Saturday, June 5, 2010

புதிய பார்வையில்....

புதிய பார்வைக்காக 'இலக்கிய காதலர்கள்' என்ற பொதுத் தலைப்பில் என்னிடமும் ஷைலஜாவிடமும் எங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா என கேட்டார்கள்.
நீண்ட தயக்கத்திற்குபிறகே சம்மதித்தோம். ஆனால் பேச ஆரம்பித்த போது மிகுந்த மனத்தடைகள் ஏற்பட்டது. மீடியாவுக்காக கான்ஷியசாக இருக்க முடியவில்லை.
புத்தகம் வந்ததும் படித்தால் அந்த கார்காலத்தின் எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை.
நிகழ்காலத்தில் உட்கார்ந்து பழையவைகளை மீட்டுக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.
இக்கட்டுரைக்கான புகைப்படங்கள் எம்.ஆர். விவேகானந்தன், பினு பாஸ்கர், காஞ்சனை சீனிவாசன் ஆகிய மூன்று முக்கிய புகைப்பட கலைஞர்களால் மூன்று வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்டவைகள்.






Friday, May 28, 2010

தாய் வீடு


என் எழுத்தாளர் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் மீடியாக்களில் வருவதை எப்போதும் தான் விரும்புவதில்லை என்று சொல்லுவார், ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அவர் சந்தோஷப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அது நம் இருப்பை சொல்கிறது, சக நண்பர்களின் உரையாடலை சமீபப்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மனிதர்களிடம் நம்மை அடையாளப்படுத்தி சந்தோஷமோ, சங்கடமோ கொள்ள வைக்கிறது.

சமீபத்தில் என் குடும்பம் பற்றி ஒரு முழுப்பக்க கட்டுரை கேரளா "தேசாபி மானியில்" "தாய் வீடு" என்ற தலைப்பில் வெளியாகி மூன்று, நான்கு நாட்கள் கேரளாவிலிருந்து நண்பர்களும், உறவினர்களுமாக தொலைப்பேசியில் அழைத்து பேசி நெருக்கத்தை அதிகப்படுத்தினார்கள். நம் மனோஜ் தான் (புனைவின் நிழல்) காசர்கோட்டில் உள்ள தன் சகோதரியின் வீட்டிலிருந்து அதிகாலையில் தேசாபிமானியை பார்த்து என்னை எழுப்பினார். ஆனாலும், மலையாள இளம் சேச்சிகளின் தொலைபேசி குரல்களுக்காக ஏங்கினேன். ஜோதிர்மையி சாருவிடம் என் தொலைபேசி எண்ணை கேட்டிருக்க கூடும் என்ற அற்ப சந்தோஷம் ஒரு நிமிடம் நீடித்தது அப்படிப்பட்ட எதுவும் என்னைப் போன்ற துர்பாக்கியசாலிகளுக்கு எப்போதும் வாய்க்காது. சாருவிற்கும், அய்யனாருக்குமே மொத்த பாக்கியமும் போய்ச் சேரக்கடவது.

இக்கட்டுரையை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவசர அவசரமாக ஜெயஸ்ரீயும், சுகானாவும் மொழிபெயர்த்தனர்


தாய்வீடு
- ஷபீக் அமராவதி

எழுத்துகளின் தூய்மையும், நெருக்கதையும், விவாதத்தையும், சக்தியையும் இதயத்துடிப்பையும் சேர்த்து வைத்து பாலம் கட்டுவது, அதனூடாக மலையாளம், தமிழுக்குள் கரைந்து கொள்வது.

என்.எஸ். மாதவனும், பால் சக்காரியாவும், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஏ. அய்யப்பனும், சந்தோஷ் ஏச்சிக்கானமும் கே.ஆர். மீராவும், பிரபஞ்சனுக்கும், அசாகமித்ரனுக்கும், கோணங்கிக்கும், நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும், கனிமொழிக்கும், மனுஷ்யபுத்திரனுக்குமிடையில் கரைகிறார்கள்.

தமிழ், மலையாள இலக்கியங்களுக்கிடையில் சங்கமிக்கவைக்கிற ஒரு பாலத்தைப் பற்றியும், அதற்கு குறுக்கும் நெடுக்குமாக ஸ்தூலமாய் தாங்கி நிற்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை நகரில் பெயரிடப்படாத அந்த வீட்டின் முகவரிதான் 19, டி.எம். சாரோன்.

