Tuesday, March 7, 2017

நாடகக் கலைஞர்களின் கிழிந்தத் துணிகளைத் தைக்க மனைவியும் வருவாள்

    



  

நிச்சயம் இருபத்தைந்து வருடங்களுக்கு குறையாது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் அகன்ற புல்வெளியில் காலை ஏழு மணிக்கே எப்போதும்  போல வட்டமாக உட்கார்ந்திருக்கிறோம்.

ரா பனி புல்வெளியின் மேல் சின்ன சின்ன கூடுகட்டித் தங்கியிருக்கிறது. இன்னும் கொஞ்சமே கொஞ்ச நேரம். அவைகள் உடைந்து புற்களைத் தனிமையாக்கும்.

நாங்கள் மு. ராமசாமியின் நிஜ நாடக இயக்கத்தின்ஸ்பார்ட்டகஸ் பார்க்கவிருந்த அதிகாலை அது. அந்நாடகம், மாணவனான எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகள் எதனாலும் அடங்காதது.

அம் மனநிலையிலிருந்து விடுபட முடியாமல் எழுந்த என் தோள்களை அழுத்தி நண்பன் கோணங்கி.  



பவா இது முருகன். இவன்தான் கடகுட்டி. பி.. படிக்கிறான்என்கிறான்.

அச்சிறு பையனின் கைப்பற்றிக் குலுக்கிக் கொள்கிறேன். நான் மட்டும் என்ன? அப்போதுதான் பி.காம். படிப்பைப் பெயரளவுக்கு முடித்திருந்தேன்.

நேற்று டெல்லி, இன்று சென்னை, நாளை தஞ்சாவூர் அதற்கும் அடுத்த நாள் திருச்சூர் தேசிய நாடகவிழா என நாட்டின் எத்திசையிலும் பயணிக்கும் முருகபூபதி என்ற நாடகக் கலைஞன் அப்புல்வெளியின் ஈரத்திலிருந்துதான் வளர்ந்திருக்க வேண்டும்.

தமிழில் அதற்கு முன்பும், அதற்கு பின்பும் எவராலும் பூபதியின் நாடக மொழியை, வெளிச்சத்தோடு பரவும் மெல்லிய  இசையை, வானுயர அதிரும் உக்கிரமானதொரு பறையிசையை கையாள முடிந்ததில்லை. கால் நூற்றாண்டுக்கும் மேல் அவன் வளர்த்த அக்னிக்குண்டமது. அந்த அனலின் அருகே சுலபமாக நெருங்கிவிட முடியாது.



மரணவீட்டின் குறிப்புகள், மாயக் கோமாளியின் ஜாலக் கண்ணாடி என நீளும் பதினெட்டு முழுநீள நாடகப் பிரதிகளை பலநூறு முறைகள், பலநூறு நிலப்பரப்புகளில் பல லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

ரப்பர் காட்டின் மையத்தில், தேனிக் காட்டின் செம்மண் தரையில் என அவன் பிரதிகள் தங்கள் கோமாளிகளோடு பயணித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஆனாலும் அதுமட்டுமல்ல பூபதி என்ற கலைஞனின் ஆகிருதி. அவன் தரையளவுக்கு தாழ்ந்த தமிழகக் குழந்தைகளுக்கு தன் முப்பத்தி ஆறு நாடகங்களில் கதை சொல்லியிருக்கிறான். அந் நாடகங்களில் நீளும் ரயில் வண்டிகளில், பின்பக்க சட்டை கசங்க எம் மாவட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு. ஆரம்பத்தில் வண்டி காலியாகத்தான் புறப்படும்அது சிவகாசியை அடைகையில் குழந்தைகளால் நிரம்பித் ததும்பும்.



நானறிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஃபோர்ட் பவுண்டேஷனில் பணம் வாங்காமல், கார்ப்பரேட்டுகளுக்கு ஊழியம் பார்க்காமல், நிறுவனங்களின் வாசலில் போய் காசுக்கு நிற்காமல் தன் பயணத்தை பசியும்  பட்டினியுமாய் அவனால் தொடர முடிந்திருக்கிறது. அவன் குழுவில் இயங்கிய உந்துதலில் அவனையே பின் தொடர்பவர்களென பாண்டிச்சேரி கோபியையும், ஓவியர் தனசேகரனையும், கருணா பிரச்சாரத்தையும் மட்டும்  மிஞ்சியவர்களென சொல்லமுடியும்.

மற்ற எல்லா குழுக்களையும் அரசு, கார்ப்பரேட், பவுண்டேஷன் என யார் யாரோ தங்கள் இச்சைக்குட்படுத்திக் கொண்டார்கள்.

கலைஞர்களின் ஆன்ம பலத்தை கரன்சிகளால் அடைத்து பார்த்து திருப்தியடைந்தவர்கள்.



பூபதி இதில் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தான்,  தன் சக  நடிகர்களோடு சதா ஏதாவதொரு தேரிக் காட்டின் ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருப்பான்.

தோளில் தொங்கும் அத் துணி மூட்டையில் குடிக்க கொஞ்சம் நீரும், பசி தீர்க்கக் கொஞ்சம் கொள்ளும் இருக்கலாம்.

தன் குழுவிலிருந்து தமிழ் திரைக்கு பயணித்து ஆடுகளம், விசாரணை என முக்கிய திரைப்படங்களில் தனித்து மின்னிய முருகதாசை எப்போதாவது பார்க்கும்போது. “எப்படா ப்ளேல நடிக்க வருவே?” என அதே வாஞ்சையோடு அழைக்கும் பூபதியின் குரலை எப்போதும் புறந்தள்ள முடிந்ததில்லை என்கிறான் முருகதாஸ்.

நிகழ்த்துதல் என்பது நாடகத்தின் முக்கிய குவிமையமே இல்லை. அது இயல்பான ஒரு உந்துதலில் நிகழும் அவ்வளவுதான்.



ஒத்திகைதான். ஒத்திகை மட்டும்தான் நாடக நிலத்தின் வாழ்விடமே. ஒத்திகையில் எவன் முழு அர்ப்பணிப்புடன் தன்னை ஒப்புக் கொடுக்கிறானோ அவனே நடிகன். ஒத்திகையை புறந்தள்ளிவிட்டு காட்சிப் படுத்துதலில் நேரடியாய் மிளிர்பவர் வெறும் Performer மட்டுமே.

ஒத்திகைக்கான இடம் தேடி இயக்குநர்களும், நடிகர்களும் அலைவது வேறு எந்த நாட்டிலும் காணக் கிடைக்காத அவலம்.

புகழ்பெற்ற (Established) நாடகப் பேராசிரியர்கள், நடிகர்கள், நாடக களத்திலிருந்து திரைக்குப் போன கலைஞர்கள் எல்லோருமே முதலில் செய்வது தாங்கள் வந்த வழியின் கதவுகளை இரும்பு கதவு கொண்டு அடைத்துவிடுவது. அதன்பின் லௌகீக சுகத்திற்கு ஓர் அர்ப்பணிப்புமிக்க தியேட்டர் வாழ்வின் இறந்த காலங்களைப் பலியாக்குவது. இதுதான் தமிழ் நிலமெங்கும் இன்று நடப்பது. இவர்கள் எப்போதுமே எதிர்கால வலியைப் பொருட்படுத்த அஞ்சி நிகழ்கால ருசியை மட்டுமே பருகுபவர்கள்.



