Wednesday, December 31, 2014

அலை




இது நடந்து பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன.

அப்போதுதான் நான் மின்வாரியத்தில் இளநிலை உதவியாளனாகப் பணியில் சேர்ந்திருந்தேன். மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தபோது அப்பாவோடு  மிக நவீனமான, அழகிய ஓர் இளம் பெண் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். எங்களுக்கு சிபி பிறந்த நாற்பதாவது நாள் அது. ஷைலஜா அவர்கள் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்ததை சமையலறையிலிருந்து வந்த மணத்திலிருந்து உணர முடிந்தது.

அந்தப் பெண்ணை எங்கேயோ சமீபத்தில் பார்த்தது மாதிரியேயிருந்தது. ஞாபகத்தை திடீரென மீட்டெடுக்க முடியவில்லை.

என்னைக் கண்டதுமே இருவருமே பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். அப்பெண் எழுந்து நின்று கொண்டாள்.

எதேச்சையாகத் திரும்பினால் நெல்லிக்குப்பத்து மாமா பையன் சிவக்குமார் நின்றிருந்தான். அவன் என்னைப் பார்த்த விதத்தில் ஏதோ தவறு தெரிந்தது.

தேநீர் கோப்பைகளோடு நிமிர்ந்த ஷைலஜாவின் முகம் இயல்பானதாயில்லை.

எல்லோரும் சேர்ந்து ஒரு இறுகிய மௌனத்தை அடைகாத்தார்கள்.

நான்தான் முதல் முட்டையின் நுனியை உடைத்தேன்.

யாருப்பா இது?”

மொதல்ல காபிய குடிடா, சொல்றேன்

அதுவரையிலுமான பொறுமைகூட எனக்கில்லை. சிவக்குமார் என் பார்வையைக் கடந்து எதிர்திசைக்குப் போனது ஒரு பூனை கடப்பது மாதிரியே இருந்தது.

அப்பெண் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவள். தமிழ்நாடு அளவில் மிக முக்கியமான விளையாட்டு ஆளுமை. கூடைப்பந்துப் பிரிவில் அவள்தான் அணித்தலைவி. என் மாமா பையன் மிலிட்டரியில் இருந்தான். அவனுக்கும் கூடைப்பந்தாட்டத்தில் பெரும் விருப்பமும் பங்கேற்பும் உண்டு. ஏதோ ஒரு விளையாட்டு மைதானத்தில் இவர்கள் இருவருக்குமான சந்திப்பு நடந்தது. பையன் அள்ளிவிட்ட அத்தனைப் பொய்யையும் அப்பெண் முழுவதுமாய் நம்பி அவனுடன் புறப்பட்டு வந்துவிட்டாள். தான் மத்திய அரசில் டெல்லியில் வேலை பார்க்கும் .பி.எஸ். அதிகாரி என்ற பொய்கூட அவளைச் சந்தேகப்பட வைக்கவில்லை. காதலும் காமமும் யதார்த்த வாழ்வை என்றுமே புறந்தள்ளும்.

எங்கு போவதென உடனே முடிவெடுக்க முடியாமல் இரண்டு மூன்றுநாள் அலைக்கழிப்புகளுக்கும், ஒப்புக் கொடுத்தல்களுக்கும் பின்  நெல்லிக்குப் பத்திற்கு ஒரு அதிகாலையில் அவளை அழைத்து வந்தான்.

தயங்கி, தயங்கி வீட்டின் கதவைத் தட்டினான். அவன் அப்பாவும், அம்மாவும் கதவைத் திறப்பார்கள் என்ற அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக அவன் மனைவியும், இரு மகள்களும் கதவைத் திறந்த கணத்தில் அவளுக்கு எல்லாமே சிதைந்தது.


அப்பெண்ணைத் தன் ஸ்நேகிதி என்றும், அவள் மாநில அளவில் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்றும், தாங்கள் இருவரும் ஒரு போட்டிக்காக கடலூர் வந்ததாகவும், அருகில் இருக்கும் நெல்லிக்குப்பத்திற்குத் தன் வீட்டைக் காண்பிக்க அவளை அழைத்து வந்ததாகவும், ஒரு சிறு பிசிறின்றி அவன் முழுப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருகையில், ஒரே நேரத்தில் அவன் மனைவியும், அந்தப் பெண்ணும் வெடித்தழுதார்கள்.

