Saturday, December 3, 2011

தொடர் - 17


ஒரு நாற்றுக்கும்

இன்னொரு நாற்றுக்கும்

ஒரு தென்னங் கன்றுக்கும்

இன்னொரு தென்னங் கன்றுக்கும்

விடவேண்டிய இடைவெளிக்கு

துல்லியமாய் கணக்குண்டு

என்ன யோசித்தும் புலப்படவில்லை

நீயும் நானும்

செழித்து வளர

வேண்டிய இடைவெளி எதுவென்று

கிடந்தால் பின்னிக் கிடக்கிறோம்

நின்றால் ஒற்றையாய் நிற்கிறோம்.

-மனுஷ்யபுத்திரன்.


இந்த இடைவெளிகளை இட்டு நிரப்பி வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட்ட மனிதர்கள், நானறிந்தவரை குறைவு. ஏதாவதொரு அதிர்ஷ்ட அல்லது துரதிர்ஷ்ட நிமிடத்தில் இவ்விடைவெளிகளை அறிந்தோ, அறியாமலோ கடந்துவிடுகிறோம். ஒரு நிமிடத்தில், நதியோரப் பெருமரத்தின் நட்புக் கிளையொன்று சகல சப்தத்தோடும் முறிந்து விழுந்து, பச்சை வாசனையோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, வெளியை வெறுமையாக்கி விடுகிறது.

கிளை இழந்த மரத்தின் காயம், மரம் சார்ந்தது. அடித்துச் செல்லப்பட்ட கிளையின் வலி, கிளை சார்ந்தது. ஒரு வார்த்தையை, இப்படி வெவ்வெறாகப் பிய்த்துப்போட்டு விளையாடுவதில்தான் காலம் ஏத்தனை திருப்தியடைந்துவிடுகிறது. ஒரு வார்த்தை அல்லது ஒரு உடலசைவு போதும், இத்துயரம் நிகழ. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் வாழ்வின் ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்த உங்கள் ஆத்மார்த்த நட்பிழப்பை ஞாபகப்படுத்தினால், உங்கள் அறை கொஞ்சநேரம் தோழமையின் வாசனையாலோ, தூரோகத்தின் துர்நாற்றத்தாலோ நிறையலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.

காட்டாற்று வெள்ளத்தில் காப்பாற்ற வேண்டி, உயிரை உள்ளங்கைக்கு இறக்கி, உன்னை நோக்கி நீண்ட கரங்களைப் புறந்தள்ளி, மரத்தடி பருண்மையில் மறைந்த உன் ஆண்மை, நீ நினைக்கிற மாதிரி நீ மட்டும் அறிந்த ரகசியம் அல்ல. நண்பனே, அது நிர்வாணம், முழு நிர்வாணம். தூய வானில் ஒளிரும் பேரழகோடு பயணிக்கும் ஒரு நிலவைப்போல அது உலகறிந்தது. வெகுநேரம் உள்ளங்கையில் தேங்கியிருக்கும் அக்கசப்பை விழுங்கு அல்லது சிந்து.

உன்னிடம் விரோதமில்லை, அன்பைப் போலவே

- சுகுமாரன்.

இழந்த நட்பு மீட்டலில், எழுத்து சம்மந்தமின்றி இப்படித்தான் சுழன்றடிக்கிறது. ஓரு பசிய விலங்கின் இரை தேடலுக்கான ஆவேசமும் அலைச்சலுமான தேடலும், மீட்டலும் அது.

கடந்த வாரம். வெயிலடிக்காத மதிய வேளை. நண்பனுடைய அம்மாவின் கடைசி நிமிட அடங்குதலுக்கு, எல்லோரும் காத்திருக்கிறார்கள். நாடி பார்த்து, ரத்த அழுத்தத்தின் அளவுப் பார்த்து, சுவாசம் பார்த்து, உயிரடங்குதலை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் அந்நிமிடத்தில், நான் அவர்களுடன் இருந்தேன். என் தொலைபேசி ரகசியமாய் அழைத்தது. அங்கிருந்து சப்தமின்றி வெளியேறி, அச்செய்தியைக் கேட்கிறேன். மனம் அடங்க மறுத்து ஆவேசத்துடன் துடிக்கிறது.

சீனுராமசாமி, தன் கவிதையால் என்னோடு இரு வரிகளில் பேசுகிறான்.

எல்லோரும் வெளியேறுங்கள். நான் அழவேண்டும்.

அங்கு யாரும் வெளியேறவில்லை. அழ எனக்கு அறை வேண்டாம். நடுத்தெரு போதும்.

