Sunday, January 30, 2011

வம்சி இரண்டு நூல்கள் வெளியீடு - சென்னை - (29-01-2011)


வம்சி புக்ஸ் - பாலு மகேந்திராவின் கதை நேரம் திரைக்கதை புத்தகம் பாகம் - 2 மற்றும் மிஸ்கினின் மொழிபெயர்ப்பில் உருவான நத்தைப் போன பாதை புத்தகம் வெளியீட்டு விழா - பிரசாத் லேப், சென்னை - 29-01-2011

ஒளிப்படங்களைக் காண: http://picasaweb.google.com/thamizhstudio/CwDIIG

Thursday, January 20, 2011

புத்தக கண்காட்சிக்கு புறத்திருந்து




ல்குதிரை என்ற சிறுபத்திரிகையின் ஒவ்வொரு இஷ்யுவும் முடிந்தவுடன், வளர்ந்த தாடியுடனும், அழுக்கான சட்டையோடும், கசங்கிய பழந்துணி மாதிரி கோணங்கி திருவண்ணாமலைக்கு வருவான். நாங்கள் இருவரும் கிளம்பி நிலத்துக்குப் போவோம். கிணற்றிலோ பம்புசெட்டிலோ ஊறிக்கிடந்து குளித்தெழுவோம். ஒவ்வொரு முறை இப்படி நிகழும் போதும் மெட்ராஸ் அலுப்பு இப்பதாண்டா போச்சு என்பான் கோணங்கி.


இந்த முறையும் சென்னை புத்தக கண்காட்சி முடிந்து வந்தவுடன் நான் கிணற்றில் குதித்து ஊறிக்கிடந்தேன். இன்னமும் மெட்ராஸ் அலுப்பு மிச்சமிருக்கிறது. என்னில் எந்தப் புத்தக கண்காட்சியும் பெரிதாய் ஒட்டவில்லை இந்த வருடம் அப்படியே. வியாபார தந்திரங்களும், சக பதிப்பாளர்கள் மீதான வன்மமும், புதுப்பதிப்பாளர்களுக்கு மூத்தவர்கள் கொடுக்கும் இலவச அட்வைஸ்களும், சில சமயம் பேருரைகளும் சகித்துக் கொள்ள முடியாதவைகள்.















நான் 13ம் தேதிதான் புத்தக கண்காட்சிக்கு புறப்பட்டேன். அதற்குள் தொலைபேசியில் மம்முட்டி அழைத்து, அவரை பாண்டிச்சேரி வந்து சந்தித்துவிட்டு போகமுடியுமா என கேட்டார். அவரின் மூன்றாம் பிறை (மொழிபெயர்ப்பு கே.வி.ஷைலஜா) ஒரு பிரதி மட்டும் என்னிடமிருந்தது. சில நண்பர்களோடு புறப்பட்டு பாண்டிச்சேரி சென்றேன்.


மாலை 5 மணிக்கு பாண்டிச் சேரியின் புறநகர் பகுதியிலுள்ள ராஜீவ்காந்தி கால்நடைக் கல்லூரியின் இரண்டாம் தளத்தில் மம்முட்டி படப்பிடிப் பில் இருந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்கிறோம். நெகிழ்வோ, ஆரவாராமோயின்றி மிக சகஜமாக என்னை வரவேற்றார். புத்தகத்தை கையில் 'தந்தவுடன் எனக்குத் தமிழ்படிக்கத் தெரியாதே' இவன்தான் படிப்பான் என்று தன் உதவியாளர் ஜார்ஜ்யிடம் தந்தார். உடனேயே அதை மறுபடியும் வாங்கி, என்னைப் படிக்கச் சொன்னார். நான் அது படப்பிடிப்புத்தளம் என்பதை மறந்து உரக்க வாசித்தேன். படப்பிடிப்பு நின்று அங்கிருந்த 200 பேரும் அதைக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படத்தின் கதாநாயகி எங்கேயோ பார்த்தமாதிரியேயிருந்த நதியா. எல்லோரும் அவர் வாழ்வனுபவத்தை குடித்துக்கொண்டிருந்தார்கள்.

அது இதே மாதிரி ஒரு படப்பிடிப்பு நடந்த வீட்டிலிருந்து அந்த வீட்டுப் பையன் எனத் தெரியாமல் அவனை வெளியேற்றிய சம்பவம்.

நான் வாசிக்க, வாசிக்க அவர் முகமாற்றங்களை புகைப்படகலைஞன் புதுவை இளவேனில் படமாக்கிக் கொண்டிருந்தார்.

மெளனம் நீண்டது.


'கவனிச்சிங்களா பவா, இதிலுள்ள எல்லா சம்பவங்களிலும் நான் தான் முரடன், நான்தான் வில்லன். என்னிடம்தான் கர்வம் உண்டு, நான்தான் தலைக்கணம் பிடித்தவன் என்று அப்புத்தக சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.


படத்தின் இயக்குனர் தன் படப்பிடிப்பு நின்றதற்கான காரணம் தெரியாமல், அவரும் கதை கேட்க பார்வையாளர்களில் ஒருவராக நின்றிருந்தார்.


'இன்னொரு பகுதி படி பவா' அதுவும் எதுவென அவரே சொன்னார், ஆக்ஷன் பாபு. அதன் தலைப்பு.

















தமிழ் நாட்டின் ஒரு உட்புறமான கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து பின்னிர வில் மம்முட்டி காரில் திரும்பிக் கொண்டிருப்பார். வழியில் ஒரு மொபெட்டை தள்ளிக் கொண்டு போகும் ஒரு ஆஜானுபாகுவான மனிதனோடு அப்பெண் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பாள். பார்த்தும் பார்க்காதது மாதிரி கார் சில கிலோமீட்டர்கள் கடந்து போகும். ஆனால் மம்முட்டி என்ற சாதரண மனிதன் உள்ளிருந்து கிளர்ந்தெழுவான். கார் மீண்டும் திரும்பும். ஒரு மூடப்பட்டிருந்த குடிசையின் முன் அந்த ஆள் நின்று கதவை எட்டி உதைப்பான். ஒரு வயதான ஆள் கையெடுத்து கும்பிட்டவாறு வெளியே வருவான். அடுத்த பத்தாவது நிமிடம் அப்பெண் இருட்டைக் கிழித்துக் கொண்டு மொபெட்டில் பறப்பாள். அந்த ஆஜானுபாகுவான ஆள் அங்கிருந்த தன் புல்லட்டை எடுப்பான்.

