சென்னை பாரீஸ் கார்னர் பஸ் நிலையத்தில்
நாங்கள் ஐந்தாறு பேர் இறங்கியதும் நான் எதிரில் நின்ற ஒருவரிடம் மணி கேட்டேன்.
‘‘ஏழே கால்’’
இன்னமும் வெய்யிலேராத பகல் குளிர்ந்திருந்தது.
இயல்பாகவே எல்லாரும் ஒரு டீக்கடையின் முன் நின்று ஆற்றாமல் தரும்படி கேட்டு ‘டீ’ குடித்தோம்.
கருணா பில்டர் கோல்டும், சுகந்தன் ஒரு பீடியையும் ‘டீ’ ஈரம் காயாத உதட்டில் தோயவிட்டார்கள்.
இந்தக் காலையில் பார்க்கிற எல்லாமுமே
அழகாய்த்தான் இருக்கிறது. தன் உயரத்தை விட அகலமாயிருக்கும் இந்த தவுலை ஏழுமலை மாட்டியிருப்பது
அழகு. ‘நானும் உங்களுடன்தான் இருக்கிறேன்’ நண்பர்களே
என தன் அமைதியின் பொருட்டு தான் கரைந்து போய்விடக் கூடாது என ஞாபகப்படுத்தலினூடே நடந்து
வரும் ‘தபேலா’ ஆறுமுகம். எப்போதும் பரபரப்பைத் தன் மேலேற்றிக் கொண்டு, தனக்குப் பொருந்தாத
ஜோல்னாப்பை தொங்கலில் உடன் நடக்கும் ரெண்டேரிப்பட்டு கோவிந்தன். இவர்கள் எல்லோருக்காகவும்
தி.நகர் பஸ் நெம்பர் கேட்கும் ஒரு குரல்.
ஒன்பது மணிக்குக் கொஞ்சம் முன்
நாங்கள் எல்லோரும் அந்த ரெக்கார்டிங் தியேட்டருக்கு முன் நின்றோம். ஒரு சிறு விளம்பரப்
பலகை மட்டும் இருந்தது. நுழைவாயில் மிகச் சாதாரணமாக, பாதியளவு மூடிய ஒரு கண்ணாடிக்
கதவிற்குப் பின் அந்த விசாலமான ஒளிப்பதிவுக் கூடம் இருக்க வேண்டும்.
ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம்
வாங்கும் வயசான சீருடையணிந்த ஒரு வாட்ச்மேன் எங்களை விசாரித்தார். ‘நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து
வருகிறோம். ஒரு இசைக்குழு வைத்திருக்கிறோம். ஒரு கேசட் போட வேண்டும். அதற்கு ரெக்கார்டிங்
செய்ய வந்திருக்கிறோம்’ இவ்வளவையும் ஒரு இரவுக் காவலரிடம்
சொல்ல வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால் சொன்னோம்.
‘‘நானும் செஞ்சிதான். தோ அப்பிடி
வழியவிட்டு நில்லுங்க. சார் வரும் நேரந்தான்’’ என ஒரு பருத்த தூங்குமூஞ்சி மரத்தடியைக்
காண்பித்தார்.
அவர் காட்டிய திசையில் நாங்கள்
ஒதுங்கினோம். சாரின் வருகையில் ஆர்வப்பட்டோம். அப்போது கருணா அன்றைய தன் நாலாவது பில்டர்
கோல்டை அந்த மரத்தடியில் பற்ற வைத்தான்.
