ஓவியர் கே.பாலசுப்ரமணியன்
நாம் நம் வாழ்நாளில் யாருக்காக அதிக நேரம் காத்திருந்திருக்கிறோம்?
யோசித்தால் நமக்கே ரொம்ப வெட்கமாக இருக்கிறது.
அதிகாரத்திலிருப்பவனின் பார்வையில் படவேண்டுமென பல மணி நேரம் காத்திருந்திருக்கிறோம்.
காதலியின் வருகைக்காக ரயில்நிலைய ப்ளாட்பாரம் தேயுமளவிற்கு நடத்திருக்கிறோம்.
கோவிலுக்கு குடும்பத்தோடு வரப்போகும் ஒரு அதிகாரிக்காக சர்க்யூட் ஹவுஸ் வாசலில் நாட்கணக்கில் உட்காரிந்திருக்கிறோம். அல்லது நின்றிருக்கிறோம்.
அவ்வளவுதான் இல்லையா?
நான்கு வருடங்களுக்கு முன் ஒரு சாயங்காலத்தில் ‘வம்சி’யின் வாசலுக்கு, கையில் பேக் செய்யப்பட்ட ஒரு ப்ரேமுடன் ஒரு மனிதன் வருகிறார். அவர் நடையிலோ, பேச்சிலோ, வாழ்விலோ ஒரு பதட்டமுமில்லை.
அருணாசலேஸ்வரர் கோவிலிருந்த கற்சிற்பம் ஒன்று ஒருநாள் விடுமுறை கேட்டு வெளியேறி வந்தது போன்ற முகம். நிதானம். வாசல் முன் நின்றவர் ஷைலஜாவைப் பார்த்துக் கேட்கிறார்.
‘‘நான் பவா சாரைப் பார்க்க வேண்டும்’’
இன்று அவர் அலுவலகத்திலிருந்து அப்படியே ஒரு கிராமத்திற்குப் போய் தாமதமாகத்தான் வருவேன் எனச் சொன்னார் என தன் கைபேசியால் என்னை அழைக்க முயல அவர் அதே நிதானத்தோடு அதை தடுக்கிறார்.
வேண்டாம் மேடம், அவர் வரும் வரை காத்திருப்பேன் வாசலிலிருந்த ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார். கடைக்கு உள்ளே ஆயிரக்கணக்கில் உள்ள புத்தகங்களும், வெளியே விரிந்திருக்கும் சிறுபத்திரிகைகளும் இப்போது அவருக்கு தேவையில்லை. ஒரு சந்திப்பிற்கான மனநிலை மட்டும் இது. இந்நேரத்தை எது கொண்டு நிரப்பிக் கொள்ளவும் அவருக்கு சம்மதமில்லை.
டீ சொல்லட்டா சார்,
வேண்டாம் மேடம் பழக்கமில்லை.
உங்க பேர் என்னன்னும், எங்கிருந்து வர்றீங்கன்னும்
எதுக்காக பவாவை பாக்கணுன்னும் தெரிஞ்சிக்கலமா சார்,
பாலு மேடம், நான் ஒரு ஓவியன். என் சமீபத்திய ஒரு ஓவியத்தை பவா சாருக்கு தரணும் அவ்ளோதான்.
அவரை பாத்திருக்கீங்களா?
அருகிலிருந்து இப்போதுதான் பார்க்கப் போகிறேன்.
‘‘நீங்கள் அவருக்கு ஏன் உங்கள் ஓவியத்தை பரிசளிக்க வேண்டும்?’’
‘‘நான் அவரின் குறைந்த எழுத்துக்கு வாசகன்’’
அதன் பிறகு அவரிடம் எதைப் பேசவும் எனக்கு திராணியில்ல பவா, இரவு எட்டுமணி வரை வாசலிலேயே காத்திருந்துவிட்டு, கடையை சாத்துகிற நிமிடம் எழுந்து நின்று அந்த ஓவியத்தை என் கையில் தந்து,
இதை அவருக்கு நான் தந்தேன் என சொல்லிவிடுங்கள்.
