Wednesday, January 5, 2011



அப்பா

கையிலடங்காத நீரின் சுழிப்பு.

வயசோ வருஷமோ ஞாபகத்தில் இல்லை. ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே நிலத்திற்குப் போகும் அனுபவம் எப்போதும்போல அன்றைக்கும் வாய்த்திருந்தது.

புதிதாய் வாங்கின புஞ்சை நிலத்தில் கிணறு வெட்டு நடந்து கொண்டிருந்தது. கிணற்று மேட்டில் அப்பாவோடு உட்கார்ந்துகொண்டு நிமிஷத்துக்கொரு தடவை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை மொரம்பு, ஒட்டந்தட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தட்டு மொரம்பும் கொட்டப்படும் போதெல்லாம் அப்பா எதையோ தேடும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்துவிட்டு, அடுத்த நொடியே கிணற்றுக்குள் பார்க்கிறார். உள்ளே ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். கடப்பாரைச் சத்தம் மட்டுமே மேலேறி வருகிறது. புதிர்களால் கிணறும் சூழலும் நிரம்பியிருந்தது.

இப்போது வெளியே வந்து விழுந்த மொரம்பில் லேசான ஈரம் தெரிந்தது. இதற்காகவே தவமிருந்ததுபோல் அப்பா ஓடிப்போய் அதை அள்ளித் தன் முகத்தருகே சமீபித்தார். அந்த வெள்ளை மொரம்பைத் தன் முகத்தால் ஸ்பரிசித்தார். அதன் சில்லிடலில் அப்பாவின் முகம் பிரகாசமடைந்தது.

"வையாபுரி, நொசுவுல ஈரம் தெரியுது. இரு இரு நானே உள்ள வரேன்'' என்று ஆர்வம் மேலிட எழுந்த சத்தம் எல்லோரையும் மேல் நோக்கித் திரும்ப வைத்தது.

நீண்டு தொங்கிய ஒரு கயிற்றினூடே அப்பாவும், காலியான அந்த ஒட்டந்தட்டின் வழியே நானுமாய் உள்ளே இறங்கினோம். கிணற்றுக்குள் நல்ல இருட்டு. உள்ளே நின்றிருந்த ஆறேழு பேரையும் கண்கள் பழகிக்கொள்ளச் சில நிமிஷங்கள் தேவைப்பட்டன. கிணற்றுக்குள்ளிருந்து மேலே பார்த்தால் அச்சம் ஒரு விலங்கைப்போலக் கரையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அந்த அச்சத்தைத் தவிர்த்து, பார்வையைத் தரையிலேயே நிலைக்க முயற்சித்தேன்.

''வையாபுரி மொரம்புல ஈரம் தெரியுது. எந்தப் பக்கம்?"

"சனி மூலையில வாத்தியார"

அப்பா நிதானிக்கிறார்.

தன் அனுபவத்தாலும், பார்வையாலும் அப்பாவின் கண்கள் ஒரு குறிப்பட்ட வெள்ளைக் கல்லின்மீது படிகிறது.

"இந்தக் கல்லுக்குக் கீழ கடப்பாரையால மொள்ள நெம்பு"

எல்லோர் பார்வையும் கடப்பாரை நுனி விழப் போகும் அந்தச் சின்னக் கல்லின்மீது குவிய, வையாபுரி கடப்பாரையால் கல்லுக்கடியில் தாங்கி நெம்புகிறார்.

"நீர்"

இத்தனை யுகமாய்க் கல்லின் முட்டுக்குள் அடங்கியிருந்த நீரின் பிரவாகம். இருட்டிலும் மிளிர்ந்த அந்த மனித முகப் பிரகாசங்கள் அதற்குமுன் எப்போதும் நான் காணாதவை.

அப்பா என்னைத் தழுவித் தூக்கி, அந்த ஊற்றுக்கண்ணில் முகம் புதைய நீர் அருந்த வைக்கிறார். நான் ருசியால் சில்லிடுகிறேன்.

நீர் எங்களின் கால்மீதேறி நனைக்கிறது. நாங்கள் நிறைகிறோம்.

ஊற்றின் வேகம் அப்பாவை இன்னும் ஆர்வப் படுத்துகிறது.

"வையாபுரி உள்ள ஆறு, கீறு ஓடுதா பாருய்யா"

அப்பாவின் அந்தக் குதூகலம், என் வயதுக்கானது.

காலம், காலமாய்ப் பீறிட்ட அந்த ஊற்றை ஒரு சின்ன மொரம்புக் கல் தடுத்து வைத்திருந்தது மாதிரி நானும் அப்பாவைப் பற்றிய என் ஞாபகங்களை எழுதிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருந்தேன். எழுத்தின் தொடர்ச்சி எனக்குத் தெரியும், முடிவு நானறியாதது. எனக்குள்ளேயே அந்த ஊற்றுநீர் ததும்பிக்கொண்டிருந்தது. அதன் இசை வடிவமான சத்தம் என் ஜீவன். அடைத்துக் கொண்டிருந்த அக்கல்லை இன்று என்னிலிருந்து அகற்றுகிறேன்.

"அப்பா,"

கொட்டிக் கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?

எதை விட?

அப்பாவின் ஆசிரியப் பணி முடிந்து ஓய்வுபெற்ற சமயம் அது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாரானது. சி.பி.ஐ.(எம்), திமுகவுடனும், அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்திருந்தது. நான் திமுக வேட்பாளருக்குத் தீவிரமாய்க் களப்பணியிலிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய இரவு காங்கிரஸ் கட்சிக்கு பூத் ஏஜண்ட் கிடைக்காமல், மறதியின் பக்கங்களிலிருந்து பழைய காங்கிரஸ்காரரான என் அப்பாவை மீட்டெடுத்து, வாக்குச்சாவடியின் காங்கிரஸ் வேட்பாளரின் முகவராக உட்கார வைத்தார்கள். திமுக சார்பாக அன்று பூத் முகவராக இருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சி. சகலவிதமான தில்லுமுல்லுகளோடும் திமுகவினர் வாக்குகளைப் பதிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து என் பாட்டியைக் கண் தெரியாதவர் எனச் சொல்லி ஒரு திமுக உடன்பிறப்பு சாவடிக்குள் அழைத்து வந்தது. அதாவது அந்தப் பாட்டிக்குக் கண் தெரியாது. அதனால் அவர் உதவியோடு வாக்கை அந்தத் திமுகக்காரரே பதிப்பார். அப்பா ஆக்ரோஷத்தோடு இதை எதிர்த்தார். அதிகாரியிடம் "சார் இவங்க என் சொந்த மாமியார், என் வீட்லதான் இருக்காங்க. நல்லா கண்ணு தெரியும் சார்" என நீதியின் குரலைக் கொஞ்சம் உயர்த்தினார்.

நான் "சார் இவங்க என் சொந்த பாட்டி சார், பத்து வருஷமா கண்ணே தெரியாது சார்" என்ற ஒரு பெரும் பொய்யை அநீதியின் பலத்திலிருந்துச் சொல்ல, ஓட்டு அரசியல் எனக்குக் கற்றுத் தந்திருந்தது.

அந்தச் சாவடியின் பூத் அதிகாரி என் பாட்டியின் உயரத்திற்குக் குனிந்து,

"பாட்டிம்மா கண்ணு தெரியுமா?" எனச் சத்தம் போட்டுக் கேட்டார். வரிசையில் நின்ற எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பாட்டி மிகக்கவனமாக,

"பத்து வருஷமாச்சு சார் கண்ணு அவிஞ்சு," என்றது நிதானமாக, வாங்கியிருந்த 50 ரூபாய்க்கு விசுவாசமாக.

அப்பா, "இந்த அரசியலும் வேணாம், ஒரு மயிரும் வேணா"ன்னு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

அவர் முன் ஜெயித்துவிட்ட திமிரில் நின்ற நான்தான் அடுத்த தலைமுறையின் பிரதிநிதி. தனக்கு அடுத்த சந்ததி நேர்மை, அன்பு, உறவு எல்லாவற்றையும் பணத்துக்காக விற்கத் துணிவதை அவர் மனம் கடைசிவரை ஏற்கவேயில்லை.

