Friday, December 30, 2016

இத்தனை அழகோடு எங்கள் ஜீவனுள்ள மலை

 எப்போதுமே இது ஊட்டும் அபூர்வங்களிலிருந்து திமிற முடிந்ததில்லை.

இதில் ஆன்மீக ஈர்ப்பு ஒரு துளியும் இல்லை

ஆனாலும் ஒவ்வொரு பருவ காலங்களிலேயும், இம்மலை வேறு வேறாக என்னை வசீகரிக்கிறது.

ஒரு பின்னிரவு முழிப்பின்போது வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தேன், அயர்ந்து தூங்கும் ஒரு பெரும் யானையைப் போல் கிடந்தது.
அதேநாள் காலை விடியலில் அதே இடத்தில் நின்று கவனித்தேன், வேட்டைக்குப் பாயும் ஒரு புலி போலத் தெரிந்தது.

பாட்டியோடு பனி பொழியும் ஒரு காலை நடையின் போது மிச்ச நெய்யில் நின்றெரியும் தீப ஒளியின் வெளிச்சத்தில் பார்த்தேன், ‘வாஎன ஒரு சிறுவனை இரு கரம் கூப்பி அழைத்த தாயின் பரிவுமிக்க கைகள் அதனிடமிருந்து நீண்டதை நோக்கித் தாவினேன்.

ஒரு தெருவோர வேசியின் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் கேரியர் மேல் ஏறி நின்று பலத்திற்கு அவள்  தோள்களில் கை ஊணி மலை பார்த்த நிமிடம் அவளும் நானும் ஏனோ சேர்ந்து அழுதோம்.
என் தினங்களில் எப்போதும் மிக அருகே பார்க்கும்படி இதை சேர்த்ணைத்துக் கொள்ள வேண்டி மனம் அலைந்து நான் போய் நின்ற இடம்கிரீஷ் ஃபேலன்என்ற கனடாவின் புகழ்பெற்ற புகைப்படக்காரனின் வாசல்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றை மட்டுமே கிரீஷ் புகைப்படமாக்கினான். எகிப்தில் நதி, ஈரானில் வீடு, இந்தியாவில் துறவிகளும் மலைகளும்.
எனக்கென மலைகளை மட்டும் தரும்படி அவனிடம் இறைந்து மன்றாடினேன்.

இருபது மலைகளின் புகைப்படங்கள் பெற்றேன். அவைகளை எடுக்க அவன் எடுத்துக் கொண்ட காலம் பதினாறு ஆண்டுகள்.

என் நண்பர் எஸ்.கே.பி.கருணாவிடம் சொல்லி அவைகளை கையடக்கமான காலண்டர்களாக அச்சிட்டோம்.

என் மலை எப்போதும் என் கைக்கெட்டும் தூரத்திலேயே இருந்தது. பார்க்க அதன் பிரமாண்ட நிறமும், தொட அதன் நிழலுருவமுமாய் என் நாட்கள் நகர்ந்தன.

நான்தான் பேராசைக்காரனாயிற்றே! அடங்க மறுக்கும் மனதை சாந்தப்படுத்திக் கொண்டேயிருந்தேன்.

இதோ புகைப்பட கலைஞன் சண்முகசுந்தரத்திடம்  பேசி ஒரு பெரும் விலை கொடுத்து (கடனுக்குத்தான்) இருபது மலையின் படங்களை என் கைகளுக்கு  மாற்றிக் கொண்டேன்.

நண்பன் சங்கரும் மகன் வம்சியும் அதை அப்படியே ஒரு நாட்காட்டிக்குள் அமர வைத்திருக்கிறார்கள்.

என் கனவின் மெய்படுதல் இது.

ஒரு காலண்டர் அச்சடிக்க, படத்துக்கும் சேர்த்து 150/- ரூபாய் செலவாகிறது. மேலும் 50 ரூபாய் நன்கொடை வேண்டும். என் நண்பன் ஃபீனிக்ஸின் வீடு இன்னும் மேலெழும்ப, இன்னும் நாங்கள் கட்ட வேண்டிய கழிப்பறையின் மீதிக்கும் சேர்த்து.

புத்தாண்டின் நினைவாக உங்கள் மேசைகளிலேயும் நண்பர்களுக்கு பரிசளிக்கவும் இதை நீங்கள் கோரலாம்.


எட்டி ஸ்பரிசிக்கும் தூரத்தில் இத்தனை அழகோடு எங்கள் ஜீவனுள்ள மலை.





No comments:

Post a Comment