எப்போதுமே எனக்கு டிசம்பரும்,
ஜனவரியும்தான் மனதுக்கு உகந்த மாதங்களாக இருக்கின்றன. ‘கவிராத்திரி’ ‘கவிதா நிகழ்வு’
என சிறு சிறு முயற்சிகள் நடந்தாலும் கூட அவையெல்லாமே நாங்கள் நினைத்த மாதிரி வரவில்லை.
எண்பத்தாறு டிசம்பர் 31-ல் ஓர்
இரவு முழுக்க தமிழ்நாடு முற்போக்கு எழுதாளர் சங்கம் நடத்தப் போகும் கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு
‘கலை இலக்கிய இரவு’ எனப் பெயரிட்டோம். ‘டிசம்பர் பனியில் யார் உட்காருவார்கள்?’ என்ற
கேள்விக்கு காந்திசிலை எதிரிலிருந்த வன்னியர் மண்டபத்தைத் தேர்ந்தெடுத்தோம். அப்போது
நாட்டுப்புறப் பாடகர் கே.ஏ.குணசேகரன் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். மூட்டை முடிச்சுகளோடு
நீண்ட தூர பஸ் பயணம் முடிந்து, எங்கு போவது எனத் தெரியாமல் காந்திசிலை மூலையிலேயே நின்றிருந்தார்கள்
அக்குழுவினர். முக்கா மொழம் கோட்டை சாமி, சின்னப்பொன்னு என தமிழ் கலை உலகிற்கு முற்றிலும்
புதிய முகங்கள் அவர்கள் யாவரும், அப்போது.
இரவு ஏழு மணியிருக்கும் கே.ஏ.குணசேகரன்
குழுவினர் மேடையைத் தங்கள் வயப்படுத்தி, தவில், நாயனம், உடுக்கை எனப் பாரம்பரிய இசைக்கருவிகளை
அதிரவிட்டு அடுத்த நாள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தெருவெங்கும் நடந்து கொண்டிருந்த
மனிதர்களைக் கொத்துக் கொத்தாய் அம்மண்டபத்திற்குள் நுழைய வைத்தார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் மண்டபத்திற்குள்
நிற்க இடமில்லை. இசையின் பிரவாகம் அம்மண்டபத்தைக் கடந்து தெருவெங்கும் ஒலித்தது. எங்கிருந்தோ
ஒரு உற்சாகம். மனிதர்களைப் பற்றிக் கொண்டது. அல்லது துயரம் கசிந்த எம்மனிதர்கள் முன்
இசை ஒரு பற்றுக்கோல் மாதிரி நீரில் மிதந்தது.
ஆறு மணிக்கு முன் இருந்த நாங்கள்
இல்லை இப்போது. அவ்வளவு சிதைந்திருந்தோம். தயக்கமிருந்தது. எதிர்பார்ப்பு மிஞ்சியிருந்தது.
பார்வையாளர்களின் வருகையின் நிச்சயமின்மை பெரும் பதட்டத்தைத் தந்திருந்தது.
இந்த ஒருமணி நேர இடைவெளி எல்லாவற்றையும்
மாற்றிப் போட்டிருந்தது. ஒருவரைத் தூக்கி இன்னொருவர் தோளில் போட்டு ஆடாதது மட்டுமே
குறை. அப்படி ஒரு உற்சாகம். அப்படி ஒரு கொண்டாட்டம். காணும் இடமெங்கும் மனித முகங்கள்.
முகங்கள் தோறும் உற்சாகம்.
அவர்கள் அடுத்து, அடுத்து எனப்
பாடிக் கொண்டேயிருந்தார்கள். சின்னப் பொண்ணும், குணசேகரனும்
‘‘அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சி
போச்சுதே, என்னைப்
பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி
பேசுதே’’ என
மாறிமாறிப் பாடிய வரிகளில் அந்த
மண்டபம் முழுவதிலுமிருந்த குதூகலம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு பெரும் மௌனம் ஒரு
ராட்சதப் பறவை மாதிரி வந்து உட்கார்ந்து கொண்டது.
மண்ணின் பாடல்களுக்கு மனிதர்கள்
மனங்கசிந்து உருகினதை நான் அருகிலிருந்து கண்டேன். துயரம் தோய்ந்த இப்பெரும் வாழ்வில்,
மகளுக்கு ஒரு பாவாடை வாங்க பட்ட கஷ்டமும், அவமானமும் அவர்களில் பலர் கண்களில் ஒரு மின்னல்
மாதிரி வந்து போனது. கலையின் வெற்றி இதுதான். நாங்கள் இப்போதுதான் சக மனிதர்களின் மூச்சுக்காற்று
எங்கள் மேல் படுமளவிற்கு நெருங்கியிருக்கிறோம். நான் ஒருவிதமான பரவச மனநிலையில் இப்படியும்,
அப்படியுமாக அலைந்து கொண்டிருந்த போது, தோழர் காளிதாஸ் என்னைக் கைப்பிடித்து எதுவும்
பேசாமல் வெளியில் அழைத்துப் போனார். பிடித்த கை நடுங்குவதை உணர்ந்தேன்.