ஷைலஜாவின் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று, அடுத்த பத்தாவது நிமிடம், கிரேஸ் மருத்துவமனை வாசலில் நின்றோம். அறுபது எழுபது சோகம் கப்பிய முகங்களிலிருந்து அந்த அப்பாவைத் தனியாகக் கண்டடைகிறோம்.

‘‘எப்பவுமே உங்களைப் பத்திதாம்மா பேசுவான். எனக்கு எல்லாமே பவா சாரும், ஷைலஜா மேடமும்தாம்பான்னுவான். நம்மை எல்லாரையும் மீறிட்டுப் போயிட்டானேம்மா...’’ என அவள் கரம் பற்றிக் கதறினார்.

‘‘குளுருது குளுருதுன்னு எப்பவுமே பெனாத்துனாருங்க’’ அவன் மனைவி, ஷைலஜாவிடம் ஏதேதோ சொல்ல முயன்றாள். எனக்கு ஜி.நாகராஜனின் கடைசி நாளைப் பற்றி சி.மோகன் நினைவு கூர்ந்தது ஞாபகம் வந்தது.

ரொம்ப குளுருதுப்பா.

சிதையில வச்சாத்தான் இந்தக் குளுரும் போகும்போல

படைப்பாளிகளோ, சாதாரணமானவர்களோ, எல்லோரும் மரணத்தை முன்கூட்டி தெரிந்துகொள்கிறார்கள். அதன்பிறகான அவர்களின் மிதந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வாழ்வின் அனுபவம் ததும்பும்.

நான் வைராக்கியத்தோடு அழாமலிருந்தேன். அவர்களை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து உள்ளறைக்கு நகர்ந்தேன். பணியிலிருந்த அந்த இளம் மருத்துவர் என்னைப் பார்த்ததும், அவசரமாக எழுந்து என் கரம் பற்றி, சுய அறிமுகம் செய்தார். நான் யாரைத் தேடி வந்திருக்கிறேன் என்பதை, என் முகம் பார்த்தும், என்னோடு நின்ற நண்பர்களைப் பார்த்தும், ஒரு நிமிடத்தில் யூகித்தறிந்து,

‘‘த்ரோட் கேன்சர் சார். பத்து நாளைக்கு முன்ன, சேரும்போதே சீரியஸ்தான். மதியம் ரெண்டரைக்கு நர்ஸ் கூப்புடறாங்கன்னு அந்த ரூமுக்குப் போனேன். ஒரு வெயின் டிஸ்ட்ரப் ஆகி, சுமார் ரெண்டு லிட்டர் ரத்தம் பெட்ல கொட்டிடுச்சி சார். பல்ஸ் பார்த்தேன், அடங்கியிருந்திச்சு.’’

பச்சை ரத்தம் பார்த்து, முகர்ந்த அதிர்வு, அந்த இளம் மருத்துவரின் முகத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் தங்கியிருந்தது. நான் அழாமல் நின்றிருந்தேன். அம்மருத்துவர், என் தோளுக்கிணையாய் நின்று, அடுத்த வார்த்தையை எங்கிருந்து ஆரம்பிக்கவெனக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.

‘‘சார் மட்டும் பாடியைப் பாக்கறீங்களா?’’

நான் தலையசைத்தேன்.

அவர் அனிச்சையாய் முகத்தில் கவசமணிந்து, கையுறையிட்டு என் முன் நடந்தார். அந்த எட்டுக்கு எட்டு குறைவான சிறு அறையை அவர் திறந்தார். முழுக்க போர்வையால் மூடப்பட்ட ஓருடல், அப்படுக்கை நீளத்திற்கு நீண்டிருந்தது. என் முகத்தைப் பார்த்தவாறே போர்வையை விலக்கினார்.

முகத்திலும், கழுத்திலும் உறைந்திருந்த ரத்தத்தோடு, அப்போதுதான் இறந்திருந்த என் நண்பன் ராஜவேலு.

அம்முகம், அவ்வுடல், அந்த மௌனம், அந்த மூடிய அறை, எதுவும் அவனுடையதல்ல. அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டேயிருந்த ஓர் இளங்கன்று. என் அலுவலக வாசல் டீக்கடையில், ராஜவேலு சொடக்குப் போட்டுப் பேச ஆரம்பித்தால், கூட்டம் மொய்க்கும். அவன் தீவிர அ.தி.மு.க. அம்மாவின் மீது பற்றும் மரியாதையும் இருந்தது. அது, அவர் மீது எழுந்ததல்ல. தி.மு.க.வின் மீது எழுந்த எதிர்ப்புணர்வின் வடிகாலென, ராஜவேலுவைச் சந்தித்த பத்தாவது நிமிடத்தில் நானறிந்து கொண்டேன்.

