நிச்சயம் இருபத்தைந்து வருடங்களுக்கு குறையாது. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் அகன்ற புல்வெளியில் காலை ஏழு மணிக்கே எப்போதும் போல வட்டமாக உட்கார்ந்திருக்கிறோம்.
ரா பனி புல்வெளியின் மேல் சின்ன சின்ன கூடுகட்டித் தங்கியிருக்கிறது.
இன்னும் கொஞ்சமே கொஞ்ச நேரம். அவைகள் உடைந்து புற்களைத் தனிமையாக்கும்.
நாங்கள் மு.
ராமசாமியின் நிஜ நாடக இயக்கத்தின் ‘ஸ்பார்ட்டகஸ்’ பார்க்கவிருந்த அதிகாலை அது. அந்நாடகம், மாணவனான எனக்குள் ஏற்படுத்திய அதிர்வலைகள் எதனாலும் அடங்காதது.
அம் மனநிலையிலிருந்து விடுபட முடியாமல் எழுந்த என் தோள்களை அழுத்தி நண்பன் கோணங்கி.
“பவா இது முருகன். இவன்தான் கடகுட்டி. பி.ஏ.
படிக்கிறான்”என்கிறான்.
அச்சிறு பையனின் கைப்பற்றிக் குலுக்கிக் கொள்கிறேன். நான் மட்டும் என்ன? அப்போதுதான் பி.காம்.
படிப்பைப் பெயரளவுக்கு முடித்திருந்தேன்.
நேற்று டெல்லி,
இன்று சென்னை, நாளை தஞ்சாவூர் அதற்கும் அடுத்த நாள் திருச்சூர் தேசிய நாடகவிழா என நாட்டின் எத்திசையிலும் பயணிக்கும் முருகபூபதி என்ற நாடகக் கலைஞன் அப்புல்வெளியின் ஈரத்திலிருந்துதான் வளர்ந்திருக்க வேண்டும்.
தமிழில் அதற்கு முன்பும், அதற்கு பின்பும் எவராலும் பூபதியின் நாடக மொழியை, வெளிச்சத்தோடு பரவும் மெல்லிய இசையை, வானுயர அதிரும் உக்கிரமானதொரு பறையிசையை கையாள முடிந்ததில்லை.
கால் நூற்றாண்டுக்கும் மேல் அவன் வளர்த்த அக்னிக்குண்டமது. அந்த அனலின் அருகே சுலபமாக நெருங்கிவிட முடியாது.
மரணவீட்டின் குறிப்புகள்,
மாயக் கோமாளியின் ஜாலக் கண்ணாடி என நீளும் பதினெட்டு முழுநீள நாடகப் பிரதிகளை பலநூறு முறைகள், பலநூறு நிலப்பரப்புகளில் பல லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
ரப்பர் காட்டின் மையத்தில், தேனிக் காட்டின் செம்மண் தரையில் என அவன் பிரதிகள் தங்கள் கோமாளிகளோடு பயணித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஆனாலும் அதுமட்டுமல்ல பூபதி என்ற கலைஞனின் ஆகிருதி. அவன் தரையளவுக்கு தாழ்ந்த தமிழகக் குழந்தைகளுக்கு தன் முப்பத்தி ஆறு நாடகங்களில் கதை சொல்லியிருக்கிறான்.
அந் நாடகங்களில் நீளும் ரயில் வண்டிகளில், பின்பக்க சட்டை கசங்க எம் மாவட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு. ஆரம்பத்தில் வண்டி காலியாகத்தான் புறப்படும். அது சிவகாசியை அடைகையில் குழந்தைகளால் நிரம்பித் ததும்பும்.
நானறிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஃபோர்ட் பவுண்டேஷனில் பணம் வாங்காமல்,
கார்ப்பரேட்டுகளுக்கு ஊழியம் பார்க்காமல்,
நிறுவனங்களின் வாசலில் போய் காசுக்கு நிற்காமல் தன் பயணத்தை பசியும் பட்டினியுமாய் அவனால் தொடர முடிந்திருக்கிறது. அவன் குழுவில் இயங்கிய உந்துதலில் அவனையே பின் தொடர்பவர்களென பாண்டிச்சேரி கோபியையும்,
ஓவியர் தனசேகரனையும், கருணா பிரச்சாரத்தையும் மட்டும் மிஞ்சியவர்களென சொல்லமுடியும்.
மற்ற எல்லா குழுக்களையும் அரசு, கார்ப்பரேட்,
பவுண்டேஷன் என யார் யாரோ தங்கள் இச்சைக்குட்படுத்திக் கொண்டார்கள்.
கலைஞர்களின் ஆன்ம பலத்தை கரன்சிகளால் அடைத்து பார்த்து திருப்தியடைந்தவர்கள்.
பூபதி இதில் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தான், தன் சக நடிகர்களோடு சதா ஏதாவதொரு தேரிக் காட்டின் ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருப்பான்.
தோளில் தொங்கும் அத் துணி மூட்டையில் குடிக்க கொஞ்சம் நீரும், பசி தீர்க்கக் கொஞ்சம் கொள்ளும் இருக்கலாம்.
தன் குழுவிலிருந்து தமிழ் திரைக்கு பயணித்து ஆடுகளம், விசாரணை என முக்கிய திரைப்படங்களில் தனித்து மின்னிய முருகதாசை எப்போதாவது பார்க்கும்போது.
“எப்படா ப்ளேல நடிக்க வருவே?” என அதே வாஞ்சையோடு அழைக்கும் பூபதியின் குரலை எப்போதும் புறந்தள்ள முடிந்ததில்லை என்கிறான் முருகதாஸ்.
நிகழ்த்துதல் என்பது நாடகத்தின் முக்கிய குவிமையமே இல்லை. அது இயல்பான ஒரு உந்துதலில் நிகழும் அவ்வளவுதான்.
ஒத்திகைதான். ஒத்திகை மட்டும்தான் நாடக நிலத்தின் வாழ்விடமே.
ஒத்திகையில் எவன் முழு அர்ப்பணிப்புடன் தன்னை ஒப்புக் கொடுக்கிறானோ அவனே நடிகன். ஒத்திகையை புறந்தள்ளிவிட்டு காட்சிப் படுத்துதலில் நேரடியாய் மிளிர்பவர் வெறும் Performer
மட்டுமே.
ஒத்திகைக்கான இடம் தேடி இயக்குநர்களும்,
நடிகர்களும் அலைவது வேறு எந்த நாட்டிலும் காணக் கிடைக்காத அவலம்.
புகழ்பெற்ற (Established) நாடகப் பேராசிரியர்கள், நடிகர்கள், நாடக களத்திலிருந்து திரைக்குப் போன கலைஞர்கள் எல்லோருமே முதலில் செய்வது தாங்கள் வந்த வழியின் கதவுகளை இரும்பு கதவு கொண்டு அடைத்துவிடுவது. அதன்பின் லௌகீக சுகத்திற்கு ஓர் அர்ப்பணிப்புமிக்க தியேட்டர் வாழ்வின் இறந்த காலங்களைப் பலியாக்குவது.
இதுதான் தமிழ் நிலமெங்கும் இன்று நடப்பது. இவர்கள் எப்போதுமே எதிர்கால வலியைப் பொருட்படுத்த அஞ்சி நிகழ்கால ருசியை மட்டுமே பருகுபவர்கள்.
தன் நவீன நாடகங்களைத் துவங்கிய காலத்திலிருந்து அதை நிகழ்த்துபவர்களை என் வலது கையின் விரல்களின் எண்ணிக்கைக்குள் அடக்கிவிட முடியும் என்னால். ஆனால் வதை கூடங்களில் வைத்து சித்திரவதை செய்யப்படுபவர்களைப் போல நான் தொடர்ந்து அவர்களை மட்டுமே இம்சிக்கிறேன்.
