ஒவ்வொரு வருடச் சித்திரையிலும் அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு
சொந்த கிராமத்திற்குப் போவார். எல்லோரும் எங்களுக்காகவே அந்த பிரம்மாண்ட மாமரத்தடியில்
காத்திருப்பார்கள். அப்பாவின் தலை தெரிந்ததும் ஆறேழு பேர் மளமளவென மரமேறுவார்கள். ஒவ்வொரு
கிளையிலும் ஒரு கரும் பிசாசாய் தொத்திக்கொண்டு உக்கிரத்தோடு காய் உலுக்குவார்கள். புளியம்பழம்
கொட்டுவது போல மாங்காய் உதிரும். ஆசைப்பட்டு ஒரு காயெடுத்து கடித்தால் புளிப்பு தாங்காது.
முகம் அஷ்டகோணலாகும். பாதி கடித்த செங்காயை அப்படியே வீசி எறிவேன்.
அம்பாரமாய்க் குவித்து வைத்த குவியலிலிருந்து ஒரு ஈச்சங்கூடையில்
காய்களை நிறைத்து எட்டு பாகமாய் சிறு குவியல்களாய் கொட்டப்படும். அப்பா எட்டாவது குவியலின்
அருகில் நின்று, அதற்காகவே காத்திருந்தது போல காலால் எட்டி உதைத்து அதைக் கலைப்பார்.
வழக்கமான சண்டை துவங்கும். ஒரே கூச்சல், குழப்பம், கெட்ட வார்த்தை, போலீசுக்கு பிராது
என முடியும். போலீசுக்கு எழுதின புகார் மனு ஒருபோதும் போலீஸ் ஸ்டேசன் வரை போனதில்லை.
ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன். ‘‘அது ஏம்பா எட்டாவது பங்கு வைக்கும்போது
மட்டும் உனக்கு ஆத்திரம் பொங்குது?’’
அப்பா நிதானித்து, என் தலைமுடிக்குள் கை நிறைத்து கோதிச் சொல்லுவார்.
‘‘அது நியாயம் மீறப்படறப்போ வர்ற கோபண்டா’’
‘‘என்னா நாயம்?’’
‘‘எங்க பங்காளிகள்ல ஒருத்தன் சின்ன வயசிலேயே காணாமல் போயிட்டான்.
இந்த ஊர்ல இருக்கான், அந்த ஊர்ல இருக்கான்னு சொல்லி அவனுக்கு ஒரு பாகம் எடுத்துக்குவாங்க.
நாம வெளியூர்லதானே இருக்கோம். நாம போனப்பறம் அதை மத்த பாகத்தோட சமமாப் பிரிச்சிக்குவாங்க.
அதுக்கு ‘ஊர்சுத்தி’ பாகன்னு பேரு. அவன் இப்ப உயிரோடு இருக்கானான்னே தெரியல. ஆனா
அவன் பேர்ல ஒரு பாகம் போகுது.
‘‘அப்பா மட்டும் இதில் ஒரு பக்கம். மற்ற ஆறு பேரும் இன்னொரு
பக்கம். எப்போதும் நடந்த சண்டையும், அப்பாவின் பார்வையில் நிகழ்ந்த நியாய மீறலும் தொடர்ந்து
இரண்டு வருடம் ‘மா’ அறுவடைக்கு நாங்கள் போகவில்லை. அதனால் காய் உலுக்கப்படாமல்
கிடந்து மூன்றாவது வருடம் அம்மாமரங்கள் வேரோடு அறுபட்டன. கேள்விப்பட்டு நானும் அப்பாவும்
போய்ப் பார்த்தபோது மாமர வேரைச் சுற்றி பெரும் பள்ளம் பறித்துக் கொண்டிருந்தார்கள்.
எதற்கெடுத்தாலும் சத்தம் போடும் அப்பா எதனாலோ என் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகத்
திரும்பினார். இழந்த துயரம் என் கைகளுக்குப் பரவியதை உணர முடிந்தது.
