Thursday, September 1, 2016

தன்னை முன்நிறுத்தத் தெரியாத துறவு நிலை...

க்ருஷியைப் பற்றிய நினைவுகள் மேலெழும்போதெல்லாம் மனதை இசை வந்து நிரப்பிக் கொள்ளும் எனக்கு. அதிலும் ஆராவாரமில்லாத வயலினும், புல்லாங்குழலும் மட்டும்.

எப்போதாவதுதான் பேசுவார்.

பேசுவதற்கு முன் ஜானகிராம் ஹோட்டல் ஸ்ட்ராங் காபியும், கூடவே ஒரு  கோல்ட் பிளாக் ஃபில்டரும், நிழல் விரிந்து பரவியிருக்கும் ஒரு மரத்தடியும் வேண்டும் அவருக்கு. அதிலும் பருத்த வேப்பமரத்தடி மனநிலையைக் கூட்டும்.

சா. தமிழ்ச்செல்வன், கோணங்கி, நாறும்பூநாதன், உதயசங்கர், சாரதி, அப்பணசாமி என எல்லோரின் வரிகளுக்கும் பின்னால் வாத்தியார் ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் க்ருஷியின் புன்சிரிப்பு ஒன்றுண்டு.

நேற்று காலை என்னை அழைத்தார். தொலைபேசியில் அவர் பெயரைப் பார்த்தவுடன் ஜானகிராம் ஹோட்டல் காபியும், வேப்பமர நிழலும் என்னைச் சுவையும்வெளியுமாக சூழ்ந்து கொண்டது. அது ஒரு பனிப்பொழிவின் புகைமூட்டம் மாதிரி.அதிலிருந்து கொண்டுதான் கிருஷி சார்வாள் என்னைக் கூப்பிட்டார்.

அவருடைய ஒரு கையில் கோல்ட் பிளாக் ஃபில்டரும், இன்னொரு கையில் இம்மாத செம்மலரும் இருந்திருக்கக் கூடும்.

உதயசங்கரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை வரிவரியாய் வாசித்து வரிகளுக்கிடையே இசையை நிரப்பினார். அதிலும் புல்லாங்குழல் இசை மட்டுமே. அது மட்டுமே அதற்கானது எனத் தன் உரையாடலை ஆரம்பித்தார். பெரும்பாலும் மௌனம் காத்தேன். அவர் வார்த்தைகளில் தெறித்த இரண்டு மூன்று படிமங்கள் நான் இதற்கு முன் கேட்டறியாதது.

 ‘குருவோ, ஆசானோ இல்லாமல் சில ஊர்களில் அவன் பாட்டுக்கு எடுத்து நாதஸ்வரத்தை ஊத ஆரம்பித்து அதிலிருந்து உருவாகி வித்வானாகியிருப்பான். அவன் இசை யாருடையது மாதிரியும் இருக்காது. அது ரொம்ப ராவான அவனே உருவாக்கிக் கொண்டது. சாயல்களைத் தன் நாதஸ்வரக் கட்டைமீதுகூடப் படிய அனுமதிக்கமாட்டான். உன் எழுத்து அப்படிப்பட்டது. தொடர்ந்து வாசிக்கிறேன். யாருடைய சாயலும் அதிலில்லை

 ‘நான் காடு கழனியில் வளர்பவன் சார்வாள், என்னைச் சுற்றிலும் மிகமிக எளிய மனிதர்களின் சுவாசமும், பேச்சும், வாழ்வும் மட்டுமே நிறைந்திருக்கிறது சார்வாள். வாசிப்பிலிருந்து எனக்கு அனுபவம் மட்டுமே கிடைக்கிறது. எழுத்து அல்ல

மலையின் உச்சியில் தாங்க முடியாத குளிரினூடே நள்ளிரவில் தலைக்கும் சேர்த்து போர்வை போர்த்தி வெட்டவெளியில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது உள்ளடங்கிய மலைகிராமம் ஒன்றிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இசைச் சத்தம் மேலெழுந்து வருமே…’

 ‘சொல்லுங்க சார்வாள்.’

