Friday, December 30, 2016

இத்தனை அழகோடு எங்கள் ஜீவனுள்ள மலை

 எப்போதுமே இது ஊட்டும் அபூர்வங்களிலிருந்து திமிற முடிந்ததில்லை.

இதில் ஆன்மீக ஈர்ப்பு ஒரு துளியும் இல்லை

ஆனாலும் ஒவ்வொரு பருவ காலங்களிலேயும், இம்மலை வேறு வேறாக என்னை வசீகரிக்கிறது.

ஒரு பின்னிரவு முழிப்பின்போது வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தேன், அயர்ந்து தூங்கும் ஒரு பெரும் யானையைப் போல் கிடந்தது.
அதேநாள் காலை விடியலில் அதே இடத்தில் நின்று கவனித்தேன், வேட்டைக்குப் பாயும் ஒரு புலி போலத் தெரிந்தது.

பாட்டியோடு பனி பொழியும் ஒரு காலை நடையின் போது மிச்ச நெய்யில் நின்றெரியும் தீப ஒளியின் வெளிச்சத்தில் பார்த்தேன், ‘வாஎன ஒரு சிறுவனை இரு கரம் கூப்பி அழைத்த தாயின் பரிவுமிக்க கைகள் அதனிடமிருந்து நீண்டதை நோக்கித் தாவினேன்.

ஒரு தெருவோர வேசியின் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் கேரியர் மேல் ஏறி நின்று பலத்திற்கு அவள்  தோள்களில் கை ஊணி மலை பார்த்த நிமிடம் அவளும் நானும் ஏனோ சேர்ந்து அழுதோம்.
என் தினங்களில் எப்போதும் மிக அருகே பார்க்கும்படி இதை சேர்த்ணைத்துக் கொள்ள வேண்டி மனம் அலைந்து நான் போய் நின்ற இடம்கிரீஷ் ஃபேலன்என்ற கனடாவின் புகழ்பெற்ற புகைப்படக்காரனின் வாசல்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றை மட்டுமே கிரீஷ் புகைப்படமாக்கினான். எகிப்தில் நதி, ஈரானில் வீடு, இந்தியாவில் துறவிகளும் மலைகளும்.
எனக்கென மலைகளை மட்டும் தரும்படி அவனிடம் இறைந்து மன்றாடினேன்.

இருபது மலைகளின் புகைப்படங்கள் பெற்றேன். அவைகளை எடுக்க அவன் எடுத்துக் கொண்ட காலம் பதினாறு ஆண்டுகள்.

என் நண்பர் எஸ்.கே.பி.கருணாவிடம் சொல்லி அவைகளை கையடக்கமான காலண்டர்களாக அச்சிட்டோம்.

என் மலை எப்போதும் என் கைக்கெட்டும் தூரத்திலேயே இருந்தது. பார்க்க அதன் பிரமாண்ட நிறமும், தொட அதன் நிழலுருவமுமாய் என் நாட்கள் நகர்ந்தன.

நான்தான் பேராசைக்காரனாயிற்றே! அடங்க மறுக்கும் மனதை சாந்தப்படுத்திக் கொண்டேயிருந்தேன்.

இதோ புகைப்பட கலைஞன் சண்முகசுந்தரத்திடம்  பேசி ஒரு பெரும் விலை கொடுத்து (கடனுக்குத்தான்) இருபது மலையின் படங்களை என் கைகளுக்கு  மாற்றிக் கொண்டேன்.

நண்பன் சங்கரும் மகன் வம்சியும் அதை அப்படியே ஒரு நாட்காட்டிக்குள் அமர வைத்திருக்கிறார்கள்.

என் கனவின் மெய்படுதல் இது.

ஒரு காலண்டர் அச்சடிக்க, படத்துக்கும் சேர்த்து 150/- ரூபாய் செலவாகிறது. மேலும் 50 ரூபாய் நன்கொடை வேண்டும். என் நண்பன் ஃபீனிக்ஸின் வீடு இன்னும் மேலெழும்ப, இன்னும் நாங்கள் கட்ட வேண்டிய கழிப்பறையின் மீதிக்கும் சேர்த்து.

புத்தாண்டின் நினைவாக உங்கள் மேசைகளிலேயும் நண்பர்களுக்கு பரிசளிக்கவும் இதை நீங்கள் கோரலாம்.