அதற்கடுத்த வருசம், அப்பா வாத்தியாராய் வேலை பார்த்த அண்ணாமலைபுரத்தில்
இரண்டு ஏக்கர் புஞ்சைக் காட்டை அறுநூறு ரூபாய்க்கு வாங்கினார். கல்லாங்குத்தும், கள்ளிமரங்களும்
சுடலிச்செடிகளுமாய் மண்டிக்கிடந்த புஞ்சையை அப்பாவும், அம்மாவும் சீர்படுத்தி முதல்
வேலையாய் நான்கு மாமரக் கன்றுகளை நட்டார்கள்.
கோல் சுற்றி நீர்வளம் பார்த்து, வேப்பங்குச்சியால் கிணறு படம்
வரைந்து சனிமூலையில் முதல் கடப்பாரை விழுந்ததுவரை என் ஞாபகத்திலிருந்து அகலாத நினைவுகள்.
வெள்ளை மொறம்பு மலைபோல் குவிந்திருக்கும் அக்கிணற்று மேட்டிலேயே
அப்பாவுக்கு இரண்டு வேளை சாப்பாடு போகும். கிணற்றின் ஆழம் இறங்க இறங்க அப்பாவின் சாப்பிடும்
இடம் சூறாவரியானது. வெய்யில் தலைக்கேறிய ஒரு மத்தியானத்தில் அக்கிணற்றில் கருநீர் ஊற்று
கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாவின் ஸ்கூலிலிருந்து கிணற்றுக்கு ஒரு பர்லாங் தூரம்தான்.
ஒரு நாளைக்கு பத்து தடவையாவது நிலத்துக்கும் ஸ்கூலுக்கும் நடந்து தீர்ப்பார்.
தெற்கேயிருந்து கையளவிற்கு ஒரு ஊற்றும், மேற்கேயிருந்து அதைவிடச்
சின்னதாக இரண்டு மூன்று சல்லி ஊற்றும் வந்து அக்கிணற்றை நிரப்பியது. வடிந்த கிணற்றில்
இந்த ஊற்று பாய்கிற சத்தத்தைக் கேட்ட எவரும் கடவுளை நேருக்கு நேர் பார்த்த பரவசத்தை
அடைவார்கள்.
நீர் கிடைத்த அடுத்த நாள் அதிகாலையிலேயே செங்கமேட்டுப் பெரியப்பா
எங்கள் வாசலில் குந்தியிருந்தார். அவர் மறுக்க மறுக்க அப்பா சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
விடிவதற்கு முன் நிலத்திற்குப் போனார்.
வெட்டிய புது கிணற்றில் கவலை அமைக்கப்பட்டது. தொண்டானும், தோண்டியும்
மாடுகளோடு இணைக்கப்பட்டு அது நீர் இழுக்கும் வழி மேடு பள்ளமாக அமைக்கப்பட்டது. எல்லாமும்
என் பிஞ்சு உடலில் உரமாக ஏறியது.
அதற்கும் அடுத்தநாள் மூன்றாம் ஜாமத்தில் எங்கள் நிலத்திலிருந்து
அந்த ஊருக்கே பாட்டு கேட்டது. அதுவரை அவ்வூர் கேட்டிராத கவலைப்பாட்டு அது. செங்கமேட்டுப்
பெரியப்பாவிற்கு உடல் உரத்தோடு, குரல்வளமும் உண்டு எனத் தெரிந்து நானும் அப்பாவும்
அக்கருக்கலில் இன்னும் வேகமாய் நடந்தோம்.
விடிவதற்கும், அவர் பாடல் முடிவதற்கும் காத்திருந்ததுபோல் நாங்களிருவரும்
அந்தப் புங்கமரத்தின் இருட்டில் நின்றிருந்தோம். கிணற்றில் விழுந்து தோண்டியில் நிறைகிற
நீர் தொண்டான் வழியே வாய்க்காலில் ஊற்றுவது கவித்துவத்திற்கும் அடுத்த நிலை.
