கல்குதிரை என்ற சிறுபத்திரிகையின் ஒவ்வொரு இஷ்யுவும் முடிந்தவுடன், வளர்ந்த தாடியுடனும், அழுக்கான சட்டையோடும், கசங்கிய பழந்துணி மாதிரி கோணங்கி திருவண்ணாமலைக்கு வருவான். நாங்கள் இருவரும் கிளம்பி நிலத்துக்குப் போவோம். கிணற்றிலோ பம்புசெட்டிலோ ஊறிக்கிடந்து குளித்தெழுவோம். ஒவ்வொரு முறை இப்படி நிகழும் போதும் மெட்ராஸ் அலுப்பு இப்பதாண்டா போச்சு என்பான் கோணங்கி.
இந்த முறையும் சென்னை புத்தக கண்காட்சி முடிந்து வந்தவுடன் நான் கிணற்றில் குதித்து ஊறிக்கிடந்தேன். இன்னமும் மெட்ராஸ் அலுப்பு மிச்சமிருக்கிறது. என்னில் எந்தப் புத்தக கண்காட்சியும் பெரிதாய் ஒட்டவில்லை இந்த வருடம் அப்படியே. வியாபார தந்திரங்களும், சக பதிப்பாளர்கள் மீதான வன்மமும், புதுப்பதிப்பாளர்களுக்கு மூத்தவர்கள் கொடுக்கும் இலவச அட்வைஸ்களும், சில சமயம் பேருரைகளும் சகித்துக் கொள்ள முடியாதவைகள்.
நான் 13ம் தேதிதான் புத்தக கண்காட்சிக்கு புறப்பட்டேன். அதற்குள் தொலைபேசியில் மம்முட்டி அழைத்து, அவரை பாண்டிச்சேரி வந்து சந்தித்துவிட்டு போகமுடியுமா என கேட்டார். அவரின் மூன்றாம் பிறை (மொழிபெயர்ப்பு கே.வி.ஷைலஜா) ஒரு பிரதி மட்டும் என்னிடமிருந்தது. சில நண்பர்களோடு புறப்பட்டு பாண்டிச்சேரி சென்றேன்.
மாலை 5 மணிக்கு பாண்டிச் சேரியின் புறநகர் பகுதியிலுள்ள ராஜீவ்காந்தி கால்நடைக் கல்லூரியின் இரண்டாம் தளத்தில் மம்முட்டி படப்பிடிப் பில் இருந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொள்கிறோம். நெகிழ்வோ, ஆரவாராமோயின்றி மிக சகஜமாக என்னை வரவேற்றார். புத்தகத்தை கையில் 'தந்தவுடன் எனக்குத் தமிழ்படிக்கத் தெரியாதே' இவன்தான் படிப்பான் என்று தன் உதவியாளர் ஜார்ஜ்யிடம் தந்தார். உடனேயே அதை மறுபடியும் வாங்கி, என்னைப் படிக்கச் சொன்னார். நான் அது படப்பிடிப்புத்தளம் என்பதை மறந்து உரக்க வாசித்தேன். படப்பிடிப்பு நின்று அங்கிருந்த 200 பேரும் அதைக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படத்தின் கதாநாயகி எங்கேயோ பார்த்தமாதிரியேயிருந்த நதியா. எல்லோரும் அவர் வாழ்வனுபவத்தை குடித்துக்கொண்டிருந்தார்கள்.
அது இதே மாதிரி ஒரு படப்பிடிப்பு நடந்த வீட்டிலிருந்து அந்த வீட்டுப் பையன் எனத் தெரியாமல் அவனை வெளியேற்றிய சம்பவம்.
நான் வாசிக்க, வாசிக்க அவர் முகமாற்றங்களை புகைப்படகலைஞன் புதுவை இளவேனில் படமாக்கிக் கொண்டிருந்தார்.
மெளனம் நீண்டது.
'கவனிச்சிங்களா பவா, இதிலுள்ள எல்லா சம்பவங்களிலும் நான் தான் முரடன், நான்தான் வில்லன். என்னிடம்தான் கர்வம் உண்டு, நான்தான் தலைக்கணம் பிடித்தவன் என்று அப்புத்தக சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
படத்தின் இயக்குனர் தன் படப்பிடிப்பு நின்றதற்கான காரணம் தெரியாமல், அவரும் கதை கேட்க பார்வையாளர்களில் ஒருவராக நின்றிருந்தார்.
'இன்னொரு பகுதி படி பவா' அதுவும் எதுவென அவரே சொன்னார், ஆக்ஷன் பாபு. அதன் தலைப்பு.