மம்முட்டி காரைவிட்டு இறங்கி, அந்த வயதான ஆளிடம் என்ன நடந்தது என விசாரிப்பார்.

சார் பக்கத்து மில்லுல அந்தப் பொண்ணு வேலை பாக்குது, அது வண்டி பஞ்சராயிருச்சி, எங்கிட்ட வந்து பஞ்சர் ஒட்ட கேட்டப்போ, பையன் போயிட்ட தால முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டேன் அப்போதான்
















அந்த ஆளு வண்டியை இங்கேயே நிறுத்திட்டு என் வண்டில வான்னு கூப்பிடத் துக்கு வரமுடியாதுன்னு முரண்டு பிடிச்சதைதான் நீங்க பார்த்தது. அப்புறம், அந்த ஆளே வந்து என் வீட்டுக் கதவை எட்டி உதைச்சு ஒடைச்சி நானே பஞ்சர் போட்டுக் கொடுத்தேன்.

அந்த ஆள் வந்த உடனே நீ எப்படி பஞ்சர் ஒட்ட ஒத்துகிட்ட.

சரியா போச்சு சார். உங்களுக்குத் தெரியாதா? நான் அதுக்கப்புறம் இந்த ஊர்ல தொழில் செய்ய வேணாமா? அந்த ஆள்தான் 'ஆக் ஷன் பாபு'.

அந்த ஆக் ஷன் பாபு என்ற ரவுடிக் கேரட்டரில் தான் இவர் நடிக்கிறார். இரவில் தனியேப் போகும் பெண்ணிடம் அவன் நடந்து கொண்ட கன்னியம் எங்கே? காரைவிட்டு இறங்கினால் ஏதாவது விபரீதமாகிவிடுமோ என பயந்து காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்த நானெங்கே? அவன்தானே ஹீரோ என அக்கட்டுரை முடியும்.
படப்பிடிப்புக் குழுவினர் மீண்டும் மௌனத்திலிருந்தார்கள். சிறு அசைவும் கவனத்துக்குள்ளானத் தருணமது. நான் அவருடனான கைக்குலுக்கலில் விடைபெற்று சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டேன்.

Tuesday, January 18, 2011

one summer hey


உலக வரைபடத்தில் போர்ச்சுக்கல் என்ற நாடு எங்கே இருக்கிறதென இன்னமும் என்னால் அடையாளப்படுத்த முடியாது. ஆனால் என் நண்பன் பினுபாஸ்கர் இப்போது தினமும் அங்கிருந்துதான் என்னோடு பேசுகிறான்.

எங்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிற எவரையும் அதற்கு நேர் எதிரே மாட்டிவைக்கப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளையிலான ஒரு பெரிய புகைப்படம் வசீகரிக்கும். அது ஒரு கடும் கோடையில், எங்கள் நிலத்தில் பெயர்த்துப்போட்ட ராஜாக் கற்களுக்கிடையே என்னைக் குடும்பத்தோடு உட்கார வைத்து பினு எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படம். அப்படம் எடுப்பதற்காக, பினு எங்கள் வீட்டிற்கு வந்தபோதுதான் எங்கள் தோழமை மலர்ந்தது. பூனைக்குட்டிகளின் ரோமங்களிலான மென்மை அவனுக்கு வாய்த்திருந்தது. தேக்கி வைத்திருக்கும் புன்னகை எப்போதும் கசிய, யாரையும் கைகுலுக்கக் கோரும் முகம் அது.

south asian couples என்ற தலைப்பில் கலைத்துறையில் சேர்ந்தியங்கும் கணவனையும், மனைவியையும், அவர்கள் குடும்பத்தையும் தான் லண்டனில் நடத்த இருந்த ஒரு கண்காட்சிக்காக புகைப்படம் எடுக்கவே பினு திருவண்ணாமலைக்கு வந்திருந்தான்.

என்குடும்பத்தையும், காயத்ரி கேம்யூஸ் குடும்பத்தையும் அந்தப் புகைப்பட sessionக்கு தேர்வு செய்திருந்தான். ஒரு முற்றிய வயலில் ஆனந்த் - காயத்ரி குடும்பத்தை உட்காரவைத்து அவன் எடுத்திருந்த புகைப்படம் மிகப்பெரிய கலை ஆளுமைகளுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடியது. அப்படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட அன்று இரவு காயத்ரியின் ஸ்டுடியோவில் நான் பினுவை முதல்முறையாகச் சந்தித்தேன். ஒரு ''மூலையில் தரையில் அமர்ந்து அவன் தனியே மது அருந்திக் கொண்டிருந்தான். சுற்றிலும் நான்கைந்து பூனைகள் சூழ்ந்திருந்தன. நல்லப் புகைப்படக்காரன் தவறவிடக்கூடாத தருணமான அது, ஒரு திரைப்படத்தின் காட்சிபோல இருந்தது.

ஒரு சின்ன கைகுலுக்கலுக்குப் பின், 'நாளை உங்க family ஐ படம் எடுக்கலாம் பவா' எனக்கொஞ்சம் தமிழ், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து வாஞ்சையோடு சொன்னான். அவ்வார்த்தைகளுக்காவே காத்திருந்தவனைப் போலவே நான் உடன் சம்மதித்தேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும். பினு பைக்கில் எங்கள் வீட்டிற்கு வந்தது, அவசர அவசரமாக எங்களைப் புறப்படச் சொல்லி நிலத்திற்கு அழைத்துப் போனதென்று எல்லாமும் இன்னும் நினைவில் இருக்கிறது. வெளிச்சம் போய்விடும் என்கிற பதைப்பு அவனை அசுரத்தனமாக இயங்க வைத்தது. எங்கிருந்தோ ஒரு கயிற்றுக் கட்டிலை அவனே தூக்கி வந்து போட்டான். சூழலை இன்னும் பழமையாக்க, குண்டு கற்களைக் கொண்டுவந்து, குவித்துக் கொண்டிருந்தான். நான் அதைத் தடுத்தேன். இதை நானோ இங்கிருக்கும் சிலரோ செய்ய முடியும் எனச் சொன்னதை அவன் மறுத்தான். 'ஒரு போட்டோகிராபரின் வேலை காமிராவைக் கையாள்வது மட்டுமல்ல பவா. அதற்கானச் சூழலை உருவாக்குவதும்தான்' என்பதை மிக அழகான ஆங்கிலத்தில் சொன்னபோது நான் அமைதியானேன்.

