Wednesday, November 9, 2011

தொடர் - 14



படித்து முடித்து, வேலை கிடைக்காமல் அலைந்த காலமது. வெயில், மழை எதுவாயினும், எப்போதும் மனப்புழுக்கத்தில் கிடந்த நாட்கள் அவை. ‘வாயில் வைக்கும் ஒரு பிடி சோறும் நமதில்லை’ என மனது சொல்லும். இதிலிருந்து தப்பிக்க, எங்காவது போய்க்கொண்டே இருப்பேன்.

திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில், ‘வேளானந்தல்’ என்றொரு சிற்றூர். அதற்கும் அப்பால், இரண்டு கிலோ மீட்டரில் வியாபித்திருக்கும் திப்பக்காட்டிற்கிடையில், ஆளரவமற்ற அந்த ரயில்வே ஸ்டேஷன். அதில்தான் என்னை நவீன இலக்கியத்திற்கு கொண்டுவந்த என் நண்பர் உதயசங்கருக்கு, உதவி ஸ்டேஷன் மாஸ்டர் வேலை. அந்த வேலை கிடைப்பதற்கு முன்பான பத்தாண்டுகளில் அவர் பட்ட ரணங்களை, பக்கம் பக்கமாய் எழுதித் தீர்க்கிறார் இன்னமும். அது, தீராதப் பக்கங்கள்.


இரவு பகல், நேரம் காலம் என்றெல்லாம் எந்த தடையுமில்லை. எப்போது தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சைக்கிளை எடுத்துக்கொண்டு, தனியாகவும் சில நேரங்களில் நண்பன் கருணாவோடும், தண்டவாளத்தை ஒட்டிய காட்டு வழியே, எந்த கேள்வியுமற்று போய்க்கொண்டிருப்பேன். திசை தவறியப் படகொன்றில், உணவும் நீரும் தீர்ந்துபோன கணத்தில், தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சக் கீற்றுபோல, எங்களைப் பார்த்து உதயசங்கர் அடையும் பரவசத்தை இங்கிருந்தே உணரமுடியும். மனமொழியை உடல் மொழி அறிய, ஏது தடை?

யாருமற்ற அனாதையான அந்த ரயில் நிலைய குவார்ட்டர்சில், உறக்கமின்றி, பசி மறந்து நாங்கள் பேசித் தீர்த்த நாட்களின் உரம், இன்னமும் என்னில் இரண்டு புது இலைகளைத் துளிர்க்கச் செய்து கொண்டேதான் இருக்கிறது. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் ஒரு அழகிய கறுப்பு வெள்ளை போட்டோகிராபி அட்டைப்படத்துடன், அவர் மேசைமீது கிடந்த புத்தகத்தை கையில் வைத்து மெதுவாக வருடிக் கொண்டிருந்தேன்.

உதயசங்கர்மென் சிரிப்பினூடே,

‘‘பிரிச்சுப் பாக்கணும்னு தோணலியா’’என்றார்.

‘‘இல்லை ஷங்கர், கையில வச்சுக்கணுன்னு மட்டுந்தான் தோணுது.’’

‘‘வீட்டுக்கு எடுத்துட்டு போய், படிச்சிட்டுத் தா’’

அப்புத்தகத்தை சைக்கிள் கேரியரில் வைக்க மனமின்றி, சட்டைக்குள் நுழைத்து எடுத்துவந்த ஸ்பரிசம், இன்னும் நினைவில் உண்டு.

அன்று வழியிலேயே மழை வந்தது. மழைத்துளி படாமல் அப்புத்தகத்தைக் காத்துக்கொண்டு வந்து வீடு சேர்ந்தபோது, இருட்டியிருந்தது.

தொடர் வாசிப்பு என்பது எல்லாவற்றிலிருந்தும் தப்பித்தலுக்கான ஒரு சிறந்த வழி என்பதைத் தெரிந்து வைத்திருந்தேன். அன்றிரவு, ‘வெயிலோடு போய்’ ச.தமிழ்ச்செல்வன் என்று தலைப்பிட்ட அப்புத்தகத்தை வாசித்த அனுபவமே ஒரு மகத்தான புனைவு. அதில் ‘பாவணைகள்’ என்றொரு கதை.

