Tuesday, January 18, 2011

one summer hey


உலக வரைபடத்தில் போர்ச்சுக்கல் என்ற நாடு எங்கே இருக்கிறதென இன்னமும் என்னால் அடையாளப்படுத்த முடியாது. ஆனால் என் நண்பன் பினுபாஸ்கர் இப்போது தினமும் அங்கிருந்துதான் என்னோடு பேசுகிறான்.

எங்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிற எவரையும் அதற்கு நேர் எதிரே மாட்டிவைக்கப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளையிலான ஒரு பெரிய புகைப்படம் வசீகரிக்கும். அது ஒரு கடும் கோடையில், எங்கள் நிலத்தில் பெயர்த்துப்போட்ட ராஜாக் கற்களுக்கிடையே என்னைக் குடும்பத்தோடு உட்கார வைத்து பினு எடுத்த கருப்பு வெள்ளைப் புகைப்படம். அப்படம் எடுப்பதற்காக, பினு எங்கள் வீட்டிற்கு வந்தபோதுதான் எங்கள் தோழமை மலர்ந்தது. பூனைக்குட்டிகளின் ரோமங்களிலான மென்மை அவனுக்கு வாய்த்திருந்தது. தேக்கி வைத்திருக்கும் புன்னகை எப்போதும் கசிய, யாரையும் கைகுலுக்கக் கோரும் முகம் அது.

south asian couples என்ற தலைப்பில் கலைத்துறையில் சேர்ந்தியங்கும் கணவனையும், மனைவியையும், அவர்கள் குடும்பத்தையும் தான் லண்டனில் நடத்த இருந்த ஒரு கண்காட்சிக்காக புகைப்படம் எடுக்கவே பினு திருவண்ணாமலைக்கு வந்திருந்தான்.

என்குடும்பத்தையும், காயத்ரி கேம்யூஸ் குடும்பத்தையும் அந்தப் புகைப்பட sessionக்கு தேர்வு செய்திருந்தான். ஒரு முற்றிய வயலில் ஆனந்த் - காயத்ரி குடும்பத்தை உட்காரவைத்து அவன் எடுத்திருந்த புகைப்படம் மிகப்பெரிய கலை ஆளுமைகளுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடியது. அப்படங்கள் எடுத்து முடிக்கப்பட்ட அன்று இரவு காயத்ரியின் ஸ்டுடியோவில் நான் பினுவை முதல்முறையாகச் சந்தித்தேன். ஒரு ''மூலையில் தரையில் அமர்ந்து அவன் தனியே மது அருந்திக் கொண்டிருந்தான். சுற்றிலும் நான்கைந்து பூனைகள் சூழ்ந்திருந்தன. நல்லப் புகைப்படக்காரன் தவறவிடக்கூடாத தருணமான அது, ஒரு திரைப்படத்தின் காட்சிபோல இருந்தது.

ஒரு சின்ன கைகுலுக்கலுக்குப் பின், 'நாளை உங்க family ஐ படம் எடுக்கலாம் பவா' எனக்கொஞ்சம் தமிழ், கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து வாஞ்சையோடு சொன்னான். அவ்வார்த்தைகளுக்காவே காத்திருந்தவனைப் போலவே நான் உடன் சம்மதித்தேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி இருக்கும். பினு பைக்கில் எங்கள் வீட்டிற்கு வந்தது, அவசர அவசரமாக எங்களைப் புறப்படச் சொல்லி நிலத்திற்கு அழைத்துப் போனதென்று எல்லாமும் இன்னும் நினைவில் இருக்கிறது. வெளிச்சம் போய்விடும் என்கிற பதைப்பு அவனை அசுரத்தனமாக இயங்க வைத்தது. எங்கிருந்தோ ஒரு கயிற்றுக் கட்டிலை அவனே தூக்கி வந்து போட்டான். சூழலை இன்னும் பழமையாக்க, குண்டு கற்களைக் கொண்டுவந்து, குவித்துக் கொண்டிருந்தான். நான் அதைத் தடுத்தேன். இதை நானோ இங்கிருக்கும் சிலரோ செய்ய முடியும் எனச் சொன்னதை அவன் மறுத்தான். 'ஒரு போட்டோகிராபரின் வேலை காமிராவைக் கையாள்வது மட்டுமல்ல பவா. அதற்கானச் சூழலை உருவாக்குவதும்தான்' என்பதை மிக அழகான ஆங்கிலத்தில் சொன்னபோது நான் அமைதியானேன்.