எட்டி ஸ்பரிசிக்கும் தூரத்தில் இத்தனை அழகோடு எங்கள் ஜீவனுள்ள மலை.





Wednesday, December 28, 2016

தேசாபிமாணியில் எனக்கான சிறப்பிதழ்

தேசாபிமாணி எனக்கான சிறப்பிதழாக வந்தது உண்மையிலேயே பெருமிதமான ஒன்று.

தூங்கி எழுந்தவுடன்  கையில் கடுங்காபியும், பீடித்துண்டும், தேசாபிமாணியுமாய் திரிகிற பாட்டாளி மலையாளிகளை ஆயிரக்கணக்கில் பார்த்திருக்கிறேன்.

தேசாபிமாணியின் பொறுப்பாசிரியரும் மிகப்பெரும் எழுத்தாளருமான டாக்டர் அனில்குமார் என்னை சந்தித்த அனுபவம் பற்றியும், என் எழுத்து பற்றியும் பத்து பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையும், அதன் மூத்த நிருபர் பிஜூ என்னை நேர்காணல் செய்து எழுதியதும் மிக முக்கியமானவைகள்

புகைப்பட கலைஞன் ஜகத்லாலுக்கு என் பிரியம்.























மீன்


பவுல் வாத்தியாரை, வாத்தியார் என அவரே சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அப்படி ஒரு ஒல்லிக்குச்சி உடம்பும், முழங்காலுக்குமேல் தூக்கிக் கட்டிய கட்டம் போட்ட லுங்கியும், கை வைத்த வெள்ளை பனியனுமாய்த்தான் எப்போதும் திரிவார்.

இவர் ஸ்கூலுக்கு எப்போது போவார்? அப்போதாவது உடைமாற்றிக் கொள்வாரா? அதெல்லாம் மாயவித்தைகள் போல மறைந்துவிடும்.

  முனிசிபல் பாய்ஸ் ஹைஸ்கூலில் பத்தாவதுக்கு மாறினபோதுதான் பவுல்சாரின் நீளமான அத்தூண்டிலில் நானும் மாட்டிக் கொண்டேன்.

என் வீட்டிலிருந்து நடை தூரத்தில் தான் எல்லுக்குட்டையிருந்தது. அதைச் சிலபேர் குளமென்றும் தப்பாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். எப்போதும் பாசி படர்ந்து, அழுக்கு சேர்ந்து அதிலிருந்து பச்சை பசேலென்று நீர் வழிந்தோடும் நடைபாதையே ஓடையென்று மாறிப்போய் மக்களும் அதனூடே நடக்கப் பழகிக் கொண்டார்கள்.

எத்தனை அசுத்தமெனினும், நீரில் கால் நனைப்பது மனதைச் சில்லிட வைக்கும்தானேஉலர்ந்த மனிதர்களுக்கு எப்போதுமே அப்படி ஒரு சில்லிடல் தேவையாயிருக்கிறது போலும்.

வழிந்தோடும் அந்தப் பச்சைநீரில் வழிநெடுக ஜிலேபிக் குஞ்சுகள் புரளும். அவற்றைக் கையிலேந்தி ஹார்லிக்ஸ் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்தநீரில் வளர்க்கிறேன் என்ற பேரில் சாகடிக்கிற பழக்கம் நான் பத்தாவதுக்கு வந்த பின்பும் தொடர்ந்தது.

டைபாய்டில் கிடந்த அப்பாவைப் பார்க்க வந்த சக வாத்தியார் வாங்கி வந்த ஹார்லிக்ஸை மொத்தமாக முறத்தில் கொட்டி வைத்துவிட்டு, புது காலிபாட்டிலில் ஜிலேபி பிடித்து அம்மாவிடம் தொடப்பக்கட்டை அடி வாங்கியதும் பத்தாவது வந்த பின்பும் வெட்கமின்றி நீடித்தது.

நாம் பவுல் வாத்தியாரிடமிருந்து வெகுதூரம் நடந்து பச்சதண்ணி ஓடைக்கு வந்துவிட்டோமென நினைக்கிறேன்.