மதுரை அவனுக்குச் சொந்த மாவட்டம். அப்பாவின் மின்வாரிய பணி நிமித்தம், குடும்பம் திருவண்ணாமலைக்கு குடி பெயர்ந்திருந்தது. வாசிப்பின் ருசி அறிந்தவன். கொண்டாட்டங்களை எப்போதும் தனதாக்கிக் கொண்டவன். வீடு, அலுவலகம், பயணம், பார், அறை எல்லாமும் அவனுக்கு சந்தோஷங்களால் நிறைய வேண்டும். ‘இனக்குழுக்கள், கொண்டாட மட்டுமேயானவை’ என்று நினைத்த பேராசை மனம் அவனுக்கு.

சமூகத்தின் எந்நிகழ்வுகள் குறித்தும், ராஜவேலுவுக்கு எதிர்மறைக் கருத்துகள் உண்டு. அக்கருத்தின் வலிமையை, நான்கு பேருக்கு முன்னால் சொடக்குப் போட்டு ஸ்தாபிப்பான். ராஜவேலுவால் காயப்பட்ட ஒரு மனிதனையும் நானறியேன். சகமனித மன ஸ்பரிசமற்று, சுடுகாடுகளாகிப்போன அரசு அலுவலகங்களை, ராஜவேலு எப்போதும் தன் வார்த்தைகளால் உயிர்ப்பிப்பான். தன் வெடிச் சிரிப்பால் ஒளியூட்டுவான். எல்லாம் ஒரு நிமிடத்தில் அடங்கியிருந்தது.

‘‘பாடியைக் கொண்டுபோக ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டீங்களா?’’

அப்படியென்றால், அவன் பேச்சு, அவன் வாசிப்பு, அவன் தர்க்கம், அவன் கொண்டாட்டம், அவன் சொடக்கு, எதுவுமே மிச்சமில்லையா? எல்லாம் துடைத்தெறியப்பட்ட மீந்த ஞாபகங்களா?

அவ்வறையிலிருந்து பத்து நாட்களாய் பயன்படுத்தின பொருட்கள், துணிகள், போர்வை, எல்லாம் இரு பிக் ஷாப்பர்களில் அடைக்கப்பட்டு, வெளியே எடுத்துச் செல்லப்பட்டன.

இறந்தவனின் ஆடைகளை

என்ன செய்வதெனத் தெரியவில்லை

மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகள் நெஞ்சில் முட்டுகிறது.

ஆம்புலன்ஸும், அதன் பின்னாலேயே நாங்களும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் எதிரே தனித்திருந்த அவ்வீட்டை அடைந்தபோது, ஒரே ஒருவர் மட்டும் எங்களை எதிர்கொண்டு நின்றிருந்தார். மரணத்தின் பரபரப்பின்றி சடலம் இறக்கப்பட்டது. வீட்டு ஹாலில் பென்ச் போட்டு படுக்க வைக்கப்பட்டபோது, ‘கிழக்கு மேற்கால’ என்று எங்கிருந்தோ ஒரு சம்பிரதாய குரல் ஒலித்தது.

ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா.

எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார்.

‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?

ராஜவேலு என்ற என் அலுவலக நண்பன், தன் வாசிப்பாலும், பேச்சின் வசீகரத்தாலும், எல்லோரையும் பின் தள்ளி, என் கைகளைப் பற்றிக்கொண்டவன். நாங்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களின் வெளிச்சமற்ற ஓர் இருட்டில், தனியாக நின்று உரை அருந்துபவன். ‘‘பார் இருட்டு மனசுக்குப் பழகிடுச்சுண்ணே’’ எனச் சிரிப்பான். நானறிந்து, உள் ரகசியங்களற்ற மனிதன்.

நம் மனக்கதவுகள், மரவட்டை பூச்சியின் கால்களைப்போல நீண்டு ஊர்ந்துகொண்டே இருக்கிறது. நாம் இருக்கிற அவசரத்தில், எத்தனைக் கதவுகளை அடைக்க முடியும்? ஒன்றை அடைத்தால், புதிதொன்று முளைக்கிறது. எத்தனையோ பூட்டுகளுடன், எத்தனை எத்தனை சாவிக் கொத்துகளுடனும், நம் ரகசியங்கள் தினம் தினம் மறைக்கப்படுகின்றன.