அவருக்கான சில நியாயமான கோரிக்கைகளில் கடைசிவரை அவரால் வெற்றியடைய முடியாதபோது, நாங்கள் எவ்வளவு தடுத்தும் தான் பெற்ற நல்லாசிரியர் விருதை (100 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் அது) ஒரு நீண்ட கடிதத்துடன் அரசுத் தலைமைச் செயலருக்குத் திருப்பி அனுப்பினார்.

மத்திய அரசுக்கெதிராக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பாரத் பந்த் அது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் எனப் போலீஸ் கருதிய பட்டியலில் என் பெயரும் நண்பன் கருணா பெயரும் இருந்தது. இன்றிரவு நிச்சயம் கைது செய்யப்படலாம் எனக் கருதிய பொழுதில் நண்பர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமினோம். எல்லோர் முகத்திலும் பதட்டமும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவுமான அவசரமும் இருந்தது. சாப்பிட்டபிறகு, மூங்கில்துறைப்பட்டுக்குச் சென்று என் நண்பர் வீட்டில் தங்குவது பந்த் முடிந்த பிறகு திரும்புவது என முடிவெடுத்தோம். ஒரு ஈசிச்சேரில் படுத்தபடி எங்கள் திட்டம் முழுவதையும் கவனித்துக் கொண்டிருந்த அப்பா திடீரென நாங்கள் யாரும் எதிர்பார்க்காதபடி எழுந்து,

"இங்க பார்டா, இந்த வீட்ல இருந்து போக யாரையும் நான் விடமாட்டேன். பந்த்ல அரெஸ்ட் ஆகுங்க, அல்லது கட்சியில இல்லன்னு எழுதிக் கொடுத்துடுங்க. மீறிப்போனா, நானே எங்க போயிருக்கீங்கன்னு போலீசுக்குச் சொல்லிடுவேன்" என கர்ஜித்தார்?

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நாங்கள் நிலைகுலைந்தோம். அவர் எதிர்பார்த்தபடியே அன்றிரவு நான் கைது செய்யப்பட்டேன். என் நண்பர்கள் தப்பித்தார்கள். கொள்கையின் மீதான இந்த மூர்க்கத்தைத் தன் இறுதி நாள்வரைத் தனக்குள் வைத்திருந்தவர் அவர்.

என் திருமணம் வரையிலும்கூட நானும் அப்பாவும் தெருவில் நின்று சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்துத்தெருவரை அவர் என்னைத் துரத்தி, துரத்தி அடிப்பது என் கல்லூரிப் படிப்பு முடியும்வரை தொடர்ந்திருக்கிறது. ஒரு முறை நானும் அப்பாவும் போட்ட சண்டையின் தொடர்ச்சியாக அவர் பெட்டியை எடுத்து வெளியில் வீசி எறிந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் எதிரில் தோலில் மாட்டிய தோள் பையோடு கோணங்கி. அவன் அதிர்ச்சியடைந்தான்.

அந்த அனுபவத்தை "சாரோனின் சாம்பல் இறகு" என்று சிறுகதையாக்கியிருக்கிறான். பேரன்பினால் எழும் பிரச்சனை இதுவென நல்ல வேளை என்னைப் போலவே கோணங்கியும் புரிந்து வைத்திருந்தான். நானும் இவ்வனுபவத்தை என் "சிதைவு" சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன்.

அப்பா தன் இருபத்தி ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்து, வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் என்ற ஒரு புகழ்பெற்ற குன்றுக்கருகில் தான்தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த ஒரு எட்டி மரத்தை, தன் தற்கொலையை நிறைவேற்றித்தரத் தேர்ந்தெடுத்தார்.

மறு பரிசீலனைக்கிடமின்றி மாலை ஐந்து மணிக்குக் கோட்டாங்கல் பாறையில் மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. எதற்கெனத் தெரியாமலே கண்ணிலிருந்து நீர் வழிகிறது. சரியாக ஆறு மணிக்கு இப்பேரமைதியைக் குலைத்து வாணவேடிக்கைகளும், வெடிச் சத்தங்களும் அவரை அலைக்கழிக்கின்றன. தன் அகமனதை ஊடுருவும் இப்புற உலக இயக்கத்தை எத்தனை தடுத்தும் அவரால் நிறுத்த முடியவில்லை.

கண்கள் மேற்கையே வெறிக்கின்றன. சுகுமாரன் சொல்வதைப் போல தற்கொலையில் தோற்றவனின் மௌனமல்ல அது. தற்கொலைக்குத் துணிந்தவனின் மௌனம். எதிரில் ஒரு மங்கலான ஓவியம்போலத் திருவண்ணாமலை மலை தெரிகிறது.

தீபச் சுடரொளி பற்றிப் பிரகாசிக்கிறது. அவ்வொளியின் வெப்பத்தை இம்மலைமேட்டில் படுத்துக்கிடக்கும் அப்பாவின் சரீரம் உணர்கிறது.

துடித்தெழுகிறார்.

அதற்குப்பிறகும் அந்த எட்டி மரத்தில் ஆறேழு நாட்கள் அந்தக்கயிறு தொங்கி கொண்டிருந்ததாகவும், பின்பொருநாள் அப்பாவே அதை அகற்றியதாகவும் சொல்வார்.

தன் இறுதி நாள்வரை அப்பாவை ஒரு நாத்திகனாகவே நாங்களெல்லாம் அறிந்தோம். வெளிவாழ்வு, உள்வாழ்வு இதெல்லாம் தெரியாத மனுஷன் அவர். ஆனால் தன் வாழ்வின் அந்திமம் வரை ஒரு ரகசியத்தை அடைகாத்தார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு கார்த்திகை தீபத்தன்றுதான் அந்த இரகசியத்தை அவிழ்த்துப்பார்த்தோம்.

ஒவ்வொருத் தீபத்தன்றும் காலையிலேயே குளித்து முடித்து, தூய வெள்ளை உடுத்திப் பத்து மணிக்கு சைக்கிளில் புறப்படுவார். எங்கேயெனக் கேட்க யாருக்கும் துணிவிருக்காது. பதிலைக் குடும்பத்துக்குள் கொட்டிவிட்டுத்தான் புறப்படவேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இருந்ததில்லை அவருக்கு.

ஒரு மணிக்குத் திரும்பி விடுவார்.

ப்ராட்டஸ்டன்ட் கிருத்துவக் குடும்பமாகிய எங்கள் வீட்டில் எந்தக் கார்த்திகை தீபத்தன்றும் மத்தியானத்தில் சமைத்ததில்லை. தீபம் பார்த்த பிறகே, மொட்டைமாடியில் இலை போட்டுச் சாப்பாடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசாமல் ஏதோ அடங்காத மனதோடு உலாத்திக் கொண்டிருப்பார். தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு. தனக்கு வாழ்வு கொடுத்த தீப ஒளிக்கு பல ஆண்டுகளாக அவர் செலுத்தும் மௌன அஞ்சலி என நான் புரிந்து கொண்டேன்.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தோல்வியில் முடிந்த ஒரு தற்கொலை முயற்சியின் அலைக்கழிப்பு இப்படி முடிந்தது.

1999 நவம்பர் 23. அதே தீபத் திருநாள். ஊரே பரபரப்பில் இயங்குகிறது. அப்பாவால் சைக்கிளை எடுக்க முடியாது. முதுகுத் தண்டில் அடிபட்டு எழ முடியாமல் படுத்திருந்தார். காலை பத்து மணியிருக்கும், என்னைத் தன் படுக்கையருகே அழைத்து அமரச் சொல்கிறார். கண்களில் துளிர்க்கும் நீர் வழிகிறது.

"பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னக்கி என்னால போக முடியலை. நீ எனக்காகச் செய்வியா? வார்த்தைகளில் கொஞ்சம் அவ நம்பிக்கையிருந்தது."

என் துக்கமும் கண்ணீராய்த்தான் வழிந்தது.

'எனக்கப்புறமும் என் பேர்ல இதைச் செஞ்சுடுப்பா' என் சிறுவயது முதலே மார்க்சிய சிந்தனைகளில் வளர்ந்த எனக்கு வீட்டிற்குள்ளிருந்தே ஒரு நாத்திகனால் விடப்படும் முரண்பாடான கோரிக்கை இது.