 ‘முதலில் வயலின், இல்லை புல்லாங்குழல், அப்புறம் தான் வயலின். கேட்டுக் கொண்டேயிருக்கையில் பறை. அது மனதையும் சேர்த்து மிகு விசையோடு கீழ்நோக்கி இழுக்கும். தன் பழைமையேறிய தோல்மீது கைகள் அதிரும் அதிர்வுக்கு அது உச்சியிலிருந்து உன்னைக் கீழே புரண்டு வரவழைக்கும்.

உன் இந்த எழுந்து என்னை அப்படி வரவழைத்தது பவா

நான் மௌனம் காத்தேன். இசையின் நடுவே சொல் எதற்கு?

அவர் வேப்ப மரத்தடியிலிருந்து அடுத்த காபிக்கு ஆர்டர் செய்வது இங்கிருந்தே கேட்டது.

கோணங்கிமதினிமார்கள் கதைஎன்ற தன் முதல் தொகுப்பை வாத்தியார் ராமகிருஷ்ணனுக்கும், பால்வண்ணத்துக்கும் சமர்ப்பித்திருப்பான்.

கலைஞர்களின் சமர்ப்பணம்தான் கிருஷியின் ஆகிருதி. அது தன் இயல்புக்கு வளைந்து, நெளிந்து, மேடேறி, பள்ளம் தாழ்ந்து, நொப்பும் நுரையுமாகப் போய்க் கொண்டிருக்கும் காட்டாறு. கரையில் நிற்கும் தங்க அரளிப்பூமரங்களும், சரக்கொன்றைகளும் அதன்மீது கொட்டும். அது தன் செம்மண் படிந்த தலையைச் சிலுப்பிவிட்டு, போய்க்கொண்டேயிருக்கும்.ஒரு வகையில் க்ருஷியின் பயணம் அத்தகையதுதான். சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில், ‘கவிதை எழுதாத ஒரு கவித்துவமன முள்ள வாசகனைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன். இதோ கிடைத்துவிட்டான் என என் மனம் குதூகலிக்கும் போதெல்லாம் இதோ என் கவிதை’யென அவன் தன் பாக்கெட்டிலிருந்து தான் எழுதிய ஒரு தாளை உருவிவிடுகிறான்என எழுதியிருப்பார்.

க்ருஷிக்கும் அது நிகழ்ந்தது. தான் அவ்வப்போது எழுதி மண்ணில் மறைத்து வைத்த சில்லறைக் காசுகளை மண்ணோடும் துருவோடும் ஒருநாள் வெளியே எடுத்தார். புதைத்து வைத்த மண்ணைக் கிளற அவருக்கு ஒரு மழைத் தேவைப்பட்டது. அந்தப் பாதை அவர் மட்டுமேயறிந்தது. ஒரு சிறுமியின் பாவாடை நிறைய நிரம்பியிருந்த காட்டுப்பூக்களின் நறுமணத்தில் அவளே கிறங்கிப்போய்  தன் சக கூட்டுக்காரிகளுக்கு அதைப் பகிர்வதைப்போலமழைவரும் பாதையில்என்ற தன் நாற்பது வருடச் சேகரிப்பை நம்முன் வைத்தார்.

ஏதோ ஒர் அபூர்வ கணத்தில்தான் ஒரு கலைஞன் தான் யாரென முழுவதுமாய் வெளிப்படுவான். அப்படி ஒரு தருணம் பத்து வருடங்களுக்கு முன் எங்கள் நிலத்து பாதாம் மரத்தடியில் நிகழ்ந்தது,

நான், டாக்டர் கே.எஸ்., பரிணாமன், செல்வம் என நண்பர்களால் அம்மர நிழல் அடைபட்டிருந்த இளங்காலை நேரம் அது. மண் தரையில் போர்வை விரித்து உட்கார்ந்திருந்தோம். கே.எஸ். தன் பிரியமான ஓல்டு மங்க் விஸ்கியை கையிலேந்திக் கொண்டிருந்தார்.

