என் இருபது வருஷ E.B. சர்வீஸ்வில் இல்லாதவாறு அன்றிரவு பதினோறு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்தேன்.
ஐம்பது பேருக்கு புது appointment போட வேண்டியிருந்தது. சந்தோஷத்தோடு அதை செய்து முடிக்க அவ்வளவு நேரம் பிடித்தது.
கோவை, சத்தியமங்கலம், ஈரோடு என
பல ஊர்களிலிருந்து ‘நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்’ அமைப்பின் சார்பில் என்னை சந்திப்பதற்கு வந்திருந்த நண்பர்களை நீண்ட நேரம் காக்க வைத்தது வருத்தமாயிருந்தது.
சில வார்த்தைகள் பேசியபின் நான் இருந்த சோர்வின் பொருட்டு அடுத்த நாள் காலைக்கு எங்கள் உரையாடலை தள்ளிப் போட்டோம்.
ஜெயஸ்ரீ வீட்டு மொட்டை மாடி அவர்களுக்கான தங்குமிடமென அவர்களே முடிவு செய்து கொண்டார்கள்.
பரந்த வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்த்து படுத்துக் கிடப்பது கொடுப்பினைதான்.
அடுத்த நாள் காலையிலேயே கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் கௌதமும்,
மைலத்திலிருந்து வந்திருந்த கார்த்தியும் உடன் இணைந்து கொள்ள மாமரத்தடி இளங்காலை காற்று மோத உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.
டிசம்பர் 24, 25, 26 மூன்று நாட்கள்
‘நம்மாழ்வாரின் ஆலவிழுதுகள்’ எங்கள் நிலத்தில் முகாமிடப் போகிறார்கள். 200 பேரிலிருந்து 250 வரை வர
வாய்ப்புண்டு. ஒவ்வொரு நாளும் அற்புதமான பல
நிகழ்வுகளை முடிவு செய்தோம்.
கலை, இலக்கியம், இயற்கை வேளாண்மை,
மாற்று கட்டிடக்கலை, நாடகம், சினிமா, ஆவணப்படம், சூழலியல், மாற்றுக் கல்வி என
எங்கள் திட்டம் விரிவடைந்து கொண்டே போனது.
குழைந்தைகளுக்கென களிமன் சிற்பம் செய்தல்,
சேர்ந்திசைப் பாடல், குளத்தில் குளிப்பது, ஓவியம் வரைதல் என
எங்கள் கேன்வாஸ் நீண்டது.
எல்லாவற்றையும் அமைதியாய் தூர இருந்து கேட்டுக் கொண்டிருந்த மகள் மானசி சொன்னாள்.
‘‘நீங்கத் திட்டமிட்டதெல்லாம் நடந்துவிட்டால் அநேகமாக நான் பார்த்ததில் இதுதான் ஆகப் பெரிய நிகழ்வு’’
பெரிய மனுஷி சொல்லிவிட்டாள்.
அப்புறமென்ன?
அடுத்த நாள் மதியம் அவல் பாயசமின்றி சாப்பிட மாட்டோம் என
அவர்கள் அடம்பிடித்து பத்து முழுத்தேங்காயை உரிக்க ஆரம்பித்தார்கள்.
அது அவ்விதமேயானது.
டிசம்பர் குளிரில், மலரப் போகும் அந்த மூன்று நாட்களின் மலர்தலுக்கு இப்போதியிருந்தே மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.
No comments:
Post a Comment