'கண்டிப்பா செய்வம்ப்பா'

அன்று மாலை தீபம் ஏற்றும் முன் நான் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியில் போயிருந்தேன். ஒரு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பில் ஜனக் கூட்டத்தை விலக்கி வீட்டிற்கு வந்தேன். ஹாலில் அப்பாவைப் படுக்க வைத்து எல்லோரும் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

'எப்படி ஷைலஜா?' என்றேன். அப்பாவுடனான கடைசி உரையாடலை அவள் என்னிடம் சொன்னாள்.

'தீபம் பார்க்க மாடிக்கு போறம்பா'

'பாத்துட்டு வாங்கம்மா'

தீப ஒளியை அவசரமாக தரிசித்துவிட்டுக் கீழிறங்கி வந்து,

'அப்பா தீபம் ஏத்திட்டாங்கப்பா' என்றிருக்கிறாள்.

'ரொம்ப சந்தோஷம்மா'

அதுதான் அப்பா பேசின கடைசி வார்த்தை.

ஒவ்வொரு வருடமும் மலைமீது ஏற்றப்படும் தீப ஒளிக்கு, ஒரு மார்க்ஸியக் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் அப்பாவின் பெயரைத் தாங்கின அரைக்கிலோ நெய்க்குடமும் உண்டு.

Monday, December 20, 2010

மகா கவிகளும் ஒரு சிறுவனும்





ஆரோவில்லில் டிசம்பர் 15 -ல் மகாகவி தாகூரின் 150 வது ஆண்டு விழா கொண்டாடத்தில் தன் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுவதாகவும் அதன் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள நான் கண்டிப்பாக வரவேண்டும் எனவும் கோரிய கவிஞர். மீனாட்சி அக்காவின் குரலில் மீதுற்ற பிரியத்தைக் காப்பாற்ற வேண்டியும் ஆரோவில் என்ற ஊரின் வசீகரத்துக்காகவும் அந்த அழைப்பை ஏற்க வேண்டியிருந்தது.

நான் சென்றடைந்த போது ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தார். ஐம்பத்தெட்டாவது வயதில் கட்டாய விடுதலை அடைகிறார்கள் இவர்களின் மாணவர்கள். அதன் பிறகும் பேசியாக வேண்டும் எனும் மன அரிப்பிற்கு ஆளாகிறார்கள். பேராசியர்களிடமிருந்தும் பண்டிதர்களிடமிருந்தும் மேடைகளும், இலக்கியமும் இன்னும் வெகுதூரம் விலகியிருக்க வேண்டியிருக்கிறது. பொறுமையின் எல்லையை நான் கடந்து கொண்டிருந்த போது, குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு வேலு சரவணன் கதை சொல்ல வந்து என்னைத் தட்டி எழுப்பினான்.

மகாகவி தாகூர் எழுதி, இன்னொரு மகாகவி பாரதி 1914 -ல் மொழிபெயர்த்து வெளிட்ட ரஜாக்காலம் என்ற கதை, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வேலுசரவணனால் சொல்லப்படுகிறது. அது தாகூர் என்ற மகாகலைஞன், வேலு சரவணன் என்ற சிறுவன் சொல்வதற்காகவே எழுதின மாதிரியும் உள்ளது.
கல்கத்தாவிற்கு அருகில் நதி நீர் எப்போதும் யாருக்கும் அடங்காமல் போய்கொண்டிருக்கும். ஒரு ஆற்றங்கரை கிராமம். அப்பாவை இழந்த குடும்பம் அது. அம்மாவின் பெரும் கனவாக இருப்பது மூத்தவன் பாடிக் சக்கரவர்த்தியும், தம்பி மக்கான் லாலும்.

பாடியின் பால்ய விளையாட்டுக்கள் கட்டுக்கடங்காதவைகள். பனங்காத்தாடியைக் கையிலேந்தி ஆற்றங்கரையில் துவங்கி அவனுடைய துள்ளலான ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க அக்கிராமத்தில் வேறுயாருண்டு. தூண்டிலும் கையுமாக அந்த ஆற்றின் கரைகளில் பகல்களைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.

அண்ணனின் இக்குதூகலம் தம்பி மக்கன்லாலால் தொடர்ந்து சிதைக்கப்படுகிறது. அண்ணனைப் பற்றி அம்மாவிடம் போட்டுக் கொடுப்பதும் கோள் சொல்வதும் அம்மாவின் கண்டிப்பில் தான் மகிழ்வதுமாக, மக்கான் லால் குழந்தைகளுக்கே உரிய குறும்புகளுடன் வளர்கிறான். பாடியின் சந்தோஷங்கள் கலைத்து அம்மாவின் கண்டிப்பு ஒரு துர் கனவு மாதிரி அவனைச் சூழ்ந்து
கொள்கிறது.

பாடிக் அன்று ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரக்கட்டையைப் பார்க்கிறான். தன் நணபர்களோடு சேர்ந்து அதை அந்நதியில் தள்ளிவிட முயல்கிறான். அவன் வலுவை நிரூபிக்கும் முயற்சியும் அவன் தம்பியால்
தடுக்கப்படுகிறது. எத்திசையிலிருந்தோ ஓடிவந்து தம்பி மக்கான் லால் அம்மரக்கட்டைமீது ஏறி படுத்துக் கொள்கிறான். பாடிக்கு கோபம் தலைக்கேறுகிறது. தம்பியை விலகுமாறு கோபத்துடன் கத்துகிறான். அவன் மரக்கட்டையை இன்னமும் வலிமையாய் பற்றிக் கொள்கிறான்.

வேறு வழியில்லை பாடிக்கு. தொடரும் தம்பியின் சீண்டல்களும், கோள் மூட்டல்களும் அவனை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு போகின்றன. மரக்கட்டையுடன் தம்பியும் ஆற்றுக்குள் தள்ளிவிட யத்தனிக்கிறான். கண நேரத்தில் இதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து விலகிப் பாடியை கீழே தள்ளி நெஞ்சில் உதைக்கிறான் தம்பி. அவனைத் திருப்பி அடிக்க மனமின்றி தள்ளி விடுகிறான் பாடி. அவன் அழுது கொண்டே வீட்டை நோக்கி நடக்கிறான்.

பூத்திருக்கும் இலையின் பஞ்சு முட்கள்
உன்னை குத்தாதா வண்ணத்துப் பூச்சி.
பகலெல்லாம் அலைகிறாயே!
இரவு வந்தால் எந்த வீட்டிற்குப் போவாய்?
வீட்டிற்குப்போகும் வரை எனக்கு ஆயுள் இல்லை,
இருக்கும் வரை பறப்பேன்.
இலைகளில் இளைப்பாறுவேன்.
பூக்களில் பசியாறுவேன்.

பாடிக் மிகுந்த மனவேதனையடைகிறான். வீடு அவனுக்குக் கசக்கிறது. அம்மா ஒரு ஜெயில் வார்டனின் பிம்பம் மாதிரி அவனைப் பயமுறுத்துகிறாள். தொடர்ந்த புறக்கணிப்புகளும் அடியும், வலியும் அவனை அலைக்கழிக்கின்றன.

நெடுநேரங்கழித்து அம்மாவின் அடியை எதிர் நோக்கியே வீட்டிற்கு நடக்கிறான். வீட்டில் புது விருந்தினரின் வருகை தெரிகிறது. அம்மா இயல்பாக இருக்கிறாள். அம்மாவின் முகத்தை இத்தனை மலர்ச்சியோடு அவன் பார்த்ததில்லை. வீட்டில் புது விருந்தினர்களின் வருகை தெரிகிறது. அம்மா பாடியை தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்துகிறாள். தன் தாய்மாமாவின்
கண நேர ஸ்பரிசத்தில் அவன் தன் துக்கத்தைத் துடைத்தெறிகிறான்.