நன்றி. என திரும்பாமல் அவர் சாலையில் ஓடிக்கொண்டிருந்த பல ஆயிரம் மனிதர்களோடு தனி ஒரு மனிதனாக போனார் பவா என அன்றிரவு அவ்ஓவியத்தை ஒரு ஹாலில் வைத்து பிரித்துக் கொண்டே ஷைலஜா சொன்னபோது, மனிதர்களின் இயல்புகள் குறித்து என் ஆச்சர்யம் பல ஆயிரம் மடங்குக் கூடியது.
சந்திப்புகளற்ற பொழுதுகளிலும்கூட அவர் குறித்த ஆச்சர்யங்கள் எனக்குள் கூடிக் கொண்டேப் போகின்றது. அவதானிப்பின் உச்சம் என நான் கருதும் நண்பன் மிஷ்கின் ஒரு மதிய உணவின் போது சொன்னது நினைவுக்கு வருகிறது.
பாலு, குளத்தாமரை பூவைப் போல தன்மீது படியும் அழுக்கு, மழைநீர், பறவை எச்சம், மனித கொய்தல் எதுவும் அத்தாமரையின் இலைகளையோ பூக்களையோ என்ன செய்துவிடமுடியும். அதைத் தழுவி செல்வதைத் தவிர. அதன் பிறகும் அது புதிதாய் துளிர்விடும், புதிது புதிதாய் பூக்கும்.
தாமரை கொடியென அவரைச் சொல்வது கூட பொருந்தாது. தாமரைப்பூ. அதன் உயிர்ப்பை கவனித்திருக்கிறீர்களா பவா, அது யாருக்காகவும், எதற்காகவும் பக்கவாட்டில் சாயாது. அதன் ஒரே நீட்சி சூரியன்தான். அது சூரியனை நோக்கி மட்டுமே உயரும். இதழ்கள் வாடி நீரில் வீழ்ந்து அழுகிய போதும் தன் அடுத்த மலர்தலையும் அது சூரியனை நோக்கியே அனுப்பும்.
நம் பாலு அத்தாமரைப்பூ மாதிரிதான் பவா.
எளிய மனிதர்களுக்காக தினம் தினம் பூக்கிற கலைஞன் பாலு.
அவரின் நாட்களை நட்புகளிலிருந்து அவதானித்தால் மூன்று சொற்களில் அடங்கிவிடக்கூடிய ஜீவிதம் பாலு சாருடையது.
காத்திருத்தல், துறத்தல், ஒப்புக்கொடுத்தல்.
சீனு எங்கடா இருக்க?
‘‘வீட்ல பாஸ்’’
பொறப்பட்டுப் போய் ஜிம்மி பில்டிங் வாசல்ல நில்லு நான் எட்டரைக்கு வந்தடறன்.
சரி பாஸ்,
அவரின் சக ஹிருதயன், சக ஓவியன் சீனுவாசனுக்காக அதிக வார்த்தைகளை செலவழித்து அவர் நடத்திய உரையாடல் இது.
தன் யமஹாவில் ஜிம்மி பில்டிங் வாசலில் காலை எட்டரைக்கு நிற்க ஆரம்பிக்கிறார் சீனு,
சீனுவாசன் ஒருமுறைகூட தன் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. அருகிலுள்ள போன் பூத்துக்குப் போகவில்லை. அவர் மறந்துவிட்டாரா என நினைவு படுத்தவில்லை.
பல கோல்ட் பிளாக் பில்டர் கிங்ஸ் காலடியில் நசுங்க அங்கேயே கிடக்கிறார். இரவு எட்டு மணிக்கு பாலுசார் அங்கு வருகிறார். ஏன் தாமதம் என்ற கேள்வியே அங்கு இருவருக்குமே எழவில்லை.
இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம். அல்லது அபத்த நாடகத்தின் ஒரு காட்சி. அப்படித்தானே!
இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அவர் தன் நண்பனுக்காக காத்திருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமற்ற காத்திருந்தல் அது. காதலிக்காக காத்திருத்தல் கூட சில முத்தங்களை யாசித்தாப் பெறுவதற்காக இருக்கலாம். இது அதுகூட இல்லை. சரி அப்படி காத்திருக்காமல் நீங்கள் பரபரப்பாக இயங்கினீர்களே என்ன செய்துவிட்டீகள் நண்பர்களே! பாலு சாரைவிட அதிகமாய் எதை நீங்கள் பெரிதாய் சாதித்துவிட்டீர்கள்?
பல நாட்களாய் தைல வண்ணம் பூசப்பட்டு தன் மர ஸ்டேண்ட் முன் நிற்கும் கேன்வாசில் எங்கு இந்த இரத்த சிவப்பு புள்ளியை வைப்பது என அவர் அவதானித்து வைப்பாரே! அக்கணத்தின் பெருமிதத்தை விட பெரிதா உங்கள் ஓட்டமும், பரபரப்பும், சாதனையும்?
யோசித்துப் பார்த்தால் காத்திருப்புகள்தான் மிகப்பெரிய சாதனைகளை அள்ளிவந்து உங்கள் உள்ளங்கைக்குள் வைக்கிறது. சாமியார்களின் காத்திருப்புகள் எதிர்பார்ப்புகளானது. வீழ்த்துவதற்கான காத்திருப்புகள் துரோகத்தாலனது. தான் அடைய விரும்பும் லட்சியத்திற்கான காத்திருப்பு எத்தனை காலமானாலும் கனியக்கூடியது.
இந்திய திரைப்படங்களின் ஒளிப்பதிவு மேதை பி.சி.ஸ்ரீராம் அந்த மே மாதம் தன் காரில் வீட்டைவிட்டு வெளியே வருகையில் அம்மரத்தடியை கவனிக்கிறார்.
ஒரு இளைஞன் அவரை எதிர்பார்த்து, அவர் கண்களில் பட்டுவிட வேண்டுமென நிற்கிறான்.
அவர் கார் அவனை சுலபமாக கடந்துவிடுகிறது. மனம் பின்னோக்கி போய் அப்பையனை விசாரிக்க விரும்புகிறது.
சரி இருக்கட்டும் என அவர் காத்திருக்கிறார். மூன்று மாதங்களில் அடித்த வெய்யில், பெய்த கோடை மழை, கிளம்பிய புழுதி, கேட்ட சப்தம், நிலவிய அமைதி எல்லாவற்றையும் அவன் ஒரு திரவத்தை மாதிரி குடித்து அங்கேயே நிற்கிறான்.
ஒரு படபிடிப்பின் இடைவெளியில் ஏதோ ஞாபகம் வந்தவராக தன் மனைவியை தொலைபேசியிலழைத்து,
கேட்டுக்கு வெளியே அப்பூம்மரத்தடியில் ஒரு பையன் நிற்கிறானா? என கேட்கும்போது தன் கடிகாரத்தைப் பார்க்கிறார். பிற்பகல் இரண்டு.
மாடியிலிருந்து பார்த்துவிட்டு அந்த அம்மா சொல்கிறார். ஆம் நிற்கிறான். என்ன? எதற்கு அவன் நம் வீட்டையை நோக்கி நிற்கிறான்?
அவர் தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறார். எனக்கு மட்டும் என்னத் தெரியும்? அவனுக்கு ஒரு டம்ளர் மோர் கொடு.
அடுத்தநாள் படபிடிப்பிற்கு போகும்போது அப்பூமரத்தடியில் அவர் வண்டி நிற்கிறது. கார் கண்ணாடி இறக்கிவிடப்படுகிறது.
‘உள்ள ஏறு’
அவன் காலியாயிருந்த பின் இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கொள்கிறான். ஆனால் இருப்பு கொள்ளவில்லை.
யாரிடமோ கேட்டது போல முன்பக்க சாலையைப் பார்த்துக் கொண்டே பி.சி. கேட்கிறார்.