எல்லாவற்றிக்கும் ஒரு சப்த ஒழுங்கிருந்தது. எல்லா நிலைகளிலும்
அழகு மிளிர்ந்தது. கிணற்று நீரில் தோண்டி விழுவது, கயிற்றைத் தளர்த்தி நீரை மொள்ளுவது,
அது மேலேறி வரும்போது சிந்தும் நீர், கல்பொந்தின் வழியே நீர் கொட்டி வாய்க்காலுக்கு
ஓடுவது. எனக்கு அடுத்த தலைமுறை இனி எப்போதும் காணக் கிடைக்காத காட்சியையும், கேட்க
முடியாத சப்தத்தையும் நான் என் இரு கைகளிலும் தாகம் தீர அள்ளி அள்ளி பருகினேன்.
அதற்குப் பிறகான அப்பாவின் முகம் எப்போதும் சந்தோஷத்தால் பூத்திருந்தது.
ஒருநாள் ஸ்கூல் முடிந்து வரும்போது சைக்கிள் கேரியரில் ஒரு பித்தளை குடம் கட்டிக் கொண்டு
வந்தார். அதிசயத்தைக் காணப் பண்ண அழைப்பதை மாதிரி என்னைத் தனியே அழைத்து தன் தோள்வரைத்
தூக்கி குடத்தைச் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்துக் காட்டினார். குடம் நிறைய மீன் குஞ்சுகள்.
சின்னதும் பெரியதுமாக அவை அவசரமாய் துள்ளி கீழே குதித்தன. என்னைத் தரையில் நிறுத்திவிட்டு
அப்பா ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிக் குடத்திலிட இன்னொன்று கீழே குதித்தது. அம்மாதான் எப்போதும்
போல் இதற்கும் ஒரு தீர்வு கண்டாள். இப்போது எங்கள் புதுக் கிணற்றில் விராலும், ஜிலேபியும்
நிறைந்திருந்தன. எனக்கும் வசந்தா அக்காவுக்கும் மீந்த சாதத்தை, அல்லது அதற்காகவே மீற
வைக்கப்பட்ட சாதத்தைக் கிணற்றில் இரைத்து அவற்றை மீன்கள் மொய்க்கும் அழகை யாரையாவது
கூட்டிப் போய் காட்டுவதென்பது தினந்தோறும் நடந்தது.
விரால்கள் வளர்ந்து பெருத்தபோது அப்பா கொசுவலையை எடுத்துக் கொண்டு
என்னையும் கூட்டிக் கொண்டு மத்தியானத்தில் குளிக்கவும், அன்றைய சாப்பாட்டிற்கு மீன்
பிடிக்கவும் போவார். சோற்றை இரைத்து மீன்களைக் கூட்டி கொசுவலை போட்டுப் பிடிக்க முயற்சிக்கும்
போது, விரால்கள் தப்பித்து அப்பாவிடம் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டு வாங்கும்.
ஆனாலும் போரில் வென்று திரும்பும் வீரர்களைப் போல நானும் அப்பாவும்
ஆறேழு விரால்களோடுதான் வீடு திரும்புவோம். காசிரிக்கா நாரில் அவற்றைக் கோர்த்து நானும்
அப்பாவும் தூக்க முடியாமல் தூக்கி வருவோம். வழிநெடுக யாராவது பார்க்க வேண்டும் என்று
எனக்கு ஆசையாயிருக்கும்.
அப்பாவின் அடுத்த கனவு எப்படியாவது ஒரு ஆயில் இன்ஜின் வாங்கிவிட
வேண்டுமென்பதுதான். ஒரு செகண்ட்கிரேடு வாத்தியார் சம்பளத்தில் அதெல்லாம் பெருங்கனவு.
தென்மாத்தூர் கண்ணப்ப உடையார் வீட்டிற்கு நடையாய் நடந்து பாண்டு எழுதித்தந்து அவரிடமிருந்து
ஒரு ஆயில் இன்ஜினை செகண்ட் ஹேண்டில் வாங்கி வந்தார். ஒரு தரித்திரத்தை அப்பா மாட்டுவண்டி
கட்டி கூட்டி வந்திருக்கிறார் என்பது அப்போது எங்கள் யாருக்கும் தெரியாது.