மிகப்பெரிய புகைப்பட ஆளுமைகளோடு நான் பழகியிருக்கிறேன். வேறு எவரிடமும் நான் காணாத இத்தன்மை என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவன் எதிர்பார்த்த ஒரே ஒரு புகைப்படம் கிடைக்கும்வரை தொடர்ந்து தன் கேமிராவில் இயங்கிக் கொண்டேயிருந்தான். தூரநின்று பார்ப்பவர்களுக்கு இது ஒரு மாய விளையாட்டுபோலத் தோன்றியிருக்கும். அந்த இயக்கம் முழு ஈடுபாட்டோடு ஒரு துறையில் மூழ்கும் கலைஞர்களுக்கே சாத்தியம். ஒரு தொழில்முறைக் கலைஞனால் தன் இறுதிநாள்வரை இந்த இடத்தை எட்டவே முடியாது.

பலமணிநேரங்கள் காத்திருந்து, காயத்ரி கேம்யூஸ் தன்மகன் அருணாச்சலாவை விரிந்த மரச் செறிவுகளினூடே அழைத்து வரும் கணத்தை அவன் பதிவு செய்ததற்காக மட்டுமே அவன் கைகளில் நான்கைந்து முத்தங்கள் தந்தேன்.

பினு பிறந்தது குருவாயூரில் என்றாலும் நான்காம் வகுப்புவரை படித்தது வேலூரில்தான். அப்பா சி.எம்.சி.யில் மருத்துவர். தன் மகனையும் தன்னைப்போலவே மருத்துவராக்க வேண்டும் என்ற அப்பாவின் சராசரிக் கனவை நுழைவுத் தேர்வுக்குப் போகிறேன் எனச்சொல்லி சினிமாவுக்குப்போய் பினு தகர்த்தான். மகனின் கலை உணர்வைச் சிதைக்க விரும்பாத அவன் அப்பா சென்னைத் திரைப்படக்கல்லூரியில் சேர்த்துவிட செய்த முயற்சியும் தோல்வியுற்றது. அதில் விரக்தியுற்று இந்தியா முழுக்க கேமிராவும் கையுமாக அலைந்து கொண்டிருந்தவனை,

''உனக்கு ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் ஆர்ட் போட்டோகிராபர் பிரிவில் சேர அனுமதிக் கடிதம் வந்துள்ளது. புறப்பட்டு வா'' என்று அப்பாவின் வார்த்தைகள் தந்த நம்பிக்கை திரும்ப அழைத்தது. தன் பெருங்கனவுகளைச் சுமந்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்குப் பயணமானான்.

அப்புகைப்படக் கல்லூரி பினுவைச் செதுக்கியது. கேமிரா தன் கையில் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் என்பதை மெல்லப் புரிய வைத்தது.

தன் சகக் கல்லூரித்தோழி 'லெஸ்லே ஸ்லேட்டர்' உடனான காதல் அவனை இன்னும் பூக்க வைத்தது. இவ்வாழ்வு பூக்களையும், பனித்துளிகளைச் சேர்த்து வைத்து ஜாலம் காட்டும் இலைகளையும், ஆஸ்திரேலியா புல்வெளியெங்கும் குதித்துத் திரியும் கங்காருக்குட்டிகளையும் போன்றது மட்டுமே என நம்ப வைத்த காலமது. அதீதக் காதல் திருமணத்தில் முடிந்து, தன் செல்ல மகனுக்கு அவர்கள் one summer hey என்று பெயரிட்டார்கள்.

தன் சொந்த மாநிலத்திற்கு ஒரு கோடை விடுமுறைக்குத் திரும்பிய பினு மாறி வரும் கேரளாவைப் பார்த்து பதைத்துப்போனான். குறிப்பாக வயல்கள். பாலக்காட்டைச் சுற்றியிருந்த பச்சை வயல்களின் அழிவு அவனைச் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது. Distance என்று பெயரிட்டு இந்திய வயல்வெளிகளில் அவன் எடுத்த பல ஆயிரக்கணக்கான படங்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்தத் துயரத்தைப் பினுவால் தாங்க முடியவில்லை . தன் பிரத்தியேக மன உலகம் சிதைவதை உணர்ந்தான். குடும்ப உறவுகள் அவனை எல்லைக்குள் அடக்கி விடும் என வாழ்வைப் பார்த்து பயந்து தனியானான்.

