Wednesday, January 5, 2011

அப்பா

கையிலடங்காத நீரின் சுழிப்பு.

வயசோ வருஷமோ ஞாபகத்தில் இல்லை. ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அப்பாவின் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டே நிலத்திற்குப் போகும் அனுபவம் எப்போதும்போல அன்றைக்கும் வாய்த்திருந்தது.

புதிதாய் வாங்கின புஞ்சை நிலத்தில் கிணறு வெட்டு நடந்து கொண்டிருந்தது. கிணற்று மேட்டில் அப்பாவோடு உட்கார்ந்துகொண்டு நிமிஷத்துக்கொரு தடவை கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை மொரம்பு, ஒட்டந்தட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தட்டு மொரம்பும் கொட்டப்படும் போதெல்லாம் அப்பா எதையோ தேடும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்துவிட்டு, அடுத்த நொடியே கிணற்றுக்குள் பார்க்கிறார். உள்ளே ஆறேழு பேர் வேலை செய்கிறார்கள். கடப்பாரைச் சத்தம் மட்டுமே மேலேறி வருகிறது. புதிர்களால் கிணறும் சூழலும் நிரம்பியிருந்தது.

இப்போது வெளியே வந்து விழுந்த மொரம்பில் லேசான ஈரம் தெரிந்தது. இதற்காகவே தவமிருந்ததுபோல் அப்பா ஓடிப்போய் அதை அள்ளித் தன் முகத்தருகே சமீபித்தார். அந்த வெள்ளை மொரம்பைத் தன் முகத்தால் ஸ்பரிசித்தார். அதன் சில்லிடலில் அப்பாவின் முகம் பிரகாசமடைந்தது.

"வையாபுரி, நொசுவுல ஈரம் தெரியுது. இரு இரு நானே உள்ள வரேன்'' என்று ஆர்வம் மேலிட எழுந்த சத்தம் எல்லோரையும் மேல் நோக்கித் திரும்ப வைத்தது.

நீண்டு தொங்கிய ஒரு கயிற்றினூடே அப்பாவும், காலியான அந்த ஒட்டந்தட்டின் வழியே நானுமாய் உள்ளே இறங்கினோம். கிணற்றுக்குள் நல்ல இருட்டு. உள்ளே நின்றிருந்த ஆறேழு பேரையும் கண்கள் பழகிக்கொள்ளச் சில நிமிஷங்கள் தேவைப்பட்டன. கிணற்றுக்குள்ளிருந்து மேலே பார்த்தால் அச்சம் ஒரு விலங்கைப்போலக் கரையில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அந்த அச்சத்தைத் தவிர்த்து, பார்வையைத் தரையிலேயே நிலைக்க முயற்சித்தேன்.

''வையாபுரி மொரம்புல ஈரம் தெரியுது. எந்தப் பக்கம்?"

"சனி மூலையில வாத்தியார"

அப்பா நிதானிக்கிறார்.

தன் அனுபவத்தாலும், பார்வையாலும் அப்பாவின் கண்கள் ஒரு குறிப்பட்ட வெள்ளைக் கல்லின்மீது படிகிறது.

"இந்தக் கல்லுக்குக் கீழ கடப்பாரையால மொள்ள நெம்பு"

எல்லோர் பார்வையும் கடப்பாரை நுனி விழப் போகும் அந்தச் சின்னக் கல்லின்மீது குவிய, வையாபுரி கடப்பாரையால் கல்லுக்கடியில் தாங்கி நெம்புகிறார்.

"நீர்"

இத்தனை யுகமாய்க் கல்லின் முட்டுக்குள் அடங்கியிருந்த நீரின் பிரவாகம். இருட்டிலும் மிளிர்ந்த அந்த மனித முகப் பிரகாசங்கள் அதற்குமுன் எப்போதும் நான் காணாதவை.

அப்பா என்னைத் தழுவித் தூக்கி, அந்த ஊற்றுக்கண்ணில் முகம் புதைய நீர் அருந்த வைக்கிறார். நான் ருசியால் சில்லிடுகிறேன்.

