சி
25.07.2020
ஒரு கைப்பிடி மண்
“என் மண்ணோடு என்னைப் பினைத்துக் கொண்டவள்
நான். மீனைத் தண்ணீரில் இருந்து தரையில் போட்டால் எவ்வாறு துள்ளி அடங்குனே அப்படித்தான்
நானும். என் மண்ணான திருவண்ணாமலையில் இருந்து தாம்பரத்தில் சென்று கூட என்னால் வாழ
முடியாது”
- பவா செல்லதுரை. கோலாலம்பூர் உரை.
எல்லோருக்கும் வாய்பதில்லை இந்த வரம். ஒரே ஊரில் பிறந்து,
வளர்ந்து, படித்து, வேலைக்குப் போய் திருணம் முடித்து, குழந்தைகள் பெற்று… இது ஒரு
வரம். காலங்காலமாக பல்வேறு காரணங்களுக்காக
மக்கள் இடம் பெயர்ந்து கொண்டுடேதான் இருக்கிறார்கள். வாழ்வாதாரம் தேடி வட மாநிலங்களில்
இருந்து இடம் பெயர்ந்து வந்த ஏராளாமான மக்கள்
இந்த கோவிட் – 19 சூழலில் தாய்களின் சொந்த
மண்ணை நோக்கி கண்களில் நீர் வடிய கால்களில் இரத்தம் சொட்ட நடந்த நிகழ்கள்வுதான் ஒரு மனிதனுக்கும் அவன் பிறந்த மண்ணுக்குமான
பிணைப்பினை உணரவைத்தது.
ஆனால், இந்தியாவில் அதிகம் இடம் பெயர்பவர்கள் யார் தெரியுமா
பவா?
பெண்கள் தான்.
அவர்களின் இடப் பெயர்வினை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதேயில்லை.
இந்தியாவில் ஏறக்குறைய நாற்பது சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் திருமணத்தின் காரணமாக
நிரந்தரமாக இடம் பெயர்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தங்கள் பிறந்த மண்மீது நேசம்
இருக்கக் கூடாதா என்ன?
எங்கள் ஊர் பக்கங்களில் ஒரு வழக்கமுண்டு. பெண்கள் திருமணம்
செய்து புருஷன் வீட்டிற்குப் போகும் போது எத்தனை வகையான சீர் கொடுத்தாலும், தங்களுக்கு
நெருக்கமான அல்லது பிடித்தமான ஒரு பொருளை யாருக்கும் தெரியாமல் திருடிச் செல்வார்கள்.
நான் எங்களுடனே வாழ்ந்து எங்களை வளர்த்த என் அம்மாச்சியின் பித்தளை டம்ளரை அப்படியே
என்னுடன் மறைத்து எடுத்து வந்தேன்.
வேறு எதை நாங்கள் எடுத்துவர முமடியும்? நாங்கள் நேசித்த உறவுகளை,
முதுகு சில்லிட சாய்ந்து அமர்ந்து கதை படித்த கிணத்தடியை, மார்கழிமாதங்களில் போட்டி
போட்டு பெரிய கோலங்களைப் போட்ட தெரு வாசலை,
வாசலில் படர்ந்து வஞ்சனையின்றி வாசத்தை வாரி வழகின முல்லைக் கொடியை, தாய்விட்டுப் போனதால் என்னுடன்
வந்து ஒட்டிக்கொண்ட ‘சின்னு’ என்ற அந்த பூனைக்குட்டியை, இதில் எதையாவது என்னுடையது என எடுத்துச் செல்ல முடியுமா
தான்?
ஆனால் கருணாகரி என்ன எடுத்து வந்தாள் தெரியுமா பவா?
“ஒரு பிடி மண்ணை”
தான் வாழ்ந்த இலங்கை நாட்டை விட்டு அகதியாய் இந்திய மண்ணிற்குப்
புலம் பெயர்ந்த போது, தான் வாழ்ந்த வீட்டில் இருந்து ஒரு பிடி மண்ணை அவள் கையோடு எடுத்து
வந்திருந்தாள்.
கத்தோலிக்க பெண் துறவரசபை கன்னியர்கள் (கன்னியாஸ்திரிகள்)
அந்தப் பள்ளியை நடத்தி வந்தனர். அந்தப்பள்ளியின் வளாகம் மிகப்பெரியது. திரு நகருக்குள்
அவ்வளவு பெரிய இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்பதால் அது திருநகரில் இருந்து ஏறக்குறைய
ஒருமைல் தொலைவில் இருந்தது.