‘‘பவா, சுப்ரமணி தெரியுமில்ல,
எங்க ஊரு சுப்ரமணி’’
ஏற்கனவே அவருக்குத் திக்கும்.
இப்போது அது இன்னும் அதிகரித்திருந்தது.
‘‘எந்த சுப்ரமணி தோழர்?’’
‘‘எம்.எல்.மூவ்மண்ட்ல சேந்து…’’
திக்கி, திக்கி வந்த வார்த்தைகள் எனக்குள் நேரடியாய் இறங்கியது.
‘‘டபுள். எம்.ஏ.சுப்ரமணியா?’’
‘‘ஆமாம், ஆமாம் பவா, நான் எத்தனையோ
வாட்டி அவரைப் பத்தி சொல்லியிருக்கேன்’’ வார்த்தைகள் தீர்ந்த பின்பும் அவர் தலை ஆடிக்
கொண்டேயிருந்தது.
ஒரு தேர்ந்த திரைப்படத்தின் காட்சி
மாதிரி ‘பள்ளிகொண்டாப்பட்டு சுப்ரமணியன். எம்.ஏ. (வரலாறு) எம்.ஏ.(பொருளாதாரம்)’ என்
கண்முன் விரிந்தார்.
அதுவும் ஒரு குளிர் கால இரவு.
வயலெங்கும் நெற்பயிர், பாலேறும் பருவம். இரவு இரைப்பிற்குப் பின் காளிதாஸ் மோட்டார்
கொட்டகையில் பாதி விழிப்பும், பாதி தூக்கமுமாய் தன் அண்ணனோடும் இன்னொரு நண்பனோடும்
படுத்திருக்கிறார். இப்படி தினந்தோறும் ராத்தூக்கம் கலைவது பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான்.
மோட்டார்க் கொட்டைகையின் மேல்
ஆள் பேச்சு சப்தம் கேட்கிறது. அது அந்த ஏகாந்த வெளியில் அருகிலிருந்து பேசுவது போலவே
துல்லியமாய்க் கேட்கிறது. இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் எழுந்து வெளியில் வந்து தண்ணீர்
தொட்டியின் மேல் உட்கார்ந்து கொள்கிறார்கள். வயலெங்கும் முன் பனி ஒரு பரிசுத்தமான அழகோடு
இறங்கிக் கொண்டிருக்கிறது.
‘‘எத்தன மணிக்கு முடிச்சீங்க தோழர்?’’
‘‘ஒண்ணு, ஒண்ணரை இருக்கும். சத்தம்
போடவே விடலை. தோழர் கழுத்தை இறுக்கிப் புடிச்சிக்கிட்டாரு. திமிற திமிற நான்தான் முடிச்சேன்’’
என சொல்லிக் கொண்டே அவர் கையிலிருந்த ரத்தக் கவிச்சியையும், நகக் கண்களில் ஒட்டியிருந்த
சதைத் துனுக்குகளையும் தன் சகத் தோழர்களுக்குக் காண்பிக்கிறார்.
நாங்கள் மூவரும் இன்னும் நெருங்கி
உட்காருகிறோம். ஒருவர் உஷ்ணம் இன்னொருவர் மேல் படுகிறது. பனியில் உறைகிறோம். இனி வாழ்நாளெல்லாம்
வராதோ என்பது மாதிரி வார்த்தைகள் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டன.
‘‘வீட்ல யாரும் சத்தம் போடலையா?’’
‘‘தனியாத்தான் படுத்திருந்தான்.
முழிச்சி எங்களை யாருன்னு நிதானிக்கிறதுக்குள்ள தோழர் கழுத்தை நெருக்கிட்டாரு’’
‘‘சரி, இதோட அந்த ஊர்ல இருக்கிற
சாதிக் கொடுமை தீந்துடுமா தோழர்?’’
‘‘இல்லை. தனிமனித ஒழிப்பால பெருசா
எதுவும் நடந்துறாது. ஆனா ஒரு பயம் கவ்வும். இவன்தான் அவங்களோட தைர்யம். இவந்தான் அந்தக்
கோயிலுக்குள்ள அவன் சாதியைத் தவிர வேற எவனும் நுழைய கூடாதுன்னு நாலு வருசமாத் தடுத்தவன்.
நாம நேரடியாவும், மறைமுகமாவும் எடுத்த எல்லா முயற்சிகளையும் நசுக்கினவன். அவர்கள் உரையாடலில்
தத்துவம், மார்க்சியம், சில இடங்களில் கவித்துவம் எல்லாமும் இருந்தது. இல்லாதது தனிமனித
விரோதம்.