துபாயில் ஓர் உலக அளவிலான விளம்பரக் கம்பெனியில் தலைமை வடிவமைப்பாளராக கிடைத்த பணியில் பொருளீட்டிக் குவித்தான். கலைஞனின் மனது இதிலெல்லாமா அடங்கும்? அப்பணியில் சலிப்புற்று தன் காரில் விமான நிலையம் வரை வந்து காரை அங்கேயே நிறுத்திவிட்டு கார் சாவியைத் தூக்கி எறிந்துவிட்டு இந்தியாவிற்கு விமானம் ஏறினான்.

தான் எடுக்கும் புகைப்படங்களைப் பினு இப்படிப்பகுத்துக் கொண்டான். அகங்காரம் (ego) குருடு(blind) குள்ளம்(drawf) இந்த மூன்று கருத்தாக்கங்களில் மட்டும்தான், தான் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று முடிவு செய்தான்.
''மனிதனின் உள் அகங்காரத்தை ஒரு புகைப்படத்தில் பதிவு செய்யமுடியுமா பினு''
''என் dislocation என்ற தலைப்பிலான எல்லாப் படங்களும் அதையே பிரதிபலிக்கின்றன பவா. இதே இடப் பெயர்வை காயத்ரி கேம்யூஸும், தன் பெயிண்டிங்கில் சொல்கிறார்களே. அதனாலேயே நானும் காயத்ரியும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து dislocation என்ற பெயரில் ஒரு புகைப்பட ஓவியக் கண்காட்சியை 2009ல் துபாயில் ஏற்பாடு செய்தோம். என்னுடைய ஒரு புகைப்படம் அதில் விற்பனையானது.''

''என்ன விலைக்கு பினு?''

''இரண்டரை லட்சம்.''

நான் அதிர்ச்சியானேன்.

''ஒரு புகைப்படத்திற்கான விலையா இது? அப்புறம் என்ன செய்யப்போகிறாய் பினு?''

''என் பூனைகளோடு விளையாடிக்கொண்டிருப்பேன்.''

இந்த டிசம்பர் மாதக்குளிர் இரவுகளில் புத்தகம் பதிப்பிக்க தொடர்ந்து கண் விழிக்கும் இந்த இரவுகளில் திடீரென பினுவின் ஞாபகம் மேலெழும்ப, ஒரு பின்னிரவில் பத்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்கள் வேண்டுமென கேட்டிருந்தேன்.

நினைவடைந்த சில மணிநேரங்களின் முடிவில் பத்து புத்தகங்களுக்கான அட்டைப்படங்களும் அடுத்த மின்னஞ்சலிலேயே என்னை அடைந்தன. அப்படங்களின் பிரமிப்பு இன்னும் தீரவில்லை. ''பினு இதற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் உனக்கு''

''பவா, போர்ச்சுக்கல்லில் கொசுத்தொல்லை அதிகம். என் மகனுக்கு ஒரு odomas வாங்கி அனுப்புவாயா?''

5 comments:

  1. பினுவையும் உங்களையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் மேலிடுகிறது.

    ReplyDelete
  2. மழை எப்போது பொழியுமென்று எவருக்கும் தெரியாது பவா. மழை மனிதர்களை எங்கே சந்திப்போமென்றும் உறுதியாகச் சொல்லவியலாது. ஆனால் நாம் இப்படியான மனிதர்களை ஒவ்வொரு நாளும் நம் கண்ணெதிரே கடந்து கொண்டேதான் இருக்கிறோம். அவர்களைத் தரிசிக்கும் அகக்கண் உங்களுக்கு வாய்த்திருக்கிறது பவா. உங்களின் கண்கள் வழியே எங்களுக்கும் அந்த அற்புத மழை ஸ்பரிசம் தீண்டலாகவும், காணலாகவும் கிடைப்பது அலாதியானதொரு அனுபவம்.

    ReplyDelete
  3. ''மனிதனின் உள் அகங்காரத்தை ஒரு புகைப்படத்தில் பதிவு செய்யமுடியுமா பினு''
    '
    ''என் dislocation என்ற தலைப்பிலான எல்லாப் படங்களும் அதையே பிரதிபலிக்கின்றன -சிற்பியின்

    நேர்த்தி வார்த்தைகளில்

    ReplyDelete
  4. பினுபாஸ்கர் எடுத்த புகைப்படங்களை காண வலைத்தளமோ அல்லது ப்ளாக்
    எதாவது உள்ளதா ?

    ReplyDelete