உனக்கு என்ன வேணும், ஏன் இங்கேயே நிக்கற?
உங்க உதவியாளனா சேரணும் சார்,
பேர் என்ன?
திருமூர்த்தி.
அந்த திருமூர்த்திதான் ‘திரு’ என்கிற நவீன இந்திய சினிமாவின் ஒளிப்பதிவை ஓவியமாக மாற்றி பல கோடிகள் ஊழியமாக பெறும் புகைப்பட கலைஞன்.
காத்திருப்பின் மகத்துவங்கள் வரலாறு முழுக்க இப்படி கொட்டிக் கிடக்கின்றன.
நான் என் ‘எல்லா நாளும் கார்த்திகையை’ மீடியா வாய்ஸில் எழுதிக் கொண்டிருந்த நாட்கள் அவை. புதன் கிழமை அதிகாலையில் சென்னையில் இதழ் கிடைக்கும். அடுத்த நாள் தான் வெளியூர்களுக்கு.
காலை நான்கு மணி நடைப்பயிற்சியினிடையே அவர் வழக்கமாக இதழ்கள் வாங்கும் பெட்டிக் கடைமுன் போய் நிற்பார்.
அவரே கட்டைப் பிரித்து ஒரு இதழை எடுத்து அப்பெட்டிக்கடை மஞ்சள் விளக்கின் குறைந்த ஒளியில் அக்கட்டுரையைப் படிப்பார். மீதி நடையெங்கும் அதே நினைவுகளில் சுழன்று விடியலுக்காக காத்திருந்து அதிகாலை நான் எழும் நேரமான ஆறுக்கும் ஆறறைக்குமிடையே என்னை அழைத்து,
‘‘பாலு மகேந்திரா சாரை பற்றி படிச்சேன் பவா, என்ன சொல்ல?’’
ஒன்றும் சொல்லமாட்டார். இந்த மூன்று வார்த்தைகளுக்காகத்தான் இரண்டு மணி நேர காத்திருப்பு.
கடந்த வாரம் நான் என் இதய அடைப்பின் பொருட்டு மருத்துவமனையில் இருந்தபோது பாலு சார் ஒரு பூனைக்குட்டியின் மென்மையோடு என் படுக்கைக்கருகில் நின்றதை, என் தூக்கம் பிரிந்த போதுதான் பார்த்தேன்.
‘வாங்க பாஸ்’
‘‘என் கைகளைப் பற்றிக் கொண்டார். ஓய்வெடுங்கள் பவா,
வருகிறேன்’’ அவ்வளவுதான்.
அவ்வளவுதானா பாஸ்?
என் நண்பனும் தம்பியுமான கார்த்தியை தொலைபேசியில் அழைத்து,
நாளை மாலை பவா ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வரும்போது அவர் கையில் அவருக்குப் பிடித்த என் ஓவியம் ஒன்றிருக்க வேண்டும் கார்த்தி.
நீங்கள் கேலரிக்குப் போய், நான் சொன்னேன்னு சிகப்பு பட்டில் நான் வரைந்த அந்த எளிய ஓவியத்தை பவாவுக்கு தந்து அவரை வெளியே அழைத்து வாங்க கார்த்தி.
கார்த்தி அண்ணன்களின் சொற்களை அப்படியே நிறைவேற்றித் தருகிற அனுமன்.
மருத்துவமனை வாசலில் நின்ற கார்த்தியின் கையிலிருந்த அந்த ஓவியத்தின் மீது சுற்றப்பட்டிருந்த வண்ண காகிதத்தை ஆர்வங்கொண்டு அகற்றினேன்.
அதே. ஒரு சிகப்பு பட்டுத்துணியில் வாழ்வின் சிந்தல்களை அங்கங்கே தூவியிருப்பார். வெற்றிடம்தான் அதிகம். மனித ஜீவிதத்தில் இன்னமும் யாராலும் நிரப்பப்படாத வெற்றிடம்தானே அதிகம்.
No comments:
Post a Comment