நேற்று முன்தினம் நீங்கள் அளித்த “மேய்ப்பர்கள்” கட்டுரைத் தொகுப்பை (வம்சி பதிப்பக வெளியீடு – ஆகஸ்ட் 2020 பதிப்பு) வாசித்து முடித்தேன்.
உங்களது எழுத்து நடை குறித்து நன்றாக இருந்தது என்று கூறுவதே தேய்வழக்காகி விட்டது. உங்களால் சூழலையும், அந்த நேரத்தின் மன உணர்வுகளையும் எவ்வித பிரயாசையுமின்றி எளிதாக வாசகனுக்குக் கடத்திவிட முடிகிறது. மிகக் கச்சிதமான , குறைவான வார்த்தைகளுடன் வரையறுக்கப்பட்ட வரிகளைக் கொண்டு ஆளுமையின் கூறுகளை வாசகனுக்குப் புரிய வைத்து விடுகிறீர்கள்.
இது வழக்கமான ஆளுமைகள் குறித்த கட்டுரை எனும் இடத்திலிருந்து எப்படி மாறுபடுகிறது? இக்கட்டுரைத் தொகுப்பில் வரும் உங்களது தோழர்கள் குறைந்தபட்சமாக உங்களுடன் முப்பது ஆண்டுகால நட்பில், தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள் அவரவர் துறைகளில் நுழைந்த, அறிமுகம் ஆன காலம்தொட்டு தற்போது தத்தம் துறைகளில் அறியப்பட்டவர்களாக ஆகும் காலம் வரை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. கால ஓட்டங்களை அதன் வழியே அவர்கள் அடைந்த, அடைய முற்பட்ட இடங்களை எளிதாகச் சொல்லிச் செல்ல முடிகிறது உங்களால்.
இயக்கத்திலிருந்து அரசியல் பதவிக்கு செல்லும் ஆளுமையைக் குறிப்பிடுகையில் இயக்க ஒழுங்குக்கு தன்னை ஒப்புவித்துக்கொண்டு அதன் வழியே இலக்கை அடைந்த என்று சொல்வது வெறும் கட்டுரை மட்டுமா? பேசப்பட்டவர்களின் விசித்திரமான நடவடிக்கைகள், சமரசங்களுக்கு ஆட்பட்ட, சமரசத்திற்கும் கொள்கைப் பிடிப்புக்கும் நடுவே மூச்சுத் திணறி தப்பிக்கும் விதமாக போதைக்குள் வீழ்ந்த நண்பர்களும் இதில் வருகிறார்கள். இது வெறும் பாராட்டுக் கட்டுரைகளாக ஆகிவிடாமல் இருப்பது இது போன்ற மின்னல் வெட்டுக்களால்தான்.
ஆனால் மின்னலின் வெளிச்சத்தில் ஓவியம் வரைந்து விட முடியுமா ஒரு ஓவியனால்? தேர்ந்த கதை சொல்லி நீங்கள். இங்கு கதைசொல்லி என்பது உங்கள் எழுத்து வழியே பேசும் பவா வைச் சொல்வது. ஒளிப்படங்களில் கதைகளைப் பற்றிப் பேசும் பவாவை அல்ல. இன்னொரு பவாவை இங்கு சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆர்வமும், அதை விஞ்சும் துடிப்பும், இவ்விரண்டையும் விஞ்சும் வாசிப்பும் கொண்ட இளைஞர் குழு ஒன்று தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய பாதையை முன்னெடுத்துக் கிளம்பியது. தமிழகமெங்குமிருந்து திரண்டிருந்த அக்குழுவின் இளைஞர்கள் அன்றைய தமிழிலக்கியத்தின் பாதையை மாற்றி அமைக்கும் விதமாக இரவு பகல் பாராமல் பேசி, பக்கம் பக்கமாய் கடிதங்கள் எழுதிக்கொண்டு அவர்களே சேர்ந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டுவருகிறார்கள். திருவண்ணாமலையிலிருந்து அன்று வெளிவந்த “ஸ்பானிய சிறகும், வீர வாளும்” எனும் சிறுகதைத் தொகுப்பு இனி தமிழில் வரவிருக்கும் எழுத்தாளுமைகளுக்கு முன்னறிவிப்பாக அமைந்தது. இன்று தமிழ் இலக்கியத்தின் முகங்களாக அமைந்திருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்ற ஆளுமைகள் தம் இருப்பையும், வரவையும் பிரகடனமாக அறிவித்துக்கொண்ட தொகுப்பு அது. அதில் இருந்த முக்கியமான படைப்பாளியும், தொகுப்பைக் கொணர்வதில் ஈடுபாடும் காட்டிய ஒரு ஆளுமையின் பெயர் – பவா செல்லதுரை.