நீர் எங்களின் கால்மீதேறி நனைக்கிறது. நாங்கள் நிறைகிறோம்.

ஊற்றின் வேகம் அப்பாவை இன்னும் ஆர்வப் படுத்துகிறது.

"வையாபுரி உள்ள ஆறு, கீறு ஓடுதா பாருய்யா"

அப்பாவின் அந்தக் குதூகலம், என் வயதுக்கானது.

காலம், காலமாய்ப் பீறிட்ட அந்த ஊற்றை ஒரு சின்ன மொரம்புக் கல் தடுத்து வைத்திருந்தது மாதிரி நானும் அப்பாவைப் பற்றிய என் ஞாபகங்களை எழுதிவிடக் கூடாது என்ற பிடிவாதத்திலிருந்தேன். எழுத்தின் தொடர்ச்சி எனக்குத் தெரியும், முடிவு நானறியாதது. எனக்குள்ளேயே அந்த ஊற்றுநீர் ததும்பிக்கொண்டிருந்தது. அதன் இசை வடிவமான சத்தம் என் ஜீவன். அடைத்துக் கொண்டிருந்த அக்கல்லை இன்று என்னிலிருந்து அகற்றுகிறேன்.

"அப்பா,"

கொட்டிக் கிடக்கும் அனுபவங்களிலிருந்து எதை அள்ள?

எதை விட?

அப்பாவின் ஆசிரியப் பணி முடிந்து ஓய்வுபெற்ற சமயம் அது. ஒரு சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாரானது. சி.பி.ஐ.(எம்), திமுகவுடனும், அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி வைத்திருந்தது. நான் திமுக வேட்பாளருக்குத் தீவிரமாய்க் களப்பணியிலிருந்தேன். தேர்தலுக்கு முந்தைய இரவு காங்கிரஸ் கட்சிக்கு பூத் ஏஜண்ட் கிடைக்காமல், மறதியின் பக்கங்களிலிருந்து பழைய காங்கிரஸ்காரரான என் அப்பாவை மீட்டெடுத்து, வாக்குச்சாவடியின் காங்கிரஸ் வேட்பாளரின் முகவராக உட்கார வைத்தார்கள். திமுக சார்பாக அன்று பூத் முகவராக இருந்த எனக்கு இது பெரும் அதிர்ச்சி. சகலவிதமான தில்லுமுல்லுகளோடும் திமுகவினர் வாக்குகளைப் பதிய வைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து என் பாட்டியைக் கண் தெரியாதவர் எனச் சொல்லி ஒரு திமுக உடன்பிறப்பு சாவடிக்குள் அழைத்து வந்தது. அதாவது அந்தப் பாட்டிக்குக் கண் தெரியாது. அதனால் அவர் உதவியோடு வாக்கை அந்தத் திமுகக்காரரே பதிப்பார். அப்பா ஆக்ரோஷத்தோடு இதை எதிர்த்தார். அதிகாரியிடம் "சார் இவங்க என் சொந்த மாமியார், என் வீட்லதான் இருக்காங்க. நல்லா கண்ணு தெரியும் சார்" என நீதியின் குரலைக் கொஞ்சம் உயர்த்தினார்.

நான் "சார் இவங்க என் சொந்த பாட்டி சார், பத்து வருஷமா கண்ணே தெரியாது சார்" என்ற ஒரு பெரும் பொய்யை அநீதியின் பலத்திலிருந்துச் சொல்ல, ஓட்டு அரசியல் எனக்குக் கற்றுத் தந்திருந்தது.

அந்தச் சாவடியின் பூத் அதிகாரி என் பாட்டியின் உயரத்திற்குக் குனிந்து,

"பாட்டிம்மா கண்ணு தெரியுமா?" எனச் சத்தம் போட்டுக் கேட்டார். வரிசையில் நின்ற எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். பாட்டி மிகக்கவனமாக,

"பத்து வருஷமாச்சு சார் கண்ணு அவிஞ்சு," என்றது நிதானமாக, வாங்கியிருந்த 50 ரூபாய்க்கு விசுவாசமாக.

