Thursday, September 1, 2016

மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்...

எனக்கென்று தனியாக நூலக அறையில்லை. புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பவனில்லை நான். அது கட்டிலில், சமையலறையில், முற்றத்திலென இறைந்து கிடக்கும். நண்பர்கள் யார் அவைகளை எடுத்துப் போனாலும் எப்போதும் வருத்தமிருந்ததில்லை. மாறாக சந்தோஷப்பட்டுக் கொள்வேன்.

அப்படியேத்தான் புகைப்பட சேகரிப்புகள் எதுவும் எண்ணிடமில்லை. பறவைகளின் எச்சத்தில் கலந்து ஈர பூமியில் விழுந்த பூசணிப்பூ கொடி ஒன்று வலுவாக கூரை மேலேறி கூரைத்தாங்காத பெரும் காய்களாக காய்த்து தீர்க்குமே அப்படி எப்படியோ என் கணிணியில் முப்பது அபூர்வ படங்கள் தங்கியிருப்பதை ஒரு நாள் கவனித்தேன்.

அவை ஒவ்வொன்றும் காலத்தை மீண்டும் என் முன் எடுத்து போடுபவை. கடந்து போன அந்நாட்களின் நினைவை மீட்டுபவை. அப்புகைப்படங்களுக்குள் காலம் உறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். அவைகளை என் வாசகர்களுக்கும் கடத்திவிட வேண்டி ஒரு சிறு முயற்சிதான் இத்தொடர்.

பவாசெல்லதுரை






1992 

அப்போது மீட்சி, நிகழ் இனி இன்று, கல்குதிரை காலச்சுவடு என காத்திரமான சிறுபத்திரிகைகள் மட்டும் வந்து மனதை நிரப்பிக் கொண்டிருந்த காலம், யாருமே எதிர்பாராத ஒரு நாளில் கோமல் சாமிநாதனை ஆசிரியராகவும், இளையபாரதியை துணை ஆசிரியராகவும் கொண்டுசுபமங்களாஎன்ற சென்டிமெண்ட் பெயர் கொண்ட சிறுபத்திரிகையாயும் இல்லாமல், வெகுஜன பத்திரிகை மாதிரியும் இல்லாமல் ஒரு மாத இதழ் தமிழ் சூழலில் வெளிவந்தபோது, வாசிப்பின் பல்வேறு ருசி தேடி அலைந்து கொண்டிருந்த என்னை மாதிரி இளைஞர்களுக்கு அது முதன் முதலில் ஒரு பெண் உடலின் புது ஸ்பரிசம் மாதிரி சிலிர்ப்பானது.

அந்நிகழ்ச்சி சில நாட்களில் நினைவிலிருந்து அகன்றது. நிகழ்வு முடிந்து ஒரு தெருவோர பரோட்டாக் கடையில் சாப்பிட்டு முடிந்து அதன் எதிரிலிருந்த உடைந்து சிதிலமாகியிருந்த வாரவதியின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கோமல், இந்திரன், .கந்தாமி, .தேவதாஸ், இளையபாரதி, ஜெயமோகன் இன்னும் அப்போது இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இரண்டு மூன்று இளம் வாசகர்கள்.

அதற்கு முந்தையசுபமங்களாவில் ஜெயமோகனின்ஜெகன் மித்யைசிறுகதை வந்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது (அப்போது ஜெயமோகனின் புனைவுகளும் சர்ச்சையானவையே)

கந்தசாமி சார் தன் வாழ்விலிருந்து அனுபவங்களை திரவமாக்கி எங்களுக்குப் பருகத் தந்தார்.

கூட்டம் துவங்குவதற்கு முன் கோமலும் இளையபாரதியும் யோகிராம் சூரத்குமாரை சந்திக்க வேண்டும் என ஆர்வப்பட்டதை அரைமணி நேரத்தில் நிறைவேற்ற முடிந்தது எனக்கு. சூரத்குமார் என்னோடு ஒரு நண்பனைப் போல பழகிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

கோமலின் கைகளை வெகு நேரம் அவர் பற்றியபடி உரையாடினார். இளையபாரதிக்கும் அதுவே. ஊது வத்தி புகையும், சார்மினார் சிகிரெட் புகையும் கலந்து சுழன்ற அவ்வறையிலிருந்து நாங்கள் மூவரும் வெளியே வந்து மரத்தேர் அருகில் நின்று பேச ஆரம்பித்தோம். இளையபாரதி அவர் கரங்களைப் பற்றிய விநாடி என்னுள் மின்சாரம் பாய்ந்து உடல் உதற ஆரம்பித்தது என்பதை கோமலுக்கு சொல்ல,

எனக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சக மனிதனின் கைப்பற்றலுக்கு அதிகமாக அதில் ஏதுமில்லை எனச் சொல்ல,

‘‘உங்களால அதை உணரமுடியாது கோமல்’’ என பாரதி சொல்ல

‘‘நீ அடிப்படையிலேயே பலஹீனமான ஆள். நான் மார்க்சிய கல்வியிலிருந்து இப்படிப்பட்ட வெற்று நம்பிக்கைகளை உதறக் கற்றுக் கொண்டவன்’’ என அவர்களிருவரின் குரலும் உயர ஆரம்பிக்கும் முன் கூட்டம் துவங்கிவிட்டது.

நிகழ்வின் முடிவில் அவர்களிருவரும் அதுவரை பத்திரமாக காப்பாற்றிய கூட்டத்திற்கு முன் சூரத்குமாரின் சந்திப்பின் தொடர்ச்சியிலிருந்து துவங்கினார்கள்.