செத்துப் போனவனுக்கும் இவர்களுக்கும்
எந்தப் பகையுமில்லை. சொல்லப் போனால் இவர்கள் ஐந்து பேருமே வேறு வேறு ஊர்களிலிருந்து,
சாதியிலிருந்து ஒரு பொதுகொள்கையின் பொருட்டு ஒரு புள்ளியாய்த் திரண்டிருந்தார்கள்.
அப்போதுதான். பி.ஏ.முடிந்திருந்த
எனக்குத் கொஞ்சம் புரிந்தது மாதிரியும், புரியாதது மாதிரியுமிருந்தது. அவர்கள் ஒவ்வொருவராய்
கீழே குதிக்கிற சப்தம் கேட்டு நாங்கள் அவசரமாக பம்புசெட் ஷெட்டுக்கு உள்ளே போய்ப் படுத்துக்
கொண்டோம். லுங்கியைத் தளர்த்தி மேலுக்குப் போர்த்திக் கொண்டோம்.
அவர்கள் தொட்டி தண்ணீரில் விழுந்து
சப்தமெழுப்பிக் குளித்தார்கள். அவர்களுக்குள் எப்போதும் விடாமல் விவாதங்கள் நடந்து
கொண்டேயிருந்தன. ‘‘விடியறதுக்குள்ள திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறுங்க தோழர். அங்க தோழர்
ராமச்சந்திரன் உங்களைப் பாத்துக்குவாரு’’ என்று அவர்களில் ஒருவர் காரியம் முடிந்த இரண்டு
பேரைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும். வார்த்தைகள் மட்டுமே பம்புசெட்டிற்குள் நுழைந்தன.
அடுத்த நாளிலிருந்து தோழர் சுப்ரமணியனை
எங்கள் ஊரில் நாங்கள் யாருமே பார்க்கவில்லை. நேற்றிரவு பம்புசெட்டிற்குள் வந்த வார்த்தை
அவரை நோக்கி சொல்லப்பட்டது தான் என்பது எனக்கு அப்புறம் புரிந்தது. சுப்ரமணியன் வீடும்
அப்படி ஒன்றும் இளைந்தது இல்லை. பத்திருபது ஆட்களை வைத்து எப்போதும் பெரும் விவசாயம்
செய்து கொண்டிருந்தவர்தான் சுப்ரமணியனின் அப்பா. ஒரேமகனை மெட்ராஸ் பச்சையப்பன் காலேஜூக்கு
அனுப்பிப் படிக்க வைத்தார். அங்குதான் அவருக்கு மார்க்சியம், அழித்தொழிப்பு, வர்க்கம்
எல்லாமும் அறிமுகம். படிப்பு முடிந்து, தலைமைச் செயலகத்துக்கு முன் ஒரே நாளில் பதினேழு
பேர் தங்கள் பட்டங்களையும், ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல்களையும் கொளுத்தினார்கள். எரியும்
ஜ்வாலை அடங்கும் முன் கைதானார்கள். ஜெயிலிலிருந்து இயக்கத்தின் வழிகாட்டுதலின் பேரில்
தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்டவர் அவர். சிலருக்கு டபுள் எம்.ஏ.சுப்ரமணி.
பலருக்கு நொண்டி சுப்ரமணி.
இரண்டு மூன்று வருடங்களுக்குப்
பின் சுப்ரமணியன் அப்பாவின் கருப்பந் தோட்டத்தில் கரும்பு வெட்டுபவர்களில் ரெண்டு பேர்
அசலூர் கூலித் தொழிலாளிகள் இல்லை, அசலூர் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் என்பதையறிந்து ஊரே
கூடி நின்ற ஒரு மாலைவேளையில் அவர்கள் இருவரும் மிகுந்த அவமானப்படுத்தபட்டு திருப்பி
அனுப்பப்பட்டார்கள்.
காலம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து
விடுகிறது. மனது அனைத்தையும் பத்திரப்படுத்திக் கொள்கிறது.
மண்டபத்திற்குள்ளிருந்து இன்னும்
ஆவேசமாய் குணசேகரன் குழுவினரின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தோல் கருவிகளின்
குதியாட்டம் ஊரையே எழுப்புகிறது.
ஒலிக்கும் பாடல்களிலிருந்தும்,
நடக்கும் நிகழ்வுகளிலிருந்தும் நாங்களிருவரும் மனதளவில் வெகுதூரம் வந்து விட்டிருந்தோம்.
முற்றிலும் வேறொரு உலகத்தில் சஞ்சரித்திருந்தோம்.
‘‘இப்ப அவருக்கு என்னாச்சு தோழர்?’’
