என் ‘எல்லா நாளும் கார்த்திகை’ புத்தகத்தில் பாலாவைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அக்கட்டுரை முழுக்க அவர் பேசியதாக ஆறேழு வார்த்தைகள் வரும். அதுவே அதிகம். அவர் கேட்கக் கூடியவர். பேசுபவரல்ல. கேட்க வாய்த்தவர்கள் எப்போதும் பேசுபவர்களைவிட அதிகம் சாதிக்கிறார்கள்.
இம்முறை பாலாவோடு ஐந்து மணி நேரமிருந்தேன். இயல்பை மீறி நிறைய பேசினார். எனக்கு கதை சொன்னார். அதை நான் எழுதிவிட வேண்டுமென பிடிவாதம் பிடித்தார். மகாபலிபுரம், கடலாடி சுரேஷை 19.டி.எம். சாரோனுக்கு வரச் சொல்லட்டுமா? என அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனாலும் அவர் வாயிலிருந்து வருபவை பேருரைகளோ வரிகளோ கூட இல்லை. வார்த்தைகள் மட்டுந்தான். செதுக்கிய சொற்கள்.
தன் படத்தில் நடிக்க இருக்கும் பிரகதி என்ன கதை அங்கிள்? என கேட்டபோது.
“யாருக்குத்தெரியும்? வச்சிக்கினா வஞ்சகம் பண்றேன்” இதுதான் பாலாவின் சொற்களின் வலிமை.
எங்கள் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் அநியாயத்திற்கு அவதானித்தார். ஒரு ஓவியத்திலிருந்து அவர் அடுத்த ஓவியத்திற்கு அகல ஐந்து நிமிடமானது.
மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த மல்லாட்டையிலிருந்து ஒரு கை அள்ளி உரித்து தின்றுகொண்டே உரையாடலைத் தொடர்ந்தார்.
கவிஞர். பீனிக்ஸ், வம்சி மோகனாவின் கணவர் ஜின்னா பாலாவின் வெறிபிடித்த ரசிகன். எங்கிருந்தோ ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து பாலாவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தவனைத் தடுத்து நிறுத்தி, ‘என்ன பவா உங்களோட வேற வேற ஆட்கள் இருக்கிறார்கள்?’ என சிரித்தார்.
அந்த பைக் மெக்கானிக்கோடு பத்து படமெடுத்துக் கொண்டார். அவர் தொழிலைப்பற்றி விரிவாக கேட்டறிந்தார்.
பள்ளி சீருடையோடு மிஷ்கின் மாமாவின் இன்றைய பிறந்த நாளைக்கு அவர் புகைப்படம் ஒன்றை பரிசளிக்க மகன் வம்சி பிரேம் செய்யும் கடைக்குப் போயிருந்தான்.
பாலா படங்களின் நிஜக்குரூரம் எப்போதுமே வம்சிக்கு பிடிக்கும். அவன் இப்போது இல்லையே என மனம் தவித்தது.
பாலா படங்களின் நிஜக்குரூரம் எப்போதுமே வம்சிக்கு பிடிக்கும். அவன் இப்போது இல்லையே என மனம் தவித்தது.
பெரிய கார் நுழைய முடியாத எங்கள் குறுகியத் தெருவிலிருந்த ஒரு புங்கமரத்தடியில் நின்று அவரை வழியனுப்ப பேசிக் கொண்டிருந்தபோது வம்சி தன் மாமாவின் புகைப்பட பார்சலோடு வந்துவிட்டான்.
அதை பிரித்து பாலாவுக்குக் காண்பித்தான்.
‘என்னடா ஒரு ஓநாயை இவ்வளவு அழகா போட்டோ எடுத்திருக்க!’ என அவனை அணைத்துக் கொண்டார். தம்பி இயக்குநர். ரமணா எல்லாவற்றிருக்கும் மௌன சாட்சியாய் உடன் நின்றிருந்தார். நேரமும், தூரமும் அவரை கையைப்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.
சுற்றி நின்ற எங்கள் இருபது பேரிடமும் பொதுவாக பேசுவது போல எங்களிடம் பேசினார்.
‘எங்கப்பா மாதிரியில்லம்மா நான். உணர்ச்சி வயப்பட மாட்டேன். எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே போட்டு வச்சுக்குவேன்.
இந்த வீட்ல இருந்து போக மனசே வரலை.
வருவேன், எப்பவும் வருவேன். இங்க வராமா எங்க போகப்போறேன்?’
இந்த மழைக்காலத்தில் ஒருமுறை நிலத்தில் சந்திக்கலாம் பாலா!
No comments:
Post a Comment