ராஜவேலுவின் உலகம் கொண்டாட்டங்களால் மட்டுமல்ல, வெளிப்படைகளால் ஆனதும்கூட.

‘‘அண்ணே, இன்னிக்கு ஒரு எஸ்ட்டிமேட் போட ஒருத்தன்கிட்ட முன்னூறு ரூபா கேட்டேன். ஐநூறா கொடுத்தான். எஸ்.ராமகிருஷ்ணனோட ‘உபபாண்டவம்’ என்ன வெல?’’

வம்சிக் கடை பணியாளர்கள், அவனின் இந்த அப்பழுக்கற்ற வார்த்தைகளுக்கு ரசிகர்கள்.

‘‘படிக்க படிக்க, லஞ்சம் வாங்க வேணான்னுதாண்ணே தோணுது. ஆனா குடிக்கவும், படிக்கவும், நான் வாங்கற சம்பளம் பத்தல.’’

‘‘உங்களுக்கு எப்படி ராஜவேல் என்னைத் தெரியும்?’’

‘‘தரிசனம் பெற நாள் முழுக்க யோகி ராம்சுரத்குமாரின் சன்னதி தெரு வீட்டு முன்னாடி நான் நிற்கும்போதெல்லாம், அவரு உங்களைப் பக்கத்துல ஒக்காரவச்சி பேசி சிரிப்பாரே, அப்பயிருந்துண்ணே’’

கழுத்தில் ஒரு சிறு ஆபரேஷன் செய்த வடுவோடு, ஆறேழு மாதங்களுக்கு முன், என் இருக்கைக்கு முன் நின்றவனை, கொஞ்சம் பதட்டத்துடன் பார்த்தேன்.

‘‘அண்ணே கவலைப்படாதீங்க. கேன்சரை, தொடச்செறிஞ்சிட்டேன். ரொம்ப வாய் பேசறேன்னுட்டு, தேவையே இல்லாம பத்து பல்லை புடுங்கிட்டாண்ணே அந்த டாக்டரு.’’

எனக்கு கணக்குப் போட முடியவில்லை. வாழ்வை இவன் மட்டும் எப்படி இத்தனை அநாவசியமாக எதிர்கொள்கிறான்? எது இவனுக்குள் இத்தனை அசாத்தியமான தைரியத்தை விளைத்திருந்தது?

‘என் கேன்சரை இடது கையால் நானே துடைத்தெறிந்துவிட்டேன். என்னைக் கொண்டாடு’ என்று காலத்தின் முன் துள்ளும் மனதைப் பார்த்து, அது முறுவலித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் காலம்காலமாய், காலம் தனக்குள் மறைத்து வைத்திருந்த குரூரம், என் நண்பனைக் கீறி, இரண்டு லிட்டர் ரத்தத்தை உறிஞ்சியிருக்கிறது.

நட்பின், தோழமையின், துரோகத்தின், மரணத்தின், நீள அகலங்களை அமைக்கத் தெரியாத நம் குதூகல விளையாட்டினூடே, மெல்ல ஒரு விஷக் காற்று மாதிரி பரவிவிடுகிறது காலம்.

6 comments:

  1. பகிர்ந்து கொள்கிறேன் பவா.

    ReplyDelete
  2. மகனை மகளை இழந்த பெற்றோரும் நண்பர்களை இழந்த நண்பர்களும் நாளைக்காலை யார் முகத்தில் கண்விழிக்க உயிரோடு இருக்கணும்?

    ReplyDelete
  3. மிகவும் கனமான மனதுடன் படித்து முடித்தேன்.

    ராஜவேலுவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

    மெல்ல ஒரு விஷக் காற்று மாதிரி பரவிடும் காலம் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறது நிற்காமல் போகிறது.

    ReplyDelete
  4. Dear Bava sir, it is shocking news. rajavelu is a nice man & friends with all. his "sodakku" is well known to all. we had good relation. convey my deepest condolances to his family. with deep worries. A.Sivaraman, (AE/TNEB), Saudi Arabia, Riyadh.

    ReplyDelete
  5. ஐயோ! தோழர்! ராஜவேலு இறந்துட்டாரா?

    ReplyDelete
  6. இந்த கட்டுரைகளில் தெரியும் உண்மைதான் இதன் ஈர்ப்பும் வெற்றியும். சக மனிதர்கள் மேல் பவா வுக்கு உள்ள அன்பையும் ஒரு வாசகராக என்னால் உணர முடிகிறது - பிரகதீஷ்

    ReplyDelete