Friday, August 14, 2020

தனசீலி அக்காவிடமிருந்து


திருச்சி
13.05.2020


“எழுத்துக்கு உயிர் உண்டு என்று அவருக்குத்தெரியும். எழுத்துக்குக்கை, கால், காது, இதயம் எல்லாம் இருக்கிறது.  யாராவது அழுதால் எழுத்தின் கரங்கள் நீண்டு சென்று துடைத்துவிடும். உங்களை விட்டு யாராவது பிரிந்து சென்றால் எழுத்தின் கால்கள் விரைந்து சென்று அவரைக் கொண்டு வந்து உங்களிடம் சேர்த்துவிடும். உங்களுக்கு துயரமென்றால் எழுத்தின் இதயம் உங்களுக்காகத் துடிக்கும். உங்களைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நம்பிக்கையளிக்கும். ஒருநூறு கதைகளை அது உருவாக்கிச் சொல்லும். எழுத்து ஒருமாய உலகம். அந்த உலகில் சூசியும், நான்சியும் காஃப்காவும் எப்பொழுதும் கரம் கோர்த்து மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

-மருதன்,

அன்பிற்கு இனிய தம்பி பவாவிற்கு,

வணக்கமும் வாழ்த்துக்களும், இன்று காலை மருதன் அவர்களின் இவ்வரிகளைப் படித்தவுடன் உங்களின் நினைவும் இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் ஒருசேரவந்தது. ஒரு எழுத்தாளர் ஒன்றை எழுதும் பொழுது கூடவே அவரின் எழுத்து பலரின் வாழ்வை வளமாக்கும், துயர் துடைக்கும், இன்று புதிதாய் பிறந்ததாய் நம்மை உணரச்செய்யும், மீட்பளிக்கும் என்றெல்லாம் சிந்தித்திருப்பாரா எனத்தெரியாது. ஆனால் எழுத்து அவ்வாறு செய்யவல்லது, கடவுளை விட மனிதர்கள் உன்னதமானவர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை சிறுவயதிலே என்னுள் விதைத்தது எழுத்து மட்டுந்தான். எழுத்தைநேசிக்காத, எழுத்தாளர்களைக் கொண்டாடமல் வாழவதற்கு பழகிவிட்ட ஒரு வறண்ட சமூகமாக இச்சமூகம் மாறிவிட்டது. வருத்தத்தை தருகிறது.
எழுத்தின் சுவை அறியாத ஒரு சமூகத்திற்கு கடினமான பலாபழத்தை பிளந்து, அதில் இருக்கும் சுளைகளை எடுத்து அப்படியே தேனில் துவைத்துத் தருவதுபோல் உங்கள் கதையாடல் அமைந்திருப்பது ஒருவிதமான மகிழ்ச்சியை என்னுள் விதைக்கிறது.
ஒருவித இனம்புரியாத பரவசத்தை அது என்னுள் ஏற்படுத்துகிறது. அதுவும் தமிழ் பாடநூலைத் தவிர எதையும் தமிழில் வாசிக்கும் பழக்கமில்லாத இன்றைய இளைய தலைமுறையை ஈர்க்கும் உங்களின் இரசவாதத்தால் நானும் ஈர்க்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லையே.
ஒரு எழுத்தாளர் பிற எழுத்தாளர்களின் படைப்புகளை எவ்வாறு உள்வாங்கி அதனைக்கொண்டாடுகிறார். அல்லது கொண்டாட வேண்டும் என்பதற்கு நீங்கள் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு எழுத்தாளரின் கதையைச் சொல்லும் பொழுது, அவருடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு, அவரின் ஆளுமை, ரசனைகள், அவரின் வாழ்வுமுறை, கம்பீரம் என அந்த எழுத்தாளரையே கண்முன் கொண்டு வந்துவிடுகிறீர்கள். அதுமட்டு மல்லாமல் ஒரு கதையை சொல்லும்போது, அது தொடர்புடைய இன்னொறு கதையையும் அதோடு அறிமுகம் செய்வதும் உங்கள் தனி இயல்பு.