திருநகரின் ஐந்தாவது பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஆசிரியர்கள்
குடியிருப்பு வழியாகச் சென்று. ஒரு மலை மேட்டை கடந்து இறங்கினால், இடது புறம் இலங்கை
அகதிகள் குடியிப்பு வரும். அதைத் தாண்டிச் சென்றால் இடதுபுறம் பிரியும் சாலையில் கத்தோலிக்கச்
திருச்சபையைச் சேர்ந்த பல்லோட்டி என்ற சபையைச் சார்ந்த குருமாணவர்களுக்கான பயிற்சிக்
கல்லூரி. வலதுபுறம் புனித சார்லஸ் பள்ளி வளாகம் அந்த வளாகத்தில் ஆங்கில வழி மற்றும்
தமிழ் வழித் தொடக்கப்பள்ளிகள், ஒரு முதியோர் இல்லம், மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும்
ஒரு சிறிய மருத்துவமனையும் உண்டு.
பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வெளியே
சென்று மாணவர்களைக் கொண்டுவர அதன் ஆயுட்காலத்தினைத் தாண்டியும் இயங்கிக் கொண்டிருந்த
ஒரு பழைய பேருந்தை வாங்கியிருந்தார்கள். அதை ஒட்டுவதற்கு அதைவிட வயது முதிர்ந்த ஓர்
ஓட்டுநர் வந்து வாய்த்தார். அவர் அநேகமாக முதியோர் இல்லத்தில் இருந்து வந்திருக்கக்கூடும்
என்பதே எங்களின் கணிப்பு.
பேருந்து ஆர்.வி.பட்டி. திருப்பரங்குன்றம் வரை சென்று மாணவர்களைக்
கூட்டிவரும்.
நான் மூன்றாம் வகுப்பு ஆங்கிலம் மீடிய ஆசிரியராகப் பொறுபபேற்றேன்.
பள்ளியின் தலைமை ஆசிரியரான சிஸ்டர் செலின் மலையாளி என்பதால் மாணவர் சேர்க்கையை கவனிக்கும்
பொறுப்பு என்னை வந்தடைந்தது.
அன்று காலை பள்ளியில்
நுழையும் போதே அழகான அந்தப் பெண்ணும் அவளுடன் ஒரு சிறுவனும் அலுவலக வாசலில் அமர்ந்திருப்பதைப்
பார்த்தேன். ஆசிரியர்களைக் கண்டவுடன் எழுந்து நின்று வணக்கம் சொன்னாள் அப்பெண். அச்சிறுவனிடம்
‘குட்மார்னிங்’ சொல்லுங்க என்றாள். அவன் கூச்சத்துடன் அவள் பின்னே மறைந்து கொண்டார்.
ஆசிரியர்களுக்கான அறையில் என் பொருட்களை வைத்துவிட்டு அவர்களை
நோக்கி மீண்டும் வந்தேன். அவளுக்கு வயது இருபத்தி ஐந்து வயதிலிருந்து முப்பதற்குள்தான்
இருக்கும் என நிதானித்தேன். தூய வெள்ளை நிறத்தில், கழுத்தைச் சுற்றியும், கைகளிலும்
உடைகளின் விளிம்பிலும் ரோஜாப்பூ வேலைப்பாடுகள் செய்திருந்த முழங்காலுக்குக் கீழே கொஞ்சமாக
இறங்கி நின்ற கவுன் ஒன்றை அவள் அணிந்திருந்தாள். அந்த உடை அவளைப் பேரழகியாக கூட்டியது
சுருள் சுருளான அவளின் கூந்தலை ஒரு சிறிய சினிப்போட்டு அடக்க முயன்றிருந்தான். அது
அதில் அடங்காமல் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இன்னும் அழகு.
எல்லாவற்றையும் இழந்து, ஓடிவந்த வலியையும் களைப்பையும் மீறி,
அவள் வாழ்ந்த வளமையான வாழ்வின் அடையாளம் அவளிடம் இன்னமும் மிச்சமிருந்ததது.