நான், அதுவரை பார்த்திராத ஒரு
நீண்ட வழவழப்பான கறுப்பு நிறத்திலான காரில், நல்ல சிகப்பு நிறத்தில், பருத்திருந்த
ஒரு மனிதன் வந்தார். ஜீன்ஸ் அணிந்து அதை இன் செய்து மேலுக்கு ஒரு கறுப்புநிற காட்டன்
ஷர்ட் போட்டிருந்தார். அதில் வழக்கத்திற்கு அதிகமாக பாக்கெட்களும், பட்டன்களும் வைத்துத்
தைக்கப் பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கி எங்களைப் பார்த்து,
‘ஹாய்’ சொல்லி அக்கண்ணாடிக் கதவைத்
திறந்து உள்ளுக்குப் போனார். நாங்கள் உள்ளேப் போக தயாரானோம். கருணாவின் கையில் புகைத்த
சிகரெட் நெருப்பு காலுக்கடியில் மிதிபட்டது.
அடுத்த அய்ந்தாவது நிமிடம் உள்ளே
அழைக்கப்பட்டோம்.
அந்த அறை. அதன் விசாலம். அதன்
நறுமணம். அங்கிருந்த சோபாக்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், தரை, ஏ.சி. எல்லாமும் எங்கள்
எல்லோருக்கும் புதிது.
அவர்முன் அமர்ந்தோம்.
‘‘சொல்லுங்க’’
அக்குழுவில் சொல்வதற்காக மட்டுமே
பணிக்கப்பட்டவன் நான்.
வாட்ச் மேனிடம் சொன்ன மாதிரியே
சொல்லக்கூடாது. இவரிடம் அதை இன்னும் நளினமாக்க வேண்டும். சொற்களுக்கு அழகூட்ட வேண்டும்.
முடிந்தால் தேன் தடவ வேண்டும். அப்போதுதான் என்னுடைய இரண்டொரு கதைகள் எழுதி செம்மலரில்
பிரசுரமாகியிருந்தது.
‘‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
சங்கம் என்று ஒரு அமைப்பிலிருந்து வருகிறோம். அது எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்குமான
அமைப்பு. நாங்கள் தெருத்தெருவாய் நாடகம் போடுவோம். கதை எழுதுவோம். கவிதை எழுதுவோம்.
இப்போது ஒரு இசைக்குழுவை உருவாக்கியிருக்கிறோம். அதன் பெயர் ‘வைகறை’ இவர் தவுல் வாசிக்க,
ஆறுமுகம் தபேலா வாசிக்க சுகந்தனும், கோவிந்தனும் பாட்டு பாடுவார்கள்’’
அவர் அபூர்வ பிராணிகளைப் பார்ப்பது
போல எங்களைப் பார்த்தார். ஆனால் அக்கண்களில் அலட்சியம் இல்லை. அதில் ஏதோ ஒரு பரவசமிருந்தது.
சீட்டின் நுனிக்குத் தன்னுடலை இழுத்துக் கொண்டார். என்னைப் பார்த்துப் பேசினார்.
‘‘இந்த
ரெண்டே ரண்டு இன்ஸ்ட்ரூமெண்டஸ்சை வச்சா பாடுவீங்க?’’
‘‘ஆமா சார். அது ஆயிரக்கணக்கான
மனிதர்களை மயக்கும், அழ வைக்கும், கைத்தட்ட வைக்கும், பாக்கட்டிலிருக்கும் நூறையும்,
இருநூறையும் எங்களுக்குக் கொடுக்க வைக்கும்… நான் உணர்வு மேலேறியிருந்தேன்.
‘‘நான் உங்களுக்கு என்ன செய்ய
வேண்டும்?’’
‘‘இந்த தியேட்டர் வாடகைக்கு வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சார்?’’
‘‘முன்னூரு ரூபா. சவுண்ட் இன்ஜினியர்
பேட்டா தனி’’
எங்களுக்கு ஆச்சர்யமாகி விட்டது.
வெறும் முன்னூறு ரூபாயா?
‘‘உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?’’
நான் உள்ளுக்குள் மணக்கணக்கு போட்டேன்.
இதென்ன கேள்வி? ஒரு பாட்டு பாட
ஐந்து நிமிஷம். மொத்தம் பத்துப் பாடல்கள். ஐம்பது நிமிஷம். நான் ஒரு அறிமுகஉரை பேச
வேண்டும் அது ஐந்து நிமிடம். அப்புறம்… அதான்.
