கட்டுரை - பவாசெல்லதுரை
படங்கள் - அருண் டைட்டன்
அம்மாவுக்குக் கல்யாணமாகி பதினாறு வருஷம் கழித்துப் பிறந்தவன் நான். கோவில் கோவிலாகப் போய், மண் சோறு தின்று, தேவாலயங்களில் முட்டி போட்டு ஜெபித்து என அம்மாவின் நீண்ட பிரார்த்தனையில் கருக்கூடிய பிள்ளை நான் என்பதால் சின்ன வயதிலிருந்தே அத்தனை செல்லம்.
வளர்ந்து பெரியவனாகி தமட்ட மாடு மாதிரி ஊர் சுற்றிவிட்டு நண்பர்களோடு வந்து சாப்பாட்டு தட்டின் முன் உட்காரும்போது நண்பர்களுக்குத் தெரியாமல் இரண்டு அவித்த முட்டைகள் என் சோற்றுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அம்மாவின் பிரியம்.
என் உடல் கறுப்பை யாராவது எந்த வயதில் கிண்டலடித்தாலும், ‘பொறக்கும்போது எம்புள்ள ரத்த செவப்புதான், தெரியாம ஒரு நாளு நாந்தான் காக்காக்கறி கொடுத்திட்டேன், அப்பயிருந்துதான் லேசா இந்த கறுப்பு ஒட்டிகிச்சு’ என்பதை சிரிக்காமல் சீரியசாக சொல்லத் தெரிந்திருந்த அம்மா அவள்.
பெண் என்பவள் எல்லோரையும் போல எனக்கும் அம்மாவிலிருந்துதான் ஆரம்பம்.
என் ஆரம்பக்கல்வி அப்பா வேலை பார்த்த அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில். என்னைச் சுற்றிலும் எப்போதும் இருளர் இன சிறுமிகளும் சிறுவர்களுமிருந்தார்கள். அவர்கள் மேலிருந்து எழுந்த ஒரு வாசத்தின் கிறக்கம் இன்றளவும் அப்படியே என்னுள் கிடக்கிறது. அவ்வாசம் மேலெழுகையில்தான் நான் சத்ரு, பச்சை இருளன், ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் என என் முக்கியமான கதைகளை எழுதியிருக்கிறேன். மற்றவர்களுக்கு அது வீச்சமாக இருக்கலாம், எனக்கு மட்டும் அது வாசம்தான்.
பெண்ணின் அருகாமை, தொடல், அணைத்தல், எதற்கென புரியாத திருட்டு முத்தமென எல்லாமுமாய் என் வாழ்வும் அங்கிருந்துதான் துவங்கியது.
ஆறாம் வகுப்பில் நகரத்தின் ஒரு கிருஸ்துவ பள்ளிக்கு நான் இடம் மாறியபோது அங்கிருந்த ஆசிரியைகளின் சுத்தமும், உடைகளும், உடல் நிறமும் என்னைத் திக்கு முக்காட வைத்தன.
கொஞ்சம் கொஞ்சமாக நான் ஐந்தாவது வரை அனுபவித்த வாசத்தை, வீச்சம் என என் உடல் உணரத் தொடங்கிய துர்பாக்கியமும் அப்போதுதான் ஆரம்பித்தது.
இன்றளவும் என் உலகத்துப் பெண்கள் வேறு. அவர்கள் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் அணிபவர்களோ, டைட் ஜீன்ஸும் ஆங்கில வாசகம் எழுதிய டீ ஷர்ட்டும் போட்டு வருபவர்களோ அல்ல. முட்டிக்கால் வரைத் தூக்கிச் செருகிய புடவையோடு அதிகாலை ஆறுமணிக்கே புளித்த சேற்றிலிறங்கி மத்தியானம் வரை நிமிராமல் நாற்று நட்டோ, களைஎடுத்தோ, உடன் குனிந்த பெண்களோடு ஊரில் யார் யாரை வச்சிருக்காங்க? தன் மாமன் படுக்கையில் தன்னை எப்படியெல்லாம் கையாளுவான் என்றோ பேசி சிரித்து, உடல்வலி மறக்கும் பெண்களே இன்றளவும் என் உலகத்து பெண்கள்.