அன்றும் தன் அவர் தோளில் சுமந்த நாலைந்து தூண்டில்களோடு அந்தப் பச்சை ஓடையில் நடந்துவரும்போது என் புது பாட்டில் நிறைய மீன் குஞ்சுகள் நிறைந்திருந்தன.

மீனாலான ஒரு முதியவரும், மீன் குஞ்சுகளான ஒரு சிறு பையனும் இணைவது என்பது இயற்கையின் முதல்விதிதானே! அதுதான் எங்களிருவருக்கும் அன்று நிகழ்ந்தது.

என் கூரை வீட்டிலிருந்து ஐந்தாவது வீடு அவருடையது. அதுவும் மண்சுவரும், மஞ்சம்புல் கூரையும்தான். முன் பக்கம் விசாலமான காலியிடமிருந்தது.

சிமெண்ட் பூச்சு சில்லிட்ட அவர் வீட்டுத் திண்ணையில் நான் வந்து உட்கார்ந்து அரைமணி நேரமாகியும் அவர் என்னைக் கவனிக்காமல் தன் தூண்டிலை சரி செய்து கொண்டிருந்தார். வீணையின் நரம்பை அவிழ்த்துக் கட்டும் வேணி அக்காவின் லாவகத்தை மிஞ்சியிருந்தது அது.

தூண்டில் முள்ளையும், நரம்பையும் இணைக்குமிடம் கவனக்குவியலின் உச்சம். விரல்களின் தோழமையின் கூடுகை. நான் கவனமாய் அதை அவதானித்துக் கொண்டிருந்தேன். கட்டி முடித்ததும் தன் கையினால் பலங்கொண்டமட்டும் இழுத்துப் பார்த்துக்கொண்டார்.

அவரே தனக்குள் சிரித்துக்கொண்டார். அப்போதுதான் எதிரே ஒரு ஜீவனிருப்பதை கவனித்து அதே சிரிப்பை கொஞ்சம் நீடித்தார்.

எனக்குப் பேச்சே வரவில்லை. அவர் என் அப்பாவைவிட நாலைந்து வயது மூத்தவர். அவரிடம் போய் நான் என்ன பேசுவது?

ஆனால் நான் அவரிடம் என் கண்களால் யாசித்தேன் என்பதை உணர்ந்து கொண்டவர்போல அந்தத் தூண்டிலை என் கைகளுக்கு மாற்றித் தந்தார்.

நான் வேணி அக்கா வீணையை மடியில் கிடத்துவது மாதிரியே என் மடியில் அதை வைத்ததைக் கவனித்து மெல்ல சிரித்து,

சும்மா எடுத்துப்பாரு, பிரிச்சி வீசு, ஒடச்சுடாதஎன என்னைத் தளர்த்திவிட்டு, வீட்டிக்குள்ப் போனார்.

வேற வேலை இல்ல உனக்கு, நீ கெட்டதுமில்லாம படிக்கிறபுள்ளையை வேற கெடுக்கற என்ற வாத்தியாரம்மாவின் குரல் அடுக்களையிலிருந்து சத்தமாய்க் கேட்டது.
வாத்தியாரம்மாக்கள் எல்லா வீடுகளிலும் ஒரேபோலத்தானிருப்பார்கள்  என்பதை அந்த அம்மாவின் குரலை என் அம்மாவின் குரலோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

அந்த அம்மாவின் முதுகுக்குப்பின் நின்று சார் எனக்கு சைகைக் காட்டினார்.  அது  ‘பாலையாக்கடை மூலையில் போய் நில்லு என்ற சொல்லின் உடலசைவு.

நான் பாலையாக்கடை வாசலில் காத்திருந்த நிமிடங்களில் வரிசையாய் அடுக்கி வைத்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவைகளில் மீன் குஞ்சுகளுக்கு பதில் தேன்மிட்டாய்களும், கம்மர்கட்டுகளும், பொரி உருண்டைகளுமிருந்தன.





அடுத்த சில நொடிகளில் எங்கள் ரகசிய சந்திப்பு ஓரிரு வார்த்தைகளில் முடிந்தது. இன்று மாலை மூணு மணிக்கு பெரிய ஆலமரத்தடிக்கு நான் வந்துவிடவேண்டும். செருப்பு போட்டுக்கொண்டு வரவேண்டாம்அவ்வளவுதான்.