நீங்கள் அழகிய பெரியவனின் ‘தோப்புகதையைச்சொல்லும் போது, ஒரு நல்ல கதை, இன்னொரு நல்ல கதையை நினைவூட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டீர்கள்.
நீங்கள் கதை சொல்லும் பாங்கு எனக்கு நல்ல பல நேர்மறையான எண்ணங்களை, இனிய நம்பிக்கை தரும் நினைவுகளை, துயரமும் சோர்வும் மிக்க நேரத்தில் தந்துக்கொண்டேயிருந்தது. ‘அறம்உன்னதமான மனிதர்களை, வாழ்விற்கான நம்பிக்கையைத் தந்தது. யானை டாக்டர், மனுஷி இவையெல்லாம் நான் படிக்காத கதைகள். ஆனால், ஒருவீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் மற்றும் அம்மாவந்தாள் நான் ஏற்கனவே படித்து ரசித்தவை. உங்கள் குரலில் அவை அப்படியே மீண்டும் உயிர்பெற்று வந்தன. ஹென்றி குறித்து நீங்கள் சிலாகித்து பேசும் பொழுது நானும் கூடவே அழுதேன்.
‘பிரம்மம்கதை பெரும்பாலானவர்களின், குறிப்பாக எங்கள் பூர்வீக வீட்டு முருங்கை மரத்தை நினைவூட்டியது. அதுவும் ‘தேர் ஜோடிச்சதுமாதிரி நீளமான காய்களைக் கொண்டது எங்கள் வீட்டு முருங்கை மரம். ஒருசில மரங்களில் காய் ருசியாக இருக்கும், கீரை கசப்புத் தட்டும். ஆனால் எங்கள் வீட்டு மரத்தின் கீரை, காய் இரண்டும் ருசியாக இருக்கும். கோடை மழையால் கிளை முறிந்து உங்களின் மின்சாரவாரியத்துக் காரார்களுக்கு ஏகப்பட்ட காசு குடுத்தாச்சு. அதுக்கு பதிலாக காசுகுடுத்து முருங்கக்காய் வாங்கிவிடலாம். ஆனால், பிள்ளைபோல் வளர்த்த மரத்த வெட்டுவமா என்ன. பச்ச மரத்தை வெட்டினா பாவம்னு சொல்லி வளர்ந்த இனம் இல்லையா நாம்.
அக்கதையின் ஊடாக அந்த வேட்டியை நெய்த கதையைச் சொன்னீர்கள். இந்தக்காலத்து இளைய தம்பதியருக்கு அந்த அனுபவம் சாத்தியப்படுமா என தெரியவில்லை. எங்களுக்கு இந்த மே 18 ஆம் தேதியுடன் திருமணம் முடிந்து 40 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. ஞாயிற்று கிழமைகளில் பூசைக்குப் போய்விட்டு வரும் பொழுதே கறிவாங்கி வந்து சுடச்சுட மதியம் சாப்பிட்டுவிட்டு, வெத்தலைப்போடும் அந்த அருமையான மதியப் பொழுதுகள் அமையப் பெற்றவர்கள் நாங்கள். கி.ரா.வின் சிறுகதையொன்று, கதையின் பெயர் இப்போது நினைவில் இல்லை, புது மணத்தம்பதியர் குறித்த கதை அது. முதல் இரவு போன்ற ஜதிகமெல்லாம் இல்லாத வாழ்வுமுறை அவர்களது. கதையைக் கி.ரா. சொல்லும் வகையே தனி.
“பசு மாட்டை கட்டிப் போட்டு, காளை மாட்டை அவிழ்த்துவிடும் வழக்கமெல்லாம் இல்லை. அது தானாக கனிந்து வர வேண்டும். அது எப்படி கனிந்து வந்தது என்பதுதான் அக்கதை. கதை இப்படி முடியும் “இப்படியாக அவர்களின் முதல் பகல்  நடந்தேறியது. 
இக்கதையை ஆண்களுக்கு “திருமண அன்பும் பாலுறவும்என்ற தலைப்பில் நான் உரையாற்றியப்போது மிகப்பெரியப் பாராட்டுகளைப் பெற்றேன். எத்தனையோ உளவியல் அறிஞர்கள், திருமண வழிகாட்டு நூல்கள் சொல்ல முயல்வதை ஒரு கதை சுலபமாக சொல்லிவிடுகிறது. அதுதான் உங்களைப் போன்றவர்களின் வெற்றி அல்லது வரம். எப்படி வேண்டுமானாலும் பகுத்துக் கொள்ளலாம்.