அச்சிறுவனின் கன்னத்தைத்
தட்டி உன்பெயர் என்ன வென்று கேட்டேன். அவன் அவனின் அம்மாவைப் பார்த்து விட்டு கன்னங்குழிய சிரித்தான். அவள், ‘சொல்லுங்கோ” “உங்கட பெயரை அம்மாவுக்குச் சொல்லுங்கோ” என சொன்னப் பிறகு “மை நேமிஸ் நிரஞ்சன்” என ஆங்கிலத்தில் பதில் வந்தது.
ஆங்கிலத்தில் பதில் சொல்லவேண்டும் என எல்லாப் பெற்றோரையும்
போல் பலமுறை சொல்லிக் கொடுத்து கூட்டி வந்திருப்பாள் போதும்.
உங்கட அம்மா பேர் என்ன?
கருணாகரி.
இவரை ஸ்கூலில் சேர்க்க வேணும் மேடம். உட்காருங்க கருணாகரி. நான் தான் அட்மிஷன் போடனும், பிரேயர்
இருக்கு முடிச்சிட்டு வந்திடுறேன் என தற்காலிகமாக அவளிடமிருந்து விடைப்பெற்றேன்.
பிரேயர் முடிந்தபின் நான் அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்தப்
போதே அவள் நிரஞ்சனின் பிறப்புச் சான்றிதழ், பள்ளியில் படித்த சான்றிதழ் என எல்லாவற்றையும்
தயாராக வைத்திருந்தார்.
தமிழ் மீடியத்தில்தானே படித்திருக்கிறார். இங்கு தமிழ் மீடியமும்
இருக்கிறது அங்கேயே சேர்க்கலாமே என நான் கேட்டவுடன் வேகமாக அதனை மறுத்தார்.
நிரஞ்சன் அப்பா லண்டனில் இருக்கிறார். மேடம் அவர் ஆங்கிலப்
பள்ளியில்தான் சேர்க்கச் சொன்னார். எங்களை
விரைவில் வந்து கூட்டிப்போவார். நீங்க இவரை இங்கேயே சேருங்கோ, நான் பணம் கொண்டுவந்திருக்கனம்.
அவர் (நிரஞ்சன்) படித்துக் கொள்வார். டியூசன் கூட வச்சுக்கலாம் என வேகவேகமாக பதில்
சொன்னார்.
அவரின் பதட்டமான பேச்சில் எங்கே நான் சேர்க்க மறுத்துவிடுவேனோ
என்ற அச்சம் இருந்தது.
நானே விண்ணப்பத்தை நிரப்பி அவரைக் கையெழுத்திடச் சொன்னேன்.
அவரைப் போலவே அழகாக கருணாகரி எனத் தமிழில் கையெழுத்திட்டார்.
நிரஞ்சன் நீங்க இப்ப தேர்ட் ஸ்டெண்டர்கு போகிறீர்கள். உங்களோட
டீச்சர் யார் தெரியுமா? நான் தான் என்றவுடன் இருவர் முகத்திலும் மகிழ்ச்சி ஒரு சேர
வந்து போனதைக் கவனித்தேன்.
எல்லா ஆங்கிலவழிப் பள்ளிகளிலும் இருப்பது போல் அப்பள்ளியிலும்
ஒரு சட்டம் இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு
இடையேயும், சக மாணவர்கள் மத்தியிலும் இடையேயும், மாணவர்கள் மாணவர் களுக்கு ஆங்கிலத்திலேயே
உரையாட வேண்டும. தமிழிலில் உரையாடவே கூடாது.
பல நேரங்களில் புரியாமல் தவிக்கும் (எல்லா மாணவர்களும் தான்)
நிரஞ்சனிடம் நானும், என்னுடன் நிரஞ்சனும் சட்டத்தை மீறி ரகசியமாக தமிழில் கதைத்துக்
கொள்வோம்.
எங்கள் பள்ளியின் வயதான பேருந்து வயது மூப்பின் காரணமாகவோ
என்னவே வாரம் ஒருமுறையேனும் திருப்பரங்குன்றத்திலோ திருநகரிலோ அதன் விருப்பத்திற்குச் சட்டென நின்றுபோகும். மாணவர்கள் உள்ளே இருக்கிறார்கள்
என்ற எண்ணமெல்லாம் அதற்கு இருக்குமாவென்ன? காலையில் போகும்போது நின்று போனால் காண்வென்டின்
ஆல் இன் ஆல் அழகுராஜா ஆரோக்கியம் டிரவர் அவதாரம் எடுப்பார். முதியோர் இல்லப் பராமரிப்பாளர்,
எலெக்டிரியன், இரண்டு ராஜபாளையம் நாய்களைப் பரமரிப்பவர் மதுரைக்குச் சென்று பல்வேறு
பொருட்களை எனப் பல்வேறு பணிகளை ஒரே ஆளாகச் செய்யும் ஆராக்கியம் காலை வேளையும் மாலை
நேரத்திலும் இதுபோன்ற தருணத்திற்காகவே காத்திருந்தது போல் மாணவர்களை சிஸ்டர்கள் பயன்பாட்டிற்காக
வைத்திருந்த வேனில்போய் பஸ் நின்று போன இடத்திலிருந்து கூட்டிவருவார் அல்லது இறக்கி
விடுவார்.