நான் மத்தியானம் இரண்டு மணிக்கே பெரிய ஆலமரத்தடியில் விழுந்து கிடந்த ஆலம்பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்.

பவுல்சாரும் மூணு மணிக்கு முன்பே தூரத்தில் வருவது வெண்கோடு மாதிரி தூரத்திலிருந்தே தெரிந்தது.

என் உற்சாகத்தில் கையிலிருந்த ஆலம்பழங்களை  மரத்தைநோக்கி மேல் எறிந்தேன். கீழே கொட்டியவற்றை மீண்டும் இரு கைகளினாலும் அள்ளி சாலையில் வீசினேன். பெருங்குரலெடுத்து ஹோவென அம்மரம் அதிரும்படிக் கத்தியதில் இரண்டு மூன்று மைனாக்கள் மட்டும் பறந்தன.

என்ன பண்ற?சாரின் குரல் என்னை உரசியது.

 “ஒண்ணுமில்ல சார்

மீதி வார்த்தைகள் என் உதட்டிலேயே ஒட்டிக் கொண்டன.

வா” 

இடைவெளிவிட்டுப் பின் தொடர்ந்தேன்.

அதே கட்டம் போட்ட லுங்கி, கை வைத்த வெள்ளை பனியன், செருப்பில்லாத கால்கள்,  வலது தோளிலேறிய சின்னதும் பெரியதுமான ஐந்தாறு மூங்கிலிலான தூண்டில்கள்.

எப்போதும் பேச்சற்ற பின்தொடர்தல்கள் அவதானிப்பை அதிகரிக்கும்போல. நான் இரு பக்கமிருந்த எல்லாவற்றையும் கண்களாலும், மோப்பத்தினாலும் எனக்குள் உள்வாங்கிக் கொண்டே அவர் பின்னால் நடந்தேன்.

நாங்கள் போய் நின்ற இடம் ஒரு இடிந்த பம்புசெட் கொட்டாயின் பின்புற ஈரத்தரை. அவர் குத்துக்காலிட்டு உட்கார்ந்து, பையிலிருந்த ஒரு உடைந்த கொட்டாங்குச்சியைக் கையிலெடுத்தார். ஒரு மூடிபோட்ட ப்ளாஸ்டிக் டப்பாவைத் தன்னருகே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

மண் ஈர கொட்டாங்குச்சியின் இழுப்புக்கு வளைந்து தந்தது. நான்காவது இழுப்புக்கு மண்ணில் ஆறேழு மண்புழுக்கள் நெளிவதைப் பார்த்தேன். பவுல்சாரின் முதுகு லேசாக விரிந்தது. வேட்டைக்காரர்களுக்கு உப பொருட்களின் கிடைத்தல் அரிதிலும் அரிது.

அவர் இப்போது இரு கைகளாலும் இயங்கினார். மண் தோண்டுதல், புழுக்களை மண்ணோடு சேர்த்தள்ளி டப்பாவில் போடுதல். தான் கூட்டி வந்த ஒரு பையன் உடன் நிற்கிறானே என்ற எந்த உணர்வுமற்று அவர் தனியே இயங்கிக் கொண்டிருந்தார்.

எல்லா வேட்டைக்காரர்களுக்குமே துணையென்பது பெரும் இழுக்கு தான்.

நான் எதிர்பார்த்ததற்கும் முன்பே டப்பா நிறைந்தது. மேல் மண்ணெடுத்து அதன்மேல் போட்டு பழந்துணியைக் கிழித்து அதைக் கட்டிக்கொண்டார். மூடியை தனியே எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு என்னை ஏறெடுத்தார்.

செத்துப்போன புழுக்களை மீன்கள் விரும்பாதுஎன எனக்கு அவர் சொன்னது போலிருந்தது. ஆனால் அவர் எப்போது வாய் திறந்து பேசியிருக்கிறார்.

போலாம்

இப்போது எங்கள் முன் நீண்டு கிடந்த ஒத்தையடி பாதையில் முந்தியும், பிந்தியுமாக நடந்தோம். பேச்சில்லை. விலங்கு வேட்டைகள் மூச்சு சப்தத்தையும் உறிஞ்சக்கேட்கும். பவுல் வாத்தியார் மீனுக்கும் அதே விதிதான் என்பது போன்று நடந்தார். இப்போதைய நடையில் ஒரு ஆவேசமிருந்தது. வெய்யில் முற்றாகத் தணிந்து பாதையெங்கும் வெதுவெதுப்பாயிருந்தது.