ஒரு தேர்ந்த ஆயில் இன்ஜின் மெக்கானிக்கான என் செல்லங்குப்பத்து
சித்தப்பா அதற்குப் பின் அந்த ஒரு இன்ஜினுக்காகவே எங்கள் நிலத்துக் கொட்டாயிலேயே படுத்துக்
கிடந்தார். அது ரிப்பேர் ஆகாத நிமிடம் இல்லை. இப்போது தேற்றிவிடலாம், அப்போது தேற்றிவிடலாமென
அப்பா அதனோடு நேரம் காலம் பார்க்காமல் மல்லுக்கட்டுவார். கடைசியாக அம்மாவின் வெள்ளைக்
கல் கம்மல் வரை அடகுக்குப் போனதுதான் மிச்சம். உதவிக்கு அழைத்து வரப்பட்ட வாசுதேவன்
மாமா வந்த ஐந்தாவது நாள் ஆயில் இன்ஜினை இயக்கிக்காட்ட வேண்டிய தீப்பந்தம், ஏற்கனவே
இன்ஜின் ஆயில் முழுக்க தெறித்திருந்த உடலில் பட்டு எரிந்து அவர் ஓடிவந்த முன் கருக்கலில்,
நானும் அந்த கிணற்று மேட்டில்தான் நின்றிருந்தேன்.
மரண ஓலத்துடன் ஓடிவரும் அவரை,
‘கெணத்துல குதிடா, கெணத்துல குதிடா’ என அப்பா அடித்தொண்டையிலிருந்து
கத்திக் கொண்டு வந்தார். கிணற்றில் குதிப்பதற்கு முன் உடல் பாதி வெந்திருந்தது.
என்ன செய்தும் எங்கள் ஆயில் இன்ஜினைத் தேற்ற முடியவில்லை. வாசுதேவன்
மாமாவை மட்டும் காப்பாற்ற முடிந்தது.
ஒவ்வொரு நாளும் நிலக்கடன் கூடிக் கொண்டேயிருந்தது. இப்படி ஒரு
வெளங்காத ஆயில் இன்ஜினைத் தன் தலையில் கட்டிய கண்ணப்ப உடையாருக்குக் காசு தர முடியாது
என அப்பா கறாராய் முடிவெடுக்க, எழுதிக் கொடுத்திருந்த பாண்டு கோர்ட்டுக்குப் போனது.
தீர்ப்பு அந்த ஓட்டை ஆயில் இன்ஜினுக்கு சாதகமாக வந்தது. அப்பா
ஓய்வு பெற்றதற்கு மறுநாள் நான் செல்வராஜ் மாமாவைக் கூட்டிக் கொண்டுபோய் இன்ஜின் வாங்கிய
அசல் தொகை 800, வட்டி கோர்ட் செலவு, டிகிரி செலவு என என்னென்னமோ புரியாத வார்த்தைகளுக்கெல்லாம்
சேர்ந்து நாலாயிரத்து ஐநூறு கட்டி கோர்ட் கேஸ் கட்டை மீட்டு வந்தேன்.
என்ன செய்தும் இயக்க முடியாத அந்த இரும்பு இயந்திரத்தை அப்பா
பலமுறை தன் பலங்கொண்ட மட்டும் எட்டி உதைப்பதை பல நேரங்களில் இருட்டில் நின்று கவனித்திருக்கிறேன்.
என்றாவது ஒருநாள் அப்பாவுக்குத் தெரியாமல் அதைக் கிணற்றுக்குள் தள்ளிவிட வேண்டுமென
எத்தனித்திருக்கிறேன். ஆனால்,
‘‘இதைத் தூக்கி இந்தக் கெணத்துலேயே போட்டுடுங்கப்பா’’ என ஆத்திரத்தோடு
அப்பா கத்தும் போது நாலைந்தடி தூரம் போய் நான் நின்று கொள்வேன்.