அநேகமாக அதுதான் அத்தொகுப்பின் முதல் கதை. ‘‘அவன் இரு கால்களையும் சப்பணம் கூட்டி உட்கார்ந்துப் பார்த்தான். கால்களை மடக்கி கைகளை முன்பக்கம் நீட்டி உட்கார்ந்தான். குத்து காலிட்டு உட்கார்ந்தான். எப்படி உட்கார்ந்த போதும் பசித்தது...’’

இவ்வரிகளைத் தாண்ட முடியவில்லை என்னால். ஏதோ ஒரு முரட்டுக் கை, என் சட்டையைப் பிடித்திழுக்கிறது பின்னுக்கு. திமிறுகிறேன், முடியவில்லை. ‘‘எப்படி உட்கார்ந்தபோதிலும் பசித்தது.’’ ஒட்டுமொத்த பசியின் பொருட்டெழுந்த மானுட கூக்குரலும் அந்த இரவில் என் வீட்டு வாசலில் கேட்கிறது. ஒரு தமிழ் வார்த்தை என் மென்னியைப் பிடித்திருக்கிறது. எப்படித் திமிறியும் அதிலிருந்து தப்பிக்க முடியாமல் கிடந்த இரவது. ஒரு டம்ளர் நீச்சத் தண்ணியின் பொருட்டு, வாசலில் காத்திருந்த சிறார்களின் உருவங்கள் வந்து என்னைப் பிடுங்கித் தின்றன. அந்த ஒற்றை வரி வாசிப்பினூடே, அறுத்துக்கொண்டு துக்கம் மேலிட, மூச்சுமுட்ட அப்படியே உறங்கிப் போனேன்.

இடைவெளிகளில், நான் அப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களையும் எனக்குள் கொண்டு வந்தேன். ‘பொன்ராசின் காதல்’, ‘கறுப்பசாமியின் அய்யா’, ‘வெயிலோடுப் போய்’ என்று தென் மாவட்டத்து வெயிலை வெறியோடு குடித்தேன். தீப்பெட்டி மருந்து வீச்சம் வீசும், இளம் பெண்களை நுகர்ந்தேன். சமூக அமைப்பின் மீது தீராக் கோபம் கொண்ட ஒருவனின் ஆவேசத்தை, நானும் படைப்பின் வழி அடைந்தேன். அதன்பின் பல நாட்கள் வேளானந்தல் ரயில்வே ஸ்ட்டேஷன் பக்கம் போகாமல் தவிர்த்தேன். அது தொடர்ந்து என் மன அமைதியைக் குலைத்தும், நான், அதுவரை நம்பிய அனைத்தையும் ஒன்றுமில்லாமலாக்கியும், என் சராசரி வாழ்விலிருந்து வெளியேறும்படியும் கோரிக் கொண்டேயிருந்தது.

நான் அமைதி காத்தேன். கவிஞர் சுகுமாறன் சொல்லும் ‘தற்கொலை’யில், தோற்றவனின் மௌனம் அது.

இதோ... இருள் கவியும் இத்தருணத்தில், அதிக இரைச்சலற்ற இப்புதுப் பேருந்தில், என் பக்கத்து இருக்கையில் தமிழ்ச்செல்வன். திருச்சியில் நடந்த ஒரு கூட்டம் முடிந்து, நான் திருவண்ணாமலைக்கும், அவர் திருநெல்வேலிக்கும் திரும்பவேண்டும். ஆனால், அவரோடு பயணிக்கவேண்டி நானும் மதுரைக்கே பஸ் ஏறி, அவருக்கு பக்கத்தில் உட்காருகிறேன். பேருந்தின் வேகம் எங்களை அசைக்கக்கூட இல்லை. ஜன்னலின் வழி போகும் சின்னஞ்சிறு உலகை பார்த்தபடி கடக்கிறோம். பஸ் துவரங்குறிச்சியைக் கடக்கிறது.