மிகப்பெரிய புகைப்பட ஆளுமைகளோடு நான் பழகியிருக்கிறேன். வேறு எவரிடமும் நான் காணாத இத்தன்மை என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவன் எதிர்பார்த்த ஒரே ஒரு புகைப்படம் கிடைக்கும்வரை தொடர்ந்து தன் கேமிராவில் இயங்கிக் கொண்டேயிருந்தான். தூரநின்று பார்ப்பவர்களுக்கு இது ஒரு மாய விளையாட்டுபோலத் தோன்றியிருக்கும். அந்த இயக்கம் முழு ஈடுபாட்டோடு ஒரு துறையில் மூழ்கும் கலைஞர்களுக்கே சாத்தியம். ஒரு தொழில்முறைக் கலைஞனால் தன் இறுதிநாள்வரை இந்த இடத்தை எட்டவே முடியாது.

பலமணிநேரங்கள் காத்திருந்து, காயத்ரி கேம்யூஸ் தன்மகன் அருணாச்சலாவை விரிந்த மரச் செறிவுகளினூடே அழைத்து வரும் கணத்தை அவன் பதிவு செய்ததற்காக மட்டுமே அவன் கைகளில் நான்கைந்து முத்தங்கள் தந்தேன்.

பினு பிறந்தது குருவாயூரில் என்றாலும் நான்காம் வகுப்புவரை படித்தது வேலூரில்தான். அப்பா சி.எம்.சி.யில் மருத்துவர். தன் மகனையும் தன்னைப்போலவே மருத்துவராக்க வேண்டும் என்ற அப்பாவின் சராசரிக் கனவை நுழைவுத் தேர்வுக்குப் போகிறேன் எனச்சொல்லி சினிமாவுக்குப்போய் பினு தகர்த்தான். மகனின் கலை உணர்வைச் சிதைக்க விரும்பாத அவன் அப்பா சென்னைத் திரைப்படக்கல்லூரியில் சேர்த்துவிட செய்த முயற்சியும் தோல்வியுற்றது. அதில் விரக்தியுற்று இந்தியா முழுக்க கேமிராவும் கையுமாக அலைந்து கொண்டிருந்தவனை,

''உனக்கு ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் ஆர்ட் போட்டோகிராபர் பிரிவில் சேர அனுமதிக் கடிதம் வந்துள்ளது. புறப்பட்டு வா'' என்று அப்பாவின் வார்த்தைகள் தந்த நம்பிக்கை திரும்ப அழைத்தது. தன் பெருங்கனவுகளைச் சுமந்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணமானான்.

அப்புகைப்படக் கல்லூரி பினுவைச் செதுக்கியது. கேமிரா தன் கையில் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் என்பதை மெல்லப் புரிய வைத்தது.

தன் சகக் கல்லூரித்தோழி 'லெஸ்லே ஸ்லேட்டர்' உடனான காதல் அவனை இன்னும் பூக்க வைத்தது. இவ்வாழ்வு பூக்களையும், பனித்துளிகளைச் சேர்த்து வைத்து ஜாலம் காட்டும் இலைகளையும், ஆஸ்திரேலியா புல்வெளியெங்கும் குதித்துத் திரியும் கங்காருக்குட்டிகளையும் போன்றது மட்டுமே என நம்ப வைத்த காலமது. அதீதக் காதல் திருமணத்தில் முடிந்து, தன் செல்ல மகனுக்கு அவர்கள் one summer hey என்று பெயரிட்டார்கள்.

தன் சொந்த மாநிலத்திற்கு ஒரு கோடை விடுமுறைக்குத் திரும்பிய பினு மாறி வரும் கேரளாவைப் பார்த்து பதைத்துப்போனான். குறிப்பாக வயல்கள். பாலக்காட்டைச் சுற்றியிருந்த பச்சை வயல்களின் அழிவு அவனைச் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது. Distance என்று பெயரிட்டு இந்திய வயல்வெளிகளில் அவன் எடுத்த பல ஆயிரக்கணக்கான படங்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்தத் துயரத்தைப் பினுவால் தாங்க முடியவில்லை . தன் பிரத்தியேக மன உலகம் சிதைவதை உணர்ந்தான். குடும்ப உறவுகள் அவனை எல்லைக்குள் அடக்கி விடும் என வாழ்வைப் பார்த்து பயந்து தனியானான்.

துபாயில் ஓர் உலக அளவிலான விளம்பரக் கம்பெனியில் தலைமை வடிவமைப்பாளராக கிடைத்த பணியில் பொருளீட்டிக் குவித்தான். கலைஞனின் மனது இதிலெல்லாமா அடங்கும்? அப்பணியில் சலிப்புற்று தன் காரில் விமான நிலையம் வரை வந்து காரை அங்கேயே நிறுத்திவிட்டு கார் சாவியைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவிற்கு விமானம் ஏறினான்.

தான் எடுக்கும் புகைப்படங்களைப் பினு இப்படிப்பகுத்துக் கொண்டான். அகங்காரம் (ego) குருடு(blind) குள்ளம்(drawf) இந்த மூன்று கருத்தாக்கங்களில் மட்டும்தான், தான் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று முடிவு செய்தான்.
''மனிதனின் உள் அகங்காரத்தை ஒரு புகைப்படத்தில் பதிவு செய்யமுடியுமா பினு''
''என் dislocation என்ற தலைப்பிலான எல்லாப் படங்களும் அதையே பிரதிபலிக்கின்றன பவா. இதே இடப் பெயர்வை காயத்ரி கேம்யூஸும், தன் பெயிண்டிங்கில் சொல்கிறார்களே. அதனாலேயே நானும் காயத்ரியும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து dislocation என்ற பெயரில் ஒரு புகைப்பட ஓவியக் கண்காட்சியை 2009ல் துபாயில் ஏற்பாடு செய்தோம். என்னுடைய ஒரு புகைப்படம் அதில் விற்பனையானது.''

''என்ன விலைக்கு பினு?''

''இரண்டரை லட்சம்.''

நான் அதிர்ச்சியானேன்.

''ஒரு புகைப்படத்திற்கான விலையா இது? அப்புறம் என்ன செய்யப்போகிறாய் பினு?''

''என் பூனைகளோடு விளையாடிக்கொண்டிருப்பேன்.''

இந்த டிசம்பர் மாதக்குளிர் இரவுகளில் புத்தகம் பதிப்பிக்க தொடர்ந்து கண் விழிக்கும் இந்த இரவுகளில் திடீரென பினுவின் ஞாபகம் மேலெழும்ப, ஒரு பின்னிரவில் பத்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் வேண்டுமென கேட்டிருந்தேன்.

