Monday, March 6, 2017

பேரன்பின் பெருமழை - ராம்

                 



அப்போது பத்துக்குப் பத்து விஸ்தீரனத்தில்தான் வம்சி புக்ஸ் இயங்கியது. அகலமான அத்தெருவில் அன்று மாலை சாவகாசமாக நின்று மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய பைக்கில் இரண்டு பேர் எங்கள் வாசலில் வந்து இறங்கினார்கள். வண்டியை சற்றே தள்ளி நிறுத்திவிட்டு கடைக்கு எதிர்புறம் நின்று ஒரு சிகரெட்டைக் கொளுத்திக்கொண்டே போர்டைப்பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள்.

 ‘இதுதான்’ என்று உறுதியடைந்ததை சிகரெட் புகையினூடே என்னால் அவதானிக்க முடிந்தது.

அவர்கள் இருவரையும் இன்னும் நுட்பமாகக் கவனித்தேன். தாடியோடு கசங்கின கரு நிற டி.ஷர்ட்டும் ஜீன்ஸ் பேண்டுமாய் இருந்தவனுக்கு முப்பது வயதிருக்கலாம். உடன் வந்த பையனின் வயதைக் கணிக்க முடியவில்லை.

சிகரெட் துண்டைக் காலில் போட்டு மிதித்தவாறே என்னை சமீபித்து,

 ‘பவா செல்லதுரைன்னு..’

 ‘நான் தான்’ நான் கை நீட்டிக் கொண்டே சொன்னேன்.

கைகளை அழுத்திக் கொண்டே, ‘நான் ராம் சுப்பு, இவன் மணி, முத்து அனுப்பினான்.’

 ‘எந்த முத்து?’

 ‘பாடலாசிரியன் முத்து’

நான் அக்கையை விடாமல், ‘ஓ நீங்க ஒரு படம் பண்ணப் போறீங்க பேரு ராம், சரியா? நேத்தே சொன்னான், நான் தான் மறந்திட்டேன்.

அப்படியே படிகளில் நின்று பேச ஆரம்பித்தோம். கடை அடைபடும்போது மணி ஒன்பது. பேசுவதற்கு அவ்வளவு இருந்தது எங்கள் இருவருக்கும்.

பேசிக்கொண்டே ‘போலாமா ராம்’ என்றபோது அணிச்சையாக என் வலது கை ராமின் தோளில் ஏறியிருந்ததை உணர முடிந்தது.

 ‘எங்கண்ணா?’

 ‘வீட்டிற்கு’

 ‘வேணான்ணா, அறைகள்ல தூங்கி சலிச்சிடிச்சு, பொறந்ததிலயிருந்து அறை அறையா எத்தனை விதமான அறைகள்ல தூங்கியிருப்போம். வானத்தை, நிலாவை, 
நட்சத்திரங்களை, கண்ணுக்கு காட்டி ஒரு திறந்தவெளியில படுக்கணும்ண்ணா ’
நான் அவர்கள் வந்த வண்டியை அப்போதுதான் கவனித்தேன். அதில் ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் ஆரம்பித்து சட்டி,பானை என ஒரு பெரிய சுமை தொங்கியது.

என் பார்வையின் கேள்வியை கண நேரத்தில் புரிந்து கொண்டு, ‘அது சாப்பிட காசு இருக்காதுண்ணா. பசிச்சா நாங்களே ஏதாவது ஒரு புளிய மரத்தடியில நிறுத்தி சமைச்சு சாப்பிடுவோம்.’

எல்லாமே என் அன்றாடங்கள் மீது துப்புவதாகயிருந்தது.

அன்றிரவு ராம் பற்றிய நினைவுகளில் தூக்கம்பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தேன்.

நாம் வழக்கம்,பெருமிதம்,அந்தஸ்து என வரையறுத்திருந்த எல்லாவற்றையும் இவன் இடதுகால் சுண்டுவிரலால் தள்ளத் தெரிந்திருக்கிறான். இதற்காக நீண்ட அனுபவம் அவனுக்குத் தேவைப்படவில்லை.

வாழ்வின் துவக்கமே அப்படித்தான்.

நா.முத்துக்குமாருக்கும், ராமசுப்புவுக்குமான நட்பு என்பது சொல்லில் அடங்காதது. ஒவ்வொரு சந்திப்பிலும் முத்துக்குமாருக்காக இருவரும் பலநூறு சொற்றொடர்களை பகிர்ந்து கொள்வோம்.