நான், மௌன கோடுகளை கூடுமானவரை நீட்டிக்கிறேன். அந்த இரண்டு மணி நேர பயணம்தான் தமிழ்ச்செல்வன் என்ற கலைஞனின் சொல்லப்படாத இன்னொரு பகுதியை அவருக்கு மீட்டும், எனக்குக் கடத்தியும் கொடுத்தது. ஏதாவது ஒரு வகையில், இத்தேசத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற வேட்கையில், மிலிட்டரிக்கு போனவர் தமிழ்ச்செல்வன். எல்லோரையும்போல நிறையக் கனவுகள். அத்தனையும் நிறைவேறாதக் கனவுகள். எதிர்பார்த்துப்போன எதுவுமேயற்ற அமைப்பாக இருந்தது ராணுவம்.


மாநில வாரியான, நிறம் வாரியான, மொழி வாரியான, சாதி வாரியான பிரிவுகளில், வீரர்கள் ரகசியமாய் மன ரீதியாய் பிரிந்துக் கிடந்தார்கள்.

தமிழக குக்கிராமங்களில் கிடந்த சாதியக் கழிவுகள், டெல்லிக் குளிரிலும் பெருக்கெடுத்தன. ‘மனிதர்கள் இவைகளை சுமந்து கொண்டேதான் உலகம் முழுக்க அலைகிறார்கள்’ என்பதை ஒரு கலைஞனின் நுட்பமான மனம் கண்டுபிடித்து கலங்குகிறது. வெளியில் சொல்ல முடியாத ஏதோ ஒரு துயரம், தொண்டைக்குள் இறங்காமல் நின்று கொள்கிறது.

ஒரு விடுமுறையில், தமிழ் சொந்த ஊருக்கு வருகிறார். அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக 44 உழைக்கும் தோழர்களை உயிரோடு வைத்து கொளுத்திய கோரச் செய்தி, ஒரு கலைஞனை மனச்சிதைவுக்கு கைகாட்டுகிறது. அதிலிருந்து தப்பவேண்டி, அவன் மீண்டும் ராணுவத்தை நோக்கி ஓடுகிறான்.

இல்லை. மனதின் இரைச்சல் எதன் பொருட்டும் அடங்குவதில்லை. அன்று அவருக்கு மலையேறும் பயிற்சியின் முதல் நாள். உயரம் எதுவென அறியாத அப்பனிமலையில், ஒரே நேரத்தில் ஒரு குழு ஏறிக் கொண்டிருக்கையில், இன்னொரு குழு இறங்கிக் கொண்டிருக்கிறது. தூரமறிய ஏறும் ஒவ்வொருவரும், இறங்குபவனைப் பார்த்து கேட்கிறான்...
‘இன்னும் எவ்வளவு தூரம்?’

‘தோ, கொஞ்சம் தூரந்தான்.’

இது பயிற்றுவிக்கப்பட்ட பாடம்.

எல்லா மொழிகளிலும் அவர்கள் இப்பொய்களைச் சொல்லக் கற்றிருந்தார்கள். தமிழ்செல்வன் ஒரு பிடிப்பை கைகளால் பிடித்துக்கொண்டு, அங்கிருந்து அண்ணாந்து பார்க்கிறார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, வீரர்கள் எறும்புபோல ஊர்வது தெரிகிறது. அப்பனிமலையில் நின்று அண்ணாந்த அந்நிமிடத்தில், வெண்மணி என்ற அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் எழுந்தடங்கி, சில மணித் துளிகளில் 44 பேரை கரிக்கட்டையாக்கிய தீ, சுடுகிறது. தப்பிக்க முடியாத அம்மனிதக் கூக்குரல், அப்பனிமலையின் சில்லிப்புகளை ஒன்றுமில்லாததாக்கி அவனுக்குள் கேட்கிறது.