நினைவடைந்த சில மணிநேரங்களின் முடிவில் பத்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்களும் அடுத்த மின்னஞ்சலிலேயே என்னை அடைந்தன. அப்படங்களின் பிரமிப்பு இன்னும் தீரவில்லை. ''பினு இதற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் உனக்கு''

''பவா, போர்ச்சுக்கல்லில் கொசுத்தொல்லை அதிகம். என் மகனுக்கு ஒரு odomas வாங்கி அனுப்புவாயா?''

Sunday, January 16, 2011

impossible friend


சந்திப்பு-3

எங்கள் மூன்றாவது சந்திப்பிற்கிடையே ஆறுமாதங்கள் கடந்திருந்தன. இதற்குள் காட்சிகள் மாறி, மனிதர்கள் மாறி, பருவநிலைகளும் மாறியிருந்தன. வெயிலடித்த மார்ச் மாதம் அது. அவரைச் சந்திப்பதற்காகச் சன்னதித் தெரு வீட்டு வாசலில் நிற்கிறேன். காசியை யோகி வெளியேற்றக் காரணமாக இருந்த அந்த இரும்புக் கேட்டைப் பிடித்துக் கொண்டு உள் முற்றத்தை ஊடுருவினேன். ஆண்களும் பெண்களுமாகப் பத்திருபது பேர் சுற்றிலும் அமர்ந்து பஜன் பாடிக் கொண்டிருக்க, யோகிக்கருகில் பாலகுமாரன் உட்கார்ந்திருந்தார். இருவர் கைகளிலும் புகைந்த சிகரெட் நெருப்பு தெரிந்தது.

நான் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்த நாட்கள் அவை. முதன் முறையாய் யோகியின் வாழ்வுமீது பொறாமை வந்தது. வெயிலேறிய இந்த நாட்களில் தொடர்ந்து என் அலைச்சலும் ஏமாற்றமும். வீட்டில் அப்பாவின் திட்டும், இம்மனிதனின் சௌகர்யமான வாழ்வின் மீது எரிச்சல்பட வைத்தது. இப்படியே திரும்பிப்போய்விடலாமா என நினைத்த கணம் அவரே எழுந்து வந்து கேட்டைத் திறந்து என்னைத்தழுவி அழைத்துபோய் அவரருகில் அமரவைத்தார். ஒருபக்கம் பாலகுமாரனும் இன்னொரு பக்கம் நானுமாய் சுரத்குமாருக்கு அருகில் இருந்தோம். பாலகுமாரன் தமிழ்ப் பத்திரிகை உலகைத் தனதாக்கி வைத்திருந்த நாட்கள் அவை. பாதி திறந்திருந்த கதவின் வழியே உள்ளே பார்த்தேன். பண்டல், பண்டலாய் சார்மினார் சிகரெட்டுகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. சரியாக நினைவில்லை. டாட்டா, அம்பானி இப்படி யார் விட்டுப் பெண்ணோ வாங்கி வந்து அடுக்கியது என்று வெளியே கசிந்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது.

அவர்கள் யாரிடமாவது சொல்லி இவர் நமக்கு ஒரு வேலை வாங்கித் தரமாட்டாராவென யோசித்தேன். என் மனநிலைக்குக் கொஞ்சமும் சம்மந்தமின்றி பஜன் சத்தம் அதிகரித்தது. சகிக்க முடியாததாக இருந்தது.

எழுந்து போய்விட வேண்டுமென உள்ளுக்குள் தீர்மானித்து எழுந்தேன்.

என் கையைப் பிடித்திழுத்து அமரவைத்து,

'ஏன் அவசரமா பவா?' என்றார் ஆங்கிலத்தில்

'இல்லை எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை.' நானும் ஆங்கிலத்தில் சொன்ன பதிலில் பஜன் நின்றது.

சுரத்குமார் என்னயே உற்றுப் பார்த்தார். அக்கண்களைச் சந்திக்க இப்போதும் வலிமையற்று கீழே குனிந்து கொண்டேன். ஏதோ ஒரு அடங்காத மனக் கொந்தளிப்பு அன்றிருந்தது. அவர் என்முதுகில் தட்டிக் கொடுத்து

'சிகரெட் புகைப்பாயா?' என்றார்.

இல்லையெனத் தலையசைத்தேன் பாலகுமாரனைப் பார்த்து கொண்டே. அவர் அப்போதுதான் இன்னொரு புது சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார.

இதெல்லாம் ஏதோ ஒரு நாடகத்தின் காட்சிபோல இருந்தது எனக்கு.

மௌனம் நீண்டு நேரம் நீடித்தது.

சட்டென என் கையைப் பிடித்து, ''தகழியின் செம்மீனைத் தமிழில் மொழிபெயர்த்தது யார்?'' எனக் கேட்டார்.

நான், 'சுந்தரராமசாமி' என்றேன்.

''அவரை உனக்குத் தெரியுமா?''

''பார்த்ததில்லை, தெரியும்.''
''தமிழில் வெளியான முக்கியமான பத்து நாவல்களின் பெயரைச் சொல்''

இப்போது எனக்குப் பட்டியல் நினைவிலில்லை. ஆனால் அதில் ஜே.ஜே.சில குறிப்புகளைச் சொன்னதும், பாலகுமாரனைச் சொல்லாததும் நினைவிலிருக்கிறது.

இங்கிருந்து போய்விட வேண்டும், போய்விட வேண்டும் என உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. நான் மீண்டும் எழுந்து புறப்பட்டபோது அவர் தடுக்கவில்லை. கையில் ஒரு ஆப்பிள் பழம் தந்து. 'My father bless you' என்று அதே அழகான ஆங்கிலத்தில் சொன்னார்.

ஆனால் அடுத்த நாள் காலையிலேயே அவரை மீண்டும் சந்திக்க வேண்டியிருந்தது எனக்கு. தூர்தர்ஷனில் பணிபுரிந்து கொண்டிருந்த என் நண்பன் ஆடையூர் ரவி வயது முதிர்ந்த ஒரு அதிகாரியோடும் அவருக்கு ஓட்டுனராயிருந்த ரவியின் அண்ணன் பன்னீர்செல்வத்தோடும் என் வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்தான். அந்த அதிகாரி காரிலேயே உட்கார்ந்திருந்தார். ரவியில் அண்ணன் பன்னீர்செல்வம்தான் இறங்கி வந்து பேசினார்.

