க முடியலை

இருபது வயதில் டயலிஸிஸா?

உமாவை அவன் கண்களால் எறெடுக்கிறான். அக்கண்களில் வாழ்வதற்கான ஒரு இறைஞ்சல் இருப்பதை உமாவால் உணரமுடிகிறது. தன் வாழ் நாட்கள் இப்படியான இறைஞ்சல்காளால் நிரப்பட்டவைதான் என அவள் ஒரு கணம் தன்னை உணர்கிறாள்.

நான் வேணா உனக்கு என் ஒரு கிட்னியைத் தரட்டா

ஜலீல் அதை நம்பவில்லை.

அப்பாவும் அம்மாவுமற்ற இந்நாட்களில் ஒவ்வொரு நாளும் அவன் தன்னை அனாதையாக உணர்ந்த நாட்கள் அவை.

உறவுகள் என்று நம்பின எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு, திருப்பூரில் ஒரு மெக்கானிக்கல் கடை நடத்தி வந்த சுனீலுக்கு  நோய்மையின் தீவிரம் கடையை மூட வேண்டிய அந்த துர்பாக்கிய நாளும் கூடவே சேர்ந்து கொண்டது.

தன் கிட்னி, சுனீலுக்கு சரியாகப்பொருந்தும் என்ற மருத்துவ அறிக்கை உமாவுக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்தது.

பல எதிர்விவாதங்களுக்கிடையே உமாவின் பிடிவாதமே இறுதியில்  ஜெயித்தது. சிறு வயதில் தான் எம்.ஜி.ஆருக்கு தர நினைத்த கிட்டினியை இன்று ஜலீலுக்கு தருவதன் மூலம் அவள் நெடுநாளைய கனவு ஒன்று இன்று நிறைவடைகிறது.

பக்கத்து படுக்கையில் சுனீல் படுத்துக்கொண்டு உமா சேச்சி என்ற அந்த தேவதையையே கண்கெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

மயக்கநிலைக்கு கொண்டு போவதற்கு முன், டாக்டர். சதீஷ் சொல்கிறார். ‘‘ரொம்ப  ரிஸ்க்கான ஆப்ரேஷன் உமா

பொழைச்சா ஒரு கிட்னியை எடுத்துக்கோங்க டாக்டர், செத்துட்டா ரெண்டையும் எடுத்துக்குங்க என சொல்லிவிட்டு, தன் படுக்கைக்கருகில் என்ன நடக்கிறது என தெரியாமல் நிற்கும் ஏழு வயதான தன் ஒரே மகன் சரத்தை ஏறெடுக்கிறாள்

சரத் எந்த சலனமும் இன்றி,

அம்மா நீ திரும்ப வரும்போது சக்திமான் ட்ரெஸ் வங்கிட்டு வர்ரீயா?

என்ற அக்குழந்தையின் மொழியை அந்நிலையிலேயும் ரசித்த உமா என்ற ஒருத்திதான் என் முன்னால் இப்போது சலனமற்று உட்கார்ந்திருப்பவள்.

உறுதியான பிளாஸ்டிக் நாரினால் அவள் வயிற்றில் 32 தையல்கள் போடப்பட்டிருப்பதை அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாள்தான் அவள் அறிந்துக்கொண்டாள்.

இருபத்தி மூன்று ஆண்டுகள் எந்த பிரச்சனையுமின்றி ஜலீல் உயிர்வாழ உமா எல்லாவித ஆதூரமாகவும் ஜலீலுக்கு இருந்தாள். ஆனால் காலம் கருணையற்றது. முதுகுத்தண்டு புற்று நோயால் ஆறு மாதங்களுக்கு முன் உமா எத்தனை போராடியும்  காப்பாற்ற முடியாமல் ஜலீல் மரணித்துப்போனான். உமா மொட்டையடித்து தான் இறுதிப்பிரியத்தை பாராதப் புழாவில் கரைத்துக் கொண்டாள்.

மூன்று மாதங்களுக்கு முன்இக்கொரனாக்காலத்தில், நானும் என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவும் அட்டப்பாடியில் எங்கள் நண்பனும் எழுத்தாளனுமான ஆனந்தின்சத்தர்ஷன்என்ற சிறுவாணி ஆற்றங்கரை தங்கும் விடுதிக்குப்போனபோது. இருவருமே நல்ல பசியிலிருந்தோம். மத்தியானம் இரண்டு மணிக்கு சத்தர்ஷனின் அடர்ந்த மரநிழலில் போடப்பட்டிருந்த உணவு மேஜையின் முன் உட்காருகிறோம்.

உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது பவா என  நண்பன் ஆனந்த் தன் சமையலறையைப் பார்த்துக்கொண்டேச் சொல்லி எங்களை இருக்கை நுனிக்கு கொண்டுவருகிறார்.

நான்கு மணிநேரமாக தானே எங்களுக்காக சமைத்த கேரள பாரம்பரிய உணவோடு இதழில் புன்னகை ததும்ப இந்தியாவின் பலம் வாய்ந்த நூறு பெண்களில் ஒருத்தி என்று பிரணாப்முகர்ஜி ஜனாதிபதியாக இருந்தபோது அழைத்து விருந்தளித்த உமாபிரேமன் என்ற அந்த எளிய மனுஷி எங்கள் முன் நிற்கிறாள்.

மொதல்ல அடைப்பிரதமன் போடுங்க உமா சேச்சி

நான் துள்ளுகிறேன். அது உமாவின் வாழ்வில் காலமெல்லாம் கசிந்த கசப்பை போக்க என உமாவுக்குப் புரிந்தது.

ஒரு கரண்டி நிறைய அடைப்பிரதமனை என் இலைக்குப் பிரியத்துடன்  பரிமாறுகிறாள் அந்த எளிய மனுஷி.

 

   

     

No comments:

Post a Comment