Wednesday, September 14, 2016

கொண்டாட்டங்களின் வாசனை

கேரள தலைமைச் செயலக ஊழியர்கள் சார்பில் நடத்தப்படும் மாத இதழின் ஓணம் சிறப்பிதழ் இந்த வருடம் இரண்டு சிறப்பிதழ்களோடு வந்துள்ளது.

ஒன்றில் மம்முட்டியின் அட்டைப்படுமும், இன்னொன்றில் கவிஞர் சச்சிதானந்தன் கோட்டோவிய அட்டைப்படமும்.

'கொண்டாட்டங்களின் வாசனை' என்ற தலைப்பில், ஓணத்திற்கும் எனக்குமான தொடர்பு குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதன் பிரதிகளோடு  ஓணம் முடித்த கையோடு தோழர் ஜோதிசங்கர் (கேரள தலைமைச் செயலகம்) இன்று அதிகாலை என்னை சந்தித்தார்.

எத்தனை மேன்மையான மாநிலமும், மனிதர்களும் நம் அருகே இருந்து இலக்கியத்தைக் கொண்டாண்டுகிறார்கள்!








1992  டிசம்பர் 31- அந்த கலை இரவின்  குளிர் படர்ந்த  இரவில் எங்கள் மேடையின் முன் பல ஆயிரம்  மனித முகங்கள் விரிந்திருக்கிறது.

புரிசை கண்ணப்ப  தம்பிரானின்பாஞ்சாலி சபதம்கூத்து முடிந்து மக்கள் ஆரவாரத்திற்கிடையே ஒரு  பூப் போட்ட ஜோல்னா  பை எனக்கு பரிசாக அளிக்கபட்டு என்னைப் பரவசப்படுத்தியது. கூடவே ஒரு வாழ்த்து அட்டை.

 “உங்களின்  இந்த  கலை இலக்கிய செயல்பாடுகளுக்கு என் எளிய வெகு மதி -  கே.வி.ஷைலஜா.”

நான் அந்த இரண்டு வரிகளை மைக் முன் நின்று சத்தமாக வாசிக்கிறேன். இப்படித்தான் ஷைலஜா என்ற மனுஷி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

எல்லா ஆரவாரங்களுக்கும் பின் ஏற்படும் அமைதியும், மனிதர்கள் கலைந்தபின் ஏற்படும் வெறுமையும் என் நாட்களை சூழ்ந்து கொள்ள, நான் என் பழைய சைக்கிளில் தாமரைக் குளக்கரையிலிருந்த  ஷைலஜாவின் வீட்டிற்குப் போன ஒரு சாயங்காலம் இன்னும் நினைவில் இருக்கிறது.

அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்த ஷைலஜாவையும், ஜெயஸ்ரீயையும் அவர்களின் அப்போதைய இலக்கிய வாசிப்பினூடே சந்தித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தைத் தந்தது.

சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளை இலக்கிய வாசிப்பிலும் செயல்பாடுகளிலும் கரைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்பெண்களின் அருகாமை பெரும் ஆசுவாசத்தை தந்தது.

சந்திப்புகளின் நகர்வு ஆவணி மாதத்திற்கு எங்களை நகர்த்தியது.

அவர்கள் வீடு மெல்ல மெல்ல ஓணத்தின் கொண்டாட்டத்தை  நோக்கி  நகர்ந்ததை உணர முடிந்தது. வீட்டின்  அதீத  சுத்தத்தில்  ஆரம்பித்து புதிய உடைகளை  அவர்கள் வாங்க ஆரம்பித்தது வரை உடனிருந்து உள்வாங்கி கொண்டிருந்தேன்.

களிமண்ணால்  செய்யபட்ட  நிறைவடையாத ஒரு சாமி சிலை உருவாக்கத்தில் எனக்கும் கூட சில பங்கிருந்தது. அதற்கு ஒரு அழகான குடை. அதைச் சுற்றிலும் பூக்கள். சாணி தெளித்த வாசலில் அது நிறுவப்பட்ட போது அத்தெருவே அழகாகி விட்டதைப் போல அத்தனை  வசீகரமாயிருந்தது.

எல்லோர் கண்களும் அதையே  மொய்த்துக் கொண்டிருக்க, நான் அன்று மாலை மீண்டும்  ஷைலஜாவின் வீட்டிற்கு போனேன்.

ஒரு ஆள் பெரும் சத்தத்தோடு அவள் மாமாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு நிலைமையை புரிந்து கொள்ள பத்து நிமிடங்கள் மட்டுமே போதுமானதாயிருந்தது.