பவா இவர் பெயர் சேஷய்யா. தூர்தர்ஷனில் தென்மண்டல தலைமைப்பொறியாளர். ஆந்திரா சொந்த மாநிலம். இவருக்கு எப்படியாவது விசிறி சாமியாரைப் பார்க்க வேண்டும் என பேசிக்கொண்டே போனார். நான் இரண்டே நிமிடங்களில் அவர்களோடு கிளம்ப வேண்டியிருந்தது. காரின் முன் சீட்டில் நான் அமர்ந்திருந்தபோதும் அந்த அதிகாரி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. எனக்கு அவரிடம் பேசத் தோன்றவில்லை.

சன்னதித் தெரு வீட்டிற்கு கொஞ்சம் முன்னாள் நிற்கும் மரத்தேரருகே காரை நிறுத்திவிட்டு அவரைப்பார்க்க நடந்தோம். அவரைச் சந்திக்க வைப்பது என் கடமையென்பது மாதிரி அந்த அதிகாரி என்னைப் பின் தொடர்ந்தார்.

யோகியின் வீடு பூட்டியிருந்தது.

பூட்டியிருந்த அவ்வீட்டை நோக்கி அந்த அதிகாரி வணங்கினார். நாங்கள் திரும்பி எத்தனித்த பொழுது, எங்களைப் பார்த்து எங்கிருந்தோ ஓடி வந்த சசி என்ற யோகியின் வளர்ப்பு மகன் என் கையைப்பிடித்து,

''அண்ணா, சாமி விருதுநகர் இந்து நாடார் மடத்துல பாலகுமாரன் சாரோட இருக்கார்ண்ணா. நீங்க அங்க போங்க'' என்றான்.

எங்கள் கார் திருவூடல் தெருவில் விருதுநகர் மடத்தின் முன் நின்றது. ஆட்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியுமற்று அமைதியாய் இருந்தது மடம். அந்த அமைதிக்கு அந்நியப்பட்டு வெளியே நான்கைந்து கார்கள் நின்றிருந்தன.

நாங்கள் மெல்ல மாடியேறினோம். அப்போதுதான் அந்த அதிகாரியின் முகத்தைத் தெளிவாகப் பார்த்தேன். மிகுந்த துக்கத்தில், பழுத்து விழுந்துவிடும்போல் இருந்தது.

சாத்தப்பட்ட கதவுக்கு வெளியே இரண்டு மூன்று பேர் கை குவித்து நின்றிருக்க, நான் யாருடைய அனுமதியும் கோராமல் கதவைத் தட்டினேன். திறக்கப்பட்ட அறைக் கதவுக்கு பின் விரிந்த அந்த விசாலமான அறை ஒரு பஜனைக்கூடம் மாதியிருந்தது.

நிறைய பழங்கள், பூக்கள் என்று குவிந்திருந்த அக்குவியல்களின் முன் கழுத்தில் தொங்கின ஒரு தாமரைப்பூ மாலையோடு சுரத்குமார் அமர்ந்திருந்தார். அருகில் அதே போலொரு மாலையணிந்த பாலகுமாரன்.

''பவா Come on '' என்று உற்சாகமாகி எழுந்து வந்து கைபிடித்து அழைத்தார். நான் எதற்காகவும் தாமதிக்காமல்,

''இவர் சேஷையா, ஆந்திரா சொந்த மாநிலம், உங்களை எப்படியும் சந்திக்க வேண்டி வந்திருக்கிறார்'' என்றேன்.

tell me sheshaya. இந்தப் பிச்சைக்காரனிடம் இருந்து உனக்கு என்ன வேண்டும்?''

எனக்குப் பின்னால் நின்றிருந்த அவரைத் திரும்பிப் பார்த்தேன்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்த நிமிடத்திற்காகவே காத்திருந்த பரவசத்தோடு,

''சாமிஜி I have lost my two sons in accidents" என்று நீண்ட அவர் கரங்களை யோகிராம் சுரத்குமார் ஆறுதலோடு பற்றி சேஷையாவைத் தனக்குள் புதைத்துக் கொண்டார்.

நான் எதுவுமற்று நின்று கொண்டிருந்தேன். பாலகுமாரன் உட்பட எல்லாருமே மௌனத்தை அடைகாத்தார்கள். அடுத்த வினாடியிலிருந்த நான் உடனே வெளியேறினேன். என்னை யாரும் தடுக்கவில்லை. என் இருப்பு தேவையற்றது என்று எனக்கு மட்டுமல்ல, சுரத்குமாருக்கும் தெரிந்திருந்து.

அன்று மாலை ஆறு மணிக்கு ஆடையூர் ரவியும், அவரது அண்ணன் பன்னீர்செல்வமும் அதே காரில் என்னைத் தேடி வந்தார்கள். என்னை அவர்களின் அய்யா பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள்.

''அவர் எங்கிருக்கிறார்?''

ரமணாஸ்ரமம் கெஸ்ட் ஹவுசில். நான் அவர்களோடு கிளம்பிப் போனேன். என் வருகையை எதிர்பார்த்து சேஷையா அறைக்கு வெளியே வெறும் பனியன் மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார்.

'வாங்க பவா' என என்னைப் பெயர் சொல்லியழைத்தார், இப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பதுபோல.

நான் எதுவும் பேசாமல் நின்றேன். அழுதழுது அவர் கண்கள் வீங்கியிருந்தன. என் கையைப் பிடித்து அழைத்தார். அவர் அறைக்கதவைச் சாத்தினார்.

''இது போதும் எனக்கு. என் வாழ்வின் மையத்தை அடைந்து விட்டேன். எனக்கிருந்த இரு பிள்ளைகளையும் வெவ்வேறு விபத்துகளில் இழந்து எதற்காக வாழ வேண்டும் என இருந்த என் மனக் கொந்தளிப்பு இச்சந்திப்பில் அடங்கியது. இனி என் மரணமும் எனக்குத் துச்சம்.'' என ஆங்கிலத்திலும் இடையிடேயே தமிழிலும் பேசிக் கொண்டே இருந்தார்.

என் மிச்சமிருக்கிற வாழ்நாளில் உன்னை மறக்க மாட்டேன் தம்பி என்றபோது மீண்டும் உடைந்து அழத் தயாரான அவர் மனதறிந்து நான் உடனே அங்கிருந்து வெளியேறினேன்.

அன்றிரவு கோடைமழை பெய்தது. அந்த இரவு முழுக்க சேஷையா என்ற அந்த மனிதனுக்கு, யோகிராம் சுரத்குமாரின் அருகாமை எப்படி ஆறுதல் அளித்து இருக்க முடியும் என்ற கேள்வியின் அலைக்கழிப்பில் வெகுநேரம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தேன்.