நான்  எதிர்பார்க்காததொரு சமயத்தில் தன் தோளிருந்த தூண்டில் கட்டை என்னிடம் தந்தார்.

நான் எதிர்வீட்டு மெர்சி குட்டி பாப்பாவை தூக்குவதுபோல அவற்றைத் தூக்கி என் தோளிலேற்றிக் கொண்டேன்.

அதன்பின் என் நடை பவுல்சாரின் நடை மாதிரியே மாறியிருந்ததை அவரும் கவனித்திருக்க வேண்டும்.

நாங்களிருவரும் ஒரு இலுப்ப மரத்தடியில் குந்திக்கொண்டோம். எங்கள் எதிரே சலனமற்று மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது ஓலையாறு. கொம்பாதி கொம்பனும் அது நகர்கிறதென்றால் நம்பமாட்டான். பவுல் வாத்தியார் ஒருவரைத் தவிர அதன் அசைவை அறிந்தவரில்லை.

என்னிடமிருந்த தூண்டிலை வாங்கி ஈரத்தரையில் வைத்துவிட்டு லுங்கியை அவிழ்த்து இறுக்கிக்கட்டிக்கொண்டார். பையிலிருந்த வெள்ளைத் துண்டால் தலையைப் போர்த்திக் கொண்டார். காக்கி நிறத்தில் அதற்காகவே  தைக்கப்பட்ட பையிலிருந்து வெற்றிலைப் பாக்கு  புகையிலையை வாயில் அதக்கிக்கொண்டு, இரண்டு தூண்டிலை தனியே பிரித்து துள்ளும் புழுக்களை அதன் கொக்கிக்குக் கொடுத்தார்.




எல்லாமே கச்சிதம்.

தெற்கிலிருந்த வடக்கு நோக்கி தூண்டில் நரம்பு விழுந்தது. துத்தநாக தக்கையின் பளீர் வெள்ளையில் விழுந்தவுடன் அதன் அசைவு தெரிந்தது.

நான் அவர் பார்வையில் படும்படி நின்று  ‘நானும் உன்கூடதானே வந்திருக்கேன். என்னையும் பார்றா கெழவாஎன உள்ளுக்குள் கேவினது அவருக்குக் கேட்டிருக்க வேண்டும்.

தக்கையை நிதானித்துக்கொண்டே அளவில் சின்னதாயிருந்த மூணாவது தூண்டிலில் புழுநிரப்பி  என் பக்கம் திரும்பாமலே,

அங்க போய் போடுஎன்ற கணம் என் முன் நின்றசையும் நீரில் ஒரு கோடி துள்ளும் விரால்களின் வெளிச்சத் துள்ளலை உணர்ந்தேன்.

தூண்டிலை லாவகத்தோடு தெற்கிலிருந்து வடக்காக வீசினேன்.

உடன் தக்கை அலைபாய்ந்தது தெறிந்தது.

அது குஞ்சு குசுமான் ஏமாந்துடாத

பவுல்சாரின் தூரத்துக்குரல் சன்னமாகக் கேட்டது

ஆனால் தக்கை நீருக்குள் முழுக்க அமிழ்ந்துவிட்டது. “இனிமேலும் ஏமாந்தால் ஒரு மீன் வேட்டையாடிக்கு அழகல்ல மகனே இழு

நான் மூங்கிலை தூக்கி அசைத்துப் பார்த்தேன்.

லேசாக கனத்த அது, நீரை நோக்கி இழுப்பதை உணர்ந்தேன். அதன் போக்கில்விட்டு எதிர்பாராத நேரத்தில்  நானே மேலிழுத்தேன்.

என்னை அப்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டும். என் தூண்டில் முள்ளில் மஞ்சள் நிறத்தில் துள்ளிக் கொண்டொரு பெரிய மீன் ஆட்டம் போட்டது.