தமிழின் இனிமையும் மலையாளத்தின் அழகும் கலந்திருக்கும் இந்த இரண்டு அடுக்குமாடி வீட்டின் மர நிழல் வரவேற்கும் வாசலில் கைகூப்பி வரவேற்க, பவாசெல்லதுரையின் அம்மா தனம்மாவும், ஷைலஜாவின் அம்மாவான கேரளத்து மாதவி அம்மாவும் இருக்கிறார்கள். இரண்டு அம்மாக்களின் கருணையும் பிரியமும் விளங்கும் இந்த இடம், இந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக இருக்கிறது. இங்கே தமிழும், மலையாளமும் இழைகளாகப் பின்னிப் பிணைந்து பேசி, பழகி, அற்புதப்பட்டு, விவாதித்து ஒன்று சேர்ந்திருக்கும் மலையாளத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிற இலக்கியங்களை இந்த வீட்டின் வாசலினூடாகஎன்.எஸ். மாதவன், கெ.என். பணிக்கர், எ. அய்யப்பன் முதல் எட்டாம் வகுப்பு மாணவி சிபிலா மைக்கேல் வரை தமிழகம் ஏற்றுக் கொண்டது, இவர்களினூடாகத்தான்.



தமிழ் நவீன எழுத்தாளர் பவா செல்லதுரைதான் இந்தப் பாலத்தின் முதுகெலும்பு. மனைவியின் அம்மா மாதவியம்மாதான் இதைத் தாங்கி நிற்கும் தூண்.
இந்தக் குடும்பத்தின் நான்கு ஜீவன்களுக்குத்தான் இந்தத் தூணில் பாலத்தை முழுமையாக்கிய பொறுப்பு உண்டு. பவாவின் மனைவி ஷைலஜா, ஷைலாஜாவின் அக்கா ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீயின் கணவர் தமிழனான உத்திரகுமாரன், இவர்களுடைய மகள் சுகானா. மலையாளத்தின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கூட காலடியெடுத்து வைக்காமல் இத்தனை முக்கியமான மொழி பெயர்ப்பாளர்களாக உயர்ந்திருக்கின்றனர். பவா அவர்களுக்கு பாதையமைக்க, மாதவியம்மா வார்த்தையெடுத்துக் கொடுக்கிறார். பல விதமான விருந்துகளினூடே பவாவின் அம்மா தனம்மாளும் இதில் பங்கெடுத்துக் கொள்கிறார்.

பாலக்காடு பறளியைச் சேர்ந்தவர் மாதவியம்மா. முண்டூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பாலக்காடு சிவில் ஸ்டேஷனுக்கு அருகில் கல்லேக்காடு வாசுதேவனின் வாழ்க்கைத் துணையானார். முதலில் வாசுதேவனின் சேலத்து அக்கா வீட்டிலும் பின்னர் திருவண்ணாமலையிலுமாக வசிக்கத் தொடங்கினர். மலையாளத்தை மறக்காமல் இருந்த மாதவியம்மா வாசிப்பை உயிரென தொடர்ந்தார். இவர் மூலம் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும், பேத்தி சுகானாவும் மலையாளத்தை பேச்சு - எழுத்து மொழிகளால் நிறைத்தார்கள். மாதவியம்மாவோ தன் மூத்த மகளின் பாடபுத்தகத்தைத் துணையாக்கி தமிழ் எழுத்துலகத்துக்குள் பிரவேசித்தார். வாசுதேவனின் மறைவுக்குப் பின் வாசிப்பு மாதவியம்மாவின் மறுபாதி ஆனாது. பவா-ஷைலஜாவின் குழந்தைகளான ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வம்சியும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மானசியும் ஜெயஸ்ரீயின் மகன் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அமரபாரதியும், மாதவியம்மாவின் தாய்பள்ளிக்கூடத்தின் புதிய மாணவர்கள்.

எழுத்தாளன், அரசு ஊழியன், விவசாயி, சமூகப் பணியாளன், பேச்சாளன், என்பதன் கூட்டுக் கலவையின் மொத்தமே பவாசெல்லதுரை. திருவண்ணாமலை மின்வாரியத்தில் அட்மினிஸ்ரேடிவ் சூப்ரவைசராக இருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும், அமைப்பாளராகவும், பேச்சாளருமாக இருப்பவர். +1 மாணவராக இருக்கும்போதே பந்தங்களையும், அதன் சிக்கல்களையும் விசாரணை செய்யும் விதமாக, "உறவுகள் பேசுகின்றன" என்ற நாவலின் மூலமாகத்தான் பவா 1983 இல் எழுத்துலகில் பிரவேசிக்கிறார். 89இல் "எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்" கவிதைத் தொகுப்பு மூலமும் 90 இல் முகம் என்ற தனது முதல் சிறுகதை மூலமும் தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகிறார். 2008 மார்ச்சில் அவருடைய முதல் கதைத் தொகுப்பு "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" வெளிவந்தது. நவீனத் தமிழிலக்கியத்தின் கவனிக்கத்தக்க பத்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது விமர்சகர்களின் கருத்து. உலகத் தரமான தமிழ்க் கதைகளின் முன்னால் நிற்கும் எழுத்து இவருடையது. இப்போது புதிய ஒரு நாவலின் உருவாக்கத்தில் இருக்கிறார்.