‘கற்றது தமிழ்’ மனதில் முழுமையாக உருப்பெற்ற தருணத்தில் எங்கள் வீட்டு மாடி அறையில் உட்கார்ந்து இரு நாட்கள் காட்சி காட்சியாய் விவரித்த ராமின் கண்களில் தெறித்த லட்சியம் இப்போதும் என்னில் அப்படியேதானிருக்கிறது.

என் அவதானிப்பில் திரை மொழி முழுவதுமாக கைவரப்பெற்ற கலைஞர்களில் ராமும் ஒருவன். தன்னில் ஏற்றி வைத்திருக்கும் கொள்கைகள், கோட்பாடுகள் எதுவும் பிரச்சாரமாக ஒரு காட்சியிலும் வெளிப்பட்டதில்லை.

திரைக்கான மொழி வேறு என்ற தெளிவை எப்போதும் மீறினதில்லை. ‘கற்றது தமிழ்’ வெளிவந்தபோது திருவண்ணாமலையில் உட்கார்ந்து முதல் காட்சியைப் பார்த்தேன். இளைஞர்களின் ஆர்ப்பரிப்பும் வசனங்களின் வெளிபடுதலின்போது எழுந்த ஆரவாரமும் ராம் என்ற கலைஞனை தமிழ்நாடு புரிந்து கொண்டது என்ற சந்தோஷம் என்னில் திருப்தியைத் தந்தது.

எதையுமே தாங்கிக் கொள்ளும் மனநிலையையும் எந்த எதிர்பார்ப்புகளுமற்ற வாழ்நிலையுமே ராமின் பெரும் பலம் என எப்போதும் நினைப்பேன்.

 ‘தங்க மீன்கள்’ தாமதமாகி பெரும் பணக்கஷ்டத்தில் தன் உதவி இயக்குனர்களோடு மட்டுமே தன் நாட்களை நகர்த்திய நாளொன்றில் நான் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திரைப்பட கருத்தரங்கிற்கு பேசக் கூப்பிட்டேன்.

அந்த உரையின் ஆரம்பமே எல்லோரையும் நிலை குலைய வைத்தது. அப்பேச்சில் தெறித்த உண்மை யாவரையும் பொசுக்கவல்லது. யாருக்கும் வாய்க்காத கவிதையும்  உரைநடையும் கலந்த ஒரு இயல்பான சொற்கோவையே ராமின் தனித்துவம்.

பேசிமுடித்து அந்த அரங்கத்திற்கு வெளியே கவிழ்ந்திருந்த ஒரு ரகசிய மரநிழல் இருளில் நின்று ‘தம்’ அடித்தபோது ராமுக்குக் கொடுக்க என்னிடம் தரப்பட்டிருந்த ஒரு கவரை நீட்டினேன். அதை தன் இடது கையால் புறந்தள்ளினான். காசெல்லாம் வேணாண்னா, அந்தக் கவரைக் கொடுத்தவங்ககிட்டயே கொடுத்திடுங்க, எனக்கு பஸ் சார்ஜுக்கு மட்டும் உங்க பாக்கெட்டிலயிருந்து 200/- ரூபா எடுத்துக்கறேன் என்ற ராமின் உறுதியான முகத்தை என்னால் எப்போதும் மறக்க முடிந்ததில்லை.
மாரி செல்வராஜ் ராமின் உதவி இயக்குனர் மட்டுமா?

ராமின் பிரியமான தம்பி, உற்ற தோழன், சில நேரங்களில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியன், சில நேரங்களில் கற்றுக் கொள்ளும் மாணவன், தாங்க முடியாத சில தருணங்களில் வெடித்து அழ மடி கொடுக்கும் காதலி.

மாரி செல்வராஜின் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ சிறுகதைத் தொகுப்பின் இறுதி கட்ட வேலைகளில் சாரோன் வீட்டில் தங்கி அவைகளை செழுமைப்படுத்திக் கொண்டிருந்தபோது வாய்த்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு கொஞ்சம் செழுமையானது. 
மீன்குழம்பும், பொறித்த மீன் துண்டுகளும், எறா தொக்கும் இன்னுமின்னும் இரு வேறு வகை வறுவல்களாய் எங்கள் உயரம் குறைந்த சாப்பாட்டு மேஜையில் பரிமாறுதலுக்காகக் காத்திருந்தன.