தன் நவீன நாடகங்களைத் துவங்கிய காலத்திலிருந்து அதை நிகழ்த்துபவர்களை என் வலது கையின் விரல்களின் எண்ணிக்கைக்குள் அடக்கிவிட முடியும் என்னால். ஆனால் வதை கூடங்களில் வைத்து சித்திரவதை செய்யப்படுபவர்களைப் போல நான் தொடர்ந்து அவர்களை மட்டுமே இம்சிக்கிறேன். இக்கலைஞர்களுக்கு ஆக்கிப்போட்ட இரு பெரும் தாய்கள் என் அம்மாவும், பவாவின் அம்மா தனம்மாவும். இருவருமே இன்று மண்மேடேறி குழிகளில் கிடக்கிறார்கள். அவர்கள் பற்ற வைத்த அடுப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது என்கிறான் பூபதி.

நான் பல ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுத்த இச்சித்திரவதை படுபவர்களின் நாடக வேட்டை அப்படியேதான் இருக்கிறது. தீயை இன்னும் பலமாக காற்று ஊதிப் பெருக்குகிறது.

பூபதியின் சற்றேறக்குறைய எல்லா நாடகங்களையும் நாங்கள் திருவண்ணாமலையில் நிகழ்த்தியிருக்கிறோம். அப்போது பட்ட அவமானங்களை மட்டும் தனியே சேகரித்து இளம் தலைமுறையின் முன் காட்சிக்கு வைக்க முடியும் என்னால்.



வனத்தாதிஎன்ற நாடகத்தின் பத்து நாள் ஒத்திகையையும் திப்ப காட்டின் மத்தியில் திரௌபதியம்மன் மைதானத்தில்தான். சாலையிலிருந்து உள்ளடங்கி நீளும் மண் ரோட்டில் ஒற்றையாளாக சைக்கிளில் மிதிப்பேன் நான்.

கேரியரில் அம்மா வடித்து தந்த சுடு சோறும், கோழிக்கறி குழம்புமாக என்னை ஏதாவது முனி பின் தொடர்கிறதாவென நொடிக்கொருதரம் திரும்பி திரும்பிப் பார்த்து போன அக்காட்டு சாலையின்  வளைவுகளில் இப்போதும் ஆளற்ற தனிமையையும் நின்று பார்த்துக்கொள்வதுண்டு நான்.

வனத்தாதிநாடக ஒத்திகை திப்பக்காட்டில் தொடர்ந்து நடந்த நாட்களில் மாலை ஐந்து மணிக்கு நான் பூபதியை மட்டும் தனியே அழைத்து வருவேன்.



வியர்வை வழியும் வெற்றுடம்பில் அப்படியே சட்டை போட்டு இருவரும் தாலுக்காபீஸ் வாசலில் போய் நிற்போம். அலுவலகம் முடிந்து வரும் ஒவ்வொருவரிடமும் பூபதியை, அவன் கலையை அறிமுகப்படுத்தி  நான் காசு கேட்பேன். ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று எங்கள் கைக்கு கிடைத்தால் பெரும் ஆசுவாசம் ஏற்படும்.

நடுக்காட்டில் நாடகம் பார்க்க நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வண்டிகட்டி, வேன் வைத்து, கால்நடையாகவென  வந்து சேர்ந்தார்கள்.

அது ஒரு மகத்தான அனுபவம் மக்கா. தவறவிட்டிருந்த  எதையோ தேடியடைந்த அனுபவம்.



அவர்கள் கையிலிருந்த விதை தானியத்தை  எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தனுப்பினார்கள். தமிழ் நாடெங்கும் இவ் வீரிய வித்துக்கள் வயல்களில் விழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். மனிதர்கள் தங்கள் அன்பெனும் சிறுமழையால் அவைகளை தோய்த்தெடுப்பார்களென அக்கலைஞர்கள் நம்பினார்கள்.

இதுவரை பூபதியின் மணல்மகுடிக்கு பார்வையாளர்களிலிருந்தே நடிகர்கள் மீண்டு வந்திருக்கிறார்கள்.

இனி நாடகம், நடிகன், இயக்குநர் என பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம்.

Cultured Audience

Audience Culture

இவை இரண்டுமே இனிவரும் தியேட்டர் இயக்கத்தை முன்செலுத்தப் போகின்றன.

இப்போது நாம் மேற்கொள்ளும் பயிற்சி முறை காலனியாதிக்கம் கற்றுத்தந்த சாரமற்ற மேற்கத்திய நடைமுறை.

நம் மரபில் நாடக பயிற்சி அல்ல ஓத்திகை. நம் மரபுவழி சடங்குகளிலிருந்தே அதைத் துவங்கியாகவேண்டும்.



இனி கூட்டு உடல், கூட்டு சிந்தனை, கூட்டு செயல்பாடு என்பது மட்டுமே. அதிலிருந்துதான் நம் உண்மையான அரசியல் தாதுவை கண்டடையமுடியும்.
சடங்கு என்பதை அதன் நேரடி அர்த்தத்தில் புரிந்து கொள்ளமுடியாது. அதன் கூடவே பெரியார் எனும் பெரும் பிசாசு ஒன்று உடனிருக்கும்.

மூட நம்பிக்கைகள் உதிர்க்கப்பட்ட சடங்கு வழி ஒத்திகைகளே நடிகனை மண்ணில் இனி ஊனும்.

பெண்களின் குலவை சத்தம் ஆண்களின் விலா எலும்புகளை ஊடறுக்கும். அந்த உக்கிரத்தில்தான் ஆண், பெண் பாலின வேறுபாடு அழிந்து பல்லுயிர் என்பது மட்டும் நிலைக்கும்.

நம் மரபுவழி சடங்குகள் திரும்பத் திரும்ப தாவரங்களையும், ஜீவராசிகளையும், சிறு தெய்வங்களையும் நம்மோடு இணைக்கின்றன.
அவைகள் நம்மிடமிருந்து அழிந்து போன பறவைகள், விலங்குகளை மறுபிரசவித்து நம் நாடக வெளிகளில் பிரவேசிக்க  வைக்கும் என்று ஒரு பித்து மனநிலையில் முருகபூபதி சொல்வதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.




நீளும் ஒத்திகைகளின் போது எழும் சக நடிகர்கள் மீதான ஈகோ, கசப்பு இவைகள் நிகழ்த்துலின் போது பெரும் காதலாகி கசிவதை ஒரு ஒருங்கிணைப்பாளனாக பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

பூபதியின் நாடக பிரதி அன்றாட புழங்கு வார்த்தைகளை மறுதலிக்கிறது.
புரியவில்லை என்ற பல்லாண்டு சொல்மீது அவர்கள் தங்கள் பறையொலியை எழுப்பி சொல்லை சிதைக்கிறார்கள்.

 நாட்டுப்புற கவித்துவ (Folk poetic) மொழியே இனிவரும் தமிழ்நாடகங்களின் பொது மொழியாக மாறப்போகிறதென்ற நிறைவேறலுக்கான ஒரு பெருங்கனவிலிருக்கிறதுமணல் மகுடி’.

பெற்ற ஒரு டாக்டர் பட்டத்தை தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக்கொண்டு, வீட்டிலும் அலுவலகத்திலும் பெயர் பலகைகளில் அவைகளைப் பதித்து அதிகார ருசிக்கு ஏங்கும் ஒரு சராசரி வாழ்வல்ல பூபதியின் வாழ்வு.



நாடகக்காரனின் மனைவியின் அதிதீவிர வெறுப்பில்தான் அதிதீவிர காதல் புதைந்துள்ளது என்பதை தன் நாடக வாழ்வே தனக்கு கற்பித்தது என்கிறார் பூபதி.

‘‘என்றாவது ஒருநாள் நடிகனின் கிழிந்த நாடக உடையை ஊசி, நூல் கொண்டு தைத்துத்தர என்னோடு என் மனைவியும் கால் நீட்டி உட்கார கூடும்’’ அதற்கான காத்திருத்தலே இம்மௌனம் எனும் பூபதியை கட்டித் தழுவிக்கொள்கிறேன் இக் கணத்தில்.