தன்னைப் பற்றிய “ஒரு பாடலை பாடு” எனச் சூழல் உந்தித்தள்ள பரிணாமன் பாடினார்.

‘‘ஐந்து பூதத்தை
ஆண்டு நிற்கிறேன்
ஆறாவது பூதம்
நான் ஐந்தாவது வேதம்’’

எங்கள் எல்லோரையும்விட க்ருஷியை இந்த இசை நிரப்பியது. அவர் பேச ஆரம்பித்தார். தன் உப்புச்சப்பற்ற வாத்தியார் வாழ்க்கை, தன்னை வந்தடைந்த ரஷ்யப் பேரிலக்கியங்கள், மார்க்சிம் கார்க்கி, அன்னைவயல், மாயகோவஸ்கி, கு.அழகிரிசாமி, கி.ரா, டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை இதனூடே க்ருஷியை நாங்கள் முழுக்க உள்வாங்கிக் கொண்டோம்.

கே.எஸ். தன் கண்ணாடி டம்ளரை கீழே வைத்துவிட்டு,

நீங்க எந்த ஊரு சார்வாள்?’ என தன் உரையாடலைத் துவக்கினார். க்ருஷியின் சொற்கள் அவரை அநியாயத்திற்கு போதையேற்றியிருந்தது. நானும் க்ருஷி என்ற அக்கலைஞனை அன்றுதான் என்னுள் நிரப்பிக் கொண்டேன்.

கவிதையைவிட கவிதை மனநிலைகள் நிரம்பியிருந்த பக்கங்கள் அவை. கூர்ந்துப் பார்த்தால் ஏதோ சில பக்கங்களில் மயிலிறகும், பதப்படுத்தப்பட்ட அரச இலையும் ஒரு வாசகனின் விரல்களுக்குத் தட்டுப்படலாம்.

அடிப்படையில் க்ருஷி ஒரு ஓவியர்தான். வண்ணங்கள்தான் அவர் மனம். அது தமிழ்வாழ்வியல் மீது எத்தனையோ வண்ணங்களை வாரியிறைத்து அழகூட்ட நினைக்கிறது. பல வருடக் களிம்பேறிய அதன் பாசி படர்ந்த அடர் கறுப்பு அவர் கைகளைத் திரும்ப எடுக்க வைக்கிறது. அக்கேன்வாஸ் முழுக்க சாதியும், மதமும், வர்க்கமும் நிறைந்த கறுப்பு வர்ணத்தால் ஒரு இன்ச் கனத்திற்குத் தடித்திருக்கிறது.

வரைவதற்கு முன் ஒரு ஓவியன் இதைச் சுரண்டியாக வேண்டும். அதுவும் அவன் வேலைதான். ஒரு உதவியாளன் அதை அக்கறையின்றி அகற்றிவிடக் கூடும். ஒரு ஓவியனே அதையும் சேர்த்து செய்யும்போது கேன்வாசின் ஏதோ ஒரு மூலையில் அக்கறுப்பின் ஒரு திட்டை வேண்டுமென்றே விட்டு விடக்கூடும். இன்னும் ஓரிடத்தில் தேய்க்கப்பட்ட கறுப்பின் நிறத்திப்பியை அடையாளத்திற்காகக் கூட அப்புறப்படுத்தாமல் அதிலேயே இருக்கட்டுமென நினைக்கக்கூடும்.

அந்த வேலையைத்தான் அவர் இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து செய்வதாக எனக்குத் தோன்றும்.