பட்டதாரி மாணவியாக இருக்கும்போது கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருந்த ஷைலஜா திடீரென எழுதுவதை நிறுத்திவிட்டார். தன்னைவிட 2 வயது மூத்தவரான பவாவையும் அவருடைய எழுத்துகளையும் நெருங்கியறிந்ததாலும் அவர் மூலமாக அறிமுகமான நவீன இலக்கிய வாசிப்பினாலும் இது நிகழ்ந்தது என்கிறார் ஷைலஜா. இவர் படித்த திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் சீனியர் மாணவராயிருந்தார் பவா. அன்றே இலக்கிய மேடைகளில் கவனிக்கத்தக்க பேச்சாளன், கவிஞன். இப்படியான இலக்கியக் கூட்டங்களில் மூலம்தான் பவாவுடன் நட்பான இந்த சகோதரிகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகள் வரை கொண்டு சேர்த்தது. இப்போது சங்கத்தின் மாநில செயற்குழுவில் பவாவும், மாநிலக்குழுவில் ஷைலஜாவும்.

தீவிர வாசிப்பினூடே மலையாளப் புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும் திரும்பவும் எழுத்துலகில் கால் பதித்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை நடத்திய இலக்கிய சந்திப்பான "முற்றம்" நிகழ்ச்சியில் பேசிய பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மலையாள உரையை தமிழ்படுத்தியதுதான் ஷைலஜாவின் முதல் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம். அந்தச் சந்திப்பிலேயே தன் "சிதம்பர நினைவுகளை" மொழிபெயர்ப்பு செய்வதற்கான அனுமதியையும் பாலச்சந்திரன் அளித்தார். தொடர்ந்து என்.எஸ். மாதவனின் "பரியாய கதைகள்" கூக்குரல், சாராஜோசப், என். பிரபாகரன், ஆர். உண்ணி ஆகியோரின் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டு மொழிபெயர்த்தார். "சூர்ப்பனகை" என்ற பெயரில் மொழிபெயர்த்த கெ.ஆர். மீராவின் "மோகமஞ்சள்" என்ற கதைத் தொகுப்புதான் அவருடைய சமீபத்திய வரவு. குடும்ப நண்பரான நடிகர் மம்முட்டியின் "காழ்ச்சப்பாடு" என்ற சுயசரிதையும், இ.எம்.எஸ். பற்றிய, அவரது மகள் இ.எம். ராதாவின் நினைவுக் குறிப்புகளும் இனி அடுத்ததாக ஷைலஜாவின் மொழி பெயர்ப்பில் வெளிவரப்போகிறது. குறைந்த காலத்துக்குள் தமிழ்நாட்டின் முற்போக்கு புத்தக வெளியீட்டாளர் என்ற பெயர் பெற்ற "வம்சி புக்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஷைலஜா விளங்குகிறார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி தான் இவருக்கு பதிப்பகம் துவங்க ஊக்கமளித்தவர். "திலகவதியின் குறுநாவல்கள்" தான் வம்சி புக்ஸின் முதல் புத்தகம். 2004 மே 29இல் ஆரம்பித்த வம்சி இதுவரை 130 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஜோதிடம், வாஸ்து, ஆன்மீகம் என்பவற்றைப் பரப்பும் புத்தகங்களுக்கான மை வம்சியில் எப்போதும் இல்லை.
புத்தக வெளியீட்டாளர் என்பதற்குமேல் திருவண்ணாமலையின் இடதுசாரி கலாச்சார மையமுமாக விளங்குகிறது மத்தலாங்குளத் தெருவிலுள்ள வம்சி புத்தக மையம்.

