Wednesday, November 16, 2011

தொடர் - 15


இல்லையென்றாலும் எழுந்துதான் இருப்பேன். தொடர்ந்து ஒலித்த பாடல், அதைத் துரிதப்படுத்தியது. தூக்கக் கலக்கத்தில், அழைத்தது யாரென்றுகூட பார்க்காமல் போனை காதுக்குக் கொடுத்தேன்.

‘‘குட்மார்னிங் பவா’’

பழக்கப்பட்டிருந்த அக்குரல், என் மிச்ச தூக்கத்தைத் துடைத்தது.

‘‘சார்... எப்டி இருக்கீங்க? என்ன காலையிலேயே?’’

‘‘பவா, எனக்கு அடுத்த வாரம் புதன், வியாழன் படப்பிடிப்பில்ல. திருவண்ணாமலைக்கு வரட்டா? உங்க ஃபிரண்டோட காலேஜ்ல, பிலிம் பத்தி ஒரு சின்ன ஒர்க்ஷாப் நடத்தித் தர்றேன்.’’
‘‘கண்டிப்பா சார், இப்பவே கூப்டுறேன்’’

முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கிடைக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, தன் ஓய்வு நாளை இப்படி திரைப்பட மற்றும் சமூக மேம்பாட்டிற்கு சமர்ப்பிக்க, நம்மில் எத்தனை நடிகர்கள் தயாராயிருக்கிறார்கள்?

அப்போதுதான் தெய்வத்திருமகள் பார்த்து, நாசரின் மிகையற்ற நடிப்பில் மனம் லயித்திருந்தேன். என்னென்னவோ எண்ணங்கள் என்னை அலைக்கழித்தன. ஒரு அசல் கலைஞனுக்கான, தெளிவற்ற சிந்தனைகளிலேயே அவர் எப்போதும் சுழன்று கொண்டிருப்பதாகத் தோன்றும். ‘பீமா’ என்றொரு படத்தில், பிரகாஷ்ராஜ் செய்ய நினைப்பதையெல்லாம் விக்ரம் செய்து முடித்திருப்பார். ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் மிகுந்த உணர்வு வயப்பட்டு,

‘‘யாரு சாமி இவன்? எங்கிருந்து வந்தான்? இவன் யாரோட மிச்சம்?’’ எனத் துள்ளும் ஒரு காட்சி உண்டு.

அத்துள்ளல் கொண்டாட்டம் சம்மந்தபட்டது. உள்ளுக்குள் பொங்கும் பெருமிதப் பொங்குதல் அது. அது இடம், தகுதி, அந்தஸ்து, வயது எல்லாவற்றையும் துடைத்தெறிந்து, மனிதனை ஒரு குழந்தையைப்போல் நிர்வாணப்படுத்தி, மழையில் ஆனந்த களியாட வைக்கும். இரண்டு, மூன்று இலக்கிய கூட்டங்களின் கடைசி வரிசைகளில், நாசரின் கூர்ந்த கவனித்தலின்போது, ஏறக்குறைய நானும்கூட இப்படி ஒரு மனநிலைக்கு வந்திருந்தேன்.

‘யார் இவர்? இவர் எப்படி தமிழ் சினிமாவின் வரம்புகளை மீறி சாதாரணத்துக்கு முயல்கிறார்?’ என் இந்த எளிய கேள்விகளுக்கான பதில், அவரின் தொடர் வாசிப்பு. அது நம்மை தொடர்ந்து கழுவுகிறது. கீழிறங்கி வர வைக்கிறது. ‘நீ ஒண்ணும் பெரிய ஆள் இல்லை’ என, சதா நம் ஒவ்வொரு நிமிஷங்களிலும் எச்சரிக்கிறது.

என் முதல் சந்திப்பின்போது, நாசர் சொன்னார்.

‘‘அதற்கு முன் ஒன்றிரண்டு படத்தில் நடித்திருந்தால்கூட என் முதல் படம் ‘நாயகன்’தான். காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, மனமும் உடலும் பரவசமாக, வரப்போகும் வண்டிக்கு காத்திருந்தேன். குறைந்தபட்சம் ஒரு அம்பாசிடரை எதிர்பார்த்திருந்த என் முன், வந்து நின்றது ஒரு பழைய மெட்டடார் புரடெக்ஷன் வேன். பின்பக்க கதவு திறந்து உள்ளே நுழைந்தபோது, குப்பென்று ஒரு துர்நாற்றம். சமீபத்தில்தான் அந்த வாடையை நுகர்வுற்றிருந்தேன். அது, அசோகமித்ரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் சொல்லப்பட்டிருக்கும் அதே புரெடக்ஷன் வேன் நாற்றம்.