‘‘பதினாறு வருசத்துக்கப்புறம்
அவரு மண்டத்துக்குள்ள ஒக்காந்து இருக்காரு’’
என் உடல் இந்த வார்த்தையில் லேசாக
நடுங்கத் துவங்கியது. அது பயமில்லை. அப்படியென்றால்? ஆர்வம். வெறும் ஆர்வமா? இல்லை
தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனக்குக் கிடைத்த ஒரே மானுட வாழ்வை தானே சிதைத்துக்
கொண்ட ஒரு மனிதனைப் பார்க்க… நான் அந்நிமிடத்தில் என்னென்னமோ ஆனேன். ஒருவேளை இது எல்லாமுமாய்க்
கலந்த கலவையாயிருக்கலாம்.
உள்ளே அதிரும் பாடல்களினூடே தோழர்
காளிதாசைப் பின் தொடர்ந்தேன். மண்டபத்தின் கிழக்குப்பக்க சுவற்றில் சாய்ந்து கால்களை
நீட்டிப் போட்டு உட்கார்ந்திருந்த தாடிமுடி நரைத்திருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க
மனிதனுக்கு முன் முழுந்தாளிட்டு உட்கார்ந்து, அந்தப் பெரும் சப்தத்தினூடே காளிதாஸ்
ஏதோ சொன்னார். நான் அவர்களுக்கருகில் நின்று கொண்டிருந்தேன். அவர் சிரமப்பட்டு எழுந்தார்.
காளிதாஸ் அவர் கையூன்றிக் கொள்ள தோள் கொடுத்தார்.
அன்புத் தியேட்டர் அருகே ஒரு டீக்கடையில்
நின்றோம். அவர்களை முன்னால் நடக்கவிட்டு பின்னாலிருந்து கவனித்தேன். தோழர் சுப்ரமணியத்திற்கு
ஒரு கால் முற்றிலும் ஊனமாயிருந்தது. ஒரு கையைக் காலின்மீது ஊன்றி நடந்தார். எதுவும்
பேசாமல் காளிதாஸ் உடன் நடந்தார். நான்தான் மூவருக்கும் ‘டீ’ சொன்னேன். ‘‘எனக்கு டபுள்
ஸ்ட்ராஸ்’’ என்பதற்கு மட்டும் வாய் திறந்தார். வெளிச்சத்தில் முகம் பார்த்தேன். எப்போதோ
இறுகிய முகம். அதிலிருந்து ஒரு புன்னகை, ஒரு சிரிப்பு சாத்தியமாகும் என நம்பவில்லை.
காளிதாஸ் என்னை அறிமுகப்படுத்தினார்.
‘தமுஎச செயலாளர்’ என்றதற்கு,
‘மார்ச்சிஸ்ட் குரூப்தானே?’ என
அலட்சியமும் கடுமையும் மிகுந்த குரலில் கேட்டார்.
நான் எதுவும் சொல்லவில்லை. மண்டபத்திலிருந்து
வெளிவரும் பாடலையும், மண்டபதுக்குள் போகும் மனிதர்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.
‘உள்ளே போலாம்’ என்ற அவர் சொல்லுக்குக்
காத்திருந்தது போல மூவரும் திரும்பினோம்.
அவருக்குக் கட்சிமீது கடும் கோபமிருந்தது.
‘இந்த ஓட்டுப் பொறுக்கிகளோடு பேச என்ன இருக்கிறது?’ என்பது மாதிரியான கோபம் அது. அப்போது
சரியாகப் புரியவில்லை. இப்போது மட்டும் முற்றிலும் புரிந்து விட்டதா என்ன?
அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு நான்
தனித்திருந்தேன். என்னென்னமோ யோசனைகள் வந்து போனது. பாடல்களை மீறி சுப்ரமணி என்னை அந்த
இரவில் ஆக்ரமித்துக் கொண்டார். அதன்பின் நீண்ட அக்கலையிரவில் நான் கவிதை படித்தேன்.
ஜெயந்தனின் ‘மாப்பிள்ளை கிடைக்கும்’ நாடகத்தில் நடித்தேன். நன்றி சொன்னேன். வந்தவர்களை
வழி அனுப்பி வைத்தோம். அந்த ஒரு இரவில் ஏதோதோ நடந்தது.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் அதே
போல இந்த டிசம்பரில், அன்று இரவு என்னோடு எதுவும் பேசாமல் லட்சியவாதம் இறுகிய முகத்தோடு,
தாங்கித் தாங்கி நடந்து வந்த தோழர் சுப்ரமணியனின் முகம் மட்டும் திரும்ப, திரும்ப நினைவு
வந்து இன்னும் அலைகழிக்கிறது.
I am working as Joint Secretary in Government of Kerala. Recently I read the book of u "ELLA NAALUM KARTHIKAI". Very good work. Tamil typing is too difficult for me. So in English. Thank u Sir for your great work.
ReplyDelete