பாதி புரிந்தும் புரியாமலும் தூக்கக் கலக்கத்தில் எழுந்திருந்த அந்த இரு பெண் பிள்ளைகளும், ஏதோ அம்மாவுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டது என்பது புரிந்து, பெரும் குரலெடுத்து அந்த அதிகாலையில் கேவ ஆரம்பித்தார்கள். அடியும், உதையும் சராமாரியாக மூவருக்கும் கிடைத்தது. ட்ராக் ஷுட், டீ ஷர்ட்டோடு அப்பெண் தனியே சாலையை நோக்கி நடந்தாள்..

கோபம், ஆத்திரம், தோல்வி, இயலாமை, அவமானம் எல்லா கலவையும் அவள் முகத்தில் மலம் மாதிரி அப்பிக் கிடக்க, அவளை சமாதானப்படுத்த பின்னாலேயே வந்தான் அவன்.

எப்போதும் துல்லியமாக கோல் போட்டு எந்நிமிடத்தையும் வெல்லும் அவன், அவளுக்கு இந்நிமிடத்தை எப்படி வெல்வது என தெரியவில்லை. துரோகத்தின் நிழல் அந்த நெடுஞ்சாலை முழுக்க விரியன் பாம்பின் குட்டிகள் மாதிரி நெளிவதை அவளால் பார்க்க முடிந்தது. மனித குலத்தின் துவக்கத்திலிருந்து இன்றுவரை தொடரும் ஒரு ஆணின் நம்பிக்கை துரோகத்தில் சற்று முன், இல்லை மூன்று நாட்களுக்கு முன்தானும் பலியானது அவளுக்கு மெல்லப் புரிந்தது. தன் கழுத்தைத் தடவிப் பார்க்கிறாள். வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இன்னமும் ரத்தம் கசிகிறது. அவனைப் பார்க்கவே கூசுகிறது.

பரந்த விளையாட்டு மைதானத்தின், பெரும் ஆராவாரத்திற்கிடையே சகல கம்பீரத்தோடும் தான் நடந்த வந்த நாட்கள் இனி ஒருபோதும் இல்லை! ஒரு நிமிடத்தில் என்னிலிருந்த எல்லாவற்றையும் உதிர்த்து இவன் துரோகத்தின் முன் போட்டுவிட்டு. உலகின் கடைசி பலவீனமான பெண்ணாக, எதுவுமற்றவளாக நிர்வாணமாக நிற்கிறேன். தொடர் வெற்றியின் குவியலில் எங்கு தோற்றேன்? எப்படி மீள்வேன்?

மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதா? இவனுடனே போய், மூத்தவளுக்கும் சேர்த்து சோறு பொங்கிப் போட்டு மீதி ஜீவிதத்தைக் கடத்துவதா? எதையுமே அந்த அதிகாலை நேரத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டியெனக் கடக்கும் நெடுஞ்சாலையில் நின்று அவளால் முடிவெடுக்க, எந்த முன் முடிவுமின்றி முடியவில்லை. கடலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கிவந்த ஒரு பேருந்தில் ஏறினாள்.

கையில் காசில்லையென்பது தெரியும். மனிதம் இன்னும் தீர்ந்துவிடவில்லையென்ற பெரும் நம்பிக்கை.

அவனும் உடன் ஏறினான். அவள் இருக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவள் விரல்களைப் பற்றினான். கண்ணீரைத் துடைத்தான். அவள் காதுகளில் யாருமறியாமல் முழு முத்தங்கள் தந்தான். அப்பெண்ணின் இளகலில் அவன் நிமிர்ந்தான். ஏமாற்றுதலும், துரோகமும் நிறைந்த அப்பயணம் திருவண்ணாமலையில் என் வீட்டில் வந்து தற்காலிகமாக நிறைவடைந்திருக்கிறது.

மேசையில் வைத்த காபி யாராலும் பருகப்படாமல் ஆறிப் போயிருந்தது. தேநீர் ஈரம் தோய்ந்த ஈக்களின் ரீங்காரம் எல்லோருக்கும் துல்லியமாய்க் கேட்டது.

உன்னை எங்கயோ பார்த்திருக்கேனேம்மா. உம் பேரு?”

நான் முதல் முறையாய் வாய்த்திறந்தேன்.

துர்கா சார்.”