அதற்கு மேல், ஒரு அடியும் எடுத்து வைக்காமல் அவன் அங்கேயே நின்றுவிடுகிறான். இராணுவத்தில், அடங்காமைக்கு என்ன விலை என்பது தெரிந்திருந்தும், ஒரு மரம் மாதிரி மனம் இறுகி அங்கேயே நிற்கிறான். அவனை முகாமுக்கு கொண்டு வருவதற்குள், அவன் அறை, திறக்கப்பட்டு அலசி ஆராய்ந்து, அந்தத் தமிழ் அதிகாரியின் மேடை மீது கிடக்கிறது. யாருமற்ற அந்த அறையில், ஓடாத ஒரு மின் விசிறியை பார்த்துக்கொண்டே நிற்கிறான் அவன்.

‘‘சொந்த ஊரு திருநெல்வேலியோ’’

‘‘இல்லை, கோவில்பட்டி’’

அதிகாரி, கையிலிருந்த ‘விடியல்’ என்ற பத்திரிகையைத் தூக்கிப்போட்டு உணர்வில்லாத குரலில் கேட்கிறார்.

‘‘இந்தப் பத்திரிகையை எப்போ வாங்கின?’’

‘‘லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்போ’’

விசாரணையின் இறுதியில், தன் வாழ்வின் மீது ஊற்றப்போகும் ஆசிட் பாட்டிலின் நெடி அவ்வறையில் வியாபித்திருந்ததை அவன் அறிந்தேயிருந்தான். மலையின் மீது ஒரு அடியும் எடுத்து வைக்க மறுத்தபோதே, பின் விளைவுகளும் தெரிந்தே இருந்தன. சில நேரங்களில் எதிர்பாராததுகள் நிகழ்ந்துவிடும்தானே. யூகித்த எல்லாமும் ஒன்றுமில்லாமல் முடிந்து, தேவதைகள் கையில் பூங்கொத்துகளால் எதிர் வருவார்கள்தானே. அந்தத் தனியறையில், தமிழ்ச்செல்வனுக்கு அது நிகழ்ந்தது. அந்த இராணுவ வீரனின் ஆவேசத்தை அந்த தமிழ் அதிகாரி அரைகுறையாய்கூட அல்ல, எதிர்மறையாய் மொழிபெயர்த்தார். விசாரணை முடித்த அவரின் முரட்டு கைக்குலுக்கலில், ஸ்நேகம் ஸ்பரிசித்தது.

‘‘இங்க வேணாம், ஊருக்கு போயிடு’’ என இவர் யூகித்ததையே அவரும் சொன்னார். அறையைவிட்டு வெளியேறிய ஒரு அவசர நிமிடத்தில், ‘‘புதுமைப்பித்தன்தான் டேய் எனக்கும் ஆதர்சம்’’ என்ற வார்த்தை தனக்கு அரைகுறையாய் கேட்டதாக, தமிழ் என்னிடம் சொல்லி முடித்தபோது மதுரை மாட்டு தாவணியில் எங்கள் வண்டி நின்றிருந்தது.

‘சிறுகதை எழுதுபவரை, பயிலரங்குகள் மூலம் பயிற்றுவித்துவிட முடியும்’ என நம்பிய காலமது. சாத்தனூர் அணையிலிருந்து இறங்கும் நீர். எங்களை சலசலத்துக் கடந்துபோகும் ஒரு காட்டாற்றங்கரையில் இருபது முப்பது பேர் மௌனமாய் உட்கார்ந்திருக்கிறோம். நீரின் சப்தம் நீருக்குள்ளேயே விழுந்து கரையும் நீரின் பயணம் அது.

எங்கிருந்து துவங்குவதென தெரியாமல், நீண்ட நேரம் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார் தமிழ்செல்வன்.

‘‘ஒரு வார்த்தை கெடைக்கலையேடா’’

ஒரு கவளம் சோறு கெடைக்கலையே என்றழும் ஒரு எத்தோப்பிய குரலைத் தாண்டியது அது.

‘‘பரவாயில்லைண்ணா, இன்னொரு கேப் கொடுத்தறலாம்.’’

‘‘வேணாம். எத்தனை கேப் கொடுத்தாலும் நான்தானே மறுபடி ஆரம்பிக்கணும்?’’

