Sunday, January 16, 2011

impossible friend


சந்திப்பு-3

எங்கள் மூன்றாவது சந்திப்பிற்கிடையே ஆறுமாதங்கள் கடந்திருந்தன. இதற்குள் காட்சிகள் மாறி, மனிதர்கள் மாறி, பருவநிலைகளும் மாறியிருந்தன. வெயிலடித்த மார்ச் மாதம் அது. அவரைச் சந்திப்பதற்காகச் சன்னதித் தெரு வீட்டு வாசலில் நிற்கிறேன். காசியை யோகி வெளியேற்றக் காரணமாக இருந்த அந்த இரும்புக் கேட்டைப் பிடித்துக் கொண்டு உள் முற்றத்தை ஊடுருவினேன். ஆண்களும் பெண்களுமாகப் பத்திருபது பேர் சுற்றிலும் அமர்ந்து பஜன் பாடிக் கொண்டிருக்க, யோகிக்கருகில் பாலகுமாரன் உட்கார்ந்திருந்தார். இருவர் கைகளிலும் புகைந்த சிகரெட் நெருப்பு தெரிந்தது.

நான் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்த நாட்கள் அவை. முதன் முறையாய் யோகியின் வாழ்வுமீது பொறாமை வந்தது. வெயிலேறிய இந்த நாட்களில் தொடர்ந்து என் அலைச்சலும் ஏமாற்றமும். வீட்டில் அப்பாவின் திட்டும், இம்மனிதனின் சௌகர்யமான வாழ்வின் மீது எரிச்சல்பட வைத்தது. இப்படியே திரும்பிப்போய்விடலாமா என நினைத்த கணம் அவரே எழுந்து வந்து கேட்டைத் திறந்து என்னைத்தழுவி அழைத்துபோய் அவரருகில் அமரவைத்தார். ஒருபக்கம் பாலகுமாரனும் இன்னொரு பக்கம் நானுமாய் சுரத்குமாருக்கு அருகில் இருந்தோம். பாலகுமாரன் தமிழ்ப் பத்திரிகை உலகைத் தனதாக்கி வைத்திருந்த நாட்கள் அவை. பாதி திறந்திருந்த கதவின் வழியே உள்ளே பார்த்தேன். பண்டல், பண்டலாய் சார்மினார் சிகரெட்டுகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. சரியாக நினைவில்லை. டாட்டா, அம்பானி இப்படி யார் விட்டுப் பெண்ணோ வாங்கி வந்து அடுக்கியது என்று வெளியே கசிந்த செய்தி ஞாபகத்திற்கு வந்தது.

அவர்கள் யாரிடமாவது சொல்லி இவர் நமக்கு ஒரு வேலை வாங்கித் தரமாட்டாராவென யோசித்தேன். என் மனநிலைக்குக் கொஞ்சமும் சம்மந்தமின்றி பஜன் சத்தம் அதிகரித்தது. சகிக்க முடியாததாக இருந்தது.

எழுந்து போய்விட வேண்டுமென உள்ளுக்குள் தீர்மானித்து எழுந்தேன்.

என் கையைப் பிடித்திழுத்து அமரவைத்து,

'ஏன் அவசரமா பவா?' என்றார் ஆங்கிலத்தில்

'இல்லை எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை.' நானும் ஆங்கிலத்தில் சொன்ன பதிலில் பஜன் நின்றது.

சுரத்குமார் என்னயே உற்றுப் பார்த்தார். அக்கண்களைச் சந்திக்க இப்போதும் வலிமையற்று கீழே குனிந்து கொண்டேன். ஏதோ ஒரு அடங்காத மனக் கொந்தளிப்பு அன்றிருந்தது. அவர் என்முதுகில் தட்டிக் கொடுத்து

'சிகரெட் புகைப்பாயா?' என்றார்.

இல்லையெனத் தலையசைத்தேன் பாலகுமாரனைப் பார்த்து கொண்டே. அவர் அப்போதுதான் இன்னொரு புது சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார.

இதெல்லாம் ஏதோ ஒரு நாடகத்தின் காட்சிபோல இருந்தது எனக்கு.

மௌனம் நீண்டு நேரம் நீடித்தது.

சட்டென என் கையைப் பிடித்து, ''தகழியின் செம்மீனைத் தமிழில் மொழிபெயர்த்தது யார்?'' எனக் கேட்டார்.

நான், 'சுந்தரராமசாமி' என்றேன்.

''அவரை உனக்குத் தெரியுமா?''