நன்றி
மார்ச் 2017 செம்மலர்


Monday, March 6, 2017

பேரன்பின் பெருமழை - ராம்

                 



அப்போது பத்துக்குப் பத்து விஸ்தீரனத்தில்தான் வம்சி புக்ஸ் இயங்கியது. அகலமான அத்தெருவில் அன்று மாலை சாவகாசமாக நின்று மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய பைக்கில் இரண்டு பேர் எங்கள் வாசலில் வந்து இறங்கினார்கள். வண்டியை சற்றே தள்ளி நிறுத்திவிட்டு கடைக்கு எதிர்புறம் நின்று ஒரு சிகரெட்டைக் கொளுத்திக்கொண்டே போர்டைப்பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள்.

 ‘இதுதான்’ என்று உறுதியடைந்ததை சிகரெட் புகையினூடே என்னால் அவதானிக்க முடிந்தது.

அவர்கள் இருவரையும் இன்னும் நுட்பமாகக் கவனித்தேன். தாடியோடு கசங்கின கரு நிற டி.ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்டுமாய் இருந்தவனுக்கு முப்பது வயதிருக்கலாம். உடன் வந்த பையனின் வயதைக் கணிக்க முடியவில்லை.

சிகரெட் துண்டைக் காலில் போட்டு மிதித்தவாறே என்னை சமீபித்து,

 ‘பவா செல்லதுரைன்னு..’

 ‘நான் தான்’ நான் கை நீட்டிக் கொண்டே சொன்னேன்.

கைகளை அழுத்திக் கொண்டே, ‘நான் ராம் சுப்பு, இவன் மணி, முத்து அனுப்பினான்.’

 ‘எந்த முத்து?’

 ‘பாடலாசிரியன் முத்து’

நான் அக்கையை விடாமல், ‘ஓ நீங்க ஒரு படம் பண்ணப் போறீங்க பேரு ராம், சரியா? நேத்தே சொன்னான், நான் தான் மறந்திட்டேன்.

அப்படியே படிகளில் நின்று பேச ஆரம்பித்தோம். கடை அடைபடும்போது மணி ஒன்பது. பேசுவதற்கு அவ்வளவு இருந்தது எங்கள் இருவருக்கும்.

பேசிக்கொண்டே ‘போலாமா ராம்’ என்றபோது அணிச்சையாக என் வலது கை ராமின் தோளில் ஏறியிருந்ததை உணர முடிந்தது.

 ‘எங்கண்ணா?’

 ‘வீட்டிற்கு’

 ‘வேணான்ணா, அறைகள்ல தூங்கி சலிச்சிடிச்சு, பொறந்ததிலயிருந்து அறை அறையா எத்தனை விதமான அறைகள்ல தூங்கியிருப்போம். வானத்தை, நிலாவை, 
நட்சத்திரங்களை, கண்ணுக்கு காட்டி ஒரு திறந்தவெளியில படுக்கணும்ண்ணா ’
நான் அவர்கள் வந்த வண்டியை அப்போதுதான் கவனித்தேன். அதில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் ஆரம்பித்து சட்டி,பானை என ஒரு பெரிய சுமை தொங்கியது.

என் பார்வையின் கேள்வியை கண நேரத்தில் புரிந்து கொண்டு, ‘அது சாப்பிட காசு இருக்காதுண்ணா. பசிச்சா நாங்களே ஏதாவது ஒரு புளிய மரத்தடியில நிறுத்தி சமைச்சு சாப்பிடுவோம்.’

எல்லாமே என் அன்றாடங்கள் மீது துப்புவதாகயிருந்தது.

அன்றிரவு ராம் பற்றிய நினைவுகளில் தூக்கம்பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தேன்.

நாம் வழக்கம்,பெருமிதம்,அந்தஸ்து என வரையறுத்திருந்த எல்லாவற்றையும் இவன் இடதுகால் சுண்டுவிரலால் தள்ளத் தெரிந்திருக்கிறான். இதற்காக நீண்ட அனுபவம் அவனுக்குத் தேவைப்படவில்லை.

வாழ்வின் துவக்கமே அப்படித்தான்.

நா.முத்துக்குமாருக்கும், ராமசுப்புவுக்குமான நட்பு என்பது சொல்லில் அடங்காதது. ஒவ்வொரு சந்திப்பிலும் முத்துக்குமாருக்காக இருவரும் பலநூறு சொற்றொடர்களை பகிர்ந்து கொள்வோம்.

‘கற்றது தமிழ்’ மனதில் முழுமையாக உருப்பெற்ற தருணத்தில் எங்கள் வீட்டு மாடி அறையில் உட்கார்ந்து இரு நாட்கள் காட்சி காட்சியாய் விவரித்த ராமின் கண்களில் தெறித்த லட்சியம் இப்போதும் என்னில் அப்படியேதானிருக்கிறது.

என் அவதானிப்பில் திரை மொழி முழுவதுமாக கைவரப்பெற்ற கலைஞர்களில் ராமும் ஒருவன். தன்னில் ஏற்றி வைத்திருக்கும் கொள்கைகள், கோட்பாடுகள் எதுவும் பிரச்சாரமாக ஒரு காட்சியிலும் வெளிப்பட்டதில்லை.

திரைக்கான மொழி வேறு என்ற தெளிவை எப்போதும் மீறினதில்லை. ‘கற்றது தமிழ்’ வெளிவந்தபோது திருவண்ணாமலையில் உட்கார்ந்து முதல் காட்சியைப் பார்த்தேன். இளைஞர்களின் ஆர்ப்பரிப்பும் வசனங்களின் வெளிபடுதலின்போது எழுந்த ஆரவாரமும் ராம் என்ற கலைஞனை தமிழ்நாடு புரிந்து கொண்டது என்ற சந்தோஷம் என்னில் திருப்தியைத் தந்தது.

எதையுமே தாங்கிக் கொள்ளும் மனநிலையையும் எந்த எதிர்பார்ப்புகளுமற்ற வாழ்நிலையுமே ராமின் பெரும் பலம் என எப்போதும் நினைப்பேன்.

 ‘தங்க மீன்கள்’ தாமதமாகி பெரும் பணக்கஷ்டத்தில் தன் உதவி இயக்குனர்களோடு மட்டுமே தன் நாட்களை நகர்த்திய நாளொன்றில் நான் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திரைப்பட கருத்தரங்கிற்கு பேசக் கூப்பிட்டேன்.

அந்த உரையின் ஆரம்பமே எல்லோரையும் நிலை குலைய வைத்தது. அப்பேச்சில் தெறித்த உண்மை யாவரையும் பொசுக்கவல்லது. யாருக்கும் வாய்க்காத கவிதையும்  உரைநடையும் கலந்த ஒரு இயல்பான சொற்கோவையே ராமின் தனித்துவம்.

பேசிமுடித்து அந்த அரங்கத்திற்கு வெளியே கவிழ்ந்திருந்த ஒரு ரகசிய மரநிழல் இருளில் நின்று ‘தம்’ அடித்தபோது ராமுக்குக் கொடுக்க என்னிடம் தரப்பட்டிருந்த ஒரு கவரை நீட்டினேன். அதை தன் இடது கையால் புறந்தள்ளினான். காசெல்லாம் வேணாண்னா, அந்தக் கவரைக் கொடுத்தவங்ககிட்டயே கொடுத்திடுங்க, எனக்கு பஸ் சார்ஜுக்கு மட்டும் உங்க பாக்கெட்டிலயிருந்து 200/- ரூபா எடுத்துக்கறேன் என்ற ராமின் உறுதியான முகத்தை என்னால் எப்போதும் மறக்க முடிந்ததில்லை.
மாரி செல்வராஜ் ராமின் உதவி இயக்குனர் மட்டுமா?