மாமா கல்கத்தாவுக்குப் புறப்படும்போது குழந்தைகளின் படிப்பைப் பற்றியும் போக்கைப் பற்றியும் அக்காவிடம் விசாரிக்கிறார். அம்மா உடைந்தழுகிறாள்.
என் வாழ்வின் சந்தோஷங்களை இவன் களவாடி விட்டானென்றும், இவனால் துன்பத்திலேயே கிடந்து சாகவேண்டியது தான் என்றும் அழுகிறாள். எதிர்பாராத இத் தருணம் மாமாவைப் போலவே பாடியையும் நொறுக்குகிறது. நீடித்த மௌனத்தை மாமாவே வார்த்
தைகளால் கலைத்துப் போடுகிறார்.
பேசாம நீ இவன எங்கூட அனுப்பிடு நானே கல்கத்தாவுல படிக்க வைக்கிறேன்.
கணநேரத்தில் காட்சிகள் மாறுகின்றன. பாடிக் மாமாவுடன் ஒரு ஸ்டீமர் படகில் கல்கத்தாவிற்குப் பயணிக்கிறான்.
விரிந்த கடல் நீரில் அங்கங்கே கடல் பறவைகள் மாதிரி படகுகள் பயணிப்பது தெரிகிறது. பாடி மனதில் சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி அலையடிக்கிறது. ஏதோ இனம் புரியாத பயமும் புது மாதிரியான அனுபவமுமாக அப்பயணம் அவனை ஆட்கொள்கிறது. தூரத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாடல் ஒலிக்கிறது.

ஒரு பாகம் ஆழம் ..... ஆழம்.... ஆழம்....
இரு பாகம் ஆழம்...... ஆழம்.... ஆழம்....
முப்பாகம் ஆழம்..... ஆழம்..... ஆழம்....

பாடியின் இதயத்திற்குள் இப்பாடல் மெல்ல இறங்கி, அதன் ஆழத்தைத் துழாவுகிறது. பிரிவின் துயரம் அப்போதே அப்பாடலின் வழியே அவனுள் பதிகிறது. உடலெங்கும் பரவும் இழப்பின் வலியை அவன் பயணம் முழுதும் துடைத்தெறிந்து கொண்டே போகிறான்.

கல்கத்தாவில் அவன் மாமா வீட்டில் நுழைவதை, மாமி ஒரு பிரளயமே நுழைவதைப்போல பார்க்கிறான். புதிய வாழ்விடம், புதிய மனிதர்கள், எல்லாமும் பாடியை அலைக்கழிக்கிறது. அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த அவன் சொந்த கிராமத்து ஆற்றின் சத்தம் சட்டென நின்று, மணல் பரப்பாகி வெயில் தகிக்கிறது. தாகூர் எழுதுகிறார்.

எஜமானனைப் பிரிந்து தெருவில் அலைந்து கலைத்துப்போன நாயின் முகம் பாடிக்கு வாய்த்திருந்தது.
பாடியிடமிருந்து அவன் குழந்தைப்பருவம் ஒரு புன்முறுவலோடு விடை பெற்றுக் கொள்கிறது. பதினொன்றைக் கடந்து பன்னிரண்டிற்குள் நுழைகிறான். குரல் மாற்றமும் தோல் மாற்றமும் அவனுள் ஒரு வேதிவினை போல நிகழ்கிறது. பருவப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்களோ என்ற ஆர்வம் மேலெழுகிறது. இப்பருவத்து ஆண் பிள்ளைகளை அம்மாக்களுக்குக்கூடப் பிடிக்காது என தாகூர் எழுதுகிறார். அப்பருவம் குழந்தைமையின் அலங்காரப் பொருளோ வாலிபத்தின் பயனுள்ள பொருளோ இல்லாதது என்று உவமிக்கிறார்.

ஏற்கனவே மூன்று குழந்தைகளுடன் வாழ்வோடு மல்லுக் கட்டும் மாமாவின் குடும்பம் பாடியை அரவணைக்க முடியாமல் திணறுகிறது. அது அன்றாட நிகழ்வுகளில் மாமியிடமிருந்து வெறுப்பாக உமிழ்கிறது.

பாடிக்கு படிப்பும் அத்தனை விருப்பமானதாக இல்லை. விருப்பமற்ற இந்த மாற்றத்தில் அவன் உடைந்து போகிறான். தன் கிராமமும், சக்கரவர்த்தித் தெருவும், ஆற்றங்கரையும், பனைமரக் காத்தாடியும், தூண்டிலில் துள்ளும் மீனும், அவன் ஆத்மாவை அலைக்கழிக்கின்றன. ஊரின் அருகாமையும் அம்மாவின் அரவணைப்பும் வேண்டி அவன் மனம் ஏங்குகிறது. வாத்தியாரின் பிரம்படிக்கு அவன் பொதி சுமக்கும் கழுதையின் உடம்பு போல தன் உடலை மாற்ற வேண்டியிருந்தது.
வெறுப்புற்ற மனநிலையில் பாடப் புத்தகத்தை வேறு தொலைத்துவிடுகிறான். புதுப் புத்தகங்கள் வாங்கித் தர இயலாதென மாமி திட்டுகிறாள். துக்கம் மேலிட, தன்மானம் துளிர்விட பாடி அப் பருவத்து மற்றெல்லாப் பையன்களைப் போலவே வீட்டை விட்டு வெளியேறி ஒரு பாலத்துக்குக் கீழே உட்கார்ந்து தன் ஊரின் ஞாபங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறான். போலீஸ் வந்து பாடியை மீட்டு மீண்டும் மாமாவிடம் ஒப்படைக்கிறார்கள்.

பாடியின் மௌனத்தால் மாமாவீடு உறைகிறது. ஏன் எங்களைத் தொடர்ந்து இம்சிக்கிறாய் என உடைந்தழும் மாமியின் முன் முதல் முறையாக பதில் பேசுகிறான் பாடிக்.
நான் என் சொந்த ஊருக்கு என் தம்பியையும் அம்மாவையும் பார்க்கப் போனேன். என்னை ஏன் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து இம்சிக்கிறீர்கள்.?

நினைவில் காடுள்ள மிருகத்தை
யாரும் பழக்க முடியாது.
என் நினைவில் காடு உள்ளது.

என்ற வரிகளைப்போல பாடிக்குத் தான் ஆற்றில் நீந்திக் கடந்த அக்கரை அப்போது கடந்த நீர்ப் பறவை தனியேதான் பாடிய பாடல்கள் என போன்ற நினைவுகள் கேவலுடன் மேலெழுகிறது. தாயிடத்தை நிரப்ப வேறு யாரால் முடியும்? என்ற கேள்வி அவனுள் ஒவ்வொரு வினாடியும் எழுகிறது.

பாடிக் காய்ச்சலில் விழுகிறான். அவன் துக்கங்களை முழுவதுமாய் உள்வாங்கும் மாமா விஸ்வரம்பரபாபு ரஜாக்காலத்தில் (கார்த்திகை, மார்கழி, தை) மாதங்களில் வரும் நீண்ட விடுமுறையில் அவனை அவன் அம்மாவிடம் சேர்ப்பிப்பதாக சொல்கிறார்.

வைத்தியரின் வருகைக்குப் பிறகும் காய்ச்சல் அதிகமாகிறது. இந்த நரகத்திலிருந்து தப்பித்து தாயின் கதகதப்பிற்குத் திரும்ப மனம் துடிக்கிறது.
அம்மா... அம்மா... அம்மா.... வென கதறும் அவன் ஆன்மாவின் ஓசையை மாமா வீட்டாரால் தாங்க முடியவில்லை.

நீராவிக் கப்பலின் லஷ்கர் பாடல் தூரத்தில் ஒலிக்கிறது.

தண்ணீரின் ஆழம்.... ஆழம்..... ஆழம்.....
கரையே இல்லாத கடலில் என் ஓடம்......
கண்ணீரின் ஆழம்.... ஆழம்..... ஆழம்....

வேலு சரவணின் துயரம் தோய்ந்த இப்பாடலைக் கேட்கத் திராணியற்று நான் அரங்கிலிருந்து வெளியேறினேன். எனக்கும் முன்னே நிறையப்பேர் வெளியே நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்கள். நிர்மலமான அந்த ஆகாய வெளியில் கொத்துக் கொத்தாய் நீர்ப்பறவைகள் எங்களைக் கடந்து கொண்டிருந்தன.