''பார்த்ததில்லை, தெரியும்.''
''தமிழில் வெளியான முக்கியமான பத்து நாவல்களின் பெயரைச் சொல்''

இப்போது எனக்குப் பட்டியல் நினைவிலில்லை. ஆனால் அதில் ஜே.ஜே.சில குறிப்புகளைச் சொன்னதும், பாலகுமாரனைச் சொல்லாததும் நினைவிலிருக்கிறது.

இங்கிருந்து போய்விட வேண்டும், போய்விட வேண்டும் என உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. நான் மீண்டும் எழுந்து புறப்பட்டபோது அவர் தடுக்கவில்லை. கையில் ஒரு ஆப்பிள் பழம் தந்து. 'My father bless you' என்று அதே அழகான ஆங்கிலத்தில் சொன்னார்.

ஆனால் அடுத்த நாள் காலையிலேயே அவரை மீண்டும் சந்திக்க வேண்டியிருந்தது எனக்கு. தூர்தர்ஷனில் பணிபுரிந்து கொண்டிருந்த என் நண்பன் ஆடையூர் ரவி வயது முதிர்ந்த ஒரு அதிகாரியோடும் அவருக்கு ஓட்டுனராயிருந்த ரவியின் அண்ணன் பன்னீர்செல்வத்தோடும் என் வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்தான். அந்த அதிகாரி காரிலேயே உட்கார்ந்திருந்தார். ரவியில் அண்ணன் பன்னீர்செல்வம்தான் இறங்கி வந்து பேசினார்.

பவா இவர் பெயர் சேஷய்யா. தூர்தர்ஷனில் தென்மண்டல தலைமைப்பொறியாளர். ஆந்திரா சொந்த மாநிலம். இவருக்கு எப்படியாவது விசிறி சாமியாரைப் பார்க்க வேண்டும் என பேசிக்கொண்டே போனார். நான் இரண்டே நிமிடங்களில் அவர்களோடு கிளம்ப வேண்டியிருந்தது. காரின் முன் சீட்டில் நான் அமர்ந்திருந்தபோதும் அந்த அதிகாரி என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. எனக்கு அவரிடம் பேசத் தோன்றவில்லை.

சன்னதித் தெரு வீட்டிற்கு கொஞ்சம் முன்னாள் நிற்கும் மரத்தேரருகே காரை நிறுத்திவிட்டு அவரைப்பார்க்க நடந்தோம். அவரைச் சந்திக்க வைப்பது என் கடமையென்பது மாதிரி அந்த அதிகாரி என்னைப் பின் தொடர்ந்தார்.

யோகியின் வீடு பூட்டியிருந்தது.

பூட்டியிருந்த அவ்வீட்டை நோக்கி அந்த அதிகாரி வணங்கினார். நாங்கள் திரும்பி எத்தனித்த பொழுது, எங்களைப் பார்த்து எங்கிருந்தோ ஓடி வந்த சசி என்ற யோகியின் வளர்ப்பு மகன் என் கையைப்பிடித்து,

''அண்ணா, சாமி விருதுநகர் இந்து நாடார் மடத்துல பாலகுமாரன் சாரோட இருக்கார்ண்ணா. நீங்க அங்க போங்க'' என்றான்.

எங்கள் கார் திருவூடல் தெருவில் விருதுநகர் மடத்தின் முன் நின்றது. ஆட்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியுமற்று அமைதியாய் இருந்தது மடம். அந்த அமைதிக்கு அந்நியப்பட்டு வெளியே நான்கைந்து கார்கள் நின்றிருந்தன.

நாங்கள் மெல்ல மாடியேறினோம். அப்போதுதான் அந்த அதிகாரியின் முகத்தைத் தெளிவாகப் பார்த்தேன். மிகுந்த துக்கத்தில், பழுத்து விழுந்துவிடும்போல் இருந்தது.

சாத்தப்பட்ட கதவுக்கு வெளியே இரண்டு மூன்று பேர் கை குவித்து நின்றிருக்க, நான் யாருடைய அனுமதியும் கோராமல் கதவைத் தட்டினேன். திறக்கப்பட்ட அறைக் கதவுக்கு பின் விரிந்த அந்த விசாலமான அறை ஒரு பஜனைக்கூடம் மாதியிருந்தது.

நிறைய பழங்கள், பூக்கள் என்று குவிந்திருந்த அக்குவியல்களின் முன் கழுத்தில் தொங்கின ஒரு தாமரைப்பூ மாலையோடு சுரத்குமார் அமர்ந்திருந்தார். அருகில் அதே போலொரு மாலையணிந்த பாலகுமாரன்.