ராமின் பிரியமான தம்பி, உற்ற தோழன், சில நேரங்களில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியன், சில நேரங்களில் கற்றுக் கொள்ளும் மாணவன், தாங்க முடியாத சில தருணங்களில் வெடித்து அழ மடி கொடுக்கும் காதலி.

மாரி செல்வராஜின் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பின் இறுதி கட்ட வேலைகளில் சாரோன் வீட்டில் தங்கி அவைகளை செழுமைப்படுத்திக் கொண்டிருந்தபோது வாய்த்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு கொஞ்சம் செழுமையானது. 
மீன்குழம்பும், பொறித்த மீன் துண்டுகளும், எறா தொக்கும் இன்னுமின்னும் இரு வேறு வகை வறுவல்களாய் எங்கள் உயரம் குறைந்த சாப்பாட்டு மேஜையில் பரிமாறுதலுக்காகக் காத்திருந்தன.

நானும் செல்வமும் அருகருகே உட்கார்ந்து சாப்பிடத் துவங்கும் முன் தன் தொலைபேசியில் யாரையோ அழைத்து உள்ளறைத் தனிமைக்கு ஓடிப்போன மாரியின் அந்தரங்கத்தில் நுழைய மனமின்றி வெறும் தட்டின் முன் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன்.

பசியின் பிடுங்கல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வறையில் பிரவேசிக்கையில் ததும்பிய கண்களோடு செல்வம் தன் சக தோழனும் ஆசானுமாகிய ராமோடு பேசிக் கொண்டிருந்தான்
உரையாடலின் அறுபடலுக்குப்பின் செல்வத்தைக் கைப்பிடித்து அழைத்துவரும் முன் கிடைத்த இடைவெளியில் கேட்டேன்.

என்ன ஆச்சு செல்வம்?

இத்தனை நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுண்ணா, எங்க டைரக்டர் இன்னிக்கு மதியம் சாப்பிடல. கையில் சுத்தமா காசில்ல, நான் மட்டும் எப்ப்டிண்ணா இதைச் சாப்பிட? என என்னை ஏறெடுத்தபோது தம்பி செல்வத்தை என் தோள்களில் சாத்திக் கொண்டேன்.

அசாத்திய தைரியமும் அர்பணிப்பும் கொண்ட திரைக்  கலைஞனாக எப்போதும் ராமையே நினைத்துக் கொள்வேன். திரைப்படத்தில் பணியாற்ற விரும்பும் பல இளம் படைப்பாளிகளுக்கு ராமையே பரிந்துரைப்பேன்.
என்னவோ குறிப்பிடமுடியாத ஒரு பிரியம் எங்கள் இருவரின் மனதிலும் நிலைபெற்று விட்டது. ‘பேரன்பு’ படத்தில் எனக்கு ஒரு மருத்துவர் பாத்திரம்.

எலும்பும் உறைந்துவிடும் கொடைக்கானல் மன்னார்பாளையத்து ஏரிக்கரையில் நடு ராத்திரி இருட்டில் உட்காரவைத்து எனக்கும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும் மட்டும் கதையைக் காட்சி காட்சியாய் விவரித்த ராமின் முகத்தில் ஒளியேறியிருந்ததை அந்த இருட்டில் கவனித்தேன்.

அப்படத்திற்கு ஸ்கிரிப்ட இல்லை. படத்தின் மொத்தக் காட்சிகளும் ஒவ்வொன்றாய் அந்த ஏரிக்கரை கடுங்குளிரில் ராமிடமிருந்து வந்ததை கவனித்து அதிர மட்டுமே முடிந்தது.

அடுத்த நாள் படப்பிடிப்பின் இடையே மலையாள திரைப்பட விமர்சகன் பாலாஜியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்திய சினிமாவின் தனித்துவம் ரித்விக் கட்டக் தான், அவரின் தொடர்ச்சி இந்த ராம் என ஒரு திசையை சுட்டியது நினைவிருக்கிறது.

கணவன் கலையின் தேடுதல் பொருட்டும், வாழ்வை நகர்த்த சம்பாதிப்பதற்கும் வேண்டி தன் பிரிய மகளையும் தன்  கவிதாயினி மனைவியையும் வெகு தொலைவில் விட்டுவிட்டு சென்னையில் அலைவுறுதலை தன் ‘கோடிட்ட இடங்களை நிரப்புதல்’ என்ற தொகுப்பில் சுமதி ராம் தன் மகளுக்கு கவிதைகளாக்கிப் பகிர்ந்திருப்பார். துயரத்தினை மீறின கொடுப்பினை அது ராம்.

ஆறு வருடங்களுக்கு முன் சென்னையில் நாங்கள் நடத்திய ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு பங்கேற்பாளராக வந்திருந்த ராம் யாரும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் மேடைக்கு அழைத்து என்னை எலும்பு நொறுங்க கட்டி அணைத்து, ‘ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு இப்படி பொது இடத்தில் வைத்து முத்தமிடுவது உங்கள் பார்வையில் அநாகரிகமெனில் அந்த அநாகரிகத்தை நான் இப்போது உங்கள் எல்லோர் முன்பும் செய்ய விரும்புகிறேன்’ என்ற போது வெடித்து அழுததைத் தவிர வேறென்ன செய்திருக்க முடியுமென தெரியவில்லை எனக்கு.

- நன்றி
இம்மாத அந்திமழை


Thursday, February 16, 2017

ஓர் வாசிப்பனுபவம் - டொமினிக் முன்னுரை





சற்று முன்புதான் உங்களது வலைத்தளத்தில் ‘ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்..‘ சிறுகதையை வாசித்தேன். இது உங்களது தொகுப்பில் முன்பே வாசிக்கக் கிடைத்த சிறுகதைதான். ஆனால் இன்று வாசிக்கும்போது உங்களது படைப்பினைக் குறித்து வெகு நாட்கள் பனி மூட்டத்தில் காணக் கிடைக்கும் மலைஅருவி போல சிக்கியும், சிக்காமலும் இருந்த ஒன்று பிடி கிடைத்து விட்டது.  உங்களை உங்கள் சமகாலப் படைப்பாளிகளிடமிருந்து தனித்தன்மையுடன் நிறுத்துவது அதுதான் என நினைக்கிறேன். 

நான் இலக்கியம் வாசிக்க வந்தது 80 களின் மத்தியில்,  அதாவது என் பதின்ம வயதுகளின் துவக்கத்தில். அப்போது வெகுவாக என் வாசிப்பு வட்டத்தில் சிலாகிக்கப்பட்ட வண்ணநிலவன்,  வண்ணதாசன்,  ஜி.நாகராஜன் ஆகியோர்  எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை.  நெல்லை மாவட்டத்தின் உள்ளடங்கிய பேரூராட்சி (வாசுதேவநல்லூர்) ஒன்றில் இவ்வளவு  எதிர்பார்ப்பு அதிகம் என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.   ஆனால் மிக வியப்பாக என்னை முதலில் வந்தடைந்தது அசோகமித்திரன் . அவரது ஒற்றன் நாவல் நான் முதலில் வாசித்த உருப்படியான இலக்கியப் படைப்பு. அதிலிருந்து தி.ஜா., சுஜாதா ., அப்புறம்  சு.ரா.,  கு.ப.ரா., கி.ரா.,  லா.ச.ரா., என்று வாசிப்பு நீண்டது.  ஆனால் பெயர்பெற்ற  எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்க முடிந்தது 1990 களின் மத்தியிலிருந்துதான்.  