லாஸ்ட் வீக்இண்டியா டுடேவில என்னைப் பற்றி ஒரு மூணுபக்க ஆர்டிக்கிள் வந்திருந்தது சார்

நான் அப்போதுஇந்தியா டுடேவின் தொடர் வாசகன். இப்போது என் ஞாபகத்தில் அப்பெண் இருந்தாள். அவள் மைதானத்தில் விளையாடும்  

நாலைந்து அசாத்தியமான புகைப்படங்களும் கூடவே ஞாபகத்திற்கு வந்தன.
உடல் ரீதியில் வலிமையான ஒரு விளையாட்டு வீராங்கனையை அவன் வெறும் நாலைந்து சொற்களால் ஏமாற்றியிருக்கிறான்.

சாக்லேட் வைத்திருக்கிற பெயர் தெரியாத மாமாவின் பின்னால் போகும் ஒரு எல்.கே.ஜி குழந்தையைப் போல் இந்தப் பெண் இவனோடு புறப்பட்டு வந்திருக்கிறாள்.

இங்கிருந்து இப்போது அப்பூனை எங்களைப் பார்த்துக்கொண்டே மறுபக்கம் கடந்தது.

நானும், ஷைலஜாவும் உக்கிரமானோம். உரத்த குரலில் கத்தினோம். அப்பெண்ணையும், அவனையும் உடனே வெளியேறச் சொன்னோம். என் அம்மா ஒருபுறம் அப்பையனைத் திட்டி தீர்த்தார்கள். இன்னும் இன்னுமென வளர்ந்து, தமிழ்நாட்டின் ஆளுமைகளில் ஒருத்தியாக உயர்ந்து நிற்கப் போகும் ஒரு பெண், அற்பப் புழுமாதிரி இப்படி தன்னை உள்ளிழுத்துக் கொண்டு எங்கள் முன் நிற்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. உருண்டு, திரண்டு அப்பையன் மேல் எங்கள் எல்லோர் கோபமும் குவிகிறது. நாங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு கணத்தில் என் அப்பா எப்போதும் போல், வேறொரு பார்வையிலிருந்து பேசுகிறார்.

ஒரு தப்பு நடந்துபோச்சு, இப்ப ஏன்டா ஆளாளுக்குக் குதிக்கிறீங்க? அந்தப் பொண்ணு அவமானம் தாங்காம ஏதாச்சும் பண்ணிக்கிட்டா என்ன பண்றது! நம்ப வீட்டுக்கு வந்தா ஏதாவது ஞாயம் கிடைக்குன்னுதானே வந்திருக்காங்க. ஏன் கத்தறீங்க? நிதானமா யோசிப்போம்

அப்பாவிடம் திரும்பி நான் கத்தினேன். வழக்கம் போல் இருவர் வார்த்தைகளும் தடித்து நீண்டன.

அப்பா நீங்க இதை ஒத்துக்கிறீங்களா?”

இது ஷைலஜா.

ஒரு தப்பு நடந்துருச்சி, என்னம்மா பண்றது?”

இது அப்பா,

அப்பாவின் இந்த வார்த்தைகளில் அவள் பதறினாள்.

ஜாதி, மதம், இனம், மாநிலம் என்று எல்லாவற்றையும் உதறி, என் மீது மட்டுமே உள்ள நம்பிக்கையில் இந்த வீட்டுக்கு வந்தவள் அவள். இயல்பாக அவளிடமிருந்து அடுத்த வார்த்தை வந்தது.

நாளைக்கி பவா இப்படி ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தா என்ன பண்ணுவீங்க?”

என்னம்மா பண்றது? புள்ள தப்பு பண்ணிட்டான்னு சரி பண்ணித்தான் ஆகணும்

சரி பண்றதுன்னா?” அவள் வெடித்தழுதாள். ஷைலஜா உணர்வுகளின் மேல் நின்றும், அப்பா அனுபவங்களின் பின் நின்றும் பேசினது எனக்குப் புரிந்தது.

ஆனால் அப்பாதான் ஜெயித்தார். ஒரு முடிவுக்கு வரும்வரை அவர்கள் எங்கள் வீட்டிலேயே தயங்குவதெ முடிவானது.