‘‘மொத்தம் ஒரு மணி நேரம் போதும்
சார்’’
அவர் தன் இருக்கையின் பின் சாய்ந்து
எங்கள் எல்லோரின் அறியாமைக்காகவும் சேர்ந்து ஆயாசப்பட்டு சிரித்தார்.
‘‘சார் இது சினி சாங்ஸ் ரெக்கார்ட்
பண்ற தியேட்டர். ஒரு பாட்டுக்குக் குறைந்தது மூணு நாளு நாள் ஆகும்’’
நான் முந்தினேன். இது கைகூடாதோ
என்ற பயம் என்னை உந்தியது.
‘‘சார், எங்க பாட்டு அப்படி இல்லை
சார். நாங்க தினம், தினம் மக்கள் முன்னால் பாடறவங்க. எங்களுக்கு ஒரு மணிநேரம் போதும்’’
நீங்கள் ‘மூன்றாம் பிறை’ படம்
பார்த்திருக்கிறீங்களா?
கடைசி காட்சி. மனப்பிறழ்வு சரியாகி
ஸ்ரீதேவி தன் பெற்றோருடன் இரயில் பெட்டியில் உட்கார்ந்திருப்பார். சந்தோஷமான பேச்சும்,
சிரிப்புமாய் அவர்கள் புறப்படத் துவங்கும் தருணத்தில், ஜன்னலுக்கு வெளியே சத்தம் கேட்டு
அவள் திரும்பிப் பார்ப்பாள்.
கமலஹாசன் தன்னை அடையாளப்படுத்த
என்னன்னவோ செய்து காண்பிப்பார். அதிலும் உச்சமாக, அவளுக்குப் பிடித்தமான குரங்கு சேஷ்டையை
நினைவுபடுத்த வேண்டி அந்த ரயில்வே ப்ளாட்பாரத்தில் குத்துக்காலிட்டு, தலையில் ஒரு அலுமினியத்
தட்டேந்திய பாவனையில், ‘ராமா ராமா’ என்று சுற்றி, சுற்றி வருவார். இப்படி கமல் செய்யும்
போதெல்லாம் ஸ்ரீதேவி, கையில் ஒரு குச்சியுடன் குதூகலிப்பதும், கமலை, குரங்காக பாவித்து
துள்ளி குதிப்பதும் நம் மணக்கண்ணில் வந்து மறையும்.
நான் கமலஹாசனின் மனநிலையிலிருந்தேன்.
எக்காரணத்தாலும் நிராகரிப்பை எங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு கேசட்டில்
எங்கள் குழுவின் பாடல்களேறி, தமிழ்நாட்டின் கிராமங்கள் தோறும் ஒலிக்கப் போகும் எதிர்
வரும் நாட்கள் எதன் பொருட்டும் இல்லாமல் ஆகிவிடக் கூடாது.
அவர் நிதானமாய்ப் பேசினார்.
‘‘என் பெயர் ராஜகோபால். இந்தியன்
பேங்க்ல ரீஜினல் மேனேஜராயிருந்தேன். கலை மேலேயும், இசை மேலேயும் உள்ள ஆர்வத்துல வேலையை
ரிசைன் பண்ணிட்டு இந்த ரிக்கார்டிங் தியேட்டரை ஆரம்பிச்சேன்’’
You know, சந்தியா
ராஜகோபால், டி.வி.யில நியூஸ் வாசிப்பாங்களே, அவங்க என் வொய்ப்தான். நீங்க யாராவது
‘சீவலப்பேரி பாண்டி’ படம் பார்த்திருக்கீங்களா?’’
எல்லோருமே தலையாட்டினோம்.
‘‘அதுல, ‘கிழக்கு வெளுக்கையிலே’
பாட்டு நான் பாடினதுதான்’’ என ஒரு வரியை ஹம் பண்ணினார்.