நான் வாசிக்கும்போது என்னை அறியாமலேயே  கடைப்பிடித்திருக்கிற ஒரு விஷயம் ஒரு எழுத்தாளரின் முழுத் தொகுதியை வாசிக்க முயல்வது. ஓரிரு படைப்புகளை மட்டும் வாசித்தால் உருவாகிவரும் மதிப்பீட்டை நான் அடைகாத்துதான் வைத்திருந்திருக்கிறேன். முழு தொகுப்பாய் வாசித்ததும்தான் எனது வாசிப்பின் முட்டை குஞ்சைப் பொரிப்பதும்;  கூமுட்டை ஆவதும். தி.ஜா. வை நான் அறிமுகம் செய்துகொண்டது சிறுகதைத் தொகுப்புகள் வழியேதான். அதிலும் தம்பி மேலுள்ள அசூயையால் அண்டா பாயசத்தையும் சாக்கடையில் கொட்டும் கிழவரின் கதையை மட்டும் ஒரு வாரம் மறுபடி , மறுபடி வாசித்திருக்கிறேன். இல்லாக் கொடுமையால் ஒரு பணக்காரத் தொழு நோயாளிக்குப் பணியாளாக அனுப்பி வைக்கப்படும்  நல்லவனும், அசடனுமான அம்பியின் அப்பாவைக் கொலை செய்யும் வெறியில் ஒரு மாதம் திரிந்தேன். ஒரு சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற வித்தையை அவரிடம்தான் கற்றேன். அப்படி ஒரு சிறுகதை, வாசகனை என்னவெல்லாம் செய்யும் என்பதன் முதல் அனுபவமும் அவரிடம்தான்.  அங்கிருந்து அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள் என்று போகும்போது ஒரு எண்ணம் வெகு உறுதியாக மனதில் நின்றது. 

தி.ஜா. நாவல்கள் பலவற்றில் மையமாய் கையாள்வது காதலின் விரகத்தை. ‘பொங்கிப் பெருகும் தேவதைப் பெருங்காதல்‘ கிட்டாமல் மனதின் வேதனை செல்லரித்து அதில் மாயும் மனிதரையும், அந்த வெள்ளத்தின் வேகத்திலே சுக்கானின் பிடி கிட்டாமல் அதன் போக்கிலேயே அடித்துச் செல்லப்படும் மானிடர்களையும் மாறி, மாறி அவரது நாவல்கள் பேசுவதாகப் பட்டது. ஆனால் இதை நான் பகிர்ந்து கொண்ட இரு நண்பர்கள் என் மொத்த உடலின் எடையும் தலையால் மட்டுமே ஆகியிருப்பதாகவும், இன்னும் கொஞ்சம் தம் கட்டி நான் வாசிப்பின் ஆஆஆழத்தில் மூழ்க வேண்டுமென்றும் சொன்னதால் அப்படியே வைத்துவிட்டேன்.  

பிறகு 90களின் மத்தியில் தேடிக் கிடைத்த படைப்புகளைப் படித்ததும் எனது எண்ணம் வலுப்பட்டது. பாலியத்தில் உருவாக்கி வரும் எல்லாங் கலந்த நட்பு, முதல் பூவாய் பூத்து மலர்ந்த காதல், பிரியத்தால் தோளேறி பிரிவால் பிரும்மாண்டமாகிக் கொண்ட சிறுவயது சொந்தங்கள் ஆகியவை ஒரு புறம். பொருள் வயிற் பிரிவு, காலமும் தூரமும் உருவாக்கிய இடைவெளிகளில் சிக்கிக்கொண்ட சொந்தங்கள், வாழ்வின் மாறுபாடுகளால் அழுத்தப்பெறும் வேளையில் சோதனைக்குள்ளாகும் மெல்லுணர்வுகள், இழந்தவற்றின் மீதான துக்கத்தை அதிகப்படுத்தும் நிதர்சன வாழ்வின் சமரசக் கோரல்கள் ஆகியவை மறுபுறம். இந்த இரண்டும் மாறிமாறி வந்து கதாபாத்திரத்தை அலைக்கழித்து நம்மையும் பித்தாக்கும். இந்த இரண்டு நிலையில் முன்னதைப் பின்னது அழுத்த அந்த வேதனையும், பின்னதால் பிரிய நேரிட்ட முன்னதன் உணர்வும் கிட்டத்தட்ட 80% கதைகளின் கருப்பொருள். 

அவை பேசக்கூடாத பொருளல்ல. எனினும் இந்த மையமே பெரும்பான்மை படைப்புகளின் சுழிமையம்… ஆனால் களை  நடுவே முளைத்த நெல்பயிர்களாய் அமைந்த நல்ல படைப்புகளும் உண்டு.  பதின்வயதின்  தொடக்கத்தில்  ‘பார்த்த‘  அக்காக்களையும்,  அத்தைகளையும் வாலிபம் வந்தபின் எத்தனை முறைதான் திரும்பி வந்து சந்திப்பது? 

சமவயது இருபால் உறவு சகஜமாக இல்லாத ஒரு காலத்தில்,  காவியங்களில் பயின்றுவரும் ரொமாண்டிசமும் , பொருள்வயிற்  பிரிவும், சற்று ஊறவைத்துப் புழுக்கினால் வெளிப்படும் ஊமைக்காமமும் , ஒரு 20 வருடக் கருப்பொருளாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது நமது வாசிப்பில். அதன் வெவ்வேறு பரிமாணங்களாவது  பேசப்பட்டதா? இல்லை. மாறாக,  வெவ்வேறு வெளிப்பாட்டு முறைகள் மட்டுமே. இது இன்றுவரை ஊரில் தொலைத்த ஒரு தாவணி அக்காவை இலக்கிய முகத்தோடு வணிக இதழ்களில் ஒவ்வொருவரையும் வாராவாரம் முறைவைத்துத் தேடச் செய்திருக்கிறது. 

இந்தப் பச்சரிசி ‘காவியக் காதல்‘ ஒருமுனை என்றால் நேரடியாக பழைய கள் இறக்கும் கலை இன்னொரு முனையில். மதுரைக்கு வரும் வாசகனை எல்லாம் குறத்தி முடுக்கைத் தேடும்படி செய்த நாகராஜன் வகை படைப்புகள். நேரடியான , பாசாங்கற்ற பாலியல் பிறழ்வுகள் , அந்தச் சூழலே கதைக்கணங்கள். (என்ன இருந்தாலும் படைப்பூக்கம் மீதூறும்  இடங்களில்லையா?) அதிலுள்ள கலைக்கனத்தைவிட அதன் அதிர்ச்சி வைத்தியமே அதிகமும் பேசப்பட்டது. மதுரையின் குறத்தி முடுக்கு கிளையை தஞ்சையில் பிரகாஷ் தொடங்க முயற்சித்தார். ப்ராய்டின் பிறாண்டல்கள் எழுத்தாளர்கள் அனைவர் மீதும். 