என் அன்றைய மனநிலையில், நான் அதை விலை மதிப்பற்ற வாசனை திரவியங்களின் சுகந்த மணமாக உணர்ந்தேன். துணை நடிகர்களுக்கான உடைகள், எங்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது. எனக்களிக்கப்பட்ட போலீஸ் உடையுடன் நான் ஆளுயரக் கண்ணாடி முன் நின்றபோது, அது தொளதொளவென்று முப்பது வருடத்திற்கு முந்தைய தமிழ்நாட்டு கான்ஸ்டபிளை காண்பித்தது. ஆனால், நான் அப்படத்தில் டெல்லி மாநகரின் அசிஸ்டெண்ட் கமிஷனர்.

கண்கள் லேசாக கலங்கினாலும்கூட, வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து நின்றிருந்தேன். ‘மனதில் உறுதி வேண்டுமென’ பாரதி உரம் தந்தான்.

பத்து நிமிடத்திற்குள் அங்கு வந்த இயக்குநர் மணிரத்னம், என் உடையைப் பார்த்து அதிர்ந்து, புரடெக்ஷன் பக்கம் திரும்பி, ‘‘இவர் டெல்லி கி.சி.யா, இப்படி ஒரு தொள தொளன்னு, கான்ஸ்டேபிளுக்கான டிரெஸ் மாட்டியிருக்கீங்க.’’ என்றார்.

அடுத்த நாள் காலை, எனக்கென பிரத்யேகமாக தைக்கப்பட்ட டெரிகாட்டன் காக்கி உடை, ஷூ என என்னை நானே கம்பீரமாக உணர்ந்த நிமிடம் அது. அந்நிமிடம், வாழ்வின் எல்லாத் துயரும் தீர்ந்தது போலவும், இனி பெண் தேவதைகள் என் வழியை செப்பனிட்டு காத்து நிற்பார்களென்றும், அசாத்தியமான நம்பிக்கை எதன் பொருட்டோ என்னை வந்தடைந்தது.

அப்படத்தில் என் நடிப்பிற்கான ஊதியமாக ஐந்தாயிரம் ரூபாய் பெற்றேன். அக்கரன்சித்தாள்களை இப்படியும் அப்படியும் ஸ்பரிசித்து ஸ்பரிசித்து, அதை எனக்குப் பழக்கினேன். உற்சாகம் மேலிட ஒரு அரை மணி நேர சைக்கிள் மிதிப்பில் என் நண்பன் கிரியை அடைந்தேன். கிரியின் தோள் பற்றி, எதற்கென தெரியாமலே இருவரும் அழுதோம். ‘துயரம் சுமந்த வாழ்வு இனி நமக்கில்லை’ என ஆனந்தத்தின் சிதறல் அத்துளிகள்.


அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பாட்டில் பீரோடு ஆற்காடு பிரியாணி ஹோட்டலில் எதிர் எதிர் இருக்கைகளில் அமர்ந்து, பேச்சற்று இருந்தோம் நானும் கிரியும். நீரும், உணவும் எங்களை வெகுநேரம் மறுதலித்துக் கொண்டேயிருந்தது. மனது நிறைந்து வயிற்றையும் நிறைத்திருந்தது. ‘பசிக்கு உணவு மட்டும் ஒருபோதும் போதாது’ என்பதை அக்கணத்தில்தான் பவா மனது உணர்ந்தது.’’

நான் படித்த டேனிஷ் மிஷன் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக, தமிழின் புகழ்பெற்ற 12 ஆளுமைகளை ஒரே நாளில் வரவழைத்து, அவர்களின் பள்ளிப் பருவ நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வைத்தோம். அதில், நாசரின் உரை, நான் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே எதிர்பாராதது. ஒரு தேர்ந்த கல்வியாளனின் சமூக அக்கறையும், எதிர்கால கல்வி பற்றிய கனவுகளும் தோய்ந்த, ஒரு கலைஞனின் பெருங்கனவு அது.