ஷைலஜாவின் குடும்பம் கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து திருவண்ணாமலையில் நிலைபெற்றிருந்தது.

பெரும் கனவுகளோடு அவள் அப்பா வாசுதேவன் தன் தொழிலை வெற்றிகரமாக முன் செலுத்திக் கொண்டிருந்த போது நிகழ்ந்த அவரின் எதிர்பாராத மரணம் அக்குடும்பத்தை நிலை குலைய செய்துவிட்டிருந்தது.

அம்மூன்று பெண் குழந்தைகளும் ஒரு பச்சைக்  கொடியின் பற்றுதல் மாதிரி தன் தாய் மாமாவின் கைகளை பற்றிக் கொண்டிருந்தார்கள். இருபது வயது இளம் விதவையான அவள் அம்மா மாதவி தன் மொத்த நிராசைகளுக்கும், துடைத்தெறியப்பட்ட கதைகளுக்கும் தன் பிஞ்சுக்குழந்தைகளின் அருகாமையை மட்டுமே வடிகலாக்கி  கொண்டிருந்தார்.

சொந்தங்களற்ற வெறுமையை இப்படியான பண்டிகைக்  கொண்டாட்டங்கள் மட்டுமே அச்செடிகளுக்கும் அத்தாய் மரத்திற்கும் நீரிட்டுக் கொண்டிருந்தது.

அவர்களுக்கு ஒரு முதிய பாட்டியிருந்தாள். பெயர் கல்யாணி. கேரளாவின் பாரம்பரிய பெண்ணுடை மட்டுமே அந்த முதிய தேகத்தை மூடியிருக்கும். நாற்பது கிலோவிற்கும் குறைவான எடை. காற்று மொத்தமாக அடித்தால் கீழே விழுந்துவிடக்கூடிய உடல் எடை. னால் மனதால் உறுதியேறி இருந்தாள் கல்யாணி பாட்டி.

அவள் தான் புரிந்தும் புரியாததுமான தமிழில் அந்த சண்டை போட்ட ஆளோடு தன்னையும் சேர்த்து தன் மக்களின் மனநிலைகளை விலக்கிக் கொண்டிருந்தாள். அதில் இடம் பெயர்ந்து வந்த அகதியின் சோகமும், கெஞ்சலுமிருந்தது.

அந்த ஆள் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. கேரளாக்காரர்கள் எல்லாம் மாந்திரீக செய்வினை செய்பவர்கள் என்பதும், இக்களிமண் பொம்மை உருவாக்கமும் அதன் ஒரு நீட்சி தான் என்பதும் அவன் மனதில் பதிந்திருந்தது. என் தலையீடும் சமாதானமும் அம்மனிதனை எதுவும் செய்து விட முடியவில்லை. இறுதியில் அக்களிமண் சிலை அவர்கள் வீட்டு பின்புறம் தளும்பிய தாமரைக் குளத்தில் தள்ளப்பட்டது.

ஒணக்கொண்டாட்டத்தின் முன் இரவு புரிந்து கொள்ளாமையினாலும், ஒற்றைக்  குடும்பம் என்பதாலும், ஒரு பெரும்பான்மை இனக்குழுவினால் இப்படி அவர்கள் சிறு கனவு ஒன்று மொத்தமாக துடைத்தெறியப்பட்ட என் முதல் ஒண அனுபவமாக மனதில் விரிகிறது. அதன் பின் ஒரு தோல்வியுற்ற இளைஞனாக நான் அச்சண்டையை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஆனால் மனதால் அன்று ஒரு முடிவெடுத்தேன்.உறவுகளைத் துறந்த வாழ்க்கை, அலைக்கழித்து எங்கோ தொலை தூரத்து நகரத்தில் இக்குடும்பத்தை கரை ஒதுக்கி இருக்கிறது. எப்போதும் கொண்டாட்டங்களாலும், சந்தோஷங்களாலும் இவர்களை சந்தோமாக வைத்திருக்க  வேண்டும்

என் கனவுகள் எதுவுமே நிராசையானதில்லை. எங்கள் திருமணத்திற்குபின், அதுவரை மலையாள வாசிப்பில் எப்போதாவது புரிந்தும், புரியாமலும் திணறிக்கொண்டிருந்த ஷைலஜா முதன்முதலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் 'சிதம்பர ஸ்மரணயை ' தமிழில் 'சிதம்பர நினைவுகள்' என மொழியாக்கம் செய்யுமளவிற்கு அவளுக்கு அம்மொழி கை கூடியிருந்தது. அப்புத்தகத்தில்  ‘திருவோண விருந்து என்றொரு பகுதி உண்டு.