பவா! ஓராண்டு காலம் பல படைப்பாளிகளின் தொகுப்புகள் மொத்தத்தையும் தொடர்ந்து வாசித்தேன். முன்னோடிகளின் படைப்புகளைத் தவிர்த்தால் அதன் பின் தொடர்வன அனைத்தும் பெரும்பாலும் இதே பேசுபொருள். அலுப்பும், சோர்வும் மிஞ்சிப் போனது. இந்தக் கருப்பொருளை மட்டுமேவா இருபது வருடங்கள் தமிழ்ச் சமூகம் மாந்தி மகிழ்ந்தது என்ற கேள்வி என்னை அரித்தது. சுஜாதா நிறைய ஆறுதல் அளித்தார். ஆனால் தேற்றவில்லை. பாலகுமாரன் 90களின் தி.ஜா. தான் ( நாவலில் உள்ள தி.ஜா.) எனக்குப் பெரும் ஆசுவாசம் அளித்தது கி.ரா.வும், கொஞ்சம் சு.ராவும்தான்.  பிறகுதான் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியும் ஒரே நேரத்தில் என் கைக்குக் கிடைத்து வேறுவகை வாசிப்புக்கான சாத்தியங்கள் அமைந்தன. 
எதற்கு இவ்வளவு பூர்வ பீடிகை என்றால் இந்த 80களின் இறுதியில் எழுத வந்த எழுத்தாளர்களில் மேற்கண்ட சாயல் படாத புது எழுத்துகள் என வெகு சிலரையே சுட்ட முடியும். நாஞ்சிலார், ஜெயமோகன், நீங்கள், யுவன் சந்திரசேகர். இவ்வகையில் பெரும் விதிவிலக்குகள்    ‘கும்ப முனி ‘ நாஞ்சிலார்,ஆ.மாதவன் இருவரும். இருவருமே இந்த ‘நவீன‘ காலத்துக்கு முந்தியிருந்து எழுத வந்து அந்தச் சாயல் படாமல் இருப்பவர்கள்.  காமம் கருப்பொருளாகி வந்த சில படைப்புகள் நீங்கள் எல்லோருமே படைத்ததுண்டு. ஆனால் பாயாசம் மட்டுமே விருந்தாகி விடும் கொடுமை உங்கள் எவரிடமும் இல்லை. 

உங்கள்  படைப்பில் முதலாக நான் வாசித்தது ஒரு மழைப் பொழிவினால் மரணம் மன்னிக்கப்பட்ட திருடனின் கதை. மிகுந்த பிரமிப்புடன், ஒருவார காலம் அந்தக் கதையையே நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு குறிப்பிட்ட கதைமாந்தரின் மீது  இரக்கம்  தோன்றும் விதத்தில் கதை சொல்லப்படுவதுவழக்கம். அதுவும் ஒரு கதாபாத்திரம்,  இன்னொன்றின் மீது வெளிப்படுத்தும் ஒன்றாக அமைவதே மரபு. ஆனால் இந்தப் படைப்பில் இரக்கம்  உருவாகி வருவது திருடன் மீதல்ல. கட்டுகளை அவிழ்த்து விடும் ஊர்க்காரர்கள் எவரும் பரிதாபத்தையோ, இரக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஊர்க்காரர்கள் தண்டிக்கும்படியான காரியங்கள் பல செய்த திருடன் , அவர்களே மன்னித்து விடுதலை செய்யுமளவு என்ன மகத்தான நல்ல காரியம் செய்தான்? ஒன்றுமில்லை. அவன் ஒரு பொருட்டே அல்ல. மாறாக, மழை வழியே அவர்கள் மனம் அடைந்த விரிவு.  அந்த மழை கொடுத்த மனவிரிவு. நெல்லுக்கும், புல்லுக்கும், விஷச்செடிக்கும், பழமரத்துக்கும் ஒன்றேபோல் முலை  சுரக்கும் மலையருவிகள். குழந்தைகளின் முகம் பார்த்து அன்னையின் கையில் இடப்பட்ட பிடிச் சோற்றின் வலிமை. இனி உழைக்க வழியுண்டு என்ற மனம் தந்த விரிவு அது. இப்படி மானுடச் செயல்கள் வழியே மானுடத்தை மீறி நிற்கும் ஒரு மகத்தான உணர்வை சொல்ல முடிந்த இந்த ஆள் யார் என்றுதான் உங்கள் பெயரை கவனிக்க ஆரம்பித்தேன். 

வேட்டை கிட்டத்தட்ட ‘கடலும், கிழவனும்‘தான் என்று விவாதம் செய்த நண்பர்கள் உண்டு. ஆனால் வேட்டை அளவுக்கு தமிழில் இயற்கைக்கும், மனிதனுக்குமான உறவினைப் புரிய வைத்த கதைகள் ஒரு கை விரல் எண்ணிக்கையில் அடக்கம். இயற்கையின் ஒரு பகுதியாக மனிதன் வாழ்ந்தால் அவனும் இயற்கைக்கு உட்பட்ட போராட்ட இருப்பையே கொள்ள வேண்டும். வேட்டைக்காரன்,  வேட்டை உயிர் இரண்டுக்குமான நியதிப் பங்கீடு இயற்கையால் செய்யப்பட்டு , சமநிலையில் இயற்கையாலேயே பேணவும்படும். இந்நிலையில் மாசுபடாத ஒரு மனித மனம் வேட்டையில் தன் பங்கு இயற்கையால் சமன் செய்யப்படுகையில் எப்படி உணரும்? ஜப்பான் கிழவன் போன்ற ஒரு கதைமாந்தன் இதுவரை தமிழில் பேசப்பட்டதில்லை.

உங்கள் படைப்புகளில் உருவாகிவரும் கதைமாந்தர்கள் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு மையக் கதாபாத்திரம் மட்டும் அப்படி அமைந்து வருவதில்லை உங்களுக்கு.  அனைத்து கதைமாந்தர்களுமே தனித்துவம் கொண்டவர்கள்தான். மின்னல்வெட்டில் தோன்றி மறையும் காட்சிகளைப் போல ஒவ்வொரு கதைமாந்தரும் தம் இயல்புகளைச் சட்டெனக் காட்டி மறைவது வாசிப்பை சுவாரசியமாக்குகிறது.  கரடியில் வரும் வாத்தியார்,பிடி கதையின் கடைசி நாலு பாராவில் மட்டுமே வந்து படைப்பை உச்சத்தில் கொண்டு நிறுத்தும் அப்பா , படைப்பு முழுவதும் எங்குமே ஒருவரிகூடப் பேசாமல் அனைத்துக்கும் காரணபூதமாக நிற்கும் “டொமினிக்”கின் ராணி, படைப்பின் கடைசி இரண்டுவரிகளை மட்டுமே பேசி படைப்பை அதன் இலக்கில் கொண்டு சேர்க்கும் “நீர்“ சக்ரபாணியின் மகள், கதை முழுவதும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அனைத்து காரியங்களையும் செய்யும் “வலி” யின் கொறராமன் - இன்னும் இருக்கிறார்கள். எப்போதும் மனிதர்களை எழுதும் உங்கள் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது.

இதே மின்னல் வெட்டில்தான் படிமங்களையும் நீங்கள் கையாள்வது. பெரும் மாமரத்தில் ஏறி விளையாடும் அணில் கூட்டத்தைப் பார்க்கும் காட்சியில் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட “கால்” கதையின் திரைநாயகன் நினைத்துக் கொள்கிறான் -இந்த மரம் பட்டுப்போய் விட்டால் இவை என்ன செய்யும்?அன்பின் காரணமாக அடைக்கலமளித்த பெண்ணும், குழந்தையும் வல்லடியாய்ப் பிரிக்கப்பட்ட பின்,  மறுநாள் காலை டொமினிக் மீண்டு வந்து தன் முழவோடு எழுவது “ஆணாய்ப்பிறந்தான்“ கிராமத்தில், விசாரணையின்போது அடிபட்ட இடத்தையே மிருதுவாய் தடவிக் கொண்டிருக்கும் ரகோத்தமனின் விரல்கள் “வலி”யில், “நீர்” கதையில் குழந்தைகளின் கைகளில் மாறிமாறி சிக்கும் ஓணான், “பிரிவு” கதையில் லாவண்யா தொலைதூரக் கணவரிடம் தொலைபேசுகையில் பிய்த்துப் போடுவது கசப்புச்சுவையின் வடிவான வேம்பின் கொழுந்துகளை, - பவா, நீங்கள் கதை எழுதுவதில்லை. கதை சொல்லி. எழுத்தில் மின்னுவதும் கதை சொல்லலே.