Thursday, January 13, 2011


சென்னை புத்தக கண்காட்சியில் வம்சி அரங்கு எண் 157-158 -ல் (14-01-2011) வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிவரை திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் தான் எழுதிய 6 திரைகதைகளின் தொகுப்பான 'கதை நேர கதைகள் + DVD பாகம் -1, பாகம்-2' புத்தகத்தில் வாசகர்களுக்கு கையெழுத்து போட்டு தர வருகைத் தருகிறார்.

Wednesday, January 12, 2011

வம்சியில் மிஷ்கின்




சென்னை புத்தக கண்காட்சியில் வம்சி அரங்கு எண் 157-158 -ல் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணிவரை மூன்று மழை இரவுகளில் தான் மொழிபெயர்த்த 100 ஹைக்கூக்களின் 'நத்தை போன பாதையில்' புத்தகத்தில் வாசகர்களுக்கு கையெழுத்து போட்டு தர இயக்குநர் மிஷ்கின் வருகைத் தருகிறார்.

Wednesday, January 5, 2011


2011-ல் வம்சி பதிப்பக வெளியீடாக வரும் புத்தகங்களின் அட்டைப் படங்கள் சிலவற்றை காட்சிப்படுத்த விரும்புகிறேன்.

எப்போதுமே எதுவுமே என் நண்பர்களின் உழைப்பின்றி சாத்தியப் பட்டதில்லை. இப்போதும் என் நண்பர்கள் அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர், ஆர்.ஆர். சீனுவாசன் போன்ற ஆளுமைகளினால் இந்தப் பணி முழுமையடைந்திருப்பது மன நிறைவைத் தருகிறது.





அப்பா

கையிலடங்காத நீரின் சுழிப்பு.

வயசோ வருஷமோ ஞாபகத்தில் இல்லை. ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே நிலத்திற்குப் போகும் அனுபவம் எப்போதும்போல அன்றைக்கும் வாய்த்திருந்தது.

புதிதாய் வாங்கின புஞ்சை நிலத்தில் கிணறு வெட்டு நடந்து கொண்டிருந்தது. கிணற்று மேட்டில் அப்பாவோடு உட்கார்ந்துகொண்டு நிமிஷத்துக்கொரு தடவை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை மொரம்பு, ஒட்டந்தட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தட்டு மொரம்பும் கொட்டப்படும் போதெல்லாம் அப்பா எதையோ தேடும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்துவிட்டு, அடுத்த நொடியே கிணற்றுக்குள் பார்க்கிறார். உள்ளே ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். கடப்பாரைச் சத்தம் மட்டுமே மேலேறி வருகிறது. புதிர்களால் கிணறும் சூழலும் நிரம்பியிருந்தது.

இப்போது வெளியே வந்து விழுந்த மொரம்பில் லேசான ஈரம் தெரிந்தது. இதற்காகவே தவமிருந்ததுபோல் அப்பா ஓடிப்போய் அதை அள்ளித் தன் முகத்தருகே சமீபித்தார். அந்த வெள்ளை மொரம்பைத் தன் முகத்தால் ஸ்பரிசித்தார். அதன் சில்லிடலில் அப்பாவின் முகம் பிரகாசமடைந்தது.

"வையாபுரி, நொசுவுல ஈரம் தெரியுது. இரு இரு நானே உள்ள வரேன்'' என்று ஆர்வம் மேலிட எழுந்த சத்தம் எல்லோரையும் மேல் நோக்கித் திரும்ப வைத்தது.

நீண்டு தொங்கிய ஒரு கயிற்றினூடே அப்பாவும், காலியான அந்த ஒட்டந்தட்டின் வழியே நானுமாய் உள்ளே இறங்கினோம். கிணற்றுக்குள் நல்ல இருட்டு. உள்ளே நின்றிருந்த ஆறேழு பேரையும் கண்கள் பழகிக்கொள்ளச் சில நிமிஷங்கள் தேவைப்பட்டன. கிணற்றுக்குள்ளிருந்து மேலே பார்த்தால் அச்சம் ஒரு விலங்கைப்போலக் கரையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அந்த அச்சத்தைத் தவிர்த்து, பார்வையைத் தரையிலேயே நிலைக்க முயற்சித்தேன்.

''வையாபுரி மொரம்புல ஈரம் தெரியுது. எந்தப் பக்கம்?"

"சனி மூலையில வாத்தியார"

அப்பா நிதானிக்கிறார்.

தன் அனுபவத்தாலும், பார்வையாலும் அப்பாவின் கண்கள் ஒரு குறிப்பட்ட வெள்ளைக் கல்லின்மீது படிகிறது.

"இந்தக் கல்லுக்குக் கீழ கடப்பாரையால மொள்ள நெம்பு"

எல்லோர் பார்வையும் கடப்பாரை நுனி விழப் போகும் அந்தச் சின்னக் கல்லின்மீது குவிய, வையாபுரி கடப்பாரையால் கல்லுக்கடியில் தாங்கி நெம்புகிறார்.

"நீர்"

இத்தனை யுகமாய்க் கல்லின் முட்டுக்குள் அடங்கியிருந்த நீரின் பிரவாகம். இருட்டிலும் மிளிர்ந்த அந்த மனித முகப் பிரகாசங்கள் அதற்குமுன் எப்போதும் நான் காணாதவை.

அப்பா என்னைத் தழுவித் தூக்கி, அந்த ஊற்றுக்கண்ணில் முகம் புதைய நீர் அருந்த வைக்கிறார். நான் ருசியால் சில்லிடுகிறேன்.

நீர் எங்களின் கால்மீதேறி நனைக்கிறது. நாங்கள் நிறைகிறோம்.

ஊற்றின் வேகம் அப்பாவை இன்னும் ஆர்வப் படுத்துகிறது.

"வையாபுரி உள்ள ஆறு, கீறு ஓடுதா பாருய்யா"

அப்பாவின் அந்தக் குதூகலம், என் வயதுக்கானது.

காலம், காலமாய்ப் பீறிட்ட அந்த ஊற்றை ஒரு சின்ன மொரம்புக் கல் தடுத்து வைத்திருந்தது மாதிரி நானும் அப்பாவைப் பற்றிய என் ஞாபகங்களை எழுதிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருந்தேன். எழுத்தின் தொடர்ச்சி எனக்குத் தெரியும், முடிவு நானறியாதது. எனக்குள்ளேயே அந்த ஊற்றுநீர் ததும்பிக்கொண்டிருந்தது. அதன் இசை வடிவமான சத்தம் என் ஜீவன். அடைத்துக் கொண்டிருந்த அக்கல்லை இன்று என்னிலிருந்து அகற்றுகிறேன்.