ஜவுளி வியாபாரியாக இருந்த உத்திரகுமாருடன் அடிமாலியில் வாழ்ந்த நாட்களில்தான் ஜெயஸ்ரீ தன் எழுத்துலகில் நுழைகிறார். மாத்ருபூமி நாளிதழில் "நிலவில் கால்வைத்தது கட்டுகதையா?" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை 2002 இல் தமிழில் மொழிபெயர்த்தது தான் தொடக்கம். பிறகு அடிமாலியைச் சேர்ந்த சியாமளா சசிகுமாரின், "நிசப்தம்" என்ற கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்தார். பால் சக்கரியாவின் பெண்கதைகள், குறுநாவலான "இதுதான் என் பெயர்" சாகித்ய அகாடமிக்காக "சக்கரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கதைகள்" எ. அய்யப்பனின் "கல்கரியின் நிறமுள்ளவர்கள்" சந்தோஷ் ஏச்சிக்கானத்தின்" ஒற்றைக் கதவு", "கவிதையும் நீதியும்" என்ற தலைப்பில் சுகதகுமாரியுடன் கவிஞர் விஜயலட்சுமி நிகழ்த்திய நேர்காணல் என மலையாள இலக்கியச் செல்வங்களை ஜெயஸ்ரீ தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
கேரள வாழ்க்கையிலிருந்து மலையாளத்தைக் கற்றுக் கொண்ட உத்திரகுமாரன், ஜி.என். பணிக்கரின் "தாஸ்த்தாவேஸ்கியின் வாழ்வும் கலையும்" என்ற புத்தகத்தை மொழிபெயர்த்தார். சேகுவராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" இன் தமிழ் திரைக்கதையையும் மொழி பெயர்த்துள்ளார். மகளான சுகானா எட்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது, திருவனந்தபுரம் மண்ணந்தல எஸ்.இ. தாமஸ் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த சிபிலா மைக்கேலின் "மறையுந்ந தீரம்" என்ற கதைத் தொகுப்பை "எதிர்பாராமல் பெய்த மழை" ஏன்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். பவா-ஷைலஜாவின் மகனான வம்சி இரண்டாம் வகுப்பு மாணவனாக இருக்கும்போது வரைந்த ஓவியங்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்போது "ஆன் பிராங்க் டைரியை" மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் சுகானா. சாரோனிலேயே வேறொரு தெருவில் இந்தக் குடும்பம் வசித்துக் கொண்டிருந்தாலும் 19. டி.எம். வீட்டின் தொடர் இலக்கிய விவாதங்களில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்கிறது.



திருவண்ணாமலைக்கருகில் வாணாபுரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரான ஜெயஸ்ரீயும், வியாபாரியான உத்திரகுமாரும் வேலைப் பளுவிற்கு இடையிலும் புத்தகங்களோடு தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

அறிமுகப் படுத்துவதற்கும் மேலாக, மலையாள இலக்கியத்தைப் பற்றிய கௌரவமான தேடல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இந்தக் குடும்பத்தின் முயற்சிகள் களம் அமைக்கிறது. காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பி.ஏ. தமிழ்ப் பாடப்புத்தகமாக இருக்கிறது ஷைலஜா மொழிபெயர்த்த "சிதம்பர நினைவுகள்". தன்னாட்சிக் கல்லூரியான திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் எம்.ஏ. முதல் வருடப் பாடப்புத்தகமாக உள்ளது ஜெயஸ்ரீ மொழி பெயர்த்த "நிசப்தம்". அதே கல்லூரியின் பி.ஏ. இளங்கலை பாடப்பிரிவிற்கு பவா செல்லத்துரையின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" பாடபுத்தகமாக இருக்கிறது. என்.எஸ். மாதவனின் பரியாய கதைகளின் தமிழ் பெயர்ப்பான "சர்மிஷ்டா" வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களும் தமிழகத்தில் உள்ளனர்.
”நிசப்தம்” திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் விருதும், எ. அய்யப்பனின் ”வார்த்தைகள் கிடைக்காத தீவில்” கவிதைத் தொகுப்பிற்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் கிடைத்துள்ளன. புத்தக வெளியீட்டிற்கும் மேலாக, கேரளத்தின் சின்னச் சின்ன விவாதங்களுக்குக் கூட எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்கிறது இந்தக்குடும்பம்.

கேரளத்தில் பால் சக்கரியா கொளுத்திவிட்ட விவாதமும், இப்போதைய மலையாள சினிமாப் பிரச்சினையும் கூட 19. டி.எம். சாரோனில் தொடர்விவாதப் பொருளாகின்றன.

இந்த வீட்டில் சமையல் உதவியாள் லதா கூட தண்ணீர் கேட்டால் ”வெள்ளம் வேணுமோ” என்று மலையாளத்தில் திரும்பக் கேட்கிறாள். அங்கே சென்று நாம் தமிழைத் தேடும்போது இவர்கள் மலையாளத்தைத்தான் தேடுகிறார்கள். அங்கேயிருந்து வெளியேறினால் நாம் தமிழை விட்டுவிடுவோம் சொந்த நாட்டை விட்டு வெளியேறினால் நாம் மலையாளத்தை மறப்பதுபோல. இப்போதும் இவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை விட அவர்களின் ப்ரியமான மலையாளத்தை.