தமிழ் இலக்கியத்தின் பரப்பில் வட்டார இலக்கிய இயல்புகளுக்கு தனி இடம் உண்டு. அவ்வகையில் நெல்லை, குமரி, தஞ்சை, கோவை, ஆற்காடு, மதுரை, சென்னை போன்ற வட்டாரங்களின் பின்னணியில் பல படைப்புகள் பெருமை சேர்த்திருக்கின்றன. இதுவரை திருவண்ணாமலை தன் தடத்தை அழுந்தப் பதித்ததில்லை எனும் குறை உங்களால் தீர்கிறது. ஆனாலும், அம்மண்ணின் விரிவையும், ஆழத்தையும் முழுவதுமாக அள்ளித்தரும் ஒரு பெரும் படைப்பு உங்கள் மூலம் நிகழக் காத்திருக்கிறது. நாங்கள் காத்திருக்கிறோம் . 

ஜா.ராஜகோபாலன்

Tuesday, February 7, 2017

தேன்

மலையாள மூலம் : பால் சக்காரியா
தமிழில் : பவாசெல்லதுரை
  


Monday, February 6, 2017

உப்பு கடலை குடித்த பூனை




கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்று கொங்கு மண்டலத்தின் ஒரு ஜமீன்தாரை நினைவுபடுத்தும் பெயர்தான் சிவக்குமாரின் சொந்தப் பெயர். ஆனால் இந்த பிம்பத்துக்கு முற்றிலும் நேர்எதிர் திசையில் எப்போதும் பயணித்த எழுத்தாளன் சிவா.

அடிப்படையில் சிவக்குமாரின் வாழ்வு மண்ணும், நீரும் சார்ந்த விவசாய வாழ்வுதான். செடி முருங்கை காய்த்துத் தொங்கும் கன்னிவாடி நிலப்பரப்பைவிட்டு நெட்டித் தள்ளிய வாழ்வை எதிர்கொள்ள அவன் தள்ளு வண்டியில் ஜவுளித்துணிகளைப் போட்டு தெருத்தெருவாய் சுற்றி அலைந்தவன். ஒரு வகையில் அவனுக்குப் பிடித்தமானதொரு ஜீவித துவக்கமும் அதுதான்.

அவன் அலைவுறுதலை பயணம் என என்னால் சுருக்கிவிட முடியாது. கையில் ஒரு துணிப்பைகூட இல்லாமல் கடைசி பஸ் பிடிப்பவன் அவன்.

அலைந்து திரிந்த அவ்வாழ்வின் ஒரு சிறு சிதறலுக்கு ‘காற்றாடை’ என தலைப்பிட்டு, அப்போது ‘இந்தியா டுடே’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவிட்டு தள்ளுவண்டியின் பின்னால் அதே உற்சாகத்தில் நடை போட்டவன் அவன்.

என்ன செய்வது?

சுயம்புலிங்கத்தை, ஏ.அய்யப்பனை, விக்கிரமாதித்யனை, கைலாஷ் சிவனை இப்படித்தான் அலையவிடுகிறது பசித்த வயிறு.

அவன் எதிர்பார்த்த மாதிரியே அக்கதைக்கு முதல் பரிசும், அவன் சகதோழன் பாஸ்கர்சக்தியின் கதைக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. தன் பெயரில் வங்கிக்கணக்கு கூட இல்லாத சிவகுமாருக்கு, ஐந்தாயிரம் ரூபாய்க்கான அந்தக் காசோலை ஏற்படுத்தியக் கிளர்ச்சி சொல்லில் அடங்காதது. சிவக்குமாரின் கண்கள் அகல விரிந்த அத்தருணத்தை கண்கள் மூடி படுத்திருக்கும் இப்போது நினைவுபடுத்த முயல்கிறேன்.

அக்கதையின் கவனிப்பிற்குப் பிறகே எழுத்தின்மீது சிவாவுக்கு ஆர்வமும், நம்பிக்கையும் துளிர்த்தது. எழுதி மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என்ற பொய் பிம்பத்தை அவன் கன்னிவாடியில் இருந்துகொண்டு நம்ப ஆரம்பித்தான்.

சிவாவின் எல்லாக் கதைளுமே அவனின் நினைவுகளின் சிந்தல்களே. படித்ததிலிருந்தோ, அறிந்ததிலிருந்தோ, ஒரு வரியும் கூட அவன் தன் கதைகளுக்காக எடுத்துக் கொண்டதில்லை. எல்லாவற்றையும் தன் வாழ்விலிருந்தும் அனுபவங்களிலிருந்துமே கதைகளாக்கியவன்.

சம்சாரிகளின் வலிகளை எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, சிவா மட்டும் அவர்களின் ஆழ்மனதில் ததும்பிக் கொண்டிருந்த அபிலாஷைகள், சிற்றின்ப வேட்கைகள் இவைகளைக் கண்டுபிடித்தான். திருவிழாக்களின் மீதும், மனிதக் கூடுகைகளிலும், அங்கே நிகழும் கேளிக்கைகள், சீட்டாட்டம், கரகாட்டகாரிகளின் கடக்க முடியாத புன்னகை, இவைகளை அவன் எழுத்துகள் கண்டுபிடித்து சுவீகரித்தன.

பெரும்வலி கொண்ட வாழ்வு சிவாவுடையது. போதிய கல்வி இல்லாமை, புருஷ லட்சணத்திற்கான தொடர் உத்யோகத் துறப்பு, வீடு தங்காமை, அவமானங்களை தொடர்ந்து, தானே சென்று வெகுமதிகளைப் போல வாங்கி வருதல், இதனூடே எழுதுதல் என சிவாவின் நாட்களை என்னால் மதிப்பிட முடியும். தாங்கமுடியாத அந்த வலியையும், தாங்கிக் கொண்ட தொடர் அவமானங்களையும் தான் அவன் தன் மொழியின்மீது மேற்பூச்சாக, தடவி வைத்திருந்த நகைச்சுவையால் கடந்தான்.

ஒரு ஆரம்பகால வாசகன் இத்தனை நகைச்சுவையானதா வாழ்க்கை? என வியந்து அங்கேயே நின்று கொண்டான். ஒரு நுட்பமான வாசகன் தன் கூரிய விரல் நகம் கொண்டு மேற்பூச்சைச் சுரண்டியெடுத்து அதன் ஆழத்து வலியைப் பருகினான்.

‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ ஒரு கதை மட்டுமே போதும்  க.சீ.சிவக்குமார் என்ற அசல் கலைஞனை நாம் அடையாளப்படுத்த, அல்லது அவனை தவறவிட்ட குற்றவுணர்வுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ள.

சம்பாதிப்பதற்கு வெளிநாட்டிற்குப் போயிருக்கும் மனைவியில்லாத வீட்டில் தானும், மகளும், தனிமையை துடைத்தெறிய அங்குமிங்கும் ஓடித் திரியும் ஒரு பூனை. இவற்றை வைத்து சிவா காவியத் தன்மையோடு ஒரு சிறுகதையைச் செதுக்கியிருப்பான். ஒவ்வொரு வரியும் ஒரு வாசகனை நகரவிடாமல் நிறுத்தும். வெளிநாட்டிற்குப் போயிருக்கும் அந்த மனைவி திரும்பி வந்துவிட மாட்டாளா என நம்மை ஏங்க வைக்கும்.

இன்று காலை எனக்கும், சிவாவுக்குமான வாசகர் பாலா தான்சான்யாவிலிருந்து பேசினார்,

என் மனதில் எப்போதும் சிவா ஒரு கேணக்கிறுக்கந்தான் பவா. அப்போதுதான் மழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சு மாதிரி சுவரோரமாக ஒதுங்கி நின்றுகொள்பவன்.