‘‘இசக்கிமுத்து எட்டு வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் வீட்டுக்கே திரும்பி வர்றான். வெள்ளையம்மா நெறை மாசமா இருந்தப்போ வீட்டைவிட்டு ஓடினது. இப்போ பையனுக்கு எட்டு வயசு. தன் புள்ளைய மொத மொதலா பாத்த இசக்கி முத்துக்கு...’’

அவரால் தொடர முடியவில்லை. நாங்கள் யாரும் எதிர்பார்க்காமல் உடைந்தழுகிறார். அக்கூட்டத்திலிருந்து எழுந்த கோணங்கி, ஒரு மர மறைவிற்கு அவசரமாய் நகர்கிறான். நீண்ட நேர இடைவெளிக்கப்புறம், அவரே அறுந்த இடத்திலிருந்து தொடர்கிறார்.

‘‘எட்டு வருஷமா சம்பாதிச்சி என்னத்தையா கொண்டு வந்தே’’ இருட்டில் வெள்ளையம்மாவின் குரல் மட்டுமே கேட்கிறது அவனுக்கு.

‘‘வந்தன்னிக்கே கேக்க வேணாமா வெள்ளையம்மா?’’

அவன் கொண்டுவந்திருந்த ட்ரங்க் பெட்டியை, அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் திறந்து, ‘‘முப்பத்தியேழு ரூவா, நாப்பது பைசா’’ என பெரும் உற்சாகத்திற்கிடையே, தன் எட்டு வருட உழைப்பின் பெருமிதத்தை சொல்கிறான் இசக்கிமுத்து.

வெள்ளையம்மாவின் முகம் ஆவேசமடைகிறது. இந்த முகத்தை சகிக்க முடியாமல்தானே எட்டு வருஷத்துக்கு முன்னால், அவன் ஓடினது.

அவன், அவளை நோக்கி அந்த அரிக்கேன் விளக்கொளியில் தன் இரு கைகளையும் விரித்துக் காண்பித்தான். கைகள் இரண்டும் முண்டும் முடிச்சுகளுமாய் காப்பு காய்ந்திருக்கின்றன.

‘‘நான் எட்டு வருசமா மூட்டைத் தூக்குனேன், வண்டி இழுத்தேன், பரோட்டா சுட்டேன்...’’ அவன் வேலைகளை அடுக்கிக் கொண்டே போகிறான்.

‘‘ஆனா, ஏன் எங்கிட்ட காசு இல்லன்னு தெரியலை வெள்ளையம்மா.’’

தமிழ்ச் செல்வன் கைகளை விரித்துக் காண்பிக்கிறார். அவர் கைகளில் காய்பில்லை. ஆனால், பொங்கியெழுந்த அந்த கணக் கண்ணீரில், மனம் முழுக்க காப்பு காய்த்திருந்ததை எங்களால் உணர முடிந்தது. எத்தனை முயன்றும் அவரால் அன்று ‘கருப்பசாமியின் அய்யா’ என்ற அக்கதையை முழுக்கச் சொல்ல முடியவில்லை. கதையின் மிச்சத்தை, ஓடும் அந்நதி நீரில் கரைத்துவிட்டு நாங்கள் திரும்பினோம்.

நீரின் சுழிப்புபோல, தன் போக்கில் படைப்பின் உச்சத்திலிருந்தபோது, தமிழ்ச்செல்வனின் வாழ்வு மடை மாற்றப்பட்டது. அறிவொளிக்குப் போனார். தன், ஜனங்களின் சுவாசத்தை அருகிலிருந்து அருந்தின காலம் அது அவருக்கு. இங்கே சிறு பத்திரிகைகளில், வார்த்தைக்கும், வரிக்கும், இசத்துக்கும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தபோது, இவர் தன் தொலைதூர கிராம மனிதர்களின் கைப்பிடித்து ‘அ, ஆ’ எழுதச் சொல்லிக் கொடுத்தார்.