நாங்கள் இன்னும் அவரைக் கிட்டத்தில்
பார்த்தோம்.
ரெக்கார்ட்டிங் தியேட்டரின் ஓனர்,
சந்தியா மேடம் இவர் மனைவி, இந்தியன் வங்கியின் ரீஜினல் மேனேஜர், வெளியில் நிற்கும்
வழவழப்பான வெளிநாட்டு கார், இதெல்லாம் இல்லை இந்த மனுஷன். எங்களைப் போல் காற்றின் ஏகாந்த
வெளிகளில், கிழக்கு வெளுக்கையிலே பாடிக்கொண்டு திரியும் பாடகன் மட்டுந்தான். ‘மழையின்
தாளம்’ பாடும் சுகந்தனும், ‘பொண்ணு பொறக்குமா?’ பாடும்
ரெண்டேரிப்பட்டு கோவிந்தனும் அவரின் இசைத் தோழர்கள். இது கலைஞர்களுக்கான சந்திப்பும்
பகிர்தலும்.
எங்களைத் தியேட்டருக்கு அனுப்பிவிட்டு,
சவுண்ட் இன்ஜினியரை அழைத்து, அந்தக் கண்ணாடி அறையில் அவரோடு சந்தோஷமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்
ராஜகோபால். நான் அவரையே வெளியிலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அக்கண்களில் மேலும்
பரவசம் கூடி நின்றது.
நான் சுகந்தனை வெளியில் அழைத்து
வந்தேன். நீண்ட நேர ஏ.சி. அறை குளிர் பொறுக்காமல் அவசரமாக அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.
‘‘சொல்லு’’
‘‘சுகந்தா இன்னும் 1500 ரூபாதான்
இருக்கு. இதுலேயே நாம தியேட்டர் வாடகை. இன்ஜினியர் பேட்டா, மதிய சாப்பாடு,
ஊருக்குத் திரும்ப டிக்கெட்டுக்குப் பணம்…’’ என்று நீடித்த
என் வார்த்தைகளை மறித்து,
‘‘நான் என்ன பண்ணனும்டா கருப்பா?’’
உற்சாகம் பீறிட்டால் இப்படித்தான் கூப்பிடுவான் சுகந்தன்.
‘‘பத்து பாட்டையும், நீயும் கோவிந்தனும் கடகடன்னு
பாடிடணும். கேப்பே விடக்கூடாது’’
எதுவும் பேசாமல் என்னை ஏற இறங்க ஊடுருவிப் பார்த்தான்
கையிலிருந்த பீடித்துண்டு அவன் கடைசி இழுப்புக்கும்
கைகொடுத்தது.
நான் ஒரு அறிமுகவுரை நிகழ்த்தினேன். எங்கள் மக்கள்
கலைஞர்களை அந்தக் குளிரறையில் இயந்திரங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவை வெறும் இயந்திரங்கள்
அல்லவென்பதையும் கோடானுகோடி மக்களுக்கு இவர்களின் குரலைக் கொண்டுசெல்லப் போகும் இரட்சகர்கள்
என்பதையும் தெளிவாக உணர்த்திருந்தேன்.
என் பேச்சு முடிந்த மறுவிநாடி, சுகந்தன் தன் கம்பீரமான
குரலில்,
“மழையின் தாளம் கேட்குது… கேட்குது…
மனிதா… மனிதா… வெளியே வா”
என உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்து, தன் சகா தவில்
ஏழுமலையைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்தது போல அத்தவிலில் ஏழுமலையின் கைகள் பரபரப்பாக
இயங்கி திசையெங்கும் நோயுற்றிருந்த மனிதர்களை மழையில் நனைய அழைத்தது.