அன்று மாலை திருநகரின் ஐந்தாவது பேருந்து நிறுத்திலேயே பஸ்
நின்று போனது. வழக்கம் போல் ஆரோக்கியம் வேனை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். பஸ்ஸில்
இரண்டாவது டிரிப்பில் தான் ஆசிரியர் மாணவர்களையெல்லாம் இறக்கிவிட்ட பின்னர் தான் ஆசிரியர்கள்
செல்ல முடியும்.
சிஸ்டர் செலினிடம் அனுமதி பெற்று நானும் இரண்டு உமா டீச்சர்களும்
(உமா என்ற பெயரில் இருவர் இருந்தனர்) என் மகள் டெனியுடன் நடந்து செல்வது என முடிவு
செய்தோம். எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குருமாணவர்கள் கல்லூரி பாதர்களின் ஜீப்
எங்களை இறக்கிவிட்டுச் செல்லும். அந்த அதிர்ஷ்டம் அன்று எங்களுக்கு வாய்க்கவில்லை. ஆனால் வேறு ஒரு அபூர்வத்தருணம் வாய்த்தது.
நாங்கள் இலங்கைத் தமிழர் குடியிருப்பை அடைந்தபோது கருணாகரியை
அவர் வீட்டின் வாசலில் பார்த்தோம். அவர் ஒரு
சிறிய மண் தொட்டியில் ஒரு ரோஜச் செடியை நடுவதற்காக மண்நிரப்பிக் கொண்டிருந்தார். அவரின்
பக்கத்தில் மூடிபோட்ட ஒரு எவர்சில்வர் டப்பா இருந்தது. அதனைத் திறந்து அதில் இருந்து
ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்ததை அவிழ்த்தார்.
“இது எங்க வீட்டு மண். இலங்கையை விட்டு வெளிக்கிடையில் மறக்காமல்
எங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்தனம்” என நேசம் மிக அந்த மண்ணை கைகளில் ஏந்திக்
கொண்டு கண்ணீர் மல்கச் சொன்னார்.
பின் அந்தத் அத்தொட்டியில் இருந்த மண்ணோடு மண்ணை கலந்தார்.
உங்க நாட்டு மண்ணோடு கலந்து இந்தச் செடியை நடுகிறோம் அம்மா,
லண்டன் போகச் நேரும்போது போல் இதில் இருந்து ஒரு பிடி மண்ணை
எடுத்துப் போவோம். இதில் எங்க தாய் மண்ணும்எங்கள்
பூர்வீகமான உங்கட தாய் மணணும் கலந்து தானே! இருக்கு.
இதைச் சொல்லும் போது அவளும் கேட்ட போது நானும் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டோம். என் குழந்தை டெனியுடன் விளையாடிக் கொண்டிருந்த நிரஞ்சன் தன் அம்மாவின்
கண்ணீரைக் கண்டவுன் ஓடிவந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
கருணாகரியின் ஒரு பிடி மண் எத்தனை நாடுகளைக் கடந்துசென்று
எந்த நிலப்பரப்பில் பரவியிருக்கிறது என்பது எனக்கு தெரியாது பவா. அந்த ஆண்டு இறுதியில் என் கணவரின் வேலை மாற்றலான
பொருட்டு நாங்கள் திருச்சிக்குச் செல்ல நேர்ந்தது. மதுரை திருநகரைவிட்டு கிளம்பும்
போது கருணாகிரிக்கு வாழ்த்தையும், நிரஞ்சனுக்கு முத்தத்தையும் தந்துப் பிரிந்தேன். அந்த ஓர் ஆண்டில் அவளிடமிருந்த இருந்த வளமையெல்லாம்
வற்றிப் போயிருந்தது.
No comments:
Post a Comment