"அப்பா,"

கொட்டிக் கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?

எதை விட?

அப்பாவின் ஆசிரியப் பணி முடிந்து ஓய்வுபெற்ற சமயம் அது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாரானது. சி.பி.ஐ.(எம்), திமுகவுடனும், அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்திருந்தது. நான் திமுக வேட்பாளருக்குத் தீவிரமாய்க் களப்பணியிலிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய இரவு காங்கிரஸ் கட்சிக்கு பூத் ஏஜண்ட் கிடைக்காமல், மறதியின் பக்கங்களிலிருந்து பழைய காங்கிரஸ்காரரான என் அப்பாவை மீட்டெடுத்து, வாக்குச்சாவடியின் காங்கிரஸ் வேட்பாளரின் முகவராக உட்கார வைத்தார்கள். திமுக சார்பாக அன்று பூத் முகவராக இருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சி. சகலவிதமான தில்லுமுல்லுகளோடும் திமுகவினர் வாக்குகளைப் பதிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து என் பாட்டியைக் கண் தெரியாதவர் எனச் சொல்லி ஒரு திமுக உடன்பிறப்பு சாவடிக்குள் அழைத்து வந்தது. அதாவது அந்தப் பாட்டிக்குக் கண் தெரியாது. அதனால் அவர் உதவியோடு வாக்கை அந்தத் திமுகக்காரரே பதிப்பார். அப்பா ஆக்ரோஷத்தோடு இதை எதிர்த்தார். அதிகாரியிடம் "சார் இவங்க என் சொந்த மாமியார், என் வீட்லதான் இருக்காங்க. நல்லா கண்ணு தெரியும் சார்" என நீதியின் குரலைக் கொஞ்சம் உயர்த்தினார்.

நான் "சார் இவங்க என் சொந்த பாட்டி சார், பத்து வருஷமா கண்ணே தெரியாது சார்" என்ற ஒரு பெரும் பொய்யை அநீதியின் பலத்திலிருந்துச் சொல்ல, ஓட்டு அரசியல் எனக்குக் கற்றுத் தந்திருந்தது.

அந்தச் சாவடியின் பூத் அதிகாரி என் பாட்டியின் உயரத்திற்குக் குனிந்து,

"பாட்டிம்மா கண்ணு தெரியுமா?" எனச் சத்தம் போட்டுக் கேட்டார். வரிசையில் நின்ற எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பாட்டி மிகக்கவனமாக,

"பத்து வருஷமாச்சு சார் கண்ணு அவிஞ்சு," என்றது நிதானமாக, வாங்கியிருந்த 50 ரூபாய்க்கு விசுவாசமாக.

அப்பா, "இந்த அரசியலும் வேணாம், ஒரு மயிரும் வேணா"ன்னு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

அவர் முன் ஜெயித்துவிட்ட திமிரில் நின்ற நான்தான் அடுத்த தலைமுறையின் பிரதிநிதி. தனக்கு அடுத்த சந்ததி நேர்மை, அன்பு, உறவு எல்லாவற்றையும் பணத்துக்காக விற்கத் துணிவதை அவர் மனம் கடைசிவரை ஏற்கவேயில்லை.

அவருக்கான சில நியாயமான கோரிக்கைகளில் கடைசிவரை அவரால் வெற்றியடைய முடியாதபோது, நாங்கள் எவ்வளவு தடுத்தும் தான் பெற்ற நல்லாசிரியர் விருதை (100 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் அது) ஒரு நீண்ட கடிதத்துடன் அரசுத் தலைமைச் செயலருக்குத் திருப்பி அனுப்பினார்.

மத்திய அரசுக்கெதிராக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பாரத் பந்த் அது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் எனப் போலீஸ் கருதிய பட்டியலில் என் பெயரும் நண்பன் கருணா பெயரும் இருந்தது. இன்றிரவு நிச்சயம் கைது செய்யப்படலாம் எனக் கருதிய பொழுதில் நண்பர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமினோம். எல்லோர் முகத்திலும் பதட்டமும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவுமான அவசரமும் இருந்தது. சாப்பிட்டபிறகு, மூங்கில்துறைப்பட்டுக்குச் சென்று என் நண்பர் வீட்டில் தங்குவது பந்த் முடிந்த பிறகு திரும்புவது என முடிவெடுத்தோம். ஒரு ஈசிச்சேரில் படுத்தபடி எங்கள் திட்டம் முழுவதையும் கவனித்துக் கொண்டிருந்த அப்பா திடீரென நாங்கள் யாரும் எதிர்பார்க்காதபடி எழுந்து,

"இங்க பார்டா, இந்த வீட்ல இருந்து போக யாரையும் நான் விடமாட்டேன். பந்த்ல அரெஸ்ட் ஆகுங்க, அல்லது கட்சியில இல்லன்னு எழுதிக் கொடுத்துடுங்க. மீறிப்போனா, நானே எங்க போயிருக்கீங்கன்னு போலீசுக்குச் சொல்லிடுவேன்" என கர்ஜித்தார்?

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நாங்கள் நிலைகுலைந்தோம். அவர் எதிர்பார்த்தபடியே அன்றிரவு நான் கைது செய்யப்பட்டேன். என் நண்பர்கள் தப்பித்தார்கள். கொள்கையின் மீதான இந்த மூர்க்கத்தைத் தன் இறுதி நாள்வரைத் தனக்குள் வைத்திருந்தவர் அவர்.

என் திருமணம் வரையிலும்கூட நானும் அப்பாவும் தெருவில் நின்று சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்துத்தெருவரை அவர் என்னைத் துரத்தி, துரத்தி அடிப்பது என் கல்லூரிப் படிப்பு முடியும்வரை தொடர்ந்திருக்கிறது. ஒரு முறை நானும் அப்பாவும் போட்ட சண்டையின் தொடர்ச்சியாக அவர் பெட்டியை எடுத்து வெளியில் வீசி எறிந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் எதிரில் தோலில் மாட்டிய தோள் பையோடு கோணங்கி. அவன் அதிர்ச்சியடைந்தான்.