எங்கள் தொடர்பேச்சால் மெல்ல மெல்ல அப்பெண்ணை இயல்புக்குக் கொண்டு வந்தோம். “கட்டின மனைவியையும், இரண்டு பெண்களையும் இப்படி ஏமாற்றிய ஒருவன், உன்னை ஒரே நிமிடத்தில் நிராகரிக்க எவ்வளவு நேரமாகும்?” என வழக்கமான கேள்வியை முக்கியமான நேரத்தில் அவள் முன் வைத்தோம்.

கண்ணாடி மாதிரி நின்று அவள் உயரத்தை   காட்டினோம்.

மூன்றாம் நாள் காலை அவள் வீட்டுத் தொலைபேசி எண்ணைதுர்காஎங்களுக்குத் தந்தாள். நான்தான் பேசினேன். எதிர்முனையில் சற்று முன்வரை கம்பீரமாயிருந்ததற்கான அடையாளமாக ஒரு ஆண் குரலோடும் பின்னணியில் ஒரு பெண்ணின் வெடித்தழும் சப்தத்தோடும் என் தகவல்களை உதிர்த்தேன்.

மாலை ஐந்துமணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் அவர்களைக் காத்திருக்கும்படி சொன்னேன்.

நீங்க யாரு தம்பி?’ என்ற குரலில் வாஞ்சையிருந்தது.

நேர்ல சொல்றேன்ப்பா

ஒரு அம்பாசிடர் காரை வாடகைக்குப் பேசி, நான், ஷைலஜா, அவன், துர்கா, கூடவே என் நண்பர்கள். அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு பேச்சற்ற பயணம் எங்களுக்கு வாய்க்கவேயில்லை.

எதிர்பார்ப்பு, ஆர்வம், அல்லது ஆர்வமின்மை, துக்கம் அல்லது சந்தோஷம் எதுவுமின்றி ஒரு ஆற்றின் தெளிந்த நீரைப்போல நிச்சலமாய் உட்கார்ந்த துர்காவை அப்பயணத்தில் நான்கைந்து முறை திரும்பி திரும்பிப் பார்த்தேன். அப்படியே ஒரு சலனமற்ற கற்சிலை மாதிரி பின் சீட்டில் சாய்ந்திருந்தாள்.

எங்களுக்குத் தெரியாதென்று நினைத்து அவர்களிருவரும் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். துர்கா வீட்டில் எப்படியும் இவர்களை அவமானம் கருதி ஏற்றுக்கொள்வார்கள். அப்படியே அவளைக் கூட்டிக்கொண்டு அவன் இப்போது வேலை பார்க்கும் டெல்லிக்குப் போய்விடுவது.

அவனுக்கும் தெரியாமல் அவள் தனியே தனக்குத்தானே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தது மாதிரிதான் அவள் முக இறுக்கம் எனக்குச் சொன்னது.
மாலை ஐந்தரைமணிக்கு எங்கள் கார் ஒய்.எம்.சி.. மைதானத்திற்குள் 

நுழைந்தபோது ஆறேழுகார்கள் எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தன. அவர்கள் இருபது பேருக்கும் மேற்பட்டவர்கள் அங்கங்கே நின்றிருந்தார்கள். நான் முன் இருக்கையிலிருந்து அவர்களின் முகங்களை அவதானித்தேன். எதையும் என்னால் கண்டடைய முடியவில்லை. அதற்குள் எங்கள் கார் நின்றது. உடனே எங்களைச் சூழ்ந்து கொண்ட அக்கூட்டம் அத்தனை துரிதமாக, அத்தனை துல்லியமாகச் செயல்படும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு வளர்ந்து பருத்த ஆள் என்னைப் பின்னிருக்கையில் ஷைலஜாவோடு உட்காரச் சொல்லிவிட்டு அவன் எங்கள் வாடகைக்காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.

அடுத்த விநாடி துர்கா இன்னொரு காரின் பின்னிருக்கையில் இரு நடுத்தர வயதுப் பெண்களுக்கு நடுவே இருந்ததை கவனித்தேன்.

சிவக்குமார் இன்னொரு மாருதி ஆம்னியில் இருவருக்கிடையே அடக்கிக் கொள்ளப்பட்டான்.