நானும் செல்வமும் அருகருகே உட்கார்ந்து சாப்பிடத் துவங்கும் முன் தன் தொலைபேசியில் யாரையோ அழைத்து உள்ளறைத் தனிமைக்கு ஓடிப்போன மாரியின் அந்தரங்கத்தில் நுழைய மனமின்றி வெறும் தட்டின் முன் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன்.

பசியின் பிடுங்கல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வறையில் பிரவேசிக்கையில் ததும்பிய கண்களோடு செல்வம் தன் சக தோழனும் ஆசானுமாகிய ராமோடு பேசிக் கொண்டிருந்தான்
உரையாடலின் அறுபடலுக்குப்பின் செல்வத்தைக் கைப்பிடித்து அழைத்துவரும் முன் கிடைத்த இடைவெளியில் கேட்டேன்.

என்ன ஆச்சு செல்வம்?

இத்தனை நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுண்ணா, எங்க டைரக்டர் இன்னிக்கு மதியம் சாப்பிடல. கையில் சுத்தமா காசில்ல, நான் மட்டும் எப்ப்டிண்ணா இதைச் சாப்பிட? என என்னை ஏறெடுத்தபோது தம்பி செல்வத்தை என் தோள்களில் சாத்திக் கொண்டேன்.

அசாத்திய தைரியமும் அர்பணிப்பும் கொண்ட திரைக்  கலைஞனாக எப்போதும் ராமையே நினைத்துக் கொள்வேன். திரைப்படத்தில் பணியாற்ற விரும்பும் பல இளம் படைப்பாளிகளுக்கு ராமையே பரிந்துரைப்பேன்.
என்னவோ குறிப்பிடமுடியாத ஒரு பிரியம் எங்கள் இருவரின் மனதிலும் நிலைபெற்று விட்டது. ‘பேரன்பு’ படத்தில் எனக்கு ஒரு மருத்துவர் பாத்திரம்.

எலும்பும் உறைந்துவிடும் கொடைக்கானல் மன்னார்பாளையத்து ஏரிக்கரையில் நடு ராத்திரி இருட்டில் உட்காரவைத்து எனக்கும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கும் மட்டும் கதையைக் காட்சி காட்சியாய் விவரித்த ராமின் முகத்தில் ஒளியேறியிருந்ததை அந்த இருட்டில் கவனித்தேன்.

அப்படத்திற்கு ஸ்கிரிப்ட இல்லை. படத்தின் மொத்தக் காட்சிகளும் ஒவ்வொன்றாய் அந்த ஏரிக்கரை கடுங்குளிரில் ராமிடமிருந்து வந்ததை கவனித்து அதிர மட்டுமே முடிந்தது.

அடுத்த நாள் படப்பிடிப்பின் இடையே மலையாள திரைப்பட விமர்சகன் பாலாஜியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்திய சினிமாவின் தனித்துவம் ரித்விக் கட்டக் தான், அவரின் தொடர்ச்சி இந்த ராம் என ஒரு திசையை சுட்டியது நினைவிருக்கிறது.

கணவன் கலையின் தேடுதல் பொருட்டும், வாழ்வை நகர்த்த சம்பாதிப்பதற்கும் வேண்டி தன் பிரிய மகளையும் தன்  கவிதாயினி மனைவியையும் வெகு தொலைவில் விட்டுவிட்டு சென்னையில் அலைவுறுதலை தன் ‘கோடிட்ட இடங்களை நிரப்புதல்’ என்ற தொகுப்பில் சுமதி ராம் தன் மகளுக்கு கவிதைகளாக்கிப் பகிர்ந்திருப்பார். துயரத்தினை மீறின கொடுப்பினை அது ராம்.

ஆறு வருடங்களுக்கு முன் சென்னையில் நாங்கள் நடத்திய ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு பங்கேற்பாளராக வந்திருந்த ராம் யாரும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் மேடைக்கு அழைத்து என்னை எலும்பு நொறுங்க கட்டி அணைத்து, ‘ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு இப்படி பொது இடத்தில் வைத்து முத்தமிடுவது உங்கள் பார்வையில் அநாகரிகமெனில் அந்த அநாகரிகத்தை நான் இப்போது உங்கள் எல்லோர் முன்பும் செய்ய விரும்புகிறேன்’ என்ற போது வெடித்து அழுததைத் தவிர வேறென்ன செய்திருக்க முடியுமென தெரியவில்லை எனக்கு.

- நன்றி
இம்மாத அந்திமழை


No comments:

Post a Comment