தமிழ் நாட்டின் ஒரு உட்புறமான கிராமத்தில் படப்பிடிப்பு முடிந்து பின்னிர வில் மம்முட்டி காரில் திரும்பிக் கொண்டிருப்பார். வழியில் ஒரு மொபெட்டை தள்ளிக் கொண்டு போகும் ஒரு ஆஜானுபாகுவான மனிதனோடு அப்பெண் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பாள். பார்த்தும் பார்க்காதது மாதிரி கார் சில கிலோமீட்டர்கள் கடந்து போகும். ஆனால் மம்முட்டி என்ற சாதரண மனிதன் உள்ளிருந்து கிளர்ந்தெழுவான். கார் மீண்டும் திரும்பும். ஒரு மூடப்பட்டிருந்த குடிசையின் முன் அந்த ஆள் நின்று கதவை எட்டி உதைப்பான். ஒரு வயதான ஆள் கையெடுத்து கும்பிட்டவாறு வெளியே வருவான். அடுத்த பத்தாவது நிமிடம் அப்பெண் இருட்டைக் கிழித்துக் கொண்டு மொபெட்டில் பறப்பாள். அந்த ஆஜானுபாகுவான ஆள் அங்கிருந்த தன் புல்லட்டை எடுப்பான்.
மம்முட்டி காரைவிட்டு இறங்கி, அந்த வயதான ஆளிடம் என்ன நடந்தது என விசாரிப்பார்.
சார் பக்கத்து மில்லுல அந்தப் பொண்ணு வேலை பாக்குது, அது வண்டி பஞ்சராயிருச்சி, எங்கிட்ட வந்து பஞ்சர் ஒட்ட கேட்டப்போ, பையன் போயிட்ட தால முடியாதுன்னு திருப்பி அனுப்பிட்டேன் அப்போதான்
அந்த ஆளு வண்டியை இங்கேயே நிறுத்திட்டு என் வண்டில வான்னு கூப்பிடத் துக்கு வரமுடியாதுன்னு முரண்டு பிடிச்சதைதான் நீங்க பார்த்தது. அப்புறம், அந்த ஆளே வந்து என் வீட்டுக் கதவை எட்டி உதைச்சு ஒடைச்சி நானே பஞ்சர் போட்டுக் கொடுத்தேன்.
அந்த ஆள் வந்த உடனே நீ எப்படி பஞ்சர் ஒட்ட ஒத்துகிட்ட.
சரியா போச்சு சார். உங்களுக்குத் தெரியாதா? நான் அதுக்கப்புறம் இந்த ஊர்ல தொழில் செய்ய வேணாமா? அந்த ஆள்தான் 'ஆக் ஷன் பாபு'.
அந்த ஆக் ஷன் பாபு என்ற ரவுடிக் கேரட்டரில் தான் இவர் நடிக்கிறார். இரவில் தனியேப் போகும் பெண்ணிடம் அவன் நடந்து கொண்ட கன்னியம் எங்கே? காரைவிட்டு இறங்கினால் ஏதாவது விபரீதமாகிவிடுமோ என பயந்து காருக்குள்ளேயே உட்கார்ந்திருந்த நானெங்கே? அவன்தானே ஹீரோ என அக்கட்டுரை முடியும்.
படப்பிடிப்புக் குழுவினர் மீண்டும் மௌனத்திலிருந்தார்கள். சிறு அசைவும் கவனத்துக்குள்ளானத் தருணமது. நான் அவருடனான கைக்குலுக்கலில் விடைபெற்று சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புறப்பட்டேன்.
எப்போ அந்தப் புத்தகம் அனுப்பறீங்க சார்...
ReplyDeleteஉங்கள் குரலில் கதை கேட்பதே ஒரு சுக அனுபவம் தான். கூடில் கதை சொல்லி பகுதயில் மானசி, வம்சி மற்றும் உங்கள் கதைகள் மிக அருமை, குறிப்பாக "வேட்டை" அற்புதம்.ஜப்பான் கிழவன் இன்னும் மனசில் இருக்கிறார்.
ReplyDeleteஆத்துமமே! என் முழு உள்ளமே, உன் ஆண்டவனை தொழுதேத்து!. இந்நாள வரை அன்பு வைத்து ஆதரித்த, உன் ஆண்டவனை தொழுதேத்து!! கண்ணிகள் அவர் பையில் பத்திரமாய் இருந்தது!!!.... அருமையான வரிகள்.
பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு நல்ல கலைஞனின் மனநிலையை உணரமுடிந்தது.
ReplyDeleteஉங்கள் அனுபவங்களை மேலும் கேட்க ஆசையாய் இருக்கிறது.