என் வாழ்வில் அவர்கள் இருப்பதால் என் கதைகளிலும் அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். என் கதைகளில் வரும் அஞ்சல, மல்லிகா, ராஜாம்பா என நீளும் பெயர்களை நீங்கள் காட்சிப் படுத்தும்போது முழங்கால் வரை தூக்கி செருகிய புடவையோடு, குதிகால் வரை சேற்றில் புதைந்த மனுஷிகளே உங்களுக்குத் தெரிவார்கள்.
நடவு முடிந்து வரப்பேறி வரும் கண்ணம்மாவை இவர்களின் பிரதிநிதியாக உங்கள் முன் நிறுத்த ஆசைப்படுகிறேன். இந்த நட்ட நடு மத்தியானத்தில், இந்த வரப்பில் நின்று கண்ணம்மாவிடம் ‘‘உன் வாழ்க்கை எப்படி கண்ணம்மா இருக்குது?’’ என ஒரு நிருபர் தொனியில் நான் ஆரம்பித்தால்,
உனக்கு வேற வேலை இல்லப்பா, எனக்கு நெறைய இருக்கு என சொல்லிக் கொண்டே அடுத்த வேலைக்கு அவள் போய்விடக் கூடும். கெஞ்சி கூத்தாடி அந்த வேப்ப மரத்தடி நிழலில் நிறுத்தி கண்ணம்மாவிடம் கேட்கிறேன்,
‘உன் கைகாலெல்லாம் ஏன் இப்படி வெந்து கிடக்கு கண்ணம்மா?’
நிமிர்ந்து தீர்க்கமான ஒரு பார்வையால் என்னை ஏறெடுக்கிறாள் கண்ணம்மா.
பூதமங்கலத்தில் நடந்த தீமிதித் திருவிழாவில் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவயது கண்ணம்மா அப்போது அவள். எல்லோர் பார்வையும் மிதமிஞ்சிய பக்தியில் நெருப்பில் நடக்கும் கால்களையே கவனித்துக் கொண்டிருக்கையில், கண்ணம்மாவின் கண்கள் மட்டும், தத்தி, தத்தி நெருப்புக்குள் விழுந்துவிட்ட ஒரு மூன்று வயது பெண் குழந்தையை கவனித்துவிடுகிறது.
எரியும் நெருப்பிலிறங்கி அக்குழந்தையைத் தூக்கி தன்னை நோக்கி நீண்ட ஒரு கைகளுக்குள் அடைக்கலமாக்குகிறாள். திடீரெனெறு எழுந்த ஜனங்களின் கூக்குரல்தான் தான் நெருப்பில் விழுந்து கிடக்கிறோம் என்று உணர்த்துகிறது அவளுக்கு.
அறுபது நாட்கள் ஆஸ்பத்திரியில் படுத்தெழுந்து வரும்போது அவள் உடலின் ஒரு பகுதி வெந்து தீய்ந்திருந்தது. அதிலெல்லாம் துளி வருத்தமில்லை கண்ணம்மாவுக்கு.
‘ஒடம்புல ஒரு சின்ன வடுவில்லாத அந்தப் பொண்ண இப்ப மேற்கக் கல்யாணம் கட்டி குடுத்துட்டாங்கப்பா’ என்று சொல்லும்போது அவள் கண் வழியே கசியும் பெருமிதம் நம் யாராலும் அளவிட முடியாதது.
ஒரு காவல் தெய்வம் போல கண்ணம்மா எங்கள் நிலத்தோடு வாழ்பவள். தூரத்திலிருந்து வரும் நல்ல பாம்பின் அசைவும், விரியனின் அருகாமையையும் அவள் மட்டுமே அறிந்திருப்பாள்.
‘ஒரு எட்டாவது வரைக்கும் மட்டும் படிச்சிருந்தா போதும் கண்ணம்மா நீ, நம்ம டிஸ்ட்ரிக்ட் கலெக்டர சீட்ல இருந்து எழுப்பி ‘தே செத்த அப்படி ஒக்காரு, நான் கொஞ்சம் பாக்கறேன்’ என பல வருடங்களாக தீராத பல பஞ்சாயத்துக்களை நீ முடிச்சிருப்ப கண்ணம்மா` என ஷைலஜா சொல்லும்போது முகம் மலர்ந்து சிரித்துக் கொள்ள மட்டும் தெரியும் அவளுக்கு.