நான் யாரும் எதிர்பாராமல் கார் கதவைத் திறந்து இறங்கினேன். அக்கூட்டத்திற்குத் தலைவர் மாதிரியிருந்த ஒருவரிடம் போய்,

நான்தான் உங்களுக்கு போன் பண்ணேன். இவங்க ரெண்டு பேரையும் உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். எங்க வீட்ல பொறந்து நாப்பது நாள் ஆன சின்னக் குழந்தை இருக்கு. சீக்கிரம் போகணும்என்று சூழலை சாதாரணப்படுத்த முயன்றேன்.

அதெப்படி போய்டுவீங்கஎன்ற அவர் குரலில் அப்படியொரு கடுமையிருந்தது. அப்புறம் நீடித்த ஒரு மணிநேரப் பயணமும் நடக்கப்போகும் என்னென்னவோ நிகழ்வுகளை எங்கள் முன் கொண்டு வந்தது. அத்தனை நிகழ்வுகளிலும் ஏனோ கெட்ட சகுனமிருந்தது போலிருந்தது. நானும், ஷைலஜாவும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முன்னிருக்கையில் இருந்த ஆள் மீதான பயமா தெரியவில்லை, ஷைலஜாவின் கைகள் என் கைகளைப் பிணைத்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் மீறி நாங்களிருவரும் தைரியமாயிருந்தோம். நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்கான தீர்ப்பை நோக்கிய பயணம் இது என்று மட்டும் எங்களுக்குப் புரிந்தது.

குறுகலான சந்துகளில் புகுந்து புகுந்து சென்ற கார்கள் அனைத்தும் சொல்லி வைத்தது மாதிரி ஒரு இரண்டு மாடி வீட்டிற்கு முன் நின்றது. சுத்தமாக இருட்டி விட்டிருந்தது. எல்லோரும் அவ்வீட்டின் குறுகலான மாடிப்படியில் ஏறி மொட்டைமாடிக்குப் போனார்கள். நாங்களும் பின்தொடரப்பட்டோம். அளவெடுத்தது மாதிரி இருபது முப்பது பேர் ஐம்பதுக்கும், அறுபதுக்கும் இடைப்பட்ட வயதுக்காரர்கள் அம்மொட்டை மாடியில் தரையில் பாய்போட்டு உட்கார்ந்திருந்தார்கள். சற்று முன் காலி  செய்யப்பட்ட காபி டம்ளர்கள் ஒழுங்கற்று கிடந்தன.

மாடியேறி விரிந்து கிடந்த ஒரு திசையைப் பார்த்தேன். அதன் கிழக்கு. தூரத்தில் கடல் தெரிந்தது. வேறு ஒரு மனநிலையில் இருந்திருந்தால் இந்த இரவில் கடல் சப்தம் கேட்டிருக்கலாம்.

துர்கா அப்பெண்களோடு இரண்டாவது மாடி வசிப்பிடத்திற்கு இழுத்துக் கொள்ளப்பட்டதை உணர முடிந்ததுசிவக்குமார் காரில் வந்த இரண்டு பேருக்கு நடுவில் நிற்க வைக்கப்பட்டிருந்தான். சூழல் எதற்கோ தயாராவது மாதிரியிருந்தது. பெரும் பீதி ஒன்று என்னைப் பற்றிக் கொண்டது. ஆனாலும் நான் தர்மத்தின்மீது நின்று கொண்டிருந்தேன். நான் ஷைலஜாவைப் பார்த்தேன், என்னைவிடவும் தெளிவான நிலையில் இருந்தாள்.

சொல்லுங்க

சொன்னோம்.

தங்கு தடையின்றி அரைமணி நேரம் நடந்த எல்லாவற்றையும் அச்சபைமுன் நானும் ஷைலஜாவும் சொன்னோம். நான் அப்பையன் என் மாமா மகன் என்பதை, மட்டும் எதனாலோ சொல்லவில்லை. இரண்டாவது மாடியிலிருந்ததுர்காவின் பெரும் ஓலம் மேல்மாடிக்குக் கேட்டது. திகில் மளமளவென தீ மாதிரி பரவியது.

அப்பெண்ணின் ஓலத்தைச் சுமந்தவாறே அந்த நடுத்தர வயதுப்பெண், அநேகமாக துர்காவின் தாய் கையில் ஒரு துடைப்பைக் கட்டையோடு மாடியேறி வந்தார்கள்.


ஷைலஜாவின் கை என் கையை இன்னும் இறுக்கியது. நான் பயப்படாதது மாதிரி நடித்தேன். அப்பெண் என்னைக் கடந்து அப்பையன்முன் போனார்கள். அதற்காகவே காத்திருந்தது போல அருகிலிருந்த இருவரும் விலகினார்கள்.