Monday, March 8, 2010

திருவண்ணாமலையில் வம்சி புத்தக வெளியீட்டு விழா




திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக வெளியீட்டு விழா
வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக 5 புது புத்தகங்களின் வெளியீட்டு விழா 13.03.2010 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளியில் நடைபெற உள்ளது. விழாவினை மாவட்ட ஆட்சி தலைவர் மு. இராஜேந்தின் ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்து உரையாற்றுகிறார்கள். விழாவின் முதல் அமர்வாக மலையாள மொழியில் கே.ஆர். மீரா அவர்கள் எழுதி தமிழில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த " சூர்ப்பனகை" என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் ஜி. திலகவதி ஐ.பி.எஸ். காவல் துறை கூடுதல் தலைவர் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் சந்திரபோஸ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கற்றது தமிழ் பட இயக்குனர் ராம் உரையாற்றுகிறார்.

இரண்டாவது அமர்வாக பின்னி மோசஸின் ” நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து” என்ற என்ற கவிதை தொகுப்பை வெண்ணிலா கபடி குழு இயக்குனர். சுசீந்திரன் வெளியீட, எழுத்தாளர் பவாசெல்லதுரை பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உரையாற்றுகிறார்.

மூன்றாவது அமர்வாக அய்யனார் விஸ்வநாத்தின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்படுகின்றது. மூன்று புத்தகங்களையும் கவிஞர் சமயவேல் வெளியிடுகிறார். ”உரையாடலினி” என்ற சிறுகதை தொகுப்பை நம் தினமதி நாளிதழின் ஆசிரியர் பி. நடராஜன் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து இயக்குனர். சந்திரா உரையாற்றுகிறார். தனிமையின் இசை” என்ற கவிதை தொகுப்பை திரு. வி. ரமேஷ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கவிஞர். தமிழ்நதி உரையாற்றுகிறார். ”நானிலும் நுழையும் வெளிச்சம்” என்ற கவிதை தொகுப்பை புகைப்பட கலைஞன் பினுபாஸ்கர் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். புத்தகம் குறித்து எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார்கள். சி. பலராமன் நன்றிகூற முதல் நாள் விழா நிறைவு பெறுகிறது.

இரண்டாவது நாள் 14.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில் 4 புத்தகங்களின் வெளியீட்டு விழா அதே இடத்தில் நடைபெறுகிறது. விழாவினை திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைக்கிறார். முதல் அமர்வாக மலையாள மொழியில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ”ஒற்றைக் கதவு” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட, ஏ.எல்.சி.யின் பொது செயலாளர் அறிவர். ரிச்சாட் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார்.
இரண்டாவது அமர்வாக பி.ஜே. அமலதாஸ் தொகுத்த ”இன்றும் வாழும் தெருக்கூத்து” என்ற புத்தகத்தை திரைப்பட கலைஞர் நாசர் வெளியிட கவிஞர். இளையபாரதி பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து முனைவர் பார்திபராஜா உரையாற்றுகிறார்.

மூன்றாவது அமர்வாக கே.ஸ்டாலினின் ”பாழ் மண்டபம் ஒன்றின் வரைபடம்” என்ற கவிதை தொகுப்பை கவிஞர். ரவி சுப்ரமணியன் வெளியிட, கவிஞர் அய்யப்ப மாதவன் பெற்றுக்கொள்கிறார்.

நான்கவது அமர்வாக வெ. சுப்ரமணியபாரதியின் ”வெ. சுப்ரமணிய பாரதி கதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் நா. முருகேச பாண்டியன் வெளியிட உயிர்எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் பெற்றுக்கொள்கிறார்.
நிறைவாக கே. முருகன் நன்றியுரை கூற விழா நிறைவு பெறுகிறது.