நாளெல்லாம் உழைத்து, வலிக்கும் கால்களோடு, கடை வரை ஒரு எட்டு நடந்து, குவார்ட்டர் பாட்டிலும், ஒரு கட்டு கணேஷ் பீடியும் தன் கணவன் சோமுவுக்கு வாங்கி மடியில் வைத்துக்கொண்டு நடக்கும் கண்ணம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆண், பெண் உறவையும், அதிகாரத்தையும் வகைப்படுத்தத் தெரியாமல் நான் விழிபிதுங்கியதுண்டு.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஏதோதோ காரணங்களால் ஐந்தாறு பெண்களையேனும் நட்பால், காதலால், காமத்தால் கடக்கிறவனாக இருக்கிறான்.
நானும் அதில் விதிவிலக்கல்லதானே!
எப்படிப் பார்த்தாலும் நான் அடிப்படையில் ஆண் திமிரேறிய ஒரு ஆள்தான். எந்த ஆளுமையோ, புத்தகங்களோகூட இதுவரை என்னை பெண்ணை முழுமையாகப் புரிந்துகொள்ள நேரடியாய் கற்பித்ததில்லை. பெண்கள் மீதான என் சகமனிதப் தோழமையை, ஒருவேளை என் வாழ்வின் இயல்பிலிருந்து நான் அடைந்ததே.
மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ‘ஒரே கடல்’ என்ற ஒரு படம் பார்த்தேன். இன்றளவும் என்னை புரட்டிப் போட்ட படம் அதுதான். மம்முட்டி, மீராஜாஸ்மின், நரேன் என மூன்று முக்கோண மனிதர்களின் மனமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், பேரன்பும், குரூரமும் படம் முழுதும் வியாபித்திருக்கும்.
அறிவு ஜீவித்தனத்தின் ஏமாற்றுதலுக்கு, ஒரு பக்கத்து போர்ஷன் பெண் தன்னையேத் தந்துவிடுவாள்.
So
what?
அதனாலென்ன? என சகஜமாக நகரும் அம்மேதையின் அதன் பிறகான நாட்கள் அத்தனை சாதரணமாக நகரக் கூடியதா என்ன?
படைப்பாளிகளை, கலைஞர்களை தினம் தினம் அலைவுறும் மனதோடு எத்தனை பெண்கள் கடக்கிறார்கள். அவர்களிடம் பேசி தீர்க்க, உங்கள் கதையில் வந்த காயத்ரி நான்தானே சார்? என சந்தேகம் போக்க, ‘‘வாழ்நாளெல்லாம் உங்கள் வார்த்தைகளின் அருகாமையில் வாழ்ந்துவிட்டால் போதும் சார்’’ என இறைந்து மண்றாட, ஒருநாள் உங்களோடு இருந்திட்டா என் வாழ்வு அர்த்தப்படுமென…. எந்த அர்த்தமுமற்ற சீரியல் உரையாடலோடு என.
படைப்பாளி என்பவன் பின்னுக்குப் போய் ஆண் என்பவன் துருத்திக் கொண்டு முன் வந்து நிற்பது அந்த மாதிரியான தருணங்களில்தான். எழுத முடிந்த, எழுத முடியாமல்போன எத்தனையோ அவலக் காவியங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இன்னும் இருக்கிறது.
என் பத்தாம் வகுப்பின் நிறைவில் நான் என் முதல் காதலை கண்டடைந்தேன். காதல் என்பதே கடிதங்கள் எழுதிக் கொள்வதுதானே! வைரமுத்து, மேத்தாவில் ஆரம்பித்து கலாப்ரியா, சுகுமாரன் என என் கடிதங்கள் விரிவடையும் போது அது முறிந்திருந்தது.
என் கடிதங்களை கொண்டு போக என் வகுப்புத் தோழியே என் பெண் புறா ஸ்நேகிதி. திரும்ப பெறப்பட்ட ஒரு கடிதத்தில் கையெழுத்து மாறியிருந்ததைக் கவனித்து அதிர்ந்தேன்.
எதிர்பார்த்த மாதிரியே அப்பெண் தோழிதான். ஏன் நண்பா இக்கவிதைக் கடிதங்களைப் பெறும் பாக்யவதியாக நானே இருந்துவிடக் கூடாது? என அவள் ஒரு ஹைக்கூ மாதிரி அக்கடிதத்தில் கேட்டிருந்தாள்.
வாழ்வு எத்தனை வினோதமானது தோழனே! இவைகளை கடந்துதான் ஒவ்வொருவரும் நிலையை அடைந்திருக்கிறோம்.