Monday, December 13, 2010

கதைகளால் நிரம்பிய கிணறு


இருபது வருடங்கள் முடிந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடியிருந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஜனத்திரளுக்கு கதை சொல்ல நானும், வேல. ராமமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தோம். எங்கள் இருவரின் கதை கேட்டு கூட்டம் மயங்கிக் கிடந்தது. அன்றிரவு பஸ் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டார் வேலா. வீட்டிற்கு வந்து ஒரு வேலை கருவாட்டுக் குழம்பும், கேழ்வரகுக் களியும் சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் புறப்படுவதாக திட்டம். என்னைக்கு இந்த திட்டமெல்லாம் எழுத்தாளர்களிடம் நிறைவேறி இருக்கு?
மழையின் குளிர்ச்சியில் அறையிலேயேக் கிடந்து அம்மா சமைத்துத்தர வித விதமாய் சாப்பிட்டு பகலானால் கிணற்றுக்கு குளிக்கப்போவது என்று போனது அந்த மூன்று நாட்களும்.

வேலா, கிணற்றுக்குள் முழ்கி குதியாட்டம் போட நான் கரையில் உட்கார்ந்து குதிப்பதற்கு தயாராகிறேன். உள்ளிருந்து வேலா சத்தமாக சொல்கிறார்

பவா இந்நேரம் இங்க கோணங்கி வந்தா எப்படி இருக்கும்?

அக்கற்பனையில் மகிழ்ந்து எதேச்சையாய் திரும்புகிறேன். தோலில் தொங்கும் ஜோல்னா பையோடு கோணங்கி. சில நேரங்களில் இந்த மாதிரியான அபூர்வத் தருணங்கள் வாய்ப்பதுண்டு. அன்று ஒவ்வொருவரும் கிணற்றுக்குள்ளிருந்து மேலேப் பார்த்துக் கதைசொல்ல வேண்டும். வெளியிலிருப்பவர்கள் கதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னோடு கதைக் கேட்க பத்து, இருபது பேர் வயக்காட்டு வேலைகளை ஒதுக்கிவிட்டு கிணற்று மேட்டில்லிருந்து கதைகேட்டது நினைவிருக்கிறது.

நான் ‘சிங்கார குளம்’, கோணங்கி ‘கறுப்பு ரயில்’, வேலா ‘கோட்டைகிணறு’.

‘கோட்டைகிணறு’ கதை கிணற்றுக்குள்ளிருந்து வெளிவந்ததே அச்சமூட்டுவதாக இருந்தது. வேட்டைக்கு அலையும் மிருகம் ஒன்று உள்ளிருந்து உருமுவது போலான அனுபவம் அது. கதை கேட்டு முடித்த அச்சத்தில் அதற்குப் பிறகு அந்த கிணற்றுக்குள் குதிக்கவில்லை நான். அதே மாதிரி கதை கேட்ட அச்சத்தில் வெகு நேரம் ததும்பிக் கொண்டிருந்தது அந்த கிணற்று கருநீர்.

கதை சொல்லி, கதை கேட்கும் அனுபவம் சுத்தமாக துடைத்தெறியப்படும்
இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ.காம் நண்பர்கள் என்னிடம் கதை சொல்ல கேட்டு திருவண்ணாமலைக்கு வந்தது ஆச்சரியமானது. ரெண்டு கதை சொன்னேன். ஒன்று என்னுடைய ‘வேட்டை’, இரண்டு சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘கொமலா’



Sunday, November 28, 2010

இடப்பெயர்வை நிராகரித்து இயற்கைக்குத் திரும்புதல்


இமாக்குலேட் கேம்யூஸ் என்ற ஸ்பானிய பெயரை, காயத்ரி கேம்யூஸ் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டு, தன் காதல் கணவனும் கவிஞனுமான ஆனந்த் ஸ்கரியாவுடன் இந்தியா முழுக்கச் சுற்றித் திரிந்து, இப்போது திருவண்ணாமலையில் கொஞ்சம் நிலம் வாங்கி, குடில் அமைத்து, மரம் வளர்த்து, செடி அரும்பிப் பூப்பூக்கும் தருணங்களைத் தனதாக்கிக் கொண்டு வாழும் காயத்ரி கேம்யூஸ் எனக்கு அறிமுகமானது ஓவியர் பி. கிருஷ்ணமூர்த்தி மூலம்தான்.

அவருடைய ஒரு ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைக்க யாரை அழைக்கலாம் என யோசித்த போது, எனக்கு அவரால் முன்மொழியப்பட்ட பெயர் காயத்ரி கேம்யூஸ். எப்போதும் புதியவைகளைத் தேடியடைய நாட்களைத் தள்ளிப் போடாத நான், அடுத்த பத்தாவது நிமிஷத்தில் ரமணாஸ்ரமத்திற்கு முன் நீண்டு செல்லும் அத்தெருவில் காயத்ரி-ஆனந்த் வீட்டு காம்பவுண்டுக்கு முன் நின்றேன்.
புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தின் நுனியில் இருந்தேன்.

வெற்றுடம்புடனும், நீண்டு தொங்கும் முடியுடனும், அதே அளவிற்கான தாடியுடனும் ஒரு புதிய மனிதனை நான் எதிர்கொண்டேன். அவர், அந்த வீட்டுத் தாழ்வாரத்தில் கால் நீட்டி உட்கார்ந்து புகைத்துக் கொண்டிருந்தார். உதடுகளில் பொருந்தியிருந்த பீடியிலிருந்து வந்து கொண்டிருந்தது பீடிப்புகையில்லை
என்பதை அறிய அதிக நேரம் தேவைப்படவில்லை.

‘நான் கிருஷ்ணமூர்த்தி சாரின் நண்பன்’

‘எந்த கிருஷ்ணமூர்த்தி?’

‘ஓவியர். பி. கிருஷ்ணமூர்த்தி’.

நிதானமாக நான் அந்த வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.




அறையெங்கும் வியாபித்திருந்த கேன்வாஸ்களுக்கிடையிலிருந்து கையில் எனக்கான ஒரு தேநீர்க் கோப்பையோடு வெளிவந்து கைகுலுக்கிய அந்த மனுஷி தான் இன்றளவும்

என் ஆத்மார்த்த ஸ்நேகிதி காயத்ரி கேம்யூஸ். காயத்ரியே ஒரு மோனலிசா ஓவியம் மாதிரியிருந்தார். கடந்துவிட்டது இருபது வருடங்கள்.இதனிடையே எத்தனை எத்தனை
அனுபவங்கள், உரையாடல்கள், தோல்விகள், துரோகங்கள், செழுமைகள், வீழ்ச்சிகள். எல்லாவற்றையும் உள்வாங்கி உதறிவிட்டு நட்பை மட்டுமே தனக்குள் தேக்கித் தினம் தினம் புதுப்புதுப் படைப்புகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் காயத்ரியின் ஓவியங்கள் முதல் பார்வையில் நம்மை ஏமாற்றக் கூடியவை. இதில் என்ன இருக்கு என்று ஏமாற்றும் அதன் ஆழம்.

இந்திய இளம் ஓவியர்களில் காயத்ரியின் இடம் பின்னுக்குத் தள்ள முடியாதது. அதற்காக அவர் கொடுத்த விலை மதிப்பிட முடியாதது. தன் எல்லா ஓவியங்களுக்குள்ளும் ஒளித்து வைத்திருப்பது இயற்கையின் ரகஸியங்களைத்தான்.

இடம் பெயர்ந்த மனிதர்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலைகள் இவைகளின் உருவங்களை வெவ்வேறு மனநிலைகளில் குழைக்கிறார். அதனதன் இடங்களிருந்து மாற்றிச் சீட்டுக் கட்டுகளைப் போல கலைத்துப் போடுகிறார். எப்படிப் போட்டாலும் இயற்கையின் மகோன்னதம் ஒளிரும் பேரழகு அவ்வோவியங்களில் பிரதிபலிக்கிறது. சூரியனை ஒரு அறைக்குள் அடைத்துவிட ஒருபோதும் முயன்றதில்லை. சூரியனை அதன் தொலைவில் இருந்தே
நமக்கு அதன் சூட்டோடும், ஒளியோடும்
உணர வைக்கிறார். இவ்வுலகின்
மனிதர்கள் உட்பட சகல ஜீவராசிகளுக்கும் விதிக்கப்பட்ட இடப்பெயர்வே காயத்ரியின் ஓவியங்களின் அடிநாதம். இந்த இடப்பெயர்வுக்குள்ளான மனிதர்கள், பறவைகள், வாழ்விடங்கள் மறுக்கப்பட்ட விலங்குகள், நீரின் போக்குகள், எல்லாமும் அவரின் தூரிகையின் வழியே கேன்வாஸ்களில் அடைக்கலமாகின்றன. இந்த இடப்பெயர்வு நம்மை இயற்கையிலிருந்து எத்தனை எத்தனை தூரத்திற்கு அப்பால் கொண்டுவந்து போட்டிருக்கிறது. எங்கே தொலைத்தோம் நம் பொறையாத்தம்மனையும், பச்சையம்மனையும்? நம் தேடுதலைப் போலவே காயத்ரியும் ஸ்பெயினில் தொலைத்த தன் பச்சை மாமாவை நம்மூர் பச்சையம்மன்களில் தரிசிக்கிறார். இந்த இரு சிறு தெய்வங்களும் சந்திக்கும் இடம் இயற்கைக்கு மட்டுமே சொந்தமானது. அதற்கு தேவஸ்தானமோ, கருங்கல் மதிலோ, மூன்று கால பூஜையோ தேவையில்லை. பெரும் மழைப்பொழிவையும், கவியும் பனியையும், உருக்கும் வெய்யிலையும் குடித்து வாழும் நம் மூதாதையர்தான் இங்கே பச்சையம்மனும் அங்கே பச்சை மாமாவும்.