''பவா Come on '' என்று உற்சாகமாகி எழுந்து வந்து கைபிடித்து அழைத்தார். நான் எதற்காகவும் தாமதிக்காமல்,

''இவர் சேஷையா, ஆந்திரா சொந்த மாநிலம், உங்களை எப்படியும் சந்திக்க வேண்டி வந்திருக்கிறார்'' என்றேன்.

tell me sheshaya. இந்தப் பிச்சைக்காரனிடம் இருந்து உனக்கு என்ன வேண்டும்?''

எனக்குப் பின்னால் நின்றிருந்த அவரைத் திரும்பிப் பார்த்தேன்.

அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்த நிமிடத்திற்காகவே காத்திருந்த பரவசத்தோடு,

''சாமிஜி I have lost my two sons in accidents" என்று நீண்ட அவர் கரங்களை யோகிராம் சுரத்குமார் ஆறுதலோடு பற்றி சேஷையாவைத் தனக்குள் புதைத்துக் கொண்டார்.

நான் எதுவுமற்று நின்று கொண்டிருந்தேன். பாலகுமாரன் உட்பட எல்லாருமே மௌனத்தை அடைகாத்தார்கள். அடுத்த வினாடியிலிருந்த நான் உடனே வெளியேறினேன். என்னை யாரும் தடுக்கவில்லை. என் இருப்பு தேவையற்றது என்று எனக்கு மட்டுமல்ல, சுரத்குமாருக்கும் தெரிந்திருந்து.

அன்று மாலை ஆறு மணிக்கு ஆடையூர் ரவியும், அவரது அண்ணன் பன்னீர்செல்வமும் அதே காரில் என்னைத் தேடி வந்தார்கள். என்னை அவர்களின் அய்யா பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள்.

''அவர் எங்கிருக்கிறார்?''

ரமணாஸ்ரமம் கெஸ்ட் ஹவுசில். நான் அவர்களோடு கிளம்பிப் போனேன். என் வருகையை எதிர்பார்த்து சேஷையா அறைக்கு வெளியே வெறும் பனியன் மட்டும் அணிந்து அமர்ந்திருந்தார்.

'வாங்க பவா' என என்னைப் பெயர் சொல்லியழைத்தார், இப்போதுதான் முதன்முறையாகப் பார்ப்பதுபோல.

நான் எதுவும் பேசாமல் நின்றேன். அழுதழுது அவர் கண்கள் வீங்கியிருந்தன. என் கையைப் பிடித்து அழைத்தார். அவர் அறைக்கதவைச் சாத்தினார்.

''இது போதும் எனக்கு. என் வாழ்வின் மையத்தை அடைந்து விட்டேன். எனக்கிருந்த இரு பிள்ளைகளையும் வெவ்வேறு விபத்துகளில் இழந்து எதற்காக வாழ வேண்டும் என இருந்த என் மனக் கொந்தளிப்பு இச்சந்திப்பில் அடங்கியது. இனி என் மரணமும் எனக்குத் துச்சம்.'' என ஆங்கிலத்திலும் இடையிடேயே தமிழிலும் பேசிக் கொண்டே இருந்தார்.

என் மிச்சமிருக்கிற வாழ்நாளில் உன்னை மறக்க மாட்டேன் தம்பி என்றபோது மீண்டும் உடைந்து அழத் தயாரான அவர் மனதறிந்து நான் உடனே அங்கிருந்து வெளியேறினேன்.

அன்றிரவு கோடைமழை பெய்தது. அந்த இரவு முழுக்க சேஷையா என்ற அந்த மனிதனுக்கு, யோகிராம் சுரத்குமாரின் அருகாமை எப்படி ஆறுதல் அளித்து இருக்க முடியும் என்ற கேள்வியின் அலைக்கழிப்பில் வெகுநேரம் தூங்காமல் புரண்டு கொண்டிருந்தேன்.

5 comments:

  1. இரண்டு சந்திப்புகளுக்கு பிறகு சடக்கென நின்றுவிட்ட (படித்தல் எனும் ) தொடர்பு மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஒரு அற்புதமான அனுபவ பகிர்வு, என்னமோ தெரியவில்லை கண்கள் ஈரமாகிவிட்டன. நன்றி பவா

    ReplyDelete
  3. மிக அற்புதமான அனுபவங்கள். தொடர்ந்து முழுதும் எழுதுங்கள்.மனது சிறிது நேரம் ஒரு நெகிழ்வான சூழலில் லயித்தது

    ReplyDelete
  4. அன்றிரவு கோடைமழை பெய்தது.-உங்கள் வாழ்க்கை

    முழுவதுமா??

    ReplyDelete
  5. என்னய்யா நடை இது...........நிக்காம படிக்க வைக்குது.அடித்து திருத்தியது மாதிரி இல்லை....மனதில் அடைக்காத்து கொட்டி கவிழ்த்த மாதிரி இருக்கு.

    ReplyDelete