தான் சுவீகரித்துக்கொண்ட கொள்கையின் பொருட்டு பாலச்சந்திரன் தன் செல்வாக்கான குடும்பத்தைப் பிரிந்து, நாடோடியாக கேரள நகரங்களிலும், கவியரங்குகளிலும், மாநாடுகளிலும் கவிதை வாசித்துக்கொண்டு தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் இடமும் உணவுமின்றி அலைந்து கொண்டிருந்த நாட்களில், ஒரு ஓணத்திருநாளின் போது ஏதோ ஒரு பெயர் தெரியாத ஒரு வீட்டுக் காம்பௌண்ட் சுவற்றின் முன் பசியோடு நின்றிருப்பார். அவரை சோற்றுக்கலையும் பிச்சைக்காரன் எனக்கருதி அவ்வீட்டுத் தலைவி தன் பூட்டப்பட்ட இரும்பு கேட்டை அவனுக்காகத் திறப்பாள். தலை கவிழ்ந்து, உடை கலைந்து, அழுக்கேறிய உடம்போடு நிற்கும் அவனைப் பார்த்து என்ன வேணும்? என கண்களால் விசாரிப்பாள். தன் தலையை ஏறெடுத்து அத்தாயைப்  பார்ப்பான் அக்கவிஞன்.  'சோறு' என்ற சொல் வெளிவராமல் நாக்கிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அது முந்தைய தலைமுறை கெளரவம். ஒரு நிமிடத்தில் அதைப் புரிந்து கொண்ட அப்பெண் அவனைத் தன் வீட்டிற்குள் அழைப்பாள். எதுவும் பேசாமல் அவளைப் பின் தொடரும் அவனுக்கு அவ்வீட்டின் பின்புற தாழ்வாரம் காண்பிக்கப்படும். தரையில் தலை கவிழ்ந்து உட்க்கார்ந்திருந்த அவன் முன் ஒரு தலை வாழை இலை போட்டு அன்றைய ஓணவிருந்து பரிமாறப்படும். இலைநிறைய பதார்த்தங்கள் பரவிய விநாடி பாலனுக்கு தன் வீட்டு ஓணச்சாப்பாடு தலையிட்டு கண்களை நிறைக்கும். ஒரு வாய் சாப்பிட முடியாமல் நினைவுகளின் பெருமிதம் அலைக்கழிக்கும்.

புதுப்பட்டுப் பாவாடை சரசரக்க வரும் அவ்வீட்டின் கல்லூரி படிக்கும் ஒரு  இளம்பெண் அவனை அடையாளம் கண்டு கொள்வாள்.

 “நீங்க கவி பாலேந்திரன்  தானே !

அவளை நிமிர்ந்து பார்த்த ஒரு நொடியில் மதிப்பும் மரியாதையையும் விடப் பெரியது பசியும் சோறும்தான் என்ற மனநிலையில் மீண்டும் தலை குனிந்து உணவை பிசையும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு  எனும் கேரளா பெருமிதத்தின் காட்சி சித்திரம் ஒன்று ஒவ்வொரு ஓணத்தின் போதும் என்னுள் வந்து போவதை தவிர்க்கவே முடியாது.

ஓணம் என்பது இப்பெரும் இரு துயர நினைவுகளால் எனக்குள் நிரம்பியிருந்தது.

எங்கள் திருமணம் முடிந்த முதல் ஓணம் எங்களுக்கான தலை ஓணம். ஷைலஜாவின் மூத்த சகோதரி சுஜியும் அவள் கணவர் குட்டி கிருஷ்ணனும்  திருவண்ணாமலையில் வேறொரு பகுதியிலிருந்த அவர்களின் வீட்டிற்கு எங்களை அழைத்திருந்தார்கள்.

அது கொண்டாட்டங்களின் ஆரம்பம். அவர்களின் டயர் கம்பெனியில் வேலை பார்த்த அழுக்கு இளைஞர்களில் ஆரம்பித்து, உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்களென பலதரப்பட்ட மனிதர்களின்  வருகையினால் அவ்வோம் உயிரூட்டப்பட்டிருந்தது.

கேரள உணவின் முழுமையை நான் சுவைத்த முதல் நாளென அதைச் சொல்லலாம். பல காய்கறிகளை நறுக்கிப் போட்டு வைக்கப்பட்ட பொடி அரைத்து வைத்த சாம்பாரின் ருசி என் நாவிற்க்கேறியதும் அன்றுதான்.

அவல் பாயசம் எனும் அற்புதத்தை நான் தரிசித்த நாளும் அன்று தான். ஓணம் மீது எனக்கிருந்த கசப்பை மெல்ல மெல்ல கரைக்கத் துவங்கியது.