படைப்பாளி என்ற கர்வம் எப்போதும் அவனிடம் இருந்ததில்லை. அச்சலுகையை மேற்கொண்டு மாபெரும் சபைதனில் ஒருபோதும் நடந்ததில்லை. சபைக்கு வெளியே ஏதாவது ஒரு மரத்தடியில் புகையும் சிகரெட்டோடு நின்று அச்சபையைப் பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் மனமே இறுதிவரை அவனுக்கு வாய்த்திருந்தது.

‘கன்னிவாடி’ என்ற தலைப்பில் தமிழினி கொண்டு வந்ததுதான் சிவக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

அது ஏதோ காரணத்தால் தமிழிலக்கிய படைப்பாளிகளாலும், பத்திரிகைகளாலும் புறக்கணிக்கப்பட்டது. அவர்கள் ஒரே நேரத்தில் படைப்பையும், படைப்பாளியையும் புறந்தள்ளினார்கள். அவன் மிக சோர்வுற்றிருப்பான் என என் பொது புத்தியிலிருந்து அவதானித்தேன். மாறாக அவன் பெரும் உற்சாகமடைந்திருந்தான். அக்காலத்தில்தான் ஆதிமங்கலத்து விஷேசங்கள், குணச்சித்திரங்கள், என்றும் நன்மைகள், நீல வானம் இல்லாத ஊரே இல்லை என எழுதிக் குவித்தான்.

அவன் புத்தகப் பக்கங்களை ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்களை, அசல் மனிதர்களைக் கொண்டு நிரப்பினான்.

அப்போதுகூட தமிழ் இலக்கிய பிராண்டட் முகம் எதுவும் சிவாவைத் திரும்பிப் பார்த்தால் எனக்கு நினைவில்லை.

தமிழில் ஜி. நாகராஜனுக்குப் பின்னும், மலையாளத்தில்
ஏ. அய்யப்பனுக்குப் பின்னும், சிவக்குமார் அளவுக்கு தன் சகப்படைப்பாளிகளாலும் நண்பர்களாலும் பொது வெளிகளில் அவமானப்படுத்தப்பட்ட படைப்பாளி க.சீ.சிவக்குமார் மட்டுமே. அவற்றைத் தன் உடலாலும் படைப்பாலும் பகடிகளாக மாற்றி, சிரித்துத் திரிந்த படைப்பாளி அநேகமாக சிவக்குமார் மட்டுந்தான்.

யாருக்குமே இல்லாத சில பிரத்யேக குணாம்சங்கள் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. ஒரு வெள்ளைக்கார துரையின் பங்களாவைப் பார்த்துக்கொண்ட தோட்டக்காரளான தன் மாமனாரை அவன் நண்பர்களிடம் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ என்றே அறிமுகப்படுத்துவான். மாமனார் என்ற மனைவியின் அப்பாமீது தமிழ்ச் சமூகம் ஏற்றி வைத்திருக்கிற பிம்பத்தைக் கலைத்து வேடிக்கையாக்குவது,
அதுதானே சிவா உன் எழுத்திலும் மிளிர்ந்தது. ஒரு தெரு நாயை க.சீ.சிவக்குமார் அளவிற்கு அறிமுகப்படுத்திய எழுத்து தமிழில் வேறில்லை.

‘‘ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் அச்சொற்றொடர் ஒன்று போதும் அக்கதைக்கு.

ஆர். சண்முக சுந்தரம் கூட நாகம்மாளின் துயரத்தை, அதன் மீறலை தன் படைப்பில் முன் வைத்தார்.

சிவக்குமார் அதையும் தாண்டிய மனித மனதின் ஏங்குதல்களை, அலைவுறுதல்களை, நிராகரிப்புகளை பகடி மாதிரி சொல்லி நம்மை நெக்குருக்கினான். நரம்பு ஊசிப் போடுகையில் டாக்டர் குழந்தை வாயில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து சப்பு கொட்ட வைப்பது போல அது. ஆனால் போட்டு முடித்த அடுத்த கணம் வலி மெல்ல உடலெல்லாம் பரவுமே அப்படியான ஒன்றுதான் சிவாவின் எழுத்து.

ஒரு எழுத்தாளனை நீங்கள் கொல்ல நினைத்தால் அல்லது அவனை எழுதவிடாமல் செய்ய வேண்டுமென நினைத்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். அவனை இடம்பெயர்த்து விடுங்கள் போதும்.

கன்னிவாடியில் மையம் கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி திருவிழா பார்த்து, கரகாட்டக்காரிகளை வம்புக்கிழுத்து, கூத்தாடிகளோடு குந்திக் குடித்து, செடி முருங்கை மரத்தடியில் கள் குடித்து வாழ்ந்து வந்த ஒரு எழுத்தாளனை, வாழ்வு பெங்களூர் என்ற மாநகரத்திற்குக் கைபிடித்து அழைத்துப் போகிறது. அது ஒரு அபார்ட்மெண்ட் வீடு. மூன்று வேளை சாப்பாடு, இன்டெர்நெட் வசதி என அந்த லௌகீகப் பிசாசு தன் கையிலிருந்த மாய வலைகளை அப்படைப்பாளியின் மீது வீசியது. அறுத்தெறிய முடியாத இறுக்கத்தோடு அது அவனை மரணப்பரியந்தம் சுற்றிக்கொண்டது.

தினம் தாமிரபரணி தண்ணீர் குடித்த வண்ணநிலவனை, கோவில்பட்டி வெய்யிலருந்திய ப.செயப்பிரகாசத்தை, நீங்கள் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தீர்களே என்ன ஆனது?

ஒரு எஸ்தரும், ஒரு ஜெருசலேமும் அதன் பிறகு அவர்களிடமிருந்து முகிழவேயில்லை. ஒரு படைப்பாளியின் நிலப்பரப்பும், வாழ்விடமும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அவன் எழுத்தின் வழி கசிவதை நீங்கள் ஏன் எப்போதும் கவனிக்கத் தவறுகிறீர்கள்?

அதன் பிறகும் அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு மகத்தான படைப்புகள் பீறிடுவது மாதிரித் தெரியலாம் அது, சொந்த ஆற்றில் நீந்தித் திரிந்த மீனைத் தூக்கி தரையில் வீசும்போது இன்னும் கொஞ்சம் உயிர்ப்போடு துள்ளி நம்மை ஏமாற்றுமே அது. அடங்குதலுக்கு முந்தைய ஆர்ப்பரிப்பு.

என் கணிப்பில் தன் வாழ்வின் மொத்தத்தையும் படைப்பிலக்கியத்தில் ‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ என்ற தன் மொத்தச் சிறுகதை தொகுப்பிலும், மற்றவற்றைத் தன் தொடர் அனுபவப் பகிர்பிலும் அவன் எழுதி நிறைவு செய்திருக்கிறான்.

எல்லா மரணங்களுமே புதிரானவைதான் சிவா, மரணமே ஒரு புதிர்தான். நேற்று காலையிலிருந்து ஒரு கவிஞனை ஒரு எழுத்தாளனை ஒரு நண்பனை, உன் தொலைபேசியில் அழைத்திருக்கிறாய். யாரையும் வழக்கம்போல் தொலைபேசியை அணைத்து விடாதே என கெஞ்சியிருக்கிறாய்!

எதையோ சொல்ல தடுமாறியிருக்கிறாய் நண்பா. ஜான் ஆப்ரகாம் என்ற கலகக்காரனும் மாடியிலிருந்து இதே தடுமாற்றத்தோடுதான் மரிப்பதற்கு தரையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.

உன்னை மாநகரச் சுடுகாட்டின் மின் அடுப்பிற்கு உள்நுழைக்காமல், கன்னிவாடியின் சொந்த மண்ணில் புதைக்கப் போகிறோம்.


முன்கூட்டியே உன் பேனாவை மகள் மகாஸ்வேதாவின் கைகளுக்கு மாற்றியிருக்கிறாய். போய்வா நண்பா!