என் +2 படிப்பு முடிந்து கல்லூரியில் படிக்க ஆர்வம் மேலிட்டு அலைந்த நாட்களின் ஒரு பின்னிரவில்தான், ஒரு ஸ்டேண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து ‘டீ’ குடித்துக் கொண்டிருந்த அந்த வசீகரமான பெண் எனக்கு அறிமுகமானாள். என் தவிப்பை புரிந்து கொண்டவள் போல, கீழறங்கி வந்து என் தலைக்கோதி,
‘‘பேரு விஜயா, டெல்லியம்மா வீட்ல தொழில் செய்றேன். சைக்கிள் ஓட்றதும், எல்லாரையும் அனுப்பிட்டு நடுராத்தில இப்படி தனியா வந்து டீ அடிக்கிறதும் புடிக்கும். உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். நல்லா படி’’
இன்றும் என்னைக் கடந்த ஸ்நேகிதிகளில் விஜயா என்ற அந்த பாலியல் தொழிலாளிக்கும் ஒரு இடமுண்டு. எப்போதாவது எதிர்ப்படும் நேரங்களில் அவளுடன் வாய்த்த வலிமை வாய்ந்த உரையாடல்கள் இன்றளவும் என்னை ஸ்திரபடுத்திக் கொள்ள உதவியிருக்கிறது.
ஷைலஜா என் வாழ்விற்குள் வந்த போதுதான் அதுவரை அறைகுறையான புரிதலோடிருந்த பல விஷயங்கள் எனக்குப் பிடிபட்டன.
பெண் என்பவளின் பலமும், மனமும், தனித்துவமும், என்னை ஆழ புரிந்துகொள் என என்னுள் இருந்த ஆண் திமிரிடம் நேரடியாக பேசிய கணம் அதுதான்.
வேறெந்த எழுத்தாளர்களை விடவும் எனக்கு பெண் ஸ்நேகிதிகள் அதிகம் நாமே வரைந்துகொண்ட அல்லது நம் குடும்ப அமைப்புகள் போட்டு வைத்திருக்கிற கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடுகளைத் தாண்டி சிலர் பிரவேசிக்கும்போது நான் ஒரு பார்வையால் மட்டுமே எச்சரிக்கப்படுவேன். மற்றபடி என் படுக்கையறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கக்கூட என் ஸ்நேகிதிகளால் முடியும்.
மரணவீடுகளில் ஒப்பாரி வைத்து அங்கு போதையிலும், ஏளனத்திலும் இறைக்கப்படும் சில்லரைக் காசுகளை பொறுக்கியெடுத்து, அதிலிருந்து தினம், தினம் ஐம்பதுக்கும் நூறுக்கும் இட்லி வாங்கி, பசித்த குரங்குகளுக்கு பகிர்ந்து கொடுத்த என் பாட்டுக்கார லட்சுமியின் இளகிய மனதை எந்த பெண் மனதோடும் என்னால் ஒப்பிட்டு பார்க்கவே முடிந்ததில்லை.
கண்ணம்மா, லட்சுமி மாதிரியான பெண்களின் உடல் மற்றும் ஆன்ம பலன்கள் ஆண்களும் தேடியடைந்துவிட வாழ்நாளெல்லாம் முயலவேண்டிய ஒன்று.
சாலைகளைக் கடக்கும் எந்த அவசரத்திலும் கவனித்திருக்கிறேன். ‘‘என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்’’ என வாசகங்கள் எழுதப்பட்ட வாகனங்களை. அப்போதெல்லாம் எனக்குள் தோன்றுவது, எந்த சமூகம் என் ஜீவிதத்தின் முன்னால் போகிறது?
பால் சக்காரியா, சந்தோஷ் ஏச்சிக்கானம், என்.எஸ். மாதவன் என்ற மூன்று எழுத்தாளர்களின் மூன்று முக்கிய கதைகளின் பெண்களே என்னை எப்போதும் ஆற்றுப் படுத்துபவர்கள், கலங்கடிப்பவர்கள் அல்லது வழிநடத்துபவர்கள்.
இரண்டாம் குடியேற்றம் என்று சக்காரியாவின் புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. ஆஷாமேத்யு என்ற எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த அப்பெண் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மனநோய் மருத்துவருக்கு எழுதும் கடிதமே கதை.
இனி ஆஷாவே எழுதுகிறாள்.