குழைத்த வண்ணக்கலவை இன்னும் கேன்வாசில் ஏறாமல் குழைக்கப்பட்ட டப்பாவிலேயேதான் உலர்ந்து கிடக்கிறது. தினம் தினம் தனக்கு ஜானகிராம் ஹோட்டல் காபியைப் போல் அதற்குத் தாமிரபரணி நதிநீரை வார்க்கிறார் ஈரப்படுத்த.

நாற்பது வருடங்களாக ஒரு மனிதன் தான் வாசித்ததை, அதில் தனக்குப் பிடித்ததை, அந்தப் படைப்பாளிகளுக்குக் கடத்த நினைக்கும் மனமே நமக்கெல்லாம் வாய்க்காதது. அது தன்னை முன்னிருத்தத் தெரியாத ஒரு துறவு நிலை. க்ருஷியைப் போல எங்கெங்கோ சில அற்புதமான வாசகர்கள் அப்படியேயிருக்கிறார்கள். இன்னமும் கூட தன் பாக்கெட்டிலிருந்து கவிதையெழுதப்பட்ட ஒரு காகிதத்தை எடுக்காத லிங்கம் வேலூரில் இருக்கிறார். டால்ஸ்டாயும், தாஸ்தாவேஸ்கியும் தான் அவர் வாழ்வை முற்றிலும் நிரப்பிய இரு ஆளுமைகள். கமலாதாஸ் அவரின் மனதிற்கு நெருக்கமான இன்னொரு மனுஷி, எனக்கு ஒருமுறை கமலாதாசின் My Story-யைப் பரிசளித்துச் சொன்னார்.

இலக்கியத்தின் அதிகபட்ச நேர்மையை டால்ஸ்டாய், தாஸ்தாவேஸ்கிக்கு அப்புறம் இவளிடம்தான் தோழர் தரிசித்தேன்

என் கைகளில் அப்போது மாதவிக்குட்டி என்கிற கமலாதாஸை ஏந்திக் கொண்டிருந்தேன். இவளிடம் மேலோங்கிய உண்மையை எக்காலத்திலும் சிந்திவிடக்கூடாது என்ற இறுக்கம் என் கைகளுக்கிருந்தது.

ஒரு நல்ல படைப்பை வாசித்த விநாடி லிங்கம் அப்படைப்பாளியை அழைப்பார். தான் அப்படைப்பை அருந்துகையில் தனக்கேற்பட்ட புளிப்புச் சுவை, இனித்தல், குவளையின் அடியில் தேங்கிய மிகு கசப்பு எல்லாவற்றையும் அப்படியே அதை எழுதின கைகளுக்குக் கடத்தத் தெரிந்தவர் லிங்கம்.

அதனால் ஏற்பட்ட மனக் கசப்புகள், விலகல்கள், நிராகரிப்புகள் எதுவும் அவருக்குப் பொருட்டல்ல. சத்தியம்தான் இவை எல்லாவற்றையும்விடப் பெரிது. அதைத்தான் தன் ஆசான்கள் டால்ஸ்டாயும், தாஸ்தாவேஸ்கியும் தனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது அவர் உடலில் கூடுதல் ரத்த சதவீதமாக ஊறிவிட்டது.

க்ருஷியும் லிங்கமும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். நிமிர்வும், வளைவும் மனித உடலின் இயல்பு. அது பொருட்படுத்தத் தக்கதல்ல.நெல்லையில் நடந்த தமுஎச-வின் ஒரு மாவட்ட மாநாட்டிற்கு முன்னிரவே போய்ச் சேர்ந்தபோதுதான் சிந்துபூந்துறையில் தாமிரபரணிக்குப் போகும் வழியில் ஒரு கறைபடிந்த வேட்டியோடு வண்ணமயமான தட்டி போர்டுகள் எழுதிக் கொண்டிருந்த க்ருஷியை நான் முதன்முதலில் சந்தித்தேன்.