இக்கலைஞர்களுக்கு ஆக்கிப்போட்ட இரு பெரும் தாய்கள் என் அம்மாவும்,
பவாவின் அம்மா தனம்மாவும்.
இருவருமே இன்று மண்மேடேறி குழிகளில் கிடக்கிறார்கள்.
அவர்கள் பற்ற வைத்த அடுப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது என்கிறான் பூபதி.
நான் பல ஆண்டுகளுக்கு முன் தேர்ந்தெடுத்த இச்சித்திரவதை படுபவர்களின் நாடக வேட்டை அப்படியேதான் இருக்கிறது. தீயை இன்னும் பலமாக காற்று ஊதிப் பெருக்குகிறது.
பூபதியின் சற்றேறக்குறைய எல்லா நாடகங்களையும் நாங்கள் திருவண்ணாமலையில் நிகழ்த்தியிருக்கிறோம். அப்போது பட்ட அவமானங்களை மட்டும் தனியே சேகரித்து இளம் தலைமுறையின் முன் காட்சிக்கு வைக்க முடியும் என்னால்.
‘வனத்தாதி’ என்ற நாடகத்தின் பத்து நாள் ஒத்திகையையும் திப்ப காட்டின் மத்தியில் திரௌபதியம்மன் மைதானத்தில்தான். சாலையிலிருந்து உள்ளடங்கி நீளும் மண் ரோட்டில் ஒற்றையாளாக சைக்கிளில் மிதிப்பேன் நான்.
கேரியரில் அம்மா வடித்து தந்த சுடு சோறும், கோழிக்கறி குழம்புமாக என்னை ஏதாவது முனி பின் தொடர்கிறதாவென நொடிக்கொருதரம் திரும்பி திரும்பிப் பார்த்து போன அக்காட்டு சாலையின் வளைவுகளில் இப்போதும் ஆளற்ற தனிமையையும் நின்று பார்த்துக்கொள்வதுண்டு நான்.
‘வனத்தாதி’ நாடக ஒத்திகை திப்பக்காட்டில் தொடர்ந்து நடந்த நாட்களில் மாலை ஐந்து மணிக்கு நான் பூபதியை மட்டும் தனியே அழைத்து வருவேன்.
வியர்வை வழியும் வெற்றுடம்பில் அப்படியே சட்டை போட்டு இருவரும் தாலுக்காபீஸ் வாசலில் போய் நிற்போம். அலுவலகம் முடிந்து வரும் ஒவ்வொருவரிடமும் பூபதியை, அவன் கலையை அறிமுகப்படுத்தி நான் காசு கேட்பேன். ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று எங்கள் கைக்கு கிடைத்தால் பெரும் ஆசுவாசம் ஏற்படும்.
நடுக்காட்டில் நாடகம் பார்க்க நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வண்டிகட்டி, வேன் வைத்து, கால்நடையாகவென வந்து சேர்ந்தார்கள்.
அது ஒரு மகத்தான அனுபவம் மக்கா. தவறவிட்டிருந்த
எதையோ தேடியடைந்த அனுபவம்.
அவர்கள் கையிலிருந்த விதை தானியத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தனுப்பினார்கள். தமிழ் நாடெங்கும் இவ் வீரிய வித்துக்கள் வயல்களில் விழவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
மனிதர்கள் தங்கள் அன்பெனும் சிறுமழையால் அவைகளை தோய்த்தெடுப்பார்களென அக்கலைஞர்கள் நம்பினார்கள்.
இதுவரை பூபதியின் மணல்மகுடிக்கு பார்வையாளர்களிலிருந்தே நடிகர்கள் மீண்டு வந்திருக்கிறார்கள்.
இனி நாடகம்,
நடிகன்,
இயக்குநர் என பேசுவதை நிறுத்திக் கொள்ளலாம்.
Cultured
Audience
Audience Culture
இவை இரண்டுமே இனிவரும் தியேட்டர் இயக்கத்தை முன்செலுத்தப் போகின்றன.