நான் வாழப் போகிற கணவன் வீட்டிற்குப்போய், திருமணத்திற்கு முன்பே ஒரு பேயிங் கெஸ்ட்டாக ஒரு வாரம் தங்கி அவ்வீட்டின் இயல்பு, அம்மனிதர்களின் குணம், இயற்கையின் மீதும் மற்ற ஜீவன்கள் மேலும் அவர்களுக்குள்ள கரிசனம் என எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, பிடித்திருந்தால் மட்டுமே அவ்வீட்டிற்கு குடியேறலாமா? என முடிவெடுக்கிறேன்.
அவ்வளவுதான் டாக்டர் என் வீட்டில் பிரளயம் வெடிக்கிறது.
அவளை ஒரு மனநோய் பாதித்தவளாய் குடும்பம் நினைக்க ஆரம்பிக்கிறது. அதனாலேயே அக்கடிதம்.
ஆஷா மேத்யு இந்த நவீன சமூகத்தின் மிக முக்கிய மனுஷியாக, பெண்களின் சமூகத்தின் முன் செல்லும் வீராங்கனையாக நான் பார்க்கிறேன்.
எப்போது நினைத்தாலும் என்னை மூர்ச்சையாக்குகிற சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘இரை’ என்றொரு கதை உண்டு.
நீரற்ற பாழ்கிணற்றில் தனித்து வாழும் ஒரு பாம்பு. தவறி விழுந்த ஒரு தவளையை விழுங்க, அது சமீபிக்கும்போது தவளை வாய்த்திறந்து பாம்பிடம் பேசும்.
‘இரு நண்பா. பொறு. என்னையும் தின்று முடித்தப்பின் மீண்டும் இப்பாழுங்கிணற்றில் பரவும் வெறுமையை என்ன செய்வாய்? அது பசியைவிட கொடியதில்லையா?
‘அப்படியென்றால் நான் எப்படி உயிர்வாழ்வது?’ பாம்பு நிதானத்துடன் கேட்கிறது.
‘என்னைத்தான் உண்டு வாழவேண்டுமென்று எந்த விதியும் இல்லை. நீ இக்கிணற்றில் கிடக்கும் சருகை, சேற்றை, செடியை தின்று வாழலாம்’
‘அதெல்லாம் முடியாது, நான் ஒரு மாமிச உண்ணி;
‘அதெல்லாம் நாமே உருவாக்கிக்கொண்ட பெரும் பொய்கள். சகோதரா, கொஞ்சநாள் தாவரங்களைச் சாப்பிடு என்னதான் ஆகிறாய் பார்க்கலாம்’ இது தவளை.
ஒரு அசந்த சமயத்தில் தன் வாயை அகலமாகத் திறந்து அப்பாம்பை அப்படியே தவளை விழுங்கும் காட்சியோடு கதை முடிகிறது.
உண்மையில் இது பாம்பு, தவளைக் கதையா?
எத்தனை காலம்தான் சமூகம் வரையறுத்த விதிகள் எனச்சொல்லி பெண் ஆணுக்கு இரையாகிக் கொண்டிருப்பாள்?
எந்த காரிருளிலும் என் சமூகத்திற்கு முன் அத்தவளையே தத்தித்தத்திப் போய்க்கொண்டிருக்கிறது.
என்.எஸ்.மாதவனும் இதே ‘இரை’ என்ற பெயரில் ஒரு புனைவெழுதியிருக்கிறார்.
கண்கள் கறுப்புத் துணியால் கட்டப்பட்ட ஒரு சர்க்கஸ் மாஸ்டர் முன், உடலில் டூ பீஸ் உடையோடு, சிலுவையில் தொங்கும் இயேசு மாதிரி ஒருத்தி தினம் தினம் நிற்க வேண்டும்.
கையில் உள்ள கத்திகள் தீரும் மட்டும் அவன் அவளை நோக்கி வீசுவான். கடைசிக் கத்தியின் வீசுதலுக்குப் பிறகு அச்சுவரை விட்டு அவள் அகலுவாள். ஒளியூட்டப்பட்ட அந்த வெற்றுச்சுவரில் கத்திகளால் வரையப்பட்ட அவள் உருவம் தெரியும். இக்கதையை நான் தொடரப் போவதில்லை. மாதவன் பெண் என்ற ஒரு ‘இரை’யைப் பற்றி பேசுகிறார். என் சமூகத்தை முன்னகர்த்தி போக வேண்டியவள் அம்மிணி என்ற அந்த `இரை` பெண்ணல்ல.