அசைவு கேட்டு ஒரு நிமிர்வு. அவ்வளவுதான். அப்புறம் அந்த மொட்டை பிரஷால் தட்டிபோர்டில் எழுத்து, என் நினைவு சரிதானெனில் அப்போது அவர் நகுலனின் ஒரு கவிதையைஏன் இன்னமும் நினைவைக் கூர்மையாக்கினால்

இருப்பதற்காகத்தான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

என்ற வரிகளை எழுதிக் கொண்டிருந்த க்ருஷியின் கைகளையே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

விரலிலிருந்து உதிரும் சிகரெட் சாம்பலோடு, தூரமாய் விலகி வந்து நின்று அவ்வரிகளை வாசிக்கிறார்.

தன் தூரிகையால் அக்கவிஞனின் வரிகளுக்கு நியாயம் செய்திருக்கிறேனா என்ற ஒரு ஓவியனின் அக்கறை அது.

அதன் பிறகுதான் ஸ்ட்ராங் காபி, கூடவே புகைக்க சில சிகரெட் துண்டுகள்.

என்ன மாதிரியான வெளிகளில் எங்கள் கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏசியும், காரும், பிரிட்ஜூம் அவர்கள் நினைவுகளில் எப்போது தளும்பியது? தட்டிபோர்டும், போஸ்டரும், பசையும், பீ நாத்தம் வீசும் சுவர்களும்தானே எங்கள் இறந்தகால இரவுகளை நிரப்பியிருந்தன.

தமுஎச-வின் பல மாநாடுகளில் க்ருஷியை அருகிலிருந்து அவதானித்திருக்கிறேன். நிகழ்ச்சி நிரல்களின்படி அரங்கினுள் அமர்ந்து அவரைப் பார்த்ததில்லை.

அலைவுறும் கால்கள் அவருடையவை. மண்டபத்திற்கு வெளியே ஒரு பரந்தவெளியோ, மரநிழலோதான் அவருக்கான இருக்கை. தூய வெள்ளையில் வேட்டியும், சட்டையும், தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப் பையுமாக பேசுவதற்கு அவரையொத்த மனமுடைய ஐந்தாறு தோழர்களோடு. அவ்வளவுதான். இடையிடையே டீயும், சிகரெட்களும் போதும். அவர்களுக்குச் சொல்ல அவரிடம் அனுபவச் செறிவுள்ள அத்தனை வாழ்வியல் அனுபவங்களும், வாசித்த இலக்கியமும், கேட்ட இசையும், சந்தித்த ஆளுமைகளும், அவர்களுடனான உரையாடல்களின் தேக்கமும் பெருகி வரும்.

சுந்தரராமசாமியின்குழந்தைகள், பெண்கள், ஆண்கள்நாவல் வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன் பேசினார்.

அது ஒரு எழுத்தாளர்களுக்கான மூன்றுநாள் மாநாடு. இதே மெட்ராசில்தான் நடந்தது. ராமசாமியை அப்போதுதான் முதல்முறைப் பார்க்கிறேன். ஒரு வாத்சல்யம் என்னை உந்தியது. நானும் அவரும் அரங்கிற்கு வெளியே கைகளை சேர்த்துக் கொண்டோம். பேசினோம், பேசினோம், அப்படி ஒரு பேச்சு, எங்கெங்கோ நாங்களும், எங்களைத் தொடர்ந்து எங்கள் சொற்களும் கூடவே வந்தன.எங்கு சாப்பிட்டோம், எங்கு தூங்கினோம். எதுவும் நினைவில் இல்லை. நாங்கள் பேசி முடித்திருந்த போது மாநாடும் முடிந்திருந்தது.

மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள், முகாம்கள் எல்லாமும் கலைஞர்களை ஒருமுகப்படுத்துகின்றன. ஒத்த மனநிலையுடைய கலைஞர்களை அது திறந்தவெளிக்குக் கைப்பிடித்து அழைத்துப் போய்விடுகிறது. அவர்கள் உலகம் அதுதான்.