இதுவரை நம்பிக் கொண்டிருந்தவைகள், அந்த எளிய மனிதர்களின் முன் பொலபொலவென உதிர்ந்தன. அவர்களுக்கான கதை சொல்ல முடியாமல், டால்ஸ்டாயும் அசோகமித்திரனும் திணறினதை உணர்ந்து, அவர்கள் படைப்பை மக்களுக்கானதாய் மறு படைப்பாக்கினார். எப்போதும் இளசுகளால் சூழப்பட்டிருந்தார். ‘இலக்கிய அரசியலற்ற அந்நாட்களே, தன் வாழ்வின் உன்னதம்’ என அவைகளை நினைவுகூர்கிறார்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, அவர் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின்’ பொதுச்செயலாளர் ஆனார். அதுவரை அவர் அடைகாத்த படைப்பு, அன்றிரவு அவர் கையிலிருந்து ஒரு பாம்பு மாதிரி நழுவினாலும், ‘ஒரு களப்போராளி எதையாவது பலி கொடுத்துதான் களத்தில் நிற்கவேண்டும்’ என்று அவர் அறிந்திருந்ததால், அக்கசப்பை உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டார். ஆனாலும் படைப்பிழந்து நின்ற அத்தலைமை, வரலாற்று சோகம்.

-நன்றி மீடியா வாய்ஸ்

7 comments:

  1. அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத்தொகுப்பான ‘மிதமான காற்றும் இசைவான கடலலையும்’ வாசிக்கும் போது என் பால்யத்திலிருந்து இன்று வரையிலான வாழ்க்கையை சில கதைகளின் ஊடாக பார்த்தேன். பெரும்பாலான கதைகள் நம் வாழ்விற்கு நெருக்கமாகவோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையை போலத்தான் இருக்கின்றன. சில கதைகள் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிணக்குகளை பேசுகின்றன. சில கதைகள் சாதியின் கொடுமைகளை உக்கிரத்தோடு உணர்த்துகின்றன. பெரும்பாலான கதைகள் கந்தகபூமியின் வெப்பத்தை உமிழ்கின்றன. குறைகளோடும், வலிகளோடும் மெல்லிய நம்பிக்கையோடு வாழும் நம் அன்றாட வாழ்வைத்தான் அதில் உள்ள முப்பத்திரண்டு கதைகளும் பேசுகின்றன. மிக அற்புதமான கதைகள். கருப்பசாமியின் அய்யாவும் எங்க அய்யாவும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் எனும்போது இன்னும் ச.தமிழ்ச்செல்வனின் எழுத்து மனதுக்கு நெருங்கி வந்தது. அற்புதமான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த தலைவனின் மறுபக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  4. எனக்கு மிகவும் பிடித்த தலைவனின் மறுபக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  5. உங்கள் பதிவை படித்தபோது 20 வருடங்களுக்கு முன் உதயஷங்கர் அவர்களை விருத்தாசலம் ரயில்வே குவார்டர்ஸில் நண்பன் கணேசனுடன் சந்தித்து பேசிய நினைவுகள் வந்து போகிறது.

    ReplyDelete
  6. // ஒரு அழகிய கறுப்பு வெள்ளை போட்டோகிராபி அட்டைப்படத்துடன், அவர் மேசைமீது கிடந்த புத்தகத்தை// வெயில்,புழுதி, தெரியும் ஒரு கிராமச்சாலையில் மாட்டுவண்டியை தொடரும் குடம் சுமக்கும் பெண்ணும் குழந்தைகளும் என அவர்களை போகவிட்டு எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப்படம் அதன்பிறகு அப்படி ஒரு அட்டைப்படம் காணக்கிடைக்க வில்லை.வெயிலோடு போய் தொகுப்பில் ”பிரக்ஞை” சிறுகதை எனக்குப் பிடித்தது.

    ReplyDelete
  7. "நதி நீரில் மிதக்கும் புல்லாங்குழல்" இந்தத் தலைப்பே என்னை வெகு நேரம் யோசிக்க வைத்தது. காற்று உள்புகுவதற்கு பதிலாக தண்ணீர் புகுந்த புல்லாங்குழல் என்ன இசை எழுப்பும்? This line indeed has a pluriverse of meaning. மனதை யோசிக்க வைத்த எழுத்துக்கு நன்றி.

    ReplyDelete