அந்த மாஸ்டரை எதிர்த்து சமர்புரியும் அவள் தங்கை ஜெயலஷ்மிதான்.
வாழ்வின் இக்கட்டுகளைக் கையாளத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் போதெல்லாம் நிஜ வாழ்விலிருந்து எனக்கு கண்ணம்மாவும், லட்சுமியும், கதைகளிலிருந்து ஆஷா மேத்யுவும், ஜெயலஷ்மியும், பாம்பை விழுங்கிய அத்தவளையுமே என்னை இயக்குகிறார்கள்.
பெண்ணியம் என்பது புத்தகம் படிப்பதாலேயோ, பிரசங்கம் கேட்பதாலோ, படம் பார்ப்பதாலேயோ மட்டும் ஒரு மனுஷியின் மேல் படிந்துவிடுவதில்லை.
ஒரு புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் அவர். தன் சக ஆண் எழுத்தாளர் வீட்டிற்குப் போகிறார். இரவு உணவிற்குப் பின் வெகுநேரம் இலக்கியம் பேசி முடித்து நேரம் பார்க்கிறார்கள். இரவு 12.00 மணியைக் கடந்திருக்கிறது காலம்.
அவள் தங்கியிருக்கும் விடுதியில் அவளை விட்டுவிட்டு வர அவர் புறப்படுகிறார்.
எழுத்தாளரின் மனைவி அவரை தனியே அழைத்து காதில் ஏதோ சொல்கிறார்,
‘‘என்ன சார் பொம்பளயை விடப்போறீங்க. சீக்கிரம் வாங்கன்னு உங்க மனைவி சொல்றாங்களா?’’ கிண்டல் கொப்பளிக்கும் வார்த்தைகளில் அவர் கேட்க,
‘‘இல்ல மேடம், உங்க கூடவே இன்னிக்குத் தங்கிட்டு நாளைக்குக் காலைல வந்தால் போதும். இரவில தனியா வர வேணாம்ன்னு சொல்றாங்க’’ என்கிறார்.
அவர் அதுவரை தனக்குள் உருவாக்கி வைத்திருந்த பிம்பங்கள் உடைந்து அந்த அறையெங்கும் சிதறுகின்றன.
அவர் பார்வையில் அந்த எழுத்தாளனின் மனைவி படிப்பற்றவள். வாசித்தறியாதவள், பெண்ணியம் பற்றி மேடைகளில் விவாதிக்கத் தெரியாதவள்.
இருந்துவிட்டுப் போகட்டுமே.
அவள் தன் அனுபவத்தால் இவைகளை அடைந்திருக்கிறாள். அதைச் சுலபமாகக் கடக்கத் தெரிந்தவளாயிருக்கிறாள்.
என் பள்ளி நாட்களில், கல்லூரிக் காலங்களில் உடன் படித்த, இப்போது உடன் பணிபுரிகிற பல பெண்களுடன் என் உரையாடல்களை ஐந்து நிமிடம்கூட நகர்த்த முடியாமல் திணறுகிறேன்.
ஒருத்தி என்னை பைபிள் படித்து, ஆவிக்குரிய வாழ்விற்கு அழைக்கிறாள்.
கலையும், இலக்கியமும், சினிமாவும் சாத்தானின் துர்ச்செயல்கள் என எச்சரிக்கிறாள்.
இன்னொருத்தி, என் எழுத்தாள நண்பர்களிடம் சொல்லி தீபாவளிச்சீட்டு போட முடியுமா? என தன் வாழ்வின் கசப்பின் ஒரு சிறு பகுதியை அக்கோரிக்கையோடு சுருதி கூட்டுகிறாள்.
பொதுவாக எல்லோருமே இந்த அன்றாடங்களில் மிதிபட உள்ளூர விரும்புகிறார்கள். இதன் மீறலை நிராகரிக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் கண்ணம்மா போல, ஆஷா மேத்யூ போல மேலெழுந்து வந்து என் கை பற்றிக் குலுக்குகிறார்கள். அக்கரங்கள் மிருதுவானவை அல்ல ஆயிரம் வருட களிம்பேறிய கைகள்.
நன்றி
மார்ச் 2017, ஆனந்த விகடன்
No comments:
Post a Comment