Thursday, February 4, 2010

வம்சி வெளியீட்டரங்கம்.
இரண்டு நாட்கள் ஆறு நூல்கள்.
வம்சி வெளியீட்டரங்கத்தின் 2 மற்றும் 3 இலக்கமிட்ட வெளியீட்டு நிகழ்ச்சிகள் சென்னையில் 30& 31 .01.2010 தேதிகளில் நடைபெற்றன.
முதல் நிகழ்வு கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ பள்ளி அரங்கில் உள்ள டி-பிகா அரங்கில் மாலை நேரம் ஆறு மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெகிழ்ச்சியான வரவேற்புரையை கே.வி. ஷைலஜா வழங்கினார்.கவிஞர் உமா ஷக்தி முழு நிகழ்வின் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றார்.
முதலாவதாக பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’ (இதுவரை வெளியான மொத்த சிறுகதைகளின் ) தொகுப்பை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிக்கையாளர் ஞாநி பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தின் மீது இயக்குனர் சிம்புதேவன், கவிஞர் யுகபாரதி இருவரும் உரையாற்றினார்கள்.
இயக்குனர் மகேந்திரன் தான் எளிதில் எழுத்தாளர்களுக்கு மனதில் இடம் கொடுப்பதில்லை என்றும் அப்படியான இடத்தை பாஸ்கர்சக்தி பெற்றிருக்கிறார் என்றும் அதேபோல் நல்ல அன்பராகவும் நண்பராகவும் கூட மனதில் இடம் பெற்றிருக்கிறார் என்றார்.
ஞாநி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னமே சந்தித்த கணத்தில் தன்னையே கண்டது போல உணர்ந்ததாகக் கூறினார். யுகபாரதியும் சிம்புதேவனும் சிறுகதை மட்டுமல்லாமல் திரைக்கதை சின்னத் திரை வசனம் உட்பட எதிலும் தனி முத்திரை பதிக்கிறவர் என சிலாகித்தனர்.
நண்பர்களுக்கும் வருகை தந்தவர்களுக்கும் நன்றி கூறி பாஸ்கர்சக்தி ஏற்புரை வழங்கினார்.
அடுத்ததாக எஸ்.லட்சுமணப்பெருமாளின் கதைகள் தொகுப்பை பத்திரிக்கையாளர் ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் விஜயசங்கர் வெளியட கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றினார். விஜய சங்கர் படித்த அளவிலான கதைகள் உணர்வு நிலைகளைக் கிளறியதோடல்லாமல் கிராமத்தைக் காட்சிப்படுத்தியது என்றார். முத்துக்குமார் இத்தினத்தில் வெளியிடப்படுகிற மூன்று எழுத்தாளர்களது எழுத்தில் உள்ள நகைச்சுவை மற்றும் வாழ்வின் மீதான அக்கறை குறித்து ஒப்புமை நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் ராம் எழுத்தாளனின் தீவிரமும் உழைப்பும் ஒரு போராளியின் செயல்பாட்டுக்கு இணையானது என்கிற தொனியை பேச்சில் வெளிப்படுத்தினார்.
மூன்றாவதாகவும் முடிவாகவும்
க.சீ. சிவகுமாரின் ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
சிவகுமாரின் தொகுப்புக்கு சுகுமாரன் வாசித்த கட்டுரை வடிவத்தை www.nayakan.blogspot.com மில் காணலாம்.கு.கருணாநிதியின் உரைக்குப்பின் ஏற்புரை வழங்கிய க.சீ.சிவகுமார் புத்தகத்தை களிகூர்ந்திருந்த மாரீசை மேடைக்கு அழைத்து பிரதியை வழங்கினார்.
பி.ஜே. அமலதாசின் நிறைவான மகிழ்வான நன்றிய்ரைக்குப் பின் அரங்கத்துக்கு வெளியே வந்து குழுமியவர்களை இந்த நூறாண்டுகளின் ஆகப்பெரிய நிலா ராத்திரி வரவேற்றுத் தண்ணொளி பொழிந்தது.
ஜனவரி 31- நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூர் மியூசியத்தின் எதிப்புறம் அமைந்துள்ள எக்சா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.வி.ஜெயஸ்ரீ வரவேற்புரை நல்கினார்.
முதலில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’
நூலினை பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெற்றுக்கொண்டார்.
நூலினைக் குறித்து பிரபஞ்சனும் இயக்குனர் மிஷ்கினும் பிரதி தந்த பரவசத்தை மத்தாப்பு மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
அடுத்து சா.தேவதாஸ் மொழி பெயர்த்த ஹென்றி ஜேம்சின் ’அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட எழுத்தாளர் அஞ்சனா பெற்றுக்கொண்டார். வெளியிட்ட சண்முகம் நூல் குறித்த விரிவான செறிவான உரை வழங்க பத்திரிக்கையாளர் கடற்கரய் அவை கலகலக்கும் உரை வழங்கினார்.சுருக்கமான ஏற்புரையை தேவதாஸ் வழங்கினார்.
அடுத்து உதயசங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் பெற்றுக்கொண்டார்.மணி மாறனின் விரிவான கதைகள் பற்றிய உரையாடலுக்குப் பின் உதயசங்கர் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வு நிறைவில் பவா செல்லதுரை நன்றியுரைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இருநாட்கள் நிகழ்ச்சிகளின் நினைவுகளிலிருந்து நான்கு நாட்களாகியும் வெளிவர இயலவில்லை. நண்பர்கள் என் மீதும் வம்சி பதிப்பகம் மற்றும் குடும்பத்தினர் மீதும் வைத்துள்ள தனிப்பட்ட பிரியத்தை மேடைகளில் கேட்டபோது நம்பமுடியாத்தாக இருந்தது. இருநாள் நிகழ்வுகளுக்கும் வந்திருந்த விருந்தினர்களும் வாசகர்களும் இந்த நிகழ்வுகளின் மீது அக்கறையும் அன்பும் என்றென்றும் மறக்க இயலாதது.
இருநாள் நிகழ்ச்சி பற்றி இன்னும் எழுத எண்ணமுள்ளது. அதற்கு முன் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ி