முன்னெப்போதுமில்லாத குதூகலம் எங்கள் எல்லோரையும்
தொற்றிக் கொண்டது. கண்ணாடி அறையை கவனித்தேன். இருக்கையிலிருந்து எழுந்து நின்று காதுகளில்
மாட்டிய ஹெட்போன் வழியே அறையில் நடக்கும் இந்த அற்புதத்திற்குத் தலையசைத்துக் கொண்டிருந்தார்
எங்கள் சகக்கலைஞர் ராஜகோபால்.
பாட்டின் வரிகள் முடிந்த அடுத்த நிமிடம் இல்லை, நொடியின்
இடைவெளியில் கோவிந்தன் அடுத்த பாட்டைத் துவங்கினான். இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி
நிரலில்லை. கடிகாரமுட்களின் கண்காணிப்பில்லை. பாடி முடிந்ததும் பெறப் போகும் காசோலையில்
நிரப்பப்பட்டிருக்கும் தொகை மீதான கவனமில்லை. இது கலையின் பிரவாகம்.
இதைக் கருணா ஒழுங்குப்படுத்திக் கொண்டேயிருந்தான்.
இந்த மாதிரியான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் அவன் எப்போதுமே வேறு ஆளாக இயங்குவான்.
தூங்குமூஞ்சி மரத்தடியில் காலில் நசுங்கியதே இதுவரையிலான அவனின் கடைசி சிகிரெட்.
பத்தாவது பாட்டின் கடைசிவரை நிறைவடைந்தபோது நாங்கள் எல்லோரும் அங்கிருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்தோம்.
நேரம் பிற்பகல் 1.30. ஆக இரண்டு மணி நேரத்தில் நாங்கள் பத்து பாடல்களுக்கான ஒலிப்பதிவை
வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டோம். என் வலது கை எலும்புகள்
நொறுங்க சுகந்தனின் கைகள் என்னை இறுக்கியது.
இப்போது நானும் கருணாவும் ராஜகோபால் சார் அறையிலிருந்தோம்.
தன் வாழ்நாளில் இது ஒரு அதிசயம் எனவும். இந்த Lyrics தமிழின்
உச்சம் என்றும், இதை எழுதினவர்கள் ஏன் சினிமாவுக்கு முயலவில்லை என்று ஒரு சாதாரணத்தையும்
எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
நான் தயக்கத்துடன் என் சட்டையிலிருந்து பணமெடுப்பதை
அவர் கவனித்து அவசரமாகத் தடுத்தார்.
“எதுவும் வேணாம். சார்….” இப்போது
அவர் குரல் குழைந்திருந்தது. அவரே தொடர்ந்தார்.
‘‘பணல்லாம் ஒண்ணுமேயில்லை. இன்ஜினியர் பேட்டா கூட
வேணாம். முப்பதாம் தேதி ஒரு ஆளை அனுப்புங்க. ஐநூரு கேசட் ரெடியாயிருக்கும்… ரவி பிளே
பண்ணுப்பா… என்று யாரையோ அழைத்துச் சொன்னார். அடுத்த விநாடி அந்த அறையே அதிர்கிற மாதிரி,
“மழையின் தாளம் கேட்குது... கேட்குது...
மனிதா… மனிதா… வெளியே வா’’
சுகந்தனின் குரலும், ஏழுமலையின் தவிலும் சேர்ந்து
அதிர பின்னணியில் ராஜகோபால் சார்
எழுந்து நின்று
கைகூப்பினார்.
கண்ணாடிக் கதவை திறந்து வெளியே பார்த்தோம். மட்ட மதியானத்தில்
மழை பெய்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்து “மனிதா… மனிதா… வெளியே வா” என்ற மழையின்
அழைப்பிற்கு நனைத்தவாறே வெளியில் வந்தோம். பாடலில் அடுத்த வரி எங்கள் மனநிலையை அப்படியே
பிரதிபலித்தது.
‘‘மழையின் ஸ்ருதி சேருது
மனமே… மனமே… வெளியே வா”
No comments:
Post a Comment