அந்நிகழ்வில் மாணவர்கள் அவரை மொய்த்துக் கொண்டார்கள். ஒரு நடிகனை தொட்டுப் பார்க்கவும், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், ஆட்டோகிராப் வாங்கவும் மீன் குஞ்சுகளைப் போல துள்ளல்களால் அப்பாதையை அவர்கள் நிறைத்தார்கள். மாணவர்களின் சந்தோஷத்தை எப்போதும் எதன் பொருட்டும் சகித்துக் கொள்ள முடியாத இரண்டு ஆசிரியர்கள், கையில் பிரம்போடு வந்து அவர்களின் அந்நிமிட பரவசத்தைக் கலைத்தார்கள். மாணவர்கள் கலைந்து போனபின், கையில் ஒரு நோட்புக்கோடு,

‘‘சார் ஆட்டோகிராப்’’

‘‘இப்ப நீங்களும் அவங்க செஞ்சதையேதானே செய்யறீங்க. அதுக்காக அவங்கள ஏன் துரத்தறீங்க? கொஞ்சமாவது மாறுங்க சார்’’ என்ற அவரின் குரலில், ‘மாறாதவர்கள் அவர்கள்’ என்ற பல வருட அவதானிப்பிருந்தது.

நம், மரபான விஷயங்கள் எதன் மீதும், வெறும் ஆர்வம் மட்டுமின்றி அக்கறையும் கொண்ட மனிதர் நாசர்.

‘‘பவா, செஞ்சியிலிருந்து விழுப்புரம் போற வழியில், அனந்தபுரம்னு ஒரு ஊர்ல இருக்கேன். இங்க பழமையான நெற்குதிர்கள் கேட்பாரற்று கெடக்கு. யாரையாவது அனுப்பி இரண்டு மூணு எடுத்து வச்சி பத்திரப்படுத்துங்க’’ என்பது மாதிரியான தொலைபேசி செய்திகள், எந்த நேரத்திலும் என்னை வந்தடையும். ‘இது வெறும் ஆர்வம்’ என ஒற்றை வரியோடு விட்டுவிட முடியாது.

பரபரப்பும், புகழும், செல்வமும், அதன்பொருட்டெழும் பெருமிதத்தையும் தாண்டிய நம் வேர்கள் பற்றிய அக்கறை அது. ‘தமிழ் சினிமாவில் மின்னும் எத்தனை நட்சத்திரங்களுக்கு இதுபற்றிய அக்கறை உண்டு?’ என்ற கேள்வி நமக்கு எழாமலில்லை. நம் மரபான தெருக்கூத்தின் மீது அவருக்கிருந்த ஈர்ப்பு, ‘அவதாரம்’ வரை கொண்டு போனது. ‘அவர் மனது நினைப்பதை, திரைக்கு மாற்ற முடியவில்லையோ?’ என்ற பதட்டம், அவருடைய ஒவ்வொரு புதுப்படைப்பின்போதும் என்னைப் பற்றிக்கொள்ளும்.

‘தேவதை’யின் முதல் இருபது நிமிடங்களின் அசாத்திய காட்சிகள், ‘நாசர், ட்ராஸ்கி மருது’ என்ற இரு கலைஞர்களின் பெருங்கனவில் ஒரு துளி வெளிப்பாடு மட்டுமே. அம்மனநிலையை, அப்படத்தின் இறுதிவரை தக்க வைத்துக்கொள்ள முடியாமல், ஏதோ ஒன்று அவரை தொடர்ந்து சிதைக்கிறது. இரவும் பகலும் கண்விழித்து, அதீத வெளிச்சத்தில் அரிதாரம் பூசி, பேசிக்கொண்டு வரும் பொருட்கள், அவருடைய புதிய படைப்பு முயற்சிகளின்போது காணாமல் போய்விடுவது குறித்த வருத்தம் எதுவும் இல்லாத நண்பர்களாகத்தான் நாசரையும், கம்மீலாவையும் எப்போதும் நினைக்கிறேன்.

தான், விரும்பித் தேர்ந்தெடுத்த துறையின் உச்சத்தை எட்டுவதுதான் லட்சியம் எனினும், அதைத் தாண்டிய பல சமூக நிகழ்வுகளில், எப்போதும் ஆர்வமும் அக்கறையுமுள்ள பெரும் பயணம் நாசருடையது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் பல நேரங்களில் கட்டட மேஸ்திரிகளோடு நீங்கள் அவரைப் பார்க்கலாம். ‘சம்மந்தமே அற்ற துறைகள்’ என்று எதுவுமில்லை. மனித வாழ்வு என்பதே, கண்ணுக்குத் தெரியாத ஏதோ சில உணர்வுக் கம்பிகளின் இணைப்புதானே?