ஸ்தாபனம் ஒரு ஹெட்மாஸ்டர் மாதிரியென்றால், சு.ரா.வை, ஜே.கே.வை க்ருஷியை பென்ச் மேல் நிற்க வைத்திருக்கும்.

ஒரு இலக்கிய அமைப்பிற்கு இதெல்லாம் தெரியும். இந்த சுதந்திரத்தை அது அனுமதிக்கும். அனுமதிக்குமென்ன... அவர்களுக்கும் சேர்ந்துதான் அது இயங்குகிறது. அவர்கள்தான் இயக்கத்தின் செல்லப் பிள்ளைகள்.

மூன்று வருடங்களுக்கு முன் திருவண்ணாமலையில் நடந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டு ஊர்வலத்தில் நான் கோவில்பட்டி சாரதியை அடையாளம்கண்டு போய் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

சாரதியும் க்ருஷியின் வார்ப்புதான்.

சாரதி

 ‘நான் இப்போ டெபுடி பி.டி..வா இருக்கேன் பவா.’

அந்த ஊர்வலத்தில் பல நூறு டெபுடி பி.டி..க்கள் எங்களைக் கடந்து போனார்கள்.

சாரதியை அதிலிருந்துக் கத்தரித்து டீக்கடைக்குக் கொண்டு வந்தேன். கரிசல் மண்ணிலிருந்து பல வருடங்களுக்கு முன் வந்தநெல்லுச்சோறுதொகுப்பில் அவன் கதை. முருகேஸ்வரி அக்காவை நினைவுபடுத்தினேன்

திருப்பித் திருப்பி அக்கதையிலேயே கிடந்து மூன்றுமுறை டீக்குடித்தோம். ஒரு டெபுடி பி.டி.ஓ பதவி சாரதியிடமிருந்த எல்லாக் கதைகளையும் குடித்துவிட்டிருந்தது புரிந்தது. என்முன் நின்று டீக்குடிக்கும் சாரதி அரசாங்கத் திட்டங்களை நிறைவேற்றி தரும் ஒரு அற்ப ஊழியன். ஆனால் சாரதியின் முருகேஸ்வரி அக்கா’ கதைபோல அவனின் வேலையற்ற நாட்களின் புழுக்கத்தில் எழுதிய ஆற்றாமையும், வெக்கையும் நிறைந்த கதைளை இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தின் பொருட்டு பலி கொடுத்த பல சாரதிகள், பல ஹேமாக்கள் நம் அலுவலகங்களில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லௌகீகம் கேட்கும் முதல் பலியே நம் படைப்பையும் வாசிப்பையும்தான். நம் நுட்பங்களை ஈவிரக்கமின்றி அது சிதைக்கும். நம் அன்றாடங்களை அழுத்தும். திமிறி, தப்பித்து வர முடியாது நண்பனே. அதன் பிடி அத்தனை வலியது. அது நம் லௌகீக வாழ்வின் வெற்றியால் பின்னப்பட்ட இரும்புவலை.

ஒரு கலைஞன் எப்போதும் இதிலிருந்து வெளிப்படுகிறான். மெல்ல மெல்லவேனும் இந்த வலையை அவனே அறுத்தெடுத்து உதிரச் செய்கிறான். அதிலிருந்து வெளியேறும்போது வசீகரமிக்க, அவன் மனதுக்கு மிக நெருக்கமான ஒரு வாழ்வு அவன்முன் காத்திருக்கிறது.

க்ருஷியைப் போல பல மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் தனித்திருக்கிறார்கள். எந்தப் பதிவிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்காத கால்கள் அவருடையவை.

பலநூறு அற்புதமான கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை நமக்குத் தந்துவிட்டு மரணித்த இசக்கி அண்ணாச்சியை இன்றளவும் க்ருஷிதான் நமக்கு நினைவுப்படுத்துகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்து லௌகீக வாழ்வால் நசுக்கப்பட்ட டெரகோட்டா மாதவனின் சுடுமண் குதிரைகள் க்ருஷியாலேயே நமக்கு வந்தடைகின்றன.