தனக்கு மட்டுமின்றி ஊரில் ஏழெட்டு பேருக்கும் சேர்த்து அப்பா
பதிந்து வைத்திருந்ததன் பலனாக, ஒருநாள் மின்வாரியத்தின் நீண்ட லாரிகளில் சிமெண்ட் கம்பங்கள்
வந்திறங்கின நாள் அப்பாவின் முகம், கிணற்றில் நீர் கண்ட அன்று மலர்ந்ததை விடவும் கொஞ்சம்
கூடுதலாக மலர்ந்தது. ஆயில் இன்ஜின் தந்திருந்த தொடர் வலியிலிருந்து மீண்ட திருப்தி
அது.
கடன் இன்னும் கூடிக் கொண்டேயிருந்தது. காரப்பட்டார் கடையில்
கடனுக்கு ஐந்துக் குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார், ஒரு திறனுமில்லாத எங்களை நம்பி
வாங்கப்பட்டது.
கைமீறிப் போய்விட்ட கடனுக்கு எங்கள் நிலம் அடமானம், போகியம்
என்று என்னன்னமோ பெயரில் யார் யாருக்கோ கைமாறியது.
நிலமற்ற அப்பா நடை பிணமாக உலவினார். பித்து பிடித்துப்போய் யார்
யாருக்கோ கடன் கேட்டு போஸ்ட் கார்டு எழுதினார். ஆளுக்கு ஆயிரம்தான். நூறு பேர். ஒரு
லட்சம் என்று இரவு பகலாய்ப் புலம்பினார். நீ ஒரு ஆயிரம், நீ ஒரு ஆயிரம் என என்னையும்
அம்மாவையும் கை காட்டினார். வேறு வழியின்றி நானும் அம்மாவும் அப்பாவை வேலூர் பாகாயத்திலிருந்த
மனநல மருத்துவமனைக்கு அழைத்துப் போனோம். வழியில் பாய்ஸ் ஹைஸ்கூல் முன்பாக ஆட்டோவை நிறுத்தச்
சொன்னார். மௌனமாகக் கீழே இறங்கினார். நான் பதட்டத்தோடு அவர் இரு தோள்களையும் பின்னாலிருந்து
கட்டிக் கொண்டேன். அவர் பின்னால் திரும்பி என்னை தீர்க்கமாகப் பார்த்தார். இப்போது
அவர் கண்கள் தெளிவாக இருந்தன. அவர் உயரத்திற்கு வளர்ந்திருந்த என்னைத் தழுவி என் தலையைக்
கோதிவிட்டார்.
‘‘பவாய்யா, எனக்கு ஒண்ணுமில்லடா, வீட்டுக்குப் போலாம்’’
மிகத் தெளிவாக, துல்லியமாய்ப் பேசினார்.
அந்த பிரம்மாண்ட பள்ளி மைதானத்தின் முன் நின்று உள்ளுக்குள்
சபதமெடுத்தேன். பிச்சை எடுத்தாவது இக்கடனை அடைக்க வேண்டும். ஈரப் பிசுபிசுப்போடு ஒரு
குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைப்பது போல, மண் ஈரத்தோடு எங்கள் நிலத்தை மீட்டு சேறும்
சகதியுமாய் அப்பாவிடம் மீண்டும் தரவேண்டும், அல்லது ஒருமுறை அவரை அதில் புரண்டு எழ
வைக்க வேண்டும்.
எல்லாமே நடந்தேறியது.
தோழா அது கவலை இல்லை. கமலை.
ReplyDeleteஎல்லாம் நடந்தேறியது என்கிற போது ஏதோ உள்ளுக்குள் புரிந்தது
ReplyDeleteமனம் நெகிழ்ச்சியானது.அனுபவ துயரம் கொடுமை ஐயா.
ReplyDeleteஅடடா, இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் கதையை வாசித்தபின் கண்ணீர் உகுக்காமல் இருக்க முடியுமா ? அற்புதம், அற்புதம் ஐயா !
ReplyDelete