அப்போது எம்.ஜ.ஆர். உயிரோடிருந்தார். ஆனால் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
கொள்கை பரப்பு செயலாளர் என்ற பதவியிலிருந்த ஜெயலலிதா திருவண்ணாமலையில்
நடந்த ஒரு பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அப்போதுதான்
அவரை அருகாமையில் பார்த்தேன். வசீகரமான தோற்றமுடையவராக இருந்தார்.
பேச்சு அப்படியில்லை. எழுதி மனப்பாடம் செய்த உரையைப்
போலிருந்தது. ஆனால் அதற்கே அவர்முன் கூடியிருந்த பல ஆயிரம் மக்கள்
திரள் ஆர்ப்பரித்தது.
ஒரு ஆள் உயர வெள்ளி செங்கோல்
அவருக்குப் பரிசாகத் தரப்பட்டது. அதை பெற்றுக் கொள்ளும்போது ஒரு புகைப்படக்காரனின்
கூர்மையைப் போல நான் அவர்கள் முகத்தை கவனித்தேன். பொங்கிப் பெருமிதம்
வழிந்தது. இச்செங்கோல் எதிர்காலத்தில் என் அரியணைக்கானது என்ற
உறுதியோடு அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்.
காலம் அவரின் அப்பெருங்கனவை
அப்படியே நிறைவேற்றித் தந்தது.
கூட்டு சிந்தனை, கூட்டு
விவாதம், கூட்டு முடிவு என்றே வளர்ந்த ஒரு மார்க்சியவாதியான எனக்கு
அவர்களின் ஆட்சி செயல்பாடு பெரும் அதிர்வைத் தந்தது. கிட்டதட்ட
சர்வாதிகார முடிவு. தனிப்பட்ட மனுஷியின் அதிகபட்ட நிர்வாகத்திறன்
என அவர்கள் கட்சிக்காரர்களாலும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாலும் அவர்கள்
செயல்பாடு பாரட்டப்பட்டது.
அந்த இறுக்கம் தேர்தல்
நேரத்தில் மட்டும் அவர்களாலேயே கொஞ்சம் தளர்த்திக் கொள்ளப்பட்டதுண்டு. கூட்டணிக்
கட்களின் தோழமைத் தேவைப்பட்ட தருணங்கள் அப்போது மட்டுமே. அதிலும்
பல மாறுதல்களையும், மீறுதல்களையும் மற்றக் கட்சித் தலைவர்கள்
சகித்துக் கொண்டார்கள். அதிகாரத்தில் இருக்கும் ஐந்தாண்டுகளிலும்
இவர்கள் யாரையும் பொருட்படுத்தாமையை அவர் மீண்டும் மீண்டும் மீண்டும் செயல்படுத்தினார்.
கடந்த கால கசப்புகள், அரசியலின் பொருட்டும்,
அதிகாரத்தின் பொருட்டும் பல கட்சித் தலைவர்களால் சகித்துக் கொள்ளப்பட்டது.
ஆனாலும் சொந்த சாதி செல்வாக்கில்லாத, கட்சியின்
அபாரமான செல்வாக்கை மட்டுமே நம்பி எப்போதும் கோலோச்சும் தலைவியாக தன்னைத் தகவமைத்துக்
கொண்டவர் ஜெயலலிதா.
ரீட்டாராணி என்ற ஒரு
அப்பாவிப் பெண் போலீஸ்காரர்கள், சிறைக் காவலர்கள் என பலரில் வேட்டையாடி முடிக்கப்பட்ட
வழக்கின் விசாரணை அதிகாரியாக என் நெருங்கிய தோழியும், தமிழக காவல்துரையின்
உயர் அதிகாரியுமான திலகவதி ஐ.பி.எஸ்.
நியமிக்கப்பட்டார்.
நூறு பக்கங்களுக்கு மேல்
தட்டச்சுச் செய்யப்பட்ட அந்த அறிக்கையின் இறுதி பத்திகளை நான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது
எவர் கண்ணீரைக் கோரும் வலுவுடையது அப்பெண்ணிற்கு ஐந்து லட்சரூபாய் இழப்பீடு வழங்கலாம்
என அவர் பரிந்துரைத்திருந்தார்.
அப்போது முதல்வராயிருந்த
ஜெயலலிதா அதை தன் ரோஸ் கலர் மையினால் அடித்துவிட்டு ஏழு லட்சம் என திருத்தியிருந்ததை
கவனித்தேன்.
தனிப்பட்ட முறையில் அப்பாவிகளான
பெண்கள்மீது அவருக்கு கருணையிருந்தது. ஆனால் அரசியல் ரீதியாக அவர்களை
மேலெடுத்து செல்ல, அவர்கள் வாழ்வை மேம்படுத்த அவர்களிடம் பெரிய
திட்டமோ, நோக்கமோ எப்போதும் இருந்ததில்லை. யோசித்து வடிவமைக்கப்பட்ட பல திட்டங்களும் அபத்தமானவைகளும், அலட்சியப்படுத்த வேண்டியவைகளும் மட்டுமே.
எம்.ஜி.ஆர். காலத்திலேயே தமிழ் மண்ணில் ஏற்கனவே பலமாக வேரூன்றியிருந்த
அ.இ.அ.தி.மு.க.வை அதன் பிறகு அவர் இறுக்கி
கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால் அதன் பக்கம் அவர்
கவனம் குவியவில்லை. அது தந்த மிகப்பெரிய பலத்தினால்தான் எந்த
அமைச்சரையும், எந்த அதிகாரியையும் எப்போதும் அப்புறபடுத்த,
அரசியல் வாழ்வை விட்டே துடைத்தெறியும் வல்லமை அவருக்கு வாய்த்திருந்தது.
தோழமைக் கட்சிகளின் பலமே
இவ்வெற்றியைத் தனக்கு ஈட்டித்தந்தது. என்ற உண்மையை பதிவியேற்பு விழாவிற்கு
முன்பே தன்னிடமிருந்து உதிரச் செய்வார். இந்த அதிகாரத்தை மக்கள்
மட்டுமே தனக்குத் தந்தார்கள். இவர்கள் இல்லை என்பதை வெற்றிக்கு
பின்பே எப்போதும் உணர்ந்தார்.
அதன்பின் அவர் புறக்கணிப்பு
எவராலும் தாங்கிக் கொள்ள முடியாதது.
தன்னைச் சார்ந்தவர்கள்
என அவர் நம்பிய பலருக்கும் அவர் காட்டிய சலுகைகள், அல்லது அவர் பெயரில் அவர்களாகவே
அள்ளிக் குவித்துக் கொண்ட உடமைகள் அவரை நம்பிய மக்களுக்கு அவர் செய்த துரோகம்.
அடுக்கடுக்கான பல தவறுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தன.
கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது
என்ற ஒரு காரணத்தினாலேயே புதிய சட்டசபை கட்டிடத்தை நிராகரித்தது, வரலாற்று
சிறப்பு மிக்க அண்ணா நினைவு நூலகத்தை புறக்கணித்து அதை குட்டிச்சுவராக்கியது உழவர்
சந்தைகளை செயல்படாமல் ஆக்கி விவசாயிகளை வஞ்சித்தது என பல நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டேப்
போக முடியும்.
2007 – ல் மீண்டும் அவரை அருகிலிருந்து பார்க்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ‘வம்சி புக்ஸ்’ பதிப்பித்த நான்கு புத்தகங்களுக்கு
ஒரே நேரத்தில் தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. பதிப்பாளர்
என்ற முறையில் என் மனைவி கே.வி.ஷைலஜா அப்பரிசுகளையும்,
பத்திரங்களையும் பெற்றுக் கொண்டார்.
அந்நிகழ்ச்சி தொகுப்பாளர்
அவர் பெயரை உச்சரிக்க தடுமாறியபோது
‘Publisher
K.V.Shylaja’ என சொல்லுங்கள் என அவர் ஒலிபெருக்கியில் சொன்னார். அன்று
அவர் உரையைக் கவனபடுத்தினேன்.
ஏமாற்றமே மிஞ்சியது. தயாரிக்கப்பட்ட ஜீவன்ற்ற உரை.
மனதால் எழுதப்பட்டதோ, ஆர்மாவால் உச்சரிக்கப்பட்டதோ
அல்ல. அறிவுத் தளத்திற்கென்று அந்த உரையில் ஒரு சின்ன சலுகைகூட
இல்லை. அவர் எப்போதும் தமிழகத்தின் எல்லா தரப்பு மக்களை அ.இ.அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களின் மன நிலையிலேயே வைத்திருக்க
விரும்புகிறார் எனப் புரிந்தது.
அதன் பின்பும் எதனாலோ
அவரே வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவர் அடைந்த வெற்றி அவராலேயே நம்பமுடியாதது.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது, மதுக்கடைகளைக்
குறைந்த்து என்ற அறிவிப்புகள் இவர் ஏதோ செய்ய வருகிறாரோ என்ற சிறு நம்பிக்கையை எனக்குள்
ஏற்படுத்தியது, ஆனால் காவிரில் பிரச்சனையில், இலங்கைப் படுகொலையில் பலநேரம் அவர் மௌனமாகவே இருந்திருக்கிறார்.
இத்தருணத்தில் அவர் திடீர் உடல் நலக்குறைவு பெரும் அதிர்வை ஏற்படுத்தவில்லையெனினும் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையை தந்ததது. ஆனால் எல்லாம் ஒரு கனவு போல நிறைவுபெற்றது.
நன்றி தேசாபிமாணி 07.12.2016
No comments:
Post a Comment