Wednesday, January 6, 2010

'வம்சி'யில் நாசர்

இப்புத்தக கண்காட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை பல்வேறு
ஆளுமைகள் 'வம்சி'க்கு வந்து உரையாடி புத்தகங்கள் வாங்கி,
எங்கள் ரேக்குகளைப் பார்த்து அதிசயித்து 'எங்க செய்தீங்க'
எனக் கேட்டு எங்கள் மூன்று மாத வலியைக் கொஞ்சம் மறக்க
செய்திருக்கிறார்கள்.
நான் இன்றும் சென்னைப் பக்கமே போக முடியலை. இங்கிருக்கும்
ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புத்தகத்தை முடித்தணுப்ப முடிகிறது.
9,10 இரு நாட்களில் மட்டும்தான் புத்தக அரங்கில் இருக்க முடியும் போல.
அவ்வப்போது ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும் சின்ன சின்ன
விஷயங்களுக்கெல்லாம் உற்சாகப்பட்டு தொலைபேசியில்
என்னை அழைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள், நேற்று
ஒரு பெண் மதியம் 2 மணியிலிருந்து 2 மணிவரை 'வம்சி'யிலேயே
காத்திருந்து 'சூர்ப்பனகை' (கெ.ஆர். மீரா-தமிழில் : கே.வி. ஷைலஜா)
தொகுப்பு வந்தவுடன் வாங்கிப் போயிருக்கிறார். இத்தனை எதிர்பார்ப்புக்கு
பரிசாக பணம் வாங்காமல் அத்தொகுப்பை ஷைலஜ கையெழுத்திட்டு தந்ததற்கு
அப்பெண் மிக நெகிழ்ந்து ஷைலஜாவின் கைப்பிடித்து தன் நன்றியை
ஸ்பரிசத்தால் பகிர்ந்து கொண்டது........
நேற்று நண்பர் நாசர் தொலைபேசியில் அழைத்து உங்க ஸ்டால் நோம்பர்
என்னவென்று கேட்டு, மிக முக்கியமான புத்தகங்களை வாங்கி போயிருக்கிறார்.
அப்போது எதேச்சையாக அங்கு வந்த ஆர்.ஆர். சீனிவாசன் எடுத்த புகைப்படங்கள் இவைகள்.







இப் புகைப்படங்களில் மட்டுமே 'வம்சி' யின் ரேக்குகளின் எளிமையான
அழகை தரிசிக்க முடிந்தது ஏன்னென்றால் அப்படி இருக்கிறதுச் சூழல்....

19. டி.எம்.சாரோனிலிருந்து...: வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்

19. டி.எம்.சாரோனிலிருந்து...: வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்

Monday, December 28, 2009

வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்












சில ஆண்டுகளுக்கு முன் என் முதல் கடிதத்திற்கு பதில் எழுதிய
சுந்தர ராமசாமி இந்த வருடம் வாசிக்க வேண்டிய மிக முக்கிய
புத்தகம் என்று குறிப்பிட்டது மசானபு ஃபுபேகாவின் ”ஒற்றை
வைக்கோல் புரட்சியை”.

காலத்தின் சுழற்சியில் பூவுலகின் நண்பர்களோட சேர்ந்து வம்சி
புக்ஸ் சுற்றுசூழல் வரிசையில் 16மிக முக்கிய புத்தகங்களை
கொண்டு வருவது என்றும் அதில் முதல் 8புத்தகங்களையாவது
இப்புத்தக கண்காட்சியின் நிறைவுக்குள் கொண்டு வரும் முயற்சியில்
இரவு 10மணிக்கு அதன் 8அட்டைபடங்களை நிறைவு செய்தோம்.
மதிக்கத்தக்கவனும், நேசிக்கததக்கவனுமான புகைப்பட கலைஞனும்
சூழலியல் வாதியுமான ஆர்.ஆர். சீனிவாசனும் அவர் நண்பர்
ஆர். கனேசனும் இவ்வளவு அழகான அட்டை படங்களை
வடிவமைத்து தந்தார்கள்.