நிறைய எழுதிக் கொண்டே போகலாம். பால்சக்கரியாவின் ‘யாருக்குத் தெரியும்ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 28 ஆம் தேதி எங்கள் கத்தோலிக்க திருச்சபையில் இயேசுவின் பொருட்டு கொல்லப்பட்ட அந்தக் குழந்தைகளின் நினைவாக மாசில்லாக் குழந்தைகளின் நினைவு விழா கொண்டாடப்படும். அன்று குழந்தைகளின் நீண்ட ஆயுளுக்கான பிராத்தனையும் உண்டு என்ற செய்தியை சேர்க்க வேண்டும் என விரும்பினேன். அது குறித்து இன்னும் நிறைய உரையாடலாம்.
அதேபோல் ‘கெட்ட குமாரனின் கதைஇறையியல் படிக்கும் போது, Asian Theologyயில் படித்தேன். அதில் of womb என்ற புத்தகத்தில் புத்தமதத்தினர் மத்தியிலும் இக்கதை உண்டு ஆனால் மறுபட்ட ஒரு  climax.  பெற்றோர்களுக்கான கூட்டத்தில் அதைக் கூறுவதுஉண்டு அதையும் கூட  உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என  நினைத்தேன். இப்படி பல…
ஆனால் ஒருநாளும் உங்களுடன் இவ்வளவு எளிதில் தொடர்பு கொண்டு விட முடியும் என எண்ணியதில்லை. உங்களுடன் முதன் முறையாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய போதே  உங்களுடன் முடிவற்ற ஒரு பந்தம் ஏற்பட்ட உணர்வு வந்துவிட்டது.
நான் தொடர்பு கொண்டவுடன் எடுத்தீர்கள். ‘அக்காஅக்கா என அழைத்தீர்கள். என் பிள்ளைகளிடம் சொல்லி சொல்லி மாய்ந்து போனேன். அவ்வளவு பெரிய மனிதர் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் இயல்பாகப் பேசினார். என்ன அக்கான்னு கூப்பிட்டார் எனக்கு இதற்குமேல் சொல்லத் தெரியல பவா. தி.ஜா.வின் ‘தவத்திற்கு’ 15 ஏக்கர் தரவந்த ஒரு மனிதரைப்போல, உங்களுக்கு நான் எதை தந்துவிட முடியும்?
என் கணவர் 2012 செப்டம்பர் 6ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மயங்கி விழுந்தார். 7 ஆம் தேதி Pacemaker வச்சாங்க. நான் திரும்பத் திரும்ப தலையில் பலமானஅடிபட்டிருக்கு பாருங்க என திரும்ப திரும்ப கெஞ்சினேன். அடுத்தநாள் மதியம் போல அவர் கோமாவுக்கு போய்விட்டார்.
செப்டம்பர் 8, வேளாங்கன்னி மாதா திருவிழா, மாலை 4.30க்கு Skull open  பண்ணி (Craniotomy)  Bleeding stop பண்ணினாங்க கடைசியில் “Anterior lobe of the brain cell are completely damaged”.  எப்ப நினைவுத் திரும்பும் என எந்த மருத்துவருக்கும் தெரியாது. அப்படியே மீண்டு வந்தாலும் கைகால்கள் இயங்காது, உங்களைச் சார்ந்துதான்  வாழமுடியும்னு மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
முதல் ஒரு வருடத்தை எப்படி நான் கடந்து வந்தேன்னு எனக்கே தெரியல, பல் தேய்ப்பதில் தொடங்கி இப்பொழுது தானா குளிக்கிற வரைக்கும் கொண்டு வந்துவிட்டேன். ஆனாலும், ஒரு நாள் முழுக்க ஒரு வார்த்தை கூட பேச மாட்டார், நாங்கள் இரண்டு பேர் மட்டுந்தான். இலக்கியம், அரசியல், சினிமா என்று நிறைய விஷயங்களை பேசுவோம். குடுமபமாக நிறைய விவாதிப்போம்.