மேலே உள்ள பத்தி உங்களுக்கே உங்களை அறிமுகப்படுத்துவதற்கு அல்ல. உங்களது கட்டுரைத் தொகுப்புகளையும், காணொளிக் கதைகூறல்களையும் மட்டுமே பார்த்து விட்டு பவா ஒரு கட்டுரையாளர் மற்றும் காணொளிக் கதைசொல்லி என்று மட்டுமே “மில்லனியம் கிட்ஸ்” நினைத்து விடக்கூடாதே என்பதற்காக அவர்களுக்குச் சொல்கிறேன்.
தமிழின் சிறந்த பத்து சிறுகதைகளை தேர்ந்தெடுக்கச் சொன்னால் அதில் இடம்பெறும் தகுதியுள்ள சிறுகதைகளை எழுதிய பவா செல்லதுரையையும் இன்றைய தமிழ் கூறு இலக்கிய நல்லுலகம் அறிய வேண்டுமல்லவா என்பதற்காக அவர்களுக்குச் சொல்கிறேன்.
சொந்த உடலின் எல்லா பாகங்களையும் வருடிச் செல்லும் நம் கைவிரல்கள் யதேச்சையாய் கூட தொட்டுவிடாத உள்ளங்கால்களைப் போல நவீன தமிழ் இலக்கியத்தின் எத்தொடுகையுமின்றி இருந்த திருவண்ணாமலை, வட ஆற்காட்டு பகுதிகளின் தொன்மங்களையும், வாழ்வையும் எழுத்தில் தர முடிந்த சிறுகதைக் கலைஞன் பவா செல்லதுரை என்பதையும் “கேட்போர்” அறியவேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
ஒரு எழுத்தாளர் என்ன எழுத வேண்டும் என்பதைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லைதான். ஆனால் ஆழமும் உயரமும் தொட முடிந்த, தொட்டுக் காட்டிய ஒரு ஓவியன் தூரிகையை தண்ணீரில் தொட்டு வரைவதை ஏனென்றும் கேட்கலாம் தானே. எதற்கு இவ்வளவு பீடிகை? நேரே கேட்கிறேன்.
இக்கட்டுரைகளை எழுதவா பவா நீங்கள் வேண்டும்? நீங்கள் சந்தித்த மனிதர்களில் உருவான அசாதாரண மானுட தருணங்களைத் தானே கதைகளாக்கி அளித்தீர்கள் இதுவரை. வலி, கோழி, பிடி, டொமினிக் என தனிமனித வாழ்க்கைத் தருணங்களில் வெளிப்பட்டு உயர்ந்து நிற்கும் மானுட உணர்வுகள், ஏழுமலை ஜமா , கரடி என சூழல்களுடன் போராடி கலைமனம் வெளிப்பட்டு உயர்ந்து நிற்கும் கலையின் உன்னதத் தருணங்கள், மானுடத்தின் கீழ்மைகளை தன் முன் எப்போதும் மண்டியிடச் செய்யும் இயற்கையின் பெருங்கருணையைச் சுட்டும் சத்ரு, வேட்டை - இவை அனைத்தும் உங்கள் அனுபவத்தில் நீங்கள் சந்தித்த, கேட்ட ஆட்களிலிருந்து கிளம்பிய பொறிகள்தானே. தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களிலிருந்து மகத்தான மானுட தரிசனத்தை அடைந்து அதை எழுத்தில் கொண்டு வரும் நுட்பம் வாய்க்கப்பெற்றவர்களாக இன்று நீங்கள், சு. வேணுகோபால் போல சிலரே இருக்கிறீர்கள். கத்தி முனை நடை போல் முற்போக்குப் பார்வை இருந்தாலும் இலக்கிய நுட்பம் குறையாமல் படைக்கப்பட்ட கந்தர்வனின் படைப்புலகப் பின்னணியில் இருந்து இன்னும் மேலெழுந்து வரும் படைப்புலகு உங்களுடையது.