கவனத்தோடு அதை என்னிடமிழுத்தேன். அதன் உடல் மஞ்சள் மினுமினுப்பேறி என்னருகே இன்னும் துள்ளியது.

தூண்டிலோடு என் ஆசானை நோக்கி ஓடினேன். அவர் இன்னும் மீன் மாட்டாத அத்தூண்டில்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“முதுமை  வேட்டைக்குதவாது என நான் என் ஆழ்மனதில் நினைத்த கணத்தின்போது கிழவன் ஒரு நொடி, ஒரே நொடி என்னைத் திரும்பிப்பார்த்தது. முகத்தில் எந்த மலர்ச்சியுமில்லாத திரும்புதல் அது.

சார் வெரால்

அது வெராலில்லை. உளுவை. மெல்ல முள்ளிலிருந்து கழட்டி அந்தப் பையில போட்டுடு, அடுத்த புழுவை  மாட்டு

அதையும் அந்த அசைவற்ற தக்கையைப் பார்த்துக் கொண்டே சொன்னது.

என் முதல் வேட்டை வெராலில்லை என்பதில் அதற்கொரு அற்ப சந்தோஷம். இரு கிழவா அடுத்து செனை வெராலா பிடிச்சுக் காட்றேன்.

அவர் காட்டிய தூரத்தையும் தாண்டிப்போய்த் தூண்டில் போட்டேன். இப்போது அவரிடம் கேட்காமலேயே இன்னொரு நீளமானத் தூண்டில் ஒன்றும் என் கையிலிருந்தது. வெற்றியடைந்தவனின் அத்துமீறல் அது.

இப்போது என் கவனம் ஒரு விராலின் மீது மட்டுமே குவிந்திருந்தது.

நீரின் சப்தம் கேட்டு திரும்பி பவுல் சாரின் தூண்டில் துள்ளும் ஒரு கரிய மீனின் இழுபடலை இங்கிருந்தே பார்த்தேன்.

அது ஒரு பெருவிரால்.

கிழவன் அதை அமுக்கமாக தன் பையில் திணிப்பதை கவனிக்காதது மாதிரி கவனித்தேன்.

என் தூண்டிலில் அதன்பின் நாலைந்து கருஞ்ஜிலேபிகளும், இரண்டு கொறவையும் மட்டும் மாட்டின. கொஞ்சம் ஏமாந்தால் கொறவையை விரால் என பவுல் சாரே நம்ப வேண்டிவரும். விரால் கருநிறமும், நேர்மாறாக கொறவை செந்நிறமும்.  மற்றபடி உருவ அமைப்பு ஒன்றுபோலவே இருக்கும்.

தொண்டை செருமும் சத்தங்கேட்டுத் திரும்பியவனை, எல்லாத்தையும்  எடுத்து மூட்ட கட்டச் சொல்லி சைகை செய்தார் பவுல் சார். அடுத்த விநாடியே அதைச் செய்தேன்.

முள்ளில் மாட்டித்தொங்கின ஒரு வெளிச்சிக்கெண்டையை எடுத்து மீண்டும் அதன் நீரிலேயே விடுவித்தேன்.

வாத்தியாரின் பை கனத்திருந்ததைக்கவனித்தேன். சுருக்கிடப்பட்ட பையினுள் அசையும் உயிரினங்களின் எண்ணிக்கைதான் அவரின் அன்றைய  வெற்றி.

மதியம் தோன்றினதுக்கு நேர்மாறாக முதுமைதான் வேட்டைக்கு உகந்த காலம் என இப்போது தோன்றியது.

நாங்கள் வீடடைந்தபோது இரவு ஏழுமணியாகியிருந்தது. வரும் வழியில் நான் மட்டும் பம்புசெட் நீரில் மீன் கவிச்சிப்போக தேய்த்து, தேய்த்து குளித்தேன். அந்நேரம் சார் அடுத்த நாளுக்கான புழுக்களைத் தோண்டிக் கொண்டிருந்தார்.

ஒன்றுமே தெரியாதது மாதிரி நான் சார் வீட்டைத் தாண்டி என் வீட்டிற்குப் போனபோது அப்பா வாசலிலேயே என்னை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்ததையும் அவருக்குப் பக்கத்தில் ஒரு உடைக்கப்பட்ட மூங்கில்கழி கிடந்ததையும் கவனித்தேன்.