திருவண்ணாமலையில் முப்பது வருடங்களாக, புரட்சி நடராஜன் என்ற தோழரை நானறிவேன். கருத்துவேறுபாடுகளால் இரவுநேர டீக்கடைகளைத் தங்கள் விவாதங்களால் நொறுக்கித் தள்ளும் அவரின் தோழர் என்.வெங்கடேசனையும் அவரையும் பல நள்ளிரவுகளில் கடந்திருக்கிறேன்.அவர்களிருவரும் ஒரு தத்துவத்தை, கொள்கையை, இயக்கத்தை, அரசியலை, அதன் அமைப்பை விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டவர்கள். அது அவர்களின் ரத்தத்தோடு கால் நூற்றாண்டுக்கும் மேலே கலந்துவிட்டது.

இரவெல்லாம் டீக்கடையில் சண்டை போட்டாலும், காலை மறியலுக்கு ஒருவர் சைக்கிளில் இன்னொருவர் பின் அமர்ந்து செல்லப் பார்த்திருக்கிறேன்.

தோழமையின் உச்சம் அது. அவர்கள் வாழும் நிகழ் அவர்களால் சகிக்க முடியாதது. அவர்கள் விரும்பும் வேறொரு மானுட வாழ்வின் உலகம்தான் அவர்களின் லட்சியம். அதை நோக்கிய பயணம்தான் அது. விவாதங்களால், சண்டைகளினால் அப்பயணத்தை மேலும் மேலும் அர்த்தமுள்ளதாகவும், லகுவாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

எனக்கு இவ்விருவரும் மனதில் பதிந்த முன்மாதிரிகள். அமைப்பில், கட்சியில் அவர்கள் என்ன பொறுப்பிலிருக்கிறார்கள் என அவர்களைப் போலவே எனக்கும் தெரியாது. ஆனால் அவர்களின் இடைவிடாத பயணம்தான் என்னை ஆகர்ஷித்தது.

 ‘இந்தபுரட்சிஎன்ற பெயரை யார் தோழர் உங்களுக்கு வச்சது?’

எழுபது வயதில் ஒரு எலிமென்டரி ஸ்கூல் குழந்தை மாதிரி அவர் முகம் மலர்ந்து, கண்கள் விரிந்தன.

 ‘எமர்ஜென்ஸி பீரியட்ல, ஓயாமடத்துக்கு முன்னால செங்கொடிய யாரும் ஏத்த பயந்தப்போ, நான்தான் தோழர் ஒத்த ஆளாப் போய் நின்னு ஏத்தனேன். அப்பதான் நம்ம பொகையல காம்பு நடராஜன் தோழர் என்ன புரட்சி நடராஜன்னு மொத மொறையாக் கூப்பிட்டாரு

இவரை நீங்கள் எந்தச் சட்டத்திற்குள் அடைப்பீர்கள். இவர்தான் என் லட்சியவாதத்தின் எளிய உருவம்.

க்ருஷி, என்.வி, புரட்சி நடராஜன், திருபுவனம் கனகசபை எல்லோருக்கும் ஒரு பெருங்கனவிருக்கிறது. அதை உள்ளூர நம்புகிறவர்கள். அது ரத்தம் செறிந்த பெரும் பயணம்தான். இடையில் கனகசபை மாதிரி சிலர் மரணத்தால் உதிர்ந்தபோதும் எப்போதாவது இக்கால்கள் இவர்கள் விரும்பிய உலகை அடையும்.


அதுதான் நாம் அடைய விரும்பும் உலகமும்கூட. நான் இன்னும் கொஞ்சம் தாமதமாகத்தான் அவர்களை நெருங்க முடியுமெனத் தோன்றுகிறது

- நன்றி
இம்மாத செம்மலார்

No comments:

Post a Comment