இப்போது நாம் மேற்கொள்ளும் பயிற்சி முறை காலனியாதிக்கம் கற்றுத்தந்த சாரமற்ற மேற்கத்திய நடைமுறை.
நம் மரபில் நாடக பயிற்சி அல்ல ஓத்திகை. நம் மரபுவழி சடங்குகளிலிருந்தே அதைத் துவங்கியாகவேண்டும்.
இனி கூட்டு உடல், கூட்டு சிந்தனை, கூட்டு செயல்பாடு என்பது மட்டுமே. அதிலிருந்துதான் நம் உண்மையான அரசியல் தாதுவை கண்டடையமுடியும்.
சடங்கு என்பதை அதன் நேரடி அர்த்தத்தில் புரிந்து கொள்ளமுடியாது. அதன் கூடவே பெரியார் எனும் பெரும் பிசாசு ஒன்று உடனிருக்கும்.
மூட நம்பிக்கைகள் உதிர்க்கப்பட்ட சடங்கு வழி ஒத்திகைகளே நடிகனை மண்ணில் இனி ஊனும்.
பெண்களின் குலவை சத்தம் ஆண்களின் விலா எலும்புகளை ஊடறுக்கும். அந்த உக்கிரத்தில்தான் ஆண், பெண் பாலின வேறுபாடு அழிந்து பல்லுயிர் என்பது மட்டும் நிலைக்கும்.
நம் மரபுவழி சடங்குகள் திரும்பத் திரும்ப தாவரங்களையும்,
ஜீவராசிகளையும்,
சிறு தெய்வங்களையும் நம்மோடு இணைக்கின்றன.
அவைகள் நம்மிடமிருந்து அழிந்து போன பறவைகள், விலங்குகளை மறுபிரசவித்து நம் நாடக வெளிகளில் பிரவேசிக்க வைக்கும் என்று ஒரு பித்து மனநிலையில் முருகபூபதி சொல்வதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
நீளும் ஒத்திகைகளின் போது எழும் சக நடிகர்கள் மீதான ஈகோ, கசப்பு இவைகள் நிகழ்த்துலின் போது பெரும் காதலாகி கசிவதை ஒரு ஒருங்கிணைப்பாளனாக பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
பூபதியின் நாடக பிரதி அன்றாட புழங்கு வார்த்தைகளை மறுதலிக்கிறது.
புரியவில்லை என்ற பல்லாண்டு சொல்மீது அவர்கள் தங்கள் பறையொலியை எழுப்பி சொல்லை சிதைக்கிறார்கள்.
நாட்டுப்புற கவித்துவ (Folk poetic) மொழியே இனிவரும் தமிழ்நாடகங்களின் பொது மொழியாக மாறப்போகிறதென்ற நிறைவேறலுக்கான ஒரு பெருங்கனவிலிருக்கிறது
‘மணல் மகுடி’.
பெற்ற ஒரு டாக்டர் பட்டத்தை தங்கள்
பெயருக்கு முன்னும் பின்னும் போட்டுக்கொண்டு, வீட்டிலும் அலுவலகத்திலும் பெயர் பலகைகளில் அவைகளைப் பதித்து அதிகார ருசிக்கு ஏங்கும் ஒரு சராசரி வாழ்வல்ல பூபதியின் வாழ்வு.
நாடகக்காரனின் மனைவியின் அதிதீவிர வெறுப்பில்தான் அதிதீவிர காதல் புதைந்துள்ளது என்பதை தன் நாடக வாழ்வே தனக்கு கற்பித்தது என்கிறார் பூபதி.
‘‘என்றாவது ஒருநாள் நடிகனின் கிழிந்த நாடக உடையை ஊசி, நூல் கொண்டு தைத்துத்தர என்னோடு என் மனைவியும் கால் நீட்டி உட்கார கூடும்’’ அதற்கான காத்திருத்தலே இம்மௌனம் எனும் பூபதியை கட்டித் தழுவிக்கொள்கிறேன் இக் கணத்தில்.
-
நன்றி
மார்ச் 2017 செம்மலர்
No comments:
Post a Comment