இரவு ஏழுமணிக்கும் எட்டரை மணிக்குமிடையே என்ன நடந்தது என்பது எனக்கும், அப்பாவுக்கும், தடுத்தாண்ட சாட்சியாயிருந்த அம்மாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகட்டும். அப்போதுதான் மீசை துளிர்விட்ட ஒரு பத்தாம் வகுப்புப் பையனுக்கு ஏற்பட்ட அவமானம் அவனோடு மட்டுமே மக்கி மண்ணாகட்டும்.

இது ஏதுமறியாத பவுல் வாத்தியார் ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் ஏந்திப் பிடித்த மீன் குழம்போடு வீட்டுப் படியேறிக்கொண்டிருந்ததை, முழந்தாளிட்டு, கைகள் இரண்டையும் நெஞ்சுக்கு நேராக கட்டிக்கொண்டு அழுதழுது வழிந்த கண்ணீரைக்கூட, துடைக்க அனுமதியின்றி உள்ளுக்குள் கதறிக் கன்றிப்போன மனதோடு அவரை நான் ஏறெடுத்தேன்.

எதிர்பாராததொரு அப்பாவின் தட்டுதலில் மீன்குழம்புக்கிண்ணம் எகிறி நடுவீட்டில் விழுந்தது. அதற்காகவே காத்திருந்தது போல அப்பா ஆரம்பித்தார்.

ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரிடமிருந்து இவ்வளவு கெட்ட வார்த்தைகளை பவுல் வாத்தியார் அன்றுதான் கேட்டிருக்கக்கூடும். அது எனக்கும், எங்க வீட்டு வாத்தியாரம்மாவுக்கும் பழகிவிட்டிருந்தது. ‘நீயெல்லாம் ஒரு வாத்தியாராய்யா? உனக்கு எவன்யா உத்யோகம் குடுத்தான். படிக்கிற பையனை இப்படி கெடுத்து குட்டிச்சுவராக்கி கூட்டிட்டு போறியே இதுக்கு நீ வேற எதனா செய்யலாம்.’

பவுல் சாரின் உடல் உதறல் ஏறிக் கொண்டேப் போனது. அதனூடே அவர் என்னைத் திரும்பிப்பார்த்தார்.

அவனை ஏன்யா பாக்கற மயிரு

அவர் நிதானமாகத் திரும்பி நடந்தார். வாழ்வில் அவர் பட்ட அதிகபட்ச அவமானம் இதுவாகத்தானிருக்கும்.

சிதறிய மீன்வாசனையால் நிறைந்திருந்தது வீடு. முனகிக்கொண்டே அம்மா அவற்றைச்சுத்தம்செய்தாள். என் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை. அதற்குப்பிறகும் கூட பல நாட்கள் பாலையா கடை வாசலில் பவுல்சாரும், நானும் சந்தித்துக் கொண்டோம். மீன்படுதல் பற்றி ஓரிரு வார்த்தைகளில் சார் சொல்லுவார். அப்பா ஊரில் இல்லாத நாட்களில் பள்ளிகொண்டாப்பட்டு ஆற்று மதகு வரை நாங்கள் தூண்டிலோடு நடந்திருக்கிறோம்.

அம்மாவும் ஊரிலில்லாத நாட்களில் குட்டையைப் பாத்திகட்டி நீர்வடித்து ஆறாவையும் அசரையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம். வாத்தியாரம்மா திட்டிக்கொண்டே போடும் மீன்குழம்பை அவ்வீட்டு திண்ணையிலேயே குந்தி சாப்பிட்டிருக்கிறேன்.

பெற்றவர்களின் மூர்க்க எதிர்ப்பால் எக்காதலாவது தன் சந்திப்புகளை நிறுத்தியிருக்கிறதா என்ன? காதலுக்கே அப்படியென்றால் இது மீன் சம்மந்தப்பட்டது.

அப்பாவுக்கு என்னைத் திட்ட, அடிக்க, துரத்த எப்போதுமே நேரங்காலம் தெரிந்ததில்லை. எந்த புத்தியுள்ள அப்பனாவது நாளைக்கு அரசாங்க கணக்குப் பரீட்சை எழுதப் போகும் ஒரே மகனை பித்தாகரஸ் தியரம் பிடிபடவில்லையென மூங்கில் கழியால் சாத்துவானா?