வண்ணங்கள் குழைத்துத் தீட்டவும், சிற்பங்கள் செய்யவும், புகழ்பெற்ற ஓவியர்கள் குறித்தும் சிறுவர்களுக்குத் தன் அரைகுறைத் தமிழில் சொல்லித் தருகிறார். தன் படைப்பாளுமை இவ்விதம் கரைய, வருமானம் தரும் படைப்பாக்கங்கள் அவரது விரல்தீண்டலுக்காக ஒரு காவல்நாய் மாதிரி வாசலில் காத்து நிற்கும்.
காயத்ரியின் ஒரு புதிய கண்காட்சியைக் காண நானும் கோணங்கியும் போர்ட் கொச்சினுக்கு அழைக்கப்பட்டிருந்தோம். தேநீருக்குப் பதிலாக ரெட் ஒயின் கொடுத்துப் பார்வையாளர்கள் வரவேற்கப்பட்டது எங்கள் இருவருக்கும் தமிழ்நாட்டின் இலக்கிய கூட்டத்தின் எங்கள் இருவருக்கும் தமிழ்நாட்டு இலக்கிய கூட்டங்களின் ஓழுக்கப்பட்டியலை நீனைவூட்டியது.நினைவூட்டியது.

அன்றிரவு வீசிய பனிக்காற்றில், கடுங்குளிரில் படுத்திருந்த எங்கள்மீது ஒரு கம்பளியைப் போர்த்தி, கொசுவர்த்தி ஏற்றித் தூக்கத்தை அமைதிப்படுத்திய
காயத்ரி பற்றி அ
டுத்தநாள் காலை கோணங்கி சொன்னான்,

‘எந்த ஒரு வெள்ளைக்காரர்களுக்கும் கிட்டாத இந்திய மனம் வாய்க்கப்பெற்ற விநோத மனுஷி இவள். நம்மூர் மதினிமார்கள் மாதிரியே’

மிகவும் முக்கியமான இடம். பலருக்கும் வாய்க்காத அல்லது பலரும் கடந்து சென்றுவிட்ட இந்த இடம்தான் காயத்ரி என்ற மனுஷியைப் படைப்புகளை மீறி நேசிக்கவைக்கிறது.

டென்மார்க் ஸ்நேகிதி ஒருத்தியுடன் பலநாட்கள் நட்பாக இருந்துள்ளேன். எனது நண்பர் ஒருவர் சென்னையில் நட்சத்திர விடுதியொன்றில் அவருக்கு விருந்து கொடுத்திருக்கிறார். நானும் பலமுறை எனது வீட்டிற்கு விருந்திற்கு அழைத்துள்ளேன். ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள வெளிநாட்டுக்காரர்களுக்கான உணவகம் ஒன்றில் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை வரவேற்று காபி ஆர்டர் செய்தார். இறுதியில் அந்தக் காபிக்கான பில்லை என்னையே தரச் செய்தார். இத்தன்மையின் அதிர்விலிருந்து மீளப் பல நாட்களானது எனக்கு.

ஆனால் தனது தீவிரமான படைப்பாக்கத்திற்கு நடுவில் தன்னைக் காண வரும் நண்பர்களுக்கும், சுற்றியுள்ள குழந்தைகளுக்கும் தானே சமைத்து உபசரிக்கும் காயத்ரியின் தன்மை வேறு யாருக்கும் வாய்க்காதது.

காயத்ரியின் சமீபத்தியப் படைப்புகளில் தாங்கமுடியாத தனிமை திரும்பத் திரும்ப அழுத்தமாகத் தீட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பலநூறு மரத் தூர்களுக்கு மத்தியில் கட்டில் போட்டு தூங்கமுயலும் ஒரு மனித முகம் ஆயிரம் பக்க நாவலைவிடப் பெரும் தொந்தரவு தரக்கூடியது. எனக்கு அந்த ஓவியத்தை வீட்டில் மாட்ட முடியாது. அதில் அழுத்தும் தனிமை என்னைக் கொல்லும்.

மரத்தையும், பச்சையத்தையும் இழந்த பறவைகள், வளைந்த இரும்புக் கம்பிகளில் கூடுகட்ட முயலும் துயரம் மனதைப் பிசைகிறது. மரம் வளர்க்கப் போதிக்கப்படும் ஒரு நூறு உபதேசங்களை ரத்துசெய்து விட்டு இப்படத்தைப் போஸ்டராக்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் காட்சிப்படுத்தலாம்.

நேரடியான வண்ணங்களைத் தனது ஓவியங்களில் தொடர்ந்து மறுக்கிறார். காயத்ரியின் விரல்களால் ஏதோவொரு விகிதத்தில் குழைவுபெறும் கலவை நம்நினைவுகளில் ஏற்கனவே படிந்துள்ள வண்ணத்தை அழிக்கிறது.

இந்த மையம்தான் காயத்ரியின் படைப்பியக்கம். இந்த வெளியில்தான் ஒரு ஜிப்சி மாதிரி அவர் அலைந்து திரிவது. அல்லது இந்த இடப்பெயர்வைத் தாங்கமுடியாத ஒரு பெண் மனதின் பிரதிபலிப்புகள் தான் கேன்வாசில் வண்ணங்களாகப் பதிகிறது.
நான் சென்ற மாதம் என் ஸ்நேகிதியும், கவிஞருமான தமிழச்சி திருவண்ணாமலைக்கு வந்திருந்தபோது, அவருக்குப் பரிசளிக்க காயத்ரியின் ஓர் ஓவியத்தைத் தேர்ந்தெடுக்கலாமென என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவிடம் சொன்னபோது, ஒரு நிமிடமும் யோசிக்காமல் சம்மதித்தார். கலைஞர்களின் அருமையைத் தனக்குள் தேக்கி வைத்துள்ள நண்பர் அவர்.

ஒரு கவிதையைக் காட்சிப்படுத்தியிருந்தது மாதிரியான ஒரு சிறு ஓவியம், அப்பரிசுக்குத் தன்னைக் கோரியது. மறுக்க மனமின்றி அதைக் காயத்ரியிடம் கேட்டேன்.

‘எவ்வளவு பைசா தருவாங்க பவா?’

என்று தன் அரைகுறைத் தமிழில் கேட்ட விநாடி, நான் மெல்லத் தலை திருப்பி காயத்ரியின் முகத்தையே பார்த்தேன். இது காயத்ரியின் குரலே அல்ல.

இருபது வருடங்களுக்கு முன், தன் சாம்பல் நிறக் கேன்வாசிலிருந்து இறங்கி வந்த கள்ளம் கபடமற்ற அதே குழந்தையின் முகம்தான், இப்போதும் என் சிநேகிதி காயத்ரியின் முகம். முற்றிய தன் படைப்பை ஒரு நாளின் எந்நேரமும் தன் சக கலைஞர்களிடம் காட்டி மகிழும், கவிமனதை இன்றளவும் காப்பாற்றி வைத்திருக்கிறார்.