இன்று எழுதும் அனைத்தையும் ஏன் ஆட்களைக் குறித்த, நிகழ்வுகளைக் குறித்த கட்டுரையாக மட்டும் குறுக்கிக் கொண்டு விட்டீர்கள்?உங்களது முப்பதாண்டு கால அவதானிப்பு எத்தனை படைப்புகளைத் தாங்கி வந்திருக்கும்? மகத்தான, கீழ்மையான, கொந்தளிப்பான, அசாதாரண தருணங்களை இந்த நண்பர்கள் சந்தித்து மீண்ட, போராடிய தருணங்களை உங்கள் புனைவுப் படைப்புகள் என்றென்றைக்குமாக இலக்கியத்தில் நிறுத்தியிருக்குமே.
உங்களுக்கு நினைவிருக்கும் என்றே நம்புகிறேன். தம் பழங்குடி வாழ்க்கைக்கும், நவீன வாழ்வின் வாசலுக்கும் நடுவே நின்ற ஒரு இனக்குழுவின் தலைமுறையோடு சேர்ந்து வளர்ந்தவர் நீங்கள். அந்த வாழ்க்கை இன்னும் இலக்கியத்தில் பதியப்படவே இல்லை. ஒரு பெரு நாவலாக விரித்து எழுதும் அளவுக்கு அதில் இருக்கிறது என்று பேசினோம். அதை எழுதுவதாக வாக்களித்தீர்கள். அவ்வாழ்வை அருகிலிருந்து பார்த்த உங்களுக்கு அதில் சொல்ல எத்தனையோ உண்டு.
மகத்தான மனிதர்களை, சாதாரண வாழ்வில் அசாதாரணமான சூழல்களைக் கண்டவர்களை, சூழலின் அறைகூவலுக்கு தன்னை முன்வைத்து போராடி மேலெழுந்தவர்கள் என நீங்கள் தினமும் சந்தித்துக்கொண்டே இருக்கிறீர்கள் மானிடர்களை. அதிலிருந்து எத்தனையோ பேரை உங்கள் புனைவுப் படைப்புகள் மூலம் இறவாவரம் பெற்றவர்களாக மாற்றி விட்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எழுத வேண்டிய அனைத்தையும் தற்போது வெறும் கட்டுரைகளாகவே எழுதிக் கொண்டிருக்கிறீர்களோ என படுகிறது. என் பெரு மதிப்பிற்குரிய ஜெயமோகன் இக்கடிதத்தைக் காண நேர்ந்தால் என்னைக் கடிந்து கொள்ளபோவது நிச்சயம். ஒரு எழுத்தாளனை நோக்கி இதை ஏன் எழுதினாய், இதை ஏன் எழுதுவதில்லை என்று கேட்பது சரியல்ல என்பார் அவர். ஆனால் பெரும் திரையில் நுட்பங்கள் செறிய வரைய முடிந்த ஓவியன் தன்முன்னால் வந்தமர்வோரின் முகங்களை மட்டும் கோட்டோவியமாய் வரைந்து கொண்டே இருப்பதை எவ்வளவு நாள்தான் பொறுப்பது? ஜெயமோகனிடம் நான் திட்டு வாங்குவதிலிருந்து என்னைக் காப்பாற்றவாவது ஒரு நாவலை, புனைவுப் படைப்பைத் தருவீர்கள் என நம்புகிறேன் பவா சார்......
என்றும் அன்புடன்,
ராஜகோபாலன் ஜா
No comments:
Post a Comment