என் அப்பா சாத்தினார்.

அந்த இரவில் நான் வழக்கம்போல ஏழாவது முறையாக வீட்டைவிட்டு ஓடினேன். ஜார்ஜ் டீக்கன்ஸ் வீட்டுக்கருகிலேயே குட்டிசுவராக நின்ற வீட்டில் மறைந்திருந்தேன். என்னைத்தேடி அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு திசையில் அலைந்த இரவை அருகிலிருந்த படியே அலட்சியப்படுத்தினேன்.

விடியுமுன் பாலையாக்  கடை வாசலிலிருந்தேன்.

கருப்பட்டி வெல்லமும் காபித்தூளும் வாங்க நின்ற யாருக்கும் நேற்றிரவு எனக்கும் அப்பாவுக்கும் நடந்த அடி உதை தெரியாது.

வெற்றிலைப்பாக்கும் புகையிலையையும் வாங்கி தன் பிரியமான காக்கிப்பையில் அடைக்கும்போது பவுல்சார் என்னைப்பார்த்துவிட்டார். புளியமரத்தடியில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த தூண்டில்கள் பரவசமேற்படுத்தியது  எனக்கு. அதனருகே நின்று அவைகளை கையிலெடுத்தேன்.

நான்கு மணி நேரத்தில் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வு நடக்கப்போகிறதுஅதுவும்   எனக்குப் பிடிக்காத கணக்குப் பரிட்சை. நடந்தால் நடக்கட்டும். எனக்கென்ன? ஆட்டம் காட்டின விரால்களின் திருட்டுதனங்களை இன்று என் தூண்டில் முள்களில் மாட்டிவிட வேண்டும்.

தூண்டில்களை எடுத்துக்கொண்டு நான் அவருக்கு முன் நடக்கத் துவங்கினேன்.

அன்றிரவு நான் ஆற்றங்கரையிலேயே கையுங்களவுமாக என்  அப்பாவால் பிடிபட்டேன். தூண்டில்களை அங்கேயே விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடின பவுல்சாரை தூர இருந்தேப்பார்த்தேன். எதிரில் வந்த பஸ்ஸிலேறி திருக்கோயிலூருக்குத் தன் கொழுந்தியாள் வீட்டிற்குப் போய்விட்டதாக யாரோ காற்றுவாக்கில் சொல்லக் கேட்டேன்.

அவர் மரணம் நிகழும் வரை அப்பாவிடம் பிடிபடாமல் மறைந்து திரிந்த கிழவனானார் பவுல்சார்.

சாரோன் உத்தானத் தோட்டத்தில் என் அப்பாவின் உடல் அக்கருப்புப் பெட்டியில் கிடத்தப்பட்டு  உள்ளிறக்கப்பட்டபோது அப்பாவை கடைசியாய் ஒருமுறைப்  பார்த்தேன். அதே கோவக்கார முகம். மரணம்கூட மனித முகங்களை மாற்றாதா?

 மண்வெட்டியில் ஏறியிருந்த ஈரமண்ணோடு சர்ச் பாதர் செபாஸ்டின்,

 “நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டாய்,

மண்ணோடு மண்ணாய் போகிறாய்.

மறுபடியும் மண்ணிலிருந்து உயிர்த்தெழுவாய்

என அப்பெட்டியின் மீது மும்முறை மண்ணைக் கொட்டியபோது நான் ஏதேச்சையாய் பக்கத்து கல்லறையைப்பார்த்தேன்.

எம்.பவுல்,
ஓய்வுபெற்ற ஆசிரியர்
பிறப்பு  25.11.1927
இறப்பு 26.12.1983

‘அய்யோ பவுல் சார், உங்களுக்கு மூன்றடி தூரத்தில் என் அப்பா

பதட்டத்தில் என் வாய் முணுமுணுத்ததை அம்மரண சப்தத்தை மீறி எல்லோரும் திரும்பிப்பார்த்தார்கள், பாதர் செபாஸ்டின் என்னை விநோதமாகப் பார்த்தார்.

நன்றி
ஆனந்த விகடன் (21.12.16)
ஓவியம் : ஷியாம்