புகழ்பெற்ற கட்டடவியலாளர் ‘லாரி பெக்கர்’ அவர்களின் மாற்று கட்டிட வடிவமைப்பில், பெரும் நம்பிக்கையுள்ளவர் நாசர். ஒருமுறை, மகாத்மா காந்தியை அவரின் சபர்மதி ஆஸ்ரமத்தில் சந்திக்கிறார் லாரிபெக்கர். ‘இவர் ஒரு மிகப்பெரிய ஆர்கிடெக்ட்’ என்கிற அறிமுகத்துடன் நிகழும் அந்த ஓரிரு நிமிட சந்திப்பில், காந்தி அவரை நோக்கி,

‘‘நல்ல கட்டடம் என்பது எது?’’

‘‘நீங்க என்ன கேக்கறீங்கன்னு புரியலை.’’

‘‘ஒரு நல்ல கட்டடம் என்று, எதைச் சொல்வீங்க?’’

அப்படியும் புரியாமல் லாரிபெக்கர் விழிக்க காந்தியே தொடர்கிறார்...

‘‘எந்தக் கட்டடம் கட்டப்படுவதற்கு போக்குவரத்து தேவைப்படவில்லையோ, அதுவே ஒரு சிறந்த கட்டடம்.’’

‘‘இன்னும் கொஞ்சம் விளக்கமாக...’’

‘‘எந்தப் பிரதேசத்தில் எது கிடைக்கிறதோ, அதைக்கொண்டு நம் வசிப்பிடங்கள் அமையவேண்டும். சென்னையில் கட்டப்படும் ஒரு கட்டடத்திற்கு, எதற்கு இத்தாலியன் மார்பிளும், ராஜஸ்தான் டைல்ஸும்?’’

‘இந்த ஒரு வரி, என் ஒட்டுமொத்த வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது’ என்கிறார் பெக்கர்.

நவீன கட்டடக் கலையின் நிராகரிப்பில், நாசர், பெக்கரின் தொடர்ச்சி. இதன் பொருட்டே ‘கட்டடம் கட்டும் மேஸ்திரி, சித்தாள்கள்’ என்று, பலரோடும் அவரின் நிறைவடையாத உறையாடல்கள் நீள்கிறது. விருகம்பாக்கத்திலுள்ள நாசரின் வீடே, பழமையும் கனவும் இழைந்த கட்டடம்தான். நம் நவீன வாழ்வு இழந்த ஒற்றைக் கதவுகளும், அதன் பித்தளைக் குமிழும், அதன் மீது ஒட்டியிருக்கும் ஒரு குடும்பத்தின் பாரம்பரியச் செழுமையையும், அவ்வீட்டில் நம்மை நெடுநேரம் உட்கார வைக்கும். ஒரு நவீன வீட்டின் அகங்காரம், நம்மை தொடர்ந்து துரத்துவது மாதிரியில்லை இது.

தன் வாழ்வின் சுழற்சியில், நம் மரபில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவையும் தக்கவைக்க, ஒரு சிறு முயற்சியை எப்போதுமே தன்னிலேயே வைத்திருக்கும் கலைஞன் அவர்.

‘‘அவதாரம்’ படம் மூலம், நான் அடைந்த அனுபவங்களின் முன், என் பொருளிழப்புகள் ஒன்றுமில்லை பவா. ஈர மண் மாதிரி, பசுமையான மனிதர்களை வட தமிழ்நாடெங்கும் அள்ளி அணைத்தக் காலங்கள் அவை. செய்யாறுக்குப் பக்கத்தில் ஒரு கூத்து வாத்தியார். எழுபது வயதிருக்கும். என் படத்திற்குத் தேவை என்பதால், எங்களுடனே வைத்துக்கொண்டோம். அவர் எப்போதுமே என்னை ஒருமையில்தான் அழைப்பார். படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் திரளான மனிதர்கள் மத்தியில்

‘‘தே, நீ இன்னா எத்தினி தபா சொன்னாலும், தப்பு தப்பா பண்ற’’ என்று, அக்கூத்து வாத்தியார் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரின் உதவி இயக்குநர்கள், பல தடவைகள் பல மொழிகளில், ‘‘அப்படிச் சொல்லாதீர்கள்’’ என உணர்த்தியும், புரிந்து கொள்ளாத அவரிடம், ஒரு முறை கடுமையாக கோபித்துக் கொண்டார்கள்.