கேரள இலக்கியத்திற்கும்,தமிழிலக்கியத்திற்குமான பரிமாற்றங்களில் எங்கள் குடும்பம் முழுமையாக ஈடுபட்டது.

பால் சக்கரியா, ஏ.ஐய்யப்பன், சந்தோஷ் ஏச்சிக்கானம் எனும் பெரும் படைப்பாளிகளில் ஆரம்பித்து மனோஜ் குருர் வரை ஷைலஜாவின் இரண்டாவது சகோதரி ஜெயஸ்ரீ தமிழுக்குத் தந்து ஓணத்தின் வாசனையை தமிழ்நாட்டிற்குப் பரவச் செய்தார்கள்.

என்.எஸ்.மாதவன், கல்பட்டா நாராயணன், எம்.டி.வி, கெ.ஆர்.மீரா, திரைக் கலைஞர். மம்முட்டி என கேரள ஆளுமைகளை அப்படியே தமிழ் இலக்கியப் பரப்பிற்கு ஷைலஜா கூட்டி வந்தாள்.

இதோ அசோகன்  செருவில்லின்  கதைகளை ஜெயஸ்ரீயின் மகள் சுகானா இப்போது மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறாள்.

ஓணத்திருவிருந்தின் போது புறக்கணிக்கப்பட்ட ஒரு பெரும் கவிஞன், யாரோ ஒரு பெயர் தெரியாத ஒரு குடும்பத்தலைவியல் அரவணைக்கப்பட்டது போல தமிழ்நாட்டின் ஒரு புறக்கணிக்கப்பட்ட நகரத்திலிருந்து நாங்கள் ஓணத்தை உள்வாங்கி கொண்டோம். ஒவ்வொரு ஓணமும் எங்களால் குதூகலமாக்கப்படுகிறது. அன்று ஒருநாள் எங்கள் தோழர்களும், தொழிலாளர்களும் கேரள உணவின் ருசியை புதிதாக்குகிறார்கள்.

ஒவ்வொரு பண்டிகைக்கென்றும் ஒரு தனி வாசனை இருக்கிறது. ஆடிக்காற்றின் அமைதிக்குப்பின் மழையும், வெயிலுமற்ற ஒரு பருவத்தில் வரும் இப்பண்டிகை எனக்கு நீரில் ஊறவைக்கப்பட்ட விதை நெல் வாசனையைத் தருகிறது. அது  கிறக்கத்தின் துவக்கம்.

சித்திரையில் வரும் விஷு எனக்குள் அறுவடைக்காலங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானிய வாசனையை நிரப்புகிறது. தமிழகத்தைப் போலவே கேரள மாநிலமே பண்டிகைகளால் உயிரூட்டப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

என் நண்பரும், கேரள திரை உலகின் மெகா ஸ்டாருமான மம்முட்டியின் மகன் துல்கரின் திருமண அழைப்பின் பொருட்டு ஒரு கிருஸ்துமஸ் நாளின் மத்தியானத்தில் நான், ஷைலஜா, மகன் வம்சி, மகள் மானசி என நாங்கள் நால்வரும் கொச்சின் நகருக்குப் பயணமானோம். நள்ளிரவில் அந்நகரை அடைந்த போது அந்நகரின் காட்சிகள் எங்களை உறைய வைத்த. சாலையோர பெருமரங்கள் சிறு விளக்குகளாலும் மரம் முழுக்க ‘ஸ்டார்களாலும்’ தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக்கொண்டிருந்தன.

நள்ளிரவில் நாங்கள் நடந்து சென்ற போர்ட் கொச்சினின் சாலைககளில் அன்றைய கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களும், குதூகலங்களும் மிச்சமிருந்தன. அவை எங்களுக்கானவை. தமிழ் நாட்டிலிருந்து வரும் தங்கள் விருந்தினர்களுக்கு கடவுளின் சொந்த பூமி விட்டு வைத்திருந்த கொண்டாட்டங்களின் சிந்தல். நாங்கள் மனதால் வசீகரிக்கப்பட்டோம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு வாசனை மிச்சமிருக்கிறது தானே?

ஒரு பிறந்த குழந்தையின் கழுவி முடிக்கப் பட்ட ஜனன வாசனையை அந்த கிருஸ்துமஸ்  எங்களுக்கு தந்தது. அது வாய்ப்பது மானுட பிறவியின் பெரும் பாக்கியம். அன்றிரவு அந்நறுமணத்தில்  நாங்கள் கிடந்தோம்.







No comments:

Post a Comment