நண்பர் ஆதி. வள்ளியப்பனும், நானும் கடந்த 48 மணிநேரத்தில் 48 தடவைகளாவது தொலைப்பேசியில் உரையாடி இதன் வடிவத்தையும் வார்த்தைகளையும் செழுமைப்படுத்தினோம். என் மருத்துவ விடுப்பு
முடிந்து மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி அலுவலகத்திற்கு
ஒரு பொய் மருத்துவ சான்று கொடுத்து சேரவேண்டும். சேருவதா
அல்லது என் நிலத்திற்கே போய் தீவிர விவசாயியாக மாறி
மண்ணோடும், நீரோடும்,சேரோடும் மிதி படும் மகத்தான இயற்கை
வாழ்வைத் தேடி இப்புத்தகங்கள் என்னை நகர்த்துகின்றன.

Wednesday, December 23, 2009

புதுப்படைப்புகளுக்கிடையே...

























புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

எஸ். லட்சுமண பெருமாள், உதயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ சிவக்குமார் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பும்


இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, இந்திய பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களையும், உணவையும் குடியையும் கொண்டாடங்களையும் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ரெங்கயா முருகனும், ஹரி சரவணணும் சேர்ந்து "அனுபவங்களின் நிழல் பாதை" என்ற தலைப்பில் ஒரு காத்திரமான தொகுப்பையும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளிலுருந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிற நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளிலான சிறுகதைகளை பாவண்ணன், இளம்பாரதி, டாக்டர் ரகுராம், இறையடியான், நஞ்சுண்டன், கே.வி. ஜெயஸ்ரீ இவர்களோடு சேர்ந்து தொகுப்பாசிரியர் என்ற பொறுப்பை சுமந்துகொண்ட ஷைலஜா மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டுடிருக்கிறாள். தொகுப்பின் பெயர் "தென்னிந்திய சிறுகதைகள்". இத்தொகுப்பிற்கான முன்னுரைக்காக பிரபஞ்சனுக்கு கதைகள் முடிய முடிய அனுப்பப்படுக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவள் இயக்கத்தை இன்னமும் துரிதப்படுத்துகிறது.

மிகத்தீவிரமாக இயங்கி திடீரென அதிலிருந்து அறுபட்டு லௌகீக வாழ்வில் பொறுத்திக்கொள்ள முயன்று, தோல்வியுற்று மீண்டும் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்த தன் பழைய நாட்களை விட்ட இடத்திலிருந்த தொடரும் கலைஞர்கள் முன்னிலும் உக்கிரமாக இயங்குவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கலைஞன் பி.ஜே.அமலதாஸ். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டம் மிகுந்த வாழ்வில் அமலதாசுக்கும் ஒரு சின்ன இடமுண்டு. கூத்து பற்றிய ஆழமான கட்டுரைகளும் அதன் உள்ளே புகுந்திருக்கும் சாதீயம் குறித்தும் ந.முத்துசாமி போன்றவர்களின் மேலாட்டமான முன்னிருத்தல்கள் என விரியும் ”இன்றும் வாழும் தெருக்கூத்து” தமிழுக்கு மிக மிக புதிய வரவு.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

”கொமாலா” , ”பெட்ரோபரோமா” நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர். இப்பெயரிலேயே மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானத்தால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இன்னமும் ஓயாமல் தொடர்கிறது. இன்றைய நடுத்தர வாழ்வின் பெரும் சிக்கல் மிகுந்த துயரம் குறித்தும், யார் மீதும் யாருக்கும் அக்கறையற்ற வாழ்வு குறித்தும் கடந்த பத்தாண்டுகளில் இப்படியொரு கதையை நான் வாசித்தது இல்லை. சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் 14 கதைகளின் மொழிபெயர்ப்போடு கே.வி. ஜெயஸ்ரீ தன் பகலையும் இரவையும் கரைத்துக்கொண்டு இருப்பது பெரும் கனவுலகை முன் நிறுத்துகிறது.

கவிதை தொகுப்புகளாக அளவில் சின்ன சின்னதாக அழகான ஆறேழு தொகுப்புகள் வருகின்றன. கே.ஸ்டாலின், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வநாத், தி.பரமேஸ்வரி, வெ. நெடுஞ்செழியன் என்று இக்கவிஞர்கள் தங்கள் புதிய வரிகளோடு புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து செயலாற்றுவது பிடித்திருக்கிறது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.


-நாளை பேசுகிறேன்.