தாங்கிக் கொள்ள முடியாத ஒரு கணத்தில் அவர் வெகுண்டெழுந்து, ‘‘அப்பிடி என்னப்பா தப்பா சொல்லிட்டேன்? அவரு, இவருன்னு மனசு நிறைய மரியாதையை வச்சிக்கிட்டு, வாயில வரும்போது பழக்க தோஷத்துல இப்படி வருது. நான் இன்னா பண்ண...?’’ என கலங்கியதைப் பார்த்து, அவரை தன் தோளில் அணைத்து, ‘‘நாங்கள் உங்களின் மிச்சம்’’ என உணர்வு வயப்பட்ட நாசரை, அப்படப்பிடிப்பின்போது குவிந்திருந்த மனிதர்கள் மட்டுமின்றி, என்னைப்போல தொலைதூரத்திலிருந்து பார்க்கும் நண்பர்களும் அறிவோம்.

10 comments:

 1. Wow! Arumaiyaana velippaadu. Miga ariya nalla oru kalaignar. Nanri.

  ReplyDelete
 2. பவா அவேர்களே! நாரதகான சபாவில் நாடக விழா.நாசர் அவர்களும் வந்திருந்தார்கள்.வெகு நேரம் பெசிக்கொண்டிருந்தார்கள்.அவருடைய "தேவதை" பற்றி பெசினேன்.மூன்றுபக்க கடிதம் எழுதியிருப்பது பற்றி குறிப்பிட்டேன். இங்கிரிட் பெர்க்மென் படங்களை விழுந்து விழுந்து பார்க்கும் elitist தமிழர்கள் எங்கே போனார்கள் என்று கோபமாக கடிதத்தில் கேட்டிருந்தேன். என்பதை சொன்னேன் .கை குலுக்கி விடை பெரும் பொது கடிதத்தை எப்படியாவது தேடிப்படிக்கிறேன்.என்றார்." அவதாரம்", "தேவதை" போன்ற படங்களை எடுக்க 'தில்" வேண்டும்.---காஸ்யபன்

  ReplyDelete
 3. உங்களிடம் பழகுகிற மனிதர்கள் , பிரபலங்கள் பற்றி நீங்கள் சொல்லும் அழகு வாசிப்பவர்களுக்கு கார்த்திகை தினம் தான் . . பிரமாதமாய் சொல்ல முடிகிறது.

  ReplyDelete
 4. படிக்க படிக்க நாசர் அவர்களின் இயல்பை அப்படியே உணர முடிகிறது..

  பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 5. மும்பை நகர கமிழ்னர் பவா...

  ReplyDelete
 6. மிகையற்ற பகிர்வு.

  மனிதன் தொழில்களாலும், பதவிகளாலும் மாறிப்போகிறான்.

  அவன் அவனாகவே இருக்க பழகிக்கொள்வது யாரோ சிலருக்கு தான் வாய்க்கிறது.

  நாசர் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

  ReplyDelete
 7. நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர்கள் திரைப்படத்தை தாண்டியும் நான் ரசிக்கக்கூடியவர்கள். இன்னும் சில பேர்கள் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 8. தன் நடிப்பில் ஒரு ஆர்ப்பட்டமில்லாத முத்திரை பதிப்பவர் நாசர்.எல்லாப்படங்களிலுமே தனக்கென ஒரு தனி style ம் அந்த character க்கு ஒரு waitம் அதை கவனிக்கவும் செய்ய முடியும் அவரால்.

  உண்மைதான் என்ன material அருகாமையில் கிடைகிறதோ அதைக்கொண்டு அமைக்கப்படும் கட்டிடமே சிறந்தது.

  நடிப்புதாண்டிய சமுக சிந்தனை அவரை ஒரு நல்லமனிதராக அடையாளம் காட்டுகிறது.

  ReplyDelete
 9. தங்கள் தொழிலையும் தாண்டி சமுதாய சிந்தையுடனும் அக்கறையுடனும் சிலராலும் சிந்திக்கவும் செயல்படவும் முடிகின்றது. திரு நாசர் அவர்கள் அப்படிப்பட்ட ஒருவராய் இருப்பதினாலேயே இவ்வாறு பதிவு செய்யப்படுகின்றார். வாழிய அவர்தம் சிந்தையும் செயலும் ... ...

  ReplyDelete