இருபக்கமும் பச்சை விரிந்து கிடக்கும் நெல் வயலினூடே ராயப்பண்பட்டி சாலையை கடப்பது அத்தனை உற்சாகமாயிருந்தது. எழுத்தாளர் காமுத்துரை, கலைஞன் சுருளிப்பட்டி சிவாஜியோடு இலக்கியம் பேசிக்கொண்டே பயணித்தது இன்னொருமொரு உற்சாக அனுபவம்.
பத்து கிலோ மீட்டர் நீடித்த பயணத்தை தம்பி ஜோ.மல்லூரியின் குரல் இடைமறித்தது.
அதெப்படி எங்க சொந்த ஊருக்கு வந்துட்டு எங்க வீட்டுக்கு வராம நீங்க போக முடியும்?
அக்குரலின் வாஞ்சையை மீற முடியாமல் மீண்டும் ராயப்பன்பட்டிக்கே திரும்பினோம்.
125 வருட பழமையான அந்த ஊரின் புராதன தேவாலயம் நாத்திகனையும் ஒரு நிமிடம் தடுமாறவைக்கும். முன் பக்கம் நீண்ட மண் தரை வெளியின் பின்னனியில் அது கம்பீரமாக அமைந்திருந்தது.
நிஜமான மரத்தாலான மிக உயரமான சிலுவைக்கு கீழே மேரியும், குழந்தையுமான அத்தனை அழகான பெண் சிற்பம். அதன் நேர் எதிரில் மல்லூரியின் வீடு.
ஒரு கலைஞனுக்கு இப்படியான சூழல் வாய்ப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
தம்பி ஜோ.மல்லூரி ஆறேழு நண்பர்களோடு சேர்ந்து என்னை வரவேற்றார். எல்லோருமே என் எழுத்துக்களைப் படித்தவர்கள்.
படித்தது போல பாவனைகளோடு என்ன பேசி விடமுடியும்?
என்ன குழம்பு, ஊறுகா எப்போ செஞ்சது என்பதைத் தவிர?
நாங்கள் நிறையப் பேசினோம். விகடனில் வந்த
‘தம்பி’ கட்டுரை, தடத்தில் வந்த ‘டப்ளின் நகரம்’ அந்திமழையில் வந்த ‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்’,
செம்மலரில் வந்த கிருஷியைப் பற்றிய பகிர்வென மல்லூரியின் வீடு இலக்கியத்தால் நிரம்பியிருந்தது.
அந்த வசீகரமான வீட்டு ஹாலில் மல்லூரியின் அம்மா ஈ.சி சேரில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து அடைந்ததுதான் ஜோ.மல்லூரி என்ற திரைக்கலைஞனின் கம்பீர தோற்றமென்பது உறுதிபட்டது.
வெவ்வேறு மாதிரி அமைக்கப்பட்ட அவ்வீட்டின் படிப்பறை, நூலகம் என அங்குலம் அங்குலமாக ரசிக்க முடிந்தது.
அது மல்லூரியின் மதுவறை. அத்தனை அழகு.
உலகின் பலநாட்டு மதுவகைகளும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றும் எத்தனை வருட பழமையானது! எத்தனை விலை உயர்ந்தது என்பதையெல்லாம் ஒரு பெரு மூச்சோடு கடந்தேன்.
திண்டுகல்லிருந்து வந்த இருபது பேர் மல்லூரியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வாசலில் நின்றார்கள். அவர்களை காத்திருக்க சொல்லிவிட்டு என்னைக் கட்டி அணைத்து மல்லூரி முத்தங்களாகத் தந்தார்.
ஒரு கலைஞனின் வழியனுப்புதல்கூட இப்படித்தான் இருக்கும் போல…
பீட்ரூட் தோட்டங்களையும், கல் பந்தலிட்ட திராட்சைத் தோட்டங்களையும் கடந்த போதும் மனம் ஏனோ மல்லூரியின் வீட்டிலேயே அலைந்து கொண்டிருந்தது. நாங்கள் யாரும் இப்போது பேசிக் கொள்ளாமல் மௌனமாய் வந்தோம்.
No comments:
Post a Comment