அப்பா, "இந்த அரசியலும் வேணாம், ஒரு மயிரும் வேணா"ன்னு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

அவர் முன் ஜெயித்துவிட்ட திமிரில் நின்ற நான்தான் அடுத்த தலைமுறையின் பிரதிநிதி. தனக்கு அடுத்த சந்ததி நேர்மை, அன்பு, உறவு எல்லாவற்றையும் பணத்துக்காக விற்கத் துணிவதை அவர் மனம் கடைசிவரை ஏற்கவேயில்லை.

அவருக்கான சில நியாயமான கோரிக்கைகளில் கடைசிவரை அவரால் வெற்றியடைய முடியாதபோது, நாங்கள் எவ்வளவு தடுத்தும் தான் பெற்ற நல்லாசிரியர் விருதை (100 கிராம் எடையுள்ள வெள்ளிப்பதக்கம் அது) ஒரு நீண்ட கடிதத்துடன் அரசுத் தலைமைச் செயலருக்குத் திருப்பி அனுப்பினார்.

மத்திய அரசுக்கெதிராக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய பாரத் பந்த் அது. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பவர்கள் எனப் போலீஸ் கருதிய பட்டியலில் என் பெயரும் நண்பன் கருணா பெயரும் இருந்தது. இன்றிரவு நிச்சயம் கைது செய்யப்படலாம் எனக் கருதிய பொழுதில் நண்பர்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமினோம். எல்லோர் முகத்திலும் பதட்டமும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவுமான அவசரமும் இருந்தது. சாப்பிட்டபிறகு, மூங்கில்துறைப்பட்டுக்குச் சென்று என் நண்பர் வீட்டில் தங்குவது பந்த் முடிந்த பிறகு திரும்புவது என முடிவெடுத்தோம். ஒரு ஈசிச்சேரில் படுத்தபடி எங்கள் திட்டம் முழுவதையும் கவனித்துக் கொண்டிருந்த அப்பா திடீரென நாங்கள் யாரும் எதிர்பார்க்காதபடி எழுந்து,

"இங்க பார்டா, இந்த வீட்ல இருந்து போக யாரையும் நான் விடமாட்டேன். பந்த்ல அரெஸ்ட் ஆகுங்க, அல்லது கட்சியில இல்லன்னு எழுதிக் கொடுத்துடுங்க. மீறிப்போனா, நானே எங்க போயிருக்கீங்கன்னு போலீசுக்குச் சொல்லிடுவேன்" என கர்ஜித்தார்?

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நாங்கள் நிலைகுலைந்தோம். அவர் எதிர்பார்த்தபடியே அன்றிரவு நான் கைது செய்யப்பட்டேன். என் நண்பர்கள் தப்பித்தார்கள். கொள்கையின் மீதான இந்த மூர்க்கத்தைத் தன் இறுதி நாள்வரைத் தனக்குள் வைத்திருந்தவர் அவர்.

என் திருமணம் வரையிலும்கூட நானும் அப்பாவும் தெருவில் நின்று சண்டை போட்டிருக்கிறோம். பக்கத்துத்தெருவரை அவர் என்னைத் துரத்தி, துரத்தி அடிப்பது என் கல்லூரிப் படிப்பு முடியும்வரை தொடர்ந்திருக்கிறது. ஒரு முறை நானும் அப்பாவும் போட்ட சண்டையின் தொடர்ச்சியாக அவர் பெட்டியை எடுத்து வெளியில் வீசி எறிந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் எதிரில் தோலில் மாட்டிய தோள் பையோடு கோணங்கி. அவன் அதிர்ச்சியடைந்தான்.

அந்த அனுபவத்தை "சாரோனின் சாம்பல் இறகு" என்று சிறுகதையாக்கியிருக்கிறான். பேரன்பினால் எழும் பிரச்சனை இதுவென நல்ல வேளை என்னைப் போலவே கோணங்கியும் புரிந்து வைத்திருந்தான். நானும் இவ்வனுபவத்தை என் "சிதைவு" சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன்.