விலை மதிப்பிட முடியாதவைகள் தன் படைப்புகள் என்ற சிறு அகம்பாவம் எல்லாக் கலைஞர்களைப் போலவே காயத்ரிக்கும் உண்டு. காலைக் கவ்விப் பிடித்திழுக்கும் வெறிநாயின் கோரப் பற்களாய்த் தினவாழ்க்கை அவர்களையும் கவ்விக் கொண்டுள்ளது. ஒழுகும் ரத்தத்தைத் துடைக்கவும் நேரமின்றி இயங்கும் கைகளையும் மறிக்கிறது அவரின் அன்றாடங்கள்.

அவரே வடிவமைத்து, பார்த்துப் பார்த்துக் கட்டிய ஒரு பெரும் குடில், கட்டி முடித்த பத்தாவது நாள் ஒரு தீ விபத்தில் முற்றிலும் எரிந்து முடிந்த சாம்பலின் முன், பெருகும் துக்கத்தை மறைக்க முயன்று அமைதியாய் நின்றேன்.

தன் சில ஓவியங்களும், பொருள்களும், கணினியும் கருகிய அந்த இடத்தில் நிலைகுலையாமல் நின்றிருந்த பிம்பம் இப்போதும் அகலாதது. தன் மனநிலைகளை ஓவியமாக வரைவதும், கேலரிகளுக்கு அதை விற்பதுமாகத் தன்னைச் சுருக்கி கொண்ட படைப்பாளி இல்லை காயத்ரி. தன் வீட்டிற்கருகில் வேரூன்றி இருந்த 30 வருட
பழமையான வேப்பமரத்தை
வெட்ட விடாமல் தடுத்த அவரின் மூர்க்கம் கண்டு பின்வாங்கிய திருவண்ணாம லையின்பலம்வாய்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை எனக்குத் தெரியும்.

நிலத்தை அழித்து ப்ளாட் போடுபவனுக்கு, நீரை மறித்து மணல் அள்ளுபவனுக்கு, காட்டை அழித்து மரம் கடத்துகிறவனுக்கு, குழந்தைகளின் பால்யம் சிதைத்து ஸ்கூல் நடத்துகிறவனுக்கு, உடல் வேட்கைக்காக ஆள் பிடிக்கிறவனுக்கு,
பெரும்பான்மை மக்களின் அறியாமையில் அரசியல் செய்கி
றவனுக்கெல்லாம் பணம் தொடர்ந்து குவிகிறது. அவர்களை வசதியான வாழ்
விற்கு அப்பாலும் எதையாவது தேடி அலையச் செய்கிறது. காயத்ரி போன்ற உன்னதங்களைத் தொடர்ந்து பழிவாங்குகிறது. ஆனால் உலகம் முழுக்கத் தாமதமாகவே என்றாலும் கலைஞர்கள்தான் ஜெயிக்கிறார்கள்.

காயத்ரியின் பயணம் மிக எளிமையானது. அது தன் வண்ணங்களின் வழியே இழந்த இயற்கையைச் சென்றடைய முயல்வது அல்லது இந்த விருப்பமற்ற இடப்பெயர்வை முற்றிலும் நிராகரிப்பது.



Wednesday, October 20, 2010

மழை மனிதர்கள்


புல் கலாம் சாத்

வம்சி புக்ஸ் ரம்பித்து ன் முதல் புத்தக வெளியீட்டு விழாவை திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெரும் வாசகர்களின் பங்கேற்புடன் நடத்தினோம். சிறப்பு ழைப்பாளர்களாக ழுத்தாளர்

ச. தமிழ்ச்செல்வன், யக்குனர் பாலுமகேந்திரா, ழுத்தாளர் திலகவதி, ளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், வர்களோடு புல்கலாம் சாத் ன்ற ந்தப் புகைப்பட கலைஞன். ழைப்பாளர்கள் ல்லோரும் லேசான மழைத்தூறலினூடே ந்த பரந்த மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது புல் ரு ட்டோவில் வந்திறங்கினான். ல்லோருமே ரு வித ச்சர்யத்தோடு வனைப் பார்க்கிறார்கள். நீண்டு வளர்ந்த சுருள் முடியை றுக்கி ரப்பர் பேண்ட் போடப்பட்டுள்ள குடுமி, சிகப்பு கல்பதித்த கடுக்கன், கழுத்தில் தொங்கும்

ற்றை ருத்ராட்ச கொட்டை மாலை, நல்ல ரக்குக் கலரில் ரு நீண்ட ஜிப்பா, தோடு? கரை போட்ட வேட்டி.

கூடியிருந்த படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் தோ ரு மர்ம சிரிப்பும், ச்சர்யமும் துளிர்த்த கணமது. நான் புலின் கைகளைப் பிடித்து வரவேற்று, ந்த வேட்டியைப்பற்றி விசாரித்தேன். ரு பெரும் ரவாரத்தோடு து நேற்று திருவண்ணாமலையில்தான் வாங்கியதென்றும், வெள்ளை வேட்டிக்குக் கறுப்பு, சிவப்பு கலர்வைத்த கரை ரொம்ப ழகென்றும் விவரிக்க, நான் து தமிழ்நாட்டில் ரு குறிப்பிட்டசியல் ட்சியினர் கட்டும் வேட்டியென்று விளக்க, வசர வசரமாய் வந்த ட்டோவிலேயே தன் றைக்கு திரும்பிப்போய் டுத்த ரை மணி நேரத்தில் ன்னொரு புது வேட்டியுடன் திரும்பி வந்தான். தற்குள் நிகழ்ச்சி துவங்கிவிட்டது.

‘’து பரவாயில்லையா பவா, துவும் நல்ல கலர் காம்ப்பினேஷன்’’ ன்று குதூகலித்த ந்த நிமிடத்தை ப்படியே தக்க வைக்க நினைத்து மேடையில் மர வைத்தோம். னால் து பா.ம.க கட்சி கரை வைத்த வேட்டி.

ரு கள்ளம் கபடமற்ற கலைஞனின் பின் விளைவுகள் பற்றிய ந்த கவலையுமற்ற ந்த மனதோடுதான் நான் புலைப்பற்றிய ன் பழைய ஞாபகங்களை பதிய விரும்புகிறேன்.

சுற்றி நீரால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சின். தெருவின் இருபக்கங்களிலும் வியாபித்துள்ள கட்டிடங்களின் கம்பீரத்தைத்தான் அவர்கள் மட்டாஞ்சேரி என்றழைக்கிறார்கள். பழமை மாறாத அந்த உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றில்தான் அபுலின் மாயலோகம் ஸ்டுடியோ. கற்சிலைகளுக்கு கதம்பமாலையிட்ட அதன் உள்அலங்காரமோ, அச்சுவரெங்கும் மாட்டப்பட்டுள்ள Black&white புகைப்படப் பழமையோ, சாதாரண சேர், டேபிளை நிராகரித்து, முற்றிலும் வேறு மாதிரி வடிவமைக்கப்பட்ட இருக்கையை மீறி, அந்த விசாலமான அறையெங்கும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலான தனிமையும், பழமையும் படிந்திருந்தது. அவன் நிறுவனத்தின் பெயர் மசாலா கம்பெனி. பச்சைக் காம்பில் பழுத்திருந்த மிளகாய் பழம்தான் அதன் சிம்பல். அந்த விசாலமான ஹாலின் ஆளுயர ஜன்னல்களைத் திறந்தால் நம் கண்ணுக்கெட்டின தூரம்வரை கடலின் வெண்மையும், நீலமும் புரளும் ஆர்ப்பரிப்பு.

அங்கு, நான் என் கதையொன்றை வாசிக் அழைக்கப்பட்டிருந்தேன். நாற்பது, ஐம்பது வெளிநாட்டுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சிகரெட் புகை அந்த அறையில் நிரம்பி மட்டாஞ்சேரி பஜாரில் இறங்கிக் கொண்டிருந்த சாயங்காலமது. ஒரு நிகழ்விற்கான துளி பதட்டமுமின்றி அபுல் என்னைக் கட்டி அணைத்து, அறிமுகப்படுத்தி என் சிறுகதையொன்றை வாசிக்க வேண்டினான். அறையின் ஒரு ஓரம் அவர்களே தயாரித்த Red wine நிரப்பப்பட்ட பாத்திரம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான் அதுவரை பார்த்தறியாத அழகிய யுவதிகள் வெவ்வேறு அளவிலான உடைகளோடு wine போதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். கொண்டாட்ட மனநிலையின் உச்சமான மௌனம் அது. நான் என் ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையை தமிழில் வாசிக்கிறேன். அம்மனநிலையைக் கொஞ்சமும் சிதையவிடாமல் என் நண்பர் ஆனந் ஸ்கரியா அதை அழகாக ஆங்கிலப்படுத்துகிறார். மாயலோகத்தின் இடைவெளி சுருங்கி இரவின் அடர்த்திக்கு வழிவிடுகிறது. இச்சூழலில் கரைய விரும்பும் ஒரே படைப்பாளி என நான் கருதிய கோணங்கிக்கு அங்கிருந்து பேசினேன். அடுத்த பத்தாவது மணி நேரத்தில் கோணங்கி மழையில் நனைந்து கொண்டே மாயலோகத்திற்குள் பிரவேசித்தான்.