எங்ககள் வீடு மிகவும் சுதந்திரமான வீடு.  மதியம் பிரியாணி செய்து சாப்பிட்டுவிட்டு எப்படியும் யாராவது நண்பர்கள் மிஞ்சுவார்கள். சீட்டு விளையாடுவோம். அவர் டீ போட்டு எங்களுக்காக எடுத்துக்கொண்டு வருவார். காலையிலிருந்து நிறைய வேலை செய்திட்ட, உட்காருன்னு அவரோ, எங்க பையனோ பாத்திரம் கழுவுவாங்க. இப்ப ஒரு மாதிரி எதுவுமற்ற தனிமை. பிள்ளைகள் வீடியோ கால் பண்ணி பேசுவார்வகள். என்ன படிச்சீங்க?  என்ன படம் பார்த்தீங்க? இது உங்களுக்குப் பிடிக்கும் என்றெல்லாம் அவ்வுரையாடல்கள் நீளும். பேரப்பிள்ளைகள் மூன்று பேரும் இங்க வந்துடுங்க, இங்க வந்துடுங்க என கூப்பிட்டுக்கிட்டேதான் இருக்காங்க. என்னவோ போகன்னு இதுவரை தோனல.
இறையியல் கல்லூரி வெளியீடுகளுக்கு இரண்டு கட்டுரைகள்  எழுதிக் கொண்டியிருக்கிறேன். நீங்கள் சொன்னவுடன் எங்கள் ‘ரோட்டு வீட்டுகதையையும் எழுத ஆரம்பித்து விட்டேன். நல்ல பல ஆளுமைகளை இந்நாட்களில் எனக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி. 
மனிதர்கள் எப்போதும் அற்புதமானவர்கள். ஒரு சிலருக்கு அற்புதமாக வாழத்தெரிவதில்லை அவ்வளவுதான். நீங்கள் சொல்லும் கதைகள் மக்களை வாழப்பழக்கும். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
வாய்ப்பிருந்தால், எனக்காக ஒரு நாளை நீங்கள் ஒதுக்க முடியுமானால் உங்களை, உங்கள் ஷைலஜாவை, வம்சி, மானசியை உங்கள் நண்பர்களை, உங்கள் நூலகத்தைக் காண வருகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம். உங்கள் எழுத்துக்களை நான் வாசித்ததில்லை. இனிமேல்தான் வாசிக்க வேண்டும்.
இவ்வளவு நீண்ட கடிதத்திற்கு மன்னிக்க வேண்டும்.  காலையில் எழுதத் தொடங்கினேன்.  தினப்படியான சமையல், சுத்தம் செய்தல் என்பதெல்லாம் முடித்தபின் தொடங்கி என் மனதும் கையும் இதுவரை ஓடிக்கொண்டேயிருக்கிறது.
கடிதம் நீண்டுவிட்டது. என்னை அம்மாவென்றும்,  அக்காவென்றும்  பலர் அழைப்பதுண்டு ஆனால், நான் கடிதத்தின்  தொடக்கத்தில்  குறிப்பிட்ட  மருதன் அவர்களின்  வரிகளில்  உள்ளது போல் எழுத்திற்கு உயிர் உண்டு எனக்கண்ட மனிதர் என்பதாலும்,  அதனால் ஒரு புதிய உறவையே உண்டாக்கும்  வரங்கொண்டவர்  என்பதாலும்  உங்களின் ‘அக்காஎன்ற சொல் எனக்குள் ஒரு இனம்புரியாத  பரவசத்தைத் தந்துவிட்டது.
எனக்கு இருத் தங்கைகள், ஒருஅண்ணன், என் அண்ணனின் மரணம் ஒரு துர்மரணம். அதனாலோ  என்னவோ  நீங்கள் சகோதரனாய் எனக்குக் கிடைத்தது அத்தனை மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் சொன்ன அன்னம்மாள் டீச்சர் கதையில், ‘அக்கா, நான் நீ தளர்ந்து விழும்போது  தாங்குவதற்கான தம்பி  என்ற இயேசுவின் சொல்ப் போல.
மகிழ்ச்சி பவா. உங்களின் பயணம் தொடரட்டும்.
அன்பாலும் நட்பாலும் இந்த மானுட இதயங்களை நனைத்துக் கொண்டேயிருங்கள்.

அன்புடன்
            தனசீலி     

No comments:

Post a Comment