ஜெயமோகன் தனக்கு மிக பிரியமான மடாதிபதி கதைகள், சாமியார்கள், ஆஸ்ரமங்கள், ஞாநிகள் என விவரிந்துக் கொண்டே போக,

ஒரு சிறு பையனின் இத்தனை அனுபவங்களை அந்த மதிற்சுவர்மேலியிருந்த மனிதர்கள் வியந்து கேட்டுக் கொண்டிருக்கையில்

‘‘நானும் சூரத்குமாரும் சக பிச்சைக்காரர்களாக இக்கோவிலின் முன் ஒரு மாதம் கையில் திருவோடோடு நின்றிருக்கிறோம்’’ என்று அடுத்த அதிர்வை தன் சொற்களைக் கொண்டு உருவாக்கி மேலேறும்போது.

சென்னைக்கு போக வேண்டிய 122 பேருந்து எங்களை உரசிக் கொண்டு நின்றது.

அவசர அவசரமான கைக்குலுக்கல்களோடு இந்திரன், கோமல், இளையபாரதி பேருந்தில் ஏற நானும் ஜெயமோகனும் மட்டும் மீந்திருந்தோம்.

அங்கிருந்து சன்னதி தெரு இறக்கத்தில் அந்நள்ளிரவில் நடந்தே வந்தோம். இராஜராஜன் லாட்ஜில் அறுபது போய்க்கு நான் போட்டிருந்த சிறு அறை ஒன்று எங்கள் பின்னிரவு உரையாடலுக்கு விழித்திருந்தது.

அதன் காத்திருப்பை ஏமாற்றாமல் நாங்களிருவரும் பேச ஆரம்பித்தோம்.

அந்த உரையாடலின் நிறைவில்தான் ஜெயமோகன் தன் பையிலிருந்து ஒரு பெரிய கையெழுத்துப் பிரதியை என் கைகளுக்கு மாற்றி,

இது இதுவரை நான் எழுதிய சிறுகதைகளின் பிரதிகள். நல்ல பப்ளிஷர் கிடைக்கல. உங்களுக்கு கவிஞர் மீரா, நல்ல நண்பர் என்பது தெரியும். முயன்று பாருங்க பவாஎனச் சொன்னார்.

அடுத்த நாள் பதினோரு மணிக்குத்தான் இருவராலுமே எழ முடிந்தது. காலை உணவுக்கு அவசியமே இல்லாமல் அங்கிருந்த மேடேறி நாங்கள் இருவரும் நின்ற இடம் யோகிராம் சூரத்குமாரின் சன்னதி தெரு ஓட்டு வீட்டு வாசல்.

பெரும் சிரிப்பொலி சத்தத்திற்கிடையே அவர் இரும்பு கம்பியிட்ட கதவைத் திறந்து எங்களை உள்ளே அழைத்தார்.

ஜெயமோகனுக்கும் யோகிக்குமான துவக்கமே பெரும் சண்டையோடு ஆரம்பித்தது.

‘‘பிரமிள் உங்க நண்பரா?’’

‘‘Yes’’

‘‘பாலகுமாரன்’’

He is also my friend,

எப்படி ஒரே நேரத்தில் ஒரு மகத்தான கவிஞனோடும், ஒரு முனிசிபால்டி குப்பையோடும் உங்களால் நட்பாயிருக்க முடிகிறது?

யோகி தன் நீலநிறக் கண்களால் ஜெயமோகன் ஊருறுவினார். பார்வை ஜெயமோகனின் ஆழத்தைத் தொட்டிருக்கக் கூடும். ஆனாலும் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.

அத்தனை வாசித்த படைத்த ஒரு கலைஞனின் அகங்காரம் அது.

யோகிக்கும் அது இருந்தது. சதவீதம்தான் குறைவு. அவர் சட்டென தன்னை தளர்த்திக் கொண்டார். மூன்றாவது சார்மினரின் சாம்பல் அவர் வேட்டி மீது உதிர்ந்தது.

Yes, Balakumaran is my another friend. நான் ஒரு Begger. இந்த பிச்சைக்காரனுக்கு மானுடப் பிறவிகள் எல்லாருமே நண்பர்கள்தான் my dear friend.

மௌனமான உறைதலில் இதற்கு சம்மந்தமில்லாத அவர்முன் உட்கார்ந்திருந்த பக்தர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது போன்ற பாவனையில் நான் மனதளவில் விலகியிருந்தேன்.

ஜெயமோகன் விடுவதாயில்லை. நீங்கள் பிச்சைக்காரனில்லை. உங்களைச் சுற்றி இத்தனை கோட்டீஸ்வர பக்தர்கள். வசதியான வீடு, அடுக்கிக் கொண்டே போன ஆங்கில சொற்களை யோகி வழிமறித்தார். அவர்களிருவரின் தர்க மோதலில் அக்குளிர்ந்த கற் தரை சூடானது.

 ‘போதுமா யங் ரைட்டர். OK. நான் கோட்டீஸ்வர பிச்சைக்காரன்.’ என எங்கள் இருவர் கைகளிலும் இரு ஆப்பிள்களை திணித்தார்.


‘My father bless you’ என ஆசிர்வதித்தார். என்னை நாளைக்கு வருவாயா? எனக் கேட்டார். நான் தலையசைத்து விடை பெற்று ஜெயமோகனை பஸ் ஏற்றிவிட்டு தோளில் தொங்கும் ஜோல்னாப் பையோடு சைக்கிள் மிதித்தேன்.


- நன்றி
இம்மாத அந்திமழை

No comments:

Post a Comment