மாயலோகத்தின் சுவர் எங்கும் வியாபித்திருந்த Black Mother ன்று தலைப்பிட்டு கொடுங்கல்லூர் கண்ணகி கோவில் திருவிழாவில் அபுலால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உக்கிரத்தில் நிலைக்குத்தி நின்றான் கோணங்கி. ‘‘இறடிக்கு நாலடி’’ என்ற நம் ஊர் வாசல் கதவு அளவுள்ள சட்டங்களில் பிரேம் செய்யப்பட்ட அடர்பச்சையும், வெள்ளையும், கலந்து எடுக்கப்பட்ட அமானுஷ்யமான புகைப்படங்கள் அவை. அமெரிக்க பத்திரிகை ஒன்றின் அசைன்மெண்டுக்காகக் கொடுங்கல்லூர் கண்ணகி ஆலய வெளியில் மழையில் படுத்துறங்கி, 1000 க்கும் மேற்பட்ட படங்களைத் தன் கேமராவுக்குள் புதைத்து வைத்திருந்தான் அபுல்.

அதிலிருந்து ஒரு படத்தை அச்சந்திப்பின் நினைவாக பெற்று, தன் ‘‘பிதிரா’’ நாவலின் அட்டைப்படத்திற்குக் கோணங்கி பயன்படுத்திக் கொண்டான். கோவில் வளாகமெங்கும் குவித்து வைத்திருந்த கழுத்தறுபட்ட கோழித் தலைகளும், சட்டை அணியாத வெற்று முதுகோடு கண்ணகியை நோக்கி வணங்கும் உரமேறிய உடம்புகளும், கையில் அரிவாளோடும் கடித்த உதடுகளோடும் சினமேறிய பெண்கள் முகங்களும் நாம் எங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்.

அபுலின் படைப்பியக்கம் அலாதியானது. காட்டாற்றின் சத்தத்தையும், அமைதியையும் அடுத்தடுத்து உணர முடிவது. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இளம் பெண்கள் பலர் அவனைத் தேடி வந்தவண்ணம் இருந்தனர். அவர்களோடு அவன் கழித்த நாட்கள் நீரின் சுழிப்பு மாதிரியானது. அதை நாம் பிடித்து நிறுத்த முயலும் அவசரத்திலேயே அது கலைந்து மறையும். தன் கேமராவை அவன் ஓர் உயிருள்ள ஜீவனைப் பற்றியிருப்பது மாதிரியே தன்னோடு எப்போதும் பற்றியிருப்பான்.

பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் தேசம் முழுவதும் நிலவிய பேரமைதியை அவன் படமாக்கிய உந்துதலே என்.எஸ்.மாதவனின் Blue pencil ன்ற சிறுகதை. மாதவனின் ‘‘லந்தன் பத்தேரியில் லுத்தினியாக்கள்’’ என்ற நாவலில் அபுல் ஒரு தனி கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். ஃபோர்ட் கொச்சினில், கடலலை சீறும் தருணங்களும், அடர் மழைப் பொழிவின் இரவுகளும், பெருமரங்கள் உதிர்ந்து துளிர்க்கும் பருவங்களும் அபுலின் கேமராவுக்குள் அடைக்கலம் தேடி ஒளிந்து கொள்கின்றன. அவன், இரத்தக் கவிச்சியோடு பிறந்த குழந்தையின் மீது புரளும் பிரசவ மயக்கம் தெளியாத தாயின் பரிவுமிக்க விரல்களின் ஸ்பரிசம் மாதிரி அவற்றைத் தன்னுள் புதைத்துக் கொள்கிறான்.

எனக்குப் பரிசளிக்க, ஆண்டிற்கு ஒரு முறை மலையடிவாரத்தில் நடக்கும் குதிரை சந்தையின் பின்னணியில் திருவண்ணாமலை மலையை அபுல் பதிவு செய்திருப்பது வேறு எந்த கலைஞனுக்கும் சாத்தியமற்றது.

அபுல், கலர் படங்கள் எடுத்து நான் பார்த்ததில்லை. தன் புகைப்படங்களுக்கென்று தனி வரையறைகளை அவன் வகுத்து வைத்துள்ளான். Digital Camera -வை அவன் தொடுவதில்லை. Film போட்டு எடுத்த படங்களைக் கழுவி முடித்து பிரிண்ட் போடுவதற்குமுன் ஆணியால் Film மை கீறுகிறான். அதன் அழகியலைச் சிதைக்கிறான். புகைப்படங்களின் ஆகச் சிறந்த நேர்த்தி அவனுக்கெதிரானவை. அது அவனுக்கொரு பேராடும் கருவி. யுத்தகளத்தில் துள்ளும் ஆயுதத்திற்கு எதற்கு பூ அலங்காரம்?

எதிர் கொண்டெழும் பேரலைகளைப் பார்த்து, கடற்கரை மணலையும் தாண்டிய ஓட்டமல்ல அபுலின் வாழ்வு. அது ஒரு கலைஞனுக்கான பிரத்தேயகமான, வெளிப்படையானது. பெரும்பாலான தமிழ்க்கலைஞர்களை எப்போதும் பொறாமைப்படுத்தும் அபுலின் கொண்டாட்ட வாழ்வு. நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அபுல் ஒரு புது ஸ்நேகிதியை அறிமுகப்படுத்துவான். பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்கள் அவன் படைப்பின் மீதும் ஆளுமையின் மீதும் அப்பெண்கள் அடைந்த பரவசத்தையும், உன்மத்தத்தையும் பார்த்து 19. டி.ஏம். சாரோனுக்குக் கேட்காதவாறு பெருமூச்சு விட்டிருக்கிறேன்.

அபுலுக்குத் தமிழ்நாட்டில் மிகப் பிடித்த மனிதர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் சினிமா Poster களை மட்டும் புகைப்படங்களாக்கி ஒரு தனி Showவே நடத்தியிருக்கிறான். மட்டாஞ்சேரியின் பின் இரவு உறக்கத்தில் எம்.ஜி.ஆரின் சினிமாப் பாடல்களை உரக்கப் பாடி கடலலைகளைக் கலவரப்படுத்துவான். தன் Cell phone-- இன் Ring tone ‘‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’’ தான். தன்னை ஒரு மலையாளி என்றோ, முசல்மான் என்றோ ஓரு விநாடிகூட உணராதவன். வாழ்விற்கும் படைப்புக்குமான இடைவெளியென ஒரு அங்குலத்தையும் அவன் அனுமதித்ததில்லை.

சமீபத்தில், தன் சமீபத்திய காதல் மனைவியோடு என் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தான். பெரும் குடும்பப் பொறுப்பேறியிருந்தவன் மாதிரி சாப்பிட்டு முடிக்கும் வரை நடித்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணை அபுல் காதலித்துக் கொண்டிருந்த போதே நானறிவேன். அவன் புகைப்படங்களின் வசீகரத்துக்குப் பரிசாக கிடைத்த ஒரு ஈரானியப் பேரழகி. Film Editer.. அவ்வப்போது வாங்கப்பட்ட அவனுக்கான விலையுயர்ந்த Wine பாட்டில்களோடு அவள் இந்தியா வந்திறங்குவாள். இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பையன் இருக்கிறான். அன்று வீட்டில் துருதுரு கண்களோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அந்தப் பையனைப் பிடித்து அவனை எனக்கு நேராக நிறுத்தி குனிந்து கேட்டேன்,

‘‘ஊன் பேரென்ன?’’

‘‘நாராயணன் ரஹ்மான்’’