அந்த அனுபவத்தை "சாரோனின் சாம்பல் இறகு" என்று சிறுகதையாக்கியிருக்கிறான். பேரன்பினால் எழும் பிரச்சனை இதுவென நல்ல வேளை என்னைப் போலவே கோணங்கியும் புரிந்து வைத்திருந்தான். நானும் இவ்வனுபவத்தை என் "சிதைவு" சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன்.

அப்பா தன் இருபத்தி ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்து, வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் என்ற ஒரு புகழ்பெற்ற குன்றுக்கருகில் தான்தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த ஒரு எட்டி மரத்தை, தன் தற்கொலையை நிறைவேற்றித்தரத் தேர்ந்தெடுத்தார்.

மறு பரிசீலனைக்கிடமின்றி மாலை ஐந்து மணிக்குக் கோட்டாங்கல் பாறையில் மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. எதற்கெனத் தெரியாமலே கண்ணிலிருந்து நீர் வழிகிறது. சரியாக ஆறு மணிக்கு இப்பேரமைதியைக் குலைத்து வாணவேடிக்கைகளும், வெடிச் சத்தங்களும் அவரை அலைக்கழிக்கின்றன. தன் அகமனதை ஊடுருவும் இப்புற உலக இயக்கத்தை எத்தனை தடுத்தும் அவரால் நிறுத்த முடியவில்லை.

கண்கள் மேற்கையே வெறிக்கின்றன. சுகுமாரன் சொல்வதைப் போல தற்கொலையில் தோற்றவனின் மௌனமல்ல அது. தற்கொலைக்குத் துணிந்தவனின் மௌனம். எதிரில் ஒரு மங்கலான ஓவியம்போலத் திருவண்ணாமலை மலை தெரிகிறது.

தீபச் சுடரொளி பற்றிப் பிரகாசிக்கிறது. அவ்வொளியின் வெப்பத்தை இம்மலைமேட்டில் படுத்துக்கிடக்கும் அப்பாவின் சரீரம் உணர்கிறது.

துடித்தெழுகிறார்.

அதற்குப்பிறகும் அந்த எட்டி மரத்தில் ஆறேழு நாட்கள் அந்தக்கயிறு தொங்கி கொண்டிருந்ததாகவும், பின்பொருநாள் அப்பாவே அதை அகற்றியதாகவும் சொல்வார்.

தன் இறுதி நாள்வரை அப்பாவை ஒரு நாத்திகனாகவே நாங்களெல்லாம் அறிந்தோம். வெளிவாழ்வு, உள்வாழ்வு இதெல்லாம் தெரியாத மனுஷன் அவர். ஆனால் தன் வாழ்வின் அந்திமம் வரை ஒரு ரகசியத்தை அடைகாத்தார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு கார்த்திகை தீபத்தன்றுதான் அந்த இரகசியத்தை அவிழ்த்துப்பார்த்தோம்.

ஒவ்வொருத் தீபத்தன்றும் காலையிலேயே குளித்து முடித்து, தூய வெள்ளை உடுத்திப் பத்து மணிக்கு சைக்கிளில் புறப்படுவார். எங்கேயெனக் கேட்க யாருக்கும் துணிவிருக்காது. பதிலைக் குடும்பத்துக்குள் கொட்டிவிட்டுத்தான் புறப்படவேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இருந்ததில்லை அவருக்கு.

ஒரு மணிக்குத் திரும்பி விடுவார்.

ப்ராட்டஸ்டன்ட் கிருத்துவக் குடும்பமாகிய எங்கள் வீட்டில் எந்தக் கார்த்திகை தீபத்தன்றும் மத்தியானத்தில் சமைத்ததில்லை. தீபம் பார்த்த பிறகே, மொட்டைமாடியில் இலை போட்டுச் சாப்பாடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசாமல் ஏதோ அடங்காத மனதோடு உலாத்திக் கொண்டிருப்பார். தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு. தனக்கு வாழ்வு கொடுத்த தீப ஒளிக்கு பல ஆண்டுகளாக அவர் செலுத்தும் மௌன அஞ்சலி என நான் புரிந்து கொண்டேன்.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தோல்வியில் முடிந்த ஒரு தற்கொலை முயற்சியின் அலைக்கழிப்பு இப்படி முடிந்தது.

1999 நவம்பர் 23. அதே தீபத் திருநாள். ஊரே பரபரப்பில் இயங்குகிறது. அப்பாவால் சைக்கிளை எடுக்க முடியாது. முதுகுத் தண்டில் அடிபட்டு எழ முடியாமல் படுத்திருந்தார். காலை பத்து மணியிருக்கும், என்னைத் தன் படுக்கையருகே அழைத்து அமரச் சொல்கிறார். கண்களில் துளிர்க்கும் நீர் வழிகிறது.

"பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னக்கி என்னால போக முடியலை. நீ எனக்காகச் செய்வியா? வார்த்தைகளில் கொஞ்சம் அவ நம்பிக்கையிருந்தது."

என் துக்கமும் கண்ணீராய்த்தான் வழிந்தது.

'எனக்கப்புறமும் என் பேர்ல இதைச் செஞ்சுடுப்பா' என் சிறுவயது முதலே மார்க்சிய சிந்தனைகளில் வளர்ந்த எனக்கு வீட்டிற்குள்ளிருந்தே ஒரு நாத்திகனால் விடப்படும் முரண்பாடான கோரிக்கை இது.

'கண்டிப்பா செய்வம்ப்பா'

அன்று மாலை தீபம் ஏற்றும் முன் நான் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியில் போயிருந்தேன். ஒரு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பில் ஜனக் கூட்டத்தை விலக்கி வீட்டிற்கு வந்தேன். ஹாலில் அப்பாவைப் படுக்க வைத்து எல்லோரும் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

'எப்படி ஷைலஜா?' என்றேன். அப்பாவுடனான கடைசி உரையாடலை அவள் என்னிடம் சொன்னாள்.

'தீபம் பார்க்க மாடிக்கு போறம்பா'

'பாத்துட்டு வாங்கம்மா'

தீப ஒளியை அவசரமாக தரிசித்துவிட்டுக் கீழிறங்கி வந்து,

'அப்பா தீபம் ஏத்திட்டாங்கப்பா' என்றிருக்கிறாள்.

'ரொம்ப சந்தோஷம்மா'

அதுதான் அப்பா பேசின கடைசி வார்த்தை.

ஒவ்வொரு வருடமும் மலைமீது ஏற்றப்படும் தீப ஒளிக்கு, ஒரு மார்க்ஸியக் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் அப்பாவின் பெயரைத் தாங்கின அரைக்கிலோ நெய்க்குடமும் உண்டு.