அப்பா தன் இருபத்தி ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்து, வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் என்ற ஒரு புகழ்பெற்ற குன்றுக்கருகில் தான்தோன்றித்தனமாய் வளர்ந்திருந்த ஒரு எட்டி மரத்தை, தன் தற்கொலையை நிறைவேற்றித்தரத் தேர்ந்தெடுத்தார்.

மறு பரிசீலனைக்கிடமின்றி மாலை ஐந்து மணிக்குக் கோட்டாங்கல் பாறையில் மல்லாந்து படுத்து வானத்தை வெறிக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. எதற்கெனத் தெரியாமலே கண்ணிலிருந்து நீர் வழிகிறது. சரியாக ஆறு மணிக்கு இப்பேரமைதியைக் குலைத்து வாணவேடிக்கைகளும், வெடிச் சத்தங்களும் அவரை அலைக்கழிக்கின்றன. தன் அகமனதை ஊடுருவும் இப்புற உலக இயக்கத்தை எத்தனை தடுத்தும் அவரால் நிறுத்த முடியவில்லை.

கண்கள் மேற்கையே வெறிக்கின்றன. சுகுமாரன் சொல்வதைப் போல தற்கொலையில் தோற்றவனின் மௌனமல்ல அது. தற்கொலைக்குத் துணிந்தவனின் மௌனம். எதிரில் ஒரு மங்கலான ஓவியம்போலத் திருவண்ணாமலை மலை தெரிகிறது.

தீபச் சுடரொளி பற்றிப் பிரகாசிக்கிறது. அவ்வொளியின் வெப்பத்தை இம்மலைமேட்டில் படுத்துக்கிடக்கும் அப்பாவின் சரீரம் உணர்கிறது.

துடித்தெழுகிறார்.

அதற்குப்பிறகும் அந்த எட்டி மரத்தில் ஆறேழு நாட்கள் அந்தக்கயிறு தொங்கி கொண்டிருந்ததாகவும், பின்பொருநாள் அப்பாவே அதை அகற்றியதாகவும் சொல்வார்.

தன் இறுதி நாள்வரை அப்பாவை ஒரு நாத்திகனாகவே நாங்களெல்லாம் அறிந்தோம். வெளிவாழ்வு, உள்வாழ்வு இதெல்லாம் தெரியாத மனுஷன் அவர். ஆனால் தன் வாழ்வின் அந்திமம் வரை ஒரு ரகசியத்தை அடைகாத்தார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரு கார்த்திகை தீபத்தன்றுதான் அந்த இரகசியத்தை அவிழ்த்துப்பார்த்தோம்.

ஒவ்வொருத் தீபத்தன்றும் காலையிலேயே குளித்து முடித்து, தூய வெள்ளை உடுத்திப் பத்து மணிக்கு சைக்கிளில் புறப்படுவார். எங்கேயெனக் கேட்க யாருக்கும் துணிவிருக்காது. பதிலைக் குடும்பத்துக்குள் கொட்டிவிட்டுத்தான் புறப்படவேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இருந்ததில்லை அவருக்கு.

ஒரு மணிக்குத் திரும்பி விடுவார்.

ப்ராட்டஸ்டன்ட் கிருத்துவக் குடும்பமாகிய எங்கள் வீட்டில் எந்தக் கார்த்திகை தீபத்தன்றும் மத்தியானத்தில் சமைத்ததில்லை. தீபம் பார்த்த பிறகே, மொட்டைமாடியில் இலை போட்டுச் சாப்பாடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசாமல் ஏதோ அடங்காத மனதோடு உலாத்திக் கொண்டிருப்பார். தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு. தனக்கு வாழ்வு கொடுத்த தீப ஒளிக்கு பல ஆண்டுகளாக அவர் செலுத்தும் மௌன அஞ்சலி என நான் புரிந்து கொண்டேன்.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தோல்வியில் முடிந்த ஒரு தற்கொலை முயற்சியின் அலைக்கழிப்பு இப்படி முடிந்தது.

1999 நவம்பர் 23. அதே தீபத் திருநாள். ஊரே பரபரப்பில் இயங்குகிறது. அப்பாவால் சைக்கிளை எடுக்க முடியாது. முதுகுத் தண்டில் அடிபட்டு எழ முடியாமல் படுத்திருந்தார். காலை பத்து மணியிருக்கும், என்னைத் தன் படுக்கையருகே அழைத்து அமரச் சொல்கிறார். கண்களில் துளிர்க்கும் நீர் வழிகிறது.

"பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னக்கி என்னால போக முடியலை. நீ எனக்காகச் செய்வியா? வார்த்தைகளில் கொஞ்சம் அவ நம்பிக்கையிருந்தது."

என் துக்கமும் கண்ணீராய்த்தான் வழிந்தது.

'எனக்கப்புறமும் என் பேர்ல இதைச் செஞ்சுடுப்பா' என் சிறுவயது முதலே மார்க்சிய சிந்தனைகளில் வளர்ந்த எனக்கு வீட்டிற்குள்ளிருந்தே ஒரு நாத்திகனால் விடப்படும் முரண்பாடான கோரிக்கை இது.

'கண்டிப்பா செய்வம்ப்பா'

அன்று மாலை தீபம் ஏற்றும் முன் நான் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியில் போயிருந்தேன். ஒரு அதிர்ச்சியான தொலைபேசி அழைப்பில் ஜனக் கூட்டத்தை விலக்கி வீட்டிற்கு வந்தேன். ஹாலில் அப்பாவைப் படுக்க வைத்து எல்லோரும் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.

'எப்படி ஷைலஜா?' என்றேன். அப்பாவுடனான கடைசி உரையாடலை அவள் என்னிடம் சொன்னாள்.

'தீபம் பார்க்க மாடிக்கு போறம்பா'

'பாத்துட்டு வாங்கம்மா'

தீப ஒளியை அவசரமாக தரிசித்துவிட்டுக் கீழிறங்கி வந்து,

'அப்பா தீபம் ஏத்திட்டாங்கப்பா' என்றிருக்கிறாள்.

'ரொம்ப சந்தோஷம்மா'

அதுதான் அப்பா பேசின கடைசி வார்த்தை.

ஒவ்வொரு வருடமும் மலைமீது ஏற்றப்படும் தீப ஒளிக்கு, ஒரு மார்க்ஸியக் குடும்பத்திலிருந்து கொடுக்கப்படும் அப்பாவின் பெயரைத் தாங்கின அரைக்கிலோ நெய்க்குடமும் உண்டு.

6 comments:

  1. அப்பாவை பற்றி இன்னும் எழுதுங்கள்

    ReplyDelete
  2. Great! Very well written. The best of humanity with all its contradictions comes out at its best in your writings. I have been reading your writings for the past few months and have been more than impressed and touched always.

    I have a request though. your article on Jeyakanthan is not appearing; it is showing as blank. Please get that corrected.

    Also i hope that this gets published in popular magazines, so that your humanitarian approach to life can touch and inspire more people. Hope you do not mistake my suggestion.

    With sincere regards,
    Kalees

    ReplyDelete
  3. நெகிழ்ச்சியான பதிவு

    ReplyDelete
  4. ஸார் மிகவும் நெகிழச் செய்த பகிர்வு நன்றி.

    ReplyDelete
  5. கோட்டாங்கல் பற்றி, ஏற்கனவே மாமா மகேந்திரன் கூறி கேட்டிருக்கிறேன் . ஆனால், அப்பொழுது அது எனக்கு வெறும் செய்தியாகத்தான். ஆனால் நீங்கள் கூறியபோது தான் என் இமைகளில் நீர் த்தும்பியது..... . உண்மையிலேயே.... நெகிழ்ச்சி அடைந்தேன்

    ReplyDelete
  6. காசுக்காக கொள்கைகளை விக்கீற வாத்தீயார்கள் மத்தியீல்.
    கொள்கைகளை விக்காத ஒரு வாத்தீயார் உங்க வீட்டிலும் .

    ReplyDelete