அத்தென்னந்துடைப்பம் முற்றிலும் உதிர்ந்து, அப்பெண்ணின் ஆவேசம் பெரும் மூச்சாய் வந்து இரைத்தது.

எந்தத் துவக்கத்திற்கோ எல்லோரும் காத்திருந்தது போல அப்பையனை அடித்துத் துவைத்தார்கள். ‘அவனை, கையைக் காலைக்கட்டி கடல்ல போடு. சுறா துன்னட்டும்என ஒரு பெரியவர் கட்டளையிட்டார்.

அவரே எங்களைப் பார்த்து, ‘இவங்கள என்ன பண்றது?’ எனக் கேட்ட கணம், அப்பையனுக்கு அடிவிழுவது நின்று எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள்.
எப்படியோ அப்பெண்ணின் அப்பா மட்டும் எங்களை முழுக்க உள்வாங்கியிருந்தார்.

அவங்கள அனுப்புங்க அவங்க இல்லன்னா எம்பொண்ணை மறுபடி உசுரோட பாத்திரு க்கவே முடியாது. தோ, இந்தப் பொண்ணு, பச்சப் புள்ளக்காரி. கொழந்தைக்குப் பால் குடுக்கறத விட்டுட்டு இப்படி வந்திருக்குன்னா, இந்த தேவ்டியா பையனைக் காப்பத்த இல்ல. எம் பொண்ணை எங்ககிட்ட ஒப்படைக்க

எதனாலோ அதன்பின் வார்த்தைகள் வராமல் தேம்பித் தேம்பி அழுதார். “ஓடிப் போய் எல்லாத்தையும் பாழாக்கி விட்டேயேடா தாயோளிஎன அவனை வயிற்றில் எட்டி உதைத்தார்.

நாங்களிருவரும் கலங்காமல் நிற்பது மாதிரி நின்றிருந்தோம். ஆனால் கண்களில் தூசி விழுந்தது.

நாங்கள் கீழே இறங்க எத்தனித்தபோது,

நில்லுங்க

என்ற குரல் கேட்டுத் திரும்பினோம். “இந்த நாயைக் கொன்னப் பாவம் எங்களுக்கு எதுக்கு? நீங்களே கூட்டிட்டுப் போங்கஎன அவனை இழுத்து எங்கள்முன் விட்டார்கள். அவனுக்கு முகம் கறுப்பு கறுப்பாய் கன்னியிருந்தது அந்த இருட்டிலும் தெரிந்தது. மூன்று பேரும் இறங்கினோம். திறந்திருந்த ஜன்னல் வழியே துர்கா நின்றிருந்தது தெரிந்தது. தலைகுளித்து ரத்தச் சிவப்பு நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்து நெற்றியில் சிகப்பு குங்குமம் மேல்நெற்றிவரை இழுத்து விடப்பட்டிருந்தது. எங்கள் இருவரையும் பார்த்தாள். அப்பார்வையிலிருந்தது பழிவாங்கலா, நன்றியா என எதையுமே முழுமையாக கிரஹித்துக்கொள்ள முடியவில்லைஅவன் அதற்குள் கீழே இறங்கியிருந்தான்.

எப்போதும் விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமில்லாத நான் ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து மாத, வார இதழ்களில்துர்காவைத் தேட ஆரம்பித்தேன். அப்பெண் மீண்டும் மைதானத்தில் இறங்கி தன் குழுவினருக்குத் தலைமையேற்று, ஆயிரமாயிரம் ஆரவாரக் கைத்தட்டல்களுக்கிடையே ஒரு ஒற்றைப் பந்தைக் கையிலேந்தி ஓடி வரும் காட்சிக்கு என நாங்கள் ஆசைப்பட்டோம்.

எந்த மலர்தலுமின்றிக் கடந்த ஆறு மாதத்திற்குப் பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை தினமணிக் கதிரில், அதே கம்பீரமான அழகோடுதுர்கா ராயபுரத்திலிருந்து ஸ்பெயினுக்குஎன்ற தலைப்போடு,

 பக்கங்களைப் புரட்டவே தோன்றவில்லை. எதனாலோ அன்று குமுறி, குமுறி அழுகை வந்தது.

1 comment: