நேற்று தமுஎச திருச்சியில் நடத்திய
சிறுகதை நூற்றாண்டுவிழா எல்லா வகையிலும் வெற்றிகரமான நிகழ்ச்சிதான்.
குறிப்பாக பிஷப்ஹீபர் கல்லூரி
வளாகம். அது நான் ஒரு பெரும் வனத்திலிருப்பதை உணர்த்திக்கொண்டேயிருந்தது.
ஆதவனும், வெண்ணிலாவும் சிறப்பாக
பேசினதாக நண்பர்கள் சொன்னார்கள். என்னால்தான் பங்கெடுக்க முடியாமல்போனது.
மாலை ஆறரை மணிக்கு நான் அக்கலையரங்கிற்குப்
போனபோது மேடை நிறைந்திருந்தது. இயக்குநர் ரஞ்சித், கர்நாடக இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணா
ஆகியோர் மேடையிலிருந்தார்கள்.
ஜோக்கர் புகழ் பவா செல்லதுரை என
நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.
என் எழுத்து, செயல்பாடு எல்லாவற்றையும்
எப்போது சினிமா முந்திக்கொண்டது எனத் தெரியவில்லை.
கிருஷ்ணாவும், ரஞ்சித்தும் பேசும்
முன் நான் கதைசொன்னேன்.
நான்கு கதைகளை நான் மனதால் வரிசைப்படுத்தியிருந்தேன்.
என் நீர், பிரபஞ்சனின் ஒருமனுஷி,
சந்தோஷ் ஏச்சிக்கானத்தில் பிரியாணி, அழகிரிசாமியின் இரு சகோதரர்கள், ஆனால் மனம் ஏனோ குவியமறுத்தது.
அப்பிரமாண்ட மேடையும், பெரு ஒளியின் நிறைதலில் இன்னும் உயர்ந்திருந்த மேடையும் எதனாலோ
எனதல்ல எனத்தோன்றியது .
நான் மண்தரையில் நின்று, மரங்களுக்கிடையே
கதைசொல்பவன்.
டி.எம். கிருஷ்ணாவும், ரஞ்சித்தும்
சமத்துவமின்மை பற்றியும், அதை நோக்கிய நம் பயணம் பற்றியும் அற்புதமாகப் பேசினார்கள்.
நான் பாதிக்கதை சொல்லிக் கொண்டிருந்தபோது
ஒருவரின் வருகையால் அரங்கு லேசாக அதிர்ந்தது.
அவர் திருச்சி மாவட்டத்தின் காவல்துறைக்கண்காணிப்பாளர்.
செந்தில்குமார் என்னருகில் அமரவைக்கப்பட்டவுடன்
அவர் என்னிடம் இன்னும் நெருங்கி நான் உங்கள் வாசகன் சார், எப்போதும் உங்கள் கதைகளை
Youtubeல் கேட்பேன். நீங்கள் கதைசொல்வது அத்தனை இயல்பு.
உங்கள் கதைகேட்கவே இத்தனை அவசர
அவசரமாக வந்தேன். ஆனாலும் பாதி கதையைதவற விட்டுவிட்டேன். வருத்தமாக இருக்கிறது.
எனக்காகவே இன்னும் ஒரு கதை சொல்லமுடியுமா?
நானும் செந்தில்குமார் சாரும் அரங்கின் வெளியே நின்று
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அவர் என்னை அவர் அலுவலகத்திற்கு
அழைத்தார். நான் லேசாக சிரித்துக் கொண்டேன்.
அவர் வீட்டிற்கு அழைத்திருந்தால்
உடனே போயிருப்பேன் முப்பதாயிரம் புத்தகங்கள் உள்ள மிகப்பெரிய நூலகம் இருக்கிறதாம் அவர்வீட்டில்
அதன் பொருட்டே அந்த ஆர்வம்.
மனதில் எஸ்.பி. ஆபீஸ் ஏனோ பயமாயிருந்தது.
அதை கலைப்பது போல அவர்,
“சார் நீங்க எங்க போலீஸ்காரங்களுக்கு கதை சொல்லணும் சார்”
முதலில் 500 போலீசும் அவர்களுடன்
அவரவர் குடும்பமும்.
ஆயிரத்து ஐநூறுபேர் வரை…
இடம் ஆயுதப்படை போலீஸ் மைதானம்
உங்களுக்கு பிடித்தமான மண்தரை.
போதுமா சார்?
நான் உள்ளுக்குள் வியந்து கொண்டேன்.
இம்மனிதன் கதைகளையும், அதைச் சொல்பவனையும்
எத்தனைதூரம் ஊடுறுவியிருக்கிறார்.
விரைவில் சந்திக்கலாம் செந்தில்குமார்
சார்.
அப்போது
அந்த ஆரஞ்சு விளக்கொளியும் இல்லாத
அடர் இருட்டில் நின்று கொஞ்சம் இலக்கியம் பேசலாம்.
No comments:
Post a Comment